கவிதைகள்
Trending

மரண_மதுரம்

அ.நிர்மலா ஆனந்தி

வாழ்வின் பக்கங்களில்

‎மரணம் ராஜரீக கம்பீரம்

‎கரை நனைபவன்

‎ஆழ்கடலின் அமைதி

‎அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆரத்தழுவி

தலைகோதலாய் ஆசுவாசப்படுத்தும்

மரணத்தின் பரிசுத்தம் பயத்திற்குரியதன்று

 

சுயம் மறக்க செய்யும்

மாய இசையிடம்

இலகுவாக தன்னை கையளிக்கும்

கலையை வாழ்க்கை வழிநெடுக கற்றுக்கொடுக்கிறது

 

சாவு

வாழ்வின் வெப்பம் தணிக்கும்

எண்ணெய் குளியல்

எல்லோரையும் நனைக்கும் மழை

ஊர்கூட்டும் நிகழ்த்து கலை

 

அன்னை மடி புகுந்து

எனக்கே எனக்காய்

அவள் எழுதிய கவிதை

பிரித்து படிக்கப் புறப்படுகிறேன்

 

வாழ்க்கை கேள்வித்தாள் இல்லை

பதில்களை நிரப்பிச் செல்ல

பறவையுதிர்த்த இறகுக்கு

மண்ணை முத்தமிடல் ரம்யம்

 

இறுதி அஞ்சலியில்

சிரிப்பவர்களுக்கு

முன்னுரிமை கொடுங்கள்

சாவை

அர்த்தப்படுத்தப் போகிறவர்கள்

அவர்களே

இந்த விளையாட்டின்

வெற்றியும் தோல்வியும்

தொடுத்து வைத்த மாலை ஒன்றே

ஏதோ ஒன்றை எடுத்து

எனக்கு அணிவியுங்கள்

சிரித்துக்கொண்டே

வேறு தேசம் புறப்படுகிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button