இணைய இதழ்இணைய இதழ் 59சிறுகதைகள்

கூடுதலாக ஒரு தம்பியும் – பத்மகுமாரி

சிறுகதை | வாசகசாலை

“இறங்கிட்டு கூப்பிடு, நான் எப்படி வரணுன்னு சொல்லுறேன்” 

“சரி”

ஜன்னல் வழியே உள்ளேறி வந்து முகத்தில் சூடேற்றியது, வெக்கை கலந்த காற்று. கூடவே கொஞ்சம் புழுதியும். வெக்கையோ புழுதியோ, நான் முதன் முதலில் சுவாசித்த வெளியூர் காற்று என்கிற வகையில், இந்த காற்றில் நான் மட்டும் உணரக் கூடிய ஒரு குளுமை எப்பொழுதும் இருக்கிறது. அம்மா அப்பா கைக்குள்ளேயே வீட்டுக்கு ஒற்றை பிள்ளை என்கிற கூடுதல் சொகுசோடு கிணற்று தவளை மாதிரி பள்ளிக்கும் வீட்டுக்கும் மாறி மாறி குதித்துக் கொண்டிருந்தவளுக்கு உலகம் இதுதான், இதற்கிடையில் தான் உன் வாழ்க்கையை வாழப் பழகி கொள்ள வேண்டுமென்று, பாயை விரித்து வீசிய மாதிரி மக்களையும் மனங்களையும் விரித்து போட்டு பழக்கி தந்தது இதே வெக்கையும் புழுதியுந்தான். இப்பவும் ‘சிவகாசி’ என்கிற பெயர் பலகையை மாட்டியிருக்கும் பேருந்தை வேறு ஊர் பயணங்களின் பொழுது, எதேச்சையாக கடக்க நேர்ந்தால் அந்த நேரங்களில் மனம் மகிழ்ச்சியில் நந்தியாவட்டை பூ மாதிரி வெள்ளை வெள்ளையாய் சிரித்துக் கொண்டே, அந்த பேருந்தின் பின் ஏறும் கம்பியை பிடித்துக்கொண்டு சிவகாசிக்கே போய் சுற்றித் திரிய ஆரம்பித்து விடுகிறது. என்னை அணைத்துக் கொண்ட கல்லூரி வளாகமும், அடர்ந்த மரஞ்செடிகளும், வாசலுக்கு வலது புறமாய் மொத்தக் கல்லூரியையும் வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கடத்தும் குட்டிப் பிள்ளையாரும், உயர்ந்த கட்டிடங்களும், புத்தக வாசனையை பரப்பிக் கிடக்கும் நூலகமும் எல்லாமும் சேர்ந்து இன்னொரு தாய் மடியாக இருந்திருக்கிறது. 

“ஏப்ரல் பதினாலு கல்யாணம், பதிமூணு ரிஷப்சன். முன்னாடி நாள் காலையிலேயே வீட்டுக்கு வந்திரு” – ஜெயா சொன்ன பொழுது, அவளுக்காக இல்லாவிட்டாலும் அவளோடு பழகிய நட்புக்காக இல்லாவிட்டாலும் சிவகாசிக்காக, அதன் வெக்கையோடும் புழுதியோடும் முத்தமிட்டுக் கொள்ள கண்டிப்பாக இங்கு வருவதென்று தீர்மானம் பண்ணியிருந்தேன். 

ஜெயாவின் பழைய வீட்டிற்குப் போவதென்றால், அவள் என்ன எனக்கு வழி சொல்வது, நாலு பேருக்கு வழி சொல்லி நானே கூட்டிக் கொண்டு போயிருப்பேன். கல்லூரி முடிந்ததும் முதலில் ப்ரியாவிற்கு கல்யாணம் வந்தது. அதுதான் கல்லூரி நண்பர்கள் ஒருவர் விடாமல் எல்லோரும் வருகையை பதிவு செய்த கல்யாணம். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்மாய் அவரவர் சொந்த வாழ்க்கையில் மூழ்கி ஆளுக்கொரு திசையில் உதிர்ந்து போய்விட்டார்கள். ப்ரியா கல்யாணத்திற்காக ஜெயா வீட்டில் வந்து தங்கியிருந்த பொழுது, எங்கள் இரண்டு பேருக்கும் அம்சமாக ஜெயா அம்மா தான் புடவை கட்டிவிட்டார்கள். கல்யாணத்திற்கு புறப்படுவதற்கு முதல் நாள் ராத்திரி நானும் ஜெயாவும் உள் அறையில் படுத்திருந்தோம். ஜெயாவின் அம்மா முன் அறை இரும்புக் கட்டிலில் படுத்திருந்தார்கள். இரும்புக் கட்டில் ரொம்ப நேரமாக கடகடத்துக் கொண்டே இருந்தது. 

நாங்கள் நான்காம் ஆண்டு முடிக்கப் போகிற நேரத்தில் வந்த பொங்கல் முடிந்து, அடுத்த நாள் விடுதியில் இருந்து கல்லூரிக்குப் போன பொழுது ஜெயா வரவில்லை. வகுப்பில் இருந்த விடுதி அல்லாத மாணவ மாணவர்களின் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஜெயா அப்பா பிரசர் தலைக்கு ஏறி இறந்திட்டாங்க” லதா ஓடிவந்து என் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள். அவள் கண்களில் நீர்மை கோர்த்திருந்தது. கல்லூரியில் இருந்தே ஜெயா வீட்டிற்கு போய்வர பேருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 

திரும்ப ஜெயா கல்லூரிக்கு வர ஆரம்பித்தபொழுது, அவள் சோர்ந்த முகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கத் தெம்பில்லாமல் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அவளிடம் ஒதுங்கியே இருந்தேன். ஜெயா நிரந்தர அமைதியானவளாக மாறியிருந்தாள். கூடவே பொறுப்பானவளாகவும். அவளின் அம்மா ஒரு கிராம வங்கியில் தற்காலிகப் பணியில் சேர்ந்திருந்தார். உடல்வலி தீராத கால்வலி எல்லாவற்றையும் மறந்து இரண்டு பிள்ளைகளை மட்டும் கண்ணுக்குள் சுமந்து ஓட ஆரம்பித்திருந்தது அந்தத் தாயின் வாழ்க்கை. காலமும் காற்றும் எல்லாவற்றிக்கும் மருந்து வைத்திருக்கும் போலும். எல்லாவற்றையும் நகர்த்தி நகர்த்தி ஆற்றுப்படுத்தி இந்த நாளுக்கு இப்பொழுது கூட்டி வந்திருக்கிறது. 

பேருந்திலிருந்து இறங்கி ஜெயாவிற்கு கைபேசியில் அழைத்த பொழுது, அவள் சொன்ன விலாசம் புரியாமல் அப்படியே நடந்துபோய், ஒரு ஆட்டோக்காரரிடம் பேசி, அவரிடமே கைபேசியை நீட்டி விலாசம் கேட்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். ‘சரிம்மா.. சரி சரிம்மா’ என்று இரண்டு மூன்று தடவை தலையாட்டிக்கொண்டே சொன்னார். நான் பின்னால் ஏறிக்கொண்டேன். ஆட்டோக்காரர் கொண்டு இறக்கி விடுகையில் மேல் தெற்றுப்பல் லேசாக வெளியில் தெரியும்படி சிரித்த மேனிக்கு, ஜெயா வீட்டின் இரும்புக் கதவிற்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். ஆட்டோ அவள் முன்னால் போய் படக்கென்று நிற்கவும் அவள் விறுவிறுவென்று நான் இறங்கப் போகிற இடத்தில் வந்து நின்றாள். நான் இறங்க என் கையிலிருந்த கருப்பு பயணப்பையை அவள் தன் கையில் வாங்கிக் கொண்டாள். “எப்படி இருக்க?” என்று இன்னொரு கையை தோளோடு சுற்றி என் வலது தோளில் இறுக்கிக் கொண்டே இடது தோளை அவள் பக்கமாக சாய்த்துக் கொண்டாள். ஆட்டோ அரைவட்டம் போட்டுத் திரும்பி, வந்த வழியே திரும்பி பார்க்காமல் போய்க் கொண்டிருந்தது. 

வீடு நிறைய நிரம்பி இருந்த முகங்களிடம், “இவ என் காலேஜ் பிரண்டு” என்று என் பெயரை சொல்லி ஜெயா அறிமுகப்படுத்தி வைக்க, சரிதான் என்பது போல் தலையசைத்தார்கள். நானும் பதிலுக்கு தலையசைத்து வைத்தேன். யாரோ ஒருவரின் சிரிப்பில் தூக்கிக் கொண்டிருந்த மேல் உதட்டையும், வேறு யாரோ ஒருவரின் நீர்மை படர்ந்த கண்களையும் தவிர அங்கிருந்த எந்த முகங்களும் என் மனதில் முழுதாய் பதியவில்லை. 

ஜெயாவை ஒட்டிக் கொண்டே அவள் அறைக்குச் சென்று குளித்து கிளம்பி சாமி கும்பிடும் சடங்கிற்கு வந்து நின்ற பொழுது, ஜெயா என்னிடமிருந்து நகர்ந்து விளக்கிற்கு முன்னால் போட்டு வைத்திருந்த இலை சோற்றுக்கும், பெட்டியில் விரித்து வைக்கப்பட்டிருந்த நகைகளுக்கும் பக்கமாகப் போய் நின்று கொண்டிருந்தாள். திடீரென்று தனியாக விட்டுப் போனதில் வந்த கூச்சத்தை சமாளிக்க, திருதிருவென்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டும், யாராவது என் கண்களை நேருக்கு நேர் பார்க்க முற்படுகையில், படக்கென்று குனிவதுமாக நின்று கொண்டிருந்தேன். ஒற்றையாய் வளர்ந்த பாதிப்பின் மிச்சம் இன்னும் என்னுள் ஒட்டிக் கொண்டு இருப்பதை, இந்த மாதிரியான மனிதத் தலைகள் நிறைந்த இடங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. கண்ணாப்பையில் உருண்டு உருண்டு ஆடிக்கொண்டிருந்த மூன்று பணியார உருண்டைகளை, கீழே விழாமல் பதுசாக புதுப் பொண்டாட்டியை தூக்குவது போல பத்திரமாக கொண்டு வந்த அவன், குனியாமல் நிமிர்ந்த வாக்கிலேயே கால் மடக்கி இலைக்கு முன்னால் உட்கார்ந்து, கரண்டியில் இருந்த பணியாரத்தை இலையின் ஓரத்தில் ஏற்கனவே பணியாரத்திற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்துவிட்டு, யார் முகத்தையும் பார்க்காமல் குனிந்தபடியே அடுக்களைக்குள் திரும்பிப் போய்விட்டான். ஆனால், அங்கிருந்த முகங்கள் அவனையே வாய்த்த கண் எடுக்காமல் ஒரு சேர பார்த்தது. “ஆம்பிள பையன் எவ்வளவு நேக்கா பணியாரத்த விழாமல் கொண்டு வச்சிட்டு போறான்” என்கிற எண்ணம் என்னைத் தவிர அங்கிருந்த வேறு கண்களின் பார்வையிலும் இருந்திருக்கலாம். ஜெயா சாமிக்கு முன் தீபாராதனை காட்டி, தீபாராதனை தட்டை தரைக்கு கொண்டு வருகையில் அம்மாவின் கண்களின் இமைகள் ஈரப் பதத்தோடு ஒன்றோடொன்று லேசாக ஒட்டிக் கொண்டன. முந்தானையை எடுத்து இமைகளை பிரித்து விட்டுக் கொண்டாள் அம்மா. 

சாமி கும்பிட்டு முடித்து, திருவிழா முடிந்து கலைகிற கூட்டம் மாதரி ஆளுக்கொரு பக்கமாகப் போக, நான் அடுக்களைக்குள் போனேன். பணியாரம் எடுத்து வந்தவன் தனது குறுகலான முதுகைக் காட்டியபடி, திரும்பி நின்று பணியாரம் சுட்டு பக்கத்தில் இருந்த ஈயச் சட்டியில் போட்டுக் கொண்டிருந்தான். 

“குமரா டேய், நீ இன்னும் முடிக்கலியாக்கும்?” கேட்டுக்கொண்டே எனக்கு பின்னால் வந்த குரல் ஜெயாவின் தம்பி பிரதீப்பினுடையது. 

“அப்பா திதிக்கு சாமி கும்பிடறப்ப, பணியாரம் சுட ஆரம்பிச்சது. இன்னும் அவன் முடிக்கல” பிரதீப்பிற்கு பின்னால் ஜெயா அம்மாவும் வந்தார்கள். அம்மா முகத்தில் சிரிப்பு இருந்தாலும், கண்கள் அமைதியாக அப்பாவின் நினைவுகளோடு கைகோர்த்து ரொம்ப தூரம் போயிருந்தது போல் இருந்தது. 

இரண்டு பேர் சொன்னதற்கும் குமரன் பதில் சொல்லவில்லை. பிரதீப்பை திரும்பிப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான். அம்மா சொன்னபொழுது கடமையே கண்ணென, பார்வை முன்னிருந்த எண்ணெய் சட்டியில் இருந்தது. முகம் மட்டும் சிரித்திருக்க வேண்டும். பிடரி லேசாக விரிந்து சுருங்கியது. எனது பிரமையாகக் கூட இருந்திருக்கலாம். அதற்குபிறகு அதே நாளிலேயே எந்தப் புள்ளி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, ஏதோ ஒரு புள்ளியில் பேச்சோடு பேச்சாக கலந்து குமரன் என்னோடு பேச தொடங்கியிருந்தான். அந்த பேச்சில் அவன் பிரதீப்பிற்கு எவ்வளவு நெருக்கம் என்பதில் ஆரம்பித்து, குமரனின் படிப்பு, அவனது வேலை தேடும் படலம், அவன் குடும்பத் தொழில் என விரிந்தது. வெகு சிலரால் மட்டுமே இப்படி முதல் பேச்சிலேயே இத்தனை பக்கத்தில் வந்துவிட முடிகிறது. என்னால் இப்படி யாரோடும் ஒட்டிக்கொள்ள முடிந்ததே இல்லை. என்னோடு ஒட்டிக் கொள்பவர்களை ஏற்றுக் கொள்ள மட்டுமே நான் அறிந்திருந்தேன்.

அன்று மாலை அவசர அவசரமாக வரவேற்பிற்கு கிளம்பி கொண்டிருந்தவர்களுக்கு குமரன் தான் காப்பி போட்டு விளம்பினான். எனக்கான குவளையை நான் கையில் எடுத்துக் கொண்ட பொழுது, “குடிச்சிட்டு சக்கரை பத்தலேனா சொல்லுங்க. போட்டு தரேன்” என்றான். நான் தெளிவாகக் கவனிந்திருந்தேன். எனக்கு முன்னாலும் அவன் யாரிடமும் இதைச் சொல்லவில்லை, எனக்கு பின்னால் குவளை எடுத்த கைகளுக்கும் இதைச் சொல்லவில்லை. அவனது கூடுதல் சக்கரைக்கு சம்மதம் சொல்வதுபோல, என் கையில் கிடந்த சிவப்பு கண்ணாடி வளையல் ஒன்றோடொன்று உரசி தலையசைத்தது. மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து பிரதீப்பும், குமரனும் ஒவ்வொரு வேலைக்குமாக மாற்றி மாற்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு தடவை ஜெயாவிற்கு அடுத்ததாக அவளுக்கும், அவளது குட்டி அழகு சாதன பைக்கும் துணையாக நின்று கொண்டிருந்த என்னைக் கடந்து மணமகள் அறைக்குள் போய்விட்டு வந்தார்கள். குமரனின் முகம் பிரதீபன் முகத்தை விடவும் கூடுதல் பரபரப்போடு இருந்தது. முகூர்த்தம் முடிந்து எல்லோரும் ஆசுவாசப்பட்டு அப்பாடா என்று அமர்ந்திருக்க, ஜெயாவின் அத்தை மகன்கள் இரண்டு பேரும் அவர்களின் கல்லூரி சிநேகிதன்கள் இரண்டு மூன்று பேரை சேர்த்துக் கொண்டு வந்திருந்தவர்களுக்கு விளையாட்டுப் போட்டி வைக்க ஆரம்பித்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டுத் தரப்பில் ‘ஜெயா’ என்ற பெயர் இருப்பவர்களுக்கு பரிசு, முப்பது நொடியில் அதிக நெகிழி குவளைகளை மேஜையில் இருந்து ஊதிக் கீழே தள்ளுபவர்களுக்கு பரிசு, சினிமா சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு என்று ஆட்டம் சூடு பிடித்தது. எந்த போட்டியிலும் கலந்து கொள்ள ஆர்வமில்லாமல் ஓரமாய் கிடந்த நாற்காலியில் சாய்ந்தமர்ந்தபடி நடக்கும் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆர்வமில்லாமல் என்று சொல்வதை விட, துணைக்கு ஆளில்லாமல் என்று சொன்னால் சரியாக இருக்கும். கல்யாணத்திற்கு வந்திருந்த எங்கள் கல்லூரி தோழிகளும், நண்பர்களும் அவரவர் துணையோடு ஏற்கனவே கிளம்பிப் போயிருந்தார்கள். நான் மட்டும்தான் மிச்சம் இருந்தேன். ‘உன் கல்யாணத்திற்கு மறக்காம கூப்பிடு’ என்று விடைபெற்று சென்றிருந்தார்கள். விளையாட்டிற்கு கூட்டமாய் கூடியிருந்த தலைகளிலிருந்து தனியாய் பிரிந்து குமரனின் தலை என்னை நோக்கி வந்தது. 

“அக்கா இது பத்திரமா வச்சிக்கோங்க. அப்புறமா வந்து கேட்கறப்ப குடுங்க” ஒரு பீங்கான் குவளை இருந்த தாள் பெட்டியை கையில் திணித்துவிட்டு வேகமாக ஓடிவிட்டான் குமரன். அவன் என் அருகில் வந்ததும், விலகி போனதும் ஒரே நொடியில் நடந்து முடிந்திருந்தது. குவளை இருந்த பெட்டியை பொதிந்திருந்த இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்டிருந்த தாளை தடவிக்கொண்டே, ‘இவன் எந்த போட்டிக்கு இதை வாங்கியிருப்பான்?’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருந்தேன். பதில் தெரிந்திருந்த அவன், கூட்டத்தோடு கலந்து என் பார்வையில் இருந்து மொத்தமாக மறைந்திருந்தான். “அக்கா தூங்கிட்டீங்களா?” இடது தோளில் அவன் லேசாகத் தட்ட, வெடுக்கென்று விழித்துப் பார்த்தேன். விளையாடிக் கொண்டிருந்த கூட்டம் சாப்பாட்டிற்கு கலைந்து போயிருந்தது. மேடை காலியாக இருந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் ஏதோ சடங்கு செய்ய மாப்பிள்ளை வீட்டிற்கு போயிருப்பதாக குமரன் சொன்னான். கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்றான். அவன் சொன்ன சடங்கு என்னவென்று எனக்கு சரியாகப் புரியவில்லை. எங்கள் ஊர் திருமணங்களில் அப்படியான சடங்குகள் இல்லை. வந்ததிலிருந்தே எங்கள் ஊர் திருமணங்களுக்கும் இந்தத் திருமணத்திற்குமான வித்தியாசத்தை குறித்து கொண்டே இருக்கிறேன். இது ஐந்தாவது வித்தியாசம். 

“நீங்க சாப்பிட்டீங்களா?”

இல்லை என்று தலையாட்டிக்கொண்டே “நீ..?” என்றேன். அவனிடமும் ‘இல்லை’ என்றே பதில் வந்தது. இரண்டு பேரும் மேல் தளத்தில் இருந்த சாப்பாட்டு வரிசையில் அமர்ந்து வயிற்றை நிரப்பிவிட்டு படியில் இறங்கி வந்து கொண்டிருக்கையில், ஜெயாவும் அவள் மாப்பிளையும் படிக்கட்டை கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

குமரனை பிரதீப் கூப்பிட, “இதோ வரேன்க்கா. போயிட்டு இருங்க” என்று இறங்கி வந்த படிகளிலேயே மேலேறி போனான். மேடையில் ஏறும்பொழுது எதிரே வந்த ஜெயா அம்மாவிடம், “அம்மா நான் கிளம்பவா?” என்ற பொழுது, “சரிம்மா பார்த்து போயிட்டுவா.” நடந்தபடியே சொல்லிவிட்டு, “இதோ வரேன்” என்று தூரத்தில் அழைத்த யாருக்கோ சொல்லியபடி வேகமாக கடந்து போயிருந்தார்கள். மணமகள் அறைக்குள் இருந்த என் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபொழுது ஜெயா அவள் துணையிடம் ஏதோ காதோரமாக உதடுகள் வேகவேகமாக அசைய பேசிக்கொண்டிருந்தாள்.

“நான் கிளம்புறேன்டி” அவள் அருகில் போய் நின்று அவள் அவரின் காதோரத்திலிருந்து விடுபட்டு வரும் வரையிலும் காத்து நின்று சொன்னேன். 

“சரிடி. ரொம்ப தேங்கஸ் வந்ததுக்கு. பாத்துப் போடி”

“அதுலாம் ஒன்னுமில்லடி”

“போயிட்டு மெஸேஜ் பண்ணு”

“ம்ம்…”

நான் எடுத்து சொல்ல வருவதற்குள், அவள் மீண்டும் அவரின் காதோரத்திற்கு போயிருந்தாள். அதற்குமேல் அவள் கவனத்தை என் பக்கம் வலிந்து இழுத்துக் கேட்க எனக்கும் தயக்கமாக இருந்தது. மண்டபத்திற்கு ஜெயாவின் வீட்டிலிருந்து அவளுடையே காரில் வந்தது. வழி எதுவும் கவனித்து வைத்திருக்கவில்லை. மண்டபம் சிவகாசியில் இருக்கிறது என்பதைத் தாண்டி எந்தத் தெரு, எந்தத் திசை எதுவும் எனக்குத் தெரியாது. மண்டபம் இருந்த இடத்தின் பக்கத்தில் மருந்துக்கு கூட வேறு கட்டிடம் இல்லை. காட்டுக்கு நடுவில் கட்டி வைத்திருந்தது மாதிரி இருந்தது. அது காடு இல்லை என்பதை பறைசாற்றி தார் ரோடு மண்டபத்தின் இரண்டு பக்கமுமாக நீண்டு கிடந்தது. இப்பொழுது இங்கிருந்து மைய பேருந்து நிலையத்திற்கு எப்படிப் போவதென்று நினைத்துக் கொண்டே மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கைப்பேசியை துழாவ ஆரம்பித்த பொழுது, “அக்கா கிளம்பிட்டீங்களா?” என்றபடியே குமரன் முன் வந்து நின்றான். அவன் பார்வை என் பயணப்பையில் இருந்தது. 

“ஆமாப்பா”

“எப்படி போவீங்க. பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போணும்னு தெரியுமா?”

“அததான் யோசிச்சிட்டு இருக்கேன்”

“நான் கொண்டு விடவா?” என்றான். 

“வண்டிலியா?”

“ஆமா”

“நீ கொடுத்த பெட்டி மணமகள் ரூம்ல, மேல இருந்து ரெண்டாவது செல்ப்ல இருக்கு” சொல்லிக்கொண்டே பயணப் பையை தூக்கிக் கொண்டு எழுந்தேன். 

“அது அப்புறம் பாத்துக்கிறேன்” என்றபடியே என் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான். 

அவன் வண்டியை உறும விட்டு முன்னால் நகர்த்தியபொழுது வெக்கையும் புழுதியும் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது. முன்னே கைநீட்டி லேசாக அவன் முடியைக் கலைத்து விட வேண்டும் போல இருந்தது. வழக்கமான தயக்கம் தடுத்தது. “தம்பி…” – என்னை அறியாமல் உதடுகள் சத்தம் எழுப்பாமல் மெலிதாக அசைந்தது. 

******

npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இந்த கதை ஓட முடிவிலதான் நான் இந்த கதையை எடுத்துக்க விரும்புறேன்…
    அந்த கதாநாயகியின் ஒரு தயக்கம் தான் என்னை கதையை நினைவு வைத்துக் கொள்ள காரணம்… நான் அவளின் முன் அமர்ந்து வந்த குமரனின் மன நிலையை வாசிக்க ஆசை படுகிறேன்.
    நேரம் இருந்தால் தயக்கம் தீர்ந்தால் குமரனிடம் கேளுங்கள் கூடுதாலான தம்பியை விட கூடுதலான அக்கா என்று தான் அவன் சொல்லுவான்.

    — நல்ல கதை —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button