இணைய இதழ் 101குறுங்கதைகள்

சொர்க்கம் – கோ.புண்ணியவான்

குறுங்கதை | வாசகசாலை

மேக்குச்சியில் வரிசையாக மூன்று லயன்கள் இருந்தன. அதற்கு எதிர்த்தாற் போல் செம்மண் சாலை சொர்க்கத்தை நோக்கி ஓடும். இந்த மூன்று லயன்களில் மாமாவின் வீடு முதல் லயத்தில் கடைசி வீடு. லயத்திலிருந்து கிட்டதட்ட நூறு மீட்டர் தூரத்தில்தான் சொர்க்கம் என்று காரணப் பெயரிடப்பட்ட சாயங்கால சந்தோசத்தை வயது வித்தியாசம் பார்க்காமல் வாரி வழங்கும் சம்சுக்கடை ஒன்று இருந்தது. மாமா பால்மரம் சீவும் வேலை முடிந்து, வயிற்றுக்குக் கிடைத்தைப் போட்டுக்கொண்டு ஒன்றரை மணி வாக்கில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு சரியாக மூன்று மணிக்கு எழுந்துவிடுவார். அலார ஓசையெல்லாம் தோற்கடித்துவிடும் மூளைக்குள்ளிருந்து அடிக்கும் மணி. மதிய உறக்கம் ஒன்றரை மணி நேரம் ஆளை ஆழ்துளைக்குள் உள்ளிழுத்து அமுக்கி வைத்துக்கொண்டாலும் மண்டைக்குள்ளிருந்து அடிக்கும் மணி ஆழ் உறக்கத்தைக் கலைத்துவிடும். வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு கம்ஸைப் போட்டுக்கொண்டால், (சட்டையை அப்படித்தான் சொல்வார் மாமா) கால்கள் தன்னிச்சையாகவே மாமாவைச் சொர்க்கத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். மாமாவுக்குத் தெரியும், கால்போத்தல் ஊலாரை (சாராய பிரேண்டு) அரை மணி நேரத்தில் நான்கு மிடறை முடிக்கும்போது உள்ளிறங்கிய நீர்ச்சுழி இழுத்துக்கொண்டு போய் எங்கேயோ செருகியிருக்கும். அவரை அமிழ்த்தி வேறொருவராய் ஆக்கியிருக்கும். மாமாவுக்கு ஆள்மாறாட்டம் நேர்ந்து இரண்டாவது மாமா வெளியே வந்திருப்பார். மாமாவின் முக்கியமான அடையாளம் அவரது சிக்ஸ் பேக் உடம்பு. பிரதி தினமும் விடிவதற்கு நெற்றியில் கபாட் விளக்கைக் கட்டிக்கொண்டு முன்னூறு மரங்களை (ரப்பர்) ஏணிக்கோடு ஏறி சீவி முடிக்கும்போது சூரியன் மரங்களுக்கு இடையே ஊடுறுத்து மண்ணில் வெண் தேமல் கோலம் போட்டிருப்பான். விடிகாலை மூன்னூறு ஏணிக்கோட்டு மரங்களை ஏறி இறங்கி, முண்டு முடிச்சுகளின் பட்டையை எக்கி எக்கிச் சீவும் மாமாவுக்கு, ஏன் புஜங்கள் நிமிர்ந்து, முஷ்டிகள் தவளைகள் போல துருத்தி, மார்புகள் பக்கவாட்டில் விரிந்து, புடைத்து, தொடையும் கெண்டை தசைநாரும் திர்ட்சிகொண்டு, சிக்ஸ் பேக் கூடி வந்திருக்காது? அக்காவுக்கு பருவ வயதிருக்கும்போதே மாமாவின் மேல் காதல் வந்து கல்யாணம் முடிந்துவிட்டதற்கெல்லாம் காரணம் இந்த இடுப்புக்கு மேல் தழைத்த செறித்த இரும்பு மேனிதான் காரணம் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இரண்டாவது மாமா வெளிவந்திருப்பார் என்று சொன்னேனல்லவா? சொர்க்கத்திலிருந்து செம்மண் ரோட்டில் வீடு நோக்கி வரும்போது மூன்றாவது லயத்தில் நடை பிசகி இறங்கி அம்மாக்கண்ணு வீட்டுக்கு நுழைந்துவிட நேர்ந்ததற்கு இந்த இரண்டாவது மாமாதான் காரணம்! ‘மாரி மாரி’ என்று அக்காள் பேரைச் சொல்லி வீட்டுக்குள் தவறுதலாக புகுந்துவிடுவார்! அக்காள் சிலமுறை கண்டித்திருக்கிறாள்..”மப்பு மண்டைக்கு ஏறிட்டா, எது சொந்த வீடு, எது பெறத்தி வீடுன்னு கூடவா தெரியாது?” என்பார். “இல்ல மாரி கொஞ்சம் தடுமாறிடுச்சி” என்பார் போதை இறங்கும் நேரத்தில். “ரொம்ப தூரம் நடந்து நம்ம வூட்டுக்கு வந்துட்ட மாரியே இருக்கும். அதான். ச்சே சனியன ஏன் தொடறனோ?” என்பார்.

இரண்டு மாதங்கள் சீக்கில் விழுந்து மாமா படுத்த படுக்கையாகி ஒருநாள் தன் கடைசி மூச்சைத் துறந்தார். மாமா இறப்பதை இரண்டு மாதங்களாய் அருகிலிருந்து பார்த்து உள்ளூற வெறித்தவள் மட்டுமல்ல, குளிப்பாட்டி, துடைத்து, உணவூட்டி, கூப்பிட்ட குரலுக்கு தூக்கம் துறந்து ஆஜராகி சலித்துப் போயிருந்தாள் அக்காள். இறந்த பிரகடனம் கிடைத்தவுடன் அக்காள் நிம்மதியாக அழுது முடித்தாள். அவ்வளவுதான்! பின்னர் பிணம் வெளியேறும்போது கூட அக்காளின் அழுகுரல் பெரிதாய்க் கேட்கவில்லை.

கேட்டதெல்லாம் அம்மாக்கண்ணுவின் ஒப்பாரிதான். தகவல் தெரிந்து ஓடோடி வந்தமர்ந்து அவர் இறுதிப் பயணத்துக்கு அனுப்பி வைக்கும் வரை இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தார்.

*

மேக்குச்சி- மேட்டில் உள்ள பலகை வீடுகள்

லயன்கள்- தொடர் வீடுகள் (lines)

சம்சு-சாராயம்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button