இணைய இதழ்இணைய இதழ் 81கவிதைகள்

மீ.மணிகண்டன் கவிதைகள் 

கவிதைகள் | வாசகசாலை

சொந்த வீடு

நடேசன் மிதிவண்டி
நிலையத்திலிருந்து
மணிக்கு ஐம்பது
காசு வாடகையில்
சைக்கிளை எடுத்துக்கொண்டு
கண்மாய்க் கரையில்
புளியமர நிழலில்
குண்டு விளையாடித்
திரும்புகையில்
ஒரு மணி இருபது நிமிடங்கள்
கடந்திருந்தது
நடேசன் இரண்டு மணி நேர
வாடகையாக
ஒரு ரூபாய் கேட்டான்
டவுசர் பையில் இருந்த
ஐம்பது காசை எடுத்து நீட்டினேன்
பாக்கி ஐம்பதை
அடுத்த நாள் தருவதாகக்
கூறி வந்தேன்
நடேசனின் பொறுமையின்மையா
நம்பிக்கையின்மையா தெரியாது
அன்று மாலையே அப்பாவிடம் கூறி
பாக்கி ஐம்பதைப்
பெற்றுக்கொண்டான்
கடன் சொல்லும் பழக்கம்
எப்படி வந்தது என்று
அப்பா பெல்டைக் கழற்றினார்
இன்று வாங்கிய சொந்த வீட்டில்
நடு ஹாலில் மாட்டி வைத்திருக்கும்
படத்தில் அப்பா
புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்
வங்கிக் கடன் ஐம்பது லட்சம்.

***

பூம் பூம் மாடு

எஜமானனின் உறுமிச் சத்தத்திற்கு
பூமியுருண்டை சுழல்வது போல
அங்குமிங்கும் கோலிக்குண்டுக்
கண்களை உருட்டுகிறது
அவர் கை காட்டும் சிறுவர்களுக்கு
தாமரை இலைத் தண்ணீர் போல
பட்டும் படாமலும் முத்தம் தருகிறது
அரண்டும் மிரண்டும்
சிதறியோடும் பாலகர்களை
அறுந்து விழுந்த
மணி மாலையென
அதிர்ச்சியில் காண்கிறது
முதுகுக் குமிழில் சதங்கைகள்
கொம்புகளில் கிண்கிணி மணிகள்
நெற்றியில் பட்டு
மேனிக்கு வண்ண
ஆடை அலங்கார சகிதம்
சீருடை அணிந்த மாணவனாகத்
தயாராகிவிட்டது ஆம் இல்லையெனத்
தலையசைத்து எதிர்காலம் கணிக்க
பூம் பூம் மாடு.

***

உள்ளொன்று வைத்து…

சரேலென சற்று நேரத்தில்
பொழிந்துவிடுகிறது
அடுத்த நொடி கைகளை
விரித்துக் காட்டிவிடுகிறது
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசத் தெரியாத
மேகம் உயரத்தில் இருக்கிறது.

******

nam.manikandan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button