கட்டுரைகள்

கோஹ்லி 2.0 – வில்சன்

கட்டுரை | வாசகசாலை

“ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கோலிக்கு அளவெடுத்து தைத்த சட்டை போல அத்தனை வார்த்தைகளும் அப்படியே பொருந்திப் போகிறது. விராட் கோலியின் கிரிக்கெட் பயணம் ஷேர் மார்க்கெட்டை விட இவ்வளவு வேகமாக இறங்கும் என்று யாருமே கணித்திருக்க மாட்டார்கள். கேப்டன், உலகின் மிகச்சிறந்த பேட்டிங் வீரர், இந்திய கிரிக்கெட்டின் முகம் என்று கிரிக்கெட்டிற்கான அறிவிக்கப்படாத brand ambassador-ஆக விளங்கிய கோலி, தற்போது மெல்ல தேய்மானம் அடையத் துவங்கிவிட்டார். 71-வது சதம் நீண்ட நாட்களாக வரவில்லை என்பதால் மட்டும் இதை தேய்மானம் என்று கூறவில்லை. கோலியின் ஆரம்பகாலம் முதல் அவரை ரசித்த அத்தனை பேர்களுக்கும் தெரியும். இது நம்ம கோலி இல்லை என்று.

கொஞ்சம் உங்கள் நினைவலைகளை பின்னோக்கி ஓட விடுங்கள். யாராலும் வீழ்த்த முடியாத சர்வாதிகாரியாக வலம் வந்த கோலியை கண்முன் கொண்டு வாருங்கள். இத்தனைக்கும் அணியில் நிரந்தரமான பிறகோ அல்லது கேப்டன் ஆன பிறகோ கோலிக்கு ஆக்ரோஷ குணம் வரவில்லை. அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பந்து வீச்சாளரின் வார்த்தை ஜாலங்களுக்கு அஞ்சாமல் flying kiss கொடுத்து பந்து வீச்சாளரை வெறுப்பேற்றினார். முதல் ஆஸ்திரேலிய தொடரிலேயே தன்னை விமர்சித்த ரசிகர்களை நோக்கி தனது நடு விரலை உயர்த்திக் காட்டியவர். 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக விமர்சிக்கப்பட்டபோதும் சரி, 2015ல் அவரது இந்நாள் மனைவி குறித்து மோசமான கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் சரி… விராட் கோலியிடம் இருந்த ஆக்ரோஷ நெருப்பு அணைந்து போகவேயில்லை. ஆக்ரோஷமும் பேட்டிங்கும் இணைந்து இந்திய கிரிக்கெட்டில் ஒரு புது சகாப்தத்தை எழுத ஆரம்பித்தது.

தோனி ஓய்வு பெற்றதும் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியே எழாமல் விராட் கைகளில் போய் விழுந்தது அது. ஆட வந்த அணிகள் அனைத்தையும் இந்தியா வீழ்த்தியது. வெளிநாடுகளுக்கு சென்று கூட டெஸ்ட் தொடரை வெல்லும் வழக்கம் எல்லாம் பல தசாப்தங்களுக்கு பிறகு விராட் காலத்தில் தான் மீண்டும் அரங்கேறியது. பிற நாடுகளுக்கு விராட் விளையாடச் சென்றால் அந்தந்த நாடுகள் சிறந்த வீரர் வருகிறார் என விராட்டின் படத்தை போட்டு டிக்கெட்டுகளை விற்பனை செய்தன. மற்ற நாட்டு கேப்டன்கள் கூட, “விராட், பேட்டிங் செய்வதை ஏன் இவ்வளவு எளிமையாக காட்டுகிறீர்கள்” என்று ட்வீட் போட்டனர். அப்போதெல்லாம், சச்சின் சாதனைகளை இன்னும் ஒரு ஆண்டில் விராட் தகர்ப்பாரா இல்லை இரண்டு ஆண்டுகள் ஆகுமா என்பது தான் விவாதமே.

கோலியின் புகழ், ரன்கள், சதங்கள் என அனைத்துமே தங்கம் விலையைப் போல மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அனைத்தும் விராட் வசம் தான். பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் நக்கல் பதில்கள், பிசிசிஐ நிர்ணயித்த பயிற்சியாளரை மாற்றுவது என அனைத்துக்கும் அவருக்கு அனுமதி இருந்தது. ஆனால் இவை எல்லாம் 2021 முதல் ஆட்டம் காண ஆரம்பித்தது. முதலில் அவரது பேட்டிங். இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதங்கள் வரவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக மோசமான முறையில் தொடர்ந்து அவுட் ஆகிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி வந்தது.

இறுதிப்போட்டிக்கு வீரர்கள் தேர்வு சரியாக இல்லை என்றும் அந்தப் போட்டி முடிந்ததும் கோலி வர வர அணுக முடியாத கேப்டனாக மாறிவிட்டார் என சில வீரர்கள் குற்றஞ்சாட்டியதாகவும் ஒரு தகவல் கசிந்தது. இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தாலும் அதன் பின்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் இதைச் சுற்றித்தான் சுழன்றன. பெரிய கோப்பை எதுவும் வெல்லாததை காரணமாக வைத்து தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் விலகும் நிலை வந்தது. தானே விலகுவது போன்று விராட் கூறினாலும் அதன் பின்பு, ஒரு-நாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அடுத்து அவரே டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். கங்குலியுடன் சில முட்டல் மோதல்கள் வேறு.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். கோலி தனது பழைய ஃபார்முக்கு வர முடியுமா? நிச்சயம் முடியும். கோலியின் தன்னம்பிக்கையும் கிரிக்கெட் மேல் கொண்ட காதலும் அதை நிச்சயம் சாத்தியப்படுத்தும். ஆனால் தற்போது கேள்வி அதுவல்ல… பழைய கோலியை நம்மால் பார்க்க முடியுமா என்றால் அது முடியாது தான். தசாவதாரம் படத்தில் குரல் வேண்டுமா குடும்பம் வேண்டுமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் குடும்பத்தைத் தான் கை காட்டுவார். அதே போல் தான் கோலியும்… நான், என் மனைவி, மகள், ஒரு நிம்மதியான வாழ்க்கை என முதல்வன் பட புகழேந்தி போல ஒரு வாழ்க்கைக்குள் சென்று விட்டார். கர்ணன் கவச குண்டலங்களை தானம் செய்தது போல தனது கிரிக்கெட்டின் முக்கிய அங்கமான ஆக்ரோஷத்தை விட்டுக்கொடுத்து விட்டார் கோலி.

யோசித்துப் பாருங்கள்… கோலியிடம் அதே ஆக்ரோஷம் இப்போது இருந்து, கங்குலி முன்னுக்குப் பின் முரணாக பேசியிருந்தால் இந்திய கிரிக்கெட் எப்படிப்பட்ட அதிர்வலைகளை சந்தித்திருக்கும் என்று. ஆனால் கோலி மாறி விட்டார். நடுவர் தவறான முடிவை அளித்தால் கூட புன்னகிக்கும் புது கோலியாக அவதாரம் எடுத்து விட்டார். நடிகர் அஜித் குமார் எப்படி சமையல், பைக்-ரேஸ், துப்பாக்கி சுடுதல் என்று நடிப்பையும் கடந்து தன் வாழ்க்கையை மகிழ்ந்து வாழ ஆரம்பித்துள்ளாரோ கோலியும் அதே போல மாறி வருகிறார். விரைவில் கோலியிடம் இருந்தும் உங்கள் குடும்பங்களை கவனியுங்கள் என்று அறிவுரைகளை எதிர்பார்க்கலாம்.

இது கோலி 2.0. சதத்திற்காக ஆடாத கோலி, எதிரணியினரிடம் வம்புக்கு போகாத கோலி, எதிரணி வீரர்களையும் தட்டிக் கொடுக்கும் கோலி. 71வது சதம் வந்தால் மகிழ்வோம். இல்லை என்றால் போகட்டும். 70 சதங்கள் தராத மகிழ்ச்சியை 71வது புதியதாக தரப்போகிறதா என்ன? கோலியின் இந்த மாற்றத்தை முடிந்த வரை ரசிப்போம். அவரைக் களத்தில் காணும் நாள் வரை ரசித்துக் கொள்வோம். சச்சின் போன்றோ டிராவிட் போன்றோ நிச்சயம் கோலி ஓய்வு பெற்ற பின்பும் பிசிசிஐ உடன் இணக்கமாக இருக்கப்போவதில்லை. தன்னுடைய தற்கால குருநாதர் தோனி போல விவசாயியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. இந்த மாற்றம் எல்லாம் அனுஷ்கா உடனான திருமணத்திற்கு பின்பு தான் கோலிக்கு நடந்துள்ளது. சமீபத்தில் முகநூலில் ஒரு கேள்வி trend ஆனதே.. “ஒரு காதல் என்ன செய்யும் என்று? “. அதற்கு கோலியின் இந்த மாற்றம் தான் பதில்.

****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button