போர்களை நான் விரும்புகிறேன்
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
நிலத்தின் கங்குகள் எழ
கைகளில் தழலும்
மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின்
போர்களை நான் விரும்புகிறேன்
பின்னே தொடரும்
நேற்றைய சுயத்திற்கும் எனக்கும்
இடையே
நித்தியமும் நிகழும்
போர்களை நான் விரும்புகிறேன்
தீவட்டிகளை என்புறம்
நீட்டாதீர்கள்
உங்களை நோக்கி
எக்கணமும் திரும்பக்கூடும்
உங்களுக்கேயான
ஊழ்வினை
எனக்கான போர்கள் எப்போதும்
பின்னே தொடரும்
என் நேற்றின் நிழலோடுதான்
மறந்தும் அந்நிழலுக்கு
வண்ணம் பூசாதீர்கள்
நகலுக்குத்தான் பகட்டு தேவை
அசல்கள் ஒருபோதும்
அலட்டிக்கொள்வதில்லை
அசல்கள் ஒருபோதும்
தம்முடன் போரிடுவதை
நிறுத்துவதுமில்லை.
***
தேர்வு
என் முன்னே இரண்டு வழிகள்
இருந்தன
அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவே பணிக்கப்பட்டேன்
எப்போதும் அது
அறத்தின் வழியாகவே இருந்தது
அதில் தன்னந்தனியாய்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
என்னோடு ஓடும் சக ஓட்டக்காரரே!
உங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுங்கள்
வீரியத்துடன் ஓடுங்கள்
நீங்கள் தடுமாறினால்
தாங்கும் முதல் கரம்
என்னுடையதாய் நிச்சயம் இருக்கும்
இருந்தும்
இருந்தும்
என் அன்பின் கிளைகளை வெட்டுகிறீர்கள்
நான் ஓடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை
அரங்கத்தில் பிரியங்களின் வண்ணமிட்டு நடிக்கிறீர்கள்
தனித்த இருளில் எனது பாதைகளில்
திட்டமிட்டு முட்களை இறைக்கிறீர்கள்
நிர்க்கதியாய் நிற்பதை ரசிக்கும்
குரூரங்களின் முகங்கள்
சற்றும் எதிர்பாராத வேளையில்
வெளிவரத் துவங்குகின்றன
நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்
அதே புன்னகைக்கும்
குரூர முகங்களுடன்
நான் ஒருபோதும்
திரும்பாத பாதையில்…
நான் ஒருபோதும்
தொலைய விரும்பாத
வாழ்க்கையில்.
********