
அவள் தங்கியிருந்தது ஏரியை ஒட்டிய உண்டு உறைவிடப்பள்ளி. கட்டிடம் நிறங்களை இழந்து ஈர நயப்புடன் இருந்தது. சுற்றுப்புறம் சதுப்பு நிலம் போல் பொதுக் பொதுக்கென்றே காணப்பட்டது. மாடியில் ஏரியைப் பார்த்தபடி நின்றாள். “பாம்பு…பாம்பு..” என்ற குழந்தைகளின் கூச்சல். சிறுவன் ஓடி வந்து, “அக்கா இங்கையா இருக்கீங்க ஓடி வாங்க” என்றான்.
கீழ் இறங்கியவளைப் பார்த்த உண்டு உறைவிடப்பள்ளி நடத்துபவர் சொன்னார். “அது ஒண்ணுமில்லீங்க நீர் பாம்புதான். தவளைகள், படுக்குற ரூம் வரைக்கும் சகஜமாக வந்து போகுது. அதனால பாம்பும் வர பழகியாச்சி. நீங்க வாங்க…’
”டீச்சர் வர்றது வரைக்கும் அவங்கள அமைதியாக இருக்கச் சொல்லுங்க” என்றார். அவள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு வந்து சேர்ந்து இரண்டு வாரமாகிறது. அவர்களை வலுக்கட்டாயமாக அதட்டிச் சொல்லும் மனம் இல்லாதவளாகக் காணப்பட்டாள். அவளைக் கண்ட குழந்தைகள் தடுமாற்றம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடம் பழகுவதைப்போல் பேசிக்கொண்டார்கள். குழந்தைகள் குளித்து சீருடைகள் அணிந்திருந்தனர். சில குழந்தைகள் கலர் ஆடை உடுத்தியிருந்தனர். முன்னறையில் வகுப்பு வாரியாகப் பிரித்து உட்கார வைத்தாள். அழுகை, சிரிப்பு, கூச்சல், விளையாட்டு, சண்டை இவைகளுக்கு நடுவே வெளியில் நோட்டமிட்டவாறே இருந்தாள்.
வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியருக்கு வணக்கம் சொல்லி உட்கார்ந்து கொண்டனர் மாணவர்கள். சற்று நேரத்திற்குப் பின் அவரின் அதட்டலில் அமைதியானார்கள். அப்போதுதான் அவள் காதுகளுக்கு குளியலறை குழாயில் நீர் வடிந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அதை நிறுத்துவதற்காக உள்ளே சென்றாள். கரண்டைக்காலுக்கு மேலே வரை நீர் தேங்கி நின்றது. உணவுகள் அடைத்துக் கிடந்தன. கழனியின் வாடை, கழிவறை சுத்தம் செய்யப்படாமலும், கதவுகள் உடைந்தும் இருந்தது. தண்ணீர் வடிய வேண்டுமானால் கட்டிடத்தின் மறுபக்கம் ஏரியின் கரையோரத்தில் இறங்கி நின்று நீள குச்சியால் சரி செய்ய வேண்டும். புதர்கள் நிறைந்த பகுதியில் யாரும் அதை செய்யத் துணியவில்லை. நீரானது மெதுவாக வடிந்து கொண்டிருந்தது. குளியலறை ஓட்டையில் அடைந்திருக்கும் காய்கறித் துண்டுகள், சாதம் இவற்றை அப்புறப்படுத்தினால் ஓரளவிற்கு நாற்றம் வராமல் இருக்கும். குழாயை துணி வைத்து இறுக்கமாக மூடிவிட்டு, பொறுப்பானவரிடம் சொன்னாள்.
“அதுக்குத்தாம்மா உங்கள வச்சிருக்கோம். இதுங்களுக்க அட்டகாசம் தாங்க முடியல. பிள்ளைங்க கிட்ட கண்டிப்பா நடந்துக்கிட்டீங்கன்னா சொல்லுவார்த்த கேக்கும். இல்லன்னா இப்படித்தான். தண்ணி வடிஞ்ச ஓடனேயே பிள்ளைங்கள நாலு பேர கூப்பிட்டுக்கோங்க கிளீன் பண்ண சொல்லுங்க” என்றார். அன்றைய வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடிந்தன.
பகல் நேரங்களில் அன்னிச்சையாக எல்லா வேலைகளையும் தானே செய்து முடித்தாலும், இரவு வந்தவுடனே துயரம் அவளோடு பற்றிக்கொள்கிறது. இப்போது தூங்கக் கிடைத்திருக்கும் இரவுகளை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை, அவனோடு வாழ்க்கையைத் துவங்கிய நாளில் இருந்தே தூக்கம் தொலைத்த இரவுகளை நினைத்து வருத்தப்படுவதா?. இது போன்ற எண்ணங்கள் தன்னை பலவீனப்படுத்துவதாக உணர்ந்தாள்.
இரவு நேரம் தூக்கம் வர மறுக்கும் பொழுதுகளில் எண்ணங்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. தூக்கத்தில் சத்தமிட்ட குழந்தைகளைப் போய்ப் பார்த்து வந்தாள். தனிமையின் வருத்தங்கள் சிதறி ஓடியபடியே இருந்தன. எண்ணங்கள் ஓங்கி எழுவதும், பின் தானாக சமாதானம் செய்து கொள்ளுவதும், அவளுக்குள் பலர் பேசிச் செல்வதாகவே குழம்பிக்கிடந்தாள். சிந்தால் சோப்பின் வாசனை கொஞ்ச நேரமாகவே வந்து கொண்டிருந்தது. சுற்றி ஒரு தடவை பார்த்தாள். சோப்பின் கவர் படுக்கும் இடத்தில் கிடந்தது. பிள்ளைகளிடம் குப்பைகளை சரியான இடத்தில் கூட்டி வைக்க சொல்ல வேண்டும் என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
நினைவுகள் மணத்துடன் இணைந்து கிடக்கின்றன. நெடு நாட்களுக்குப் பிறகு அந்த சோப்பின் வாசனை அம்மா என்ற நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தது. அவளது சின்ன வயதில் ஒரு அதிகாலை நேரம் அப்பா வந்திருப்பதாக அவள் பாட்டி சொன்னாள். எப்போதாவது வரும் அப்பாவை அவளும் பார்க்க ஆவலாகத்தான் இருந்தாள். நிறைய தின்பண்டங்கள் கிடைக்கும். அவளது அப்பா அவளுக்கு அம்மாவை அறிமுகப்படுத்தி வைத்தார். பாட்டியின் சமையலை விடவும் அம்மாவின் சமையல் நன்றாக இருந்தது. அன்போடு பார்த்துக்கொண்டாள்.
அம்மாவோடு குளிக்கச் சென்ற நாள் அது. குளத்திற்கு அம்மாவை அறிமுகம் செய்து வைத்தாள். அப்போது உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. ‘குளமே உன்னைப் போல எனக்கும் எல்லாரும் கிடைப்பாங்க. இங்கப் பாரு எங்க அம்மா, சொல்லி வை உனக்க சொந்தக்கார மீனுக்கிட்ட. எத்தனை தடவை கொத்தியிருப்ப. இதோ எங்க அம்மா எனக்கு வாங்கித் தந்த காப்பிக் கலர் ஜட்டி… இனி குளிக்கும்போதெல்லாம் இதைப் போட்டுத்தான். குளத்தோடு பெருமை பேசியே மகிழ்ந்திருந்த காலங்கள் குழந்தைப் பருவத்தோடே முடிந்துபோயின.
சோப்பின் கவரைப் போலவே கவனிக்கப்படாமல் போகும் தனிமை. சோப்போடு ஒட்டியிருந்ததின் அடையாளத்தைக் கவரும் மணத்தை சுமந்து செல்கிறது. அம்மா என்று வந்தவர்களாவது இருந்திருந்தால் அவர்களிடம் போயாவது ஒதுங்கிக் கொள்ளலாம். இந்த உண்டு உறைவிடப்பள்ளியில் வந்து தனிமையை சுமந்துகொண்டு இருக்க வேண்டாம் என்று நினைத்தாள்.
அப்பா, அம்மாவோடு சில வருடங்கள் சந்தோஷமாக சென்றது. இருவருக்கும் இடையில் சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகின. அப்பா தற்கொலை செய்து கொண்ட பிறகு சில மாதங்களில் அம்மாவும் எங்கோ சென்றுவிட்டாள். அப்போதிலிருந்தே விடுதியில் வளர்ந்தவளுக்கு இப்போது விடுதி வாழ்க்கையே தஞ்சம் என்ற நிலையை நினைத்து வருந்தினாள்.
பகலில் கொஞ்ச நேரம் மாடியில் நின்றவாறே ஏரியைப் போய் பார்ப்பதை வழக்கமாக்கினாள். குளிர்ச்சியான காற்றில் நீரின் மணம் வருடிச் சென்றது. தங்கியிருக்கும் உண்டு உறைவிடப்பள்ளியில் இருந்து அவள் வீட்டைப் பார்த்தால் சின்னதாகத் தெரியும். அவளது மனம் நீர்ப்பறவை போல் ஏரியை சுலபமாகக் கடந்து இளநீல கட்டிடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. சென்ற பின்பு என்ன செய்ய என்ற கேள்வி குறுக்காக யாரோ கேட்டுவிட்டது போல் இருக்க, வெறிச்சோடிய வெட்டவெளியை நோக்கினாள். ஏன் இதெல்லாம் வருவதற்கு முன்னே உனக்குத் தெரியாதா? என்ற கேள்வியை அவளுக்குள் இருக்கும் சமூகம் கேட்டுக்கொண்டது. துரத்தில் பெண்கள் மாடிகளில் துணி காயப்போட்டுக்கொண்டிருப்பது மெல்லிய நிழல் அசைவு போல் இருந்தது. அங்கிருந்தால் இதைத்தான் செய்து கொண்டிருப்பதாக நினைத்தாள். அங்கு செல்வதற்கு இந்த பெரிய ஏரிதான் தடையாக இருப்பதாகவும், சில நேரம் ஏரி மட்டுமே தனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதாகவும் உணர்ந்தாள்.
உண்டு உறைவிடப்பள்ளிக்கு வருவதற்கு காரணமான இரவுகள் இன்னும் அவளுக்குள் விழித்துக்கொண்டிருந்தது. அவன் அவளை வீட்டிலிருந்து இரவு நேரம் வெளியேற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஏன் விரட்டுகிறாய் என்று அவள் கேட்டதற்கு “உன்ன தொட்டதுனாலதான் கட்டிக்கிட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது. நான் அரசாங்க வேல பாக்குறதுனால என்ன ஏமாத்தி ஏங்கூட வந்துட்ட, உன்னக் கட்டிக்கிட்டதுனால எனக்கு மனக்கஷ்டம். அதிகமா குடிக்கவும் செய்யிறேன். அதுனால கடனாளியா இருக்கேன்.” என்றான்.
அவனோடு ஒரு நாள் குடிப்பவனோ பல நாள் நண்பனாகிவிடுகிறான், அதிக வட்டிக்கு தன்பேரில் பணம் வாங்கி அவர்களுக்குக் கொடுப்பது, மற்றவர்களுக்கு லோன் வாங்க வேண்டுமானால் ஜாமீன் கையெழுத்து இடுவது, இப்படியாக தானாகவே பல சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கும் அவன் நிலையை அவள் அறியாதவள் அல்ல. தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்.
சொல்ல நினைக்கும் வார்த்தைகள் வெளி வராமலேயே அவளின் முகத்தின் பாவனையை வைத்தே, அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாய் தூவிவிடுகிறான் முட்செடியின் விதைகளை.
“நீ என்ன புடுங்கி வாரி கொண்டு வந்துட்ட உனக்க சிப்பியத் தவிர. முடிஞ்சா வேல செஞ்சி எங்கையாவது போய் பொழைச்சிக்க இல்ல செத்துக்கூட போ. இப்பவே வீட்ட விட்டு வெளியில போ, ராத்திரி போனியன்ன நிறைய கிடைக்கும். உன்னயெல்லாம் ஒட்டுத் துணியில்லாம நடு ரோட்டுல விட்டு வெரட்டணும்…”
வெறுப்பின் உச்சம் தொடும்போதெல்லாம் அடிக்கடி இதே பதில் அவளை என்னவோ செய்தது. அவன் பதிலைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதால் நிர்கதியான நிலையை உணர்ந்தாள்.
செருப்பிற்கும் காலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட கல் நடையில் சுமூகமில்லாத நிலை. அன்று மட்டும் அப்படியொரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும். எப்படித்தான் சண்டை போட்டாலும் சில நேரம் அமைதியாகவே கடந்து போகும் நாட்களுக்காக அவனோடு இருந்தாள்.
நிழல்களின் நிறத்தில் பயணப்படுவது அச்சப்படும் ஒன்றானது. என்றோ ஒருநாள் உணர்வுகளின் உச்சியில் திளைத்திருந்தபோது நீ என் தாய் விருட்சமென மெய்யால் புணர்ந்த தருணம் புலம்பியதாக அவள் நினைவு. காட்டுக் கூச்சலிட்டு கிளையையும் இலைகளையும் உதிர்த்து பறவைகளையும் இடம்பெயரச் செய்வதுதான் விருட்சத்தின் அழகா? எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவளாக இரவை எதிர்கொள்ள நடந்தாள்.
முந்தைய இரவுகளின் பயத்தை விட இப்போது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அவளுக்கு. கடைகளில் சட்டர்களை இழுத்து மூடும் சத்தம். நியான் விளக்குகளின் ஒளி இன்னும் சிறிது நேரத்தில் உறங்கக் காத்திருக்கும் தார்ச்சாலைகள். நீருக்குள் மூழ்கியபடியே இருந்து திறந்துகொள்ளும் விழிகளில் தெரியும் மங்கலான காட்சிகள் எங்கும். இன்று இரவை மட்டும் கடந்துவிட வேண்டும். தெருக்களைக் கடந்து மெயின் ரோட்டை எட்டிருயிருந்தாள். தொலைநோக்கிக்கான கண்களை சுமந்து சென்றாள். பெருத்த சத்தத்தை விடவும் மெதுவாகப் பேசும் பேச்சுகள் எண்ணத்தில் சீக்கிரமாக வந்தடைந்து நிறைத்துக்கொள்கின்றன. அவனது இசைவுகளும் அப்படித்தானே இருந்தது.
எவ்வளவு மெளனமான இளநீல நிறச்சுவர்கள். எல்லா உணர்வுகளையும் ஒரே கொட்டாவியில் உள்ளே அமுக்கிவிடும் ஒரு ராட்சதனின் தோற்றம். தனக்குத்தானே பேசுபவளாக.
அவரவர் வீட்டிற்குள் முடங்கும் நேரம் வெளியில் உலவுவது வேதனை. எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கடத்துவது. யாருக்கும் தெரியாமல் ஆந்தையைப் போல் விழித்திருந்து… காலையில் போய் இரவில் நடந்ததைப் பற்றி பேசினால் மீண்டும் வெளியேற்றப்படுவோம் என்பதை நினைவில் வைத்தவாறே, காலை வேலைகளை செய்து முடித்து, கிடைக்கும் வேளைகளில் தூங்கி எழும்பி… மீண்டும் இரவு வரும்போது இன்றேனும் இவ்விடம் நிலைக்காதா என்ற நினைப்புடனே தவிப்பும்… இரவுகளை ஒரு ஆடையைப் போல் போர்த்திக்கொண்டு முடங்கும்போது மெல்லென ஆயிரம் கால் அட்டையைப் போல் உடல் முழுவதும் ஊர்ந்து செல்கிறது அவனது இரவுக் காமம். தன்னுடல் கவசத்தைக் கழற்றிய நண்டு பலவீனமாகிக் கிடக்கும் இரவுகள் தனக்கானது என்ற நிம்மதி அவளுக்குள்.
எங்கு போவதென இருட்டிடம் ததும்பிய குரலில் கேட்டாள். இருட்டும் பெருத்த மெளனமாகி இளநீல நிறச்சுவரைப்போல் இருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள். ரோட்டின் மறுமுனையில் இருந்த சினிமா தியேட்டரின் உள்ளே போய்விட்டால் குறைந்தது இரண்டு மணி நேரத்தையாவது கடத்திவிடலாம் என்று நினைத்தாள். இரவு நேரம் வந்தாலே மறைத்து ரூபாய்களை வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். வியர்வையில் நனைந்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து டிக்கெட் கவுண்டரில் கொடுத்தாள். பெண்களின் கூட்டம் நிற்கின்றதாவென நோக்கினாள். இரவுக் காட்சிக்கு கூட்டம் சுமாராகவே இருந்தது. இருட்டில் இருக்கையைத் தேடி உட்கார்ந்துகொண்டாள். நடந்த களைப்பிற்கு ஆறுதலாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்ற யோசனையிலேயே இருந்தாள். திரை முழுவதும் அவள் எண்ண ஓட்டங்களே ஓடிக்கொண்டிருந்தன.
அவசரப்பட்டு விட்டோமோ… இன்னும் எத்தனை நாளைக்குதான் தாங்குவது… வீட்டின் வெளியிலாவது இருந்துகொள்ளலாம் என்றால் அதற்கான வாய்ப்பேயில்லை. படம் முடிந்து சிறிது நேர தலைச்சுற்றல் வலியோடு எழும்பி நடக்கலானாள். இருட்டு எல்லாவற்றுக்கும் சாதகமாகவே இருப்பதாக உணர்ந்தாள். காலை விடிந்துவிடும், முற்றிலும் இந்நிலையில் இருந்து விடுபட்டு விடலாம் என்ற எண்ணம் மட்டும் விடாமல் துரத்திக்கொண்டே வந்தது.
இதற்கு முன்னால் குடியிருந்த வீடுகளிலாவது மாடிப்படிகளுக்கு கீழே உட்கார்ந்து கொள்ளலாம். காலையில் எல்லாருக்கும் நல்லவனாக தோற்றம் காணுவதும். இரவு நேரம் ஓநாய் போல வேட்டைக்கான மூர்க்கத்தோடும் காத்திருக்கும் அவனைப் புரிந்துகொள்ளவே முடியாத புதிராக இருந்தது அவளுக்கு. மாதத்தில் மூன்று, நான்கு முறைகளாவது வீட்டிலிருந்து வெளியேற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டவனை எப்படிப் புரிய வைப்பது? இல்லை, எப்படித்தான் திருத்துவது? பலமுறை சொல்லியும் பாத்தாகிவிட்டது. மீண்டும் இதே நிலை.
மூன்று மாதங்களுக்கு முன் மகளிர் காவல் நிலையத்திற்குப் போன பிறகுதான் இரவு வெளியில் விரட்டுவது அதிகரித்துள்ளது. அதனால் இனிமேல் அந்த முயற்சியை எடுப்பது சரியில்லை என்று நினைத்துக்கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டு என்னதான் செய்வான் என்றும் பார்க்க முடிவதில்லை. வீட்டில் உள்ள டிவி மட்டும் உறங்காமல் அவனோடு சத்தமாக மல்லுக்கட்டிக் கிடக்கும். அறையின் இளநீல சுவருக்குள் இரவு நேரம் கரைந்து போகும் காற்றாய் இருந்துவிட்டால் நலம் என்றே நினைத்தாள்.
இதற்கு முன்னால் விரட்டும் போது பக்கத்துவீட்டு மிலிட்டரி தாத்தா பாத்து சத்தம் போடவே, வீட்டிற்குள் அனுமதித்தான். எப்போது எழுப்பி விரட்டி விடுவானோ என்ற பயத்தோடு படுத்ததினால் தூக்கத்தை துரத்தியடித்துக் கொண்டேயிருந்தது மனம். நினைத்தது போல் நடந்தும் விட்டது. கண்கள் எப்போது ஓய்வு கொண்டது என்று அறியாத சாமத்தில் கண்களை துடைக்ககூட அவகாசம் இல்லாதவளாய் வெளியில் தரதரவென இழுத்து வெளியற்றப்பட்டாள். கதவும் தாழிட்டுக்கொண்டது.
காலையில் மிலிட்டரி தாத்தா அவளை விசாரித்தபோது உண்மையைச் சொன்னாள். அவர் சங்கடப்பட்டவராய் இந்த பித்துப் பிடிச்சவனோடு வாழ்வதை விடவும் இங்கிருந்து போய்விடு என்றார்.
இங்கிருந்து எங்கு போவது? காலம் அவளை தனிமைப்படுத்தி விட்டிருந்தது. தனித்து எங்கும் போனதில்லை. துணிந்து முடிவெடுக்கும் தைரியமும் இல்லை. சொந்த ஊர் அல்லாத மகளிர் காவல் நிலையம் போனது கூட கேட்க நாதியற்ற தன்மையினால்தான். அவனில்லாத பகல் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. இத்தி கொடி படர்ந்து செழித்து வளர்வதை அந்த மாமரத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாத நிலை. விம்மி வெடிக்கும் கண்ணீர்த் துளிகளை இருட்டின் முகத்தில் வீசி எறிந்தவளாக நடந்தாள்.
சிறிது தூரம் கடந்தபோது அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதுபோல் காட்சி தந்த பேரூராட்சி வளாகம். மெயின் கேட் சற்று இடைவெளி விட்டிருந்தது. காலை நேரங்களில் பேரூராட்சியின் அழகே தனிதான். பன்னீர்ப் பூக்கள் நடக்கும் வழியெங்கும் பரந்து கிடக்கும். மஞ்சள் கொன்றையின் பூவிதழ்கள் வழியெங்கும் நிறைந்திருக்கும் மஞ்சளும் வெள்ளையும் கலந்த பூப்போர்வையின் மேலே மனிதர்கள் நடந்து செல்வார்கள்.
நீண்ட வராண்டா அவளுக்காகவே காத்திருப்பது போல் கிடந்தது. தெருநாய்கள் ஆங்காங்கே பதுங்கி தூங்குவது போல் பாசாங்கு காட்டி கிடந்தன. அவளைக் கண்டதும் சில நாய்கள் மட்டும் குரைக்க முற்பட்டன. குனிந்து கல்லெடுத்து எறிவதுபோல் போக்கு காட்டியதும் புறந்தள்ளி ஓடின. சில நாய்களுக்கு அவளைத் தெரிந்திருந்தது. எப்போதும் அந்த வழியாகப் போய்வருவதுண்டு.
வளாகத்தை ஒட்டிய தெருவிளக்கின் ஒளி மரங்களினூடே சிதறி வெளிச்சத்தைக் கொடுத்தது. வெளிச்சம் இல்லாத இடத்தில் போய் ஒதுங்கிக்கொண்டாள். இருட்டைப் பார்த்து பதுங்குவது சிறுகுழந்தையில் விளையாடிய விளையாட்டுதான் ஞாபகம். வெளிச்சமான வீட்டிற்குள் மூலையில் பாயை சுருட்டிக்கொண்டு உள்ளுக்குள் பதுங்கிக் கொள்வது… பலவாறு எண்ணங்கள் மோதிக்கொண்டபோதும், இருட்டில் தெரிவதெல்லாம் என்னவென்று கூர்ந்து நோக்கினாள். அறைக்குள் இருக்கும்போது சின்ன இடைவெளி தெரிந்தால் அங்கேதான் கவனமும், கூடவே பயமும். அடைபடாத திறந்தவெளிக்குள்ளும் பயத்தின் தேடல். திரும்பி வீட்டிற்குப் போய்விடலாமா என்று எண்ணினாள். எத்தனையோ இரவுகளை வீட்டிற்கு வெளியேதான் கழித்திருக்கிறாள். இப்போதுதான் முதல்முறையாக வீதியில். வந்தது தவறு என்று எண்ணும்போது மனதில் பயம். இதுதான் சரி என்ற போது அதை எதிர்கொள்ளும் தைரியமும் வருகிறது. போனாலும் பூட்டப்பட்ட வீட்டின் கதவு விடிந்தே திறக்கும்.
இந்த இரவில் தனக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால். ஐயோ மணி என்ன இருக்கும். “ஏதோ ஒரு வேகத்தில் வந்தாச்சி. என்ன செய்ய இரவை இதில் கழித்தேதான் தீரணும்.” ஏற்கெனவே அந்த தாத்தா சொன்னதை ஞாபகப்படுத்திக்கொண்டாள். உண்டு உறைவிடப்பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக. அதை கேட்டுப் பாத்திடனும். அவர் வீட்டுக்கு போக வேண்டும் என்றாலும் தூரமாக நடக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும்போதே போயிருக்கலாம்.
முதுகும், இடுப்பும் வலித்தது. ரொம்ப நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்ததால் வலிக்கிறது என்று நினைத்தபோது கால்களுக்கிடையில் நசநசப்பை உணர்ந்துகொண்டாள். உடல் அந்த மிதமான குளிரிலும் வியர்த்தது. தண்ணீர் தாகம் எடுத்தது. தியேட்டரை விட்டு வரும்போது அந்தக் கடையில் இருந்து தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கலாம். இந்த இரவில் எந்தக் கடைகளும் இல்லை. வெளியில் போவதும் பயமாக இருந்தது. பக்கங்களைப் புரட்டுவது போல் இந்த இரவை புரட்டிப் போட்டுவிட்டால் என்ன? கூர்காவின் விசில் சத்தம் கைக்கோலை வைத்து தட்டித் தட்டி செல்வது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தது. நல்ல வேளையாக நாய்கள் உறங்கத் தொடங்கியிருந்தன. மரத்தில் பறவைகளின் சத்தம் சின்னதாய் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. சாலையில் லாரிகள் போவது கடல் அலையின் சத்தம் போலவே கேட்கிறது. யாராவது இந்த நேரம் தன்னைப் பார்த்தால் எப்படி நினைக்கத் தோன்றும். சில மாதங்களுக்கு முன்னால்தான் பள்ளிவாசலின் அடுத்த தெருவில் திருட்டு சம்பவம் நடந்ததை நினைத்தாள். சுற்றுப்புறத்தைப் பற்றிய சிந்தனையை உடைத்தெறியும் விதமாக அந்த எண்ணம்தான் வேகமாக வந்து போயின. எது நடந்தாலும் பரவாயில்லை, வாழ்க்கைக்கான பாதுகாப்பே இல்லாதபோது பயம் ஒரு கேடா? எதை பாதுகாப்பென்று நினைப்பது? தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளுவதுதானோ? உலகில் பிறந்த எல்லா உயிருக்கும் உள்ளதுதான். தனக்கு மட்டும் என்ன விசேஷமா? என்னதான் பயமாக இருந்தாலும் தூக்கம் கண்ணை கிறங்கடித்துக்கொண்டேயிருந்தது . நேரம் கடந்துகொண்டே சென்றது.
பறவைகள் சத்தம் போட ஆரம்பித்திருந்தன. மின்விளக்கின் வெளிச்சத்தில் வீடுகளும் விழித்துக்கொண்டன. பள்ளியில் வாங்கு விளிக்கும் சத்தம் முடிந்தவுடன் விரைந்து மணிகளை அடித்தபடியே பால்காரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதிகாலையின் பரவசம் மெல்லென புத்துணர்ச்சியைக் கிளப்பிவிட்டது. கண் எரிச்சல், உடல் சோர்வு. அடக்கி வைத்திருந்த இயற்கை உபாதையை இன்னும் அடக்க முடியாத நிலை. மங்கலான பகலின் நுனியை பற்றிப் பிடித்தவளாய். ஒதுங்குவதற்கு இடம் தேடினாள். அடிகுழாய் சற்று தள்ளியே வளாகத்தின் ஓரத்திலிருந்தது. தெருக்குழாயில் தண்ணீர் வராத நேரம் இங்கு வந்துதான் அருகிலுள்ளவர்கள் அடித்துச்செல்வார்கள். அடிபம்பில் உள்ள தண்ணீர் குடிக்க ஆவாது. அதை ஒரு நிமிடம் ஓங்கி பலம் பொருந்திய மட்டும் அடித்த பின்னரே தண்ணீர் வரும். அதுவேறு ஊரையே கூப்பிடுவதுபோல் சத்தம் போடும். இதனாலே அடிக்காமல் பயந்தபடியே உட்கார்ந்து இருந்தாள். இன்னும் கொஞ்சம் நேரம் கூட இருந்தால் நேரம் வெளுத்திரும். மெதுவாக நடக்கலானாள். அப்போது யோசித்தாள். ஒருவேளை வந்த பிறகு கதவைத் திறந்து தேடியிருப்பானோ? ஏதோ தவறு செய்ததைப்போல மனம் தடுமாறியது. அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. எல்லோர் முற்றமும் அழகான கோலங்களால் அலங்கரித்திருந்தன. நடையின் வேகத்தைக் கூட்டினாள்.
உயிரில்லா உடலைப் பார்ப்பதுபோல் இன்னும் திறக்கப்படாத கதவைப் பார்த்தாள். கதவைத் தட்ட நினைத்தவள் தள்ளினாள். கதவு தானாக திறந்துகொண்டது. மீண்டும் தனக்கு நேர்ந்ததை அவனிடம் முறையிடலாமா? எதைச் சொன்னால் நம்பப் போகிறான்? உண்மை எப்போதுமே உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய ஒன்று. எதையுமே கேட்டுக்கொள்ளாமல் காலைக் கடன்களை முடித்துவிட்டு அறையின் இளநீல நிறச்சுவரை ஒட்டியே வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு வீடு தேடிச்சென்று தாத்தாவைக் கேட்டு அங்கிருந்து செல்வதை உறுதி செய்து கொண்டாள். இனிமேல் இவ்வாறு நடக்காது என்று சொல்லிவிட்டால் இருந்துவிடலாமே என்றும் எண்ணினாள். சாயந்திரம் வரையிலும் அவனைக் காணவில்லை. எப்படியும் இன்று இரவும் வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்று உறுதியாக உள்மனம் சொல்லியது. உறங்காத இரவுகளை நினைத்து வெளியேறினாள்.
உண்டு உறைவிடப்பள்ளியில் ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது. படிக்கும் குழந்தைகளையும் எழுப்பி விடவேண்டும். தன்னுடைய செயல்களை செவ்வனே செய்தாலும் எப்போதும் கால்கள் தானாக மாடிப்படிகளை நோக்கி ஓடுகிறது.
ஏரியின் பாதி இடத்தை அடைத்துக் கிடந்த கருவேல மரங்களும் முட்கள் அடர்ந்த காட்டுச்செடிகளில் பல வண்ணப் பூக்களுமாக கோரைப் புல் ஆளுயர வளர்ந்து கிடந்தது. நீரின் நிறத்தை இறக்கையாகக் கொண்ட தும்பிக் கூட்டங்கள். வெயிலின் தொடுதலில் மினுக்கம் கண்டு கிடக்கும் ஏரி தன்னுள்ளே வந்து சேரும் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து மகிழ்ந்து கிடப்பதாக எண்ணினாள். மூன்று நாளாகப் பெய்து முடித்த மழையில் வானம் வெளுத்திருந்தது. வெயிலுக்கு இணக்கமாய் இறக்கைகளை அலகால் கொத்தி சீர் செய்தவாறே உட்கார்ந்து கொண்டிருந்தன நீர்ப்பறவைகள். வித்தியாசமான ஒலிகளுக்கு எச்சரிக்கையுடன் கூட்டமாகப் பறந்து சென்றன கொக்குக் கூட்டமும், மீன்கொத்தி மற்றும் பெயர் தெரியாத பல பறவை இனங்களும். காற்றில் மிதந்து வரும் இறந்துபோன மிருகங்கள், மீன்களின் வாடை குடலைப் புரட்டுவதாகவே இருந்தது.
மதிய வேளையில் பள்ளியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் வந்திருந்தார்கள். பள்ளியில் சரியான சுகாதார வசதி இல்லை என்று சொன்னதால் இடத்தை மாற்றத் திட்டமிட்டிருந்தார் பள்ளி நிர்வாகி.
பள்ளிக் கட்டிடத்தின் முன் வந்து நிற்கும் வாகனங்களின் சத்தம் கேட்டவுடன் தன்னை அழைத்துப் போக வந்திருப்பானோ என்றபடி பார்த்து ஏமாந்திருந்தாள். தானே சமாதானமும் செய்து கொண்டாள். அதெப்படி வருவான், நான் சொல்லாமலேயே வந்தது தப்புதானே என்று நினைத்தாள்.
புதிய கட்டிடத்தின் அருகில் ஏரியும் வேறு கட்டிடங்களும் இல்லை. எங்கு நோக்கினாலும் வெட்டவெளியாகவே இருந்தது. காற்று மட்டும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் மாடிப்படிகளில் நின்று ஏரியையே தேடினாள். படிக்கும் குழந்தைகளின் அம்மாக்கள், உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி தனக்குரியது என்று நினைத்தாள். அவர்களின் ஏக்கங்களைக் கூட தானே சுமந்துகொண்டாள். லீவு நாட்களில் கூட வீடு திரும்பாத மாணவர்களுமுண்டு அவளைப் போலவே.