இணைய இதழ்இணைய இதழ் 81கட்டுரைகள்

மு. இராமனாதன் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ – ஓர் அறிமுகம் – நளினா இராஜேந்திரன்

கட்டுரை | வாசகசாலை

னைவருக்கும் மாலை வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது இலக்கிய வட்டக் கூட்டம். ஹாங்காங்கில் 1884-ஆம் ஆண்டுக்குப் பிறகான பெரும் மழை பொழிந்திருக்கிறது. இதற்கிடையிலும் அறிவித்தபடி கூட்டம் நடக்கிறது. அரங்கு நிரம்பியிருக்கிறது. அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.

இன்று மு. இராமனாதனின் மூன்று புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதில் நான் பேசப்போகிற புத்தகம்கிழக்கும் மேற்கும்‘. பன்னாட்டு அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்நாடு அரசு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் திரு ஜெயரஞ்சன் அவர்கள், இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் சென்னைப் புத்தகக் காட்சியில், காலச்சுவடு அரங்கில், இந்தப் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். அதன்பின் ஆன்றோர்கள் பலரும் இந்தப் புத்தகம் குறித்தான தமது எண்ணங்களை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளனர். அனைவரும் ஒருமித்த கருத்தாகச் சொல்வது, நூலாசிரியர் மிக எளிய நடையில், கச்சிதமான வார்த்தைகளில் பன்னாட்டு அரசியலை அதன் அடியாழத்திற்குச் சென்று விளக்குகிறார்; செய்திகளைச் சொல்லும்போது அது சார்ந்த தனது நேரடி அனுபவங்களையும் சேர்த்துக்கொள்கிறார்; பிரச்சனைகளுக்கான தீர்வுகளாகப் பல நல்ல ஆலோசனைகளையும் எடுத்துச் சொல்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 34 கட்டுரைகள். அதில் சீனாவை பற்றி மட்டும் 16 கட்டுரைகள். மற்ற கட்டுரைகள் கிழக்காசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பற்றியவை. காலங்கருதி நான் சீனா பற்றிய கட்டுரைகளைப் பற்றி மட்டுமே பேசப் போகிறேன்.

1988-ஆம் ஆண்டு சீனத் தலைவர் டெங் சியோ பிங் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 21ஆம் நூற்றாண்டு இந்தியசீன நூற்றாண்டாக இருக்கும் என்று கூறினார். சீனா தொடர்ந்து அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி இன்று உலகின் தொழிற்சாலையாக மாறி நிற்கிறது. இந்தியா என்ன செய்தது? நாம் தடுமாறி நின்று விட்டோமா? நூலாசிரியரின் கட்டுரைகள் மூலமாக அதைப்பற்றி பேச விழைகிறேன்.

இந்திய சுதந்திரத்தின் வரலாறு நாம் எல்லோரும் படித்ததுதான். இந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரை சீன வரலாற்றைச் சொல்கிறது. ஜனவரி 1, 1912-இல் முடியாட்சி முடிவுக்கு வந்து, டாக்டர் சன் யாட் சென் தலைமையில் சீனக் குடியரசு உதயமானது; ஜூலை 1, 1921-இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஷாங்காய் நகரில் ஒரு ஓட்டு வீட்டில் நிறுவப்பட்டது; முதல் உள்நாட்டு யுத்தத்தின்(1927-37) போது மக்கள் விடுதலை ராணுவம் கட்டமைக்கப்பட்டது; நெடும் பயணம் (Long March), பின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு; அடுத்து, இரண்டாம் உள்நாட்டு யுத்தம் (1945-49), அதில் கோமிங்டாங்கின் அரச படைகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விடுதலை ராணுவமும் இணைந்து போரிட்டு பொது எதிரியான ஜப்பானை வெளியேற்றியது; பின் உள்நாட்டு எதிரியான கோமிங்டாங்கை மக்கள் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி வென்று, அக்டோபர் 1, 1948 அன்று தியானான்மென் சதுக்கத்தில் மக்கள் சீனக் குடியரசை மாவோ தலைமையில் நிறுவியது. இப்படி ஆரம்பகாலச் சீன வரலாற்றை நம் மனதில் நிலைத்து நிற்கும் சித்திரமாக வரைகிறார் ஆசிரியர்.

பெரும் கனவுகளோடு தொடங்கிய ஆட்சியில் மாவோவின் பெரும் பாய்ச்சலும் கலாச்சார புரட்சியும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தின. பின் வந்தார் டெங் சியோ பிங். தாராளமயமாக்கலுக்கு வழி விட்டார். அபரிதமான மனித வளத்தை முறைப்படுத்திச் சீனாவை உலகின் தொழிற்சாலையாக மாற்ற அடி கோலினார். முக்கியமாக அவரின் 24 அட்சரங்கள்: “அமைதியாக அவதானி, உன் இடத்தை உறுதி செய்து கொள், உன் சக்தியை வெளிக் காட்டாதே, உறுமீன் வரும் வரை காத்திரு, அடக்கி வாசி, தலைமை வேண்டும் எனக் கோராதே!”

அதைச் சீன பாணியிலான சோசலிசம் என்றார் டெங். 2008-இல் ஐந்து ட்ரில்லியன் டாலராக இருந்த சீனாவின் உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி), 2022-இல் 16 ட்ரில்லியன் டாலராக உயர்ந்தது. இந்தியாவின் ஜிடிபி 2.6 ட்ரில்லியன்தான். இந்தியாவிற்குப் பின் சுதந்திரம் பெற்ற நாடு, 1978 வாக்கிலே தாராளமயமாக்கலுக்கு வாசல் திறந்த நாடு, இந்த உயரத்திற்குப் போனது எப்படி? எப்படி நடந்தது இந்த மாயம்? கட்டாயக் கல்வியும் கடுமையான உழைப்பும் சுகாதார வளர்ச்சியும் இன்று சீனாவை உலகின் இரண்டாவது பொருளாதாரமாக உயர்த்தியிருக்கிறது. சீனா உறுமீன் வரும்வரை காத்திருந்தது! தன்னைப் பலமாக கட்டமைத்துத் தன் இடம் என்ன என்பதைச் செயலால் மேற்கு நாடுகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது! மேற்சொன்ன சீன வரலாறு அனைத்தையுமே ஆசிரியரின் கட்டுரைகள் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. சீனாவின் வளர்ச்சியைச் சொல்கிற ஆசிரியர், அதன் எதேச்சதிகாரப் போக்குகளைப் பற்றியும் சொல்கிறார்.

இதிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் ஆசிரியர் சொல்கிறார். இந்தியாவில் மனித வளம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், ஒரு பக்கம் வேலையின்மை, இன்னொரு பக்கம் திறன் மிகுந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை. உடல் உழைப்பைக் கோரும் பணிகளைத் தரக்குறைவாக எண்ணும் சமூகம். வெள்ளைக் காலர் வேலைகள் மேலானது என்று நம்புவதால் மக்கள் காசைக் கொட்டித் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கிறார்கள். பட்டம் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் வேலைக்கான தகுதியுடையவர்களாக இல்லை என முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கிறார்கள். என்ன செய்ய வேண்டும்? நமது இளைய சமூகத்திற்குத் தரமான கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதன் மூலம் நமது நாடு ஒரு பெரிய உற்பத்திச் சக்தியாக வளர முடியும் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

இரு நாட்டு எல்லைகளில் பதற்றம் நிலவிக் கொண்டிருந்தாலும் வணிகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் இத்தனை வேறுபாடு என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர். மின்னணு சார்ந்த பொருட்கள், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் என்று மதிப்புக் கூடிய பொருட்கள் இறக்குமதியில் கணிசமான பங்கு வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்கள் முக்கியம் குறைந்த மூலப்பொருட்களாக இருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக, கொரோனா காலத்தில் மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் கிடைக்காமல் நாம் தவித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இதை எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார். இந்தியப் பிரதமரின் முக்கியமான முன்னெடுப்பான ஆத்ம நிர்பார் பாரத் (சுயச்சார்புள்ள இந்தியா) வழியாக தற்சார்பு கொள்கைக்கான அடிவைப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். ஏற்கனவே சொன்னது போல தரமான கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதன் மூலம் இந்தியாசீனா நூற்றாண்டு எனும் கனவை நாம் எட்ட முடியும். வலுவான இந்தியாவைக் கட்டமைப்பதன் மூலம் எல்லைப் பிரச்சினைகளை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்கிறார்.

இன்று சீனாவில் செல்வம் இருக்கிறது, ராணுவ பலம் இருக்கிறது. அது உலகின் தொழிற்சாலையாக இருக்கிறது. இதற்குச் சீனா கொடுத்த விலை மிகப் பெரியது. ஒற்றை குழந்தைத் திட்டத்தால் இன்று உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அரசின் வேண்டுகோளுக்கு சீன மக்களிடையே வரவேற்பு இல்லை. இந்திய சமூகங்கள் போல சீன சமூகமும் ஆண் குழந்தை மோகம் கொண்டது. அதனால் பாலியல் சமநிலை பிறழ்ந்து இருக்கிறது. சீனாவின் அனுபவங்கள் இந்தியாவிற்கான பாடங்கள்.

சீனா ஜப்பான் உறவு பற்றிய ஒரு அருமையான கட்டுரை இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் காலத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவில் நடத்திய நான்ஜிங் படுகொலைகள் விவரிக்கிறார்; சீனாவை மட்டுமல்ல கொரியாவையும் தைவானையும் ஜப்பான் ஆக்கிரமித்தது; ஆயிரக்கணக்கான பெண்களை இராணுவத்தின்சுகப்பெண்டிர்ஆக்கியது, என்று நாம் அறிந்திராத ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி நேச நாடுகளிடம் மன்னிப்பு கோரியது; இழப்பீடுகளை வழங்கியது. ஆனால், ஜப்பான் தன் போர்க் குற்றங்களை நினைவுகூரவும், மன்னிப்புக் கேட்கவும் விரும்பவில்லை. அது சீனர்களின் மனத்தில் ஆறாத ரணமாக இருக்கிறது. அறத்திற்கு மட்டுமல்ல வீரத்திற்கும் அன்பே துணையாகும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

நான் இங்கே எடுத்துக்கொண்டது இரண்டு மூன்று கட்டுரைகள்தான். இன்னும் பல கட்டுரைகள், எல்லாம் மிக ஆழமான கட்டுரைகள். நண்பர்கள் அவசியம் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். உலக அரசியலில், இந்திய சீன அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களும் இந்த புத்தகத்தைப் படித்தால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்

இந்த நூலின் அணிந்துரையில் பத்திரிகையாளர் சமஸ், இராமனாதன் வெறும் தரவுகளை மட்டும் அடுக்கிக் கட்டுரைகளை உருவாக்குபவர் அல்லர் என்கிறார். மேலும், அவரது கட்டுரைகளில் நடைமுறைக் கதைகள் இருக்கும், பிரச்சனையின் அடிநாதம் கட்டப்படுவதோடு தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் இருக்கும் என்றும், நல்லெண்ணமும் நல் மதிப்பீடுகளும் கட்டுரைகளைச் சேர்த்துப் பிணைத்திருக்கும் என்றும் பாராட்டுகிறார். ‘இராமனாதன் எழுத்திலும் பொறியாளர்; எப்படி இருக்கிறது பாருங்கள் கலவையும், கட்டமைப்பும்என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். கூடவே, இது வெளியறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் என சிலாகிக்கிறார்.

இப்படிப்பட்ட ஆளுமைகளின் பாராட்டு பெற்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அன்பு இராமனாதனுக்கு நானும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே பேசுவதற்கான வாய்ப்பளித்த இலக்கிய வட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், வணக்கம்!

(செப்டம்பர் 9, 2023 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய மு.இராமனாதன் எழுதிய மூன்று நூல்களின் அறிமுக விழாவில் நளினா ராஜேந்திரன் பேசியதன் எழுத்து வடிவம்

நூல்: கிழக்கும் மேற்கும்-பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
ஆசிரியர்: மு இராமனாதன்
விலை: ரூ. 290
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை,
நாகர்கோவில் 629 001.
தொலைபேசி: 91 – 4652-278525.

*********

mu.ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button