கேசாதி பாதம் வரை
வலிகளே நிரம்பியிருக்கிறது
எந்த வலியை
முதலில் பாடப்போகிறீர்கள் ?
வலியின்குருதி உறிஞ்சும் தூய நாப்கின்
உங்களை விடவும்
நம்பகமானதாக இருக்கிறது.
முதலில்
தலையை தனியாகக் கொடுக்கிறேன்
நீங்கள் தைலம் பூசும் நெற்றியின்
ஆழத்தினுள்ளிருந்து
உதைக்கும் கால்கள் யாருடையது?
கழுத்தை தனியாகக் கொடுக்கிறேன்.
குரல்வளை வருடும் உங்கள் விரல்கள்
முனகல் ஒலியை மட்டுமே
நல்லிசையென்று அருந்திய
செவிகளை உள்ளே பார்க்கவில்லை.
மார்பை இறுக்கமாக மூடித்தான் தரவேண்டும்
காண்பதற்கு ஏதுமில்லை
உங்கள் இதயத்தில் கை வைத்துக் கேளுங்கள்
மூர்க்கமான காட்டு விலங்கு
மண்ணைத் தோண்டி வயலை மூடும்
விநோத ஓலம். பிடித்திருக்கிறதுதானே?!
கர்ப்பக்காலத்தில் மட்டுமே தெரியும்
அடிவயிற்றைத் தருகிறேன்
அசையும் சிசுவுக்குத்தான்
எத்தனை எத்தனை முத்தங்கள்.
கொஞ்சம் கீழே, கயறு போலத் தெரிவது
கத்தியால் கிழித்த பிரசவக் காயம்தான்.
அழக்கூடாது !
உள்ளே பிரசவ வலியில் துடிக்கிறாள் தாய்
நீங்கள் பிறக்கப் போகிறீர்கள்.
இதற்குப் பிறகான வலிகளை
ஆர்வமுடன் எதிர்பார்ப்பீர்கள்.
இடுப்பிலிருந்து பாதம் வரை
கடலில் கரைத்து விட்டேன்
நுரைத்துப் பொங்குவதும்
உப்பு நீரில் மணப்பதும்
என்னுடைய வலிகள்தான்.
இப்போது சொல்லுங்கள்
எந்த வலியை
முதலில் பாடப்போகிறீர்கள்?