இணைய இதழ் 101குறுங்கதைகள்

காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்

குறுங்கதை | வாசகசாலை

விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா எழுந்துடுவாங்க. நிர்மலா அம்மா இருக்கசொல கூட இன்னும் சீக்கிரம் எழுந்துடுவாங்க. பேங்க் ஆபிசர் ஆச்சே பொழுதோட கிளம்பத் தாவல? மத்த வூடுங்கல்ல கதவ இடிச்சிட்டு படில உட்காந்துகினு செல்ல நோண்டிகினு இருக்கனும். ஓனருங்க தூங்கினு இருப்பாங்க’.

பெருமையாக கலையரசி சொன்னாலும் கதவு திறந்துவிட்டுத் தூங்குவதில் கொஞ்சம் பயம் உண்டு. ஒரு தடவை பிக்பாஸ்கட்காரன் யார் வீட்டுக் காய்கறி பார்சலையோ லேசாகத் திறந்திருந்த கதவைத் திறந்து உள்ளே வைத்துவிட்டு போய்விட்டான். பிக்பாஸ்கெட்டிற்கு சேஃப்டி குறிகோள். அடித்தது யோகம் கலையரசிக்கு.

எது எப்படியோ அவருக்குக் காலைதான் செளகரியம். கலையரசி வந்த அரவம் கேட்டதும் இவரும் எழுந்துவிடுவார். இவர்தான் காப்பி தயாரித்துக் கொடுப்பார். சில சமயம் காலையில் எழுந்த மலர்ச்சியுடனும் பல சமயம் தூக்கக் கலக்கத்திலும். அரைமணி நேர காபி வே(ளை)லை. குடித்தவுடன் காபி உள்ளே போய் கொடுக்கும் சுகமே தனி.

சிங்கில் பாத்திரம் தேய்க்கும்போது இந்த காபி போடும் வேலை செய்ய முடியாது. பிடிக்கவும் பிடிக்காது. அடுப்பிற்கு நேரே ஃபேன் ஓடுவதால் சரிப்பட்டு வராது. இவளுக்கும் காத்து வரவேண்டும் என்பதால்தான் ஃபேன் போட்டது.

காபி தயாரிப்பில் எஜமானர் காப்பி, வேலைக்காரிக் காப்பி என்கிற திரிசமன் இல்லாத ஒரே டிகாஷன் ஒரே பால் காபிதான். நோ இரட்டைக் குவளை சிஸ்டம். பல சமயம் அனந்தராமன் எழுந்து தயாரித்து ருசித்துக் குடித்து அக்கடா என்று உட்கார்ந்திருக்கிற சமயத்தில் கலையரசி பெல் அடிப்பார். இரண்டாம் முறை போட வேண்டுமே என்கிற அலுப்பு இருக்கும். சில சமயம் மட்டும்தான் ஒரே நேரத்தில். சில சமயம் கதவைத் திறந்துவிட்டு (5 மணிக்கு) அலுப்பில் மீண்டும் தூங்கிவிடுவதால் தனிக் காப்பிதான். அதன் ருசியே தனி.

இதுவும் (இரண்டு முறை) காபி மாதிரி பழகிவிட்டது. எள்ளுப் பாட்டி கொள்ளுப் பாட்டி அம்மா காலத்தில் காபிக் கடையே வைத்திருந்தார்கள். எவ்வளவு பேருக்கு எந்த எந்த சமயத்தில் எல்லாம் எவ்வளவு முறை போட்டுக் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் யோசிக்கும் போது மேலே பார்த்துக் கும்பிடுவதுண்டு. மனைவி அந்த விஷயத்தில் அதிர்ஷடம். கடையெல்லாம் இல்லை. மனித வெண்டிங் மெஷின். இப்போது நான்தான் போட்டுக் குடிக்க வேண்டும். மனைவி இல்லை.

போன வாரம் திடீரென்று இவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. கடந்த இரண்டரை வருடத்தில் காபியின் டேஸ்ட் பற்றி கலையரசியிடம் கேட்டதில்லை. இரண்டொரு முறை எண்ணம் வந்த போது கேட்காமல் விட்டுவிட்டார். காரணம் ஒண்டி ஆண் என்கிற அனுதாபத்தில் நல்லா இருக்கு என்பார்.

மற்ற விஷயத்தில் இது நடந்திருக்கிறது. இதுவரை கூட டிகாஷனோ சர்க்கரையோ பாலோ கேட்டதே இல்லை. கேட்டால், ‘போதும் எல்லாம் சரியா இருக்கு’ என்பார். இதுவும் மேலே சொன்ன உணர்வில் என்பது அவர் யூகம்.

போன வாரம் கேட்டே விட்டார்

’எப்படிம்மா இருக்கு காபி?’

’சார், நீங்க தெனம் காப்பி போட்டு குடுக்குறீங்க நா குடிக்கிறேன் அவ்ளவுதான்’

சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

அனந்தராமன் தன் வாசிப்பு அனுபவத்தில் திருமூலர், போகர், பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணி சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடலின் மிஸ்டிக் வரிகளை டிகோட் செய்திருக்கிறார். ஆனால், கலையரசி சொன்னதின் அர்த்தம் என்ன? பாராட்டா? திட்டா? முகபாவத்தைப் பார்த்தால் சமமாக இருந்தது. உரையாடலைத் தொடராமல் விட்டுவிட்டார்.

கலையரசி சொன்ன பதில் மண்டையில் தேங்கி அடுத்த இரண்டு நாளைக்கு கலையரசி சித்தர் மாதிரியே தோற்றம் அளித்தார். மூன்று நாள் கழித்து அவர் சொன்னதின் அர்த்தம் கேட்டேன்.

‘டெய்லி கால்ல வூட்ல டேஷ்டா டீ போட்டு குஷ்டு வரேன் சார். அது அப்படியே நாக்குல ஒட்டி இருக்க சொல உங்க காபி குட்ச்சா டேஸ்ட் தனியா செட் ஆவல… வூட்ல டீ பழகத்த விட்டுட்டு டெய்லி உங்க காபிக்கு செட் ஆவாது’

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button