மொசல் – சரவணன் சந்திரன்
![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/saravanan-chandran-e1728130129239-719x470.jpg)
குருமலையில் ஒன்றரையாள் உயரத்தில் நின்ற பனையடியான் சிலையை உற்றுப் பார்த்தான் கெஜி. சிலையின் தலைக்குப் பின்னே சூடு தணிந்த சூரியன், பிசிரில்லாமல் முழுமைகூடி வட்டமாகத் திரண்ட மஞ்சள் பூசணியைப் போல இறங்கி நின்றது. கண்களை அகல விரித்து, புருவங்களிரண்டும் படகின் வடிவினைப் போல மேல்நோக்கி வளைந்துயர்ந்து, இருபக்கமும் மீசை நுனியைக் கூர்வாளைப் போல முறுக்கி, வலதுகையில் இருக்கிற அரிவாளை ஓங்கியபடி, இடுப்பில் சூரிக் கத்தியையும் சொருகி நின்றகோலத்தில் அவனைப் பார்த்தார் பனையடியான். எருக்கத்தைப் போல வெக்கை பூக்கும் நிலத்தின் தெய்வமான அவரது அருகே செல்ல கெஜிக்கு அச்சமாக இருந்தது, அப்பாவை நெருங்குவதைப் போல.
அவனுடைய அப்பாவுமே அவரிருந்த காலத்தில் கிட்டத்தட்ட இக்கோலத்தில்தான் தட்டுப்படுவார். “மீசைக்கார சம்முவவேல் மவனா? உங்கப்பனை மாதிரி மீசை வச்சிராதே. அதை வச்சு ஆளுகளை மெரட்டலாம். ஆனா, பொம்பளைங்க முத்தம் கொடுக்கையில குத்துதும்பாளுக” எனச் சந்தையில் எதிர்ப்படுகிறவர்கள் கிண்டலடிப்பார்கள். போக்குத் தொழில் எதுவும் கைவசம் இல்லாததால், அப்பா குருமலைக் குன்றில் மொசல் வேட்டைக்குப் போய், கிடைப்பதைச் சந்தையில் விற்றுக் கொண்டிருந்தார் அப்போது.
கெஜிக்கு ஏழுவயது இருக்கையில் அவனையுமே மொசல் கண்ணி போட அழைத்துப் போவார் அங்கே. அவர் கண்ணி பின்னுவதை அருகில் குத்த வைத்து அமர்ந்து பார்ப்பான். பெண்கள் அணியும் வளையலைப் போல வட்டமாகச் சுருக்கை ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்த்து நீளமாகச் செய்வார் அதை. பின்னி முடித்த பிறகு அது கழுத்தில் அணியும் அளவில் பெரிதான மிக நீண்ட காசுமாலையைப் போலவே பார்வைக்கு இருக்கும். இருபக்கமும் முளைக் குச்சியடித்து அதில் அந்தச் சுருக்குக் கண்ணியைக் கட்டுவதற்கு முன்பு, படை விலங்கு ஒன்றினைப் போலத் தரையைக் குனிந்து பார்த்து, புதர்களுக்குள் நடந்து போவார். கெஜியும் ஆர்வமாகிப் பின்னாலேயே ஓடுவான்.
”வேட்டையிலமுக்கியமானதே பொருளோட நடமாட்டத்தை கணிக்கிறதுதான். சும்மா போற போக்கில எங்கயும் எதையும் வீசிடக் கூடாது. கணக்கா கழுத்துக்கு வீசுனாத்தான் அதுக்கு பேரு அருவா” என்பார் சிரித்துக் கொண்டே. தன்னுடைய மோப்ப சக்தி மீது அவருக்கு அலாதிப் பெருமிதம் இருந்தது. என்ன சொல்கிறார் என முதல்நாள் புரியவில்லை கெஜிக்கு. பிறகுதான் அவர் மொசல் நடமாடும் தடத்தைக் கண்டறிகிறார் என்பதை அறிந்து கொண்டான்.
நீரோட்டமிருந்த நிலத்தில் அருகம்புல் வளர்ந்திருந்த இடத்தில் மொசப் புழுக்கைகளை அடையாளம் கண்டார். “வயித்துக்கு எங்க சுத்துனாலும் பழக்கப்பட்ட இடத்திலதான் அமைதியா ஒக்காந்து பேள முடியும். ஒரு இடத்தில புழுக்கை போடுதுன்னா அதுதான் அதிகமா அது நடமாடுற பகுதி” என்று சொல்லி விட்டு, அங்கே அவனை ஒரு முளைக்குச்சி அருகில் நிற்கச் சொல்லி இன்னொரு முனையை அந்தாக்கில் இருந்த குச்சியில் கொண்டு போய் இறுகக் கட்டினார்.
கைநிறைய மொசப் புழுக்கைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து விடாப்பிடியாக அவனது மூக்கருகே வைத்து அதன் கவுச்சி மணத்தினை உரிஞ்சக் கட்டாயப்படுத்தினார். “இந்த மணம் உன் உடம்புல நினைச்ச நேரத்தில நல்லா ஊறணும். அப்பத்தான் நல்ல மொச வேட்டைக்காரனா உன்னால ஆக முடியும். இந்த மணம் வந்திச்சின்னா உன்னையே பாஞ்சு ஓடற மொசலாவும் நினைச்சுக்கணும்” என்றார். வேண்டாவெறுப்பாக அதைச் செய்தான் கெஜி. அது அவனுடலில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட மணத்தைப் போலவே மாறிவிட்டதாகவும் உணர்ந்தான்.
இரவு நாய் நரிகளின் ஊளைகள் அடங்கின பிறகே சிற்றுயிர்கள் தம் வளையை விட்டு நீங்கும் என்பதையும் அவரே சொல்லித் தந்தார். கண்ணியை விரித்துவைத்து விட்டு இருவரும் குருமலைக் குட்டையில் தேங்கிக் கிடக்கிற நீரில் குளித்தார்கள். கையோடு எடுத்துக் கொண்டு வந்த பயத்தம்பருப்பு மாவை உடலெங்கும் பூசி, பனம்பழத்தின் நாரைக் கொண்டு, ஒரு எருமைக்குச் செய்வதைப் போல அவனைக் குளிப்பாட்டினார். ஆனாலும் உடலில் புழுக்கை மணம் அகலவில்லை என்பதை உணர்ந்தான் கெஜி. குளித்து முடித்ததுமே பசி வயிற்றைக் கிள்ளியது.
கூடலிங்கம் ஜவுளிக்கடை தந்த மஞ்சள் பையில் அம்மா கொடுத்து அனுப்பியிருந்த கட்டுச் சோற்றைப் பிரித்து இருவரும் தின்றார்கள். அவன் அசந்து போய் கண்சொருகுகிற நேரத்தில், “விருந்தை முடிச்சிட்டு படுக்கையை போடறதுக்கு மாமியார் வீட்டுக்கால வந்திருக்க? கண்ணையும் காதையும் உஷாரா வச்சுக்கிட்டு கொட்ட கொட்ட முழிச்சுக் கிடந்தாத்தான் கைக்கு கிடைக்கிறது வாய்க்கு வந்து சேரும். இல்லாட்டி நாய்ங்க கூட்டமா வந்து தூக்கிட்டு போயிரும். இவ்வளவு பாடுபட்டுட்டு பெறகு நக்கிக்கிட்டு நிக்கணும்” எனச் சொல்லி அதட்டினார்.
வேறுவழியில்லாமல் கெஜி தூக்கத்தை உசுரைப் போலக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சில சொற்களைத் தவிர அவனிடம் அதிகமும் பேசமாட்டார் அப்பா. அவரது பார்வை தூரத்தில் அமரவைத்துவிட்டு, அவனுக்குத் தெரியாமல் புட்டியில் இருக்கிற சாராயத்தைக் குடித்துக் கொண்டிருப்பார். அப்படியும் ஒருநாள் அசந்து தூங்கி விட்டான் கெஜி. நின்றவாக்கிலேயே அவனது இடுப்பில் உதை விட்ட அப்பா, “ஏலே, க்ரீச் க்ரீச்சின்னு சத்தம் கேட்கலீயா? எந்திரிலே. சீக்கிரம் ஓடியா. கண்ணியில காலு சிக்கிச்சு போல. அத்துக்கிட்டு ஓடிரப் போகுது. உசுருன்னா சிறுசுக்குக்கூட அந்த நேரத்தில யானை பலம் வந்திரும்” என்றார் அப்பா.
அவருக்குப் பின்னாலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு ஓடினான் கெஜி. அவர் சொன்ன மாதிரியே இளம்குட்டியாட்டைப் போல இருந்த மொசலின் வலதுகால் நுனி கண்ணியில் சிக்கியிருந்தது. பாய்ந்து கடித்து விடக்கூடாது என்பதால், லாவகமாக டயர் செருப்பணிந்த காலால் அதன் சங்கினை மிதித்து, சிறுகத்தியால் கண்ணியை வெட்டி எடுத்து விட்டு, “ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. வேட்டையில முக்கியமானது எதிர் விலங்கை செயல்படவிடாம படுக்க வைக்கிறதுதான் முதல்ல. பாம்புக்கு மட்டும்தான் உடம்புல அடி போடணும். மத்த எல்லா விலங்குகளுக்குமே சங்கிலதான் அதன் சக்தி இருக்கு. கழுத்து சங்கு நொறுங்கிருச்சுன்னா பாதி பொணம்தான்” என்று சொன்னார்.
அடுத்த தடவை போனபோது சத்தம் கேட்டு முதலில் விழித்துக் கொண்டது கெஜியே. அப்பா அப்போது அதிகமாய்க் குடித்து விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை எழுப்பலாமா எனத் தள்ளிநின்று யோசித்தான். நாய் தூக்கிப் போய்விட்டால், முதுகுத் தொலி பிய்ந்துவிடும் என்கிற உணர்வு வந்ததும் அவரை எழுப்பத் தீர்மானித்தான். அன்றைக்கு அவர் செய்ததைப் போலக் காலால் உதைக்கலாமா என்கிற யோசனையும் வந்தது. பிறகு பயம் எழவே, அவரைக் கையால் தட்டி எழுப்பினான்.
எழுந்தவுடனேயே குற்றவுணர்வு அடைந்தவரைப் போல முகத்தை ஆட்டிய அவர், மின்னலடிக்கிற வேகத்தில் பாய்ந்து கண்ணியை நோக்கி ஓடினார். அந்த முறை மொசலின் கழுத்து கண்ணிக்குள் மாட்டியிருந்தது. ‘க்ரீச் க்ரீச்’ என்பதைப் போல அல்லாமல் விநோதமான ஊளைக் குரலில் அது கத்தியபடி மண்ணில் விழுந்து புரண்டு கொண்டிருந்தது. தன்னைத்தானே சுருக்குப் போட்டுச் செத்துப் போகும் மனிதர்களினுடையதைப் போல அதன் கண்களுமே பிதுங்கிச் சுருங்கின. இடையில் அதன்பார்வை கெஜியின் மீது பட்டமாதிரிகூட உணர்ந்தான். அதனுடைய ஓலத்தை மிகவருகில் கேட்டதும் நின்ற இடத்திலேயே அவன் விதிர்விதிர்த்து நடுங்கி ஒண்ணுக்குப் போனான், தன்னையறியாமலேயே. சிறிது நேரத்திலேயே பாம்பு துடிதுடிப்பதைப் போல மண்ணில் புரண்ட அது செத்தும் போனது. கெஜிக்குள் ஆழமான துயரம் உருக்கொண்டது ஏனோ.
அப்படி நிற்பதையும் அவனுடைய கால்ச்சட்டை நனைந்திருப்பதையும் நிலவொளியில் கண்ட அப்பா, “உன்னால ஒரு கொலையைக்கூட உருப்படியா பண்ண முடியாது. இனிமே இந்த பக்கம் வராத. வந்தீன்னா வேட்டைக்கே தரித்திரியம் பிடிச்சிரும்” என்றார். அதற்கப்புறம் சொன்னமாதிரி அவனை வேட்டைக்கே அழைத்துச் செல்லவில்லை அப்பா.
அம்மாவிடம் அதுகுறித்துச் சொன்ன போது, “விட்டது சனியன்னு நெனைச்சுக்கோ. இல்லாட்டி அந்தாளுகூட இருந்து நீ முழுப் புளுகாண்டியாவே மாறிடுவ. இப்பயே உங்கப்பனை மாதிரி பாதி புளுகாண்டியாத்தான் இருக்கற. உங்கப்பன் வாயில வர்றது பூராம் பொய்யி” என்றாள் ஆசுவாசம் கொண்டவளைப் போல மூச்சுவிட்டு. ‘பாதிப் புளுகாண்டியா? அம்மா எதற்காகத் தன்னை அவ்வாறு நினைக்கிறாள்?’ எனவும் யோசித்தான் கெஜி. உறுதியான துப்பு எதுவும் அக்கேள்விக்குத் தட்டுப்படவில்லை அவனுக்கு.
வேட்டைத் துணைக்கென வீட்டில் இருக்கிற தங்கைகளையும் அழைத்துச் செல்ல முடியாது என்பதால், அவர் மட்டுமே தனியாகப் போய் வந்தார். அம்மாவிடம், “அவனை மடியில படுக்கப் போட்டு இன்னமும் பால் கொடு. இந்த பயலால எந்த சந்தோஷமும் உனக்கு வராது. ஒண்ணு அந்த பக்கம் நிக்கணும். இல்லாட்டி இந்த பக்கம் நிக்கணும். நடுவால நிக்கறவனால என்னைக்குமே பயன் கிடையாது. காடோ நாடோ நோஞ்சான் பயல்களால செழிம்பு வரவே வராது. எழுதி வச்சிக்கோ” என்றார். அம்மா எதையாவது எதிர்த்துப் பேசினால் அடிவிழும் என்பதால், அமைதியாக இருந்து கொண்டாள்.
காட்டிலாகா அதிகாரிகள் அப்போது அதிகமும் கெடுபிடிகள் செய்ததால் முயல்வேட்டைத் தொழிலும் அவனுக்குப் பத்து வயதாகையிலேயே நின்று விட்டது. கூலி வேலைக்குப் போய்ப் பார்த்தார் அப்பா. எதுவுமே அவருக்குக் கட்டுப்படியாகவில்லை. “காட்டில வேட்டையாடற புலி கட்டிடம் கட்டுற வேலைக்கு போயி நின்னா நல்லாவா இருக்கும்? இம்பாம் பெரிய மீசையை வச்சுக்கிட்டு என்னால எங்கயும் கூனிக் குறுகி போயி நிக்க முடியலை பார்த்துக்கோ. கல்லுடைக்கிறவனுக்கு எதுக்குலே அரிவாள் மீசைன்னு ஏகடியம் பேசுறாங்க. என்னால முடியலை. கூண்டில அடைச்சாப்பில மூச்சு முட்டுது. எங்கயாச்சும் போயி நாலுகாசு சம்பாதிச்சு அனுப்பறேன். நீ பிள்ளைகளை பார்த்துக்கோ” எனவொருநாள் அவர் போதையில் பேசுவதை கெஜியோடு இணைந்து தங்கைகளும் கேட்டார்கள்.
அப்பா பம்பாய் கிளம்பிப் போய்விட்டதாக அம்மா ஒருநாள் சொன்னாள். சிலமாதங்களுக்கு அங்கே இருந்து விடுமுறைக்கு வருகிறவர்கள் வழியாகப் பணத்தைக் கொடுத்துவிட்டார். திடீரென அந்த வரத்துமே நின்றுவிட்டது. அப்பாவின் நண்பரான தங்கராசு மாமா, “அங்க ஆளே கண்ணில தட்டுப்படலையே தங்கச்சி. நிச்சயமா செத்திருக்க மாட்டான். ஜெயில்ல கண்டி எங்கயாச்சும் பிடிச்சு போட்டுட்டாங்களான்னும் தெரியலை. இல்லாட்டி வேற எவளையாவது சேர்த்துகிட்டு ஒளிஞ்சிக்கிட்டானான்னும் தெரியலை. என்ன என்னம்மா பண்ணச் சொல்ற?” என்றார் அம்மாவிடம்.
“உசுர கொன்னு வித்து வித்து, அவன்ட்ட கருணையே இல்லாம போச்சு. புளுகாண்டிப் பயல்” என்றுமட்டும் சொன்னாள் அம்மா பதிலாய். கொஞ்ச நேரம் என்ன பேசுவது எனத் தெரியாமல் நின்ற மாமா, கையில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளைத் தங்கைகளிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனார். அப்பாவைப் பற்றி அதற்கடுத்து எந்தச் செய்தியுமே வரவில்லை. அம்மாவுமே தேடுகிற நோக்கத்தைக் கைவிடவும் செய்தாள்.
அம்மா பணியாரம் விற்றுப் பிழைப்பைப் பார்க்கத் துவங்கினாள். தங்கைகளை அந்த வேலையில் அண்ட விடாமல், அம்மாவிற்கு ஒத்தாசை செய்து விட்டு, கெஜி பள்ளிக்குக் கிளம்பிப் போவான். அதற்கடுத்து அவன் குருமலை பக்கமே தலைவைக்கவில்லை. பணியாரம், அம்மா, தங்கை எனவிருந்த அவனுடைய வாழ்வு மணிப்பாண்டியின் அறிமுகத்திற்குப் பிறகு தடம்புரளத் துவங்கியது. பள்ளியில் அவனது நெருக்கமான சிநேகிதக்காரன். அவனோடு இருந்தால் தைரியமாக இருந்தது கெஜிக்கு. பதினோராம் வகுப்புப் படிக்கையிலேயே இருவரும் பான்பராக் போடத் துவங்கினார்கள். “நல்ல நாட்டுச்சாராயம் ஒருநாள் குடிச்சுப் பாருல. சொர்க்கம் போல இருக்கு” என மணிப்பாண்டி அவனை வற்புறுத்தவும் அதைத் துவங்கினான்.
மணிப்பாண்டியின் குடும்பம் பன்றி வளர்த்தார்கள். அவனுடைய வீட்டிற்குப் போனபோது பஞ்சுபோல இருந்த பன்றிக் கறியையையும் முதன்முறையாகச் சாப்பிட்டுப் பார்த்தான் கெஜி. தன்னுயரத்திற்கு இருந்த வேல்கம்பின் நுனியில் சுருக்குப் போட்டு பன்றியின் கழுத்தில் இறுக்கி அதைத் தரதரவென இழுத்துவந்து காதை வெட்டி அடையாளம் போடுவதெல்லாம் இயல்பான காட்சிகளாக கெஜிக்குள் பதியத் துவங்கின என்றாலும், அதைச் செய்து பார்க்கத் துணியவில்லை அவன்.
மணிப்பாண்டி பெயரளவிற்குத்தான் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டு இருந்தான். அவன் வராத நாட்களில் கெஜிக்குள் ஒருவிதமான சோர்வு பரவும். தேடிக் கொண்டு அவனே பார்க்கப் போய்விடுவான் மணிப்பாண்டியை. அவனது அப்பத்தா ஒருத்திக்கு கெஜியைக் கண்டால் உற்சாகம் புரண்டு விடும். “ஒடம்பு பலமா இருந்தாலும் மொகம் ஆட்டுக்குட்டிய மாதிரியே இருக்கேலே உனக்கு. ஏசுசாமி கையில இருக்கற குட்டி மாதிரியே இருக்க. இந்த பயகூட சகவாசத்தை விட்டொழி. இவனுக சங்கறுத்தே பழக்கப்பட்டவனுக. நீ போயி அப்பத்தாக்கு ஒரு கட்டு வெத்தலை வாங்கிட்டு வர்றீயா?” என்றாள் ஒருசமயத்தில்.
எதற்காக அப்படிச் சொல்கிறாள்? என்கிற கேள்வியும் கெஜியினுள் எழுந்தது. சிநேகிதக்காரனுக்கு எதிராகச் சிந்திக்கும் விதத்தை உடனடியாக வெறுக்கவும் செய்தான். பனிரெண்டு போனதும் பன்றிக் கறி, சாராயம் எனக் கெஜியின் உடம்பிலுமே மதமதப்பு ஏறியது. மணிப்பாண்டியைப் போல அவனும் பள்ளியிலேயே சூரிக்கத்தியை உடன் வைத்துக் கொள்கிற பழக்கத்தைப் பின்பற்றத் துவங்கினான்.
பெண்ணொருத்தியோடு பேசமுயன்ற சின்னப் பயல் ஒருத்தனை மேட்டுத் தெரு பொட்டலில் மறித்து, “எங்க தெரு பிள்ளைகிட்ட பேசுற அளவுக்கு தைரியம் வந்திருச்சாடா உனக்கு? ஒழுங்கா பணத்தை கொண்டு வந்து கொடுத்திடு. இல்லாட்டி சொருகிடுவேன்” எனச் சூரிக்கத்தியை அவனது இடுப்பில் வைத்துக் குத்துவதைப் போலக் காட்டி மணிப்பாண்டி அச்சமூட்டியபோது, கெஜியும் உடனிருந்தான். அந்தச் சின்னப் பயல் எப்படியோ வீட்டிலிருந்து திருடிக் கொண்டு வந்து கொடுத்தான் அப்பணத்தை. அதைவைத்து இருவரும் மூன்றுநாட்கள் பள்ளிக்குப் போகாமல் மிதப்பில் அலைந்தார்கள்.
அதற்கு மேல் அலைந்தால் வீட்டிற்குத் தெரிந்துவிடும் என்பதால், கெஜி மட்டும் பள்ளிக்குக் கிளம்பிப் போன போது, அவனைக் கணக்கு வாத்தியார் அழைப்பதாகச் சொன்னார்கள். ஆசிரியர்கள் இருக்கிற அறையினுள் அவர்மட்டும் தனித்திருந்தார். போன வேகத்தில், “பெரிய ரௌடியாடே நீயி?” எனக் கேட்டபடி பிரம்பால் முழங்காலில் அடித்தார். கெஜிக்குள் மிச்சமிருந்த மிதப்பு அவனையறியாமல் சட்டென எட்டிப் பார்த்துவிட்டது. இடுப்பில் இருந்த சூரிக்கத்தியை உருவி, ”தேவிடியா மவனே, சங்கறுத்துறுவேன் உன்னை” என்றான் அவரை நோக்கி.
அந்த வார்த்தையைக் கேட்ட அவர் அப்படியே நாற்காலியில் சரிந்து அமர்ந்து மூச்சுவாங்கினார். அப்போதும் திரும்பிப் போகாத கெஜியை நோக்கி, “இறைச்சி விக்கறவன்கூட இப்படி ஒரு வார்த்தையை சத்தமா சொல்ல மாட்டாண்டா. இப்படி பொசுக்குன்னு கருணையே இல்லாம சொல்லிட்டீயே? எம்வாழ்நாள்ளயே மொத தடவையா இந்த வார்த்தையை ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை பார்த்து சொல்லிக் கேட்கறேன். மனசே ஆறலைடா எனக்கு. நல்வழிப்படுத்தணும்னு நெனைச்சேன். இனிமே உன் திசைக்கே வரமாட்டேன்” என்றார் இறைஞ்சும் குரலில்.
அதைக் கேட்டபோது கெஜிக்குள் சாதனையுணர்வு பெருகியது, தானும் ஓராளாகிவிட்டோம் என்கிற மாதிரி. மணிப்பாண்டியிடம் அதைச் சொன்ன போது, “அவஞ்சங்கை அறுத்திருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நாமளும் ஊருக்குள்ள பெரிய ஆளா மாறி இருக்கலாம்” என்றான் உடனடியாக. அவ்வாறு கணக்கு வாத்தியாரை மிரட்டியது பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் மத்தியிலும் பரவிவிட்ட செய்தி பையன்கள் வழியாக கெஜியை வந்தடைந்தது. இனி பள்ளிக்குத் திரும்பிப் போகமுடியாது என்கிற நிதர்சனம் மெல்ல அவனுக்கு உறைக்கத் துவங்கியது.
அம்மாவிடம் என்ன சொல்வது என்கிற கேள்வி பெரும்பாறையைப் போல அவனது மனதில் குடிகொண்டது. ஆசிரியர்கள் வீடுதேடி வந்து விடுவார்களோ என்கிற அச்சமும் எழுந்ததால், அதைப் பற்றிப் பையன்களிடம் விசாரித்ததில், “கத்தி எடுத்துவனுக்கு கத்தியாலதான் சாவு. அவன் குடும்பத்துக்கிட்ட சொல்லி நல்வழிப் படுத்தறதுக்கு நாம என்ன ஏசு சபையா நடத்துறோம். இனிமே அவம் தலைவிதி. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பன்னி கணக்கா நடுரோட்டில துடிச்சிக்கிட்டு கெடந்தாகூட பாவபுண்ணியம் பார்த்து சொட்டுத் தண்ணிகூட தந்திராதீங்க. தொலைஞ்சு ஒளியட்டும் சனியன்” எனத் தலைமையாசிரியர் எல்லா ஆசிரியர்களையும் கூட்டிவைத்துப் பேசியதாகச் சொன்னார்கள்.
அந்தத் தகவலைக் கேட்டதும் கெஜிக்குள் உடனடியாக எழுந்தது ஆசுவாச உணர்வுதான். ஆனால், இரவு படுத்திருந்த போது, அவனுக்குள் குற்றவுணர்வு வியர்வையை மிஞ்சினாற் போலப் பெருக்கெடுத்தது. உடல்தளர்ந்து ஒருக்களித்துப் படுத்திருந்த அம்மாவைப் பார்த்தபோது, மேலும் அது வண்டெனக் குடைந்தது. அம்மாவிற்கு என்றேனும் தெரியவந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்க்கையிலேயே அச்சம் கிளம்பியது. அச்சத்தைப் பின்பற்றி வருத்தவுணர்வும் அவனுக்குள் எழுந்தது. அப்பா போனபிறகு தன்னைத்தான் அதிகமும் அம்மா நம்புகிறாள் என்கிற எண்ணம் வந்தபோது அவனுக்குக் கண்கள் துளிர்த்தன. அம்மாவிடம் சொல்லிவிடலாமா எனவும் கூடத் துணிந்து எழுந்து அமர்ந்து, மறுபடியும் படுத்துக் கொண்டான்.
“என்னலே என்ன செய்யுது? ஸ்கூல்ல ஏதாச்சும் சொன்னாங்களா? தலையை அடமானம் வச்சாவது நோட்டுபுக்கு காசை அடுத்தவாரம் தந்திடுவேன். கவலைப்படாதே. நீ தலையெடுத்திட்டா எல்லாம் சரியாயிடும். தண்ணியை குடிச்சிட்டு, துருனூறைப் பூசிட்டு படு. எதையும் போட்டு குழப்பாத. நின்னு புடுங்குற தெய்வம் நின்னு கொடுக்கவும் செய்யும் ஒருநாள்” என்றாள் அம்மா திரும்பிப் படுத்து. பிறகு என்ன நினைத்தாளோ அவளே எழுந்து போய்ச் செம்பில் தண்ணீர் மோந்துகொடுத்துவிட்டு திருநீறை எடுத்துப் பூசி விட்டாள். அப்போதுகூடச் சொல்லி விட்டால் என்ன என்றுதான் கெஜிக்குத் தோன்றியது. ஆனாலும் மனதில் இருந்த வார்த்தைகளுக்குப் பலம்கூடி வரவில்லை அவனுக்கு. சங்கறுப்பேன் என்றதை எப்படிச் சொல்லிவிட முடியும் அவளிடம்?
அம்மாவை ஏமாற்றுகிறோமோ என்கிற கவலை அடுத்த ஆறேழு நாட்களுக்கு மட்டுமே இருந்தது அவனிடம். மணிப்பாண்டியின் அருகாமைக்குச் சென்றுவிட்டால், அப்படியான எண்ணங்களே தனக்குத் தோன்றவில்லை என்பதையும் உணர்ந்தான் கெஜி. பள்ளிக்குப் போக வழியில்லாத இருவரும், அவ்வூரில் உள்ள பெரிய அண்ணன்களின் வால்பிடித்துச் சுற்றத் துவங்கினர். அதில் இரண்டு அண்ணன்களின் மீது மூன்று கொலைவழக்குகள் வரையிருந்தன.
பாதிக் கட்டிமுடித்த பழைய கல்கட்டிடம் ஒன்றில்தான் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். மணிப்பாண்டிக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்ததைப் பார்த்தான் கெஜி. மணிப்பாண்டியின் கையில் அப்போது ஏராளமாகக் காசு புழங்கியதையும் கண்டான். அதுகுறித்துக் கேட்கையில், “உன்னை மாதிரி நோஞ்சான் பயல்ட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? சின்னச் சின்ன சம்பவம்லாம் இப்ப பண்ண ஆரம்பிச்சிட்டேன்” என்றான் துடுக்குத்தனமாக. அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் கெஜிக்குள் கோபம் உருவாகி, “யார்ல நோஞ்சான்? விட்டா உன் சங்கை கூட அறுத்திடுவேன்” என்றான் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
அதைக் கேட்டுக் கோபமடையாமல், “அப்படி சொல்றா என் சிங்கக்குட்டி. மீசைக்கார சம்முவவேல் அண்ணாச்சி மவன்னா தொக்கா என்ன?” என்றான். அப்பாவின் பெயரை அந்தச் சந்தர்ப்பதில் அப்படிக் கேட்டபோது சிலிர்ப்பாக இருந்தது கெஜிக்கு. கையில் முடிகள் புல்லரித்து நட்டுக் கொண்டு நின்றன. தூரத்தில் ஏசு சபையில் இருந்து, “எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுகின்றார். எண்ணெயினால் என் தலையை அபிஷேகம் பண்ணுகின்றார்.” என்கிற பாடல் வரிகளைக் காற்றுக் கடத்திக் கொண்டு வந்தது அப்போது.
இனியொருபோதும் மணிப்பாண்டியின் முன்னால் சொங்கிப் போய் மட்டும் நின்றுவிடக்கூடாது என அந்தச் சமயத்தில் முடிவு எடுத்தான் கெஜி. மணிப்பாண்டி இழுத்த இழுப்பிற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே ஆட்டைப்போல அதற்கப்புறம் அலையத் துவங்கினான் கெஜி. அவனையறியாமலேயே வேம்பின் பிசினில் சிக்கிய கட்டையெறும்பைப் போல அவனோடு மட்டுமே ஒட்டிக் கொண்டும் அலைந்தான்.
இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்குப் போன முதல்நாள், “பன்னெண்டு பரிட்சைங்கறதால சிநேகிதக்காரன் ஒருத்தன் வீட்டில இருந்து படிக்கிறேன்” என்றான் அம்மாவிடம். அதை முழுக்கவே அவள் நம்பிவிட்டதைப் போன்ற உடல்மொழியைக் காட்டிவிட்டு, “அதெல்லாம் நல்லபடியா முடிச்சிருவ. முடிச்சிட்டா ராணுவத்தில சேர்த்து விட்டிர்றதா சீனிச்சாமி மாமா சொன்னாரு. கைநிறைய சம்பளம் தருவாங்களாம்” என்றாள் அம்மா. பிறகு என்ன நினைத்தாளோ, “உன்னால ஒரு குருவியைக்கூட சுடமுடியாது. அங்க எல்லையில எதிரியை போய் சுடுவீயா நீயி? ரொட்டிதான் சுடணும் அங்க நீயி” என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாய்ச் சிரித்த போது சுருக்கென இருந்தது கெஜிக்கு.
முன்வைத்த காலை பின்னிழுக்க இயலாத இக்கட்டு அதுவெனத் தோன்றியதால் அம்மாவிடம் இருந்து தப்பித்து பக்கத்து மொட்டை மாடிக்குத் தூங்கப் பாயை எடுத்துக் கொண்டு ஓடினான் கெஜி. சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிட்டால்கூடத் தேவலை என்றுமே தோன்றியது தூங்கிப் போவதற்கு முன்பு. காலைச் சுற்றின பாம்பு கணக்காய் அவனை மணிப்பாண்டி நகரவிடவே இல்லை அதற்கப்புறம்.
மேலும் மேலுமென அவ்வுலகத்தினுள் ஆழ அழைத்துச் சென்றபடியே இருந்தான். அந்தமுறை கல் கட்டிடத்தினுள் புதிதாய்ச் சிலர் வந்து அமர்ந்து இருந்தனர். நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த அந்த அண்ணன்கள் பேசுவதைக் கேட்கவே வித்தியாசமாக இருந்தது. “என்னலே மக்கா. புதுசா தொழிலுக்கு பொடிசுகளைகூட தயார் பண்ணி வச்சிட்டீங்க போல” எனச் சொன்ன போது சிரித்துக் கொண்டனர் இருவரும். உள்ளூர் அண்ணன்களைப் போல அல்லாமல், இருவரையும் மதிப்பாய்ப் புதியவர்கள் நடத்திய விதம் கெஜிக்குப் பிடித்து இருந்தது. அவர்களுடைய அருகாமை சுகமாகவும் இருந்தது அவனுக்கு.
ஏதோவொரு பெரிய சம்பவம் செய்ய வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது கெஜிக்கு. மணிப்பாண்டியினாலுமே என்ன சம்பவமென உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அந்த வேலை முடிந்தால் எல்லோருக்குமே காசு கிடைக்கும் என அங்கே பேசிக் கொண்டிருந்ததும் காதில் விழுந்தது. அதுவரை காசுக்காக எதையுமே அங்கே எவரும் செய்தது இல்லை என்பதால், அதுவொரு புதுவிதமான அனுபவமாகவும் இருந்தது அவர்களுக்கெல்லாம் என்பதையும் உற்றுக் கவனித்தான் கெஜி.
அதிக கூட்டத்தோடு இருந்ததால் கெஜியின் அடியாழத்தில் ஊறிக் கிடந்த அச்சவுணர்வு அந்தச் சமயத்தில் மட்டுப்பட்டு இருந்தது. அதை அவன் வகைபிரித்து அறியாதவனாகவும் இருந்தான். மூர்க்கத்தை வலுக்கட்டாயமாக எடுத்து முகத்தில் பூசிக் கொண்டான். நாகர்கோவிலில் இருந்து வந்த கூட்டத்தில் ஒரு அண்ணன், “என் தம்பி மாதிரியே முகச்சாடை உனக்கு மக்கா. நல்லா இரு. எங்களைவிட நல்லா வருவ ஒருநாள்” என்று சொன்ன போது கெஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களது இருப்பு தந்த அரவணைப்பில் அவன் மனம் அப்போது குதியாட்டம்கூடப் போட்டது. அவனது கவனத்தில் இருந்து அம்மாவும் தங்கைகளும் வெகுதொலைவிற்கு நகர்ந்து போயிருந்தனர். எப்போதாவது அந்தச் சிந்தனை வந்தால்கூட வலுக்கட்டாயமாக அதிலிருந்து விலகி, தூரத்தில் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிற அரிவாளை உற்றுப் பார்க்கத் துவங்கினான்.
பிரியாணி, சுக்கா எனப் புதுவிதமான உணவுகள் தந்த கிறக்கமுமே அவனுள் சுவையாய் நீடித்தது. மணிப்பாண்டிதான் விஷயத்தை மோப்பம் பிடித்துச் சொன்னான். அவர்களுடைய ஊரிலேயே பெரிய பேக்கரி வைத்திருக்கிறவரைச் சம்பவம் செய்யவே அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து சொன்னான். பெண்வழித் தகராறுக்கு, உள்ளூர் ஆட்களை வைத்துச் செய்தால் நன்றாக இருக்காது என்பதால் எதிராளி நாகர்கோவிலில் இருந்து அவர்களை இறக்குமதி செய்திருந்தார்.
அவர்களும் உள்ளூர் கைகாரர்களின் தயவில்லாமல் வேற்றிடத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதால் கெஜி தரப்பினரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். இரண்டு தரப்புமே பெரிய இடம் என்பதால், கெதியான பணம் அந்தக் கொலைக்குப் பேசப்பட்டு இருந்தது. சும்மாவெல்லாம் கொல்லக் கூடாது, சங்கை அறுத்துப் பனையடியான் கோவில் சூலத்தில் சொருகி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டும் இருந்தது.
”பேக்கரிக்காரன் அவங்க குடும்பத்து பொம்பளையாள் மேல கையை வச்சிருப்பான். இல்லாட்டி இவ்வளவு வெலம் எடுத்து திரிய மாட்டானுக” என்றார் ஒருத்தர். ஆனால் செய்யச் சொன்னவர்கள் காரணம் பற்றி விலாவாரியாக இவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ‘பணம் தருகிறோம், சொன்னதைச் செய்’ என்கிற அளவோடு நிறுத்திக் கொண்டார்கள். கூட்டத்தினர் மத்தியில் குறுகுறுப்புணர்வு கடலலையைப் போலப் பெருகியது. எல்லோருமே அந்தவுணர்வில் கடலில் குளிக்கிறவர்களைப் போல மிதந்தார்கள்.
கெஜிக்குமே திருச்செந்தூர் கடலுக்குப் போய்விட்டு வந்தபிறகு இரவு முழுக்கவிருந்த அந்த மிதத்தலுணர்வைப் போல ஒன்று உள்ளுக்குள் அலையாடியது. ஆளை அடையாளம் காட்ட மணிப்பாண்டியை நாகர்கோவில்க்காரர்கள் உடன் அழைத்துச் செல்வது, கெஜியை முன்னதாகவே குருமலைக்குப் போகச் சொல்லி அங்கே உளவு பார்ப்பது எனத் தீர்மானம் ஆனது. உள்ளூர் அண்ணன்கள் வெளிப்படையாகக் கூடமாட அலைந்தால், காவல்துறையினர் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்பதால் மறைவாக குருமலைக்கு வந்துவிடுவது என இறுதி ஏற்பாடும்.
அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, “காட்டிட்டு ரெண்டுபேருமே ஒதுங்கிக்கோங்கடே. உங்களுக்கு இதனால ஒரு பிரச்சினையும் வராது. சம்பவம் முடிஞ்சதும் நாங்க விழுப்புரம் கோர்ட்ல போயி சரணடைஞ்சிருவோம்” என்றார்கள். அப்போது மணிப்பாண்டி அவர்களிடம், “அவன் வேண்டாம்ணே. அவனுக்கு கடைசி நேரத்தில கால் நடுக்கம் வந்திரும்” என்றான் அசால்ட்டான தொனியில். உடனடியாக கெஜி, “நீ பொத்திக்கிட்டு இரு. குருமலை காட்டை பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமால? அங்க என்னால மொசல் புழுக்கையைக்கூட அடையாளம் காண முடியும்” என்றான் கெஜி முந்திக்கொண்டு. அர்த்தம் பொதிந்த பார்வையை அங்கிருப்பவர்கள் அவன்மீது வீசினார்கள் அப்போது.
அதன்படியே அன்று மாலை குருமலைக்கு முன்னதாகவே கிளம்பிப் போய் நின்று இருந்தான் கெஜி. வாயாலும் மனதாலும் ஒன்றை மீளமீள நிகழ்த்திப் பார்த்துவிடலாம். ஆனால், செயல் என வருகையிலேயே அதன் வீச்சும் கனமும் அதிகரித்தபடியே இருக்கிறது என்பதை உணர்ந்தான். அப்பாவோடு வந்ததற்கு அடுத்தபடியாக அப்போதுதான் குருமலையில் தன்னுடைய காலைப் பதித்தான் கெஜி.
சின்ன வயதில் வந்தபோது சிலையின் பீடத்தின் அடியில் அமர்ந்து அப்பாவிற்காக இரவுவேளையில்கூடக் காத்து இருந்திருக்கிறான். ஆனால், அன்றைக்கு அவனுக்குள் சிலையை நெருங்கவியலாத அச்சவுணர்வு பெருகியது. சண்முகவேல் மீசை முறுக்கிவிட்டு அவனையே உற்றுப் பார்த்தமாதிரி இருந்தது. பறவைகள் சத்தங்களையடக்கி கூடடைந்தன. விரைவிலேயே இருளும் வந்துவிடும் என்பதை அனுபவத்தில் அறிந்து வைத்திருந்தான் கெஜி.
இருளிற்குள் பனையடியானோடு எப்படித் தனித்திருப்பது என்கிற சிந்தனை வந்தபோது, அப்பாவின் நினைவுகள் அவனுக்குள் சுழன்றடிக்கத் துவங்கின. அவருடனான வேட்டை அனுபவங்களை அசைபோட்டு தனக்குள் தைரியத்தைத் திரட்டிக் கொள்ள முயன்றான். அதைத் தவிர வேறு எதை நோக்கியுமே எண்ணங்கள் வழுக்கிப் போகாதபடி தன்னை இழுத்துப் பிடித்தான். ஆனால், கட்டுப்பாடு தளர்ந்து அவனுக்குள் அப்பா, அம்மா, வீடென எண்ணங்கள் பெருக்கெடுக்கத் துவங்கின.
எதற்காக இப்படி வந்து நின்று கொண்டு இருக்கிறான் என்கிற சிந்தனை முதன்முறையாக எழுந்தது. அந்தச் சிந்தனை எழுந்தவுடனேயே அச்சவுணர்வு மட்டுப்படுவதைப் போலவும் உணர்ந்தான். ஊக்கத்தைத் திரட்டிக் கொண்டு சிலையை நோக்கிப் போனதும் அனிச்சையாய் அங்கிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் பூசினான். மேல்நோக்கி பார்த்த போது பனையடியான் குனிந்து அவனை நோக்குவதைப் போலவுணர்வு கிடைத்தது. “அய்யா காப்பாத்து” எனச் சிறுவயதில் சொன்னதைப் போலவே அப்போது தன்னை மீறிச் சொன்னான் கெஜி.
நடுக்கத்துடன் சிலையின் பீடத்தில் அமர்ந்த போது, அவனது முதுகிற்குப் பின்னால் கண்கள் உற்றுப் பார்ப்பதைப் போல உணர்வு கிட்டியது. திரும்பிப் பார்த்துவிடக்கூடாது என்கிற வைராக்கியத்தோடு அமர்ந்திருந்தபோது, அவனுக்கு அம்மா திருநீறு பூசி விட்ட காட்சி நினைவில் மீண்டது. உடலெல்லாம் நடுக்கம் பரவியது. கால்களைத் தொடையோடு சேர்த்து வைத்தும் அந்த நடுக்கம் நிற்கவில்லை. கண்களை மூடி அமர்ந்து அந்தவுணர்வை விரட்ட பிரயத்தனப்பட்டான்.
நரியொன்று ஊளையிடுகிற சத்தம் கேட்ட போது திடுக்கிட்டு விழித்தான். அவனையறியாமல் அம்மாவென வாய்விட்டு அரற்றினான். அந்தச் சொல்லை உதிர்த்ததும் அவனது கண்களில் நீர் கோர்த்தது. வாய்விட்டு அழுதால் நன்றாக இருக்கும் எனவும்கூடத் தோன்றியது. “கருணையே இல்லையேடா” என அந்தக் கணக்கு வாத்தியார் சொன்னது சம்பந்தமேயில்லாமல் அப்போது நினைவிற்கு வந்தது. அப்பா நினைவில் இருந்து அகன்று அம்மா அந்தயிடத்தில் வந்து குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்து ஊதுகுழலால் நெருப்பினுள் ஊதினாள். அவனது நெஞ்சிற்குள் புகை, மூட்டமாய்ப் பரவியபோது தன்னை மறந்து வெடித்து அழுதான் கெஜி. மணிப்பாண்டி அப்போது அவனது எண்ணத்தின் ஒருமூலையில்கூட இல்லை.
திரும்பி வீட்டிற்குச் சென்று விடலாம் என்கிற நோக்கம் அழுத்தமாக அவனுள் உருவானது. “அம்மா, என்னை மன்னிச்சிரும்மா. தெரியாம செஞ்சிட்டேன். இனிமே ஒருகாலத்திலயும் இப்படிச் செய்ய மாட்டேன்” எனச் சத்தமாக வாய்விட்டுச் சொல்லி பனையடியானின் முகத்தைப் பார்த்தான். அவர் மீசையைத் தாண்டி முறுவலிப்பதைப் போலவும் அவனுக்குத் தோன்றியது.
உண்மையைச் சொல்லிவிட்டால் அம்மா நிச்சயம் மன்னித்துவிடுவாள் என்கிற நம்பிக்கையும் அப்போது பிறந்தது அவனுக்கு. எதன் சங்கையும் அறுக்க மனம்வரவில்லை தனக்கு எனச் சொன்னால், நம்புவாளா அம்மா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனாலும் வீட்டிற்கே திரும்பிப் போவது குறித்த ஆழமான திருப்தியுணர்வு அவனுக்குள் தட்டுப்பட்டபோது, அவனது முதுகைத் தொட்டு பனையடியான் ஓடுவெனத் தள்ளுவதைப் போல உணர்ந்த கணத்தில், கெஜி தலைதெறிக்க ஓடத் துவங்கினான் அங்கிருந்து.
ஓட்டத்தின் குறுக்கே இரண்டு மொசல்கள் துள்ளிக் கொண்டு ஓடின. யாரும் பார்க்காத வண்ணம் ஊரைச் சுற்றிக் கொண்டு ஓடினான். ஊர்ச் சாலை வந்த பிறகும் அவனுள் இருந்த பதற்றம் இன்னும் வடிந்தபாடில்லை. அம்மாவிடம் பள்ளிக்குப் போகாததை மட்டுமே சொல்ல வேண்டும், கொலை விவகாரம் அவளுக்கு எப்படித் தெரியப் போகிறது என்கிற சிந்தனை மட்டுமே அவனுக்குள் ஓடியது.
குற்றவுணர்வின்றி அம்மா முன்னால் நிற்க முடிந்தாலே போதுமானது என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்தான் கெஜி. தன்னுடைய பதற்றத்தைத் தணியச் செய்வதன் பொருட்டு குமரன் திரையரங்கினுள் நுழைந்தான். ஓடின படத்தில் மனம் ஒட்டவேயில்லை. இந்நேரம் சம்பவத்தை அவர்கள் செய்து முடித்திருப்பார்கள் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்? அவன் போய் அமர்ந்தது யாருக்குத் தெரியும்? எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு படம் முடிந்தபிறகு, தன்னை யாராவது நோட்டம் பிடிக்கிறார்களா என சுற்றும் பார்த்தபடி வீட்டிற்குப் போனான் கெஜி.
கதவு திறந்தே கிடந்து, உள்ளுக்குள் விளக்கெரிவது தெரிந்தது. உடனடியாகவே அவனுக்குள் பழைய படபடப்பு எழுந்த போது, நடைச்சத்தம் கேட்டு வெளியே அம்மா, அப்படியே நிலைவாசலில் குத்த வைத்து அமர்ந்து தலையிலடித்துக் கொண்டு அழத் துவங்கினாள். அப்போது அவள் சொன்னது நன்றாக கெஜிக்குக் கேட்டது.
“படுபாவி. சங்குல பாலுக்கு பதிலா கருணையா இருக்கணும்ங்கறதை ஊத்தி சொல்லி சொல்லி வளர்த்தேனே உன்னை? இப்படி ஒருத்தன் சங்கை அறுத்துட்டு வந்து நிக்கறீயே? போலீஸ்காரன் வீடு தேடி வந்து சொல்லிட்டு போயிட்டானே? பணம் படைச்சவங்க உன்னை உசுரோட விடுவாங்களா? எங்கயாச்சும் கண்காணாத திசைக்கு ஓடிருடா. உசுராவது மிஞ்சும். கடைசீல உங்கப்பனை மாதிரி முழு புளுகாண்டியாவே மாறீட்டியே பாவி. நம்ப வச்சு என் சங்கை அறுத்திட்டீயே?” என நெஞ்சிலடித்து வெடித்து அழுதாள்.
“சத்தியமா நான் இல்லைம்மா” என வாய் முணுமுணுத்தாலும் குரல் வெளியே வரவில்லை கெஜிக்கு. ஆட்கள் வருகிற மாதிரிச் சத்தம் கேட்டதும், அங்கிருந்து ஓடத் துவங்குவதற்கு முன்பு அனிச்சையாய் அவனது வலதுகரம் கழுத்துச் சங்கினைத் தடவிப் பார்த்துக் கொண்டது.
மொசப் புழுக்கை மணம் அவன் மேனியெங்கும் பரவியது அப்போது.