எலிசபெத் கில்பர்ட் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய, ’Eat Pray Love’ என்ற நூல் பத்து மில்லியன் காப்பிகள் கடந்து உலகம் முழுவதும் விற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் நம் டிஜிட்டல் சமூகம் இருக்கிறது. ”அப்ப நம்ம, ’டியர் ஜிந்தகி’ (Dear Zindagi) படம் மாதிரியா?” என்றால், கண்டிப்பாக இல்லை. இது முற்றிலும் வேறு ஒரு அனுபவத்தைத் தருகிறது.
எலிசபெத் கில்பர்ட் அப்படி என்ன எழுதி இருக்கிறார் என்று தேடிப் படித்தால், நம்மைச் சுற்றி இருக்கும் பெண்களின் மனதுக்குள் ரகசியமாக இருக்கும் ஒரு அறையைப் பற்றித்தான் பேசுகிறார். நம் சமூகத்தில் ஆணோ/பெண்ணோ ஒரு விஷயத்தை தேடிப் போகப் போகிறோம் என்று நாம் வீட்டில் அல்லது நண்பர்களிடம் சொன்னால் உடனே என்ன கேள்வி கேட்பார்கள்? பெரும்பாலும், ”வேலை தேடிப் போறியா? பணத்தை சம்பாதிக்கப் போறியா? உலகைச் சுற்றிப் பார்க்கப் போறியா? ஆன்மீகப் பயணம் போறியா? தத்துவத்தை தேடிப் போறியா?” இப்படிப்பட்ட கேள்விகளாகத்தான் நம்மிடம் கேட்பார்கள்.
ஆனால் எழுத்தாளர் எலிசபெத் சொல்லும் பதிலோ ஆச்சரியப்படும் அளவுக்கு இல்லை என்றாலும், பொதுப் பார்வையில் இது எல்லாம் ஒரு பதிலா என்று எளிதாக அலட்சியப்படுத்தி, அந்தப் பதிலைத் தூக்கி வீசி விடும்படி இருக்கிறது. இதை நம் வீட்டில் சொன்னால் என்ன ஆகும் என்று ஒரு நொடி யோசித்தாலே, வீடு போர்க்களமாக மாறி இருக்கும் சூழல் இப்போதே என் கண் முன் வந்து போகிறது. சரி, அந்தக் கற்பனையை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து, எலிசபெத்தின் இன்டெர்வியூ தேடிப் பார்த்தேன்.
மக்களிடம் பேசுவதற்காக அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். எழுத்தாளரைப் பார்த்ததும், அந்த ஊர் மக்களின் கைத்தட்டல் ஓசையால் அரங்கம் நிரம்பி வழிந்தது. தனக்கு ஒத்துவராத திருமண வாழ்வை நிராகரித்துவிட்டு, அந்த மன அழுத்தத்தை சரி செய்யச் செல்லும் பயணத்தை எழுதிய எழுத்தாளர்தான் எலிசபெத். அந்தக் கைத்தட்டல் அனைத்தையும் கேட்டுக் கொண்டே இந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு பெண்ணின் நிறைவான பயணத்தைப் பேசுவோம் என்று உடனே தோன்றியது.
ஒரே நாடு, ஒரே மொழி என்பது போல, பிப்ரவரியை காதலுக்கான ஒரே மாதமாக மாற்றி விட்டோம். இந்த மாதத்தில் எப்படி தங்களுடைய காதலைக் கொண்டாடலாம், காதலித்த நபர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த நேரத்தில்தான், ’Eat Pray Love’ படத்தைப் பார்த்தேன். எத்தனையோ முறை நான் பார்த்து இருந்தாலும், இந்த மாதத்தில் பார்க்கும்போது ஒரு பெண்ணாக எலிசபெத் கில்பெர்ட் பற்றி யோசிக்கையில் அடி வயிற்றுக்குள் ஒரு சிறு குதூகலம் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. நாம் எங்கையோ பார்த்த, கேட்ட வியசத்தை, மனதின் ஓரத்தில் வைத்து இருக்கும் ஒரு சில காட்சிகளை, ஒரு பெண் எழுதும்போதும், அது படமாக வரும்போதும் உடலில் உள்ள அத்தனை நாளங்களும் உணர்ச்சிப் பரவசத்துக்குள் சென்று குதூகலிக்கின்றன.
படத்தின் கரு, விவாகரத்து ஆகும் பெண்ணின் பயணம் சார்ந்ததுதான் என்று முதலில் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். ஆனால் அது வெறும் பயணம் சார்ந்தது மட்டும் அல்ல, திருமணத்தில் பிரேக் அப் ஆனவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்றும், என்ன செய்யக் கூடாது என்றும் ஒரு பெண்ணுக்கு பாடம் எடுக்காத படமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவள் மனதுக்குள் ஏற்பட்ட காதலின் வெறுமையை எப்படி எல்லாம் அவளுக்குத் தெரிந்த வகையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று யோசிக்கிறாள். அதில் முதற்கட்டமாக ஊர் சுற்ற வேண்டும் என்பதே அவளது எண்ணமாக இருக்கிறது.
இந்த காட்சியை நமது பெண்களின் சார்பாக நான் யோசித்து பார்க்கும்போது, இங்கு ஒரு திருமணத்துக்கு சம்மதம் வாங்குவதும், விவாகரத்துக்கு சம்மதம் வாங்குவதும் ஒன்றாக இருக்குமா? இரண்டையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பார்களா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலைத்தான் முகத்தில் அடித்து ச் சொல்லுவார்கள்.
நம் சமூகத்தில் ஒரு பெண் தான் விரும்பும்படியான திருமணத்துக்கு கூட இங்கு சம்மதம் வாங்கி விடலாம். ஏனென்றால் திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு தொடக்கம் என்று நம் மக்களால் உலக நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் விவாகரத்து என்பது, எந்த நாடாக இருந்தாலும் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவே கருதப்படுகிறது. விவாகரத்து வாங்குவது என்பது ஒரு பெண்ணின் முடிவாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை என்ற பதிலே வரும். விவாகரத்து வேண்டும் என்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் போதும், அந்தத் திருமணத்திற்கு அட்சதை போட்ட பாதி நபர்களின் சம்மதமும், இரு வீட்டாரின் கவுரவமும், பெரியவர்களின் முடிவுகளும் சேர்ந்த கலவையை வைத்து தான் விவாகரத்து என்ற வார்த்தையைப் பற்றியே பேச முடியும்.
இவையனைத்தையும் மீறி சண்டை போட்டு, ஒரு பெண் விவாகரத்து வாங்கி விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் அடுத்து வெளியே செல்கிறேன் என்று சொல்ல வேண்டுமென்றால், இங்கு சில அத்தியாவசியமான காரணங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வீடும் முன்கூட்டியே காலம் காலமாக கட்டம் போட்ட நோட்டில் எழுதி வைத்து இருக்கிறது.
அந்தப் பெண் மனது சரியில்லை என்று சொல்லி கோவிலுக்குப் போகலாம், வருமானத்திற்கு வேலைக்குச் செல்லலாம், குடும்ப உறவினர் வீட்டுக்குச் சென்று வரலாம். இந்த முக்கோண வடிவத்தில் மட்டுமே அவளது வெளித் தொடர்பும், பயணமும் அமையுமாறு பெற்றோரும், உற்றார் உறவினரும் பார்த்துக் கொள்வார்கள். இவை எல்லாம் தாண்டி விவாகரத்து வாங்கின பெண் ரிலாக்ஸ் ஆக ஊர் சுற்றப் போக வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும், வீட்டில் உள்ளவர்களே இதற்காகத்தான் அடம் பண்ணி விவாகரத்து வாங்கினாயா என உடனே கேட்டு விடுவார்கள்.
ஆனால் இதில் வரும் எலிசபெத் மனது சரியில்லை என்று சொல்லித்தான் ஊர் சுற்றப் போகிறாள். அப்படி ஊர் சுற்ற ஆரம்பிக்கும்போது, ஒரு நாடகக் கலைஞனைப் பார்க்க நேரிடுகிறது. அவனுடன் ஒரு குட்டிக் காதல் ஏற்படுகிறது, ஆனால் அதைத் தொடர முடியவில்லை. அவளுக்கு அவனுடன் ஒரே எண்ண அலை வரிசையில் காதலிக்க முடியவில்லை. அவனுடன் பழகும் நாட்களில், அவனுடைய மனம் நிலையாக இல்லாமல் இருக்கும்போது இந்தியாவில் இயங்கும் ஆசிரமத்தில் சொல்லித் தந்த தியான முறைதான் தனக்கு உதவியாக இருக்கிறது என்று சொல்கிறான். உன் மனதும் தெளிவு இல்லாமல் இருக்கிறது, அதனால் முடிந்தால் தியானத்தைக் கற்றுக்கொள் என்கிறான். குறுகிய காலத்துக்குள் ஒரு சிறு காதலும், அதன் பிரிவும் நேரும்போது எலிசபெத் இன்னும் குழப்பமடைந்து வேறு இடத்துக்கு நகர்கிறாள்.
சட்டென்று ஒரு காதல் உறவில் நிரந்தரப் பிரிவு என்று வரும்போது முதலில் தன் மீதுதான் தவறு என்ற குற்ற உணர்வை ஏற்படுத்த தனக்குத் தானே முயற்சி செய்வோம். அந்த முயற்சியில் சில கேள்விகளை நமக்கு நாமே தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். கொஞ்சம் பொறுத்துப் போய் இருக்கலாமோ, கொஞ்சம் நிதானமாக இருந்து இருக்கலாமோ, கொஞ்சம் அமைதியாக இருந்து இருக்கலாமோ, கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ என்று பல விதமாக தன் செயல்பாடுகள் மீதும், தன் எண்ணங்களின் மீதும் தான் சுய சந்தேகத்தை உருவாக்கிக் கொண்டே இருப்போம்.
காதலர் மீதோ/கணவர் மீதோ ஏற்படும் மோதலில் உண்டாகும் கேள்விகளுக்கு பதிலுக்குப் பதில் பேசி சண்டை போட்டு, திருப்தியடைந்து விடலாம். ஆனால் தனக்குள் நடக்கும் சுயசந்தேகக் கேள்விகளுக்கு, மனதுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு யாரிடம் போய் பதில் கேட்பது? அந்த இடத்தில் உருவாகும் வெறுமையைப் பார்த்து அளப்பறியா பயம்தான் நமக்குள் ஏற்படும்.
அந்த பயத்தில்தான், சில குளறுபடிகளுடன் ஒரு சில முடிவுகளை அந்தந்த நேரத்திற்கு ஏற்ப எடுத்தேன் என்கிறார் எழுத்தாளர்.
நாடகக் கலைஞனுடன் காதல் பிரேக் அப் ஆனதும் இத்தாலி செல்கிறாள் எலிசபெத். அங்கு சில நண்பர்களிடம் அவளது விவாகரத்து பற்றியும், அதனால் தனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறாள். உடனே அந்த இத்தாலி நண்பன், அமெரிக்கர்கள் அனைவரும் தேவையில்லாத சென்டிமென்ட் இடியட்ஸ் என்றும், இத்தாலியில் இருப்பவர்கள் அனைவரும் அனைத்தையும் கொண்டாடுபவர்கள் என்றும் கூறுகிறான்.
அவன் சொல்லும் பதிலில் இருந்து, எலிசபெத் அந்நாட்டின் கொண்டாட்டத்துக்குள் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வாள். இத்தாலியில் உள்ள விதம் விதமான உணவு வகைகளை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டு, அந்த நாட்டின் மொழியைக் கற்றுக் கொண்டு, நவ நாகரீகமாக உச்சரிப்பதைப் பார்க்கும்போது அவளுக்குள் ஏற்படும் குறுகுறுப்பு எல்லாம் இங்கு நமக்கும் தொற்றிக் கொள்ளும். அங்கு சில மாதங்கள் முடிந்ததும், தியானம் கற்றுக் கொள்ள ஆசைப்படுவாள்.
உடனே நாடகக் கலைஞன் சொன்ன ஆசிரமத்தைத் தேடி, எலிசபத் கிளம்பி இந்தியா வருகிறார். அந்த தியான வகுப்பிலும் அவள் தேடிய பிரிவின் வெறுமைக்கான சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்நேரத்தில் ஆசிரமத்தில் ஒருவருடன் நண்பராகும் வாய்ப்பு தானாக ஏற்படுகிறது. தனக்குள் இருக்கும் குற்ற உணர்வை என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறது என அவள் சொல்லும் போது, அவர் கொடுக்கும் பதில் “உன்னை நீ மன்னித்து ஏற்றுக் கொள்” . மேலும், “Ruin is Gift. Ruin is the road to transforamation” என்கிறார்.
இந்தப் படம் முழுக்க ஒரு பெண் காதலின் வெறுமையை எப்படி எல்லாம் கடக்க முடியும் என்று அவளாகத் தீர்மானித்த ஒன்றில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் பார்க்கும் நபர்களின் வார்த்தைகளை வைத்து, அதில் அவளுக்கு என்ன தேவையோ அதைக் கற்றுக்கொண்டு அடுத்த, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருப்பாள். அவளுக்குத் தோன்றும் கொண்டாட்ட மனநிலை, தியான மனநிலை, ஊர் விட்டு ஊர் வருவது, நாடு விட்டு நாடு கடந்து வருவது இப்படி எல்லாம் செய்து, கடைசியில் காதலின் வெறுமையை காதலால் மட்டுமே அடைய முடியும் என்றே காண்பித்து இருப்பார்.
எலிசபெத் அத்தனை பெண்களையும் பார்த்து, திருமணத்தில் ஏற்பட்ட பிரிவால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாரிடமும் எந்த அறிவுரையும் கேட்கவில்லை என்கிறார். சில நேரங்களில் உணர்வுகளைக் கையாள முடியாமல் திணறுவதாகத் தோன்றும்போது மட்டும், அருகில் இருக்கும் நபர்களிடம் கேட்டு நிதானமாகத் தன்னை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
உலகம் மிகப்பெரியது என்றும், எத்தனை தவறுகளும், குளறுபடிகளும் செய்தாலும், அதில் இருந்து நமக்கான பிடித்தமான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும்தான் எலிசபெத் நமக்கு கைப்பிடித்துச் சொல்கிறார்.
அப்படிப்பட்ட காதலைக் கண்டடைந்த எலிசபெத்துக்குதான் அத்தனை கைத்தட்டல்களையும் மக்கள் சமர்ப்பிக்கிறார்கள். எல்லா மனத்தடைகளும் கடந்து நமக்கான காதலைக் கொண்டாடுவோம்.
*****