பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மாசுக்கட்டுப்பாடு பற்றிய பாடங்கள் நடத்தும்போது அதிகமான புகை மூட்டம், அதனால் வரும் உடல்நலச்சிக்கல்கள் ஆகியவற்றை சொல்லித்தருவார்கள். முகமூடி அணிந்துகொள்ளும் அளவுக்கு காற்று மாசு என்பது இந்தியாவில் முன்பெல்லாம் இருந்ததில்லை. சில வருடங்களாகவே பனிக்காலத்தில் டெல்லியில் இது நிதர்சனமாக மாறிவிட்ட நிலையில் இப்போது சென்னையிலும் இந்தக் காற்று மாசின் பாதிப்பு தெரியத்தொடங்கியிருக்கிறது.
இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது (8.11.2019, காலை 11:04 மணி) அடையாறில் உள்ள PM 2.5 மாசு அளவு 131.36 µg/m3 ஆகவும், மணலியில் 196.43 µg/m3 ஆகவும் இருந்தது. இரண்டுமே மிக மோசமான (Very Poor) அளவு மாசு என்ற அளவுக்குள் வருபவை (ஆதாரம்: Central Pollution Control Board Live Data, 2019).
சரி… PM 2.5 என்றால்?
2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவுள்ள துகள்மப்பொருள் (Particulate Matter). மைக்ரோமீட்டர் என்பது ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு. இத்தனை சிறிய துகள்களை நாம் சுவாசிக்கும்போது அவை சுலபமாக உடலுக்குள் சென்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளைக்கு நாம் சராசரியாக 25,000 முறை சுவாசிக்கிறோம் எனும்போது மாசுபட்ட காற்றிலிருந்து எத்தனை துகள்கள் உள்ளே போகக்கூடும் என்று நாம் கணக்குப் போட்டுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 50 சிகரெட் புகைத்தால் எத்தனை பாதிப்பு வருமோ, இன்றைய சராசரி டெல்லிவாசிக்கு சாதாரண காற்றிலிருந்தே அத்தனை பாதிப்பு வருகிறது.
காற்றின் தரத்தில் உலக அளவில் இந்தியா ஃபெயில்மார்க்தான் வாங்கியிருக்கிறது. உலகின் மிக மோசமான காற்று உள்ள டாப் டென் நகரங்களைப் பட்டியலிட்டார்கள். இதில் 7 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. நாம் வெட்கப்படவேண்டிய டாப் டென் அங்கீகாரம் இது. உலக அளவில் 4.2 முதல் 7 மில்லியன் மக்கள் வரை இதுபோன்ற காற்று மாசு சம்பந்தபட்ட காரணிகளால் இறக்கிறார்கள் என்ற புள்ளிவிவரமும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
சிகாகோவில் உள்ள ஆற்றல்சார் கொள்கை நிறுவனம் என்ற அமைப்பின் ஆய்வில் இந்தியாவின் வடமாநிலங்களின் சமவெளிகளில் 1998 ஆண்டோடு ஒப்பிடும்போது 2016ல் 76% காற்று மாசு அதிகரித்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது இவர்களின் வாழ்நாளையே 2.6 ஆண்டுகள் வரை குறைக்கிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதுபோன்ற துகள்மப்பொருட்களின் அளவைக் குறைத்தால் காற்று மாசுபடுவதைத் தவிர்க்கலாம் என்ற யோசனையோடு இந்தியாவில் 2019ல் தேசிய சுத்தமான காற்றுக்கான திட்டம் (National Clean Air Programme) துவங்கப்பட்டது. 2017ல் காணப்பட்ட துகள்மப்பொருட்களின் அளவுகளை அடிப்படையாக வைத்து, அந்த அளவை 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இது தொடங்கப்பட்டிருக்கிறது. இதை செயல்படுத்துவதில் பல களச் சிக்கல்கள் இருப்பதாகவும், 30% குறைப்பு என்ற பெரிய லட்சியத்தை எட்டும் அளவுக்குத் திட்டம் தீவிரமாக வகுக்கப்படவில்லை என்றும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்தார்கள்.
தேசிய அளவில் நிலைமை இப்படி இருக்க…. சென்ற வருடம் இதே சென்னை வேளச்சேரி மாசுகட்டுப்பாடு நிலையத்தில் PM 2.5-ன் அளவு வெறும் 69 µg/m3 மட்டுமே (8.11.2018, Central Pollution Control Board). இன்று அங்கே அளவு 131 µg/m3 . ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட இருமடங்கு துகள்மப்பொருள் மாசு உயர்ந்திருக்கிறது.
சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவை, பட்டாசு வெடிப்பதால் வந்த திடீர் காற்று மாசின் தீவிரம், இப்போது சென்னையில் நிலவும் பருவ நிலை, டெல்லியின் பனிப்புகையின் மிச்சம் காற்று சுழற்சியினால் இங்கு கொஞ்சம் வந்தடைவது என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதில் முக்கியக்காரணங்கள் எவை, எவற்றை நம்மால் உடனடியாக கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான ஆய்வுகள் தேவை.
சூழலியல் சிக்கல்களும் அரசியல் பொருளாதாரக் காரணங்களும் இரண்டறக் கலந்தவை. ஒன்றைப் பேசாமல் இன்னொன்றை அணுகவே முடியாது. வடமாநிலங்களில் வருடாவருடம் பனிக்காலங்களில் முந்தைய அறுவடையிலிருந்து பாக்கியிருக்கும் பயிர்த்தூர்களை எரிப்பார்கள் (Stubble burning). அப்படி எரித்தால் மட்டுமே அடுத்த விதைப்புக்கு நிலத்தைத் தயார்படுத்த முடியும். “விவசாயிகளால்தான் இந்த மாசு உருவாகிறது” என்று குற்றச்சாட்டு ஒவ்வொருவருடமும் எழும். “பல்வேறு தொழிற்சாலைகள், போக்குவரத்தால் வரும் மாசு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சாதாரண விவசாயிகளைக் கைகாட்டுவது பழியிலிருந்து தப்பிக்கும் முயற்சி” என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள். தவிர, “இதுபோன்று பயிர்த்தூர்களை எரிப்பதில் எங்களுக்கு எந்த செலவும் இல்லை. ஒரு தீப்பெட்டிக்கான காசு இரண்டு ரூபாய் இருந்தால் போதும். எரிக்காமல் இவற்றை அப்புறப்படுத்தவேண்டுமானால் அதற்காக நாங்கள் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கவேண்டும். அதற்கு 5000 முதல் 8000 வரை செலவாகும். அதை யார் தருவார்கள்?” என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை டெல்லியின் காற்று மாசால் மட்டுமே இது வந்தது என்று சொல்ல முடியாது என்றும், தமிழ்நாட்டுக்கென்று தனியாகக் காற்று மாசுக்கு எதிரான திட்ட வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற காற்று மாசுபாட்டின் விளைவுகள் என்ன? பொருளாதார நிலையில் பல அடுக்குகளாகப் பிரிந்திருக்கும் ஒரு நாட்டில் பாதிப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது? சுத்தமான காற்று என்பது நமது அடிப்படை உரிமை. அது கிடைக்காமல் இருப்பது யாருடைய தவறு? இத்தனை மாசுபட்ட காற்றிலும் வெளியில் வேலைசெய்யும் போக்குவரத்துக் காவலர்கள், கட்டிடத் தொழிலாளிகள், வீடற்றவர்கள் ஆகியோரின் நிலை என்ன? வருடாவருடம் இந்த சிக்கலை எதிர்கொள்ளாமல் இது நடப்பதற்கு முன்பே தடுக்க நம்மிடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன? இப்போது இந்தப் பிரச்சனை தென்னிந்தியாவிலும் வரத்தொடங்கியிருக்கிறது, இதை ஏன் நம்மால் முன்பே கணிக்க முடியவில்லை? நிலத்தால் சூழப்பட்ட ஒரு நகரத்துக்கும் கடலோர நகரத்திற்கும் இதை எதிர்கொள்வதில் இருக்கும் வேறுபாடுகள் குறித்து நம்மிடம் துல்லியமான ஆய்வுகள் இருக்கின்றனவா? இதுபோன்ற காற்று மாசுபாடுகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன தொடர்பு?”Gas Chamber” என்று வர்ணிக்கும் அளவுக்கு ஒரு தலைநகரம் எப்படி மாசடைந்தது? நகரங்களில் மக்கள்தொகை அதிகமாவதால் இது நடக்கிறது என்று சொல்லப்படுகிறதே, அதை எப்படி அணுகுவது? என்று பல கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
டெல்லியின் காற்று மாசு தொடர்பான ஒரு வழக்கில் 4.11.2019 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “இது வாழ்வதற்கான உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். இதில் செயல்படாமல் இருப்பது வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதுபோலாகும்” என்று எச்சரித்துள்ளது. இதில் சமூகத்தில் பொருளாதார, சாதி, மத படிநிலைகளால் ஒருசிலருக்கு பாதிப்பு அதிகமாகவும் ஒரு சிலருக்கு பாதிப்பு குறைவாகவும் இருக்கும் என்பதும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. காற்று சுத்திகரிக்கும் கருவி வைத்திருக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிக்கும் சிறப்பு முகமூடி வாங்கக்கூடக் காசில்லாத கட்டிடத் தொழிலாளிக்கும் பாதிப்பின் தீவிரம் வேறு, பாதிப்பு ஏற்பட்டபின் கிடைக்கும் மருத்துவ உதவியின் அளவும் வேறு.
நகரங்களில் காசு மாசுபடுவதன் அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகள், விளைவுகள் ஆகியவை பற்றிய ஆய்வுகள், உடனடி செயல்திட்டம், திட்டரீதியான விவாதங்கள், தீர்வுகளை நோக்கிய செயல்பாடுகள் என்று பலவழிகளில் நாம் செயல்படவேண்டியிருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இது புதிய சிக்கல்தான், ஆனால் மாறிக்கொண்டேவரும் இயற்கைச் சூழலில் நமக்கு உடனடியாக செயல்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை.