
“இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கதைக்கருவை முன்னதாக சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பது நல்லது.”
-தி சான் பிரான்சிஸ்கோ சிரானிக்கிள்
என்ற சான் பிரான்சிஸ்கோவின் கருத்தின்படி இந்த புத்தகத்தை பொறுத்தவரையில் கதைக்கருவை முன்னதாக சொல்லிவிடுவது என்பது கதையின் விறுவிறுப்பில் ஒரு துடிப்பின் வேகத்தை அடங்கச்செய்வது போன்றது. அதனால் அதன் சுவாரஸ்யம் குறையாத வகையில் இந்த விமர்சனம் நகரும். இந்த நூல் பல உண்மையான சம்பவங்களின் கோர்வை என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும். உண்மையான சம்பவங்கள் பலநேரங்களில் சலிப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், டான் பிரவுன் அதை திகிலான கதை நகர்வுடன், மொழி நடையுடன் சொல்வதில் வெற்றி பெற்றுள்ளார். இன்றைய நிலவரப்படி உலகில் அதிகமாக விற்பனையாகும் நூல்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகின்றது. அதில் காணப்படுகின்ற வரலாற்று திகில்களே அவை அதிகளவில் வாசகர்களால் ஈர்க்கப்பட காரணமாகியது .
இயேசு என்ற மனிதர் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக இருந்தார். அவர் பிறந்த பின்னரே வரலாறு இரண்டாகப் பிரிகிறது. கிறிஸ்துவுக்கு முன் (கி.மு), கிறிஸ்துவுக்கு பின் (கி. பி) இரண்டிலும் அந்த மனிதர் சர்ச்சைக்கு உரியவராக மாறினார். அவரை வைத்து கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என்ற மூன்று மதத்தவர்களும் வரலாற்றில் இடையறாது இரத்தப்பசியாறிக்கொண்டனர். வரலாற்றில் கடவுளின் தேவதூதன் என்று தன்னை அழைத்துக்கொண்ட இயேசுவின் வாழ்க்கை பல இரகசியங்களை, மர்மங்களை உள்ளடக்கியது. அந்த தேவதூதனின் வாழ்வில் நடந்த சில மர்மங்களைப்பற்றிய இரகசியங்களை அறிந்த ஒரு குழு இருந்தது. அது வரலாற்றில் அந்த இரகசியங்களை போற்றிப் பாதுகாத்தது. அதுதான் சியான் துறவு மடம். இது 1099-இல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
1975-இல் பெரிஸ் பிபிலியோதிக் நேஷனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டுத்தோலினால் எழுதப்பட்டிருந்த “லெஸ் டோஸியர் ரகசியங்கள்” என்பவற்றில் அதுபற்றிய இரகசியங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் நூற்றாண்டுகளாக மிக முக்கியமானவர்கள் இரகசியமான முறையில் உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். அதில் சர். ஐசக் நியூட்டன், பொட்டிசெலி, விக்டர் ஹியூகோ, லியானார்டோ டாவின்சி என பல பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் டாவின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் ஒரு சில வெறுமனே ஓவியங்கள் அல்ல அது இயேசுவினுடைய வாழ்வு பற்றிய இரகசிய சங்கேதங்கள். அந்த இரகசியங்கள் தெரிந்த குழு அங்கத்தவர்கள் அதைக் காப்பாற்றுகிறார்கள். அதற்கு எதிரான குழு அந்த இரகசியத்தையும், அந்த இரகசியம் தெரிந்த சியான் துறவு மட உறுப்பினர்களையும் தேடித்தேடி கொலை செய்கிறார்கள். இப்படித்தான் கதை நகர்கிறது. அந்த எதிர் அமைப்பு பற்றி உண்மையில் பல திகிலான கதைகள் தெரிய வந்திருந்தன. அதுவொரு ஆழ்ந்த கத்தோலிக்க பிரிவு இயக்கம் என்றும், அதன் தலைமை சமயகுரு பதவியான “ஓபஸ் டெய்” பதவிக்கு வருபவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. மூளைச்சலவை, பலவந்தப்படுத்துதல், பெரும் அபாயகரமான பயிற்சியான உடலை அவமானப்படுத்துதல் என்பன நிகழ்வதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான உண்மையான தகவல்களுடன் புனையப்பட்ட ஒரு விறுவிறுப்பான நாவலே டாவின்சி கோட்.
பாரிஸின் மிக முக்கியமான லோவ்ரி மியூசியத்தில் ஒரு கொலை நடக்கிறது. லோவ்ரி மியூஸியத்தின் பிரதான பாதுகாப்பாளர் ஜாக்குவஸ் சோனியரை மியூஸியத்தின் மறைமுக வாயிலில் இருந்தபடி கரிய நிழலுருவம் ஒன்று தாக்குதலை நடத்தி, கோட்டினுள் இருந்து துப்பாக்கியை உருவி, “எங்கேயும் ஓடக்கூடாது. இப்போது சொல், அது எங்கே உள்ளது..சொல்” என்கிறது.
திக்கித் திணறிய சோனியர் “நீ கேட்பது என்னவென்றே எனக்குப் புரியவில்லை..” என்கிறார்.
மீண்டும் அந்த மர்மக் கொலையாளி உறுதியாக, மிகவும் தெளிவாக இப்படி கேட்கிறான். ” பொய் சொல்கிறாய்”
“உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை நீயும் உன் உடன்பிறப்பு தோழர்களும் வைத்திருக்கிறீர்கள்..”
“இன்றிரவு அது நிஜமான உரிமையாளரிடம் சேர்ந்துவிடும். அது எங்கே ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது என நீ சொன்னால் உயிர் வாழ்வாய். பின்னர் அந்தக் கொலையாளி சோனியரின் தலையில் குறிவைத்தப்படி,
“நீ உயிர் விடுவதற்கு இது என்ன அவ்வளவு பெரிய இரகசியமா?” எனக்கேட்டவாறு துப்பாக்கியால் தலையை அழுத்துகிறான். எல்லாமே கொலையாளிக்கு தெரிந்திருக்கிறது. அத்தோடு இனி தன்னால் இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று உணர்ந்த சோனியர் முன்னம் பலமுறை இவ்வாறு நேர்ந்தால் என்ன சொல்வது என்று தங்களுக்குள் பரிட்சித்து பார்த்த வார்த்தைகளை ஒருவார்த்தை தவறாது இப்படி ஒப்புவிப்பார்.
“பொறுமை, உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் சொல்கிறேன்……..”
இரகசியத்தை பாதுகாக்கிற உறுப்பினர்களை கண்டுபிடித்து கொலை செய்கிற கொலையாளிக்கு சோனியர் சொல்வது பலமுறை பயிற்சி செய்யப்பட்ட பொய்கள் என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் இந்த இரகசியக் குழுவின் மொத்தம் மூன்று நபர்களை கொலை செய்த பின்னரே கொலையாளி இங்கு வந்திருந்தான். அவர்களும் இறப்பதற்கு முன்னர் இதே வார்த்தைகளைத்தான் உச்சரித்திருந்தனர். கொலையாளிக்கு சிரிப்பாக இருந்தது.
இனி பேசிப்பயனில்லை என்று உணர்ந்த கொலையாளி மீண்டும் ஒருமுறை சரியாக குறிப்பார்த்தான். சோனியரை சுட்டுக்கொல்வதற்கு முன்னர் இப்படிச் சொல்கிறான்,
“நீ போன பின் அந்த இரகசியத்தை அறிந்தவன் நான் மட்டுமே..”
அவன் சொன்ன உண்மையின் தீவிரத்தை அந்த பதட்டமான சூழ்நிலையில் அப்போதுதான் உணர்ந்த சோனியர், தன்னோடு அந்த இரகசியம் அழிந்து போகாது விசயத்தை மற்ற யாரேனும் ஒருவருக்கு தெரியப்படுத்தவேண்டும். அதுவும் எப்படியென யோசித்து திணறும் போது கொலையாளி அவர் உடலின் பலவிடங்களில் சுட்டுத்தள்ளுவான். வலியால் அவர் உடல் நிலத்தில் சாய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிகிறது. ஆனாலும் பிடிவாதமாக அந்த இரகசியத்தை இரகசியக் குறியீடுகளாக அவர் வெளிப்படுத்திவிட்டு மரணமாகியிருப்பார்.
லோவ்ரி நூதனசாலையின் டெனான் விங்கில் அவருடைய உடலைக் கண்டுபிடிப்பார்கள். அது உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியின் “விட்ரூவியன் மேன்” ஓவியம் போல இருக்கும். அவரது உடலில் சில இரகசிய சங்கேதங்கள் எழுதி மறைக்கப்பட்டிருக்கும். வயிற்றில் இரத்தத்தால் ஐங்கோணம் ஒன்றை வரைந்திருப்பார். மரணிக்கும் முன்னர் இவைதான் அவர் விட்டுச்சென்ற இரகசியங்கள். கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வருகிற காவலர்களால் அந்த நுட்பமான குறியீடுகளை அறிய முடியவில்லை. எனவே அவர்கள் உதவிக்கு குறியீட்டு முறைவியலாளர் ராபர்ட் லாங்டன் மற்றும் சோபி நிவியு ஆகியோரை அழைப்பார்கள். உண்மையில் சோபி நிவியு கொலைசெய்யப்பட்ட ஜாக்குவஸ் சோனியரின் பேத்தி. கொலை செய்யப்பட்ட சோனியரின் பராமரிப்பில்தான் சோபி நிவியு இருப்பாள். விடுமுறைக்கு பள்ளி விடுதியில் இருந்து திடீர் பயணமாக வீட்டிற்கு வருகிற சோபி, அந்த வீட்டின் இரகசிய நிலவறையில் தாத்தா ‘ஹைரோஸ் காமோஸ்’ எனப்படும் பேகன் பாலியல் சடங்கில் தொடர்பில் இருப்பதை தெரிந்துக்கொள்வாள். அதை கண்கூடாக பார்த்ததன் பின்னர் அவளுக்கு தாத்தா சோனியர் மீது கடும் வெறுப்பும் கோபமும் வரும். அதன் பின்னர் அவள் முழுவதுமாக வீட்டிலிருந்து வெளியேறி இருப்பாள். இப்போது தாத்தாவின் கொலை அவளை மிகுந்த துயரடையச் செய்யும்.
சிறுவயதில் தாத்தாவுடன் சேர்ந்து பல குறியீட்டு மொழிகளை கற்பதில் அவள் ஆர்வம் காட்டியிருந்தாள். தெரிந்தும் கொண்டாள். அவையெல்லாம் இப்போது சோனியரின் இரகசியக் குறியீடுகளை அறிய உதவி புரிந்தது. கொலை நடந்த அவ்விடத்தில் இரகசிய திறவுகோலை கொண்ட ஓவியத்தை இருவரும் பார்க்கின்றனர். அந்த திறவுகோலுக்கு பின்னர் பிரையரி ஆஃப் சீயோனுக்குரிய சின்னங்களும் முகவரியும் இருப்பதை இருவரும் காண்பார்கள். அவ்விடத்தை விட்டு பொலிஸின் கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்பித்து ஓடுவார்கள். தமக்கு கிடைக்கிற இரகசியக் குறியீடுகளை வைத்துக்கொண்டு அவர்கள் பின்தொடரும் போது இயேசுவினுடைய மர்மமான வாழ்வின் சில உயிரியல் உண்மைகளை தெரிந்து கொள்வார்கள்.
அந்த உண்மைகள் முற்று முழுவதுமாக இயேசு என்ற மனிதனையும் தேவனையும் பற்றியது. வரலாறு என்பது இயேசுவின் பிறப்பில் இருந்துதான் முன்னும் பின்னுமாக வேகமாக சுழல ஆரம்பித்திருந்தது. ஆனால், அந்த மனிதர் வாழ்வில் பல கட்டங்கள் எங்கே இருந்தார் என்பது மர்மமானதாகவே இருந்தது.
மோசஸூக்கு பின் இன்னொரு தேவதூதன் பிறப்பான் என்று யூதர்கள் நம்பினார்கள். இன்றுவரை தம்மை வழிநடத்த தேவதூதர்கள் பிறப்பார்கள் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எல்லா சகுனங்களும் யூதர்களின் பழைய ஏற்பாடு சொல்வதுபடி சரியாகவே இருந்தது.
“இஸ்ரேல் மக்களை ஆள ஒருவன் பிறப்பான் அவன் இந்த இடத்தில் பிறப்பான்” என யூத தீர்க்கதரிசிகள் சொல்லியிருந்தார்கள். அதன்படி பெத்தலகேம் மாட்டுத்தொழுவத்தில் வானில் அதிசய வால்நட்சத்திரம் ஒன்று மின்ன, ஒரு குழந்தை கன்னிமேரிக்கு பிறந்தது. வானில் தேவர்கள் இது சாதாரண குழந்தையல்ல என்று சொல்லிச் சென்றார்கள். அந்த குழந்தையை ஹீப்ரு மொழியில் ஜோஷ்வா (Joshua) என்றார்கள்.
ஹெரோத்தினால் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளும் கொலைசெய்யப்பட்ட போது இயேசுவினுடைய குடும்பம் அங்கிருந்து தப்பித்து எகிப்து போகின்றார்கள் .
பிறகு நீண்டகாலத்துக்கு பின்னர் ஜெருசலேமில் காலடி எடுத்து வைக்கும்போது அவர் இளைஞராகி இருந்தார். இதுவரை இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த யூத மதம் போதிக்கிற எல்லாவிதமான சடங்கு சம்பிரதாயங்களையும் தகர்த்தினார்.
ஜோர்தான் நதிக்கரையில் யோவானால் ஞானஸ்தானம் பெற்றார். எப்போதும் சாலமோன் தேவாலயத்தில் குடியிருந்தார். பிரார்த்தனையில் ஈடுப்பட்டார். சிலவற்றை அவரால் தனது ஞான திருஷ்டியால் ஊகிக்கமுடிந்தது. அப்படி அவர் கூறியதே சாலமன் தேவாலயம் மீண்டும் இடிக்கப்படும், அதன்பின் கட்டப்படும் என்ற வசனங்கள் . இந்த வார்த்தைகள்தான் அவர் சிலுவையில் அறையப்பட காரணமாகியது. கி.பி. 30 அல்லது கி.பி 35-க்குள் இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் மரணித்த பிறகும் யூதர்கள் இன்றுவரை நம்பாத ஒரு விசயம் நடந்தது. கி.பி. 30-35 க்குள் ஒரு வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்து விண்ணுலகு சென்றார் என்கின்றார்கள். இதுவெல்லாம் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர் உயிர்வாழ்ந்த சில காலங்களில் அவர் எங்கு இருந்தார், அவர் வாழ்வில் இருந்த மனிதர்கள் யார் என்ற விஷயங்கள் சர்ச்சைக்கு உரியதாக இருந்தன. அவர் பல ஆண்டுகள் உலகின் பல பகுதியில் வாழ்ந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.
டான் பிரவுனின் ” டாவின்சி கோட்” இயேசு பற்றிய இரகசியங்கள் பற்றியது. வாழ்வில் துப்பறியும் நாவல்கள் மீது பேராவல் கொண்டவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய நூல் டாவின்சி கோட். இந்த நூலின் மையக்கரு முழுவதும் ஒளிந்திருப்பது லியானார்டோ டாவின்சியின் “இறுதி இராப்போசனம்” என்ற ஓவியத்தினுள் எனலாம். ஒரு ஓவியத்தில் இவ்வளவு நுணுக்கமான இரகசிய சங்கேதங்களை உள்ளடக்க முடியும் என்பதை இந்த நாவலை படித்ததும் உணரமுடியும். இயேசுபற்றிய புதுவிதமான பார்வையை இந்த நூல் அளித்ததன் காரணமாக உலகம் முழுவதும் இருந்த கிறிஸ்த்தவ அமைப்புக்களினால் தடைசெய்யப்பட்டது. விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால், உலகிற்கு இந்த நாவல் வரலாற்றின் திருப்பங்கள் பற்றி ஒரு நுணுக்கமான பார்வையை வழங்கியது. துப்பறியும் கதைகளைக் கொண்டாடுபவர்கள், வரலாற்றை புதியகோணங்களில் அறிய விரும்புகிறவர்கள் தவறவிடக்கூடாத ஒரு நாவலே டான் பிரவுனின் டாவின்சி கோட்.
******