அலகுக்கு பாத்தியப்பட்ட விதை
நாத்தாங்காலின் நெல்தளிர்களைத்
தோண்டியுண்ணும் குருட்டுக்கொக்குகள்
சம்சாரி உருவுக்கு அஞ்சுவதில்லை
அதட்டலுக்கு பறப்பதில்லை.
வரப்பு நெடுக
அவன் ஊன்றிய கொடிக்கம்பங்களை
கண் சுருக்கிப் பார்க்கும் கொக்குகள்
காற்றில் சடசடக்கும்
கம்பத்து பாலித்தீன்களை
சம்சாரி நாவுகளென நம்புகின்றன.
•
கொப்பள மேடு
கரும்புகள் தின்னும் கல்லானையும்
சுதையுடம்பு பாகனும்
வெப்ப அலையில் மறுகுகிறார்கள்.
பாகனின் தலையில் உருமா கட்டியுள்ள
கதம்ப மாலையிலிருந்து
வண்ண வண்ண ஈரப்பதங் குடித்து
இருவரும்
தாகந் தணிக்கின்றனர்.
•
வாக்குக்கு கட்டுப்படுதல்
நிறை கம்மாவுக்குள் தூக்கியெறிந்த
ஒற்றை மரப்பாச்சியை
தரை தெரியும் காலத்தில் தேடி வந்த எனக்கு
முக்குளிப்பான் சொன்ன வாக்கு,
‘உன்னை மூழ்கடிக்கும் நீர் வரட்டும்.
உடலைத் துளைத்து வெளியேறி ஆத்தரளிகள் வளரட்டும்.
தாமரைக்கொடி சொரசொரப்பு தோலைக் கிழிக்கட்டும்.
மணக்கும் பாசிப்பிடித்து ஊறு.
நீ வீசிய மரப்பாச்சி நிச்சயம் தட்டுப்படும்.
அதுவரை
கம்மாவின் கரம்பை பிளவுக்குள்
வெற்று நத்தைக்கூடாய் கிட.’
•
பசுங்கிளிகள் காக்கும் ரகசியங்கள்
பாரம் தராமல்
வலி வராமல்
வயோதிக சாவை அழைத்து
கண்ணீர் துளிர்க்கிறேன்.
எனது தொட்டில் கம்பில் செதுக்கப்பட்டுள்ள
மரத்தாலான பசுங்கிளி ஜோடியில் ஒன்று பேசியது,
‘நீ இறந்த பிறகு உனது ரகசியமொன்றை
எல்லோருக்கும் சொல்வேன்’
நான் கேட்டேன் ‘என்ன அது?’
‘அம்மை நோயால் கண்ணிழந்து துன்பப்பட்ட
புறாக்குஞ்சைக் காப்பாற்றி ஆளாக்கியது’.
‘இன்னொரு ரகசியம் உள்ளது’ என்றது மற்றொரு கிளி
‘அது என்ன?’
‘பழந்துணியின் எருசாம்பலுக்குள்
வெள்ளரி விதைகளை
உயிர்ப்புடன் வைத்துள்ளாய் தானே’.
சிரித்த முகத்தில் காலமானேன்.