இணைய இதழ் 116தொடர்கள்

நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

கூரையில் ஒரு நிமிடம்

தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள் திறந்ததும் எனக்குள் ஒரு அமைதியான துவக்கத்தை தருகிறது. அவை பேசும் அந்த மொழி, அதில் உள்ள இசை, என்னை வியக்க வைக்கிறது. ஒருநாள், அதே புறா என் ஜன்னல் ஓரத்தில் இரண்டு முட்டைகளை வைத்திருப்பதைப் பார்த்ததும், அந்த எளிய உயிர்களிடம் நான் உணர்ந்த பாசம், பாதுகாப்பு உணர்வு இன்னும் பல மடங்காக அதிகரித்தது. எனது தேசாந்திரி பயணங்களில் நான் பலமுறை புறாக்களோடு எனக்கென்று ஒரு பந்தத்தை வளர்த்திருக்கிறேன். திடீரென்று,மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி ஒரு பயணம். அங்கே, யாரென்று‌ தெரியாத ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கேயும் புறாக்களுடன் ஒரு பந்தம் இயல்பாக ஏற்பட்டது.  நான் தங்கியிருந்த அந்த வீட்டு ஜன்னலில் என் புறா வாழ்க்கை இணைந்துவிட்டது. ஒருநாள் அவற்றின் மீது கொண்ட பாசத்தில், நானும் வீட்டின் மேல் மாடிக்கு நேரில் பார்ப்பதற்குச் சென்றேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்  பிறகு, சூரியனின் ஒளி என் தோலினூடே மெதுவாய்ப் புகுந்தது. வெகுநேரம் கழித்து, “ஓய்வெடு” என என் உடம்பும் மனதும் எனக்குச் சொல்லி அனுமதி அளித்த நாள் அது.

ஒரு பயணியாக உலகை சுற்றிப் பார்க்கிறேன், இடங்களை மட்டுமல்ல, உயிர்களை, மொழிகளை, நிலங்களை, காலநிலைகளையும் நேசிக்கிறேன். அந்த வகையில், எனது ஒரு பயண நாளில் எனக்குத் தோழமையாக என்னோடு வந்தது ஒரு புறாக் கூட்டம்.. சூரியனின் கரைமுகம் கொண்டு மிதமாகப் பசியெடுக்கும் நண்பகல் நேரம். நகரத்தின் கூரையொன்றில் சில புறாக்கள் மெல்ல நடந்து, தன் சிற்றுணவைத் தேடி ஒவ்வொரு காற்சுவட்டிலும் சுழன்று கொண்டிருந்தன. எனது பாதங்களில் தேய்ந்து போன பயணப் பாதைகள் இந்தச் சுமூகமான தரையில் நின்றபோது ஒரு இனிய அமைதியைக் கொடுத்தன. சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு புறா மட்டுமல்லாது, பல புறாக்கள் என்னைப் பார்த்தவுடன், ஒரே நேரத்தில் என்னை நோக்கிப் பறந்து வந்தன. காலையில் அவை வருவது போலவே அது ஒவ்வொரு நாளின் மற்ற வேளைகளிலும் வந்து, பின் அதுவே ஒரு சந்தோஷப் பழக்கமாக மாறிவிட்டது. நான் மேலே வந்தவுடனே அவை பறக்கத் தொடங்கும். சில புறாக்களுக்கு அந்த நெருக்கம் பழகிவிட்டது. சில இன்னும் கொஞ்சம் தயக்கம் காட்டும். ஆனால், அவற்றுக்கு என் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது – இந்த மாடியில் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கை. அதே கணத்தில் நான் உணர்ந்த ஒன்று – இது புறாக்களின் பயணம் மட்டுமல்ல, இது புறாக்களின் உலகம். அந்த நாள் முதலாக புறாக்கள் என் எண்ணங்களின் ஒரு பகுதியாகவும், என் தனிமையின் ஒரு துணையாகவும் மாறிவிட்டன. அவற்றின் மொழி எனக்குப் புரியவில்லை என்றாலும், அவற்றின் காதல் மொழி என் மனதிற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. வேலைக்குச் செல்லும் காலணிகளுக்கு, ரயிலில் இடம் பிடிக்க விரையும் கூட்டங்களுக்கு, வீடுகளுக்குள் அடைத்துக்கொள்ளப்பட்ட மனதுகளுக்கெல்லாம் திசையுடைய பயணங்கள். ஆனால் எனக்கு?

என் பயணம் திசையற்றது. அது இடைவெளிகளைக் கொண்டது, நிமிடங்களில் தங்கிய மூச்சு. அப்படி ஒரு நிமிடம்தான் அது. இத்தருணம் ஒரு இனிமையான அனுபவம் மட்டுமல்லாமல், இதை வாசிப்பவர்களுக்கு மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்குமானதொரு இயற்கைத் தொடர்பின் உணர்வையும் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். புறா ஒரு சிறு பறவைதான். ஆனால், அதன் பக்கத்தில் நின்று பாருங்கள். அது ஒரு வாழ்க்கைப் பார்வை. தன் உணவைத் தேடி வரும் ஒரு சுதந்திரத்தை, தன்னம்பிக்கையோடு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பகிரும் இயற்கையின் தூதுவரை. அது சிறியதாக இருந்தாலும் அதன் செல்வாக்கு வானளவுக்கே. அவை எப்போதும் கூட்டமாக இருப்பவை. ஆனால்,அவை ஒவ்வொன்றிலும் தனிமையின் ஓசை ஒளிந்திருக்கிறது. ஒரு புறா மற்றொன்றுடன் அன்பாக நெருங்க, இன்னொரு புறா மண்ணைக் கிளறி எதையோ தேடிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது வாழ்க்கை பற்றிய பல சிந்தனைகள் உள்ளத்தைச் சூழ்ந்தன. பிறகு, பொழுதில் ஒரு அமைதி இருந்தது. புறாக்கள் மனிதனுடன் பழகும் பறவைகளில் ஒன்று. சாம்பல் நிறம், ஒளிரும் கழுத்து, விரிவான இறக்கைகள். இவை புறாக்களை தனி அழகாக மாற்றுகின்றன. இது ஒரு இடத்தைத் தேடி வருகிறது என்றால்,அந்த இடத்தில் உண்மையும் அன்பும் அமைதியும் இருக்க வேண்டும். பொதுவாக, புறாக்களின் தன்மை என்னவென்றால், அவை ஒரு இடத்தை விட்டு எங்கே சென்றாலும் அதே இடத்திற்கு திரும்பும் மனதைக் கொண்டவை. இதில்தான் எனக்கு மனிதர்களும், புறாக்களும் ஒன்று போல் தோன்றுகின்றன. மனிதர்களும் தாங்கள் அமைதி கண்ட இடங்களைத்தான் காலத்துக்கும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். நகரங்களில் வசிக்கும் மனிதர்களைப் போலவே, புறாக்களும் ஓர் அடையாளத்திற்காகவே ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. உணவுக்காக, உறவுக்காக, பிழைப்புக்காக. ஒரு பயணி யாரும் தேடாமல் பார்த்துவிட்டுப் போவதைப் போல இந்தக் கணங்களும் தன்னியல்பாக உருவெடுத்தன. ஒரு சில இளைஞர்கள் போல குழுவாய், சில புறாக்கள் தனிமையில் இருந்தன. அவற்றின் நடையில் ஒரு அமைதி. அவை தேடும் கொட்டைகள் போல என் மனமும் என்னைத் தேடி அலைந்தது. அங்கே தரையில் நடந்து கொண்டிருந்த புறாக்கள் எனக்கு ஒரு பாடத்தை நினைவூட்டின. ’தொடர்ச்சியான பயணம் தான் வாழ்க்கையின் இயல்பு’. நீங்கள் எங்கு சென்றாலும் ஒருநாள், ஒரு இடம், உங்கள் மனதுக்குள் இறங்கும். அந்த இடம் வெறும் கூரை என்றாலும் பரவாயில்லை. அந்த இடம் உங்கள் சிந்தனைகளுக்கான தளமாக மாறிவிடும்.

அது ஒரு பழைய கட்டிடம். சாய்ந்த சுவர், துர்நாற்றம், வாசலில் உரசும் காற்று என அனைத்திலும் புறாக்களின் தோல் கூந்தல் போலப் படர்ந்திருக்கிறது. நான் அங்கிருந்து புறப்படவில்லை. ஆனால் நகர்ந்திருக்கிறேன். நான் பேசவில்லை. ஆனால், என் உள்ளம் உரையாடிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த நகரமும் நானும் ஒன்றாகி இருக்கிறோம் எனத் தோன்றியது. ஒரு சாதாரண கூரையின் மேல் நான் நகரத்தின் சத்தங்களைத் தாண்டி ஒரு அமைதியின் சொல்லைத் தேடிக் கொண்டிருந்தேன்.

பொதுவாக, புறாக்கள் ஒரு நகரத்தின் மறக்கப்பட்ட துணைவிகள். அவை, தினசரி விடியலுக்கும், மரணத்திற்கும் சாட்சியாய் இருக்கின்றன. அந்தப் புறாக்களைப் பார்க்கும்போது, ஒரு காலச்சின்னம் போலவும் தோன்றின. இயற்கையுடன் வாழும் காலங்கள், நம் மனப்பாங்குகள், எல்லாவற்றையும் நினைவுப்படுத்தின. மனிதன் எவ்வளவு மோதியேறினாலும், புறா கூட நம்மோடு வாழ்ந்து வருகிறதே என்ற உணர்வில் நான் நெகிழ்ந்தேன். ஒரு தேசாந்திரியாக நானும் அவற்றுள் ஒருத்தியாகவே இருந்தேன். நம்மில் ஒவ்வொருவரும் ஒரு இடைவெளியைத்தான் தேடுகிறோம். ஓய்வெடுக்க ஒரு கூரை, தங்கியிருக்கும் ஒரு நிழல் மற்றும் ஒரு நிமிடம் அமைதி. அவை பறக்கின்றன. பறப்பது ஒரு சுதந்திரமான சின்னம் என்றாலும் அவை திரும்பி வருவதால்தான் நமக்குள் ஏதோ ஒரு உறவுப் பிணைப்பு உருவாகிறது. முற்றத்தில் நடக்கும்போது, அதன் ஒவ்வொரு  கணமும் ஒரு கவிதைப் பயணம். அதன் கண்கள் அச்சம் இல்லாமல் என் பக்கத்தில் வந்த ஒவ்வொரு முறையும் நான் என்னுள் என்னவோ தேடிக் கொண்டேன். அந்தப் புறாக்கள் நானா? அதன் தனிமைதான் எனது நிழலா? அதன் சிறகுகள் என் எண்ணங்களை எடுத்துப் பறக்கிறதோ? ஒருவேளை…இந்தக் கூரையில் ஒரு தேசாந்திரியாக இருப்பதால்தான், அந்தப் புறாக்கள் என்னை வந்து பார்த்ததோ? சுதந்திரம் என்பது கூட்டமாக வாழ்வது அல்ல. சில நேரங்களில், தனிமையில் வாழ்ந்தாலும் சுய நம்பிக்கையோடு பறக்க கூடியதுதான் உண்மையான பறவை. அப்படியொரு பறவைதான் இந்தப் புறா. இன்றைய உலகில் பெரும்பாலும்  புறாக்கள் குறைந்து வருகின்றன. காரணம், நகர விரிவாக்கம், சுற்றுச்சூழல் மாசு, மனிதன் ஏற்படுத்தும் குழப்பங்கள். ஆனால், இன்னும் சில இடங்களில் குறிப்பாக சில மாடித்தொகுதிகள், கோவில்கள், புறநகரங்கள் இவை அனைத்திலும் புறாக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றன.

                          “சின்னச் சதுர பூமியில்,

                         பறக்கின்ற சிற்றிணைகள்

                             தாய்மையின் சுகத்தைத் தேடி

                              தளராமல் திரும்புகின்றன”

இந்தப் புறாக்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்தது இக்கவிதை. இப்பொழுது கோடை. வானம் எரிகிறது. இலைகளே உருகும் இந்த வெயில் நேரத்தில் புறாக்கள் அலைந்து செல்வதைப் பார்க்கும்போது எனக்கு என் தாகம் குறையவில்லை. அவர்களுக்காக. ஒரு சொட்டு தண்ணீருக்காக மாடிகளில் சுற்றும் அந்தக் கண்கள், பறக்கின்ற அந்த வலி, என் உள்ளத்தைக் குழம்படைய வைக்கின்றன. அதனால்தான் நான் தினமும் என் வீட்டு மாடியில் தண்ணீரை வைக்கிறேன், உணவு அளிக்கிறேன். மனிதனால் நகரங்கள் வளர்கின்றன, அடுக்குமாடிகள் உயர்கின்றன, மனிதனால் பாதிக்கப்பட்ட ஒரு உலகம்தான் இந்தப் புறாக்களின் உலகம். நம்மால் எதையாவது மாற்ற முடியுமா?ஆம், மிகச் சுலபம். ஒரு சிறிய பானையில் தண்ணீர், கொஞ்சம் அரிசி அல்லது பருப்பு. உங்கள் வீட்டின் மேல்மாடியில் வையுங்கள். அதைப் பயன்படுத்தி ஒரு உயிர் வாழும். இதை விட சிறந்த மனிதப் பண்பு வேறேது?

இந்த நகரின் கூரையிலிருந்து நான் கீழே பார்த்தபோது, என் உள்ளம் மேலே பறந்தது. இலக்கற்ற பயணங்கள்தான் சில சமயம் சிந்தனைகளுக்கு ஒரு திசையைத் தருகின்றன. ஒரு புறாவின் சிறகோசையில், ஒரு தேசாந்திரியின் நிம்மதியை நான் கண்டேன். அது போதும் இன்றைய பயணம் நிறைவடைந்தது.

பிறந்த இடம் இல்லாத புறாக்கள் போலவே

நானும் இங்கொன்றும் அங்கொன்றுமாய்

தங்கும் இடமில்லாமல்

தனிமையில் நிரம்பிய ஒருநாள் போதுமானது

திசையற்றதாலேதான், என்னால் சுதந்திரமாக  இருக்க முடிகிறது

இவையனைத்தும் நான் இங்கே புறாக்களுடன் இருந்தேன் என்பதற்கான சாட்சி. ஒரு கூரையின் ஓரத்தில் சில நொடியளவில் கிடைத்த அந்த சந்திப்பு என் மனதில் ஒரு நிரந்தர அச்சாகப் பதிந்தது. இப்போது, அந்தப் புறாக்கள் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் மறையவில்லை

நீங்கள்தான் எங்களை மறந்துவிட்டீர்கள்

புறாக்களின் மெல்லிய செம்மொழியைப் போலவே, ஒரு தேசாந்திரியின் வாழ்க்கை மென்மையோடும் சுய விருப்பத்தோடும் ஆனது. ஒரு கூரையில் நம்மை நோக்கி எட்டும் பறவையைப் போல, நாம் வாழ்க்கையை அணுகுவது எளிதாகவும், இயற்கையாகவும் இருக்க வேண்டும். இதுவே புறாக்கள் நமக்குச் சொல்லும் பாடம்.

அவர்கள் வாழட்டும், நாமும் வாழ்ந்தே தீரலாம்

தொடரும்…

gayathriswaminathan132@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button