தொடர்கள்

ரசிகனின் டைரி;1 – வருணன்

தொடர் | வாசகசாலை

சினிமா யாருக்குத்தான் பிடிக்காது. இலக்கியம் போல இல்லாம நேரடியா சினிமா நம்மளோட உணர்வுப்பூர்வமா உறவாடுறதால தான் பலருக்கும் வாசிக்கிறத விடவும் சினிமா பார்ப்பது ரொம்ப பிடிச்ச விசயமா இருக்கு. அதனால தான் உலகம் முழுசும் வாசகர்களை விடவும் பல மடங்கு சினிமாவிற்கான பார்வையாளர்கள் அதிகமா இருக்காங்க. ஆனா சினிமா குறிச்சு பேசுறது/உரையாடுவது அல்லது எழுதுறது/வாசிக்கிறது அவசியமானதா? ஒரு வேளை இந்த கேள்வியே உங்களுக்கு அபத்தமானதா இருக்கலாம். என்னப்பா பாக்குறதுக்கு தானே சினிமா! அதுல போயி பேசுறதுக்கு என்ன இருக்கு? சினிமாவைப் பத்தி பேசுறதுன்னா நம்மில் பலருக்கும் நல்லாயிருக்கு அல்லது மோசம் (நாம பார்த்த படத்தைப் பற்றிக் கேட்கும் போது ஓரிரு வார்த்தைல சொல்வோமே அது போல) என்பது போல சொன்னா பத்தாதா?! அதைத் தாண்டி அதுல என்ன இருக்கு பேசறதுக்கு… என்பது போலத்தான் பலரோட அபிப்ராயம் இருக்கு!

நாம வாசிக்கிற பெரும்பான்மையான சினிமா விமர்சனங்கள் கூட படங்களோட கதைய மட்டும் சொல்வதா தான் இருக்கு. மிஞ்சிப் போனா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களோட பங்களிப்பு அந்த படத்தில எப்படி இருக்கு என்று வேண்டுமானால் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்புறம் இருக்கவே இருக்கு…  ‘சினிமா செய்திகள்’ என்ற தலைப்பில் தினசரி, வாரப் பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் டிவியில வருகின்ற செய்திகள். உண்மையச் சொன்னா அதுல சொல்லபடுற  எல்லாமே  சினிமாவில பங்கேற்கிற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய செய்திகள் மட்டும் தான். சுருக்கமா சொல்லணும்னா அவை சினிமாக்காரங்களப் பற்றிய செய்திகள் தானே ஒழிய சினிமா பற்றிய செய்திகள் அல்ல.

இதை எல்லாம் பார்த்தா அல்லது வாசிச்சா நாம சினிமாக்கள் பற்றிய துணுக்கு செய்திகளை தெரிந்து கொள்ள முடியுமே தவிர ஒரு நாளும் சினிமாவை அறிந்து/புரிந்து கொள்ள முடியாது. சினிமா என்பது இதைத்தான் சொல்லுது என நம்மால் முழுமையா ஒரு வேளை எழுதிட முடியும்னா அதுக்கு தனியா சினிமா என்ற கலையே தேவையில்லாம போயிடும். அப்போ எதுக்குய்யா நீ சினிமாவ மையமா வச்சு எழுதுற என உங்களோட மைண்ட் வாய்ஸ் ரொம்ப சூப்பராவே கேக்குது.

இப்போ… இலக்கியம் பத்தி நிறைய கட்டுரைகள் எழுதாறாங்கள்ளல! அது எதுக்கு என்று முதலில் யோசிப்போம். நான் துவக்கத்துலயே சொன்ன மாதிரி பல பேருக்கு பொதுவா வாசிக்கிறது பிடிக்கும்னாலும், இலக்கிய வாசிப்பு அதாவது தீவிர வாசிப்புக்குள்ள வருபவங்க எண்ணிக்கை எப்பவுமே ரொம்ப ரொம்ப கொஞ்சம் தான்.  ‘வாசிக்க ஆசையா இருக்குப்பா… ஆனா அவங்க எழுதற தமிழ புரிஞ்சுக்குகவே முடியல…’ இப்படியாக என்கிட்டையே பல நண்பர்கள் சொல்லி இருக்காங்க.  இன்னொரு குரூப் இதுல இருந்து கொஞ்சம் வேற மாதிரி. அவுங்க எல்லாம்‘அப்படியே சிரமப்பட்டு வாசிச்சு பழகிட்டாலும், என்ன சொல்ல வர்றாங்கன்னு முழுசா உள்வாங்கிக்க முடியலப்பா’, என்று சொல்லுற ரகம்.

வாசிப்பு என்பது அடிப்படையில வாசிக்கிற சந்தோஷத்துக்காகத் தான்.  ‘வாசிப்பு இன்பம்’ அப்படீம்பாங்க. ஆனா எழுத்துங்கிறது எவ்வளவு பெரிய மீடியம். அதை வச்சிக்கிட்டு என்னென்ன மாயாஜாலங்கள நிகழ்த்தலாம் என நான் சொல்லித் தான் நீங்க தெரிஞ்சிக்கணும்கிறது இல்ல. எழுத்து மூலமா மனுஷ வாழ்க்கைய இன்னும் ஆழமா புரிஞ்சுக்கலாம். மனுஷ உறவுகளுக்குள்ள இருக்கிற சிக்கல்களை புரிஞ்சுக்கலாம். இது ஒரு வகையில சக மனுஷங்களை அவங்க கோணத்தில் இருந்து பாக்குறதுக்கு நமக்கு உதவி செய்யும். இதற்கான பயிற்சிய இலக்கிய வாசிப்பு நிச்சயம் தரும். அதுக்கு சூப்பர் டீலக்ஸ்ல வருகிற கதாபாத்திரம் சொல்றது போல சொல்லணும்னா “அதுக்கு நானே சாட்சி!” என்று நான் தாராளமா சொல்வேன். எதுக்குய்யா இலக்கியம் படிக்கணும் என யாராவது உங்ககிட்ட கேட்டா தயங்காம சொல்லுங்க ‘மனுஷங்களையும், மனுஷ வாழ்க்கையோட அர்த்தத்தையும் புரிஞ்சுக்குறதுக்காக’ என்று.

யதார்த்தத்த சொல்லணும்னா ‘இந்த இலக்கிய மொழி பிரச்சனை இல்லப்பா. அதெல்லாம் வாசிச்சிடுவேன், ஆனா அத ஆழமா புரிஞ்சுக்கிறது தான் கொஞ்சம் பிரச்சனை’, அப்படீன்னு சொல்ற ஆட்களோட தேவையைத் தான், இப்போ இருக்கிற பெரும்பாலான இலக்கியம் பத்தின எழுத்துக்கள் ரொம்ப கச்சிதமாவே  பூரித்தி செய்யுது. மேலோட்டமா இல்லாம கொஞ்சம் அடர்த்தியா இருக்குற எந்த ஒரு விசயத்தையும் அணுகுறதுக்கும் அதை புரிஞ்சுக்குறதுக்கும் நமக்கு இன்னொருத்தரோட வழிகாட்டுதலும், உதவியும், கூடவே நம்ம பக்கம் இருந்து கொஞ்சம் கூடுதலான மெனக்கெடலும் தேவைப்படும் இல்லையா! அதுக்குத்தான் இது போன்ற எல்லாமே.

எப்படி வாசிப்புல ஜாலியான வாசிப்பு (கேளிக்கைக்கான வாசிப்பு அப்படீன்னு சீரியஸ் இலக்கியவாதிங்க சொல்வாங்க. இது மாதியான எழுத்துக்கு வெகுசன எழுத்துன்னும் பேரு வச்சிருக்காங்க.) சீரியஸ் வாசிப்புன்னு ரெண்டு ரகங்கள் இருக்குதோ, அதே போலத்தான் சினிமாவுக்கும். சினிமாவைப் பத்தி பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் காலங்காலமா இருக்குற ஒரு நிரந்தரமான (!) பட்டிமன்ற தலைப்பு ஒண்ணைச் சொல்லியே ஆகணும். ரொம்ப சிம்பிள். அதாவது  ‘சினிமா கலையா அல்லது வியாபாரமா?’  இதுதான் கேள்வி. விடையும் அதே போல எளிமையானது தான்.  ‘சினிமா என்பது அடிப்படையாக ஒரு வியாபாரம். அதே நேரத்தில்அது கலையும் கூட.’

அப்புறம் என்னப்பா பிரச்சனையே இல்லையே! மேட்டர் ஓவர் எனச் சொல்ல முடியல. ஏன்னா சினிமா என்பது முழுக்க கேளிக்கை தான், வியாபாரம் தான் அப்படீன்னு ஒரு குரூப்பும், இல்ல இல்ல சினிமா என்பது ஒரு ஆகப் பெரிய கலை அப்படீன்னு ஒரு குரூப்பும் எல்லா நாட்டிலையும் நிச்சயமா இருக்கு. ரெண்டு பக்கமும் ரொம்ப தீவிரமா இருக்கவுக்களுக்குள்ள சதா மல்லுக்கட்டு தான். இத தவிர்க்கவே முடியாது. இப்போ ஒரு சாமானிய ரசிகனா நம்மில் பல பேர் சினிமாவை ஒரு பொழுதுபோக்க தான் அணுகிக்கிட்டு இருப்போம். சினிமா என்பது ஒரு மிகச் சிறந்த Stress buster. இது மறுக்க முடியாத உண்மை. நம்ம அன்றாட வாழ்க்கையில என்ன பிரச்சனைகளை சந்திச்சுக்கிட்டு இருந்தாலும், அதனால மண்டைக்குள்ள என்னென்னவோ ஓடிகிட்டு குழம்பித் தவிச்சாலும், ஒரு சினிமாவைப் பார்த்தா நாம சில மணி நேரமாவது அது எல்லாத்தையும் அப்படியே மறந்துட்டு, சினிமாவோட ஒன்றிப் போயிடுவோம். அதனால பொழுதுபோக்கு சினிமா அவசியம் தான்.

ஆனா வெறும் பொழுதுபோக்கு எழுத்தே போதுமா என்று நாம இலக்கிய வாசிப்பு குறிச்சு பேசறப்போ கேட்டொமே, அதே கேள்வியை இங்கயும் கேட்டுப் பார்த்தோம்னா நல்லாயிருக்கும். சினிமா பார்த்து பழகி, சினிமா பார்ப்பதை ரசிக்கிற பலருக்கும், கொஞ்சம் சீரியசான படங்களை பார்க்குறதுல ஆர்வம் இருக்கத் தான் செய்யுது. என்ன எதைப் பாக்குறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருக்கு. ஏதோ ஒரு ஆர்ட் சினிமாவை பார்த்துட்டு (இந்த சீரியஸ் சினிமான்னு சொன்னோம்ல, அதை Art Cinema, Parallel Cinema, World Cinema, Art House Cinema என பல பெயர்கள்ல சொல்றாங்க.) அது செட் ஆகாம போயி  ‘அட போங்கப்பா இது ஒரே போர்’ எனச் சொல்லிட்டு அதன் பிறகு அதை சீண்டாம இருக்கிறங்கவுங்க நிறைய பேர்.

தன் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி கொஞ்சம் கொஞ்சமா பலதரப்பட்ட உணவுகளை ஊட்டி ஊட்டி பழக்குறாங்களோ அது போல கொஞ்சம் எளிமையானதுல இருந்து மெல்ல மெல்ல சீரியஸ் படங்கள் நோக்கி படிப்படியா நகர்ந்தோம்னா நிச்சயம் நம்ம சினிமா ரசனை டிரமாடிக்கா மாறுவதைப் பார்த்து நாமே ஆச்சரியப் பட்டுப்போவோம்.  கொஞ்சம் நேரம் முன்னாடி நாம பார்த்தோம் இல்லையா Main stream cinema / Commercial cinema, இதுல எல்லாம் சுவாரசியத்துக்காக பல விசயங்கள சேக்குறாங்க என்பது நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லாவே தெரியும். அதை எல்லாம் நாமளே  மசலாப் படங்கள் என்று தான் லேபில் ஒட்றோம். இந்த சினிமாத்தனமான சினிமாக்கள் மூலமாவும் நல்ல விசயங்கள சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. பெரும்பான்மையா இது போன்ற  கமர்ஷியல் படங்களைப் பாக்குற ரசிகர்கள் எண்ணிக்கை தான் எல்லா காலத்துலையும் மெஜாரிட்டி. அதனால அதுல சீரியசான விசயங்களை அங்க அங்க தூவின மாதிரி தான் படத்துல காட்ட முடியுது. அதை தாண்டி விதவிதமான வாழ்க்கைய, கதைகளை அங்க நாம எடுத்துச் சொல்ல முடியுறது இல்ல.

இந்த சினிமாத்தனம் இல்லாம கொஞ்சம் அசலான வாழ்க்கைக்கு நெருக்கமான விதத்துல இருக்குற மாதிரித் தான் கலைப் படங்கள் என்று நாம சொல்ற ஆர்ட் சினிமா இருக்கு. இது ரெண்டுக்கு இடைப்பட்ட வகை சினிமாக்களும் இருக்கு. அவற்றை Offbeat Cinema என சொல்றாங்க. அதாவது கமர்ஷியல் பாணியில இருந்து விலகி கொஞ்சம் வித்தியாசமான கதைகளையோ, அல்லது கதையை சொல்லும் விதத்துலயோ ஆர்ட் சினிமாவுக்கான சில அம்சங்களை சேர்த்துக்கிட்டு எடுக்கப்படுகிற படங்கள் என இந்த வகைப் படங்களை நாம புரிஞ்சுக்கலாம். உண்மையில இந்த வகை சினிமாக்கள் தான் ஆர்ட் சினிமாக்களுக்குள் நுழையுறதுக்கு முன்னால நாம ஏற வேண்டிய படிக்கட்டு.

சினிமா அப்டீங்கறது அடிப்படையில ஒரு விஷுவல் மீடியம். காட்சிகள் வழியா தான் பார்வையாளர்கள்கிட்ட அது பேசுது. அது தான் வசனம் இருக்குல்ல என நீங்க சொல்லுவீங்க. ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தோம்னா   நாடகம் எனும் கலை வடிவத்தோட மிக முக்கியமான அடிப்படையாகத் தான் வசனங்கள் இருக்குமே தவிர சினிமாவுக்கு ‘வசனமும் தேவை’ என்பதை புரிஞ்சுக்கலாம். நாடகத்துல இருந்து பிறந்தது தான் சினிமா என்பதால வசனங்களையும், நாடகங்களோட பல கூறுகளும் சினிமாவுக்குள்ள ஒட்டிக்கிட்டே வந்துடுச்சு.

நேரடியா கதை சொல்றது நாடகத்துல சாத்தியம்னா (இதுல கூட இப்ப நிறைய மாற்றங்கள் வந்துடுச்சு. ‘நவீன நாடகங்கள்’ அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்களே!) பல விதங்களில் சொல்ல வரும் விசயத்தைச் சொல்வதுக்கான சாத்தியங்கள் சினிமா என்ற மீடியத்துல கொட்டிக் கிடக்கு. நமக்கு தெரிஞ்ச கலைகளை கொஞ்சம் யோசிச்சுப் ஒரு பட்டியல் போட்டுப் பார்த்தா என்ன வரும்? ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, ஒப்பனைக் கலை (மேக்கப்), ஆடை அணியும் கலை என பட்டியல் நீளுது இல்லையா!  நாம இப்போ சொல்லி இருக்கிற எல்லாமே சினிமாவுக்குள்ள இருக்கு என்பதும் நமக்குத் தெரிஞ்சது தானே! இதுல இருந்து நமக்குக் கிடைக்கிற அடிப்படையான புரிதல் ‘சினிமா என்பது ஒரு கூட்டுக் கலை’ என்பது தான்.

சினிமாக்கள் எப்படி ரெண்டு வகையா இருக்குதோ – வணிகப்படங்கள் மற்றும் ஆர்ட் சினிமா – திரைப்படங்களை அணுகுறதுலையும் (approach) ரெண்டு விதங்கள் இருக்கு. கமர்ஷியல் சினிமாவுல பெரும்பாலும் ஒரு பார்வையாளரா நமக்கு திரையில நடப்பதை வெறுமனே வேடிக்கை பார்ப்பதைத் தவிர பெருசா வேறு வேலையே இருக்காது. அது அடிப்படையில பொழுதுபோக்கு அம்சத்தை மட்டுமே பிரதானமா எடுத்துக்கிறதால நாம சிந்தனை செஞ்சு பாக்குறதுக்கோ அல்லது ரொம்ப கவனமா அல்லது நுணுக்கமா பார்ப்பதற்கோ அங்க பெரிசா இருப்பதில்லை. இது மாதிரியான செயல்பாட்ட Passive viewing என்று சொல்வாங்க.

பொதுவா ஒரு தேர்ந்த கதை சொல்லி நேரடியாக, ஒரு தட்டையான கதையை சொல்றத விரும்ப மாட்டான். அப்படிபட்ட கதையை வெறுமனே பார்த்துட்டு கடந்து ஒரு வாசகர் அல்லது பார்வையாளர்  போயிடுவாங்க என்பது அவருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனால தன்னோட கதையில் பல லேயர்கள் இருக்கும்படி பார்த்துப் பார்த்து கதையை உருவாக்குவார். அது தான் சினிமாவுல ஏறக்குறைய நமக்குத் தெரிஞ்ச அத்தனை கலையோட பங்களிப்பும் இருக்கே. எனவே இந்த மீடியம் கணக்கில்லாத சாத்தியங்கள் கொண்டது. கிரியேட்டிவா விளையாடறதுக்கு இதுல எல்லையே கிடையாது. இப்படியான புரிதலோட ஒரு இயக்குநர் படத்தை எடுக்குறப்போ, அதை நாம் வெறுமனே மேலோட்டமா பார்த்துக் கடந்து போயிட முடியாது. (உண்மையச் சொல்லணும்னா போயிட முடியும் தான். அது எப்படி இருக்கும் என்றால் வகைவகையா அயிட்டங்கள் இருக்குற ஒரு சூப்பரான ஹோட்டலுக்குள்ள போயிட்டு வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டுட்டு வருவது போல…) அப்போ அந்த படைப்பை உள்வாங்க நாம ஒரு பார்வையாளரா கொஞ்சம் மெனக்கெட வேண்டியது தவிர்க்க முடியாததா மாறிடுது. ஒரு பார்வையாளனுக்கும் வேலை வைக்குறதால இந்த வகை அணுகுமுறையை Active Viewing என்று சொல்றாங்க. இங்க பார்வையாளர் வெறும் வேடிக்கை பார்க்குற ஆள் இல்லை. மாறாக அந்த கலைப்படைப்போட முக்கியமான ஒரு அங்கம். அதாவது ஒரு நல்ல சினிமாவை படைப்பாளி துவங்கி வைக்கிறார் என்றால் அதை முழுமையடைச் செய்யுறது ஒரு பார்வையாளர்  தான்.

இன்னைக்கு இணைய வசதி பரவலான பின்னாடி, பலதரப்பட்ட படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு பெருகிடுச்சு. அதிலும் இப்போ நாம் இருப்பது ஓடிடி யுகம்.  நல்ல படங்களை நம்ம வீட்டு ஹாலிலேயே அமர்ந்தபடி விரும்பிய நேரத்துக்கு பார்க்குற வசதி நமக்கு கிடச்சிருக்கு. சமூக வலை தளங்களில் பலரும் எந்த படத்தைப் பார்க்குறது என்றோ, அல்லது இந்த படத்தை பாருங்க என்றோ எழுதிக்கிட்டு இருப்பதை பார்க்க முடியுது. இதை வைத்து நல்ல சினிமாவுக்கான தேடல் பலர்கிட்டையும் இருக்கு என்பதாக நான் புரிஞ்சுக்கிறேன்.

தீடீர்னு ஒரு நாள் நமக்கு வாசிக்க ஆரம்பிக்கணும் என தோணும் போது, நம்ம நட்பு வட்டத்துல ஏற்கனவே நல்லா வாசிச்சுக்கிட்டு இருக்க ஒரு நண்பரைப் பிடிச்சு ‘எனக்கு வாசிக்கணும்னு ஆசை வந்துருக்கு. எதுல இருந்துய்யா துவங்குறது?’ எனக் கேட்பது இயல்பு தானே. அதையே தானே நாம மாற்று சினிமா மேல ஆர்வம் ஏற்படுற போதும் செய்யுறோம். இந்த இடத்தில தான் இந்த ‘ரசிகனின் டைரி’ உதவியா இருக்கணும் என்ற எண்ணத்துல எழுதத் துவங்குறேன். வாசிக்கிறதுக்கு சிரமம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ரொம்ப ரொம்ப ஈசியான பேச்சு வழக்கையே கட்டுரை வடிவத்தில அப்படியே பயன்படுத்தறேன். கட்டுரை என்பது உங்களோட பேசறதுக்கு வெறுமனே ஒரு சாக்கு தான் என்பதையும் மகிழ்ச்சியோட சொல்லிக்கிறேன்.

நான் சினிமா காதலன் என்ற போதும் நிறைய எண்ணிக்கையில படம் பார்க்கும் ஆள் கிடையாது. இது மாதிரியான படங்கள் மட்டும் தான் நல்ல படங்கள் என்பது போல எந்த குறிப்பிட்ட வரையறையும் நான் வச்சுகிறதே இல்லை. பிளாட் சம்மரி (கதைச் சுருக்கம்) வாசிச்சு அது பிடிக்கிற பட்சத்தில் பார்ப்பது வழக்கம். எந்த ஒரு படத்தைக் குறித்தும், எவ்வளவு கேள்விப்பட்டு இருந்தாலும், அதனை எந்த முன்முடிவோ, எதிர்ப்பார்ப்போ இல்லாம பார்ப்பதும் என் இயல்பு. இது அந்த படத்தோட நாம் தனிப்பட்டு விதத்துல உறவாடுறதுக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கு என்பதை என் சொந்த அனுபவத்துல நான் படங்கள் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உணர்ந்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமா சொல்லணும்னா, எனக்கு ஓய்வு கிடைக்கும் போது எந்தெந்த படத்தை பார்க்கணும் என நான் தேர்வு செய்வது கிடையாது. மாறா அந்த படங்கள் என்னை ஒரு பார்வையாளனா பாக்குறதுக்கு தேர்வு செய்யுறதா தான் நான் உணர்கிறேன். நல்ல சினிமாக்கள் பாக்குறதுக்கு மிக முக்கியமானது அது பாக்குற தருணத்துல நமக்கு இருக்குற மனநிலை என நான் நம்புறேன். சினிமாவை தீவிரமா காதலிக்கிற ஒருத்தனை ஒரு படமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். நாம செய்ய வேண்டியது எல்லாம் நல்ல படங்கள் குறித்து தேடி, வாசிச்சு அது பற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கிறது மட்டும் தான். பிறகு திறந்த மனசோட ஒரு படத்தை அணுகுறது.

மனிதர்களுக்கு இடையில வருகிற உறவுச் சிக்கல் குறித்தும், ஒரு தனி மனிதன் தன்னை சுத்தி இருக்குற உலகத்தோட எப்படி உறவாடுறான், அதன் விளைவாக அவன் எப்படிப்பட்டவனா மாறிப் போகிறான் என்பதை கதைக் களமாகக் கொண்ட  அல்லது இந்த அம்சத்தை அலசுற படங்கள் தான் என்னை பொதுவாகவே ஈர்க்கிற படங்களா இருக்குது என்பதை என்னோட பார்வை அனுபவத்தை அசை போட்டுப் பார்க்கும் போது விளங்கிக் கொள்கிறேன். அதனாலாயே இயல்பாவே பல சினிமா ஜானர்கள் (திரைப்பட வகைகள்) இருந்தாலும் எனக்கு டிராமா ஜானர் தான் மனசுக்கு நெருக்கமானதா இருக்கு.

பொதுவா மிகச் சமீபமா தான் நம்மில் பலருக்கும் ஓடிடி தளங்கள் அறிமுகமாகி – ரொம்ப குறிப்பா சொல்லணும்னா கொரோனா ஊரடங்கு காலத்துல – அதன் வழியா பலதரப்பட்ட சினிமாக்கள் நல்ல தரத்துடன் (நம்ம பாஷையில நல்ல பிரிண்ட்) பாக்குற வாய்ப்புகள் கிடச்சிருக்கு. ஓடிடி ஓனர்களும் அடிப்படையில வியாபாரிங்க தானே. அதனால கமர்ஷியல் சினிமாக்களை தான் அவங்க இணைய தள பக்கங்கள் முழுசும் நிறைஞ்சு இருக்க மாதிரி கவனமா பாத்துக்குறாங்க. பொதுவா மேலோட்டமாக இருக்குற வியாபார ரீதியிலான passive viewing வகை படங்கள் தான் பெரும்பாலானவுங்க தேர்ந்தெடுப்பாங்க. நமக்கு அதில் வேலை குறைவு என்பதால அதைத் தான் இயல்பாவே மனசு தேர்ந்தெடுக்கும். மேலும் களைப்பே இல்லாமல் தொடர்ச்சியா அதுமாதிரியான படங்களை தான் பார்க்க முடியும். இது மாதிரியான வெகுஜன சினிமாக்கள் மற்றும் டிவி சீரீஸ்களை அதிகம் பார்க்க வைக்கும் நோக்கில் தான் நல்ல படங்களை வேணும்னா நீயா தேடி பாத்துக்கோ என்பது போலத் தான் அவங்களோட இணையதள டிசைனே இருக்கு.

அதனால் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்க்க வாய்ப்பு இருக்கு என்றாலும், நம்ம கவனுத்துக்கு வராத படங்களை யாராவது கவனப்படுத்தினா நல்லா இருக்கும் எனத் தோணுது. நண்பர்களோட கதைக்கிறப்போ “ஏய் அந்த படம் பார்த்தியா? பிரைம்ல இருக்கு. நல்லா இருந்துச்சு என சொல்ற நண்பர்கிட்ட நாம உடனே “மறக்காம எனக்கு படத்தோட தலைப்பை மட்டும் டெக்ஸ்ட் பண்ணிடுப்பா. நான் பாத்துக்குறேன்.” எனச் சொல்கிறோம்.

திரைப்படங்கள் மட்டுமில்ல, எந்த ஒரு கலை இலக்கிய படைப்பும் ரொம்பவே ஜனநாயகமானது. இதெல்லாம் மட்டும் தான் உசத்தி மற்றதெல்லாம் மட்டம் எனச் சொல்லக் கூடிய அத்தாரிட்டி யாருக்கும் இல்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பார்வையாளரோடையும் ஒவ்வொரு விதத்தில் பேசுது. பார்வை அனுபவம் என்று எடுத்துக்கிறப்போ அவரோட அப்போதைய மனநிலை, அந்த படம் சொல்ல வருகிற விசயத்தை பத்தின அவரோட முன் அறிவு, பொதுவான அவரோட மெச்சூரிட்டி இது எல்லாமே பின்புலமாக இருக்கும் போது ஒரே மாதிரி ஒரே படத்தை எல்லாராலையும் உள்வாங்கிக்கவே முடியாது என்பதை நாம் புரிஞ்சுக்கலாம். இந்த இடத்தில தான் திரைப்படங்களை பார்ப்பதோடு நிறுத்திக்காம ஏன் அது பத்தி நமக்குள்ள உரையாடுவது ரொம்ப அவசியம் என்பதற்கான பதிலும் மறைந்து இருக்கு.

“நீ பார்த்த நல்ல படம் ஏதாவது இருந்தா சொல்லுய்யா! இன்னைக்கு நேரம் இருக்கு பார்க்கணும்” என நீ கேட்கிற அந்த நண்பனா நான் இருக்க விரும்புறேன். ஒரு படைப்பை மட்டும் ஒரு கட்டுரைக்கான மையப் பொருளா எடுத்துக்கிட்டு அது என் கூட என்ன பேசியது. அது ஏன் நல்ல படைப்பா இருக்கு என்பது குறித்த என்னோட  புரிதலை பகிர்ந்துக்கப் போறேன். நாம அனுபவிச்சு சந்தோஷப்பட்ட ஒரு நல்ல விசயத்தை நம்ம நண்பர்கள்கிட்ட “நண்பா! இது ரொம்ப நல்லா இருந்துச்சு. உனக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். டிரை பண்ணிப் பாரேன்”, என்று சொல்கிற அதே மனநிலையில் தான் ‘ரசிகனின் டைரி’ இருக்கும்.

இதில் நீங்க வாசிக்கிற ஒவ்வொரு கட்டுரையிலும் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு படத்தையும் நிச்சயம் ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் பார்க்கலாம். அடிப்படையா அதை மனசுல வச்சுத் தான் படங்களின் தேர்வே இருக்கும். மத்தபடி மொழி, ஜானர் என வேறு எந்த பேதமும் பார்க்காம எல்லா படங்களையும் கலவையா கவனத்தில் எடுத்துக்கப் போறேன். எந்த ஒரு கட்டுரையும் எடுத்துகிட்ட படத்தோட கதையை முழுமையா சொல்லவெ சொல்லாது. அது கட்டுரையை வாசிச்சிட்டு நீங்க அந்த படத்தைப் பார்த்தா அந்த பார்வை அனுபவத்தை சிதைச்சிடாம இருக்குற மாதிரி எழுதணும் என்பது தான் எண்ணம். ஒரு வேளை படத்தைப் பார்த்துட்டு கட்டுரையை வாசிக்கிறவங்களுக்கும் (அல்லது அந்த படத்தை முன்னரே பார்த்திருந்தாலும்) அசை போட ஏதாவது இருக்கும் படி பாத்துக்குறேன்.

ஆலிஸ் நுழைஞ்ச அற்புத உலகம் மாதிரி தான் சினிமாக்களின் உலகமும். ஒரு சுவாரசியமான பயணத்துக்கு தயாராவோம். இணைஞ்சே பயணிக்கலாம். எல்லாருக்கும் நல்வரவு! என் பேரன்பு.

என்றென்றும் அன்புடன்,

வருணன்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

  1. வணக்கம் சார்,
    சினிமா பார்க்கக் கூட நேரம் இல்லாத இந்த உலகத்தில் சினிமாவைப் பற்றி நீங்கள் எழுதியது மிகவும் அருமையாக இருக்கிறது மேலும் உங்கள் எழுத்து நடையை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button