சிறுகதைகள்

மசக்காளிபாளையத்து மன்மதக்குஞ்சுகள் – வா.மு.கோமு

சிறுகதைகள் | வாசகசாலை

எனக்குள் விசித்திரமாகவும், அதிபயங்கரமாகவும் இருந்தது. காதுகள் வேறு குப்பென அடைத்துக் கொண்டது. எனைச் சுற்றிலும் வெறுமையான இருள் மட்டுமே இருக்கிறது. நான் எவ்வளவு நேரம் நினைவு தப்பிக் கிடந்திருப்பேன் எனத் தெரியவில்லை. மிக மெதுவாக நான் சுய உணர்வு பெறுகையில் எனது வலது காலின் வலியைத்தான் உணர்ந்தேன். எனையறியாமல் நான் வலியால் முனகிக் கொண்டேயிருக்கிறேன். என் வலது காலின் மீது தொம்மென வந்து விழுந்த அந்தப் பெரிய கல் அப்படியே காலை அழுத்திக் கொண்டே தான் இருந்திருக்கும் போல! நான் வானம் பார்த்தபடிதான் கிடக்கிறேன் இந்தப் பாழும் கிணற்றினுள். நான் என் நண்பனால் இதனுள் தள்ளப்படுகையில் மதியம் இரண்டு அல்லது மூன்று மணியாக இருந்திருக்கலாம். இப்போது இருண்ட வானம் மட்டுமே என் கண்களுக்கு சதுரமாகவோ இல்லை வட்டமாகவோ தெரிந்தது. நட்சத்திரங்கள் தெரிகிறதாவெனக் கூர்ந்து பார்த்தேன். ஆமாம், எப்போதுமான இரவு வானில் எப்போதும் போல நட்சத்திரங்கள் இருக்கின்றனதான். நான் இந்தப் பாழுங்கிணற்றினுள் கிடப்பதால் மட்டுமே எல்லாமும் மாறிவிடப் போவதில்லைதான்.

கைகளால் ஊன்றி எழுந்தமர முயற்சித்தேன். கைவிரல்களின் மேல் எதுவோ சிறிய கால்களால் ஓடுவது போன்று தோன்றியது... அது நிச்சயமாக எலியாகத்தானிருக்க வேண்டும். இது எப்படி இங்கே வந்தது? தவறி விழுந்த எலியாகவுமிருக்கலாம். மிகவும் சிரமப்பட்டு படுத்த கிடையிலிருந்து எழுந்து அமர்ந்து விட்டேன். இனி எப்படியேனும் வலது காலின் மீது கிடக்கும் பெரிய கல்லைக் கைகளால் நகர்த்த வேண்டும். அடித்திருந்த சரக்கின் போதை எப்போது காணாமல் போயிற்றெனத் தெரியவில்லை. தலைபாரம் மட்டுமே இருந்தது. யாரோ சாக்குப்பை தைக்கும் கோணூசியால் மண்டைக்குள் குத்திக் குடைவது போன்றே இருந்தது. இப்படி கடுசாய் எப்போதுமே எனக்கு தலைவலி வந்ததில்லை. தலைவலி வந்ததால்தான் எனக்கே தலை என்ற ஒன்று இருக்கிற நினைப்பே வந்தது. ஆமாம் எனக்கு தலையானது அதனிடத்தில்தான் இருக்கிறது. 

ஒருநாளும் நான் யோகா செய்ததில்லை. செய்பவர்களை டிவியில் பார்த்திருக்கிறேன். அதுவும் அழகான பெண்ணாய் பார்த்துத்தான் யோகா செய்ய வைத்து வீடியோ எடுத்து சேனலில் ஒளிபரப்புவார்கள் என்னைப் போன்ற பெண் விரும்பிகளுக்காகவே. இப்போது வீட்டுத் திண்ணையில் இரு கால்களையும் நீட்டி அமர்ந்திருக்கும் கிழவியைப் போன்றே இந்த வரக்கிணற்றினுள் அமர்ந்து இருகைகளையும் தலையைக் குனிந்து கால் மீது கிடக்கும் பெரிய கல்லை ஒரே முக்கு முக்கி தள்ளினேன். ஓடைக்கல்லா கருங்கல்லாவெனத் தெரியவில்லை. ஓடைக்கல்லாகத்தானிருக்கவேண்டும். மேலே மலையாத்தா எழுந்தருளி அமர்ந்திருக்கிறாள் பல காலமாக. அவளுக்குத் துணையாக இருபது வருடம் முன்பாக விநாயகரை மழையில் நனையாத வண்ணமாக கொட்டாய் அமைத்து அமர்த்தியிருந்தார்கள். உச்சிமலை மீது ஆத்தா அமர்ந்திருப்பதால் மலையாத்தா என்று பெயர் சூட்டினார்களோ என்னவோ. இப்போது சூரிய ஒளி மின்விளக்கும் ஆத்தாவுக்கு எரிகிறது. ஆனால் இந்தப் பாங்கிணறு ஆத்தாவுக்கும், விநாயகருக்கும் சற்றுத் தொலைவில் இருக்கிறது. 

எந்த முட்டாள் சாமியாடி, ’மலைமீது கிணறு தோண்டுங்கள், தண்ணீர் இருக்கிறது’ என்று சொல்லித் தொலைத்தானோ! ஐம்பது வருடங்களாகவே இந்தப் பாங்கிணறு தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டு இங்கேயே கிடக்கிறது. இருந்தாலும் அந்தக் காலத்திலே, சாமி சொல்லுச்சு…” எனப் பத்துக்குப் பத்து அளவில் அறுபது அடி வரை தண்ணீருக்காக நோண்டி நொங்கெடுத்திருக்கிறார்களே சாமார்த்தியசாலிகள். அட, இப்போதாவது அம்மாவாசை, பெளர்ணமி என்று சனம் கூடுகிறதே இங்கே! பொட்டு பொடுசுகள், வல்லு வலசுகள், கிழடு கட்டைகள் ஆத்தாவிடம் அருள் பெற்றுக்கொள்ள மலையேறி வருகிறார்களே... இந்தக் கிணற்றின் வாயை மூடித் தொலைத்திருக்கலாமே! இப்படித்தானே ஆழ்துளைக் கிணறுகளில் ஒரு கல்லை வைத்து மூடித் தொலையாமல், பாப்பா, பாலகன் என்று விழுந்து அரசாங்கமே முன் நின்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பக்கத்தில் குழிவெட்டி எப்படியேனும் நைந்த உடலையாவது வெளியில் எடுத்து விடுகிறார்களே! 

இப்போது கொரனாவால் நான்கைந்து மாதமாக உலகமே பீதியில் கிடக்கிறது. மசக்காளிபாளையத்தில் மூன்று பேருக்கு வந்துவிட்டது. எனக்கும், என் நண்பனுக்கும், என் காதலியாக அறியப்பட்டவளுக்கும், என் அக்காவுக்கும், என் அம்மாவுக்கும் என்று கூடிய சீக்கிரம் வந்திருக்கும். மசக்காளிபாளையத்தில் வந்த பிறகு, வீதிக்குள் நுழையாதே எனத் தகரம் அடித்து விட்டார்கள். இம்மாதிரி தகரமடிக்கும் காட்சிகள் சென்னையில் மட்டும் நிகழ்ந்து கொண்டேயிருப்பதை டிவியில் பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் தகரமடிக்க மூன்று மாதங்களாகியிருக்கிறது. 

எல்லாருமே மரணத்தை நோக்கித்தான் நகர்கிறோம் என்பதை மறந்தவர்களாக, உலகில் தாங்கள் மட்டுமே அழிவின்றி வாழ்வோமென்ற நினைப்பில் முகக்கவசமின்றி வாகனங்களில் செல்பவர்களை சாலையில் நிற்கும் அதிகாரிகள் தடுத்து நூறு ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். மசக்காளிபாளையத்தில் மாதத்தில் இரண்டுமுறை கூட்டமாய் அதிகாரிகள் சாலையில் நின்று, வரும் வாகன ஓட்டிகளைத் தடுத்து,சும்மா என்னாத்துக்கு ரோட்டுல சுத்தீட்டு இருக்கே?’ என்று கேஸ் எழுதுகிறார்கள். கொரனாவை விட ஒவ்வொரு நாளும் அப்பாவிப் பொதுஜனத்தின் ‘சார் சார் சார்’ என்ற குரலொலிகளின் பதிவுகள் அதிகம் என்கிறார்கள் புள்ளிவிபர நிபுர்கள். 

”அரசாங்கம் என்ன சார் பண்ணிட்டு இருக்கு? ரெண்டாவது கொரனா அலை வீசிட்டு இருக்கு தமிழ்நாட்டுல! தடுப்பூசி அடுத்த வருசம் தான் வருங்கறான்! நாடு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி வேகமா போயிட்டு இருக்கு! இன்னும் சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க! சமூக பரவல்னா என்ன அளவுகோல் வச்சிருக்கீங்க? கடவுளுக்குத்தான் தெரியும்னு சொல்றாரு! பெட்ரோல் விலையை ஏத்தீட்டே போறாங்க சார், அதனால சைக்கிள் விற்பனை பெருகிடுச்சு! கொரனா காலத்துல காதல் ஜோடிகள் கல்யாணம் அதிகமாயிடுச்சு! எல்லாரும் ஈ பாஸ் இல்லாமயே மாவட்டம் மாவட்டமா காதலிகளை இழுத்துட்டு ஓடுறானுங்க! எல்லையில சீனாக்காரன் மிரட்டுறான்!…” என்று செய்தி சேனல்களில் சூத்தை நவுத்தி நவுத்தி பாட்டில் தண்ணீரால் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு மக்களுக்காக வாளு வாளென கூட்டமாய்க் கதறுகிறார்கள். 

சாவதற்கான சாத்தியமிருப்பதால் எல்லா நோய்களுக்கும் உடலே வளைந்து கொடுக்கிறது. சாவை நோக்கிச் செல்கிறோம் என்கிற சூழலில் பல நோய்களும் உடலில் சேர்ந்து கொள்வதற்காக உடலே கதவைத் திறந்து வைத்துக் கொள்கிறது. எல்லா மருத்துவ அறிக்கைகளும் சரியாக இருந்தாலும் பீதியானது எல்லா வியாதிகளையும் உடலுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இங்கு எல்லோருக்குமே ஆறுதல் தரும் விசயம் ஒன்று உண்டென்றால் அது வெறும் பொய்கள் மாத்திரமே!

மசக்காளிபாளையத்தில் வெங்குடு கிழவன்தான் மூத்த கிழவன். இன்னமும் வீடு வீடுக்குப் போசியோடு போய் எதைப் போட்டாலும் வாங்கிக் கொண்டு வந்து ஊர்க்கோடியிலிருக்கிற பேருந்து நிறுத்த கட்டிடத்தினுள் அமர்ந்திருப்பான். அந்தக் கிழவனுக்கு சாவு என்கிற வார்த்தையைக் கேட்டாலே பிடிக்காது. யாராவது பேச்சுப் போக்கில் சாவு, இறப்பு, டெத் என்று பேசும் பேச்சைக் கேட்டாலே மயக்கமாகி விழுந்து விடுவான் கிழவன். அவனுக்கெல்லாம் கொரனா வரப்போவதேயில்லை. வெங்குடு கிழவனைக் கண்டால் கொரனாவே அஞ்சும். நேற்றுக்கூட பேருந்து நிறுத்தத்தில் மதிய வெய்யலில் அட்டனங்கால் போட்டு தன் போசியை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்திருந்தான். இப்போது எதற்காக அவன் நினைப்பு வந்தது எனக்கு? 

நான் இருளில் கையை நிலத்தில் வைத்துத் துளாவினேன். கைக்கு எதாவது சிக்கலாம். தண்ணீர்க்கேன் கைக்கு சிக்கியது. நானும் நண்பனும் சரக்குக்கு மிக்ஸிங் செய்வதற்காக வாங்கி வந்தது. தூக்குகையில் பாதிக் கேனிற்கும் குறைவாக தண்ணீர் இருப்பது போல கனமாக இருந்தது. என்ன இருந்தாலும் நண்பன் நல்லவன். ஆனால் அவனொரு ஊசைநாய். என்னைத் தள்ளி விட்டவன் கல்லையும் தூக்கிப் போட்டிருக்கிறான். மேலும் இரண்டு கற்களை சுமந்து கொண்டு வந்து போட்டிருந்தானென்றால் என் தலையாவது நசுங்கி நான் செத்திருக்கலாம். ஒருகல்லை மட்டும் தூக்கி வீசிவிட்டுப் போய் விட்டான். அவன் எதாவது கடைசியாய் சொல்லிப் போனானா? ஞாபகத்தில் கொண்டுவர முயன்றேன்.” மல்லிகா எனக்குத்தான்! சாவுடா நாயே!” ஆமாம் இப்படித்தான் குரல் கேட்டது. 

என் நண்பன் எப்படியும் தப்பமுடியாது. நாளைக்கே கூட அவனுக்கு கொரனா வந்துவிடும். மூச்சுத் திணறுவான். வெண்டிலேட்டர் வைக்க வேண்டும் என்று தாதிகள் மருத்துவமனைக்குள் ஓடுவார்கள். பலருக்கும் வெண்டிலேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இருக்கும் ஒரு வெண்டிலேட்டரும் கூவியிருக்கும். அதாவது ரிப்பேராய் இருக்கும். நண்பன் மூச்சுத் திணறி எனக்கும் முன்னாலேயே போய் விடுவான். சோறு தண்ணியில்லாமல் ஒரு மனுசன் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பான் என்று வேறு நான் படித்ததேயில்லை. இந்த மலையுச்சிக்கு யார் என்னைக் காப்பாற்ற வரப் போகிறார்கள்? 

இந்த கோவிலுக்கு பூஜை செய்ய பூசாரி யாரேனும் தினமும் வருகிறார்களா? இந்தக் கொரனா காலத்தில் எந்தப் பூசாரி முதுகில் தண்ணீர் குடம் சுமந்து கொண்டு மலையேறி வந்து ஆத்தாவுக்கு துளி, விநாயகனுக்கு துளி தண்ணி ஊற்றிக் குளிப்பாட்டி ஊதுபத்தி சூடம் காட்டிச் செல்ல வருவான்? அவன் அப்படி வருவதாக இருந்தாலும் அறுபதடி கிணற்றினுள் இருந்து நான் கத்தினாலும் குரல் கேட்கவா போகிறது அவனுக்கு? அப்படிக் கேட்டாலும் பேய்ப்படம் பார்த்தாலே பயந்து விடும் சுபாவம் உள்ள பூசாரி என்றால் பேய் கத்துகிறது என்று ஊருக்குள் போய் சொல்லிவிடுவான். 

கொரனா காலம் முடிந்த பிறகு கோவில் கமிட்டி மெம்பர்கள் சில பல பேயோட்டிகளோடுதான் மலையேறி வருவார்கள். கீழடியில் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்து செய்திச் சேனலில் காட்டுகிறார்கள். அதுபோல என் எலும்புத் துண்டுகளை சமணர்கள் காலத்து எலும்புக்கூடென பல காலம் கழித்து டிவியில் கண்டெடுக்கப்பட்டதாய் காட்டுவார்கள். இறப்பை மட்டுமே கண்ணுக்கும் முன்னால் வைத்துக்கொண்டு  இத்தனை யோசனையில் கிடக்கிறேன் பாருங்கள் நான். எனக்குப் பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். சரி, அதுமட்டுமென்ன பாக்கி!

“மலையாத்தா! என்னை இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது மேலேற்றிவிடு! மேலே வந்ததும் உனக்காக நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். எல்லாமும் என் காம ஆசையால் வந்த வினை. அந்தக் காம ஆசையால்தான் அறுபதடி குழிக்குள் கிடக்கிறேன். அதை நான் விட்டொழித்து உனக்கு அடிமையாகி உன்னருகிலேயே அமர்ந்து உனக்கே சேவகம் செய்கிறேன். அக்கட்ட இக்கட்ட உனை விட்டு நகரவே மாட்டேன் ஆத்தா! கண்ணு மூடி முழிக்கறதுக்குள்ள படக்குனு என்னை மேல தூக்கி உட்டுரு ஆத்தா!” நானாக வேண்டிக்கொண்டு சிரித்து வைத்தேன். பிச்சையெடுத்துப் பழக்கமில்லாதவன் முதன் முதலாக நகர்ப்புறத்தில் நின்று கைநீட்டிப் பிச்சை கேட்பது மாதிரி வெட்கமாய் இருந்தது. 

திடீரென என் அம்மாவை நினைத்துக் கொண்டேன். அம்மாவுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு சேலைதான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதே போல் அக்காவுக்கும். அதை கட்டிக் கட்டி கிழித்தும் விட்டார்கள் இருவரும். ஒருநாள் இரண்டு நாள் எனைக் காணவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இந்த கொரனா காலத்தில் நான் என் பைக்கில் சென்றாலும் உடனே வீடு திரும்பி விடுவேன். டாஸ்மார்க் திறக்கப்படும் வரை சாலையில் வண்டியில் செல்வதற்கே பீதியாய்த்தான் இருந்தது. மசக்காளிபாளையத்தில் கடைகளை காலையில் ஒன்பது மணிக்கே சாத்துங்க! சாத்துங்க என்று பெடரோல் வண்டியில் அதிகாரிகள் ரேடியோக் கட்டி சொன்னபடி சென்றார்கள். 

அம்மா நிச்சயம் என் செல்போனுக்கு கூப்பிட்டிருக்கும். பதினோராயிரம் கொடுத்து ரெட்மீ போன் வாங்கியிருந்தேன் கோபியில். ஆறு மாதம்தான் ஆயிற்று. ஜியோ மூன்று மாதத்திற்கு ஆறுநூறு ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்து தினமும் ரெண்டு ஜிபியை சினிமாப்படமாக டவுன்லோடிப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே சுருண்டு கிடந்தேன். டாஸ்மார்க் திறந்தார்கள். கோட்டர் அடித்ததுமே கொரனா பீதி என் உடலில் இருந்தும் மனதிலிருந்தும் விடைபெற்று ஃப்ளையிங் கிஸ் கொடுத்துச் சென்று விட்டது. அப்புறமாக பேருந்து சாலையில் ஓடியது. மசக்காளிபாளைய சாலைகளில் மதுப்பிரியர்கள் பிரியத்துக்கு படுத்துக் கிடந்தார்கள். அரசாங்கம் இருபத்தைந்து கிலோ அரிசியை இலவசமாக சிந்தாமணியில் கொடுத்தது. நல்லா இல்லீன்னாலும் உயர்குருதி அழுத்த நோய்க்கும், கொரனாவுக்கும் இந்த அரிசி நல்லதாம்! என்று சொல்லி மூன்று வேளையும் உருட்டி உருட்டி வயிற்றுக்குள் ஜனம் வீசியது.

அக்கா நிச்சயமாக உள்ளூர்த் தலைவரிடம் சென்று, தம்பி சுப்பிரமணியை காணலை என்று சொல்லும். அவர் காவல் நிலையத்துக்கு அம்மாவையும், அக்காவையும் கூட்டிப் போவார். காவல்துறை என் நட்பு வட்டத்திடம் விசாரணையைத் துவங்கும். என் செல்போனை நேக்காக, சீன் படம் பாக்குறேன்டா… என்று என் நண்பன் பழனிச்சாமி போதையில் இருக்கையில் வாங்கிக் கொண்டான். பெரிய ஸ்கிரீனில் பளிச்செனத் தெரியுமாம். அவன் ஆயிரத்தி இரநூறு ரூவாய் நோக்கியா செட் வைத்திருந்தான். அதில் அழைப்பு வந்தால் சங்கு சேவண்டி அடிப்பது போலவே இருக்கும். என்னுடையதில் அழைப்பு வந்தால் ’எந்நாளும் நம்மை விட்டுப் போகாது வசந்தம்...தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்!” என்று பாட்டுப் படிக்கும். இந்தப் பாடலை நான் நீங்கள் கேட்டவை படத்திலிருந்து கண்டறிந்து போனவாரம்தான் டவுன்லோடி என் செல்போனிலேயே கத்தரி வைத்து கட் செய்து வைத்திருந்தேன். ராசியில்லாத பாடல் போல! குழிக்குள் கிடக்கிறேன். இதில் ஆண், பெண் என இருவர் பாடியிருந்தார்கள் அந்தப் பாடலை. நான் பெண்குரல் அழகாக இருப்பதாய் அதை வைத்திருந்தேன். ஆமாம், பெண் குரல்! ஆமாண்டா, பெண் குரல்! 

காவல்துறை விசாரணையில் என் அலைபேசி எண் சோதிக்கப்படும். யார் யாரெல்லாம் கடைசி இரண்டு நாட்களில் என்னோடு பேசினார்கள் என்று அது சொல்லிவிடும். பழனிச்சாமி யமகாதகப்பயலெல்லாம் கிடையாது. கவுண்டம்பாளையத்தில்தான் தறிக்குடோனில் தறியோட்டுகிறான். படிப்பறிவு என்னைப் போன்றே பத்தாங்கிளாஸ்தான். பத்தாங்கிளாஸ் அறிவை வைத்துக்கொண்டு மீறி மீறிப் போனால் என் சிம் கார்டை கடித்துத் துப்பிருப்பான். ரெட்மீ போன் தனக்குச் சொந்தமாகிவிட்டதாயும், கூடவே மல்லிகாவை எந்த நேரத்திலும் ஒவைத்துக் கொள்ளலாமெனவும் கனவில் மிதப்பான். 

கையில் காசிருந்தால் மகிழ்ச்சியாய் அது முடியும் வரை கொண்டாடுபவன் நான். பழனிச்சாமி அப்படியானவனல்ல. வட்டிக்குப் பணம் தருபவன். மூன்று வருடங்களாகவே மசக்காளிபாளைய வழுவினுள் அவசர ஆத்திரத்துக்கு என கேட்போருக்கு மூன்று ரூபாய் வட்டிக்கு ரெண்டாயிரம் மீறிப் போனால் மூனாயிரம் கொடுப்பான். அதனால்தான் அவன் ரெட் மீ வாங்குவதில் ஆசை கொள்ளவில்லை. அவனுக்கு மெய்ல் ஐடி இல்லை. வாட்சப் என்றால் என்னவெனவும் தெரியாது. டிக்டாக்கில் ஆடும் பெண்களை என் போனில் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்வான். கேரளா வேட்டியை எந்த நேரமும் கட்டிக் கொண்டு சுற்றுபவன். பார்ப்பதற்கு சாமியார் போன்ற தோற்றத்தை முகத்தில் தாடி வைத்தும் நெற்றியில் திருநீரும் பொட்டிட்டும் கொண்டு வந்திருந்தான். 

அவனிடம் இந்த மல்லிகா வட்டிக்கு அவ்வப்போது பணம் வாங்கியும், பின்னர் திருப்பிக் கொடுத்தும் என்று புழங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். மல்லிகாதான் எங்கள் இருவரின் வாழ்க்கையில் வந்த கதாநாயகி. இருவருக்குமே முப்பது வயதாகியும் ஊரெங்கிலும் தேடி, கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த பெண்தானில்லை. 

காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளலாமென்றால் உள்ளூர்ப் பெண்களெல்லாம் மசக்காளிபாளையத்திற்குள் மூன்று வருடங்களாக அறைகளில் தங்கியிருக்கும் சிவந்த நிற வடமாநித்தானுங்களை காதலிக்கத் துவங்கியிருந்தார்கள். அவனுங்கள் தலையில் பத்து முடிகள் மட்டும் நீல வர்ணத்திலும், சிவப்பு வர்ணத்திலும் இருக்கின்றன. அணிந்திருக்கும் ஜீன்ஸ் ‘இப்போ ரோட்டுல கழண்டு உழுந்துருவேன் பாத்துக்கொ!’ என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் இருக்கும். 

குள்ளக்கத்திரிக்காய் போல இருக்கும் அந்தப்பயல்கள் பீடா போட்ட தன் வாயை பெண்கள் லிப்ஸ்டிக் அப்பிக் கொண்டது போல வைத்துக் கொண்டு சுற்றுவதைப் பார்க்கையில் நம் குலத்துப் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு. ஜாக்கிஜானின் தம்பிகள் போன்றே தெரியும் அவர்களில் முக்கால்வாசிப்பேர் இப்போது மசக்காளிபாளையத்திலிருந்து பொடி நடையாகவே அவர்கள் மாநிலத்திற்குச் சென்று விட்டார்கள் போலிருக்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் சின்ன ஜாக்கிஜான்கள் இப்போது ஊருக்குள் தட்டுப்படுகிறார்கள். டாஸ்மார்க் பக்கமும் கொட்டையைச் சொறிந்து கொண்டே வேப்பை மர நிழலில் அமர்ந்து குடிக்கிறார்கள். 

இப்படியிருக்க மல்லிகா மீது எனக்கு ஈர்ப்பும் சேர்ப்பும் அமைந்து நான்கு வருடங்களாயிற்று. மாதத்தில் ஒருநாளேனும் மல்லிகாவை என் வண்டியின் பொறகடையில் அமர வைத்து காட்டுச்சேரிக்கு ஓட்டி வந்துவிடுவேன். திருமணம் ஆகும் வரை யூரின் போவதற்காக மட்டுமே என் ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள என்னால் முடியாமல் போய்விட்டது. அதுவே என் முடிவுக்கும் கூட காரணமாகி விட்டது. இப்போது இதையெல்லாம் சரிப்படுத்திக் கொள்ளத்தான் முடியாது. சூரிய நமஸ்க்காரங்கள் எல்லாமே கண் போன பிறகு சிந்தையுள் உதிப்பனதான்.

மல்லிகாவுக்கு இரண்டு பிள்ளைகள். அவள் கணவன் டிராக்டர்களுக்கு குப்பைலோடு ஏற்றிவிடும் பணியில் இருந்தான். அவள் மூத்த பையன் மூன்று வருடம் முன்பாக காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டான். இளையவன் ஆறாவது வகுப்போடு பள்ளியை விட்டு வெளிவந்து நான்கு வருடங்கள் இருக்கலாம். அவன் தறிக்குடோனுக்கும், அவ்வப்போது நூல் மில்லுக்கும் போய்வந்து கொண்டிருந்தான். மல்லிகா ஒரு கவுண்டர் தோட்டத்தில் கூலிக்கு இருந்தவள் சென்ற வருடம் சம்பளம் போதாமையால் நூல்மில்லுக்குத் தாவி விட்டாள்.

கொரனா பிரச்சனை இருக்கையில் நமது முதல்வர், குடிவிரும்பிகள் சொந்தமாகவே சாராயம் காய்ச்சவும், ஈஸ்ட் போட்டு வீட்டிலேயே பழவகைகளைக் கரைத்து தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் கழித்து கேன் கேனாய் எடுத்துக் குடித்து மகிழ்வதையும் உணர்ந்து டாஸ்மார்க்கை திறக்கச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். அச்சமயம் பீதியிலிருந்து விடுபட்ட நான் மல்லிகா வீட்டுக்கே அழைக்கவும் வழுவுக்கு வண்டியைத் தூக்கிக் கொண்டும், குறியை நீட்டிக் கொண்டும் ஓடினேன். வேலை வெட்டியில்லாமல் பொட்டி டிவியில் எம் ஜி ராமச்சந்திரன் நடித்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவோடு அவள் கணவனும், பையனும் இருக்கவே நீண்டிருந்த குறி படுத்துக் கொண்டது எனக்கு. மல்லிகா அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் சரக்கு? என்றாள். பையனிடம் ஒரு ஃபுல்லுக்கு பணத்தைக் கொடுக்க, என் வண்டியை எடுத்துக் கொண்டே மசக்காளிபாளைய டவுனுக்குச் சென்றான் அவன். அவள் கணவன் எழுந்து வெளியே போய் சாலையில் பாய் போட்டு படுத்துக் கொண்டான். 

“பையன் வர்றதுக்கு கால்மணி நேரத்துக்கும் மேலாகும்!” என்றவள் என் மீது சாய்ந்தாள். டிவியில் எம் ஜி ராமச்சந்திரன் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் பலரோடு.

“ஊட்டுக்காரன் இருக்கானே!”

“அது இருந்தா உங்களை என்ன சொல்லுது? அதான் போயி படுத்துக்கிச்சில்ல!”

“திடீருன்னு வந்துட்டா?”

“வராது”

“எனக்கென்னமோ சங்கட்டமா இருக்குது! எதுக்கும் பையன் வரட்டும். கொஞ்சம் குடிச்சுட்டா ரத்த ஓட்டம் ஜிவ்வுன்னு பாயும். சங்கட்டம் போயிடும்! அப்புறம் பையன் எங்க போவான்?”

“அவனெ பொறவால கோயில் திண்ணையில போயி சித்த நேரம் இருக்கச் சொன்னா இருந்துக்குவான். உங்க போனெக் குடுத்துட்டீங்கன்னா போயி உக்கோந்துட்டு அதுல கேம் ஆடிட்டு இருக்கட்டும்”

“இருந்தாலும் எனக்கு சங்கட்டம். வீட்டுக்கு நீ கூப்புட்டதீம் ஒருத்தருமில்லியாட்ட அப்படின்னு நெனச்சுட்டு வந்தேன்”

அப்போது மல்லிகாவின் போன் சங்கு சேவண்டி சப்தம் எழுப்பியது. மல்லிகா என் மடியிலிருந்து எழுந்து போய் டிவி ஸ்டேண்டு அருகில் கிடந்த அவளது செல்போனை எடுத்து ‘அலோவ்.. யார்ங்கெ?’ என்றாள்.

“ஓ, நீங்களா? நாளைக்கி காத்தால பத்து மணிக்கி வாங்கெ! எங்கீங்க வேலையிருக்குது? கொரனான்னு சொல்லித்தான் எங்க கம்பேனிய சாத்தீட்டாங்களே! பையனும், புருசனும் ஊட்டுலயே கிடக்காங்க! எதெ? கூப்பனரிசி வாங்கித்தான் சோறு தின்னுட்டு இருக்குறோம். நீங்க தா நாளைக்கி கறி ஒரு கிலோ எடுத்தாந்து தாருங்களேன்! சேரீங்க! நாளைக்கி வாங்க”

“ஆரு போன்ல?”

“அந்தப் பழனிச்சாமிங்க.. வட்டிக்காசு இந்த வாரத்துது வேணுமாம். நாளைக்கி வந்து வாங்கீட்டு போவச் சொல்லிட்டேன்”

“கறி எடுத்தாறச் சொல்லிட்டு இருந்தியே!”

“க்கும்! அதாவது எனக்கு கறி வாங்கீட்டு வந்து குடுக்கறதாவுது! பீமேல அஞ்சு ரூவாக்காசு கெடந்தாக்கூட எடுத்துட்டு போய் பைப்தண்ணீல கழுவீட்டு சோப்புக்குள்ளார போட்டுக்குமுங்க அது!”

பையன் சீக்கிரமே போன சுடிக்கி வந்து விட்டான். மல்லிகா தன் கணவனுக்கு தண்ணீர் கலக்காமல் ஒரு டம்ளர் ஊற்றிப் போய் கொடுத்தாள். அந்தாள் வாங்கி மடக்கென குடித்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. பையன் கடிப்பதற்கு மாட்டுக்குடல் வறுவல் வாங்கி வந்திருந்தான். நல்லவேளை இரண்டு பொட்டணம் வாங்கி வந்திருந்தான். ஒன்றை அவன் பிரித்து வைத்துக் கொண்டான். நானும் ஒரு டம்ளரில் ஊற்றி தண்ணீர் கலந்து அடித்தேன். கடிப்பதற்கு பெரிய நெல்லி ஒன்று ஜோப்பில் போட்டுக் கொண்டு சென்றிருந்தேன். அடுத்து அரைக்கடி கடித்து சுவைத்தேன். 

“சோறு போட்டுக்கடா வட்டல்ல! அதுக்கூட கறிய போட்டு பெசஞ்சு திங்க வேண்டீது தான?” பையன் டம்ளரில் சரக்கி ஊற்றிக் கொண்டு என் முன்னால் குடிக்காமல் எழுந்து வெளியில் போய் குடித்தான்.

“ஏன் வெளிய போனான்?” என்றேன் மல்லிகாவிடம்.

“அவன் ஒவ்வொரு விசுக்கா கக்கி வச்சிருவானுங்க!” என்றவள் தானும் ஒரு டம்ளர் சரக்கு ஊற்றி அன்னாந்து குடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்தாள். நான் அடுத்த ரவுண்டை ஆரம்பித்தேன். பையன் மேலும் ஒருடம்ளர் சரக்கு அடித்து விட்டு, சாப்பாடும் சாப்பிட்டு விட்டு என் செல்போனை வாங்கிக் கொண்டு போய் விட்டான்.

மல்லிகா பாயை நடுவீட்டில் டிவியைப் பார்த்தவண்ணமாக போட்டாள். தலையணையை எடுத்துப் போட்டவள் தன் சுடிதாரை கழுத்து வழியாக தூக்கி கழற்றி சேர் மீது போட்டாள். பாவாடை நாடாவில் கைவைத்து இழுத்து அதையும் உருவி வீசிவிட்டு பாயில் படுத்தாள்.

“யாராச்சிம் வந்துட்டா? பக்கத்து ஊட்டுக்காரங்க..?”

“இங்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க!”

இப்படி இந்த கொரனா காலத்தில் நான்கு முறை ஆமாம் நான்கு முறை அவள் வீடே சென்று என் காமத்தை தணித்துக் கொண்டு வேர்த்துப் பூர்த்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கொரனா காலத்தில் காசுக்கு தடுமாற்றமாய்த் திரியும் நான் என் குடிக்கே காசின்றி தடுமாறுகையில் அவள் அழைப்பு வந்தால் எப்படியேனும் மூன்று கோட்டரோடேனும் செல்ல வேண்டி வந்தது. ஆனாலும் இந்தக் காமம் நம் சொல்பேச்சைக் கேட்பதேயில்லை. வேண்டாம் செலவீனம் அதிகமாகிறது என்று மனது சொல்கையில் காமம் ‘பின்ன என்ன சும்மான்னு நெனச்சியா?’ என்றே கேட்கிறது. சுகம் எங்கடான்னானாம்.. சொறியிர எடத்துலதான்னானாம்!

இந்த பழனிச்சாமிப்பயல் இப்படியொரு திட்டம் போடுவான் என நான் கனா காணவில்லை. பைசா பிரச்சனையில் துண்டு பீடிக்கு வக்கில்லாமல் கிடந்த எனக்கு காலையிலே இவன் அழைப்பு. பொண்ணு பார்த்திருக்கிறதாம் அவன் அம்மா. இந்தக் கொரனா காலத்தில் இடைவெளி விட்டு கடைகளில் ஜாமான் வாங்குங்கோன்னு விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க இவியம்மாவுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா?

பொண்ணுப்பிள்ளை தாண்டாம்பாளையமாம். இந்தவாட்டியாச்சிம் காரியம் சுபமா முடியோணுமின்னா மலையாத்தாவை போய் வேண்டிட்டு வந்துடு பழனிச்சாமின்னு அவியம்மா சொல்லிருச்சாம். அதானே பாத்தேன். தொணைக்கி கோயிலுக்கு கூப்பிடறான். எடுத்தவுடன், ஒரு ஆப் வேணும் என்று சொல்லிவிட்டேன். சிகரெட் பாக்கெட் மினிகோல்டு ஒன்னு என்றேன். லைட்டர் ஒன்னு, கடிச்சிக்க கொடல்சில்லி என்றேன். சில்லி வேண்டாம், ஆத்தா கோவிச்சுக்கும்! என்றான். சரிப்போச்சாது!

மதியம் மணி ஒன்றிருக்கும் என்கிற போது மலையுச்சியை நாங்கள் இருவரும் வந்தடைந்தோம். மலையாத்தாவை பவ்யமாய்க் கும்பிட்டான் பழனிச்சாமி. நானும் இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு ஏறி வந்தேனே என்பதற்காக ஆத்தாவைக் கும்பிட்டேன். விநாயகரையும் இருவரும் வணங்கினோம். ஆத்தாவின் முன்பாக இருந்த மணியை இழுத்து இழுத்து நாலு முறை ‘டாங் டாங் டாங்’கென அடித்தான். 

பின்பாக கொஞ்சம் ஓரமாய் கள்ளிச்செடியின் நிழல் மறைப்பில் ஆத்தாவுக்கும் விநாயகருக்கும் கண்ணில் படாமல் அமர்ந்தோம் சரக்கு பாட்டிலோடு. இரண்டு ஆப் பாட்டில் தேன் பூச்சி வாங்கி வந்திருந்தான். குடிக்கையில் கொஞ்சம் எரிச்சல் வரும் ஹனிபீ. தண்ணீர் அதிகம் கலந்தால் பீர் குடித்தாற்போல உச்சா வந்து கொண்டேயிருக்கும். கடிப்பதற்கு மிக்சர், முறுக்கு, சோன்பப்படி என்று மஞ்சப்பையிலிருந்து எடுத்து சபையை அலங்கரித்தான். இப்படி ஒருநாளும் மலையுச்சியில் அமர்ந்து நான் சரக்கடித்ததேயில்லை. மல்லிகாவை ஒருநாள் இங்கு இழுத்து வந்து சிறப்பிக்க வேண்டும்.

இருவரும், “உலக மக்களின் நன்மைக்காக! கொரனா சனியன் உலகை விட்டு ஒழிவதற்காக!’ என்று ஒருசேரச் சொல்லி காகித டம்ப்ளரை முட்ட வைத்துக் குடித்தோம். சரக்கு காலியாகும் தருவாயில்தான் பழனிச்சாமி என் அலைபேசியைக் கேட்டு வாங்கிக் கொண்டான். நெம்பர் லாக் வைத்திருந்தேன். 5566 என்றேன். உள்ளே போய் விட்டான். அப்புறம்தான் கேட்டான்.

“மல்லிகா கூட உனக்கு என்ன பழக்கம்?”

“சும்மா பேசுவேன் அவ்ளோதான்”

“அப்புறமெதுக்கு உன்னோட பைக்கு போன வாரத்துல அவ ஊட்டுக்கிட்ட ரெண்டு மணி நேரம் நின்னுச்சாம்?”

“அவ பையன் எங்கியோ அவளை ஓறம்பரைக்கி கூட்டிட்டு போயிட்டு வர்றேன்னான். மூனு மணி நேரத்துல திரும்பிடுவேன்னான். சரின்னுட்டு குடுத்து உட்டேன்”

“அங்கெல்லாம் சாவுகாசம் வெச்சுக்காதே சுப்பிரமணி”

“செரி”

“இங்கெங்கியோ ஒரு கெணறு இருக்குதுன்னானுங்க.. இவத்திக்கி தான் இருக்குதாம். பாரு!” என்று சொல்லி தேடிக்கொண்டே சென்றான். நானும் போதையில் ‘கெணறா? ஆமா சொல்லியிருக்காங்க இங்க இருக்குதுன்னு!” என்று தேடினேன். அது நாங்கள் தேடுமிடத்திற்கும் முன்பாக இருந்தது. 

“தண்ணி கெடக்குதான்னு பாரு’ என்றேன். காலை மண்டி போட்டு அமர்ந்து பதனாய் எட்டிப் பார்த்தான். ஆமாம் டோய்.. பாதிக் கெணறு வரைக்கிம் தண்ணி இருக்குது!” என்றான்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ‘எங்கே?” என்று ரத்த ஓட்டம் அதிகமாய் இருந்ததால் முட்டி போடாமல் நின்றபடியே எட்டிப் பார்த்தேன். 

தினச்செய்த்தித்தாள்களில், கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி, கள்ள உறவு வைத்திருந்த மனைவியை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன் என்றெல்லாம் செய்திகளை தினமும் நாம் பார்க்கிறோம். டிவியிலும் அதைத்தான் சொல்கிறார்கள். அது நமக்கே நடக்கையில்தான் அந்த விசயங்களின் தீவிரத்தன்மை உரைக்கிறது.

கல்யாணமாகாத, பிள்ளைப்பெக்காத ஒருத்திக்காக காதல் போட்டியில் பழனிச்சாமி இப்படி என்னை அவளைக் கட்டிக் கொள்வதற்காக தள்ளி விட்டிருந்தான் என்றிருந்திருந்தால் பரவாயில்லை... காதலி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டுமெனச் சொல்லி பிரியமாய் உயிர் விடுவேன். இது காமப் போட்டியாகி விட்டது. நான் மட்டும்தான் மல்லிகாவின் குறியை குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். இனி நீ அங்கே என் காட்டுக்கு பயிர் செய்ய வராதே…” என்று பழனிச்சாமி சொல்லியிருந்தால், சரியடா! என்றே சொல்லி, அடுத்த ஆள் யாராச்சிம் உண்டா? என இந்த கொரனா காலத்திலும் வீதி வீதியாய் ஓடியிருப்பேன். எல்லாம் போயிற்று!

எப்போது விடியுமெனத் தெரியவில்லை. வானத்தைப் பார்த்தபடி கிடந்தேன். எப்படியும் இங்கிருந்து உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லைதான். அந்தக் கல்லை இரு கைகளாலும் என் முகத்துக்கும் மேலாகத் தூக்கி என் முகத்தின் மீதே போட்டுக் கொண்டால் சாவு வருமா? தெரியவில்லை. எப்படியும் அதுவாகவே வரும் சாவுக்கு நாட்களை இங்கே கிடந்தபடி கழித்திருக்க முடியாது. அல்லது இப்படிக்கூட நடந்து விடலாம். பழனிச்சாமியை அதிகாரிகள் ஸ்டேசனில் வைத்து நாலு இணுங்கு இணுங்கினார்கள் என்றால் மலையாத்தா கோவில் பாங்கிணற்றை சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனா ஒன்னு! நெமே ஏமாந்துட்டேன். இல்லீன்னா நான் அவனை உள்ளார தள்ளியிருப்பேன்.

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button