மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து உருவாகும் பல ஆறுகளில் ஒரு ஆறு அது. ஆற்றின் இருபுறமும் பசுமையான வனங்கள் நிறைந்திருந்தன. வனங்களில் உண்ணத்தகுந்த பழங்கள் காய்க்கும் மரங்களும் நிறைந்திருந்தன. செடி கொடி வகைகளும் புதர்களும் கூட செழித்து பூத்தே காணப்பட்டன. வளமான வனங்களில் விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன எனச் சொல்லவும் வேண்டுமோ?
ஆற்றின் ஒரு பகுதியில் முதலையொன்று நெடுங்காலமாக வாழ்ந்து வந்தது. அந்த முதலையின் பெயர் மீலு. நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து பழக்கப்பட்ட மீலு, மற்ற முதலைகள் போல மாமிச உணவுகளை உட்கொள்வதில்லை. தனது பசிக்கு பழங்களையே உண்டு வாழ்ந்து வந்தது. பழங்கள் காய்க்கும் மரங்களோ வனங்களிலேயே இருந்தது, மீலு வசிக்கும் நீரில் இல்லை. இதன் காரணமாக மீலு தான் வாழ்ந்த ஆற்றுப்பகுதியிலேயே ஒரு பணியைச் செய்து வந்தது. அதாவது, ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் செல்ல பல விலங்குகள் வருவதுண்டு. அவர்களால் ஆற்றை நீந்திக் கடக்க இயலாது. மீலு அவர்களைத் தன் நீண்ட, தடித்த, உறுதியான முதுகில் ஏற்றிச்சென்று மறு கரையில் பத்திரமாக இறக்கி விடும். இதற்குப் பிரதிபலனாகத் தான் கரை சேர்த்த விலங்குகளிடமிருந்து பழங்களைப் பெற்றுக் கொள்ளும். அந்தப் பழங்களையே தன் பசிக்கு உணவாகக் கொள்ளும்.
ஒரு நாள் வனத்தில் வாழ்ந்த குரங்கு ஒன்று மீலு வாழ்ந்த ஆற்றின் கரைக்கு வந்தது. அந்தக் குரங்கின் பெயர் மந்து. மலைகளைத் தாண்டி நடந்து வரும் பாதையில் கல் ஒன்று இடறியதால் மந்துவின் வலது கால் பெரு விரலில் காயம்பட்டு ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. கால் வலியின் காரணமாக மந்து சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணி ஆற்றின் கரையில் அமர்ந்தது. வலியை மறக்க ஆற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சலசலவென்று ஓடும் தெள்ளிய நீரில் மீன்கள் நீந்திச்செல்வதைக் கண்டு ரசித்தது. மீன்களில் சில பெரிதாகவும் சில சிறிதாகவும் இருந்தன. மீன்களையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தது மந்து. இதனைக் கண்ட மீலு மெல்ல ஊர்ந்து மந்து அமர்ந்திருந்த கரையோரம் வந்தது. மந்துவைப் பார்த்து, “நீ யார்? இங்கே என்ன செய்ற?” என்றது.
“என் பேர் மந்து, இந்த மீனெல்லாம் ரொம்ப அழகா இருக்கு, அதான் பார்த்துக்கிட்டிருக்கேன்” என்று பதிலளித்தது மந்து.
“இதென்ன அதிசயம்? அக்கரையில வண்ண வண்ண மீன்கள் இருக்கு. இதைவிட ரொம்ப அழகா இருக்கும்” என்றது மீலு.
மீலு சொன்னதைக் கேட்டதும் அக்கரையில் இருக்கும் வண்ண மீன்களைக் காண மந்து ஆசை கொண்டது. உடனே நீலுவிடம், “ஆனா, என்னால அக்கரைக்கு போக முடியாதே …” என்றது.
“ஏன் ?” என்று கேட்டது மீலு.
“நடந்து வரும் வழில என் கால்ல காயம் பட்டுருச்சு, இதோ பார்” என்று கூறி ரத்தம் வழிந்த காலைக் காட்டியது. “இந்த வலியோடு என்னால நீந்தி அக்கரைக்கு போக முடியாது” என்று ஏக்கத்துடன் சொன்னது மந்து.
“அட … இவ்வளவுதானா … என்னுடைய முதுகைப் பார். எவ்வளவு நீளமாவும் உறுதியாவும் இருக்கு. நீ என் முதுகில ஏறிக்கொ நான் உன்னை அக்கரைக்கு கொண்டு போய் விடறேன்” என்று மீலு சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டது மந்து.
“ஓ… நன்றி … சரி உன் பேர் என்ன? உன்னை எப்படி கூப்பிடறது?” என்று கேட்டது மந்து.
“என் பேர் மீலு…” என்று மீலு தன் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீலுவின் முதுகில் தாவி ஏற ஆயத்தமானது மந்து.
தன் முதுகில் ஏற வந்த மந்துவிடம், “கொஞ்சம் பொறு … உன்னை நான் அக்கரையில் கொண்டு விடணும்னா நீ எனக்கு ஒண்ணு செய்யணும் …”
“என்ன அது?”
“எனக்கு நீ ஏதாவது பழம் தரணும், நான் பசிக்கு பழங்கள மட்டும்தான் சாப்பிடுவேன்.”
“இப்போ என்கிட்டே பழங்கள் எதுவும் இல்லையே.”
“வனத்திலதான் எவ்வளவோ பழங்கள் காய்க்குற மரங்கள் இருக்கே, நீ போய் அதுல பறிச்சிகிட்டு வரலாமே” என்று மந்துவுக்கு யோசனை சொன்னது மீலு.
“நல்ல யோசனைதான் ஆனால், காயம்பட்ட காலுடன் ரொம்ப தூரம் என்னால் நடக்க முடியாதே …” என்று வருத்தப்பட்டுக்கொண்டே தன்னைச் சுற்றி அருகில் ஏதேனும் பழ மரங்கள் தென்படுகின்றதா என்று பார்வையைச் செலுத்தியது. சற்று தொலைவில் செவ்வாழை மரமொன்று அதனருகில் நிறைய வாழைக் கன்றுகளோடு நின்றுகொண்டிருந்ததைக் கண்டது. மரமும் கனிந்த பழங்களைத் தாங்கிக்கொண்டு நின்றது. கொத்தாகக் குலையில் தொங்கிய செவ்வாழைகளைக் கண்ட மந்துவுக்கும் நாவில் நீர் ஊறியது. “சரி, இரு.. பக்கத்தில் செவ்வாழை இருக்கு. பறிச்சிகிட்டு வரேன்” என்று கூறி மரத்தை நோக்கி காயம் பட்ட காலைத் தாங்கித் தாங்கி நடந்து சென்றது மந்து. குலையின் அடிப்பகுதியிலிருந்து ஒரு பழத்தைப் பறித்த மந்து, அதன் தோலை உரித்து வாயில் வைத்து ருசித்தது. பின்னர் அதே குலையிலிருந்து இரண்டு செவ்வாழைகளைப் பறித்துக்கொண்டு ஆற்றின் கரைக்குத் திரும்பியது.
மந்து வருவதைக் கண்ட மீலு, “என்ன பழம் கிடைச்சுதா?”
“இதோ செவ்வாழை கொண்டு வந்திருக்கேன். இப்போ என்னை அக்கரையில கொண்டுபோய் விடுவியா?” என்று கேட்டது மந்து.
“ம்…. சரி வா. என் முதுகில் ஏறிக்கோ” என்று மந்து தன் முதுகில் ஏறுவதற்குத் தோதாக நீரிலிருந்து மேலேறிக் கரையில் வந்து நின்றது மீலு. மீலுவின் முதுகில் இரண்டு செவ்வாழைகளோடு ஏறிக்கொண்டது மந்து. மறு கரைக்குப் புறப்பட்டனர் இருவரும்.
மிகவும் கவனமாக மந்துவை மறு கரையில் கொண்டு சேர்த்தது மீலு. கரையில் இறங்கிய மந்து மீலுவுக்கு நன்றி சொன்னது. அங்கே நீந்திச் செல்லும் பல வண்ண மீன்களைக்கண்டதும் “ஆமா மீலு … நீ சொன்னது உண்மை இந்த கரையில நிறைய வண்ண மீன்கள் இருக்கு” என்று வாய்பிளந்து அதிசயித்தது மந்து.
“சரி சரி … அப்படியே மறந்துட்டு பழத்தை கொண்டு போயிடாத. அதைக் கொடு” என்று கேட்டு இரண்டு செவ்வாழைகளையும் மந்துவிடமிருந்து பெற்றுக்கொண்டது மீலு. சற்று நேரத்திற்குப் பின் மீலுவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு காயம்பட்ட காலுடன் மெல்ல மெல்ல நடந்து வனத்திற்குள் செல்ல முற்பட்டது மந்து.
“என்ன மந்து, மீண்டும் நாம புறப்பட்ட அக்கரைக்கு போக வேண்டாமா?” என்று கேட்டது மீலு.
“இல்லை … உன் உதவியால் இந்த பக்கம் வந்துட்டேன். இந்த வனத்தில் இருக்கும் என் சொந்தக்காரங்களை பார்த்து நலம் விசாரிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரேன்” என்று சொல்லிப் புறப்பட்டது மந்து.
காலில் ஏற்பட்ட காயத்தால் மெல்ல நடந்து சென்ற மந்துவிற்கு செல்லும் வழியில் களைப்பு மேலிட்டது, பசி எடுத்தது, கனி காய்த்த மரங்கள் எதுவும் தென்படவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. மீலுவிடம் கொடுத்த இரண்டு பழங்கள் நினைவில் வந்தது. “ச்சே … இந்த மீலு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு ஒரு பழத்தை எனக்குக் குடுத்திருந்தா இப்போ எவ்வளவு உதவியா இருக்கும்?” என்று எண்ணியது. “நான் பழங்களைத் தேடிப் பறித்து வந்தேன், இந்த மீலு நோகாமல் ஒரு கரையிலிருந்து மறு கரையில் என்னை அழைத்து வந்து இறக்கிவிட்டு அப்படியே அந்தப் பழங்களை வாங்கிக்கொண்டதே … இப்படித்தானே மற்ற விலங்குகளிடமும் பழங்கள் பெற்றுக்கொள்ளும். விலங்குகள் அங்கும் இங்கும் அலைந்து பழத்தை கொண்டு வந்து கொடுக்க, இந்த மீலு நோகாமல் ஆற்றில் அக்கரைக்கும் இக்கரைக்கும் மட்டும் பயணித்துப் பழங்களைப் பெற்றுக் கொள்கிறதே” என்று யோசித்த வண்ணம் நடந்து சென்று கொண்டிருந்தது மந்து. பலத்த சோர்வுடன் ஒரு உறவினரை வழியில் சந்தித்து நலம் விசாரித்தது. உறவினரும் மந்துவின் தேவையறிந்து உணவு கொடுத்து உபசரிக்க, “நல்ல நேரத்தில் உணவளித்து உயிர் காப்பாற்றினாய்” என்று உறவினருக்கு நன்றி சொல்லிவிட்டு மேலும் சில நட்புகளைச் சந்திக்க வனத்தில் நடையைத் தொடர்ந்தது மந்து.
சொன்னது போல இரண்டு நாள்கள் சில உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தபின் ஆற்றின் கரைக்கு வந்தது மந்து. மந்து வீர நடை போட்டு வருவதைக் கண்டது மீலு.
“என்ன மந்து … காலில் ஏற்பட்ட காயம் ஆறிடுச்சா?”
“ஆமா … இதோ பார். இப்போ ரத்தம் வரலை” என்று தனது காயம் ஆறிய காலை மீலுவிடம் காண்பித்து மகிழ்ந்தது மந்து.
“ஓ… மகிழ்ச்சி, சரி வா. உன்னை அக்கரையில் கொண்டு போய் விடுறேன், என் முதுகில் ஏறிக்கோ” என்று மந்துவை அழைத்தது மீலு.
“ஏய் … இப்போதான் எனக்கு கால் நல்லா ஆயிடுச்சே … நானே நீந்தியும் நடந்தும் அக்கரைக்கு போயிடுவேன்” என்றது மந்து.
“ஓ … அதுவும் சரிதான்” என்று கூறிவிட்டு வேறு விலங்குகள் யாரும் அக்கரை செல்ல வருகிறார்களா என்று பாதையை நோக்கியது மீலு.
மந்துவும் மீலுவைப்போலவே கரைக்கு யாரும் வருகிறார்களா என்று பாதையை நோக்கியது.
“என்ன மந்து? யாருக்காக காத்திருக்க?”
“இல்ல … நானும் உன்னைப்போலவே விலங்குகளை மறு கரைக்கு அழைத்துச் சென்று பதிலுக்குப் பழம் வாங்கலாம்னு யோசிக்கறேன்”
“உன்னால் அது முடியுமா?” என்று கேட்டது மீலு.
“ஏன் முடியாது? முயல்கள், பூனைகள், மான்கள் இன்னும் வேற விலங்குகள் யார் வந்தாலும் அவங்களை என் நீளமான கைகளால தலைக்கு மேல தூக்கிக்கிட்டு அல்லது முதுகுல வச்சிக்கிட்டு என்னால போக முடியும்” என்று மீலுவுக்கு பதில் சொன்னது மந்து.
“ஆமா மந்து … அதுவும் நல்ல யோசனை … நான் ஒரு விலங்கை அழைத்துச் சென்றால், நீயும் ஒரு விலங்கை அழைத்துச் செல்லலாம். சில நேரம் ஒருவருக்கொருவர் துணையாக நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டே கூட ஆத்தைக் கடக்கலாம்” என்று சொன்னது மீலு.
‘ம் … ம் … நோகாம இங்கயும் அங்கேயும் போயிட்டு பழங்களை வாங்குறியா … இனிமே நானும் உனக்கு போட்டியா அதையே செஞ்சு நோகாம பழம் சாப்பிடப்போறேன் பாரு’ என்று மீலுவைப் பார்த்துக்கொண்டே தன் மனதினுள் கணக்குப்போட்டது மந்து.
“என்ன மந்து … என்னை அப்படி பாக்குற?”
“ஒண்ணும் இல்ல … மேல பாத்தியா மேகம் இருட்டிக்கிட்டு வருது … மழை வரும் போல தெரியுது” என்று பேச்சை மாற்றியது மந்து.
இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது அங்கே சோனு, மோனு என்று இரண்டு முயல்கள் வந்து நின்றன.
“என்ன சோனு நல்லாருக்கியா? பார்த்து ரொம்பநாள் ஆச்சு” என்றது மீலு.
“இவங்களை ஏற்கனவே உனக்கு தெரியுமா?” என்று கேட்டது மந்து.
“ம்… நல்லா தெரியும், இது சோனு, அது மோனு” என்று இருவரையும் மந்துவிற்கு அறிமுகம் செய்துவைத்தது மீலு. பின்னர் சோனுவைப் பார்த்து, “என்ன, அக்கரைக்குப் போகணுமா?” என்றது.
“ஆமா” என்று பதிலளித்தது சோனு.
“இந்த முறை நீங்க ரெண்டுபேருமே ஒண்ணா அக்கரைக்குப் போகலாம்” என்று சோனுவிடம் புதுத்தகவல் சொன்னது மீலு.
“அதெப்படி? நீ எப்பவும் ஒருத்தரை அக்கரையில விட்டுட்டு வந்து அடுத்த ஆளை கூட்டிட்டு மீண்டும் அக்கரைக்கு போவ. அதுதானே வழக்கம்?” என்று கேட்டது சோனு.
“ஆமா. ஆனா, இப்போ எனக்கு புது நண்பன் கிடைச்சிருக்கான்” என்று கூறி மந்துவைச் சுட்டிக்காட்டி, “இவன் பேர் மந்து. இனிமே இவனும் என்னைப்போலவே அக்கரைக்கு விலங்குகளை அழைச்சுக்கிட்டு போவான். எனக்கு குடுக்குற மாதிரியே அவனுக்கும் நீங்க பழம் கொடுக்கணும். வச்சிருக்கீங்களா?” என்றது மீலு.
“இதோ” என்று சோனு, மோனு இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த மாம்பழங்களைக் காட்டினர்.
“சோனு … வா, என் முதுகில் ஏறிக்கோ” என்று சோனுவைத் தன் முதுகில் ஏறச்சொன்னது மீலு.
“அப்போ, நான் மந்துகூட வரணுமா, அவன் என்னை பத்திரமா கொண்டுவந்து விட்டுடுவானா” என்று சந்தேகமாக கேட்டது மோனு.
“பயப்படாதே. தைரியமா வா” என்று கூறித் தன் நீண்ட கரங்களால் மோனுவைத் தூக்கிக்கொண்டது மந்து.
மீலு, மந்து இருவரும் சோனுவையும் மோனுவையும் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினர்.
கருத்திருந்த மேகம் மழை பொழியத் தொடங்கியது. மெலிதாகத் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமாகப் பெய்யத் தொடங்கியது. காற்றும் வேகமாக அடித்தது. மீலுவிற்கு ஆற்றுப்பகுதி மிகவும் பழக்கமான இடமென்பதால் கனத்த மழையும் காற்றும் அதற்கு சாதாரணமாகவே இருந்தது. கவனமுடன் சோனுவை முதுகில் சுமந்துகொண்டு ஆற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆனால், மந்துவிற்கு ஆற்றுப்பகுதி பழக்கமில்லாத இடம். சுமையோடு நடக்கும்போது தடுமாறியது. நீரின் ஓட்டத்தைச் சமாளிக்க இயலவில்லை. காற்றும் மழையும் மந்துவிற்கு அச்சத்தைக் கொடுத்தது. நீரில் தானும் சிக்கி மோனுவையும் சிக்கவைத்து விடுவோமோ அன்று அஞ்சியது. வேகமாகச் செல்லும் ஆற்றுநீரின் போக்கு மந்துவின் கால்களைத் தன்போக்கிற்கு இழுத்தது. நடக்க இயலாமல் தள்ளாடியது மந்து.
“மந்து, ஏன் தள்ளாடுற? கவனமா காலை ஊன்றி நட” என்று அறிவுரை கூறியது மீலு, மேலும், “ரொம்ப தள்ளிப் போகாத … அந்த எடத்துல பள்ளம் இருக்கும்” என்று ஆற்றில் மேடு பள்ளங்களை மந்துவிற்கு எடுத்துச் சொன்னது மீலு.
தன்னை ஆற்றில் விட்டுவிடப்போகிறது மந்து என்று அச்சத்தில் இதயம் படபடக்க கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டது மோனு. மோனு நினைத்தபடியே தண்ணீருக்குள் தள்ளாடி பள்ளத்துக்குள் காலை விட்டது மந்து. கைகளில் சுமையோடு நீரோட்டத்தை சமாளிக்க இயலாமல் விழுந்தது மந்து. மந்துவின் கைகளிலிருந்து மோனுவும் நழுவி ஆற்றில் விழப்போனது. நழுவி விழுந்த மோனுவின் காதுகளை விருட்டென தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டது மந்து. மந்து பள்ளத்திலிருந்து மேலெழ முயற்சி செய்து கொண்டிருந்தபோது மீலு, மந்துவின் நிலையைக் கண்டது. உடனடியாகச் சிந்தித்தது. தனது நீளமான வால் பகுதியால் மந்துவை வளைத்துப் பிடித்தது மீலு. “மந்து, மோனுவை மட்டும் கெட்டியா பிடிச்சுக்கோ. நான் உன்னை கரைக்கு இழுத்துட்டு போயிடுறேன்” என்று கூறியது மீலு. பலத்த காற்று மழையில், தன் முதுகில் சோனுவைச் சுமந்து கொண்டும், வால்பகுதியில் மந்துவை வளைத்துப் பிடித்துக் கொண்டும் கரைக்கு வந்து சேர்ந்தது மீலு.
உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் கரையில் துள்ளிக்குதித்தது மோனு. சோனு, மோனு இருவரும் மந்து மற்றும் மீலுவிடம் நன்றி சொல்லிப் பழத்தை நீட்டினர்.
மோனு நீட்டிய பழத்தை வாங்க மறுத்தது மந்து. “வேண்டாம் மோனு, இதை மீலுவிடமே கொடுத்துடு. மீலு மட்டும் இல்லன்னா உன் நிலையும் என் நிலையும் என்னவாகியிருக்கும்னு நெனச்சு பாக்கவே முடியல” என்று கூறியது மந்து.
மழையும் காற்றும் சுத்தமாக நின்றிருந்தது. சோனு, மோனு இருவரும் விடைபெற்றுப் போனதும் மந்து மீலுவை நோக்கியது, “மீலு, நானும் வனத்துக்குப் போறேன், உன்னோட நட்புக்கு நன்றி” என்று சொன்னது.
“என்ன ஆச்சு மந்து, கரையிலே இருந்து விலங்குகளை மறு கரைக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னியே” என்று கேட்டது மீலு.
“இல்ல … இன்னிக்கு நடந்ததை பார்த்தல்ல … இந்த வேலை உனக்குத்தான் பழக்கமானது. நான் ஆற்றைப்பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சிக்கணும். அவசரப்பட்டு என்னையும் சிரமப்படுத்தி மத்தவுங்களையும் காயப்படுத்தக் கூடாது. எனக்கு நல்லா தெரிஞ்ச வேலை மரத்துக்கு மரம் தாவுறது. யாருக்காவது மரம் தாவுற உதவி தேவைப்பட்டா அதை செஞ்சு கொடுத்து நான் பழம் வாங்கிக்குவேன்” என்று கூறி வனத்திற்குள் துள்ளிப் பாய்ந்தது மந்து. துள்ளியோடும் மந்துவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தது மீலு.