
பாம்பு என்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு.? அதுபோர் கொடிய விஷமுள்ள பிராணி. அது கொத்தினால் விஷம் மனிதர்களின் உடலில் இன்ஜெக்ட் செய்யப்பட்டு அவர்கள் உயிர் துறப்பார்கள். சிலர் பிழைத்துக் கொள்வதுமுண்டு. அது அந்தந்தப் பாம்பின் விஷத்தின் தீவிரத்தையும், உடனடியாக மருத்துவம் எடுத்துக் கொள்வதையும் பொறுத்திருக்கிறது. -இவையெல்லாம் நீங்கள் படித்து அறிந்த விஷயங்கள், இவைதான் உங்கள் மனதுக்கு வரும். சரிதானே…
பாம்புகள் என்பவை நிறையத் தமிழ்ப் படங்களில் செட் ப்ராப்பர்ட்டிகளைப் போன்று பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? தமிழ்ப்படப் பாம்புகள் பலவிதமான வடிவங்களிலும், பலவிதமான தன்மைகளிலும் காண்பிக்கப்பட்டிருக்கின்றன ரசிகர்களுக்கு. ஆதிகாலத்திலிருந்து பார்க்கலாம்.
ஆரம்பகாலத் தமிழ்ப் படங்களில் புராண, இதிகாச, மாயாஜாலப் படங்களே பெருமளவில் படமாக்கப்பட்டு வந்தன. அதனால் அந்தப் படங்களில் பாம்புகளுக்கென நாகலோகம் என்றொரு தனி உலகம் இருக்கும். அங்கே மனிதர்கள் சென்றால் பாம்புகளும் மனித வடிவில் இருக்கும் என்பதாகவே காட்டப்பட்டு வந்தன. எத்தனை ஆண்டு வரையில்.? பார்க்கலாம்.
1955ம் ஆண்டு வந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் நாயகன் ஜெமினிகணேசன் நாகஜோதி என்ற ரத்தினத்தை அடைய நாகலோகம் செல்வார். நாகலோக அரசி லலிதா அவரின் அழகில் மயங்கி உள்ளத்தைப் பறி கொடுத்து, ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’ என்று சரசமாடுவார். ஜெமினியாரோ சாமர்த்தியமாக அவருக்கு பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து ‘உன்னைக் கண் தேடுதே’ என்று கிறக்கப் பாடல் பாட வைத்து மயக்கி, சாவியைக் களவு செய்து, அதைக் கொண்டு குகையைத் திறந்து ரத்தினத்தை அடைவார். விழித்தெழுந்த நாகராணி சினம் கொண்டு அவரைச் சபித்து குரூபியாக்கி விடுவாள். அதன்பின் கதை எப்படியெப்படியெல்லாமோ போகும்.
அடுத்ததாக 1959ல் வந்த ‘அமுதவல்லி’ திரைப்படத்தில் நாயகன் டி.ஆர்.மகாலிங்கத்தின் தந்தை ஒரு பாம்பை அடித்துக் கொன்று விடுவார்- அது நாகலோக இளவரசன் என்பதை அறியாமல். அதன் அலறல் கேட்டு வரும் நாகராஜன், உன் மகனும் இதேபோல் இறப்பான் என்று சாபமிட்டுச் செல்வார். டி.ஆர்.மகாலிங்கம் சாகசப்பயணமாக நாகலோகம் நோக்கிச் செல்ல, கதை எப்படியெப்படியோ திரும்பி கடைசியில் நாகலோக இளவரசியை அவர் மணந்து, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’ என்று நாகத்துடன் டூயட்டே பாடி பின் இறுதியில் தப்பிப் பிழைத்து வருவார்.
இப்படியாகத்தானே சினிமாக்களில் நாகங்கள் என்பவற்றுக்குத் தனி உலகம் உண்டு, அவை மனித வடிவிலும் இருக்கும் என்பதாகவே காட்டி வந்த நிலையில் பாம்புகளைப் பாம்புகளாகவே காட்டியவர் சாண்டோ சின்னப்பா தேவர். அதிலும் 1974ல் அவர் தயாரித்து வெளிவந்த ‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்ற படத்தில் பாம்புதான் கதாநாயகன். இணைக் கதாநாயகனாக சிவகுமாரும், கதாநாயகியாக ஜெயசித்ராவும் நடித்திருந்தார்கள். தேவரின் படங்களில் வரும் பாம்பானது (பாம்பென்றில்லை, விலங்குகள் எதுவானாலும்) மனிதர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும். வணங்குகிறவர்களுக்கு நல்லதும், கெட்டவர்களுக்குக் கெட்டதும் செய்யும். இந்த வெ.கி.வி.யிலும் பாம்பானது அப்படியே படம் நெடுக வந்து பல சாகசங்களைச் செய்யும். படத்தில் ஒரு காட்சியில் நாயகி ஜெயசித்ராவின் மீது தவழ்ந்து முகத்தின் மீதேறி அப்புறம் செல்லும். இப்படியொரு காட்சியில் பாம்புடன் நடித்த நாயகியின் துணிச்சல் வியப்பாகப் பேசப்பட்டது அந்நாளில்.
அந்தப் படத்திற்குப் பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட பாம்புத் திரைப்படம் 1979ல் வெளியான ‘நீயா..?’. மனிதர்களைப் போல் உருவமெடுக்கவும், நடந்துகொள்ளவும் வல்ல இச்சாதாரிப் பாம்புகள் என்ற வகை இருப்பதை பாம்பு ஆராய்ச்சியாளர் கமல் கண்டுபிடிக்கிறார். அவர் நண்பர்கள் நம்ப மறுக்க, பவுர்ணமி இரவில் மனித வடிவில் பாம்பரசியும், பாம்பு வடிவில் பாம்பரசனும் கூடும் நேரத்தில் நண்பர்களிலொருவன் பாம்பானது பெண்ணைக் கடிப்பதாகத் தவறாக எண்ணி சுட்டுவிட, பெண் நாகம் அவர்களைக் கண்டறிந்து ஒவ்வொருவராகப் பழிவாங்கும்.
ஒரு சீனில் அந்தப் பாம்பை அடக்கி துறவி நம்பியார் ஒரு கூடையில் அடக்கித்தர, கமலின் நண்பர் விஜயகுமார் கூடையைத் துப்பாக்கியால் சுடுவார். கூடை தீப்பற்றி எரியும். தோட்டா பட்டால் தீப்பற்றும் அதிசயக் கூடை (அ) கூடையில் பட்டால் தீப்பற்றச் செய்யும் அதிசயத் தோட்டா உலகில் இருப்பதை உணர்ந்த பாம்பு அதற்கு முன்பே தப்பி விட்டிருக்கும். இப்படியாக அறுவரை பாம்பு கொன்றுவிட, கடைசியில் பலே கில்லாடியான கமல் மட்டும் பாம்புடனேயே துணிச்சலாக ஒரு டூயட்டும் பாடிவிட்டு தப்புவார். துரத்திவரும் பெண் பாம்பு சூலத்தில் குத்துப்பட்டு, தன் ரத்தவெறிக்கு மன்னிப்புக் கேட்டு இறந்து போகும். பாடல்களாலும் மல்டி ஸ்டாரர் படம் என்பதாலும் பிரபலமாகி வெற்றிகரமாக ஓடியது இந்தப் படம். சமீப ஆண்டுகளில் இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஆனது பப்படம்.
அதன்பின் 1990ல் சோழராஜன் இயக்கிய ‘மனைவி ஒரு மாணிக்கம்’ என்ற பாம்புத் திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இதுவும் மனித உருவெடுக்கும் பாம்புகள் பற்றிய கதைதான். மரத்திலேறும் சிறுவன், தன் மனைவிக்குப் பழம் பறிக்க வந்த பாம்பைக் கண்டு, பயந்து கீழே விழுந்து இறந்துவிட, ஆஸ் யூஷுவல் சாமியார் ஒருவர் அவன் தாய்க்கு உதவி, பாம்பைக் கொன்று பையனை உயிர்பெற வைக்கிறார். அந்த ஜோடிப்பாம்பு ஊரெல்லையைத் தாண்ட முடியாமல் (கண்ணுக்குப் புலனாகா) நெருப்பு வளையம் கட்டி வைக்கிறார். பையன் வளர்ந்து நாயகன் முகேஷாகி பாம்பின் பகையறியாமல் ஊருக்கு வர, பெண் பாம்பானது அவனுக்கே மனைவியாகி (பாம்புக்கு வயதே ஏறாது பாஸ்) அவனைப் பழிக்குப் பழியாகக் கொல்ல முயல, முகேஷின் நண்பர் அர்ஜுன் விஷயமறிந்து, பாம்பின் சதிகளை(?) முறியடித்து நண்பனைக் காப்பாற்றுவது கதை. கதை அபத்தம் என்று தோன்றினாலும் நன்றாக ஓடியது படம். இதே கதையைச் சமீபகாலத்தில் இயக்குனர் சுந்தர்.சி. உல்டா செய்து தானே நடித்து ஒரு படம் இயக்கி அதுவும் வெற்றிப் படமானது. அது எந்தப் படம் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.
அதன்பின் சிலகாலம் மறக்கப்பட்டிருந்த பாம்புகளுக்கு மறுவாழ்வு தந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் கொஞ்சம் மாற்றி யோசித்து, அச்சுறுத்தும் விஷயங்களாக அதுகாறும் காட்சிப்படுத்தப்பட்ட பாம்புகளை நகைச்சுவைக்கான விஷயமாக மாற்றிக் கொண்டார். 1984ல் வந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் பலான புத்தகம் படிக்கையில் அருகில் வந்து சீறும் பாம்பை, ‘உஸு’ என்று மிரட்டி அடிக்கி, பின் அந்தப் பாம்பைக் கண்டு பேச்சு வராமல், கண்கள் விரிய, பா.. பா… பா… என்று மட்டுமே இரண்டு முழு நிமிடங்கள் அலறி, அது போனதும் முழுசாக ‘பாஆஆம்பூஊஊஊ’ என்று பேரலறல் ஒன்றை வெளிப்படுத்தி அவர் மயங்கிவிழும் காட்சி உத்தரவாதமான சிரிப்பைத் தந்தது. ஆக்ஷன் ஹீரோவின் இந்தப் பயந்தாங்கொள்ளி நடிப்பானது மிக ரசிக்கப்பட்டது அந்தப் படத்தில்.
அதையே மறு ஒளிபரப்பாக மீண்டும் பயன்படுத்தினார் 1992ல் வெளிவந்த தன் ‘அண்ணாமலை’ படத்தில். இம்முறை லேடீஸ் ஹாஸ்டலில் பாம்பு புகுந்துவிட, பால்கார அண்ணாமலையை பெண்கள் உதவிக்கு அழைக்க (இழுக்க?) அவர் பயந்து தரையில் உட்கார்ந்த கண்மூடி வேண்ட, பாம்பானது அவர் காலிலிருந்து கழுத்தில் ஏறி பரமசிவன் கழுத்திலிருப்பது போல் ஆபரணமாக வளைத்துக் கொள்ள, ஹா ஹுவென்று பலவித அலறல் கலந்த சத்தங்களை எழுப்பி பயத்தை மறைப்பார். சிரிப்பைத் தருவார் ரசிகர்களுக்கு. பின் பாம்பானது வெளியேறிவிட, அதைத் துரத்திச் சென்று பாத்ரூமில் குஷ்பூவின் நிர்மால்ய தரிசனத்தைப் பெற்று, அதை ஊரெல்லாம் பரப்பி நகைச்சுவை வெடியைத் தொடர்வார்.
1982ல் வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ஓர் மலைப்பாம்பு அம்பிகாவைச் சுற்றிக் கொண்டு விழுங்கப் பார்க்க, தன் புஜபல பராக்கிரமத்தால் பாம்பை விலக்கி அம்பிகாவைக் காப்பார் கமலஹாசன். ஆனால் அவரே, 2002ல் ரஜினியைப் போன்றே பாம்பை நகைச்சுவைக்கெனவே கையாண்டார். பரமசிவன் வேடமிட்ட கமல் கழுத்திலிருக்கும் பாம்பை துன்புறுத்துகிறார் என மாதர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்ட, நடக்கும் கலவரத்தில் அவர்களே பாம்பை மிதித்துக் கொன்றுவிடுவதை, ஜீவகாருண்யம் என்று போலியாகப் பலர் நடந்து கொள்வதை அங்கதமாக காட்சிப்படுத்தியிருந்தார்.
முன்னோர்கள் இத்தனை விதமாகப் பயன்படுத்திய பாம்பைத் தான் மட்டும் விட்டுவிட்டால் எப்படி என்று எண்ணிய விஜய், 2004ல் வெளியான தன் ‘மதுர’ படத்தில் மூக்குமுட்டக் குடித்து, தோளில் துண்டுக்குப் பதிலாகப் பாம்பைப் போட்டுக் கொண்டு வடிவேலுவையும் மற்றவர்களையும் க்ளோஸ்அப்பில் சென்று பேசி மிரளச் செய்வார். கடைசியில்தான் பாம்பு தன் தோளிலிருப்பதை அறிந்து ரஜினியின் அதே மேனரிசத்தோடு தூக்கியெறிந்து ஓடுவார்.
இப்படி துவக்கத்தில் மனிதர்களுக்கும் மேலாகச் சித்தரிக்கப்பட்ட பாம்புகள், பின்னாட்களில் இயல்பான பாம்புகளாகக் காட்டப்பட்டு, அதன்பின் மனித வடிவெடுக்கும் சூப்பர் பவர் உள்ளவைகளாகக் காட்டப்பட்டு, கடைசியில் நகைச்சுவைக்குப் பயன்படும் வஸ்துக்களாகக் காட்டப்படுகிற வரையில் தமிழ்சினிமா பாம்புகளை நையப் புடைத்திருக்கிறது. (இங்கு நான் சொல்லாமல் விட்ட பல படங்களும் உங்கள் நினைவில் அலைமோதும்.).
ஆங்கிலத் திரைப்படங்களில் நம்மூர் மலைப்பாம்புகளைத் தூக்கிச் சாப்பிடுகிற அனகோண்டாவையே காட்டி பிரம்மாண்டத்தில் உறைய வைத்தார்கள். அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் கட்டுரையானது தொடர்கட்டுரையாகிவிடும் அபாயம் உண்டு.
இத்தனையையும் படித்த நீங்கள், இங்கு சொல்ல விடுபட்டுப் போன பாம்பு சமாச்சாரம் ஏதாவது உண்டா என்பதை யூகித்துக் கருத்திடுங்கள். அல்லது, இனிவரும் நாட்களில் பாம்புகள் திரைப்படங்களில் எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதை யோசித்தீர்களென்றால், மற்றுமொரு கட்டுரைக்குக் கருவாகிவிடும் அது. சுவாரஸ்யமான இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டீர்களென்றால் இந்தக் கட்டுரையில் கிடைக்காத சுவாரஸ்யம் அதிலேனும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். வாழ்த்துகள்.
******