![](https://vasagasalai.com/wp-content/uploads/2023/07/Picsart_23-07-21_14-26-43-898-780x405.jpg)
புதர்கள் மண்டிக் கிடக்குமிடத்தில்
பூத்திருக்கும்
பூக்களைப் பறிக்க முயற்சிக்கிறேன்
உடலெங்கும்
முட்கள் கிழித்து ரணமாகிவிட்டன
பசித்த வயிறு
ஒளியிழந்த கண்கள்
என்னை ஏதும் செய்துவிடும் முன்
அந்தப் பூக்கள் எனக்கு வேண்டும்
அதோ அந்தக் குப்பைக்கருகே
பசியால் மரித்துக் கிடக்கும்
என் குழந்தைக்கு
என்னால் வேறு என்ன கொடுத்துவிட முடியும் இந்த தேசத்தில்?
***
அன்பே இல்லாத வனத்தில் தனியாக
நின்றுகொண்டிருக்கும் என்னை
ஒளியோடு
சில கண்கள் வெறித்துப் பார்க்கின்றன
நரிகளின் கூர்மையான பற்கள்
என் கண்முன்னே
பயமுறுத்த
தூசிகள் நிறைந்த காற்றும்
என்னைக் கடந்து செல்கையில்
முகம் திருப்பிவிட்டுச் செல்கிறது
வெளிச்சங்கள் இல்லாத இடத்தில்
நான் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து
உருக
காதலும்
வாழ்தலும்
என்னைத் தேடிக்
கண்டடையும்
என்ற சிறு நம்பிக்கை மட்டுமே
என்னைச் சுற்றிலும்
பசுமையைக் காட்டுகின்றது.
*********