இணைய இதழ் 104சிறுகதைகள்

முப்பரிமாணம் – அன்பாதவன்      

சிறுகதை | வாசகசாலை

பரிமாணம் ஒண்னு

பெருங்கனவுகள் நிறைந்த தந்தை அவர்! தன் மகனைப் பற்றியும், மகளைக் குறித்தும் உலகை விடப் பெரிய கனவுகள் அவருக்கிருந்தன. அதில் ஒன்றுதான் சீமந்த புத்திரன், சின்ன வயதிலேயே இரு சக்கர வாகனம் கற்றுக்கொள்வது

            இத்தனைக்கும் மகளுக்கு வயது நான்கு… மகனுக்கோ…12 வயசுதான்! தந்தையாக ஒன்றும் இந்தக் கனவில் தவறில்லையே…!

            மகன் சிறுவனாக இருந்த போது டிவிஎஸ்-50ல் தொடங்கியது… இருக்கைக்கு முன் நிற்க வைத்து ஆக்சிலேட்டரை திருகி வேகம் அதிகரிக்கவும், ஒலிப்பானை அழுத்தி சப்தமெழுப்பவும் கற்றுக் கொடுத்தார்.. பிறகு அவனே ஹாண்டில் பாரை பிடித்து, வண்டியை இயக்கவும் செய்தான்.

            சற்றே வளர… இப்போது ஸ்கூட்டி,

வேகமாய் வளர்ந்த மகனுக்கு வேகமே விருப்பம்… ஆனால், இந்த சங்கதி ஸ்கூட்டிக்கு தெரியாதல்லவா.. ஆக்சிலேட்டரை திருகத் திருக… ஒரு நாளில் ஆக்சிலேட்டர் கேபிள் பழுதாகி மணல் செருகி வீழ்ந்த கதையுமுண்டு! ஆனாலும் என்ன!

            பெருங்கனவுகள் நிறைந்த தந்தையாயிற்றே…! சிறு தடங்கல்கள்… விபத்துகளுக்காக கனவுகளை ஓரமாய் ஒதுங்கி நிற்க சொல்ல ஏலுமா..? அவருக்கும் வசதி வர… சிறு வாகனங்கள் கடந்து பெருவாகனமொன்றை வாங்கினார்… 350சிசியில் பேரொலியோடு பயணிக்கும் கருங்குதிரையது…! மகனுக்கு சொல்லிகொடுத்தார்.

            எந்தக் காலில் கியர்.. மேல்… கீழ் இயக்கம்.. அடுத்த பாதத்தின் பிரேக் பிடிப்பு… ஆக்சிலேட்டரின் முடுக்கம்… எல்லாமும்.. சாகசம் நிறைந்த பள்ளிப்பருவத்தில்.. இரும்புக் குதிரை மீது ஏறினான்.. இளவரசன்; இயக்கினான்.. டாப் கியரும் ஆக்சிலேட்டரும் பிடித்தவை மகனுக்கு.. வீதியில் அந்த பக்கமும் இந்த பக்கமுமாய் கறுப்பு குதிரையின் பவனி… பெருஞ்சப்தம்! ஆனால் என்ன. மகனாயிற்றே! வளைத்து வளைத்து ஓட்டியவனுக்கு பிடிக்காதது பிரேக்.. வேகமாய் மோதினான்; வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மகளின்  அலறல் ஓசைக்கேட்டு ஓடி வந்தார் கனவுத் தந்தை. வாசலில் ரத்தக் குட்டை…குற்றுயிராக செல்ல மகள்! வியர்த்து நடுங்கிய உடலோடு திகில் படிந்த முகத்தோடு ஆசை மகன்…! சிலையாய் ஸ்தம்பித்து நின்றவரை வெறித்துப் பார்த்தது இரு சக்கர கறுப்புக் குதிரை.

பரிமாணம் ரெண்டு

            தன் கனவுகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பது சில பெற்றோருக்கு அதி விருப்பமான அபத்தம்! தனக்கான விருப்பங்களின் பின்னணி என்ன காலமென்ன… என்றெல்லாம் யோசிக்க மனசு விரும்பாது.. கிருஷ்ணவேணிக்கும் அப்படித்தான்.. சின்ன வயதில் தான் பார்த்த பத்மினி, வைஜெயந்தி மாலா நடனங்கள் மனதில் பதிய.. துபாய் நகரத்தில், தேடித்தேடி, பரத நாட்டியப் பள்ளியில் மகளைத் திணித்தாள்…

            சுகன்யா- சூட்டிகையான சிறுமிதான்… என்றாலும் பள்ளி மற்றும் வீட்டுப்பாடங்கள் சிலுவையாகி விட.. அக்கம் பக்க குழந்தைகளோடு விளையாடவும் விடாமல் விடுமுறையில் சிறகுகளுக்கு சிறை…

            வெள்ளி, சனிகளில்…. சலங்கை கட்டியாக வேண்டும். ஜதிக்கு ஏற்ப பாதங்களை … பழக்க வேண்டும்… பாடல் வரிகளுக்கேற்ப விழிகளில், விரல்களில் பாவனைகளைக் காட்டி முத்திரைப் பதிக்க வேண்டும்.

எவன் கண்டுபிடித்தது இந்த நடனத்தை..பரத முனிவரை பசித்த புலி தின்னட்டும் தில்லானா மோகனாம்பாள் நரகத்துக்கு செல்லட்டும்! பத்மினி ஒழிக!பரதம் ஒழிக!

ஈடுபாடில்லா மனது. ஆனாலும் கற்கும் வயது அன்றோ! கசடற கற்றாள் சுகன்யா….! எட்டு வயது சிறுமிக்கு எவ்வளவு கற்றுத்தர இயலுமோ அவற்றை சொல்லிக் கொடுத்தார் குருஜி.

            இப்போது கிருஷ்ணவேணிக்கு ஆசை ஒன்று முளைத்தது; மகனுக்கு நாட்டிய அரங்கேற்றம் நடத்த வேண்டும்; அதுவும் தமிழ் கூறும் நல்லுலகில்.. தான் பிறந்த ஊரில் நடத்த வேண்டும். கனவுகளுக்கு தடையேதுமுண்டா…? அப்துல் கலாம் அய்யாவும்தான் கூறிச் சென்று விட்டாரே…

            தாயகம் செல்ல விடுப்பும். பயணச்சீட்டும் கிடைத்தில் பெருமகிழ்ச்சி.. கிருஷ்ணவேணிக்கு… அந்த மகிழ்ச்சியின் சுனாமி அலை தாக்கியதென்னவோ சுகன்யாவை…!

            பயிற்சி.. பயிற்சி! நடனப் பயிற்சிதான்! பள்ளிக்கு விடுப்பெடுத்தும் விடுமுறை தினங்களிலும் ஓயாதப் பயிற்சி.

            குரு வணக்கம் தொடங்கி பிரபலமான சாகித்யங்களோடு திரைப்பாடல்களுக்கு ஆடி அசத்த பயிற்சி… ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…?

            சலங்கை ஒலி ஷைலஜா லெவலுக்கு சுகன்யா தயாராக்கப்பட்டாள். பரதம் பயின்றவள்.. குடும்பத்தோடு விமானம் ஏறி பரத கண்டம் வந்திறங்கினாள்.

            சென்னையில் இருந்து கிருஷ்ணவேணியின் தாயூர்… 3 மணிநேர பயணம்… விக்கிரம சதுர்வேதி மங்கலம்!

            கார் நின்றது; கால்கள் இறங்கின!

            அடுத்த நாளிலிருந்து அரங்கேற்றத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கினாள் கிருஷ்ணவேணி.

            உள்ளூர் நாட்டியப்பள்ளி ஆசிரியை உதவிட, விக்கிரம சதுர்வேதி மங்கலத்து சிவன் கோயில் அரங்கம்.. புனித வெள்ளி… மாலை… அழைப்பிதழ்கள் விநியோகம் ஒரு புறம்.   ஆடை, அணிகலன், செயற்கை நகைகள், மேக்கப் சாதனங்கள் என அலைச்சல் இன்னொரு புறம்!

            சுகன்யாவின் பாதங்களுக்கோ பயிற்சியின் முடுக்கல்! முகபாவனை, முத்திரை, தாளத்துக்கேற்ப உடலசைவு என நாட்டியச் சிற்றொளியாக மின்னிட வைக்கும் பெரு முயற்சி.

            இதற்கிடையே விக்கிரம சதுர்வேதி மங்கலத்து சிவன் கோயில் கர்ப்பகிரகத்தில் ஓர் உரையாடல்.

            -ஈசனே… இந்தச் சிறுமி மீது இத்தனை சுமையா…? ஏற்கவில்லை என் மனம்.

            -சக்தி! பெற்றவளின் பேராசை.

            -க்கும்… ஏதாவது திருவிடையாடல் நடத்தி இந்த துன்பத்தில் இருந்து அந்த சிறுமியை விடுவிக்கலாகாதா… நாதா! அன்றி சிவன் போக்கு, சித்தன் போக்குதானா…?

            -மனைவி சொல்லே மந்திரம்…. பொறுத்திருந்து பார்.

            அந்த நாளும் வந்தது! அரங்கேற்ற வேளை!      எடை கூடிய உடை, நகைகளுடன் சுகன்யா அரங்கை வணங்கினாள், கிருஷ்ணவேணியின் முகத்தில் பெருமிதம்!

            குரு வணக்கம் தொடங்கியது… தா.. தா.. தை.. தை.. தத்தை.. தா.தா… ஜதியொலிக்க, உடல் வளைத்து, விரல் குவித்து வணங்கினாள் உள்ளிருந்த ஈசனை!

நெற்றிக்கண்ணர்… ஓரக்கண்ணால் பார்த்தார்!

            அடுத்த பாடல் தொடங்கியது… ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா… தன்னையே குருவென்று சலனமெய்தினேன்.” மென்பாதங்கள் சீரான அடியெடுத்து ஆடத்தொடங்க…

            “அம்மா..” – அடி வயிற்றை பிடித்த படி அரங்கத்தில் விழுந்தாள் சுகன்யா….

  • என்னம்மா ஆச்சு…பதறியபடி மேடை ஏறிய கிருஷ்ணவேணி புரிந்து கொண்டாள்..இனி சுகன்யா சின்னவள் அல்லள்.
  •  

சக்தி, சிவனைப் பார்த்து வாத்சல்யத்தோடு தலையசைத்து புன்னகைத்தாள்.

பரிமாணம் மூணு

நேத்ராவதியை அறிவீரா… வாசகரே!        வாரும்… நான் அறிமுகப்படுத்திவிடறேன்!

நேத்ராவதி! எங்க குடும்பத்துக்கு புது வரவு… இல்லத்து வாரிசுன்னும் வச்சிக்கலாம்!

ஒருநாள் சாயுங்காலம்… திடீரென ஒரு கேள்வியைக் கேட்டுப்புட்டா… கொழந்த….

– காம்ரேடு கடவுள்ன்னா யாரு….?

-அது வந்து காம்ரேட்.. கடவுள் என்பது மனிதரை மீறிய ஒரு சக்தின்னு புரிந்து கொள்ளலாம்..

நானும் நேத்ராவதியும் அழைத்து கொள்வது ‘காம்ரேடு’ என்றுதான். வழக்கமான தாத்தா.. பேத்தி போன்ற பூர்ஷூவா சிந்தனைகளைக் களையுமொரு எளிய முயற்சி.

-உங்க கடவுள்களை எனக்குப் புரியவில்லை, பிடிக்கவுமில்லை

-ஏனோ காம்ரேட்

-விநோத உருவம்.. வியப்பூட்டும் வடிவம். சில நேரம் நரனும் சிம்மமும் சேர்ந்த பயங்கரம். கழுத்தில் நாகம். நான்கு தலை, யானைத் தலை… பன்னிரண்டு கைகள்.

-அதெல்லாம். நம்மைப் போன்றவர்கள் அதாவது மனிதர்கள் வடிவமைத்ததுதான் அதைப் புரிந்து கொள்ள ஐந்திணை, பற்றி அறிய வேண்டும். கருப்பொருள், உரிப்பொருள் எனப் பலவுண்டு தெளிய.

-அன்பே கடவுள் என்பீர்கள்.. கூடவே கழுவேற்றல் …ஒவ்வொருத்தர் கையிலேயும் ஆயுதக் குவிப்பு. அமெரிக்க ராணுவத்தையும் மிஞ்சிவிடும் போல.

-யம்மாடி… மணிரத்னம் படத்து குழந்தைகள் போலவே நிறைய்ய்ய்ய பேசுறியே.

– அவர் யார்.

-திரை இயக்குநர்.. அவர் படத்தில்தான் சிறிய குழந்தைகளும் பெரிய பேச்செல்லாம் பேசும்… அதுவும் அபத்தமாய்.

-எனக்கான நேரடி கேள்விக்கு பதிலின்றி சங்கதியை திசை திருப்புகிறீர்கள் காம்ரேடு.

-புரிந்து கொண்டாள்; புத்திசாலி நம் வம்சமல்லவா.

-சிலுவையை சுமப்பவர்.. சுவர்கள் வணங்கி,கால்நடைகளை பலி கேட்கும் மார்க்கம் எதுவுமே பிடிக்கல.அம்மணமும் பிடிக்கல யுத்த ரத்தம் சுவைக்கும் புத்தமும் சகிக்கல

– சரி…அதற்காக என்ன செய்ய உத்தேசம்..?

-எனக்கே எனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கப் போகிறேன்.

-அட்ரா சக்கேன்னானா..சபாஷ்.. பலே பாண்டியா..

-ஆணும் பெண்ணும் பறவையும் மிருகமும் வண்ணத்துபூச்சியும், பூவும் நீரும் நெருப்பும் எனப் பலவும் கலந்ததொரு உருவம்.

-அடடா.. பிறகு

– காலடியில் முதலை.. சேவைக்கு பூனை. டீக்கடலில்… தேநீர் யானை படுக்கை.

-ஓகோ… அப்புறம்

-ஒரு கரத்தில் கடனட்டை.. எல்லா நாட்டு பணமும் செல்லுபடியாகிற கடனட்டை.

-நெருப்புக்கோழி கொடி; மறுகரத்தில் லேசர் துவக்கு…

-வாகனமில்லையோ…?

-ஏனில்லாமல்… கண்டம் விட்டு தூண்டம் பாயும் ஏவுகணை வாகனத்தில் என் கடவுள் பறப்பான் சிரசில் வேதியியல் குண்டு சுமந்து.

-உங்கள் உலகிலும் யுத்தமா…?

-போர் என்பது அறிவின் வினையாடல் அல்ல…அழிவின் விளையாட்டு என அறிவேன் காம்ரேடு..ஆனாலும் எதிரிகள் தாமே நம் ஆயுதங்களைத் தீர்மானிக்கிறார்கள்

-ஏய்… நேத்ராவதி… என்ன அங்க வெட்டிக் கத பேசிஇட்டு இருக்க ஹோம் ஒர்க் முடிக்கல… உள்ள வா… வந்து புஸ்தகப் பைய எடுத்துட்டு கூப்பிடு.

-காம்ரேடு… ஆத்தா வெய்யும்… அப்றம் பாக்கலாம் ஒக்கே.

-மிரண்ட விழிகளோடு ஓடும் சிறுமியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

வாசலில் நேத்ராவதியின் கடவுள் செத்துப்போய் கிடந்தார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button