இணைய இதழ்இணைய இதழ் 93சிறுகதைகள்

கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்

சிறுகதை | வாசகசாலை

‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு தூசி துரும்புக்குகூட பெறாதவனை எல்லாம் அனுசரித்துப் போகவேண்டியிருக்கு. 

இல்லை. செய்தது சரிதான். சுனாமி வீசினால் ஒரு வாரம் பாதிப்பிருக்கும். ஆனால், கொரோனா வீசி உலகையே புரட்டிப் போட்டுருச்சே.. வருசங்கள் ரெண்டு கடந்தும் பாதிப்பு தீரலையே! கொரோனா தொடக்கத்தில் ஆறுமாசம் பாதி சம்பளமாவது கொடுத்தார்கள். அப்புறம் போகப்போக நஷ்டக்கணக்கு காட்டி ஆள்குறைப்பு செய்து முன்னறிவிப்பில்லாமல் தெருவில் எறிந்து விட்டார்கள். நல்லவேளை, கவிதாவுக்கு நித்தியகண்டம்ன்னாவது வேலை தொடருது. நிலையில்லாத வேலை, அரைகுறை சம்பளம், நேரம் கடந்த வேலையை நம்பி, இரண்டு குழந்தைகளோடு எப்படி குடும்பம் நடத்தமுடியும்? 

எத்தனை மாதம்தான் தகுதியான வேலைக்கு மின்னஞ்சலில் தூண்டில் போட்டு பெரிய மீனுக்கு தவமிருப்பது? வருவதெல்லாம் குறைந்த சம்பளம், நிறைய நேர வேலை. அதற்கும் போட்டி. அந்த நிறுவனத்தில் யாராவது அறிமுகமான பணியாளர் பரிந்துரை. கணிப்பொறி முன் ஆடம்பரமான அடிமையாக இருப்பதற்கு, சுதந்திரமாக  தெருத் தெருவாக காய்கனி விற்று பிழைத்துக் கொள்வோம். குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று இறங்கினது தப்பே இல்லைதான்.

இங்கே என்ன குறை? அங்க மாதிரி ஆடம்பரமா உடுத்திக்கிட்டு, குளிரூட்டப்பட்ட அறையில் குந்தி, நுனிநாக்கில் பேசிக்கொண்டு துரிதவுணவை அரைகுறையாகத் தின்று திரிய முடியாது. வாராந்திர சொர்க்கத்தில் மிதக்க முடியாது. ஆனால், இங்கே மக்களோடு பழகி சுகதுக்கங்களை பகிர்ந்து, பம்மாத்தில்லாத வார்த்தையில் உறவாடி மக்களுள் ஒருவனாக இருக்கிறோம். இந்த நிம்மதி அங்கில்லையே. இப்படியான வாத பிரதிவாதங்கள் அடிக்கடி சேகரின் மனதுக்குள் நிகழ்கிறது.

கொரோனா தொற்றின் தாக்கம் வற்றிய பின்னும் ஆறுமாதங்கள் வேலையில்லாதிருந்த சேகருக்கு உதவுவாரில்லை. மென்பொறி உலகத்தில் மிதந்து வேற்று பெண்ணை மணந்து குடும்பமுமாகி திரிசங்குலகில் எத்தனைக் காலம் தொங்குவது? மனைவி கவிதா வேலை       நீடிக்கும் வரை பார்க்கட்டும். தான் எதாவது அழுக்குப்படாத வேலையில் தொற்றிக்கொள்ள சான்றிதழ்களோடு கம்பனி கம்பனிகளாக அலைந்ததில் பலனில்லை. ஒருநாள், டீக்கடையில் வடையைக் கடித்து டீயைச் சுவைக்கும்போது பார்த்தான். ஒரு வயதான மனிதர் காய்கறி வண்டியைத் தள்ளி விற்றுவந்தார். ஒரு பெண்மணி,”என்னண்ணா மதிய சாப்பாட்டுக்கா? ”

“ஆமா தங்கச்சி, வாங்கியாந்த சரக்கெல்லாம் வித்துப்போச்சு. அஞ்சாறு கிடக்கு, அதுவும் வீடு போறதுக்குள்ள வித்துரும். காலாகாலத்தில் அஞ்சாறு பருக்கையைத் தின்னுட்டு தூங்கி எந்திரிச்சா காலையில் நாலுமணிக்கு எந்திரிச்சு பெரிய மார்கட் போற அலுப்பு தீரும். நாளைக்கு காலையில் தூக்கச்சடவு இல்லாம தெளிச்சியாய் காய்கள பார்த்து வாங்க தோதா இருக்குமில்லே” 

அந்த மனிதரின் வெள்ளந்தியான பேச்சு சேகரை ஈர்த்தது. உடனே அவரை அணுகி தனது நிலையைச் சொல்லி, தான் காய்கறி வியாபாரம் செய்யலாமா என்று கேட்டான். ”ஓ, தாராளமா செய்யலாங் காளை. தானா உழைச்சு சம்பாரிக்கிறதில இருக்குற சந்தோசமும், கண்ணியமும், மருவாதியும், ஆளை மினுக்கி பந்தா காட்டி பிழைக்கிறதில் இல்ல அப்புனு! ஒருநா காலை நாலுமணிக்கு பெரிய மார்கட்டுக்கு வா, நான் எப்படி காய்கனி வாங்குறேன்னு பாரு. தெருவில நான் எப்படி விக்கிறேன்னு ரெண்டு மணி நேரம் பாரு. பெரிய படிப்பு படிச்ச நீ நெளிவுசுளிவுகளைக சுலுவா  கத்துக்குவ. இந்த மீனட்சிபட்டினத்தில நீ ஒருத்தன் புதுசா காய்கறி விக்கிறதினால என் ஏவாரம் குறைஞ்சிறாது. என் ஏரியா வேற; பழக்கவழக்கம், நீக்கு போக்கு வேற. ஒன் ஏரியா வேற. நீயும் பழகிக்குவே. உன் முகக்கூருக்கு பொம்பளைக விரும்பி வாங்குவாக. நீ மட்டும் கடன்கொடுக்காம இதம்பதமா உஷாரா இருக்கணும். அர்த்தமாகுதா” 

பெரியவர் பெருமாள் சொன்னதை வேதவாக்காகப் பற்றிக்கொண்டான். காய்கறிகளும், விற்கும் தள்ளுவண்டியும் வாங்க பணம் வேண்டுமே. எங்கே போவது. கையிலிருந்த நகைகளும் பணமும் கொரோனா முடக்கத்தில் கரைந்து போனதே, அங்குமிங்கும் அவசரத்துக்கு வெளியே போய்வர பைக் மட்டுமே உண்டு. அதை விற்க முடியாது. தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய ஆப்பிள் கம்ப்யூட்டரை பர்மா பஜாரில் விற்க பல கடைகளுக்கு அலைந்தான். வாங்க அஞ்சுவது போல் பாவனை காட்டி அலைக்கழித்தார்கள். கடைசியில் முப்பதாயிரம்தான் தேறியது. 

திலகர்திடல் சந்தைப்பேட்டைக்கு சென்று ஓரளவு நல்லநிலையில் உள்ள நான்குசக்கர வண்டியை இருபதாயிரத்துக்கு திகைத்தான். ஒரு டாடா ஏசி குட்டியானை வண்டியில் ஏற்றி தான் வசிக்கும் சோமசுந்தரம் காலனி குடியிருப்புக்கு கொண்டுவந்தான். அந்தப்பகுதியில் பழக்கமான ஆட்டோ டிரைவரைச் சந்தித்து காலை மூணுமணிக்கு மாட்டுத்தாவணி பெரிய காய்கறி மார்கட்டுக்குப் போகவேண்டும் என்று வீட்டுக்கு வருவதை உறுதிப்படுத்திக் கொண்டான். அதிகாலையில் ரெண்டுமணிக்கு எழுந்து குளித்து அம்மா அப்பாவையும் குலதெய்வத்தையும் நினைத்து கும்பிட்டான். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் முத்தமிட்டுவிட்டு வெளியே வந்திருந்த ஆட்டோவில் ஏறி மார்கட்டுக்குப் போனான். அங்கே வந்திருந்த பெரியவர் பெருமாளைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றான். பெரியவர் சேகரை காய்கறி மொத்த வியாபாரிகளிடம் அறிமுகப்படுத்தி நியாயமான விலையில் அவருக்கு வாங்குவதுபோல் சேகருக்கும் வாங்கிக் கொடுத்தார். வாங்கிய காய்கறிகள் ஆட்டோ நிறைந்திருந்தது. ஆறுமணிக்கு வீடு திரும்பினர். அவனது வீடு கீழ்த்தள வீடு என்பதால் வண்டியை நிறுத்துவதற்கும், வாங்கிவந்த காய்கறிகளை பத்திரப்படுத்தி வைக்கவும் முன்னறை ஏதுவாக இருந்தது.

ஒருமணிநேரம் சற்று தளர்வாய்ப் படுத்தான். ‘இதுவரைக்கும் பழக்கமில்லாத புதுத் தொழில் செய்யப் போகிறோம்; அசாதாரண பொறுமையோடும், புத்திசாலித்தனத்தோடும் நடந்துக்கணும். இதில் ஜெயித்துக் காட்டணும்’ என்று இருமுறை மனத்துள் சொல்லிக்கொண்டே படுத்தான். சரியாக ஏழுமணிக்கு எழுந்து வண்டியின் மீது ஈரச்சாக்கை விரித்தான். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை ரெண்டிரண்டு கிலோ அளவுக்கு பரத்தினான். இவற்றுக்கு நடுவே பாத்தி பிரிப்பது போல் புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் போன்றவற்றை குறுக்கும் நெடுக்குமாய் அழகுற வைத்தான். எஞ்சிய இடத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி புதினாவை வைத்துக்கொண்டான். எடைபோடும் எந்திரத்தையும், காசுபோடும் டப்பாவையும் தனது கைக்கு தோதாக முன்பக்கம் வைத்துக் கொண்டான். வண்டியில் காய்களை பரத்தியிருந்தது வண்ணக்கலவையாய் கண்களை ஈர்த்தது. மீதத் தக்காளி பெட்டியையும், காய்கறிகளையும் தனித்தனி குட்டிசாக்குகளில் வண்டியின் கீழுள்ள பரணில் வைத்துக்கொண்டான். வண்டியின் முன்பக்கம் சிறு ஒலிபெருக்கி பொருத்தியிருந்தான். அதை இயக்கினால், ’வாங்கம்மா, வாங்குங்கம்மா  தரமான காய்கறிகள்; நியாயமான விலையில் வாங்குங்கம்மா’ என்று ஒலித்துக்கொண்டே இருக்கும். 

முதல்நாளே அவனது குடியிருப்பில் உள்ளோரே கணிசமாக வாங்கினர். கால்கிலோ வாங்குவோருக்கும், ஒருகிலோ வாங்குவோருக்கும் விலை நிர்ணயிக்கும் நீக்குபோக்குகளை பெரியவர் சொல்லிக் கொடுத்திருந்தார். சேகரிடம் காய்கள் தரமாகவும், ஒப்பிட்டளவில் விலை குறைவாகவும் இருந்ததால் அந்தக் குடியிருப்பில் உள்ள சிறுகடைக்காரர்களும் , சேகரிடம் காய்கனிகளை வாங்கலாயினர். இந்தவகையில் மூன்றிலொரு பங்கு காய்கள் விற்றன. மீதி குடியிருப்புகள் ஒவ்வொன்றின் முன்னும் நின்று அரைமணி ஒலிபெருக்கியை இயக்கினான். பரவலாக மக்கள் வந்து வாங்கிச் சென்றார்கள். அந்தபகுதியில் உள்ள மூன்று அடுக்ககக் குடியிருப்புகளில் பெரும்பாலான காய்கறிகள் பனிரெண்டு மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. இப்படி விற்றபின் கணக்குப் பார்த்தால் செலவு நீங்கலாக ஆயிரம் ரூபாய் வரை மிஞ்சும். இது ஒருமாதத்திற்கு சராசரியாக முப்பதாயிரம் கிடைக்குதே. இதில் சற்று உடலுழைப்பு கூட.       ஆனால், நிமதியான சுதந்திரமான வாழ்க்கை. இந்த நிம்மதி மென்பொருள் வேலையில் கிட்டவில்லையே  என்று பெருமைப்பட்டான்.

முதல் மாதம் எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு ட்ராபிக் போலீஸ்காரர் சேகரின் வண்டியை மறித்து நிறுத்தினார். இது என்ன வழிப்பறியா என்று அதிர்ந்தான். “என்ன மிஸ்டர், ரோட்டில் ட்ராபிக்கிற்கு இடைஞ்சலா ஏவாரம் பண்ணுறே. ட்ராபிக் ரூல்ஸ் தெரியாதா. ஸ்பீக்கர் வச்சுகிட்டு நாய்ஸ் பொல்யூசன் வேற பண்ணுறே, ஸ்டேசனுக்கு வண்டியை விடு.”                                   

“சாரி சார், நான் ரோட்டோரம் மரத்தடியில்தான் வண்டியை நிறுத்தி ஏவாரம் பண்ணுறேன். ஸ்பீக்கர் சவுண்ட் குறைச்சுத்தான் வச்சிருக்கிறேன். ரோட்டோரத்தை விட்டு ரோட்டு நடுவுல ஏவாரம் பண்ணமாட்டேன் சார்.” 

“உன்னை பார்த்தா படிச்ச விவரமான பையனா தெரியறே, போலிஸ் ரூல்ஸ் தெரியாம நடந்துக்கிறியே. மத்த வண்டிக்காரங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாமில்ல. சரி, இரநூறு கொடு, சார்ஜண்டுக்கு படிகட்டணும்”

“சார் ஒருநாளைக்கு செலவுபோக நானூறுதான் மிஞ்சும். உங்களுக்கே இரநூறு எப்படி கொடுக்கறது?. நானே சாப்ட்வேர் வேலையை இழந்துட்டு தெருவுல காய்வித்துப் பிழைக்கிறேன்” 

“சரி, உன்னையை பார்த்தா பாவமா இருக்கு. நான் ட்ராபிக் சார்ஜண்டுக்கு பதில் சொல்லணுமே. கால்கிலோ வெண்டை, கத்தரி, முருங்கை, ஒருகிலோ தக்காளி ஒரு பையில் போட்டுக்கொடு சார்ஜண்டை சரிகட்டிக்கிறேன். ம்… சீக்கிரம் போடு. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்”     சேகர் மனக்கொதிப்பை மறைத்து, முகத்தில் பவ்வியம் காட்டி காய்கறியை நெகிழிப் பையில் போட்டுக் கொடுத்தான்.

அரைமணிநேரம் கடந்திருக்கும். முனிசிபல் கார்ப்பரேசன் ஊழியர் ஒருத்தர், கார்ப்பரேசன் இடத்தில் வண்டியை நிறுத்தி காய்கறி விற்பதற்கு மகமை என்று ஐம்பது ரூபாய் ரசீது கொடுத்து பணம் வாங்கிப் போனான். வெயில்கொதிப்பும், மனக்கொதிப்பும் சேர்ந்து உடலில் வியர்வை பொங்கி பனியன் சட்டையை நனைத்திருந்தது. முகவேர்வை அழகுத்தாடியை நனைத்து நமைச்சலைத் தந்தது. மரத்தடியில் நின்றான். நிழல்பரப்பிய கொன்றைமரம் ’ஹேண்ட்ஸ் அப்’ சொல்லப்பட்டதுபோல் காற்றின்றி அசைவற்று நின்றது. தன் காற்றையே உடலில் ஊதி, ஊதி ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

இன்னொரு போலீஸ்காரர் பைக்கில் வந்து மறித்து நின்றார். வலது ஆள்காட்டிவிரலை அசைத்து அருகில் வரச்சொன்னார். ”என்ன தம்பி, ட்ராபிக்கை மறிச்சு நடுரோட்டில்  ஏவாரம் பண்றே. உனக்கு ரூல்ஸ் தெரியாதா”                      

“சார், வணக்கம். இப்பத்தான் திரி ட்வெண்டி ஏட்டய்யா வாங்கிட்டு போனார்.” 

“அது கிடக்கட்டும். இந்த ஏரியாவில ரெண்டு பீட் கிராஸ் ஆகுது. பீட் ஒன்னுக்கு கொடுத்தது மாதிரி, பீட் ரெண்டுக்கும் குடுக்கணும்னு தெரியாதா. இரநூரை எடு”

“ஸார், எனக்கு கிடைக்கிறதே நானூறுதான். அதை உங்களுக்கு கொடுத்துட்டு, குடும்பம் எப்படி பிழைக்கிறது?”

“அப்ப நீ குடுக்கலைன்னா வண்டியை ஸ்டேசனுக்குத் தள்ளு. அங்கே அய்யாகிட்டே, ட்ராபிக் நியூசன்ஸ் கேஸுக்கு பதில் சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டுப் போ”

சேகருக்கு மனம் கொதித்து முகம் சிவந்தது . மரத்துக்கிளை அசைந்து இலேசாக காற்று உடலைத் தழுவியது. கொஞ்சம் யோசித்தான். இவர்களை வேறவழியில்தான் அடக்கணும். “சார், இந்தாங்க அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். உங்களுக்கும் நூறு ரூபாய்” என்று நோட்டை மடித்துக் கொடுத்தான்.

”தம்பி, இளவட்டமா இருக்கிறே புத்தியோட பிழைச்சுக்க” என்று போலீஸ்காரர் கிளம்பினார். 

சேகருக்கு மனம் குமுறியது. வண்டியை சற்றுத்தூரம் தள்ளி இன்னொரு குடியிருப்பு        அருகே போனான். ஒலிபெருக்கி சத்தம்கேட்டு பெண்கள் மூன்று நாலுபேர் வந்து தேவையான காய்கறிகள் வாங்கிச் சென்றது ஆறுதலாக இருந்தது. மனதெல்லாம் இந்த போலிஸ் பூனைகளுக்கு மணிகட்டுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தது. யோசனையோடு வண்டியை அடுத்த குடியிருப்பை நோக்கித் தள்ளினான். அங்கும் பெண்கள் கூட்டமாக வந்து காய்களை வாங்கினார்கள். கொஞ்சம் உருளைக்கிழங்கும், வெங்காயம் மட்டுமே மிஞ்சியது. வண்டியை நடைபாதை வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தை நோக்கிச் செலுத்தினான்.

இந்த நேரத்தில் தலைவரும் செயலரும் ஒரே இடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. சேகர் காவலர்கள் தரும் சிரமங்களைச் சொன்னான்.”இவிங்க இப்படித்தான் தம்பி, இவுனுகளை கண்டும் காணாம பொழைப்பை ஓட்டிகிட்டே போகணும். இதை ரொம்பவும் யோசிச்சா பிழைப்பு நடத்தமுடியாது. குரைக்க வர்றது முன்னால போடவேண்டியதை போட்டுட்டா கவ்வி வாலை ஆட்டிகிட்டு போயிருங்க. முரண்டோமுன்னா மேல விழுந்து பிராண்டும், கடிச்சு குதறும். அப்புறம் பிழைப்பை விட்டுட்டு அதுக்கான வைத்தியம் பார்த்துகிட்டு அலையணும்” என்று தலைவர் சொன்னார். சேகரது மனம் சமாதானம் ஆகவில்லை.

“ஆமாங்க தம்பி, இப்பத்தான் நாங்க ரெண்டுபேரும் ஒரு போலிஸ் பஞ்சாயத்துக்கு போயிட்டு வர்றோம். ஒன்னாம் வீதி திருப்பத்திலே பாலத்துக்கு பக்கத்தில் சுந்தரம் வண்டியில பழம் வச்சு வித்துகிட்டு இருந்தார். இப்படித்தான் போலிஸ்காரங்க ரெண்டுபேரு ஒருத்தர் பின் ஒருத்தரா மாமுல் கேட்டு நச்சரித்திருக்கிறாங்க. சுந்தரம் உங்களாட்டம் இளவட்டம். ’இப்பத்தானே ஒருத்தர் மாமுல் வாங்கிட்டுப் போனாரு. தினசரி மாமுல் யார்கிட்ட கொடுக்கிறதுன்னு ஸ்டேசன்ல இருந்து பேரு வாங்கிவந்து தாங்க. என்னால ஏண்டதைத் தர்றேன்’னு சொல்லியிருக்கிறார். 

‘ஏய், ட்ராபிக் இடைஞ்சல் பண்ணுறதில்லாம சவடாலா பேசுறே’-ன்னு லத்தியை ஓங்கி வண்டியில போலீஸ்காரர் அடிக்கவும், அடுக்கிவச்சிருந்த ஆப்பிளும், மாதுளையும் சிதறி ரோட்டிலும் பக்கத்து கால்வாயிலும் விழுந்திருச்சு. கருந்தண்ணியில் ரத்தசொட்டுகள் கணக்கா ஆப்பிளும் மாதுளையும் மிதந்ததாம். சுந்தரம் ஆவேசமா போலீஸ்காரரது லத்தியைப் பிடுங்கி வாய்க்காலில் எறிந்துவிட்டார். அதுவுமில்லாமல் போலீஸ்காரர் லத்தியால் வண்டிமீது அடித்ததை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டார். இந்த செய்தி தெரிஞ்சு அக்கம்பக்க ஏவாரிகள் வர ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ்காரர் சுதாரித்துக்கொண்டு ஒரு ஆளைப்பிடித்து பழவண்டியை போலிஸ் ஸ்டேசனுக்கு தள்ளிட்டுப் போய் எஸ்.ஐ கிட்ட புகார் கொடுத்துட்டார். எங்களுக்கு தகவல் தெரிஞ்சு போனோம். சப் இன்ஸ்பெக்டர் கிட்ட நயந்து பேசி, ஒரு ஐநூறு கொடுத்து கேஸ் இல்லாம சுந்தரத்தை மீட்டிகிட்டு, வண்டியை தள்ளிகிட்டு வரச்சொன்னோம். போலிஸ்கிட்ட பழகுறது நல்லபாம்புகிட்ட பழகுறது மாதிரி எச்சரிக்கையா இருக்கணும்.”

சேகர் இதைக் கேட்கவும் உக்கிரமடைந்தான். ”சுந்தரம் இருந்த இடத்தில் நானிருந்தேன்னா…, லத்திக்கு பதிலா போலீஸ்காரரை வாய்க்காலில் தூக்கி எறிந்திருப்பேன். குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கன்னு கொஞ்சம் பணிஞ்சு போனா ரொம்பவும்தான் ஆடுரானுக. சரிங்க தலைவரே, இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட யோசனை கேட்டு உங்ககிட்ட வந்தா, நீங்க ரொம்பவும் வளையரீங்களே. குட்டக் குட்ட குனிஞ்சா நாம நிமிரவே முடியாது. வட்டிக்கு கடன்வாங்கி தொழில் பண்ணுற நாம, வர்ற வருமானத்தை எல்லாம் லஞ்சமா கொடுத்துட்டு, குடும்பத்தை எப்படி நடத்துறது, தொழில் எப்படி பண்ணறது? இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு சட்டபூர்வ தீர்வு காணத்தானே சங்கம் வச்சிருக்கோம்? நாமலே வளைஞ்சு கொடுத்தா எப்படி”

“தம்பி, நீங்க இளரத்தம் பேசுறதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு சரி வருனுமில்ல. சரி, நீ எங்களுக்கு மேலே படிச்ச பைய்யன்; நீயே யோசனை சொல்லு.”

“நாளைக்கு புது போலிஸ் கமிஷனர் பதவி ஏற்கிறாருன்னு படிச்சேன். நம்ம சங்கத்தின் சார்பா மனு கொடுத்து, நடைபாதை ஏவாரிக கிட்ட மாமூல் வாங்குறதைக் கட்டுப்படுத்தச் சொல்லுவோம்.”

“என்ன தம்பி, எந்தக் காலத்தில இருக்கீங்க. இதெல்லாம் நடக்கிற கதையா? நாங்க கொடுத்த மனுவை எல்லாம் ஒன்னுமேல ஒன்னு அடுக்கினா கமிஷனர் ஆபிஸ் முதல்மாடி உசரம் இருக்கும். நடக்கிறதைப் பேசுங்க.”

“சரி, போலிஸ் கமிஷ்னரை வித்தியாசமா சந்திப்போம். நீங்க சங்கத்திலிருந்து ஒத்துழைப்பு கொடுங்க”

“என்னமோ தம்பி, இளரத்தம் உங்க பேச்சு எங்களுக்கு பயமாவுல இருக்கு” என்று சங்கத்தினர் நழுவினர். 

மறுநாள் காலை பத்துமணிவாக்கில் சேகர் காவல்துறை கமிஷனர் அலுவலகம் போனான். அவனது கைப்பையில் ரெண்டுலிட்டர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் கலந்திருந்தது. சேகரோடு சுந்தரமும் வந்து சேர்ந்து கொண்டார்கள். இருவரும் அலுவலகத்தின் எதிரில் மரநிழலில் நின்றனர் பதினோருமணி அளவில் எச்சரிக்கைஒலி எழுப்பியபடி பாதுகாப்பு வாகனம் வர, பின்தொடர்ந்து புதிய ஆணையரின் காரும், இணை, துணை ஆணையர்களது வாகனங்களும் வந்தன. அந்தக் கணத்தில் சேகர் குரல் உயர்த்தி முழங்கினான்.       “காவல்துறையே, காவல்துறையே, பாதையோர வியாபாரிகளை வாழவிடு, வாழவிடு! தினசரி மாமுல் கேட்டு துன்புறுத்தாதே! துன்புறுத்தாதே! பாதையோர ஏழை வியாபாரிகளை பிழைக்கவிடு! பிழைக்கவிடு! மாமுல் கேட்பதைக் கைவிடு! கைவிடு!” சேகரின் முன் முழக்கத்திற்கு சுந்தரம் வழி முழக்கமிட்டார்.முழக்கச் சத்தம் கேட்டு வாயில்காவலர்கள் நால்வர் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். 

சேகர் இமைக்கும் நேரத்தில் கைப்பையிலிருந்த பாட்டிலைத் திறந்து தனது தலையில் ஊற்றினான். பெட்ரோல் வாசம் குப்பென்று அந்தவழி போவோர், வருவோர் முகங்களில் அறைந்தது. தெறித்து ஓடினர். ஓடிவந்த காவலர்கள், தீப்பெட்டி எடுக்க விடாது சேகரை       இறுகப்பற்றினர். சுந்தரம் விதிர்த்து வெலவெலத்து நின்றார். ஓடவும் முடியாமல் உடனிருக்கவும் முடியாமல் கால்கள் பின்ன மரத்தில் சாய்ந்தார்.

“கோஷமா போடுறே, வாடி மாப்பிளை,அட்டம்ப்ட் சூசைட் கேஸில் ரெண்டுவருஷம் ஜெயில் உறுதி” என்று காவலர் ஒருவர் பல்லைக் கடித்துக்கொண்டு முனங்கினார். வண்டியிலிருந்து இறங்கியவுடன், புதிய ஆணையர், இருவரையும் உள்ளே அழைத்துவரச் செய்ய ,இரு இணை, துணை ஆணையரிடம் சைகை காட்டினார். கடுகடுத்த முகத்துடன் இணை ஆணையர், காவலர்களிடம் சைகை காட்டினார். நடுங்கிய காவலர்கள் சேகரையும், சுந்தரத்தையும் உள்ளே இழுத்துச் சென்று வராண்டாவில் நிறுத்தினர். ஒரு காவலர் ஒரு தாளில் இருவரது ஊர்,பேர் விவரங்களைக் கேட்டுக் குறித்துக்கொண்டார். 

“ஏன் பங்காளி, எங்கிட்டகூட சொல்லாம, இப்படி பெட்ரோல் ஊத்திகிட்டு, உங்க குடும்பத்தையும், எங்குடும்பத்தையும் நடுத்தெருவில நிறுத்தீட்டிகளே! படிச்சவர் விவரமா இருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன். என்னையும் இக்கட்டில மாட்டி விட்டுட்டீகளே பங்காளி!” சுந்தரம் புலம்பினார். சேகருக்கு நெஞ்சை பிசைந்தது.”அண்ணே, ஒண்ணுமில்லைண்ணே பயப்படாதீக. போலிஸ் கமிஷனர் கவனத்துக்கு கொண்டுவரத்தான் செஞ்சேன். பதறாதீங்க.” சுந்தரத்திற்கு மனசு ஒருநிலைப்படவில்லை.

பணிஎற்பு முடிந்ததும், புதிய ஆணையர் இவர்களை அழைத்தார். சேகரும், சுந்தரமும் எந்த இயக்கப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்று துருவித் துருவி, இவர்களது வாழ்க்கைச் சூழலையும், நடந்த விவரங்களையும் கேட்டறிந்தார். மென்பொருள் துறையில் பணியாற்றியவனின் தற்போதைய நிலை கண்டு வருந்தினார். ”அறிவுக் குசுசும்பு தண்ணியில் பெட்ரோலைக் கலந்து தலையில் ஊற்றி போலிசை மிரட்டச் சொல்லுது. உன் கோரிக்கையில் நியாயம் இருக்குது. உன் வழிமுறை சரியில்லை. சரி, இனி இப்படி இதுமாதிரி தப்பு செய்யமாட்டேன்னு ரெண்டுபேரும் தனித்தனியா எழுதிக் கொடுத்துட்டு போங்க. இனி எந்த போலீஸும் உங்ககிட்ட மாமுல் கேட்கமாட்டாங்க. அதை உறுதி செய்றேன். தப்பித்தவறி யாரும் மாமுல் கேட்டால் கமிஷனர் வாட்ஸ் அப் நம்பருக்கு தகவல் அனுப்புங்க. உடனே நடவடிக்கை எடுப்பேன்.” என்று இவர்களை அனுப்பிவிட்டு இணை, துணை ஆணையர்களிடம், ஆணையர் கண்டிப்பான குரலில் பேசினார்.

இந்தத் தகவல், பாதையோர வியாபாரிகளிடம் புகைபோல் பரவியது. நகருக்குள் எந்த வியாபாரியிடமும் காவல்துறையினர் மாமுல் கேட்பதில்லை. சேகருக்கு வியாபாரிகள் மத்தியில் மரியாதை கூடியிருந்தது. ஆனால், காவல்துறையினர், பாதையோர வியாபாரிகளை எதிரிகளைப் போல முறைத்தனர். ஊமைவெயிலின் புழுக்கத்தை உணரமுடிந்தது. 

தற்கொலை முயற்சி போராட்டம் செய்தது சரியா? நல்ல ஆணையராக இருந்ததால் தப்பினோம். தற்கொலை முயற்சின்னு வழக்கு போட்டிருந்தா சிக்கல்தானே என்ற விவாதம் சேகரது மனதுக்குள் வதைத்துக் கொண்டிருந்தது. 

சேகர் தள்ளுவண்டி வியாபாரத்தை விட்டுட்டு, அதே தெருவில் பால் டிப்போ அருகில் ஒரு சின்னகடையை வாடகைக்கு அமர்த்தினான். தனிநபர் கடன் பெற்று, அந்தக்கடையில் காய்கறிகள், பலசரக்கு முதலானவற்றை வாங்கி விற்றான். அலைச்சல் மிச்சம். காலை, மாலை வியாபாரத்திற்கு மட்டும் கடையைத் திறந்தான். நகருக்குள் இருக்கும் பஜார் கடை விலையை ஒட்டியே குறைந்த இலாபத்தில் பொருள்களை விற்றான். ’சேகர் ஸ்டோர்’ன்னு பெயர் பிரபலமாகியது. இவனிடம் அந்தப்பகுதி மக்கள் குவியத்தொடங்கினர். சேகர் தன் கடைக்குப் பக்கத்தில் கிடைத்த பெரிய இடத்தைப் பிடித்து வியாபாரத்தை விரிவு படுத்தினான். 

இப்படியாக ஒரு ஆறுமாதம் ஓடியது. ஒருநாள் சுந்தரம் கடைக்கு வந்தார். ”பங்காளி, போலிஸ் தொல்லை விட்டதுன்னு அக்கடான்னு இருந்தோம். ஏரியாவில் ரெண்டு ரவுடிக வந்து மிரட்டி கத்தியைக் காட்டி மாமுல் வசூல் பண்றாங்க. மறுத்து எதிர்த்தால், நாங்க போலிசுக்கு மாமுல் கட்டி தொழில் நடத்துறோம், எவனாவது எதிர்த்தா தொலைஞ்சீங்க. எங்களை எந்த போலிசும் ஒன்னும் புடுங்க முடியாதுங்கிறானுக”.

*******

rv.jananesan89@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இறுதியாக வைத்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை.இரசித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button