நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார். அவனது வழக்கு போன வருடமே விசாரணைக்கு வந்தது. இப்போதுதான் தீர்ப்பு வருகிறது. அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அந்த வழக்கை ‘விசாரித்து’ அவரவர் தீர்ப்புகளை வழங்கிவிட்டது. ஆனால், என்ன செய்வது அரசாங்கம் சொல்லும் தீர்ப்பே இறுதியான முடிவு. அதனால் மக்களும் ஊடகங்களும் எடுத்த முடிவு கடலில் கரைத்த உப்பானது. அந்தக் கைதியை விட, அந்த வழக்கை விசாரித்த நீதிபதியை விட மக்கள் அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். பொறுப்புகளை உருவாக்கிக் கொண்டனர். ஊடங்களை விட மக்கள் அதிக கொந்தளிப்புடன் இருந்தனர். வழக்கு முதல் முறையாக, அதாவது அவன் கைது செய்யப்பட்டு முதல் தடவை விசாரிக்கப்பட்ட காலத்தில் தொழில்நுட்பம் இப்போது இருப்பது போல் அவ்வளவாக வளர்ந்து இருக்கவில்லை. அதனால் மக்கள் அவர்களுடைய கருத்துகளைப் பதிவு செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், இந்த இருபது வருட காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருந்தது. நீதிமன்றம் விசாரிக்கும் முன்னே மக்கள் அவரவர் தீர்ப்புகளை சமூக வலைதளங்களில் வழங்கினர். நீதிபதிக்கும் வக்கீல்களுக்கும் இன்னும் கொஞ்ச வருடங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் கூட ஏற்படலாம்.. பொறியியல் மாணவர்களை போல..!
அவன் கைது செய்யப்பட்டது ஒரு கற்பழிப்பு வழக்கில். அந்த செய்தி மொத்த மாநிலத்தையே கொந்தளிக்க வைத்தது. இருபது வருடங்களுக்கு முன் அது பெரிய விவாதப் பொருளாக இருந்தது. அவன் ஒருவன் செய்த குற்றத்துக்காக மொத்த ஆண் சமுதாயமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. செய்தித்தாள்களில் பெண் பத்திரிகையாளர்களும் பெண் எழுத்தாளர்களும் தங்களுடைய கோபத்தை கொட்டித் தீர்த்தனர். கொஞ்ச வருடங்களில் அவனுடைய வழக்கை கிட்டதட்ட மக்கள் மறந்தே விட்டனர். எப்போது எல்லாம் அவனுடைய வழக்கு மறந்து போகும் நிலைக்கு வந்ததோ, அப்போதெல்லாம் மீண்டும் ஒரு புதிய கற்பழிப்பு வழக்கு வந்து நின்றது. அவ்வழக்குகள் விசாரிக்கப்படும் போதெல்லாம் இவனுடைய வழக்கும் நினைவுகூறப்பட்டது. மக்கள் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.
அவன் இதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்கள் அவன் மனமுடைந்து அழுதான்…எல்லோருக்கும் கேட்கும்படியாக. அந்த மொத்த சிறைச்சாலையும் அவன் அழுகையில் பங்கெடுத்துக் கொண்டது. முதல் ஆறு மாதங்களில் அவன் அழுவது தவிர வேறு எதுவும் செய்யவில்லை. சிறை வார்டன்களும் பக்கத்து சிறை வாசிகளும் அவன் அழுவதை பார்த்து முதலில் பரிதாபப்பட்டாலும் பின் கொஞ்ச நாட்களில் அவன் அழுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு ஆகியது. நாட்கள் செல்லச் செல்ல அவனும் அழுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். சிறைச்சாலையில் எல்லோருக்கும் வேலை சரியாக இருந்தது. கல் உடைப்பது, தூரத்தில் இருந்த கட்டட வேலைக்கு செல்வது என உடல் உழைப்பு நிறையவே இருந்தது. இந்த உடல் உழைப்பினால் விளைந்த வலியே பல நாட்கள் அவனை எதுவும் யோசிக்காமல் இரவு நன்றாகத் தூங்க வைத்தது. இப்போது அவன் கண்களுக்கு கீழ் கருவளையமில்லை. கைகளில் நடுக்கமில்லை. நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது. சாப்பாடு அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் பழக்கமாகிவிட்டது.அந்த மூன்று வருடங்கள் அவன் செய்த உடலுழைப்பின் காரணமாக கொஞ்சம் கட்டுமஸ்தாக மாறி இருந்தான்.
மூன்று வருடத்துக்கு பின் அந்த சிறையில் ஒரு சாவு விழுந்தது. இயற்கை மரணம்தான். அந்த கைதிதான் அங்கு இருந்ததிலேயே மிகவும் வயதானவர் என்பது பார்க்கும் போதே தெரியும். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவன் அந்த சிறைக்கு வந்த பின் நடந்த முதல் மரணம். அவனை பெரிதாக பாதித்திருந்தது. ஒரு வேலை அந்தப் பெரியவர் விடுதலை செய்யப்பட்டு இருந்தால் அவர் இறந்து போகும் போது யாரவது துணைக்கு இருந்திருப்பார்கள். அவருடைய மனைவி இருந்திருக்கலாம். அவருடைய மகன், மகள், பேரப்பிள்ளைகள் யாரவது இருந்திருக்கக் கூடும். அவரை மரியாதையுடன் அடக்கம் செய்திருப்பார்கள். ஆனால், இதெல்லாம் நடக்காமல் கூட போகலாம் அவருடைய குடும்பம் வேறு எங்காவது சென்று இருக்கலாம். அந்தப் பெரியவரைத் தேடி அந்த மூன்று வருடத்தில் யாருமே வந்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. கடிதங்களும் இல்லை. ஆனால், அந்த பெரியவர் மட்டும் ஏதோ எழுதிக்கொண்டே இருப்பார். இவன் அவ்வப்போது பார்த்து இருக்கிறான். அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசியதாக நினைவில்லை. ஆனால், அவனைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப்பார். பதிலுக்கு இவனும் புன்னகைப்பான். அவரை அடக்கம் செய்த போது அவர் இருந்த அறையைச் சுத்தம் செய்யவேண்டி இருந்தது. அந்த வேலையை அவன் ஏற்றுக் கொண்டு செய்தான். அவருடைய அறையில் பெரிதாக எதுவும் குப்பையில்லை. நிறைய காகிதங்களும் புத்தகங்களுமே இருந்தது. அந்தக் காகிதமெல்லாம் அவர் கிறுக்கி வைத்த கடிதங்கள். அவருடைய மனைவிக்கு, அவர் கைது செய்ய பட்ட போது கைக்குழந்தையாய் இருந்த மகளுக்கு, அவருடைய நண்பனுக்கு, அவர் பள்ளிக்காலத்தில் காதலித்தும் சொல்லாமல் விட்ட காதலிக்கு, சில சமயம் கடவுளுக்கு என நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார்.
அந்தப் பெரியவர் நிறையப் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார் அதில் அவருடைய குறிப்புகளும் இருந்தது. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு என பல மொழிகளில் புத்தகக் குவியலே வைத்திருந்தார். அதையெல்லாம் திருப்பி நூலகத்திடம் ஒப்படைக்கச் சென்றபோது, ‘அந்த புத்தங்களை எல்லாம் தானே வைத்துக் கொள்ளலாமா?’ என்று அவன் கேட்டுப் பார்த்தான். அந்த நூலக அலுவலரும் அனுமதி கொடுத்தார்.
தஸ்தவோஸ்கியின் கரமசோவ் சகோதர்கள், ஆண்டன் செகாவ் சிறுகதைகள், மண்டோவின் சிறுகதைகள், ஓஷோவின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் என தத்துவ ரீதியாகவும் ஜெ.கே.ரௌலிங், அகதா கிறிஸ்டி போன்றோரின் துப்பறியும் கதை நாவல்கள் எனப் பல புத்தகங்கள் அவர் வைத்திருந்தார். அவை அனைத்தையும் அவன் படிக்க ஆரம்பித்தான். நேரம் போவது தெரியாமல் நாள் கணக்காக அந்த அறையிலேயே தனிமைப் படுத்திக்கொண்டான். வருடங்கள் சென்றது. அவன் வழக்கில் விசாரணைக்கு மேல் விசாரணையாக நடந்து கொண்டே இருந்தது. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. அந்தப் பெரியவர் வைத்திருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து முடித்திருந்தான். அதுமட்டுமின்றி இன்னும் நிறைய புத்தங்களையும் வாசித்திருந்தான். ஸ்டீபன் ஹாவ்கிங் நூல்களையும் வாசித்து இருந்தான், ஐசக் அசிமோவின் புத்தகங்களை பெரிதும் விரும்பிப் படித்தான். இப்போது அவனால் ஆங்கிலம் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தது.
இந்த பத்து வருடத்தில் ஒரு மரண தண்டனை கூட நிறைவேற்றப்படவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் கூட இருந்தனர். ஒரு கைதி கொலை செய்து விட்டு வந்திருக்கிறான் போல..என்னவென்று விசாரித்ததில் சொந்த மகளையே கொலை செய்திருக்கிறான். அந்தக் கைதியின் மகள் வீட்டை விட்டு ஓடிச் சென்று அவள் காதலித்த பையனை திருமணம் செய்து கொண்டாளாம். கொஞ்ச நாள் கழித்து அவளையும் அவள் காதலனையும் ஏற்றுகொள்ளுவதாகச் சொல்லி இவர் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவளின் காதலனும் வீட்டுக்கு வந்த பின் வீட்டிலேயே அடித்துக் கொலை செய்து இருக்கிறார் அந்த பாசமிகு அன்பு அப்பா. ஆனால், அவர் சார்பாக வாதாடிய ஒரு அனுபவமிக்க வழக்கறிஞர் அற்புதமாக வாதாடி அந்தக் கைதிக்கு விடுதலை வாங்கித் தந்தார். கைது செய்யப்பட்ட இரண்டே வருடத்தில் அந்தக் கைதி விடுதலை செய்யப்பட்டார். அந்த வக்கீலும் இப்போதெல்லாம் ஒரு பெரிய கப்பல் போன்ற காரில்தான் நீதிமன்றத்துக்கே வருவதாக வார்டன் அடிக்கடி சொல்வார். ஒருவேளை அவன் சார்பாக வாதாட யாரவது ஒரு பெரிய வக்கீல் இருந்திருந்தால் அவனும் இரண்டு மூன்று வருடங்களிலே விடுதலை ஆகியிருப்பான். அந்தப் பெரியவரின் கடிதங்களையும் புத்தகங்களையும் படித்த பிறகு அவனும் அவன் நண்பர்கள், அவன் குடும்பம், என அவனுக்குத் தெரிந்த எல்லோருக்கும் கடிதம் எழுதி போட்டான். ஆனால், அதெல்லாம் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்தது. எந்தக் கடிதமும் போய்ச் சேரவேயில்லை. அப்படியே ஒன்று இரண்டு கடிதங்கள் சரியான முகவரிக்குச் சென்று இருந்தாலும் அவற்றுக்கும் பதில் கடிதம் ஏதும் வரவில்லை.
“நீயும் எழுதிக்கிட்டேதான் இருக்க ஆனா, எதுக்கும் பதில் வர மாட்டிங்குதே தம்பி” என்று வார்டன் அவன் மீது பரிதாபப்பட்டார்.
“பதில எதிர்பாத்து நான் லெட்டர் எழுதல சார்… என் மனத்திருப்திக்காக எழுதிக்குறேன். இனிமேயும் எழுதுவேன் நெறையா… ஆனா, எதையும் தபால்ல சேர்க்க மனசு இடம் கொடுக்கல” – அவன் சொன்னது புரிந்தது போல வார்டன் தலையாட்டி கொண்டார்.
பத்து வருடங்கள் முடிந்திருந்தது. வெளியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொண்டு இருந்தான் செய்திதாள்கள் தினமும் வாசிப்பது, புதிய எழுத்தாளர்கள் புத்தகங்களை படிப்பது என தன்னை எப்பொதுமே நிகழ்காலத்தில் வைத்திருந்தான். சிறைசாலைக்குள்ளே ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டான். அவரவர் செய்த குற்றங்களைக் கேட்டு குற்றங்கள் புதுப் பரிமாணத்தை எட்டி இருப்பதை அறிந்து கொண்டான்.
“இப்போ எல்லாம் யாரும் கஷ்டப்பட்டு பூட்ட உடைச்சு இருட்டுல திருடுறது இல்ல, உட்கார்ந்தே எடத்துல இருந்தே பேசியே பணத்தை கறந்துறலாம். ஜனங்களுக்கு காசு சீக்கிரம் சம்பாரிச்சு மூட்டை மூட்டையாக வச்சு இருக்கணும்னு நினைக்குறாங்க. அதனால நாங்களும் சீக்கிரமாவே பணத்தை முழுங்கிறோம்.” – புதிதாய் உள்ளே வந்த ஒரு கைதி சொன்னான். அவனைப் பார்த்தால் குற்றவாளி போலவே தெரியாது. ஏதோ காலேஜ் படிக்கும் பையன் போல இருப்பான். அதுதான் உண்மையும் கூட. அவன் நல்ல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான் போலும். திடீரென்று அவனை வேலையை விட்டுத் தூக்கி விட, என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி நூதனமாகத் திருட ஆரம்பித்தான். அரசாங்கமும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் நூதன முறைகளைக் கையாளக் கற்றுக்கொண்டு இருந்தது.
அந்த பத்து வருடங்களில் அவன் செய்த குற்றதிற்காக பல முறை வருந்தி இருந்தான். ஆனால், இப்போது வருந்தி எந்தப் பயனும் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் செய்த குற்றத்தை உணர்ந்து இப்போது திருந்தி இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் வழக்கு விசாரணைக்கு வரும் போதும் வெளி உலகில் ஒரு கூட்டமே அவனுக்கு எதிராக கிளம்பி இருந்தது.
நீதிபதி தற்போது இறுதியாக அவனுக்கு மரண தண்டனை விதித்திருந்தார். இருபது வருடங்கள் ஓடி இருந்தது வாலிபனாக சிறைக்குள் வந்தவன் இப்போது கொஞ்சம் வயதானவன் போல இருந்தான். இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு மேடை.
தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று இரவு வார்டன் வந்து பேசினார். அவன் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
“நீ வேணும்னா மனு போட்டு பாரு தம்பி”
“வேணாம் சார். நான் சாக வேண்டியவன் தான். ரொம்ப நாள் சட்டத்த ஏமாத்த முடியாது. எனக்கும் சாக பயம் ஒன்னும் இல்ல. சீக்கிரம் போய்ட்டா பரவாலன்னுதான் தோணுது இப்போ” புத்தகத்தில் தான் படித்துக் கொண்டு இருந்த பக்கத்தை மடித்து வைத்து விட்டு வார்டனைப் பார்த்தான்.
“உன்ன விட பெரிய பெரிய தப்பெல்லாம் பண்ணிட்டு அவன் அவன் வெளிய சந்தோசமாதானே இருக்கான். நீ இப்படிப் பேசுறியே” வார்டன் அவன் மீது பரிதாபப்பட்டார்.
“மத்தவன பத்தி எனக்கு எப்படின்னு தெரியல சார். ஆனா, நான் செஞ்ச தப்புக்கு தண்டனைய அனுபவிச்சுத்தானே ஆகணும். தப்புல பெரிய தப்பு சின்ன தப்புன்னு எதுவும் இல்ல சார்” மரணத்தைப் பற்றி பயமில்லாமல் அவன் சொன்னான்.
“ஆனா, நீ இப்போ திருந்திட்டியே டா… இன்னொரு விஷயம் நீ ஒன்னும் அடுத்தவன் உயிர எடுக்கலையே.. வயசு காலத்துல ஏதோ அவசரப்பட்டு பண்ணிட்ட”
“தப்பு எப்போ செஞ்சு இருந்தாலும் தப்புதான் சார். நான் இப்போ நாலு புஸ்தகம் படிச்சு நல்லவன் ஆகிட்டேன் அப்டிங்கற காரணத்துக்காக நான் செஞ்ச தப்பு இல்லன்னு ஆகிடாதே.. நான் மன்னிப்புக் கேட்டாலும் அது எனக்குக் கிடைக்காது.. கிடைச்சாலும் எனக்கு அது வேணாம்” அவன் உறுதியாய் இருந்தான்.
“அப்போ மன்னிப்புக்கு மதிப்பே இல்லன்னு சொல்றியா?” வார்டன் புரியாமல் கேட்டார்.
“மன்னிப்பு யாரு வேணாலும் குடுத்துறலாம் ஆனா, மன்னிச்சு ஏத்துக்குறது பல பேருனால முடியாத காரியம். ஹிட்லர், இடி அமீன் லாம் திருந்திட்டேன்னு சொன்னா நம்ம மன்னிச்சுருவோமா? இல்ல, அவங்க பண்ண கொடுமைதான் இல்லன்னு ஆகிடுமா?”
“ஆனா, அந்த பொண்ணு நல்லாதானே இருக்கா இப்போ… நீ அவளப் பத்தி கேள்வி பட்டியா?”
“ம்ம்.. அந்த பொண்ணு இப்போ நல்ல பெரிய ஆளா வந்துட்டா. ஏதோ பெரிய டி.வி. சேனல்ல வேலை செய்யுறாங்கன்னு கேள்விப் பட்டேன். பெண் உரிமைகளுக்காக நிறைய பேசிட்டு இருக்காங்க போல” – அவன் பேசிக்கொண்டே தன் மேஜையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தான். அதை வார்டனிடம் நீட்டினான்.
“என்ன தம்பி இது?”
“நான் பல பேருக்கு லெட்டர் எழுதிப் போட்டேன் எதுக்குமே பதில் வரல. இந்த லெட்டர்க்கும் பதில் வரப் போவது இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும், எனக்கு சொல்லணும்ன்னு நெனச்சது எல்லாம் இதுல எழுதி இருக்கேன். இத அவங்ககிட்ட குடுத்துருங்க. இப்போ உடனே குடுக்க வேணாம். எனக்கு தூக்கு தண்டனை முடிஞ்சதுக்கு அப்புறம் குடுத்துருங்க. எனக்காக நீங்க செய்யுற கடைசி உதவியா இது இருக்கட்டும்” – வார்டன் கண்ணில் கண்ணீர் துளிகளோடு அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
ஒரு வாரம் கழித்து திங்கட்கிழமை அதிகாலை அன்று அவனுடைய மரண தண்டணை நிறைவேற்றப் பட்டது. அதற்காக அவனை அழைக்க வந்தபோது கூட, அவன் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் வெளியானவுடன் பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்திலும் கொண்டாட்டம் ஆரம்பமானது. மக்கள் வெற்றி பெற்றதாக தங்களை பிரகடனப்படுத்திகொண்டனர்.
வார்டன் அந்த லெட்டரை அந்தப் பெண்ணின் முகவரிக்கு அனுப்பி வைத்தார். அவனுடைய அறையில் இன்னும் அந்தப் புத்தகம் முடிவு பெறாமல் அதனுடைய புதிய வாசகனுக்காக காத்துக் கொண்டு இருந்தது.
*******