மிச்சமிருக்கும் மழையையும் என் மீது கொட்டித்தீர்க்கும் இலக்கோடு வானம் மிக வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு மழையையும் பொறுட்படுத்தாது வண்டியில் குறுக்கும் நெடுக்குமாக மனிதர்கள். என் கையில் இருந்த பிரியாணி கொஞ்ச கொஞ்சமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. அதன் கணம் இன்று கொஞ்சம் அதிகமாய் இருந்தது. மழைக்கு நான் ஒதுங்கி இருந்த இரும்புக்கூரை இன்னம் சற்று நேரம் தாக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நேரம் அனைவரையும் அலுவலகத்தை விட்டு துரத்தி இருந்தது. நேரம் செல்லச் செல்ல இரும்புக்கூரை கொஞ்சம் கொஞ்சமாக மழையைத் தன்னுள் அனுமதித்தது. மழை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதே மழை கொட்டிய தருணம் முப்பொழுதில் என்னை கதகதப்போடு அரவணைக்க அவள் இருந்தாள் இப்பொழுது இவன் இருக்கிறான் ஒரு வெள்ளை நிற நெகிழிப்பையில். கருமையாய் சூழ்ந்திருந்த என் தனிப்பட்ட கைபேசி இப்பொழுது கொஞ்சம் உயிர் கொண்டது. எதோ ஒரு காதல் தோல்வி பாடல் ரீங்காரமிட – காரணமானவள் கரம்பட்டு வந்திருந்தது அந்த அழைப்பு. ஆமாம் அவளே தான்.
பெண்கள் விடுதி வாசலில் கொட்டும் மழையினுள் யார் துணையும் இன்றி என்னைப் போல நின்றிருந்தாள் . கரங்கள் அதே கருப்பு நிறப் பையை கரம்பிடித்து இருந்தது. மழை கண்களை மறைத்தாலும் அவள் தெளிவாகத்தான் தெரிந்தாள் எனக்கு. மஞ்சள் நிற சுடிதார். மார்புக்கு குறுக்காய் சுடிதாருக்குப் பொருந்தாத ஷால். அவசரத்துக்கு எடுத்து இருப்பாள் போல. எதையும் கேட்காமல் வண்டி நிதானத்திற்கு வந்தது. அவள் முன்னே நின்றது. தலையை குனிந்தவாறே கண்களை மட்டும் மேலுயர்த்தி என்னை உறுதிப்படுதிக்கொண்டாள். வழக்கம்போல உரிமையாய் என் தோளில் அவள் அழுத்தம் கொடுத்து பல்சர் குதிரையின் மீது ஏறினாள். ஏறிட்டு ஒரு நொடி விடுதியைப்பார்த்தாள்.சன்னல் கதவுகளை அழுத்தி உடைப்பது போல் மேலிருந்து இரு பெண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். குதிரையை இயக்கி தயார் நிலையில் வைத்திருந்த என்னிடம் “போலாம் பிரபா” என்றாள்.
வாகனம் என்னைக் கேட்கும் முன்னரே கிளம்பி விட்டது. அதற்கு பழக்கதோஷம்.
மழை இருவரையும் ஒன்றுமே உறுத்தவில்லை மாறாய் இருவர் மனதிலும் பலவித எண்ண ஓட்டங்கள்.
“அமலா, எங்க இறக்கிவிட உன்ன..”
“பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டறியா பிரபா …”
“டிக்கெட் புக் பண்ணிட்டியா நீ…”
“இல்ல அங்க போய் பாத்துக்கலாம் பிரபா..”
“ஓகே…எங்க ஊருக்கா…?”
கடைசிக் கேள்வி அவள் மனதை எட்டவில்லை போல. ஏதோ ஒன்றை யோசித்தவளாய் வந்தாள். எனக்குள்ளே இளையராஜா எல்லையைக்கடந்து பல பாடல்களை இயக்கி விட்டார். மழையை ரசிக்க முடியாதபடி வானம் பீறிட்டுக்கொண்டிருந்தது. குதிரை மெல்ல மெல்ல பள்ளங்களில் ஏறி இறங்கி கொண்டு இருந்தது. அமலா இன்னமும் யோசனையுடம் நிமிர்ந்தபடி பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டு இருந்தாள். மஞ்சள் நிற சுடிதார் கொஞ்ச கொஞ்சமாய் உடல் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டே போனது. இறுதியில் பேருந்து நிலையம் வந்தடைந்தோம். இரும்புக்கூரை இப்பொழுது கான்க்ரீட் கட்டடமாக வியாபித்து இருந்தது. என் தோள்பையில் பிரியாணி தன் கடைசி மூச்சை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. அமலா டிக்கெட் எடுக்க அலுவலகம் உள்ளே சென்றிருந்தாள் . நான் குளிருக்காக என்னை நானே கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன். மழை இப்பொழுது மெள்ள மெள்ளமாய் அமைதியாகத் தொடங்கிற்று. இன்னும் எனக்கு புரியவே இல்லை.நாம் என் இன்னும் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்? முதலில் அவள் அழைப்பை எடுத்து அவளின் கட்டளையை ஏற்றது; அவளை அழைத்து வந்தது என எல்லாமே முறைப்படி பார்த்தால் தப்பு. அதுபோக எனக்கும் அவளுக்கும் இருந்த உறவு முறிந்த ஒன்று. இதை எல்லாம் விட மேலானது நெகிழியில் ரொம்ப நேரம் உணவு இருக்கக் கூடாது. அமலா அமைதியாய் நீர் சொட்ட சொட்ட அருகில் வந்தாள்.இருவருக்கும் அரை அடி இடைவெளி. நான் பின்னடி வைத்து அதை பெரிதாக்கி கொண்டேன்.
“என்ன, டிக்கெட் வாங்கிட்டியா..”
மெல்லிய அவளின் மெளனம் என்னை மீண்டும் அவளை ரசிக்க வைத்தது.
“சரி, வேற யாராவது பிரென்ட் வீடு இருக்கா…கூட்டிட்டு போய் விடறேன்..”
மீண்டும் ஒரு மெளனம்.
“சரி, என்ன பண்ணலாம்..?”
மழை முடிந்து வானம் அமைதியானது. கொஞ்சம் குளிர் காற்று வீசியது. கடலை வியாபாரிகள் விளக்கை ஏற்றி எப்போதும் போல் இரும்பு கம்பியால் வண்டியைத் தட்டினார்கள்.
“சாப்டியா..”
பதில் இல்லை..
“நீ என்ன எதுக்கும் பதில் பேச மாட்ற…” இடதுகை ஓரத்தில் வந்த கடலைக்காரரிடம் “அண்ணே, ரெண்டு கடலை குடுங்க…” என வாங்கி அவளிடம் ஒன்றைக் கொடுக்க, அப்போதும் அமைதி நிலவியது.
“ஹே..எரிச்சலக் கிளப்பாத..ஒழுங்கா பதில் பேசு..என்ன.. என்னய விட்டு போனதுக்கு அப்புறம் ரொம்ப அமைதி ஆகிட்டிங்களோ..இந்தா, இதையாவது சாப்பிடு..” என அவளிடம் நீட்டினேன்.அவள் என் விரல்களைக் கூடத் தீண்டாமல் அதை வாங்கிக்கொண்டாள். என் விரல்கள் என்ன பாவம் செய்தது அவளுக்கு?
பழைய செய்திகள் ருசி முடிந்ததும் கசக்கி வீசப்பட்டன. மூளையினுள் பல எண்ணங்களின் ஓட்டம்.
“இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க..?”
தெரியலையே என்றவாறு அமைதியாய் உதட்டைப் பிதுக்கினாள்.
“சரி, என் வீட்டுக்கு வரியா..?”
என்ன நினைத்தாளோ தெரியவில்லை சட்டென மலர்ந்து வண்டிக்கு அருகில் போய் நின்றாள். குதிரை உடலை சிலுப்பித் தயாரானது வீட்டை நோக்கிச் செல்லும் வழி முழுவதும் எனக்கு பல யோசனைகள். ஆனால், அவளுக்கு அப்படி இல்லை. முகம் முன்பை விட மலர்ச்சி. என்ன நினைக்கிறாள் என சத்தியமாய் தெரியவில்லை.நான் கேட்டதும் சட்டென ஒத்துக்கொண்டால் ஒருவேளை இதைத்தான் எதிர்பாத்திருப்பாளோ. இல்லை என் மீது அவ்வளவு நம்பிக்கையா..இல்லை இது வேறேதும் உறவுக்கான தொடக்கமா..என்ற பல்வேறு குழப்பங்களுக்கும் கிடைத்த ஒரே தீர்வு – குதிரை லாயத்தை அடைந்தது.
தோள்பையைத் திறந்து சாவிக்கொத்தை எடுத்து மாளிகையைத் திறந்தேன். அம்மாவைப்பற்றி ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லை.அவள் கேட்கவில்லை என்றாலும் சொல்லவேண்டிய தருணம் அது.
“அம்மா ஊருக்கு போய் இருக்காங்க..” என்றேன் மெல்லிய புன்னைகையுடன்.
அவளும் அதை மெல்லிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.
இடது கால் வைத்து வீட்டின் உள்ளே இருவரும் சென்றோம். வீட்டினுள் பிரகாசம் ஒளிர சோபாவினுள் தன்னை ஒடுக்கிக்கொண்டாள் அமலா.
“நீ இங்கயே இரு. நா போய் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்..” என்றவாறு உள்ளே சென்றேன். வெளியே வந்த நான் கையில் துண்டோடு அவளைத் தேடினேன். அவள் மீண்டும் வெளியே சென்று குளிர் காற்றில் தன்னை கரைத்துக்கொண்டு இருந்தாள் .
“உள்ள வா அமலா..வெளிய ரொம்ப குளிர்..”
கட்டளையை ஏற்று உள்ளே வந்தாள். தலையைத் துண்டால் துவட்டிக் கொண்டாள். சோபாவின் முன்னால் சம்மணமிட்டு உட்கார்ந்த நான் பிரியாணிக்கு உயிர் கொடுத்தேன். அது கடைசி மூச்சை என்னிடம் விட்டுவிட்டு சென்றது. வழக்கத்தை விட கூடுதல் அளவு காரணமாகத்தான் கொடுத்திருக்கிறான் போல கடவுள். நானும் அமலாவும் எதிரெதிர் திசையில் அமர்ந்து உணவைத் தீர்த்து முடித்தோம். பிரியாணியை பிரித்தவுடன் வரும் அளவிலா சந்தோசம் இன்று அவள் முகத்தில் நிலைக்கவில்லை. இறுதியாக அவள் சந்தோசப்பட்டது அந்த பஸ் ஸ்டாண்டில்தான்.அதன் பிறகு என்னவென்னவோ சொல்லிப் பார்த்தேன் சிரிக்கவில்லை அவள்.
“இங்க நீ படுத்துக்கோ அமலா. நா வெளிய படுத்துகிறேன் “
உள்ளே இருந்த பெட்ரூமை அவள் கண்ணால் கட்ட.. ”அதுவா ரூம் இருந்தா நா பசங்கள கூட்டிட்டு வந்து கொட்டம் அடிப்பேன்னு அம்மா பூட்டிட்டு சாவிய எடுத்துட்டு போயிருப்பா. நீ இங்க படுத்துக்க நா வெளிய..” என்றவாறு வெளியே பார்த்தேன். குளிர் கொஞ்சம் காட்டமாக இருந்தது.சட்டென “நா வேணும்னா கீழ படுத்துக்கிறேனே..நீ சோபால படுத்துக்கோ..ப்ளீஸ் வெளிய ரொம்பக் குளிரா இருக்கு..” என்றேன்.
“ம்ம்..” என்றவாறே மெல்லிய புன்னகையுடன் சோபாவில் படுத்துக்கொண்டாள். நான் தரையை ஆக்கிரமித்துக்கொண்டேன். நிமிடங்கள் கடந்தன. கண்களில் கொஞ்சம் கருமை சூழ்ந்து ஒளிப்படம் ஆரம்பம் ஆனது. அவளின் நினைவுகள்தான். எப்பொழுதும் வந்து போகும் ஆனால், இன்றைக்கு அவளே வந்து விட்டாள். காதலிக்கும் பொழுது ஆசைப்பட்ட பாலியல் விளையாட்டை நிகழ்த்தி விடலாமா. இதுதான் அதற்கு உகந்த நேரம்.. இனிமேல் அவளை எங்கு பார்க்க போகிறோம்.என எண்ணிய வேளையில் அவளின் மெலிந்த புன்னகை நினைவிற்கு வர என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன். இவள் இப்பொழுது ஏன் இங்கே இருக்கிறாள்? என்னை நம்பி, அதுவும் காதல் முறிந்த என்னை நம்பி ஏன் இங்கே இருக்கிறாள்? முதலில் இவள் ஏன் அவசர அவசரமாக விடுதியைக் காலி செய்ய வேண்டும் ? அதுவும் அந்த இரு பெண்களின் பார்வைக்கு நானே காலி செய்துவிடுவேன் போல… அதுதான் பிரச்சனையா? என பல கேள்விகள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்க, சட்டென சோபாவிலிருந்து உருண்டு என் அருகில் வந்து படுத்தாள் அமலா.
எனக்குத் தெரிந்து ஏழு முறைக்கு மேலே எச்சில் விழுங்கி இருப்பேன். மிகவும் அருகில் அவள். காதலிக்கும்போது கூட இவ்வளவு நெருக்கம் இல்லை. மீண்டும் அந்த கொடூரக்காரன் தலைதூக்க ஆரம்பித்தான். அவன் என் மூளைக்குள் சென்று என்னை இயக்க ஆரம்பிக்கலானான். அவனின் கட்டளைகளின் படி நான் இப்பொழுது என் வலதுகாலை அவளின் மேல் போடவேண்டும். ஆனால், நானோ அதிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருந்தேன். காலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். நிலைமை புரிந்த கலகக்காரன் இப்பொழுது கையைக் குறிவைத்தான். மனதை ஆட்டிவைத்தாலும் ஏதோ ஒன்று என்னை அவனை எதிர்த்துப் போராட வைத்தது. அது என்னவென சத்தியமாக தெரியவில்லை.ஒரு வேளை அவளிடம் நான் வைத்த காதலாகக் கூட இருக்கலாம். எவ்வளவு முயற்சித்தும் அவனால் என்னை வெல்ல முடியவில்லை. மனதினுள் இருந்த உண்மைவாதிகள் கொஞ்ச கொஞ்சமாய் வெளிவந்து அவனை அமைதிப்படுத்தினர். அவள் இப்பொழுது என் உடல் சூட்டை அறியும் அளவிற்கு நெருக்கமாய் இருந்தாள். நாம் விடுதியில் நடந்ததை முதலில் அவளிடம் கேட்டிருக்க வேண்டும் அதுதான் சரியான முறை என்றனர் மனதினுள் இருந்த உண்மைவாதிகள். கேட்கலாம்..ஆனால், அவள் இப்பொழுது உறக்கத்தில் இருக்கிறாளே.. அந்த இரு பெண்களும் இவள் காதலிக்கும்போது கூட இருந்தவர்கள் இல்லை.அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் வேறு யாரோ.இவர்களுடன் ஏதோ பிரச்சனை அதான் வெளியேறத் துடிக்கிறாள். ஏன் வெளியேற வேண்டும்? வேறேதும் அறை எடுத்து தங்கலாமே? என்னவோ…ஒரு பிரியாணி அளவுக்கே காரணம் வைத்த கடவுள் கன்னியவள் வாழ்க்கைக்கு வைக்க மாட்டாரா. நடப்பது எல்லாம் நன்மைக்கே என மூச்சை இழுத்து விட்டு உறக்கத்தில் மூழ்கினேன்.
நேரங்கள் கடந்தன. காலை மணி ஏழைக் கடந்திருந்தது. கொஞ்சம் முழிப்பு வர எழுந்தேன்.அருகில் அவள் இல்லை. சட்டென போர்வை விலக்கிப் பார்த்தேன். உள்ளிருந்து காபி டம்ளரோடு அம்மா வெளிப்பட்டாள். எனக்கு ஒரே அதிர்ச்சி. நடந்தது கனவா? நிஜமா? யாரைக் கேட்பது? போன் கொஞ்சம் ரீங்காரமிட்டது. வேறு ஏதோவொரு பாடல். என் போன் தானா என எடுத்து திருப்பிப் பார்த்தேன். என் போன் தான். அழைப்பது அமலா எனக்காட்டியது.
“ஹலோ..”
“என்ன பிரபா, தூக்கம் கலஞ்சிடுச்சா… “
“ம்ம்..கொஞ்ச கொஞ்சமா..ஆமா, நீ எங்க திடீர்னு போயிட்ட..”
“நா ஆறு மணிக்கெல்லாம் வெளிய கிளம்பிட்டேன். உங்க அம்மா போன் பன்னாங்க உனக்கு. சோ அதான் நா அப்டியே கெளம்பிடேன்.”
“ம்ம்..எங்க பஸ் ஸ்டாண்ட்லயா…”
“ஆமா…உனக்கு ஒன்னு தெரியுமா பிரபா “
“என்ன…சொல்லு..”
“நா நேத்து மட்டும்தான் வலியே இல்லாம நிம்மதியா தூங்குனேன்…”
“ஆனா, எனக்கு அப்டி இல்ல..ஆமா..என்ன பிரச்சனை ஹாஸ்டல்ல..”
“அதான் சொன்னனே…”
“என்ன சொன்ன..”
“நல்லா யோசிச்சுப் பாரு.. ஓகே பிரபா, பஸ் வந்துருச்சு..பை “
என்ன சொன்னாள் என சற்று பின்னால் செல்லுகையில், எனக்கு ஒன்று நன்றாகப் புலப்பட்டது. எனக்குள் வந்த கலகக்காரன் இவளின் அறைத் தோழிகளிடம் வந்திருக்கிறான். அவனின் சொல்படி இவர்கள் அமலாவிடம் செயல்பட்டுள்ளனர். அப்போதுதான் பெண்மை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்தது. ஒரு பெண் விரும்புவது இந்த கலகக்காரனின் வேலையை அல்ல; ஏனெனில் கலகக்காரனின் வேலையை யார் வேண்டுமானாலும் அவளிடம் நிகழ்த்த முடியும். அவள் விரும்புவது அவளிடம் நிகழ்த்துவபனை அல்ல மாறாக அவளுக்குள் ஏதேனும் ஒன்றை நிகழ்த்துபவனை. நேரங்கள் கடந்தன. என்னுள் இருந்த மனதின் அகதி ஒன்று இன்று சுதந்திரம் பெற்றது
******