
நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என் ஆபீஸ் முடிந்தவுடன் அந்த உணவகத்திற்கு நான் சென்றுவிடுவேன். அவன் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும் அவன் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஒரு காபியும், பஜ்ஜியும் சாப்பிட்டுவிட்டு,அருகிலிருந்த போட் கிளப் ரோட்டில், காதலர்களுக்காகவே அடர்ந்த மரங்களும், ஆள் அரவம் இல்லாத சாலைகளும், வெளியில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத பங்களாவாசிகளுமாக கட்டமைக்கப்பட்ட அந்த அமைதியான சுற்றுவட்டாரத்தில் நானும் அவனும் எண்ணற்ற கதைகளை பேசிக்கொண்டு நடப்போம். எங்களை சுற்றித்தான் அப்போது புவி இயங்கிக்கொண்டிருந்தது.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ரகசிய சந்திப்புகள் அநேக கிளுகிளுப்பை எங்கள் மனதில் ஏற்படுத்தியது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்களுக்கு உலகம் மிகவும் சிறியதாக தோன்றியது. “ஹே பட்டு, நம்ம யூ.கே போய் விம்பிள்டன்ல ஒரு டென்னிஸ் மேட்ச் சேர்ந்து பார்க்கணும். அந்த பச்சை புல் தரையில் வெள்ளை உடை அணிந்து விளையாடும் அந்த பிளேயர்ஸ உன்னோட சேர்ந்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிட்டுட்டே பார்க்கணும்,” என்று ராம் சொல்லும்போது என் மனம் அவனோடு விம்பிள்டன் பயணித்தது. “ராம், நம்ம அப்படியே லார்ட்ஸ் போய் அங்க கபில்தேவ் வேர்ல்ட் கப் வாங்கின எடத்தையும் பார்க்கணும்,” என்பேன் நான். “பார்த்தா போச்சு,” என்று என் கையை இறுக்கப்பிடித்தபடி அவன் நடப்பான். “அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு!” என்று அவ்வப்போது சினிமா பாடல் வரிகளை காதலுடன் பாடி என்னை அசத்துவான். ராம் மிகவும் அழகாக பாடக்கூடியவன். எனக்கு அவனை மிகவும் பிடித்துப் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ராமைப் பற்றிய நினைவுகளில் என் மனம் உயரே சிறகடித்து பறக்க, அலாரம் சத்தம் என்னை இயல்புக்கு இறக்கியது.
அப்போது காலை மணி ஐந்தரை. அருகில் ராம் கருப்பும் வெள்ளையுமாக சால்ட்-பெப்பர் பாணியில் சிகையுடன், இரண்டு நாள் சவரம் செய்யாத லேசான தாடியுடன், இளந்தொந்தியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இந்த பதினைந்து ஆண்டுகளில்தான் அவனிடம் எத்தனை மாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டே எழுந்தேன். அன்று சனிக்கிழமை, இருந்தும் குழந்தைகளுக்கு அரை நாள் பள்ளி இருந்தது. டிகாக்ஷன் இறங்குவதற்குள் வாசலில் கோலம் போட்டுவிட்டு, அன்று செய்யவேண்டிய வேலைகளை மனதில் பட்டியலிட்டேன். குழந்தைகளை கிளப்பிவிட்டு, இரண்டு லோடு மெஷினில் போட்டு துணியை உலர்த்த வேண்டும்.
இன்று சிறியவளுக்கு பள்ளியில் டேலண்ட் ஷோ இருக்கிறது, அதில் அவள் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாள்… அவளுக்கு மேக் அப் போட்டு, நடனத்திற்கென பிரத்யேக ஆடை அணிவித்து ஸ்கூல் பஸ்ஸில் அனுப்ப வேண்டும். அடுத்து ஒரு மணி நேரத்தில் நாங்களும் பள்ளிக்கு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவளை அழைத்துவர வேண்டும். பெரியவன் பஸ்ஸில் மதியம் வீட்டிற்கு வந்தவுடன் இருவருக்கும் மதிய உணவு கொடுத்துவிட்டு, அடுத்த வாரத்திற்கு தேவையான கறிகாய் வாங்கி ஃப்ரிட்ஜை நிரப்பிவிட்டு, மாலை சொந்தக்காரர் வீட்டு திருமண வரவேற்ப்பிற்குச் செல்ல வேண்டும் என பட்டியலிடும்போதே தலை லேசாகச் சுற்றியது எனக்கு.
நானும் ராமும் அடித்து கட்டிக்கொண்டு காலை பள்ளிக்குச் சென்றபோது என் மகளின் டான்ஸ் புரோகிராம் முடிந்திருந்தது. “அம்மா, நான் எப்படி ஆடினேன்?” என்று அவள் உற்சாகமாக கேட்டபோது, “சூப்பர்! நீதான் பெஸ்ட்டா ஆடின, உன் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்து போய் அம்மா வீடியோ கூட எடுக்கல,” என்று வாய்கூசாமல் அவளிடம் பொய் சொன்ன போது எனக்கு குற்றஉணர்ச்சி கூட இருக்கவில்லை. வீட்டுக்கு போய் சிறிது படுத்தால் தேவலை என்று அயர்ச்சிதான் மேலோங்கி இருந்தது.
“கீதா, தூங்கிடாத, கறிகாய் எடுத்து பிரிச்சு வெச்சுடும்மா. இல்லாட்டி, போன வாரம் மாதிரி வாடி போயிடும்,” என்று நான் துணி உலர்த்திய போது ராம் கூறினான். அந்த இரண்டு கட்டைப் பைகளை பார்த்தபோது எரிச்சலாக வந்தது. பத்துரூபாய்க்கு மூன்று புதினா கட்டு வாங்காமல் ராம் வந்திருக்க வேண்டுமே, என்று பயந்து கொண்டே பையை திறப்பதற்குள், “புதினா ரொம்ப சீப், மூணு கட்டு வாங்கிட்டேன், தொகையல் பண்ணுன்ன,” என்றான் ராம். அடுத்த ஒரு மணி நேரம் பட்டாணி உரிப்பதிலும், புதினா ஆய்வதிலும் கடுப்புடன் நகர்ந்தது. சனிக்கிழமை மாலை திருமண வரவேற்பிலும், ஞாயிறு பகல் பொழுது இட்லி மாவு அரைத்து, கக்கூஸ் தேய்த்து, விசேஷ சமையல் செய்து பிஸியாக நகர்ந்தது எனக்கு. ராமும் மொத்தவிலை மளிகைக்கடை செல்வது, ஸ்டேஷனரி கடை செல்வது, குழந்தைகளுக்கு புராஜக்ட் ஒர்க் செய்ய உதவுவது, பெரியவனுக்கு கணக்கு சொல்லிக் கொடுப்பது, வாகன இன்சூரன்ஸ் ரெனியூ பண்ணுவது என்று எங்களின் ஹனுமான் வால் போல நீண்டு கிடக்கும் வேலைப்பட்டியலில் சிலவற்றை முடித்தான்.
“ராம், ரொம்ப டயர்டா இருக்கு, டின்னர் வெளியில சாப்பிடலாமா?” என்று நான் கேட்டேன். ‘சரி’ என்று உடனே ஒப்புக்கொண்ட அவன் நாங்கள் வழக்கமாகச் செல்லும் உணவகம் ஒன்றுக்கு வண்டியைச் செலுத்தினான். குழந்தைகள் ஸ்டார்டர், சூப் என்று ஆர்டர் செய்ய, நான் வயிற்றுக்கு இதமாக மினி சாம்பார் இட்லி ஆர்டர் செய்து விட்டு எனது திறன் பேசியில் மூழ்கினேன். என் மனதை புரிந்துகொண்டது போல காதல் ஜோடி ஒன்று உணவகத்தில் கொஞ்சிக் குலாவுவது போல ஓர் வீடியோவை எனக்கு காண்பித்தது அது. எனக்கு திருமணத்திற்கு முன் நான் ராமோடு உணவகத்தில் கொஞ்சியது நினைவிற்கு வந்தது. எதிர் பக்கம் உட்கார்ந்திருந்த ராமின் கால்களை ஆசையாக எனது பாதங்களை கொண்டு வருடினேன். “எதுக்கு என்ன காலால தேய்க்கற?” என்று குழந்தைகள் முன்னிலையில் என்னைத் திட்டினான். எனது கால்களை இழுத்து சுருக்கிக்கொண்டேன். என் ஆசைகளையும் சேர்த்துத்தான்.
சமூக வலைத்தளத்தில் என் பிரெண்டு ஒருத்தி வெளிநாட்டில் அவள் கணவனோடு ரம்யமான ஓர் சூழலில் போட்டிங் செல்வது போல ஒரு படம் போட்டிருந்தாள். என் மனம் அந்த சூழலில் நானும் ராமும் போட்டிங் செல்வது போல கற்பனை செய்தது. கற்பனைதானே, அப்போதாவது ஒரு நல்ல பாட்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல எனக்கு தோணக் கூடாதோ? எனக்கு முதலில் தோணின பாட்டு, “ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்…” ‘அடச் சே, அதுலதான் ரஜினி கொலை பண்ணிடுவானே?’ என்று, வேற பாட்டு யோசிச்சா, “ஆஹா இன்ப நிலாவினிலேன்னு,” அபிமன்யூ காலத்து பாடல்… எப்படி இருக்கு பாருங்க என் நிலைமை? விம்பிள்டன் எங்க?… கற்பனை போட்டிங் எங்க?… எங்கள் காதல் வாழ்கையை நினைத்து பெருமூச்சு விட்டுக்கிட்டே அடுத்த நாள் திரும்ப ஆபீஸ் ஓடனுமேன்னு எரிச்சலுடன் நான் படுத்த போது, “என்ன டல்லா இருக்க?” என்று பாசமாக கேட்டுக்கொண்டு என் கையை பிடித்தான் ராம்.
“அட போ ராம், நம்ம ரெண்டு பேரும் பொழைக்க தெரியாதவங்க! கல்யாணம் பண்ணிக்கும் போது எத்தனை ஆசை? எவ்வளவோ பிளான் போட்டோம்? கடைசில நம்ம போற வேகேஷன் எல்லாம் மளிகை கடையும், கறிகாய் கடையும், ஸ்கூல் ஷோஸ் அப்புறம் சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்கள் தான். இப்போ எல்லாம் DINK (Double Income No Kids) அப்டீனு எல்லாம் கப்பிள்ஸ் யோசிக்கறாங்க தெரியுமா? அவங்க எதிர்காலத்தை பயங்கரமா பிளான் பண்ணறாங்க. நம்ம முதல்ல குழந்தைகளை பெத்துகிட்டு, அப்புறம் அதுங்கள வளர்க்க திக்குமுக்காடி, இப்போதான் வீட்டுக் கடன், வண்டிக் கடன்னு எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டிருக்கோம்,” என்றேன் நான்.
இதற்குள் படுக்கையறைக் கதவை திறந்துகொண்டு ஓர் உருவம் எங்களை நோக்கி நடந்து வந்தது. “அம்மா! எனக்கு பயம்மா இருக்கு, ஸ்கூல்ல என் பெஸ்ட் பிரெண்டோட சண்டை போட்டுட்டேன், நாளைக்கு எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்க மாட்டாங்க…” என்று சினுங்கிக்கொண்டே வந்தாள் சிறியவள். “என்ன குட்டி, இதெல்லாம் ஒரு பிரச்சணையா? பெஸ்ட் ப்ரெண்ட் உன் மேல கோபமாவே இருக்க மாட்டா, உங்க சண்டைய மறந்து போயிருப்பா… அதோட, மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் உன் ஃப்ரெண்ட்ஸ்தான், பயப்பட கூடாது,” என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டேன்.
“நான் உன் பக்கத்துல படுத்துக்கட்டுமா பிளீஸ்…” என்று கெஞ்சலாக என்னிடம் கேட்டாள். “வா, படுத்துக்கோ…” என்று எனக்கும், ராமிற்கும் நடுவில் அவளுக்கு படுக்க இடம் கொடுத்தேன். என்னை பார்த்து ராம் ‘இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கு?’ என்பதைப் போல பொருள் பொதிந்த புன்னகை பூத்தான். என் மனதில், “ஒரு தெய்வம் தந்த பூவே!” என்ற பாடல் வரி ஓடியது.