இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

முன்பனியும் பின் மறையும் – இத்ரீஸ் யாக்கூப்

சிறுகதை | வாசகசாலை

பட்டுக்கோட்டை பாப்புலர் ஆப்டிக்கல்ஸ்லிருந்து சிராஜ் வெளியேறியபோது மணி நண்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இனி மணிக்கூண்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சற்றும் அலுத்துக் கொள்ளவில்லை; ஏனென்றால் பழகிய உலகை புதிய கண்ணாடியின் வழியாக ரசித்தபடி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது.

எதிர்பட்டவை யாவும் பஞ்சுத் துணியால் துடைத்தெடுத்தது போன்று அவ்வளவு தெள்ளத்தெளிவோட்டுக் காட்சியளித்தன. லயிப்பில் ஆழ்ந்த புன்னகையொன்றை அவன் இதழ்கள் சூடியிருந்தன.

இதுபோன்றதொரு அனுபவத்திற்காகத்தான் இன்று அவன் பேருந்து பயணத்தையும் தேர்ந்தெடுத்திருந்தும். விதவிதமான உணவகங்கள், பலகார மற்றும் பழரசக்கடைகள் என்று வழிநெடுக அவன் நடக்கும் வேகத்திற்கேற்ப அவைகளும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அவனுக்கு பசிப்பது போன்று தோன்றியது. இருந்தாலும் வீட்டிற்கே சென்று விடலாமென தீர்மானித்தவன், மனோ இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ளப்பார்த்தான்.

வரும்போது சந்தையிலிருந்து செங்கனி மீன், காய்கறிகள் என அன்றைக்கு தேவையான பொருட்களை அனைத்தும் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் ஊரிலிருந்து பஸ் ஏறினான். அவன் மனைவி சர்மிளா கையால் உண்ணும் முல்லைப்பூ போன்ற சோறுக்கும் பொரியரிசி பொடித்து, தேங்காய்ப்பால் விட்டு காய்ச்சிய செங்கனி மீன் ஆணத்திற்கும், முட்டைகோஸ், கேரட் பொரியலுக்கும், தேங்காய் பால் ரசத்திற்கும் வெளியில் உண்ணும் உணவெல்லாம் துளியும் ஈடாகுமா என்று நினைவுலகில் திளைத்தவன் ஊறிய எச்சிலை விழுங்கிக் கொண்டான்.

வழக்கம்போல பட்டுக்கோட்டை – மீமிசல், தொண்டி, இராமநாதபுர மார்க்க பேருந்திற்கு கூட்டம் பஞ்சமில்லாமல் நின்றபடியும் அங்குமிங்கும் நகர்ந்தபடியும் இழைந்து கொண்டிருந்தது. பஸ் வந்துவிட்டால் போதும், முண்டியடித்து ஏறும்போது பார்க்க தேனீக்கள் சூழ்ந்த தேன்கூடு போலதான் பேருந்து காட்சியளிக்கும். குறிப்பாக ஏறும் வழியிலும் இறங்கும் வழியிலும் காந்தத்தில் குத்திக் கொண்டிருக்கும் இரும்புத் துகள்கள் போல இளைஞர்களின் படிக்கம்பி தொத்தல்களுக்கும் குறைவிருக்காது.

சிராஜின் வல்லமைகளில் இப்போதும் கூட எதுவும் குறைந்து போய்விடவில்லை என்றாலும் ஜன்னலோர இருக்கை சுகம் சட்டென அவனுக்குள் கண் சிமிட்டியது. ஏறுவதற்கு காத்திருந்த பேருந்து அதன் நிறுத்தத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிய வர அனைவரதும் பரபரப்பும் பல மடங்கானது. சிராஜும் வேக வேகமாய் ஓடிப் போய் தொற்றி ஏறினான். முண்டியடித்து ஏறிய நெரிசலில் அவனது வெள்ளை சட்டை ஏகத்திற்கும் கசங்கிப் போய்விட்டாலும் புதிய கண்ணாடிக்கு ஏதும் பாதகமில்லை. 

வியர்வையும் மற்றவர்களின் வெப்ப மூச்சுக்காற்றும் அவனை புத்திமுட்ட செய்தாலும், அவன் ஆசைப்பட்ட இரண்டு பேர் அமரும் ஜன்னலிருக்கை எப்படியோ கிடைத்துவிட்டது. அருகில் வயதானாலும் தனது வாட்டம் சாட்டம் குறையாத பெரியவரொருவர் பட்டையும் முண்டாசுமாக காவல்சிலை போல வீற்றிருந்தார். கையில் ஒரு வீச்சரிவாள் மட்டும்தான் இல்லை; இருந்திருந்தால் பயப்பட்டிருப்பான்.

சுற்றி நின்ற கூட்டத்திற்கும் கேட்டுக் கொண்டிருந்த இரைச்சல்களுக்கும் பேருந்து சீக்கிரம் எடுத்துவிட்டால் தேவலை என்ற அவதியில் சிராஜ் தனது பார்வையை சுற்றுமுற்றும் அலையவிட்டான். பேருந்து நிலையத்தின் உட்புறமாக எதிரிலிருந்த டீக்கடையொன்றில் ஓட்டுநரும் நடத்துநரும் தென்பட்டனர். ‘அட, சீக்கிரம் வாங்கப்பா!’ என்ற சலிப்போடு தனக்குள் பேசிக்கொண்டான்.

அடித்துக் கொண்டிருந்த வெயிலையும் தாண்டி ஆவி பறக்க அவித்த, வறுத்த நிலக்கடலையும், பட்டாணி சுண்டலும் வெவ்வேறு சில்வர் தாம்பாளத் தட்டுகளில் குவிக்கப்பட்டு கையுந்தும் தள்ளு வண்டிக் கடைகளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. சிலர் அதே போன்ற சற்று சிறியத் தட்டுகளில் கடலைகளை சுருள்கள் போட்டு பேருந்து பேருந்தாய் விற்பதற்கு ஏறி இறங்கினார்கள்.

எங்கிருந்தோ சற்று தூரத்திருந்து ‘வெள்ரிக் கா..! வெள்ரிக் கா..!’ என்று ஒரு இளம்பெண்ணின் சத்தம் கேட்கவும் சிராஜிற்கு தாகிப்பது போலிருந்தது. கவனத்தை அந்த பெண் பக்கம் திருப்பியவன், அவளைக் கூப்பிடுவதற்கு தலையை வெளியே விட்டு எங்கிருக்கிறாள் என தேடினான். கூப்பிடும் தொலைவில் வெள்ளை துப்பட்டி அணிந்திருந்த வேறொரு பெண் தனது இரு பிள்ளைகளோடு அவளிடம் வெள்ளரிக்காய் வாங்கிக் கொண்டிருந்தாள்.

துப்பட்டி அணிந்த பெண் அவனுக்குப் பரிச்சயப்பட்டவள் போல் முதலில் தோன்றி, பின் யாரென விளங்கியதும் மருகியவாறு தலையை பேருந்திற்குள் இழுத்துக் கொண்டான். ஐந்து நொடிகளுக்குள் மீண்டும் எட்டிப் பார்த்தான் அவனது பேருந்தை நோக்கிதான் அந்த துப்பட்டிப் பெண்ணும் வந்து கொண்டிருந்தாள். முன்பிருந்ததற்கு சற்று வெளுத்தும் கொஞ்சம் சதை வைத்தும் கழுத்து, காது, கைகளில் தங்கங்களோடு மக்ரிப் நேரத்து மினாரா போல மின்னினாள்.

அவனுக்கு அவளைக் காண நிறைவாகதான் இருந்தது. ஆனால், அவளும் இவனை கவனிக்க நேரிட்டுவிட்டால் எதிர்கொள்ளும் சங்கடமும் மேலோங்கத் தொடங்கியது. எப்படி தவிர்க்க முடியும்? தன்னுடைய ஊருக்குச் செல்ல அவளும் அதே பேருந்தில்தானே ஏறியாக வேண்டும்! எதிர்பாராத திடீர் அவஸ்தைகளில் வாங்கவிருந்த வெள்ளரியை மறந்து போனான்.

அவளுக்கு வயது இப்போது முப்பத்தி இரண்டு அல்லது மூன்று ஆயிருக்கக் கூடும். ஒரு காலத்தில் பலரும் ஒதுக்கித் தள்ளிய அவளுடைய அரக்கு கருப்பு தேகம் கொஞ்சம் பழுப்பு நிறத்தின் வனப்பைப் பெற்றிருந்தது. ஒட்டிய உடல்வாகும் சற்று சற்று எடுப்பாய் தெரியும் முன்பல்வரிசையும் சீர்செய்யப்பட்டது போல் அவளின் முகத்தில் புதிய களை கூடியிருந்தது. 

கையிலிருந்த ஒயர் கூடையில் பழங்கள் நிரம்பியிருந்தன. ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மூன்று மருந்து புட்டிகளும், மாத்திரை கவர்ககும், மருந்துச் சீட்டும் புள்ளி புள்ளியாய் எட்டிப்பார்த்தன. மருத்துவமனைக்கு வந்திருக்கிறாள் போல என நினைத்துக் கொண்டான். இந்த பட்டுக்கோட்டைக்கு அவ்வளவு தூரத்திலிருந்து வேறு எதற்கு வருவார்கள்?

ஒன்று மருத்துவமனைக்கு இல்லையென்றால் விசேச நாட்களில் ஜவுளி போன்ற காரியங்களுக்கு அதுவுமில்லை என்றால் முத்துப்பேட்டை, நாகூர் தர்காகளுக்குச் செல்ல. அதுவும் இல்லை என்றால் ஒரத்தநாடு, மதுக்கூர் போன்ற ஊர்களில் வசிக்கும் தூரத்து சொந்தங்களின் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு வந்தால்தான் உண்டு என தனது ஊகிப்புகளில் சிறிது மூழ்கியவன் சட்டென மீண்டும் அவளை எட்டிப் பார்த்தான்.

ஆமாம், அவன் எதிர்கொண்டிருந்தது போல் அதே பஸ்ஸில்தான் அவளும் ஏறினாள். அவனுடைய தவிப்பு சற்று அதிகமானது. பஸ்ஸின் மைய நடைபாதையிலிருந்து ஓர இருக்கைகளில் அமர்ந்தவர்கள் பக்கத்திலிருப்பவர்களின் மேல் எந்நேரமும் சரிந்துவிடுமளவிற்கு வழிந்து கொண்டிருந்த கூட்ட நெரிசல்கள் அவனை மிகவும் கவலை கொள்ள வைத்தது.

இரு பிள்ளைகளோடு எப்படி நாற்பது ஐம்பது கிலோ மீட்டர்கள் வரை நின்றபடி சமாளிக்கப் போகிறாள்? இடையிலேதும் அவர்களுக்கு இடம் கிடைக்குமா? அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து நோட்டம் விட்டபடி பின்னால் திரும்பிப் பார்த்தான்.

போதாதென்று விசிலடித்தபடி படியில் தொற்றிய நடத்துநர், அருகினில் பிதுங்கி கொண்டிருந்தவர்களைப் பார்த்து, ‘முன்னாடி போங்க! முன்னாடி போங்க!’ என்று விரட்டிக் கொண்டிருந்தார். பாவம் சின்னப் பிள்ளைகளோடு அவளும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். குழந்தைகள் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு திருதிருவென விழித்தபடி, மற்றவர்களின் தள்ளல்களுக்கு ஏற்ப அசைந்தும் ஒடுங்கியும் சிரமப்பட்டனர்.

அவளது முகத்திலும் சோர்வு படர ஆரம்பித்தது. முடி தெரியும்படி விலகிக் கொண்டிருந்த முக்காட்டை மறுபடியும் நெற்றி வரை ஒரு கையால் இழுத்துவிட்டுக் கொண்டாள். மறு கையில் கூடை. துளிர்த்த வியர்வைத் துளிகளில் ஒன்று அவளது மூக்குத்தி இடுக்குகளில் ஊடுருவிச் சென்றது.

பிள்ளைகளில் மகள், அவள் முகத்தையொத்த வெள்ளை முயல் போல் தூக்கி கொஞ்சும் அழகில் அவ்வப்போது இமைகளை பட் பட்டென்று அடித்துக் கொண்டிருந்தாள். வயது நான்கிருக்கும். வழுவழு துணியில் பூப்போட்ட கவுன் அணிந்திருந்தாள். உதட்டுச்சாயம் பாதி நீங்கியிருந்தது. மகன்தான் முதலில் பிறந்தவன் போலத் தெரிந்தான். ஓரிரு வயது மூத்தவனாக இருக்கலாம்.

வெள்ளை புள்ளிகளிட்ட கருநீல முழுக்கை சட்டையை இளைஞன் போல் அழகாய் மடித்துவிட்டிருந்தான். வெளிர் நீல ஜீன்ஸ் சட்டைக்கு பொருத்தமாயிருந்தது. அந்த சிறுவன் சிராஜிற்கு பழக்கப்படாத புதிய சாடையில், தவங்கி சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அவனுடைய நிறம் மட்டும் பெற்றவளைப் போன்றிருந்தது.

தான் மட்டும் அமர்ந்திருக்க, சிராஜிற்கு இருப்புக் கொள்ளவில்லை. அருகிலிருந்த பெரியவரை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தான். கத்தியின் முனைகளையொத்த நரைத்த மீசை சற்று மேல் நோக்கி காற்றை இருபுறமும் குத்திக் கொண்டிருந்தது. மிதமாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்த மங்கிய வெண் முண்டாசுக்கும் அடர்ந்த புருவங்களுக்கும் இடையே நெற்றியில் நான்கு விரல்களால் திருநீர் பூசப்பட்டு நடுவே குங்குமத்திலும் சந்தனத்திலும் பொட்டுக்கள் நீளவாக்கில் குட்டியாக இழுக்கப்பட்டிருந்தன.

பெரியவரை சற்று ஒதுங்கச் சொல்லிவிட்டு தனது இடத்தில் பிள்ளைகளையாவது அமர வைக்க அவன் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. தான் எழும்புவது போல் ஒரு கையை கம்பியில் வைத்து உந்தி இன்னொரு கையால் பிள்ளைகளுக்கு சைகை காட்டி வந்து அமர்ந்து கொள்ளுமாறு சாடையில் அழைத்தான். அப்போதுதான் அவளும் இவனை கவனித்தாள். உறைந்து போவது போல அவளது முகம் இறுக ஆரம்பித்து, உடனே மீளவும் செய்தது.

ஓடும் பஸ்ஸின் தள்ளாட்டங்களை மீறி பிள்ளைகளையும் அணைக்கட்டிக்கொண்டு வெகு தூரம் அவளாலும் நிற்க முடியாது என்பதால், சென்று அமருமாறு பிள்ளைகளை ஏவினாள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் சட்டென எழுந்து, மூவரையும் அமரும்படி பணித்தார். சிராஜ் புன்னகைத்து அவருக்கு பார்வையால் நன்றியைத் தெரிவித்தான்.

அவளும் பிள்ளைகளும் அமர்ந்த பின்னர் பக்கத்தில் நிற்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது. பின்னால் வந்து நின்று கொண்டான். அவன் மனதை ஒரு குற்றவுணர்வும் சிறு பாரமும் அழுத்தத் தொடங்கியது. பேருந்து அதன் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் நடுநடுவே பின்னால் திரும்பி திரும்பி பார்த்துச் சிரித்தபடி அவனுக்கு கையசைத்து வந்தனர். அவர்களால் மனம் சற்று இலகுவாவது போல் உணர்ந்தாலும், எல்லாம் அவனுக்கு நேற்று நடந்தது போன்றுதான் தோன்றின.

அவள் பெயர் பொடுசு அல்லது கருப்பு நாச்சியா என்கிற கமீலாம்மா. அப்போது சிராஜுடைய நண்பன் அமீருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். அமீருடையது ஓரளவு வசதிகள் கொண்ட நடுத்தரக் குடும்பமே என்றாலும் குணநலன்களில் முன்னுக்கு பின் முரணானவர்களென்று சிராஜிற்கு பின்னரே உரைக்க ஆரம்பித்தது.

சிராஜ், அவர்கள் வீட்டிற்கு செல்லும் வேளைகளிலெல்லாம் ‘தம்பி தம்பி’ என்று அமீரின் தாய் கம்சாம்மாளும் அக்காள்மார்களும் அவன் மீது பொழிந்து வந்த பாசத்திற்கும் காட்டி வந்த வரவேற்ப்பிற்கும் என்றைக்கும் குறையிருந்ததில்லை. ஆகையால் அவர்களெல்லாம் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்களென அவனும் நம்பி வந்தான்.

சிராஜை விட அமீர்தான் பழக்கத்தில் அதிக நெருக்கம் காட்டி வந்தான். இருப்பினும் சிராஜைப் போல அமீர் மென்மையானவனோ, நாகரீகங்கள் அறிந்தவனோ அல்ல. ஊரிலிருந்த நேரங்களில் சதா ஒரு சண்டியனை போலத்தான் தன்போக்கில் திரிந்து கொண்டிருப்பான். மேலும் ஒரு நாளும் குடிக்காமலும் அவனால் இருக்க முடிந்ததில்லை. இதுபோன்ற விசயங்களில் சிராஜை உட்படுத்தியதுமில்லை, அவனுடைய அறிவுரைகளைக் கேட்டதுமில்லை.

இன்னொருபுறம் சிராஜிற்கும் தீரம் மிகுந்த அமீர் போன்றவனின் இணையோடு பைக்கில் ஊர்ச்சுற்றப் பிடித்திருந்தது. ஆனாலும் பகரமாக அவனுடைய முரட்டுத்தனங்களையும் முட்டாள்த்தனங்களையும் பல வேளைகளில் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.

அமீருக்கு படிப்பு ஏறவேயில்லை; ஆகையால் பள்ளிப் பருவத்திலேயே மளிகைக் கடைகளில் வேலைக்கு அனுப்பட்டப்பட்டான் அல்லது அமர்த்தப்பட்டான். அந்த நேரத்தில் போதுமான வசதிகளோடு இருந்து வந்ததால் அவனது வருமானத்தையும் அவன் வீட்டில் யாரும் சட்டை செய்துக் கொண்டதில்லை.

சம்பாதிக்கும் காசெல்லாம் கரை புரண்டு அவனது கைகளிலேயே தாராளமாகப் புரளவே, அப்போதுதான் புகை, குடி என்று அவன் மொழியில் எல்லா நல்லப் பழக்கங்களும் தொற்றிக் கொண்டுவிட்டன. அதைப்பற்றி பேச ஆரம்பித்தால் பான் பராக் அரித்த பற்களோடு ஹாஹாவென சிரிக்க ஆரம்பித்துவிடுவான்.

அவனுக்கு பெண்பார்த்துக் கொண்டிருந்தபோது சிராஜ் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான். வயதில் அமீர் சிராஜை விட இரண்டு வயது மூத்தவனாக இருக்கக்கூடும். இருபது இருபத்தியொரு வயதிலேயே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். காரணம் கமீலா வீட்டில் ஆசைகாட்டிய லட்ச ரூபாய் கைக்கூலியும் (வரதட்சணைப் பணம்) முப்பது பவுன் நகைகளும்தான்.

உள்ளூரில் அவனுக்கு இருந்து வந்த நல்ல பேருக்கு, யார் அவனை நம்பி பெண் கொடுக்க முன்வருவார்கள்? அவன் செய்து வந்த அத்தனை நல்ல செயல்களும் எல்லோருக்கும் அத்துப்படி. அவனுடைய சேர்க்கைகளையும் செயல்களையும் அருவருத்து வந்த வெளியூரிலிருக்கும் தங்களது உறவினர் வழி வந்த சம்பந்தங்களை கூட கட்டவிடாமல் துண்டு செய்திகள் அனுப்பி எல்லாவற்றையும் கலைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவ்வப்போது அந்த குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் சலசலப்புகள் ஏற்பட்டதும் உண்டு.

ஆனால், கமீலா வீட்டிலோ கைக்கூலியோடு பெண்வீட்டார் பொதுவாக ஒப்புக்கொள்ளும் அல்லது ஒப்புக்கொள்ள வைக்கப்படும் கல்யாணச் செலவுகள், சாப்பாடு, மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி, மோதிரம் முதல் ரூம் செட்டப் வரை என மணமகன் தரப்பில் கேட்கும் எல்லா முறைகளையும் கேட்டவுடன் செய்ய தயாராக இருந்தனர்.

ஏனென்றால் கமீலா பெண் பார்க்க வந்தவர்களின் கண்களுக்கு மிகவும் ஒடிசலாகவும், அழகு குறைந்தவளாகவும் காட்சியளித்தாள். அவளது கறுத்த நிறத்தையும், நலிந்த உருவத்தை பற்றியும் வெளிப்படையாக சொன்னவர்களும் உண்டு; சொல்லாமலே புறக்கணித்து சென்றவர்களுமுண்டு.

எப்படி இருப்பினும் கமீலா வீட்டிலும் அமீரைப் பற்றியும் விசாரிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், அவனை விட்டால் கமீலாவிற்கும் வேறு கதியில்லை என்று நம்பினார்கள் அல்லது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துப் பார்த்தே அவர்களுக்கும் சோர்வு தட்டிவிட்டது. அதனால் அவனுடைய வரலாறுகள் அனைத்தும் தெரிந்தே அந்த முடிவை எடுத்தார்கள். இத்தனைக்கும் அமீருடைய உம்மா கம்சாம்மாள் கேட்ட கை கூலியும், நகைகளும் பேராசைக்கு அளவில்லாமல் இருந்தன. கமீலா வீட்டில் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர்.

அமீர் தரப்பில், அவனுடன் பிறந்த அண்ணன்மார்கள் மூவரும் தங்களுக்கு திருமணமானதும் குடும்பத்தை விட்டு பிய்த்துக் கொண்டு என்றைக்கோ தனித்தனி எல்லைகளுக்குச் சென்றுவிட்டனர். என்ன முயன்றும் அமீருடைய உம்மா மற்றும் சகோதரிகளின் காரிய சாதுரியங்கள் அவர்களிடம் கொஞ்சமும் எடுபடவில்லை. பாம்பின் கால் பாம்பறியுமல்லவா.

அமீர் மட்டும் தனது தாய் மற்றும் அக்காமார்களின் நைச்சியமான சூதுவாதுகளில் சிக்குண்டுவிட்டான். பெற்ற தகப்பனோ தனது வீட்டில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல அமைதி நிலையிலேயே உலா வருவார். மனதில் தானொரு பெரிய சூஃபி என்று நினைத்திருந்திருக்கலாம்.

அமீரின் அண்ணன்மார்கள் சொத்தைப் பிரிக்கச் சொல்லி அவ்வப்போது வீட்டிற்கு வந்து தகராறுகள் செய்து கொண்டிருந்ததும், வீட்டிற்கு வேலை பார்க்க ஒரு மருமகள் வேண்டுமே என்பதும் அந்த குடும்பத்தில் பெண்தேடும் படலத்தை ஒரு கட்டத்தில் தீவிரப்படுத்தியது. கமீலாவும் அங்கே கடைசி வாரிசு. அவளுக்கு நான்கு அண்ணன், மூன்று அக்காக்கள் என்று அங்கேயும் ஒரு பெருங்கூட்டம்.

இவளுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்துவிட்டால் தங்களது கடமை முடிந்து தொலையுமே என்ற அவசரத்தில்தான் அவர்களும் மாப்பிள்ளை வேட்டையில் அல்லும் பகலும் அலைந்து கொண்டிருந்தனர்.

கமீலா ஊர் அமீர் – சிராஜ் ஊரிலிருந்து ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. அதனால் தனக்குப் பேசி வைத்திருக்கும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள அமீர் பற்பல கனவுகளோடும் ஆசைகளோடும் கற்பனைகளில் திளைத்துக் கொண்டிருந்தாலும் மணப்பெண்ணின் தோற்றத்தைப் பற்றி யாரும் அவனிடம் பகிர்ந்திருக்கவில்லை.

நல்ல பொண்ணுதான் நல்ல பொண்ணுதான் என்று சொன்னவர்களைத் தடுத்து, பார்க்க எப்படி இருப்பாள் என்று கேட்க அவனுக்கும் மாப்பிள்ளைக்குரிய வெட்கம். புகைப்படங்கள் கேட்கும், காட்டும் முறைகளும் அப்போதைய பழக்கவழக்கத்தில் இல்லை.

அவனும் மாநிறம் என்றாலும் கமீலா அளவிற்கு கறுத்தவனில்லை. பார்க்கவும் லட்சணமாகத்தான் இருப்பான். ஆனால், பெண்ணைப் பற்றிய அவனுடைய ஒரே ஒரு எதிர்பார்ப்பு தன்னை விட நிறத்தில் பளிச்சென இருக்க வேண்டுமென்பது மட்டும்தான். 

கட்டிக்க போகும் பெண்ணைப் பற்றி யாரிடம் அறிந்து, தெரிந்து கொள்வதென நிச்சயம் பேசி முடித்த ஒவ்வொரு நாளும் அலைமோதிக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் சிராஜிற்கு தன்னுடைய கல்லூரி நண்பன் முஸ்தபாவின் சின்னம்மா வீடும் அமீருக்கு பெண் பேசி வைத்திருக்கும் ஊரில்தானே இருக்கிறதென நினைவிற்கு வர, முஸ்தபாவை தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டான்.

அவனோ எடுத்த எடுப்பிலேயே, ‘அந்த பொண்ணா? அதுக்கு வயசு கூட இருக்குமேப்பா! கலரும் ரொம்ப கம்மியாச்சே!’ என்றதும் சிராஜால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏனென்றால் அருகிலேயே நின்றபடி அமீரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தனக்குப் பார்த்திருக்கும் பெண் அழகில் சராசரிக்கும் கீழுள்ளவள் என்பதில் அமீர் மிகவும் ஏமாற்றமடைந்து போனான். சிராஜிற்கும் வருத்தம்தான். இனி என்ன நடக்கப் போகிறதோவென்ற கவலைகளும் அவனைச் சூழ்ந்து கொண்டன.

அன்று நல்ல குடி! போதையில் பெண்ணைப் பற்றி கேள்விப்பட்ட விவரங்களையெல்லாம் சபையில் கொட்டியதுமில்லாமல் இவன்தான் விசாரித்துச் சொன்னான் என சிராஜ் பெயரையும் கோர்த்துவிட்டதில் அவனுடைய தலையும் அங்கே உருள ஆரம்பித்தது.

யார் என்ன சொன்னாலும், எதைக் கொண்டு வந்தாலும் பெரியவர்கள் முடிவெடுத்ததுதான் நிகழ்ந்தது. நிச்சயத்த நாளில் கல்யாணம் நடந்து முடிந்தது. மணக்கோலத்தில் பொதுவாக பெண்கள்தான் கண்ணீர் விடுவார்கள். அன்று அமீர் ஓவென அழுதான். பார்க்க சுற்றியிருந்தவர்களுக்கு சற்று வேடிக்கையாகவுமிருந்தது. ஒருவேளை குடித்திருக்கிறானோவென்று தங்களுக்குள் நினைத்து கொண்டார்கள்.

மிகவும் விமர்சையாக நடந்த அந்த கல்யாணத்தில் வகை வகையான உணவுகள் மட்டுமல்ல பரிசுப்பொருட்களும் சீர்வரிசைகளும் இரு வீட்டு கூடம், முற்றமென எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டிருந்தன.

கமீலாவுடைய அண்ணன்மார்கள், நெடுநாள் வருத்திக் கொண்டிருந்த பெரும் பாரம் குறைந்துவிட்டது போல் அன்றுதான் தங்களது தங்கையின் மீது வெளிப்படையாக பாசம் காட்டி, ஆனந்தக் கண்ணீரெல்லாம் சொரிந்தனர்.

அதில் அவள் மீது உண்மையாகவே அதிகம் பாசம் வைத்திருந்த கடைசி அண்ணண் ஜப்பாரால் மட்டும் கலந்து கொள்ள முடியவில்லை. அந்நேரம் பார்த்து வெளிநாட்டில் கிடந்தான். இப்படி அந்நிய பூமியில் கிடந்து சாவது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு காலத்திற்கும் பழக்கமாகிவிட்டது போலும்.

கமீலாவிற்குத்தான் மிகவும் படபடப்பாக இருந்து வந்தது. நிச்சயமான நாள் தொட்டு, வந்து செல்லும் மாப்பிள்ளை வீட்டு உறவுகள் வழியாக காதுகளில் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்த அவளது தோற்றத்தைப் பற்றிய விமர்சனப் பேச்சுக்கள், அவளை மிகவும் பீதிக்குள்ளாக்கி அடிவயிற்றைப் பிசைந்துக் கொண்டிருந்தன. மனதின் ஒரு ஓரம் கல்யாணப் பெண்ணிற்கே உரிய எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் ஊற்றெடுக்கவும் தவறவில்லை.

தனது கணவன் ஓரளவாவது அனுசரணையானவாக இருந்துவிட்டால் போதும் தனது வாழ்க்கையை எப்படியும் நகர்த்திவிடுவேன் என பயம் மேலிடும் நேரங்களிலெல்லாம் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தாள். ஏனென்றால் சில வருடங்களாக பிறந்த வீட்டிலேயே அவள் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. செல்லத்திலோ, கிண்டலிலோ வயதிற்கு வரும் வரை ‘பொடுசு’ அல்லது ‘கருப்பு நாச்சியா கருப்பு நாச்சியா’ என்று ஓரளவு எல்லோராலும் பிரியமாகவே நடத்தப்பட்டாள்.

பருவமடைந்த பிறகு ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை என்று பார்க்க ஆரம்பித்த உடன்தான் அவளது எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் தொற்றிக்கொண்டு, நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்தன. பெண் பார்க்க வந்தவர்களில் அநேகம் பேர் அவளது நிறத்தையே மையப்படுத்தி தட்டிக் கழித்தனர் என்று செய்தி முன்பே சொன்னதுதானே.

எதார்த்தங்கள் அறிந்து ஆரம்பத்தில் அந்த விமர்சனங்கள் யாரையும் அவ்வளவாக பாதிக்கவில்லை என்றாலும் நாளாக நாளாக வந்த சம்பந்தங்கள் யாவும் தட்டிக் கொண்டே சென்றதல்லவா… அது அவள் வீட்டினரை மிகவும் பாதித்தது. எப்படி இவளைக் கரை சேர்க்கப் போகிறோம் என்று பொருமி பொருமி அவர்களும் துன்பப்பட்டு உளவியல் ரீதியாக இவளையும் ஒரு வழி செய்து கொண்டு வந்தனர்.

அவளுடைய கல்யாணமென்பது கனவாகிப் போய்விடுமோ என்று துயருறுமளவிற்கு நல்ல காரியமென்று ஒன்று நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளே தெரியவில்லை. வீட்டில் ஒருத்திக்கு கல்யாணமாகவில்லை என்றால் எத்தனை பேருக்கு எத்தனை பதில் சொல்லவும் வேண்டியிருந்தது! அப்படி அக்கறை கொண்டு விசாரிப்பவர்கள் தங்கள் மகனையோ, சகோதரனையோ தருவார்களா என்றால் மாட்டார்கள்!

ஒரு கட்டத்தில் குடும்பத்தினரின் இயலாமைகள், கோபங்களாக வெடிக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அனைவரும் கமீலாவை வெறுத்தொதுக்குமளவிற்குச் சென்றனர். அதில், “என்னோட கலர் கொஞ்சமாவது வந்திருக்க கூடாதா? அப்பன் மாதிரியா ஒட்டு மொத்தமா இப்படி வரணும்!’ என்று ஆதங்கப்பட்ட பெற்றவளும் அடக்கம்.

அதற்காகவே அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது துயரங்கள் அத்தோடு முடிந்திருந்தால் நீண்ட நாள் தவிப்புகளுக்கு ஒரு பெரும் ஆறுதல் கிடைத்திருக்கும்தான். ஆனால், அவளைக் கட்டியவன் திருமண நாளன்று ஒரு முறை கூட அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மேலும் தனது விருப்பமின்மையை நேராக மறைமுகமாகவும் சீறும் பாம்பை போல் அவ்வப்போது அவளிடமும் மற்றவர்களிடமும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான்.

வயதிற்கு வந்ததிலிருந்து அது நாள் வரை அவள் வீட்டிலேயே இரத்த உறவுகளால் அனுபவித்து வந்த வேதனைகளுக்கு, முன்பின் தெரியாத ஒருவன் அப்படி நடந்து கொண்டது கொஞ்சம் கூட ஆச்சர்யமில்லையென்றாலும், கட்டியவன் என்ற முறையில் அவளுக்கு பெரும் ஏமாற்றம்தான். மனதளவில் இனி வரும் இன்னல்களைகளையும் தாங்கிக் கொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள். முன்பை விட அதிக மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.

அதெல்லாம் போதவில்லையோ என்னவோ அன்று விளக்கை அணைத்தும் அவளின் முகத்தை துணிப்பொட்டு மறைத்து அவன் புணர்ந்த போது் துடித்துப் போன அவளது பிஞ்சு மனம் மீண்டுமொருமுறை மடிந்து இறுகிப் போனது. அன்றிலிருந்தே வைரத்திற்கு ஒப்பாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது.

காரியம் முடிந்ததும் கசக்கி மூலையில் வீசப்படும் ஈரம்பட்ட அழுக்கு துணி போலத்தான் ஒவ்வொரு இரவும் பொழுதும் வீச்சத்தோடு கழிந்தன. தினமும் இரவு குடித்துவிட்டு வந்தால்தான் அவளோடு குடும்பம் நடத்த முடிகிறதென தனது போதைப் பழக்கத்திற்கு புது காரணக் கதையொன்றை வழக்கமான சலம்பல்களில் உபரியாகச் சேர்த்துக் கொண்டான்.

கமீலா வீட்டினர் எவ்வளவு கோரியபோதும் அமீர் மறுவீட்டு அழைப்பிற்கு செல்ல மறுத்தான். அதனால் அவளையும் கூட அனுப்பி வைக்க மாமியாக்காரியும் நாத்தனார்களும் முன்வரவில்லை. கமீலாவின் மூத்த அண்ணனின் வற்புறுத்தலில் ஒரு பகலுக்கு மட்டும் அவளைச் சென்று வர அனுமதித்தனர்.

திருமணமாகி முதன்முதலாக தாய்வீட்டிற்கு வந்தவள் சரியாக யாரிடமும் பேசவில்லை. நகைகள் அணிந்த கற்சிற்பம் போல்தான் பெரும்பாலான நேரங்களில் வருவோர் போவோர் முன்னிலையில் பார்வைக்கு அமர வைக்கப்பட்டாள்.

வாழப்போன வீடென்றால் முன்னபின்னதான் இருக்கும், எல்லாவற்றையும் நீதான் அனுசரித்தும் பொறுத்தும் போக வேண்டும், அதுதான் பிறந்த வீட்டிற்கும் பெருமை என அறிவுரைகளை அவளுக்கு ஒவ்வொருவரும் அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

ஒரு பகலே என்றாலும் கமீலாவிற்கும் அங்கிருக்க பிடிக்கவில்லைதான். என்ன நடந்தாலும் இனி புகுந்த வீட்டிலேயே கிடந்தது சாவதென்ற முடிவிற்கும் வந்துவிட்டிருந்தாள்.

சென்ற மகளின் நிலையை நினைத்து நினைத்து அப்போதுதான் தாய்க்காரியும் வருந்த ஆரம்பித்தாள். ஒரு வாரம் கழித்து மகளைப் பார்த்து வர ஆசைப்பட்டவள், இரண்டு பெரிய தூக்கு வாளி நிறைய பனியம், அதிரசம், முறுக்கு, இஞ்சிக் கொத்து, ரஸ்தாளி வாழைப்பழம் என எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு தனது இளைய மருமகள் ஜெயித்துனுடன் சம்பந்தி வீட்டிற்கு ஒரு மாலை நேரத்தில் சென்றாள்.

வரவேற்பு சரியில்லை. வாசல் தேடி வந்தவர்களை உடனே உள்ளே வாவென அனுமதிக்கவில்லை. ‘இன்னும் என்னடி பண்ணிக்கிட்டு இருக்கா கவ்வொதி சிறுக்கி! சீக்கிரம் சுத்தம் பண்ணிட்டு வாடி!’ மாமியாக்காரியின் ஓங்காரக் குரல் கொல்லைப்புறத்திலிருந்துக் கேட்டது. அது தன் மகளுக்கான சத்தமாக இருக்க கூடாதென தாய்மனம் அங்கேயே அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

நாத்தனார்களில் ஒருத்தி வந்து கண்சாடையிலேயே ‘வாங்க!’ என்று ஒரு வழியாக கதவைத் திறந்துவிட்டதையடுத்து வந்தவர்கள் ஒருவரையொருவர் கவலை தோய்ந்த முகத்தோடுப் பார்த்துக் கொண்டனர்.

உள்ளே சென்றபோது மாமியாக்காரி கம்சாம்மாள் முக்காடிட்ட வெருவாட்டம் நின்றுக்கொண்டிருந்தாள். ‘வாங்க’ என்று வரவேற்ற தொனி, வந்ததும் வராததுமாக கமீலாவைப் பற்றி குற்றப்பத்திரிக்கை ஏதும் வாசிக்க போகிறாளோவென பெண்ணை பெற்றவளுக்கே உரிய பதற்றங்கள் மரியம்மாவைத் தொற்றிக்கொண்டன. பெத்த மகள் எங்கிருக்கிறாளென கமீலாவை அவள் கண்கள் தேடின.

வீட்டிலிருந்தவர்கள் வந்தவர்களுக்கு ஒரு பாய் கூட போட்டு அமர வைக்கவில்லை.

கல்யாணத்திற்கு முன்பு வரை எப்படியெல்லாம் இனிக்க இனிக்கப் பேசினார்கள் என்று மரியம்மா தனக்குள் காட்சிகளை ஓடவிட்டு ஆதங்கப்பட்டுக் கொண்டாள். அந்த சமயம் அவளால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

“கமீலாம்மா எங்கெ..?” தயங்கி மெலிதான குரலில் தனது மகளை கேட்டாள்.

“வந்த ஒடனே எம்புள்ளய வளைச்சு போட மக காதுல மந்திரத்தை ஓதணுமாக்கும்? வருவா வருவா கொல்லையில வேலையா நிக்கிறா. ஒரு வேல உருப்படியா பாக்க தெரியிதா? சும்மா சோத்த போட்டு போட்டு கடனுக்கு வளத்து கட்டிக் கொடுத்துட்டா மட்டும் போதுமா? கைவேலைலாம் ஒழுங்கா சொல்லிக் கொடுத்திருக்க வேணா? அங்கேயும் இங்கேயுமா குப்பையும் கூளமுமா.. ஒரு கொல்லயக்கூட சரியா கூட்டத் தெரியல!” சற்றும் எதிர்பாராத கம்சாம்மாளின் நாகரீகமற்ற அடாவடியான பேச்சில் விதிர்விதிர்த்து போய் வந்தவர்களுக்கு இருதயங்கள் படபடத்துக் கொண்டன. இவரிடம் பேசி இனி பலனில்லை என்று பதறிக்கொண்டு அவசர அவசரமாக தாமாகவே கொல்லைப்பக்கம் அவளைத் தேடி சென்றனர்.

அவர்கள் வந்திருந்தது கமீலாவிற்கும் தெரியும்தான் போல, உம்மாவையும் மச்சியையும் கண்டதும் கல்லாக உறைந்து நின்றாள். புதிதாக மணமானவளுக்குரிய எந்த சந்தோச ரேகைகளும் அவளது முகத்தில் சிறிதும் தென்படவில்லை. பெற்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன.

கமீலா கட்டியிருந்த புதுச் சேலையில் முழுக்க புழுதியும் காய்ந்த கோழிப்பீயும் ஆங்காங்கே பட்டு துருத்திக் கொண்டிருந்தன. அவளுக்கு விவரம் புரிந்துவிட்டது. கூட்டியள்ளிய கூளத்தை மாமியாக்காரி கமீலாவின் மீது வலிந்து வீசியெறிந்திருக்கிறாள்.

பெற்றவளின் இருதயம் வெடித்து துண்டு துண்டானது. அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவளுக்காக சண்டை போட்டால் மகளின் நிம்மதி மேற்கொண்டும் பாழாகுமோ? போடி என்று துரத்திவிட்டால் வாழா வெட்டியாக ஆகிவிடுவாளோ? இந்த கல்யாணத்திற்கே கண்ணீரும் கம்பலையுமாக அவ்வளவு நாள் காக்க வேண்டியிருந்ததே! இதுவும் இல்லை என்று ஆகிவிட்டால் இவளின் வாழ்க்கை என்னாவது? என்று எதுவும் பேச முடியாமல், “நாம்பெத்த மகளே..!” என்று கமீலாவைக் கட்டிக் கொண்டு அது நாள் வரை தான் தேக்கி வைத்திருந்த பாசத்தையெல்லாம் கொட்டி விம்மி அழ ஆரம்பித்தாள்.

“என்னடி வாழ வந்த வீட்ல உம்மாவும் மவளும் ஊரு ஒலகத்துல நடக்காதது நடத்துட்ட மாதிரி ஒப்பாரி வக்கிறியளுவோ?” தீப்பந்தம் போல் நெஞ்சை நோக்கி விழுந்த வார்த்தைகளைக் கேட்டு பெற்றவளுக்கும் பொத்துக் கொண்டுதான் வந்தது. தனது கோபம் மகளை பாதிக்குமே என்றஞ்சி, “ஏம்மா இப்புடி பேசுறியளுவோ..? சின்னப்புள்ளதானே குத்தம் குறை இருந்தா நீங்களுவதானே திருத்தி, உங்க வீட்டு பழக்கத்துக்கு தவுந்த மாதிரி மாத்திக்க சொல்லணும்” என்று வேதனைப்பட்டபடி கம்சாம்மாளை பார்க்கப் பிடிக்காமல் மகள் பக்கம் திரும்பினாள்.

“எல்லாம் சரியாவும். பத்திரமா இரு.” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென தனது மருமகளோடு அன்று வந்து சேர்ந்தவள்தான். பிறகு அந்த வீட்டை நாடி பல மாதங்கள் செல்லவில்லை. மற்றவர்களை ஏவியும், அனுப்பியும் பேசிப் பார்த்தும் நல்ல நாள் பெரிய நாளுக்கும் கூட அவளை பிறந்த வீட்டிற்கு அந்த கொடுமைக்காரி அனுப்பி வைக்கவில்லை.

கமீலாவிற்கு இரவு முழுக்க அவனோடு பாயின் ஒரு ஓரத்தில் கல்லாக ஒடுங்கிக் கிடக்கும் வாழ்க்கையென்றால் பகல் முழுக்க வேலைக்காரியை விட மோசமான அடிமைப் பிழைப்போடு அனைவருக்கும் சேவகங்கள் செய்து செய்தே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. பலவீனமான அவளது உடல் மேலும் ஓடானதுதான் மிச்சம்; எவ்வளவு அந்த குடும்பத்திற்காக தன்னை இழைத்துக்கொண்டும் ஒரு மருமகளுக்குரிய எந்த உரிமையையும் சலுகையையும் அந்த வீட்டில் அவளால் பெறவே முடிந்ததில்லை.

எதேச்சையாக அவளை கவனிக்க நேரிடும் வெளியாட்களின் புருவங்கள் யார் இவளென ஆச்சர்யத்தில் விரிந்து அடங்கும். ஒட்டடை குச்சிக்கு பழைய வாயில் புடவையொன்றைக் கட்டியது போன்று ஏதோ ஒரு மூலையில் தனது உடலை சாய்த்துக் கொண்டபடி வீசியெறியப்பட்ட விளையாட்டு பொம்மையாய் நிலைகுத்தி நின்றுக்கொண்டிருப்பாள்.

போதாமைக்கு இரண்டு நாத்தனார்களில் ஒருத்தியாவது தாய்வீட்டிலேயே இருக்கும்படி பார்த்து கொண்டனர். கூடவே அவர்களின் பிள்ளைப் பட்டாளங்களின் அழிச்சாட்டியங்கள் வேறு. இருப்பினும் பிரியத்துடன் வரும் பிள்ளைகளை கூட அந்த ராட்சஸிகள் அவளிடம் அண்டவிட்டதில்லை.

கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தாய்க்காரிக்கு முடிந்தவரை எரியூட்டி தம்பியின் மற்றும் தந்தையின் வருமானத்தை அபகரித்துச் செல்லும் தங்களின் கைங்கர்ய நாடகங்களையும் செவ்வென நடத்திக் கொண்டும் வந்தனர். கமீலாவிற்கோ அவள் இருந்த நிலைக்கு நிம்மதியாக தலை சாய்த்துக்கொள்ள அந்த வீட்டில் ஒரு இடம் கிடைத்தால் போதுமென்றிருந்தது. கணவனின் அரவணைப்பை கூட எதிர்பார்க்கவில்லை! இருந்த இருப்பிற்கு அந்த பேராசையையெல்லாம் என்றோ குழித்தோண்டி புதைத்து விட்டிருந்தாள்.

கமீலாவை போன்ற ஒருத்திக்கு வாழ்க்கை கொடுத்து வீட்டிற்கு மருமகளாக்கி கொண்டதே தாங்கள் செய்த பெரும் தியாகமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் மட்டம்தட்டி கொட்டிக் கொண்டிருக்கும்போது பெரிதாய் அவளும்தான் என்ன எதிர்பார்த்துவிடுவாள்? இதில் மாமனார் மட்டும் அமைதியாய் அந்த கூச்சல்களிருந்து சற்று விலகியே இருந்தார். கண்டிக்க முடியாத நிலையில் கண்டும் காணாமல் நழுவிச் செல்வதை போல.

தனது ஊர் முகமே மறந்து பல மாதங்கள் அந்த இருட்சிறையிலேயே அடிமை போல் அடைந்து கிடந்தாள். வாழ்வின் வெளிச்சமென்று எதையும் பார்க்க அவளும் விரும்பவில்லை. பிறந்த வீடு என்று நினைத்துச் சென்றாலும் அங்கே பெற்றவளை தவிர வேறு யார் வரவேற்க இருக்கிறார்கள்? சில வேளைகளில் தன்னை மீறி பீறிடும் கண்ணீர்த்துளிகளை முந்தானைக்கரங்களால் துடைத்துக் கொள்வாள்.

தன் பங்கிற்கு போராடிப் பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் பெற்றவளும் ஓய்ந்து போனாள். தன் வயதிற்கு அவளும் எவ்வளவுதான் அலைவாளென விட்டுவிட்டாள். பெண்ணை கட்டிக்க கொடுத்த வீட்டில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று மூத்த அண்ணன்மார்களும் கிடைத்த காரணத்தைக் காட்டி ஒதுங்கிக் கொண்டனர்.

அமீர் இடையில் ஒரு முறை புருனே சென்றான், ஒரே மாதத்தில் வேலை பிடிக்கவில்லையென திரும்பி வந்தவன் பழையபடி வெளியூர்களில் அங்கே இங்கே என காலி செய்து மளிகை கடைகள் வைத்தான். ஆனால், கமீலா மட்டும் அந்த வீட்டிலேயே ஊழியம் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கடை வைத்திருந்த ஊரில் அமீர், ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததாக அந்த பக்கம் சென்று வந்தவர்கள் ஊர் காதுகளில் கொளுத்திப் போட்டனர். அது உண்மை செய்திதான் என்று அவனாலேயே ஒப்புக்கொள்ளவும் பட்டது. அந்த விஷத்தையும் கமீலா ஊமை போல விழுங்கி ஏற்றுக் கொள்ளப் பழகினாள்.

அப்போதுதான் அவளுடைய கடைசி அண்ணன் ஜப்பார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஊரில் வந்து இறங்கியிருந்தான். கமீலா அவனுக்கு பிரியமான தங்கையும் கூட. சிறுவனாக இருந்தபோதே அவளுடைய பட்டப்பெயர்களில் யாரும் ‘பொடுசு’ என்றுக் கூப்பிட்டால் விட்டுவிடுவான்; ‘கருப்பு நாச்சியா’ என்று அழைத்தாலோ போச்சு! சட்டை பொத்தான்களை அவிழ்த்து இரண்டு பக்கங்களையும் சரட்டென இழுத்து முடிச்சுப் போட்டபடி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கிளம்பிவிடுவான்.

தன் வயது சிறுவர், சிறுமியர்கள் பட்டபெயர்கள் சூட்டி கேலி, கிண்டல்கள் செய்து அவளை சீண்டிக்கொண்டிருந்த அந்த நாட்களில் அவனே அவளுக்கு காவலாளி. அப்படி ஒண்ணும் மண்ணுமாக இருந்தவன் பாவம் கமீலாவின் கல்யாணத்திற்குத்தான் வர முடியவில்லை. சவுதிக்கு மீன்பிடி விசாவில் சென்றவன், பல மாதங்கள் சம்பளம் இல்லாமல், தினப்படி கூட கிடைக்காமல் பஞ்சப்பாட்டுப் பட்டுக்கொண்டு அங்கேயே கிடந்துவிட்டான்.

தகப்பனுக்கு பயப்படுகிறானோ இல்லையோ கோபக்கார மூத்த அண்ணனுக்கு கட்டுப்பட்டவன்; அதனால் கல்யாணத்திற்கு அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வர வேண்டாம் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர் தடுத்துவிட்டதால் தட்ட முடியவில்லை. மேலும் அவன் கையிலும் ஏற்பாடு பண்ணி வர காசிருந்திருக்கவில்லையே!

ஜப்பார் வந்ததும் வராததுமாக பெற்றவள், நல்லபடியா பணம் காசு செலவழித்து கட்டிக்கொடுத்தும் பெரும்துயரமாகி போய்விட்ட கமீலாவின் வாழ்க்கை போன போக்கை சொல்லிச் சொல்லி ஆதங்கப்பட்டவள், அதுவரை கம்பொன்றிற்கு காத்திருந்த மெல்லிய கொடிபோல மகனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அழவும் ஆரம்பித்தாள்.

காதுக்கு வந்த மருமகனின் கள்ளத்தொடர்பை பற்றியும் சொல்ல, அங்கேதான் ஜப்பாரின் கோபம் தலைக்கேறியது. அந்த சமயம் அமீ்ரும் ஊருக்கு வந்திருந்த செய்தியறிந்து அடுத்த நாளே தாயும் மகனும் அந்த வீட்டிற்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் ஜப்பார், என்ன கோபங்கள் இருப்பினும் இது தங்கையின் வாழ்க்கை; எல்லாவற்றையும் பார்த்து பதிவிசாதான் பேச வேண்டுமென தனக்குள் ஒரு பிடியையும் போட்டுக் கொண்டான்.

நெடு நாளைக்கு பிறகு ஜப்பாரை பார்த்ததில் கமீலாவிற்கு கால்கள் தரையில் நிலைகொள்ளவில்லையென்றாலும் மாமியாக்காரியின் வழக்கமான பந்தாக்களுக்கும், எடுப்பான பேச்சுகளுக்கும் குறைவில்லாமலிருந்து. வீட்டிற்கு மருமகளாக வந்து அத்தனை மாதங்கள் கடந்தும் கமீலாவிற்கு வந்தவர்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க கூட மாமியாரின் கண்ணசைவை எதிர்நோக்கி நிற்க வேண்டியதாயிருந்தது.

மகராசி. என்ன அதிசயமோ அன்று உடனே டீ போட்டு கொடுக்கச் சொன்னாள். ஆச்சர்யத்தில் கமீலாவை கையில் பிடிக்க முடியவில்லை. அடுப்படிப் பக்கம் பறந்து ஓடினாள். கன்னமெல்லாம் மேலும் ஒடுங்கிப் போய் குழி விழுந்த தனது தங்கையின் உடல் பலவீனத்தை கண்டுதான் ஜப்பாரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இப்படியொரு இடத்தில் அவளை கொண்டு வந்து விட்டுவிட்டீர்களே என வேதனையோடு பெற்றவளைப் பார்த்தான்.

எந்த விசயத்தை தொட்டுப் பேசுவதென்ற அவசரத்தோடு, தனது தங்கையை பிறந்த வீட்டிற்கு அவ்வப்போது அனுப்பி வைங்க மாமி என்று பதுவிசாக முதலில் பேச்சை ஆரம்பித்தான். மாமியாக்காரி எடுத்த எடுப்பிலேயே, “ஏன் அப்பப்ப அனுப்பி வைக்கணும்? ஒரேடியா அத்துவிட்டு உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போவ வேண்டியதான?” கம்சாம்மாள் தனது அகங்காரத்தை விட்டுக் கொடுத்து என்றைக்குத்தான் பேசியிருக்கிறாள்!

மரியம்மா, ஆத்திரத்தோடு எழ எத்தனித்த மகனை அடக்கி உட்கார வைத்தாள்.

“அட, தம்பிக்கு ரோசம்லாம் வரும் போலயே..?” மறுபடியும் மாமியாக்காரி சீண்டிப் பார்த்தாள். அந்த நேரம் அவளுடைய மகள்காரிகள் யாரும் வீட்டிலில்லை. கணவனும் வெளியில் எங்கோ போயிருந்தார். சத்தம் கேட்டு கமீலா பதறிப் போய் ஒரு முறை பாவமாய் வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

“மாமி, கொஞ்சம் பாத்து பேசுறியளா? கமீலா இங்கேயே இருக்கிறதா பத்திலாம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இங்கே இருந்து நல்லபடியா வாழத்தானே கட்டிக் கொடுத்திருக்கோம்? எங்களுக்கும் வச்சு பாக்க ஆச இருக்காதா? இதுவரை தங்கசியையும் மச்சானையும் எங்க வீட்டுக்கு ஒரு முறையாவது சேத்து அனுப்பி வச்சிருக்கீயளா? ஊர் உலகத்துல நடக்காததையா கேக்குறோம்? அப்பப்பதானே அனுப்பி வைக்க சொல்றோம்? உங்க மகள்கள மாதிரி எங்க வீட்லயேவா வந்து இருக்கச் சொல்லப் போறோம்?” ஆதங்கம் அடங்காமல் நெஞ்சில் வெடித்துக் கொண்டிருந்ததையெல்லாம் அவன் சொல்லி முடிக்குமுன், அருகிலிருந்த எச்சில் படிக்கத்தை மாமியாக்காரி கோபத்தில் உதைந்து தள்ளி, “அடி செருப்பால? யாரு வீட்ல வந்து யாரு வீட்டு நாயம் பேசுறது?”

மாமியாளின் பேய்த் தொண்டையைக் கேட்டு கமீலா அடுப்பங்கரையிலிருந்து அதிர்ந்து ஓடி வந்தாள். அனைவரையும் மாறி மாறிப் பார்த்தபடி என்ன செய்வதென தெரியாது திகைத்துப் போய் நின்றாள். படிக்கம் உருண்டதில் வெற்றிலை குழைந்த எச்சில் சிதறலில் திண்ணையெல்லாம் பாழாய்போனது. ஜப்பாரை கூட்டி வந்த மரியம்மா பதறிப்போய், “செத்த சும்மா இருடா!” என்று அதட்டினாள். ஆனாலும் மாமியாக்காரியின் கோபம் அடங்கவில்லை.

“நீ என்னையே அடக்குமா! அவ்வொ மகன் என்னடான்னா ஊர் ஊரா வப்பாட்டி வச்சி கூத்தடிச்சிக்கிட்டு இருக்கான். அதையெல்லாம் யாரும் கேக்குறீங்களா? ஏன் பெத்தவோ இவ்வொ கேக்க மாட்டாங்களா?” பேச வந்த அடுத்த பிரச்சனையை இதுதான் சமயமெனத் தொட்டான்.

“ஆமாடா பக்கிரிசா பயலே! அவன் வப்பாட்டி வச்சுக்குவான். கூத்தியாளோட கூத்தடிப்பான். என்னடா பண்ணுவா? காலத்துக்கும் இப்பிடி ஒரு கருப்பட்டியோட குடும்பம் நடத்தணும்னு அவனுக்கென்ன தலையெழுத்தா?”

“ஓ..! இப்பதான் உங்களுக்கும் உங்க மகனுக்கும் எந்தங்கச்சி கருப்புனு தெரியிதோ? கை நீட்டி கக்கிலி (கைக்கூலி), பவுனு, ரூம்பு செட்டாப்புனு எல்லா ஈயின்னு இளிச்சிக்கிட்டு பிச்சை எடுத்தப்ப மட்டும் இந்த கருப்பட்டி எல்லாருக்கும் இனிச்சதோ? யாரு பக்கிரிசா? நீங்களா நாங்களா?” கட்டுக்கடங்கா கோபத்தில் தக்க பதில் கொடுக்க ஆரம்பித்தான். இவனை அழைத்து வந்தது ஏதும் விபரீதத்தில் முடிந்து விடுமோவென பதறிப்போன மரியம்மா, ‘வேணா வாப்பா! வேணா வாப்பா!’ என்று அவனை பொறுமையாக பேசும்படி கெஞ்ச ஆரம்பித்தாள்.

“விடுண்ணே விடுண்ணே..!” கமீலாவும் மேற்கொண்டு அவனை எதுவும் பேசவிடாமல் தடுத்து, ‘அல்லாஹ்வே..!’ என அழ ஆரம்பித்தாள்.

“நீங்களுவோதாண்டா பக்கிரிசா! பொட்டைப்பயலே! ஆம்புள இல்லாத நேரமா பாத்து எங்கிட்ட சண்டைக்கு வர்றியாடா? இருடா எம்புள்ள வரட்டும்! இந்த நேரம் பாத்து அந்த வடுவா எங்க போயி தொலைஞ்சான்னோ தெரியலையே..! ” என்று அவள் அங்கலாயித்துக் கொண்டிருந்த அந்த நேரமே திடுதிடுமென ஒருவன் ஓடி வந்து அவனை சரமாரியாக கைகள் போன போக்கிற்கு தாக்க ஆரம்பித்தான். ஆம்; அது அமீரேதான். அந்த சமயம் சிராஜும் கூட இருந்தான். ஆனால், அவனை கட்டுப்படுத்ததான் முடியவில்லை.

முதல் இரு அடிகளில் நிலைகுலைந்து போன ஜப்பார் பின்னர் சுதாரித்துக் கொண்டு அவனும் சரிக்கு சரி அமீரை பளார் பளாரென அறைந்து, இரு கைகளால் கீழே தள்ளிப் புரட்ட ஆரம்பித்தான். சிராஜூம் சுதாரித்து தனது நண்பனைக் காப்பாற்ற ஜப்பாரை பின்னாலிருந்து பிடித்து இழுத்தான்.

கமீலாவும் மரியம்மாவும், அந்த நேரம் நடுநடுங்கி வேடிக்கை பார்க்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே சத்தங்கள் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து, ஒரு வழியாக இருவரையும் தடுத்து விலக்கிவிட்டனர்.

அமீரின் கீழுதடு பிய்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அவனை நெருங்க கமீலாவிற்கு அச்சமாக இருக்க என்ன செய்வதென அறியாது திகைத்துப்போய் நின்றாள்.

மாமியாக்காரி, “வீடு தேடி வந்து என்னைய அடிச்சது மட்டுமில்லாம, எம்புள்ள மேலயும் கை வச்சிட்டடானே கழிச்சல்ல போவான்! அடியேய் வேச! இனி இந்த வீட்ல ஒனக்கு எடமில்ல. போடி வெளிய!” என்று கமீலாவை அடித்து விரட்டுவது போல அவளைத் தாக்க ஓடினாள்.

மற்றவர்கள்தான் குறுக்கே சென்று அமீரையும் கம்சாம்மாளையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஜப்பார் தனது அவசரத்தனத்தை எண்ணி வருந்தினான். தன்னோடு வந்த தனது தாயையும் பாவமாகப் பார்த்தான்.

அந்த சந்தர்ப்பத்தை அமீரும் அவனுடைய உம்மாவும் பயன்படுத்திக் கொண்டனர். இனி அவளை அந்த வீட்டில் வாழ வைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். விசயம் கேள்விப்பட்டு அமீருடைய வாப்பா எங்கோ கிடந்தது வந்தபோது அந்த வீடு கூடம் குப்பை கூடம் போல காட்சியளித்தது.

வந்திருந்த சம்பந்தியையும் மருமகளின் அண்ணன்காரனையும் சமரசம் செய்து அனுப்பி வைக்கப் பார்த்தார். அதற்காக தனது மனைவி, மகனிடமிருந்தும் நன்றாக வாங்கிக் கட்டிக்க கொண்டார். பிறகு என்ன நினைத்தாரோ, ‘இப்போது கமீலாவை கூட்டிச் செல்லுங்கள். கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும். சொல்லும்போது கூட்டி வந்து விடுங்க’ என்று கேட்டுக்கொள்ள, கூடியிருந்த கூட்டமும் அதை ஆமோத்தித்தது. கமீலாவை அன்றைக்கே கூட்டிக் கொண்டு் வந்துவிட்டனர்.

‘இனி அவ்வளவுதான் இந்த வீட்டையே மறந்துவிடு!’ என்ற எச்சரிக்கையோடுதான் அவளை அங்கே அனுப்பி வைத்தான் அமீர். அவன் சொல்லுக்கேற்ப அன்று வந்தவள்தான் பிறகு அந்த வீட்டிற்கு திரும்பவேயில்லை. காரணம் அது அவளுக்குரிய இடமேயில்லை என்று தனது குடும்பத்தினரை எதிர்த்து ஜப்பாரே முடிவு செய்ததுதான். அவன் முடிவிற்கு கமீலா மௌனத்தை பதிலாக்கினாள். சின்ன வயதில் போல தனது அண்ணனின் கரத்தைப் பற்றிக் கொண்டது போல் உணர்ந்தாள்.

சில மாதங்களிலேயே தொடர் பெரும் பிரயாசைகளுக்குப் பிறகு ராம்நாட்டிலிருந்து ஜப்பார் ஒரு மாப்பிள்ளையை கண்டுபிடித்தான். அவனுடைய மனைவி ஜைத்தூனும் அவனுக்கு பக்க பலமாய் துணை நின்றாள். அதுவரை கமீலா பட்டுவந்த துன்பங்களை நேரில் கண்டவளாயிற்றே. ஜப்பார் உறவுகள் பாராட்டும்படி பொறுப்பான அண்ணனாய் தான் கண்டெடுத்து வந்த ஒரு நல்லவனுக்கு தனது தங்கையை மணமுடித்து கொடுத்தான்.

சிராஜ் நினைவலைகளிருந்து மீண்டு வந்திருந்தபோது பேருந்து சேதுபாவா சத்திரத்தில் நின்றது. கமீலா தனது பிள்ளைகளோடு அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையிலேயே அமர இடமும் கிடைத்தது. அதிலிருந்து தனது ஊர் வரை இவன் பக்கம் திரும்பியவாறு விளையாடிக் கொண்டு வந்த பிள்ளைகளிடம் பிள்ளையாக மாறிப்போயிருந்தான்.

ஆனால், வாய்விட்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை; வெறும் சைகைகளில்தான் அவர்களிடம் உறவாடிக் கொண்டிருந்தான். அந்த பூ முகங்களில் குடிகொண்டிருந்த சந்தோசக்கீ ற்றுகளில் பூரித்தவன், நெடுநாளைக்கு பிறகு குறிப்பிட்ட நிகழ்விலிருந்து மனம் மிகவும் இலேசானது மாதிரி தன்னை உணர்ந்தான். கமீலாவும் தனது கடந்த காலங்களில் ஆழ்ந்திருப்பாள் போல, பார்வையைத் திருப்பாமல் ஜன்னல் பக்கமே தன்னைக் குவித்திருந்தாள்.

பேருந்து சிராஜ் ஊரை அடைந்ததும் வழக்கம்போல பத்து நிமிடங்கள் நிறுத்திப் போட்டனர். கமீலாவின் முகத்தைப் பார்த்து ஒரு முறை புன்னகைக்க வேண்டும் போலிருந்தது.

அமீர் மற்றும் அவனுடைய குடும்பத்தினரின் குணநலன்கள் ஓரளவு பழக்கப்பட்டிருந்தாலும், கடைசியாக நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களிடத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு நிழல் அண்ணன் போல கமீலாவிற்காக அவ்வப்போது கவலையும் பட்டிருக்கிறான். அதே நேரம் அமீர் வீட்டிற்குச் செல்வதும் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் நின்றும் போனது.

பிள்ளைகளிடம் ஸலாம் கூறிவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கிச் செல்ல ஆரம்பித்தான். அவர்களின் பதில் ஸலாம் பெற்றவளும் சேர்ந்து சொல்வது போன்று அவன் மனதைக் குளிர்வித்தது. வீட்டிற்கு செல்லும் வரை நடந்து முடிந்த கதைகளைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்தன. தவிர்க்க முடியாமல் அமீரைப் பற்றிய கவலைகளும் அவனை ஆக்கிரமிக்கச் செய்தன.

அவன் இப்போது ஊரிலில்லை. இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணும் அந்த குடும்பத்திற்கு ஒத்து வராமல் போனாள். அந்த பெண் கமீலாவை போல அல்ல, வீட்டைக் கட்டியாள காலடியெடுத்து வைத்தாள். அமீர்தான் பெற்றவளுக்கும் உடன்பிறந்தவள்களுக்கும் ஒத்து ஊதுறவனாச்சே! அதனால் குடும்ப வாழ்க்கை என்பது அவனுக்கு எட்டாக்கனியாகவே ஆகிப்போயிற்று.

கமீலாப் போட்டு வந்த நகைகளில் இருபது பவுனை அமீரின் இரண்டு அக்காள்களும் கபளீகரம் செய்ததற்கும், ஊர் தீர்மானத்தின் படி கமீலா தரப்பிற்கு கொடுக்க வேண்டியிருந்த நஷ்டஈட்டிற்கும், அதே போல் இரண்டாவதாக வாழ்க்கைப்பட்டு வந்தவளுக்கு செய்த செட்டில்மெண்ட்டிற்கும், அவன் பேரிலிருந்த பதினைந்து செண்ட்டு நிலத்தை மூத்த அக்காளின் கணவனுக்கே விற்க நேர்ந்தது. அந்த விரக்தியில் மலேசியா சென்றவன்தான், பிறகு ஊர் திரும்பவேயில்லை.

-idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button