
அணிகலன்
அசையும் அச்சுடர்
அழகிய ஓர் அணிகலன்
பேரிருட் கழுத்தில்
சிறுநல் ஒளிஅசைவு
அகம் சூடிக்கொள்ள
ஓர் ஒப்பற்ற நகை
வடிவிலா விசும்பில்
முடிவிலாச் செவ்வணி
குளிக்கும் குறத்தியின்
குன்றனைய மார்பிடையில்
செருத்துச் சிவந்த
செங்காந்தள் மாலை.
****
வெறும் வாழ்க்கை
வட்டிலில் வைத்த
சோற்றையும் உண்ணாமல்
வம்பிழுக்கும் நாயிடம்
எதிர்ப்பும் காட்டாமல்
கண்ணில் கோழை பூத்தொழுக
எச்சில் நுரைத்தொழுக
வாலடிக்கவும் வலுவின்றி
வாசலோரம் சோர்ந்திருக்கும்
என் செல்ல நாய்க்குட்டியே!
உன் கண்ணில்
ஒளிர்ந்தணையும் ஒளி உணர்த்தும்
ஒன்றுமற்றது இவ்வெறும் வாழ்க்கை.
****
தன்னலம் கரைதல்
சுடர்புரை பெண்மையின்
சக்தித் திருக்கூத்தில்
அவிந்தடங்கிப் பணியும்
ஆணெனும் அகப்பேய்
நடமிட்டு நடமிட்டு
நின்றெரியும் சுடரில்
பித்துற்றுப் பித்துற்றுத்
தெளிந்தெழுவதே
தன்னலம் கரைதல்.
****
முனி நினைவு
மனத்தை அறுத்துக்கொண்டிருந்த
மழித்த மாமுனியின்
மண்டை நடுவில் அமர்ந்தது
பட்டுப்பூச்சி
மனத்தை அறுப்பதா?
பட்டுப்பூச்சியை இரசிப்பதா?
திகைப்பு முடிவதற்குள்
வளர்ந்துவிட்டது மனம்
விழித்த முனியின் கண் எதிரில்
களித்து மிதந்த பட்டுப்பூச்சி
முனி கரைந்து எழுந்தான்
சித்தார்த்தன்
அவன் ஓட
அவனை விரட்டி விளையாடியவாறே
பட்டுப்பூச்சி.
****
பாதை
முதிர்ந்த உனது ஆணவம்தான்
அவன் அன்பை
அறியாமை என்கிறது
சுத்த ஒன்றை
வெறும் ஒன்று என்கிறது
உனது ஆணவத்தின் முதுமையில்
அவனது அறியாமைதான்
கைத்தடியாக இருக்கப்போகிறது
வெறும் ஒன்றாக உனக்குத் தெரியும்
சுத்த ஒன்றுதான்
உனக்கு எழுதச் சொல்லித்தரப் போகிறது
ஆணவம் என்பது
பிணத்தைப் புணரும் தன்னின்பம்
அன்பே இனம் பெருக்கும்
உள்ளுணர்வு.
******