இணைய இதழ்இணைய இதழ் 76கவிதைகள்

மித்ரா அழகுவேல் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இரண்டு பாதைகள் 

என் முன்னே எப்போதும் கலைந்து கிடக்கின்றன
இரண்டு தெரிவுகள்
எளிதானதும் பொதுவானதும் வில்லங்கமற்றதுமான
ஒன்றுடன்
வசீகரத்துடன் ஒட்டியிருக்கிறது
ஆபத்துடன் நிறைவும் தரக்கூடியதுமான இன்னொன்று

பாதுகாப்பும் ஆன்மதிருப்தியும்
சுலபத்தன்மையும் சுயமும்
எக்காலத்திலும் தலைகீழி

இந்தப் பாதையிலேயே நடந்திருக்கலாம்தானே
நான் சொன்னதையே செய்திருக்கலாம்தானே
அப்போதே சுதாரித்திருக்கலாம்தானே
வாய்வரை வந்து விட்ட வார்த்தையை அப்படியே முழுங்கியிருக்கலாம்தானே
கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கலாம்தானே

இருக்கலாம்தான்…
என்ன செய்ய
கையெட்டும் தூரத்தில் இருக்கும் கொன்றையை விடவும்
கடலாழத்தில் கைபடாது மண்டிக் கிடக்கும்
பவளப்பாறையைத்தான் நாடுகிறது
பாழும் மனம்.

***

சொல் விதைத்தல்

ஆற்றுநீரடித்து தூள் தூளாகிப் போன
கற்களென மனதில் தங்கியுள்ளன சில சொற்கள்

கரையில் புதைத்து வைத்த முட்டைகளின் நினைவுடனேயே
கடலில் சுற்றும் ஆமை நான்
என் முட்டைகள் கண்டிப்பாக பொரிந்தாகும் என்பது விதி

கரிய நாக்குகளால் நெருப்பைக் கக்கும்
புது சாலையில் வேண்டுமென்றே விழுந்து
துடிதுடித்து
மரணிக்கும் பறவையின் வயிற்றிலிருந்து
தெறிக்கும் நெல்மணிகள்
யாரோ விதைத்த சொற்களாகத்தான் இருக்க வேண்டும்

அப்படியெல்லாம் எதனிடம் இருந்தும் எதுவும் தப்பாது
உனை நோக்கி நீள்கின்ற கைகள்
சென்ற நூற்றாண்டு தொட்டு நீண்டு கொண்டிருப்பவை
உனைச் சுற்றிச் சுற்றி துன்புறுத்தும் சொற்கள்
உன்னாலேயே சொல்லப்பட்டவை

இதற்கு வேறு வழியே இல்லையா?

இருக்கிறது

சொற்களைக் கைவிடாதிரு.

***

கடவுளாகுக

பிழைத்திருத்தல் என்பது
காலையில் பதறாமல் கண் விழிப்பது
என்ன உண்கிறோம் என்பதை உணர்ந்து ஜீவிப்பது
முந்தைய நாள் நடந்த அனைத்தையும்
பிசிறாது நினைவில் வைத்திருப்பது
நிதானமாக சாலையைக் கடப்பது

பிழைத்திருத்தல் என்பது
ஒரு நிமிட மழைக்கு எத்தனை துளி எனக் கணக்கெடுப்பது
ஒரு சிறிய பரிவின் ஆயுளை ஏற்றுக்கொள்வது
ஒன்றாக இருக்கும் காலத்திலேயே பற்றற்றிருப்பது
ஒவ்வொரு நொடியில் ஒவ்வொன்றாய் பரிணமிப்பது

மேலும்
பிழைத்திருத்தல் என்பது
நிலையாமையின் தீவிரத்தில் கரைவது
உயிரைப் பிடித்துக்கொள்ள உண்பது
எல்லாவற்றையும் மறப்பது
பிறகு நம்மையே நாம் கை விடுவது

பிழைத்திருத்தல் என்பது
குறிப்பாக
கண்மூடிக் கடவுளாவது.

***********

mithraalaguvel@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button