கட்டுரைகள்

மூன்று சினிமாக்கள் – சாண்டில்யன் ராஜு

 

மக்கள் நலவாழ்வுத்துறைங்குறதும் காவல்துறை மாதிரிதான். ஒரு குற்ற சம்பவம் நடந்தா அதை எப்படி காவல்துறை  துப்புத் துலக்குவாங்களோ அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு குறிப்பிட்ட  பகுதியிலிருந்து உண்டாகும்போது அதன் மூலக்காரணியையும், அது எப்படி பரவியதுங்குறதையும் கண்டறிவது மக்கள் நலவாழ்வுத் துறையோட வேலை. மத்த இடங்களில் எப்படின்னு தெரியாது ஆனா தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளரும் தன்னுடைய பகுதில எந்த ஒரு பகுதியிலிருந்தாவது ஐந்துக்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கோ காய்ச்சலோ ஏற்பட்டா விரைந்து அந்தப் பகுதிக்கு போகனும். அதற்கான காரணத்தைக் கண்டறிந்து மாவட்ட சுகாதார இயக்குனருக்கும் ஆட்சியருக்கும் அறிக்கை அனுப்பனும். இப்பொழுதும் தமிழ்நாடு முழுக்க உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில்  ஒரு கண்ணாடிக் குடுவையில் சாப்பாடு சேம்பிள் எடுத்து வைத்தாக வேண்டும். மாணவர்கள்  சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கோ வாந்தியோ அவர்களுக்கு ஏற்பட்டால் அந்த சேம்பிள் உணவைப் பரிசோதித்து எதனால் அந்த பிரச்சினை ஏற்பட்டது என கண்டுபிடிக்க இது உதவும்.

ஒரு இடத்தில் அவுட் ப்ரேக் எனப்படும் திடீர் நோய் வெடிப்பு ஏற்பட்டால் அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இதுபோன்ற அவுட்பிரேக் சமயங்களில் ஹீரோக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்தான். அவர்களின் கடும் உழைப்பே டெங்கு முதல் இன்று கரோனா வரை பல உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் படம் எந்த செய்தித்தாள்களிலும் முன்னிலை பெறாது மாறாக அந்த துறையின்அமைச்சரோ அரசியல்வாதியோ அந்த நற்பெயரைப் பெற்றுச் சென்று விடுவார்.அவர்கள் இறுதி வரை வெளிச்சத்திற்கு வராத ஹீரோக்களாகவே இருந்து விடுவார்கள். தமிழகத்தில் கொரோனா வரும் வரை மிகவும் பிரசித்தி பெற்ற நோய் டெங்குதான். மற்ற வளர்ந்த நாடுகளில் டெங்கு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு மாறாக கொடிய புதுப் புது வைரஸ்கள் சீனா அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலிருந்துதான் பரவுகிறது. வைரஸ் பரவுதல் மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த மூன்று திரைப்பங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் அவலங்களை ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்கூட்டியே கணித்த சினிமாக்கள்.

1. Outbreak -ஆங்கிலம் (1995)

ஏர் ஃபோர்ஸ் ஒன் மாதிரியான ஆக்சன் படங்களை இயக்கிய Wolfgang peterson  இயக்கி Dustin hoffman, Morgan freeman மற்றும் Kevin spacey மாதிரியான பெரிய தலைகள் நடித்த படம்.1976 ல் காங்கோ தேசத்தில் வெடித்த எபோலா வைரஸ் காய்ச்சலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதை. அமெரிக்காவில் ஒரு கற்பனை நகரமான Cedar creek எனும் ஊரில் கதை நடக்கின்றது. ஆப்பிரிக்காவிலுள்ள Zaire எனும் பழங்குடி கிராமத்தில் மர்மக்காய்ச்சல் பரவி பலர் உயிரிழக்கின்றனர். அதைப் பார்வையிட செல்லும் மருத்துவர் சாம் டேனியல்ஸ்(Dustin hoffman) அமெரிக்கா அரசாங்கத்தை எச்சரிக்கிறார். வழக்கம் போல உயர் அதிகாரிகள் அவரைப் புறக்கணிக்கின்றனர். அதன்பின்  அமெரிக்காவிற்கு விற்பதற்காக கப்பலின் மூலம் கொண்டு வரப்படும் ஒரு ஆப்பிரிக்கக் குரங்கின் மூலம் Motaba என்ற புதுவித வைரஸ் Cedar creek நகரைத் தாக்குகிறது.

படத்தில் வைரஸ் பரவும் விதமும் அதன் விளைவுகளும் மிகவும் மோசமானதாகக் காட்டப்பட்டிருக்கும். வைரஸ் தாக்கிய பிறகு அதற்கு மருந்தே கிடையாது. 48 மணி நேரத்தில் சாவு நிச்சயம். அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க ஆப்ரிக்காவிலிருந்து வந்த குரங்கையும் தேட வேண்டும். வைரஸைப் பரப்பிய குரங்குக்கு நோய் இல்லை என்பதை யூகிக்கும் டாக்டர்.சாம் குரங்கின் உடலில் இந்த வைரஸுக்கான ஆன்ட்டீபாடீஸ் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அதற்குள் அவரைக் கைது செய்ய ஆணை வருகிறது. அதே நேரம் இந்த நகரத்திலிருந்து நோய் மற்ற நகரத்திற்குப் பரவாமலிருக்க அந்த நகரத்தையே அழிக்க அமெரிக்க தலைமை முடிவு செய்கிறது. அதன் பின் டாக்டரும் அவரது குழுவினரும் என்ன செய்தார்கள் என்பதை ஆக்சனுடன் படம் சொல்கிறது.

இப்போதைக்கு அமெரிக்க நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்தியன் நெட்ஃபிளிக்ஸில் படம் இல்லை. டோரன்ட்தான் ஒரே வழி.

2.Contagion -ஆங்கிலம் ( 2011)

 

இதுவும் ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம்தான். கேட் வின்ஸ்லெட், மாட் டேமன்,க்வனத் பேல்ட்ரோ உட்பட நிறையத் தெரிந்த முகங்கள் நடித்த படம். 2011 ல் வெளிவந்த படம் அப்பொழுது பெரிதாகப் பேசப்படவில்லை. இந்த கரோனா பீதி ஆரம்பித்த பிறகு பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமேசான் ப்ரைமில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 2012 ல் இந்தப் படத்தைப் பார்த்த பொழுது ரொம்ப சுமாராகவே இருந்தது. இப்பொழுது இந்தப் படத்தை ரீவிசிட் செய்யும் போது தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஹாங்காங்கிலிருந்து மர்மக்காய்ச்சல் மற்றும் இருமலுடன் அமெரிக்காவுக்கு வந்திறங்கும் பெண்மணி மூலமாக உலகம் முழுக்க வைரஸ் காய்ச்சல் பறவுகிறது. இந்த வைரசுக்கும் தடுப்பூசியோ அல்லது மருந்தோ கிடையாது. கிட்டதட்ட மூன்று கோடி மக்கள் உலகம் முழுக்க இறந்து போகிறார்கள். இன்று நாம் கடைபிடிக்கும்  சமூகத்திலிருந்து விலகி இருத்தல்(Social distancing), குவாரண்டைன் செய்தல், ஊரடங்கு சட்டம், தொடர் கை கழுவுதல், இதுதான் சமயம் என பொய்யான மருந்தை மார்க்கெட்டிங் பண்ற ஆட்கள்னு பத்து வருடங்களுக்கு முன்பே  இந்தப் படம் மூலமாக பல செய்திகளைப் பேசியிருக்கிறார்கள். நம் ஊரில் காய்ச்சல் நேரத்தில் விற்கப்படும் பல வித கசாயங்கள்  போல அமெரிக்காவில் Forsythia என்ற ஒரு மருந்து வைரஸை குணப்படுத்தும் என ஒருவன் கிளப்பிவிட அந்த மருந்துக்கு டிமாண்ட் கூடுகிறது. இறுதியில் அது ஏமாற்று வேலை என நிரூபிக்கப்படுகிறது. அதற்குள் அவன் சொல்வதைக் கேட்க ஒரு கோடி ஃபாலோயர்களுக்கு மேல் சென்று விட அரசாங்கத்தையே மிரட்டுகிறான். அவ்வளவு உண்மைக்கு நெருக்கமாகப் படம் போகிறது. அவுட்ப்ரேக் ஒரு கமர்சியல் ஆக்சன் என்ட்டடெய்னர். ஆனால் Contagion மிகவும் மெதுவாகப் பயணிக்கும் எதார்த்தமான திரைப்படம். ஆனால் இப்போதுள்ள சூழலைக் கண்முன்னே காட்டும் திரைப்படம். மேலும் பரவிய ஒரு வைரஸ் கட்டுப்படுத்தப் படாவிட்டால் நம் நிலை என்ன என்பதற்கான விடையும் படத்தில் இருக்கிறது. அமேசான் ப்ரைமில் படம் இருக்கிறது.

 

3. வைரஸ் – மலையாளம் (2019)

நம் கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்து இந்தியாவையே கேரளாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் இது.2018 ம் வருடம் கேரளாவில் பதினெட்டு பேரை பலி வாங்கிய நிபா வைரஸைக் கேரள மருத்துவர் குழுவும் அரசு அதிகாரிகளும் எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதைப் படம் பேசுகிறது. மேற்சொன்ன இரண்டு படங்களை விட சுவாரஸ்யமான படம் வைரஸ்தான். மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலர் நடித்த மல்ட்டி ஸ்டாரர். ஒரு மருத்துவர் குழு, ஒரு மாவட்ட ஆட்சியர், ஒரு செவிலியர், ஒரு பிணங்ளை அப்புறப்படுத்துபவர், பிணங்களை எரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு போலிஸ் அதிகாரி, நிபாவால் மாதிக்கப்பட்ட ஒரு நோயாளி என பலரின் பார்வையில் படம் பயணித்தாலும் தெளிவாக அமைக்கப்பட்ட திரைக்கதை ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லரை பார்க்கும் உணர்வைத் தருகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்க்கப்போகும் மிக சொற்பமான நல்ல படங்களில் ஒன்றாக வைரஸ் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேற்சொன்ன படங்கள் நோயின் தன்மையையும் விளைவையும் அப்பட்டமாகக் காட்டக் கூடியவை. இந்த சூழ்நிலையை இந்தப் படங்கள் மேலும் இறுக்கமாக்கலாம்.ஆனாலும் பொழுதுபோக்காக இந்தப் படங்களை பார்த்துவிடலாம் தவறில்லை.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button