இணைய இதழ்இணைய இதழ் 87சிறுகதைகள்

நம்மாட்டி – சிவசங்கர்.எஸ்.ஜே

சிறுகதை | வாசகசாலை

ப்பாவுக்கும் அம்மைக்கும் நானும் அண்ணனும் ஆக ரெண்டே பிள்ளைகள். அறுபதுகளில் ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் என்பது அபூர்வம். ஆனால், அம்மைக்கு ஒரு பிடிவாதம். பக்கத்து கண்டத்தை வாங்கி அதில் தென்னையும் வாழையும் வைக்க வேண்டும். இப்போதிருக்கும் ஓலை வீட்டை இடித்துவிட்டு நாலுகட்டு வீடு கட்ட வேண்டும். அதற்கு பணம் வேண்டும். அதற்கு பெண்மக்கள் இருக்கக் கூடாது. அம்மையின் ஆசைக்கு பப்பாவும் ஒத்துக்கொண்டார். எங்களுக்குப் பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. அண்ணனுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மூன்று வயதுகள் மட்டும். மற்றபடி முகம் உயரம் உருவம் எல்லாம் அப்படியே அச்சு அசல். பார்த்தால் இரட்டைப் பிள்ளைகள் என்று நினைப்பார்கள். 

முட்டைக்காடு பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு வரையும் அண்ணன் ஆறாம் வகுப்பு வரையும் படித்தோம். பத்து வயதிலிருந்தே அண்ணனும் நானும் மண் வெட்டும் வேலைகளுக்கு பழகியிருந்தோம். அண்ணன் படிப்பை முடித்ததும் அப்போது நல்ல பணம் கொழிக்கும் வாழைத்தோட்ட வேலைகளில் கூலிக்கு ஈடுபட்டான். நான் கரியிலை இட்டு குலை பொதிதல், உறை போடுதல், சந்தைக்கு குலைகளை கொண்டு போகும் வேலைகளைப் பயின்றுகொண்டேன். பாண்டிக்காய்கள் வரத்து காலத்தில் உதிரும் சள்ளு காய்களை மொத்தமாய் ஏலம் எடுத்து நாங்கள் தனியே லாபம் பார்ப்பதும் உண்டு. 

எத்தனை முறை பார்த்தாலும் எவ்வளவு நெருக்கமாய் பழகியிருந்தாலும் அண்ணனையும் என்னையும் வித்தியாசம் கண்டுபிடிக்க யாராலும் முடியாது அம்மையைத் தவிர. பத்து வயதில் மண்வெட்டி பிடித்த கைகள். “நம்மாட்டிதாய்ன் நமக்க செல்வம். அத வச்சு நாம பொதயல் எடுப்பம்பில” – அண்ணன் சொல்லிக் கொள்வான். பப்பா இறந்துபோக உழைக்க மடிக்காத பிள்ளைகளைக் கொண்டு அம்மா சிறுக சேமித்து பக்கத்துக்கு கண்டத்தை ஏழே வருடங்களில் வாங்கி விட்டாள். சபதம் நிறைவேற்றியதோடு அண்ணனுக்கும் எனக்கும் சேர்த்து நாலு கட்டு வீடு கட்டவும் ஏற்பாடு செய்தாள். வீடு வளர்ந்தது. வீடு முடிந்து பால்க்காய்ப்பதற்குள் அண்ணனுக்கு கல்யாணம் செய்திட கையோடு மூத்த மாமியின் வீட்டு மூத்தவள் ரோஸ்லியை நிச்சயமும் செய்துவிட்டாள். ஊர் மெச்ச கல்யாணம் நடந்தது. இரண்டு வருடங்கள். நானும் அண்ணனும் வாய்ப்பு கிடைத்த எல்லா வயல்களையும் பாட்டத்துக்கு எடுத்தோம். முதல் வருடம் அண்ணனுக்கு பையன் பிறந்தான். அடுத்த வருடம் இளையவள் ராஜத்தை எனக்கு மணம் முடிப்பார்கள். கனவில் மிதந்து கொண்டு திரிந்தேன். எங்கள் ‘நம்மாட்டி’ பட்ட எல்லா மண்ணும் பொன்னைத் திருப்பித் தந்தது. புதையல்தான் அண்ணன் சொல்வதுபோல புதையல்தான். எந்த புதையலை எந்த பூதம் காத்து வந்ததோ. நானும் அண்ணனும் பாட்டம் எடுத்த வாழைத்தோட்டத்திற்கு அன்று வழக்கம்போல விடியக்காலையிலேயே சென்றுவிட்டிருந்தேன். அண்ணன் கொஞ்சம் தாமதமாக வருவான். கல்யாண ஆனவன். நான் ராஜத்தை நினைத்துக் கொண்டே வரப்பு வெட்டிக் கொண்டு வந்தேன். ‘உஸ் உஸ்’ஸென்று சத்தம் வந்த திசையில் பார்த்தால் நல்ல கருநாகம். ஏற்கனவே ஒரு நல்ல சரக்கு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாக அண்ணன் எச்சரித்திருந்தான். நான் மெதுவாய் அனக்கம் காட்டாமல் அரவம் கேட்ட வாழையின் அருகில் எச்சரிக்கையாய் காலை வைத்தேன். சரக்கு வாழை மூட்டில் படம் எடுத்து நின்றிருந்தது . சட்டென நம்மட்டியை உயர்த்தி ஒரு அடி. பொத்தென்று ஒரு சத்தம் யாரோ பின்பக்கம் விழுந்ததுபோல. அண்ணன். எல்லைக்கல்லில் பின்மண்டையடிக்க விழுந்து கிடந்தான். ஒரே ரத்தம் . பேச்சு மூச்சில்லை. 

பாளையங்கோட்டை மத்தியச் சிறை. அந்த காய்ந்த மண்ணும் கருகும் வெயிலும் முதலில் முகத்திலடித்தது. நான் அங்கு கழித்த நாட்கள் எல்லாம் சொல்ல எதுவுமற்ற வெற்று காலங்கள். இளமையில் உறவுகள் யாருமற்று இருப்பதுபோல் பரிதாபம் எதுவுமில்லை. பகலின் வெக்கையும் இரவின் வெம்மையும் என்னை எரித்துக் கொண்டேயிருந்தது. உள்ளுக்குள் தீ எரிந்து காந்தி, அழுகை வற்றி நான் யாரோவாக மாறியிருந்தேன். அக்யூஸ்ட் , எப்.ஐ. ஆர், போஸ்ட் மார்டம், ஸ்டேட்மென்ட் , லாயர், ஜே.எம், கன்பெஷன், சார்ஜ் ஷீட், ட்ரையல், செக்ஷன் 302 303 இறுதியில் ‘அன் இன்டன்ஷனல் மர்டர் 304A’ என்று ஏதேதோ சட்ட விதிகள் பெயர்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. வக்கீல் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டேன். சொன்னவற்றை அப்படியே ஒப்பித்தேன். ‘’பேடிச்சாதீரும் ஓய். நாலு வரியத்தில வெளிய வந்திருவீரு.’’ வக்கீல் சந்தோஷமாய்ச் சொல்லிப் போனார். எனக்கு எதுவும் காதில் விழவில்லை. விழுந்தாலும் மண்டைக்குள் ஏறவில்லை. 

ஜெயிலில் வேலை செய்ய வார்டன்கள் பங்கீடு செய்கையில் மண்வெட்டியைப் பார்த்து பயந்து உரக்க அலறினேன். ஜெயிலரே சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். விஷயம் அறிந்ததும். தச்சு வேலைப் பிரிவுக்கு மாற்றிப் போனார். நான் உளிகளை எப்படிக் கையாண்டேன், எப்படி பலகைகளை மரச்சாதனங்களாக மாற்றினேன், எதுவும் நினைவில் இல்லை. கை அனிச்சையாக எதைஎதையோ செய்தது, ஓர் இயந்திரமாக. யாரோடும் அதிகம் பேசுவதில்லை. இன்னும் ரெண்டு வருடம்தான் என்றார் வக்கீல் ஒருநாள். நான் நாட்களை எண்ணவில்லை. எனக்குத் தெரிந்தது பகல், இரவு, வெளிச்சம், இருட்டு, எப்போதாவது சக கைதிகள் பாடும் பாட்டு, அவர்களுக்குள் நடக்கும் அடிதடி. என் கைகளைப் பார்த்தாலே யாரும் என்னிடம் வம்புக்கு வருவதில்லை. நம்மாட்டி பிடித்த கை. 

ஜெயில் நூலகத்தில் அவ்வப்போது புத்தகங்கள் படித்தேன். சில புத்தகங்கள் குற்ற உணர்வைக் கூட்டிவிட அதுவும் நின்று போனது. ஆன்மிகத்துக்குள் செல்ல முயன்று தோற்றேன். எல்லா மத நூல்களிலும் ஏதோ ஒரு கொலை. அதுவும் விவிலியத்தில் அண்ணனைக் கொன்ற தம்பி . என்னால் உறங்க முடியவில்லை. ’நினைப்பதெல்ல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. பக்கத்து செல்லில் பாடிக்கொண்டிருந்தார்கள். ‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.’ நான் தியானம் செய்யக் கற்றேன். ஒருவழியாக உறக்கம் வர ஆரம்பித்தது.

ம்மையின் நினைவு வந்து கொண்டேயிருந்தது அலைகளைப் போல. அண்ணனையும் என்னையும் ஒரு சொட்டு கூட பேதம் பாராட்டாதவள். ஒரு பருக்கை சோற்றைக் கூட அவனுக்கோ எனக்கோ கூடுதலாக குறைவாக வைக்க மாட்டாள். பஞ்ச காலத்தில் எங்களை பட்டினி கிடந்து கிழங்கும் கீரையும் அவித்துத் தந்து காப்பாற்றியவள். வெளியே களை பறிக்க ஞாறு நட போய் வரும்போதெல்லாம் ரோட்டோரத்தில் கிடக்கும் புளியம்பழமோ மாங்காயோ பொறுக்கி எடுத்து வருவாள். உறவு வீடுகளில் தின்பதற்கு கிடைக்கும் தின்பண்டங்களை சீலையில் மறைத்து எங்களுக்கு எடுத்து வருவாள். ‘அண்ணன் மக்ளே. தம்பி மக்ளே’ சொல்லிச் சொல்லி வளர்த்தாள். ’உனக்கு அவன் தொணை. அவனுக்கு நீ தொணை. இஞ்ச வேற குடும்பங்களோ போல பத்தும் பதினஞ்சுமா இருக்குவு? நீங்க ரெண்டு பேருதானே பொன்னு மக்கா.’ அம்மையின் வாக்குகள் ஓர்மைக்கு வந்து தேம்பினேன். ‘’அம்மோ, அண்ணனைக் கொன்னிட்டேண்டியே. எனக்கத் தொணையத் தொலைச்சிட்டேண்டியே. எடியே அம்மா.‘’ எப்போது உறங்கினேனோ தெரியாது. 

இன்னும் பத்து நாட்களில் விடுதலை ஆகிவிடுவேன் என்று வக்கீல் சொல்லிப் போனார். என்னால் ஒரு இடத்தில உட்கார முடியவில்லை. இங்கிருந்து வெளியே போய் எங்கே செல்ல ? என்ன செய்ய ? வேலை பரவாயில்லை இப்போது மரவேலையும் தெரியும். கொலைகாரனுக்கு யார் வேலை தருவார்கள் ? நான் ஜெயிலுக்கு வரும்போது ரோஸ்லி மைனி கர்ப்பமாக இருந்தாள் என்றறிந்தேன். என்ன குழந்தை பிறந்திருக்கும்? நான் அந்த வீட்டுக்குப் போகலாமா? எப்படி மைனி முகத்தில் விழிப்பது? குழந்தைகள் என்ன சொல்லும்? ஊரில் என்ன பேசிக்கொள்வார்கள்? என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. பத்து நாட்கள் பத்து வருடங்களாய் நகர்ந்தது. 

கணக்கு தீர்த்து முடிந்து என் பொருட்களைப் பெற்று கொண்டு வெளியே வந்து காலாற நடந்தேன். ஜங்க்ஷன் பஸ் ஸ்டாண்ட். நாகர்கோயில் பஸ் எதுவும் இல்லை. மதுரை பஸ் நின்றுகொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்தேன். மதுரை பெரியார் பேருந்து நிலையம். அங்கிருந்து விருதுநகர். சாத்தூர். சிவகாசி. கோவில்பட்டி. திரும்ப மதுரை. திருநெல்வேலி. பைத்தியம் போல சுற்றிக் கொண்டேயிருந்தேன். கால் போன போக்கில் தாமிரபரணி கரையோரம் நடந்தேன். பெயர் தெரியாத ஒரு கிராமம் . அங்கே ஆற்றங்கரையில் பகல் முழுதும் கழித்தேன். மதியம் சாப்பாடு நேரம் வயிறு பசித்தது. தாமிரபரணி தண்ணியை நிரப்பிகொண்டேன். கொஞ்சம் கண்ணசந்து முழித்ததும் ‘தம்பி’ என்றொரு அழைப்பு. கிழவர். ‘தம்பி ஒரு சின்ன ஒதவி. இந்த வாழைக்கண்ணுகள ஒண்ணு நட்டு தருவியாப்போ‘. என் கண்கள் அந்த தோப்புக்குள் போனது. ஒரு மண்வெட்டி. சுற்றிலும் வாழைக்கன்றுகள். 

ற்றில் நெடுநேரம் முங்கிக்குளித்தேன். பையை இடுக்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி நடந்து ஜங்க்ஷன் பஸ் நிலையத்துக்குள் நுழைந்தேன்.

ஊர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் எல்லா கண்களும் என்னைப் பார்ப்பதுபோல் யார் யாரோ என்னிடம் நலம் விசாரிப்பதுபோல் பிரமை. எதிரில் தென்படும் மனிதர்களுக்கெல்லாம் அண்ணனின் சாயல். நான் சிறையில் இருந்த காலங்களில் கண்ணாடி பார்க்காமலிருந்ததற்கான காரணமும் அதுதான். தூரத்தில் வீட்டு முகப்பு தெரிந்தது. நாலுகட்டு வீடு. அண்ணனுக்கும் எனக்குமான வீடு. அம்மையின் உழைப்பு. எங்கள் உழைப்பு.

நான் நடுங்கியபடி வீட்டு நடையில் ஏறினேன். திண்ணையின் கைப்பிடிச் சுவரை கைத்தாங்கலாய்ப் பிடித்துவிட்டு நிமிர்ந்தேன். வீட்டு முன் வாசலில் சாய்வாக அண்ணனின் கருப்பு வெள்ளை திருமணப் புகைப்படம். சற்றுத் தள்ளி அம்மாவின் புகைப்படம் மாலையோடு.

ரோஸ்லி மைனி அரவம் கேட்டு வெளியே வந்தாள். ஒரு முழு நிமிடம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ‘’எனக்க ஏசப்பா, நான் என்ன செய்வேன். எனக்க அப்போ நான் என்ன செய்ய‘’. மைனி மயங்கி விழுந்தாள். நான் திண்ணையிலிருந்த பானைத் தண்ணியை அவள் முகத்தில் தெளித்தேன். 

‘’நான் இஞ்ச சொத்து சுகத்துக்காக வரேல. நேரு செல்லணுமெங்கி எனக்கு வேற போக்கிடம் இல்ல. அறியாமப் பற்றிப் போனது. அதுக்கு கொறைய அனுபவிச்சாச்சு. மனசு கொண்டு நெனைச்சேல. எல்லாம் போச்சு. ஒரு ஜீவிதம் மொத்தம் போச்சு.’’ 

மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. சற்று பொறுத்து கேட்டேன்.

‘’நான் இஞ்சையே வராந்தாவுல இருந்துகிடட்டா. ஒரு காவல் பட்டி மாரி. நீ ஒரு வாக்கு செல்லாம நான் இந்த நடைக்க அவத்த கேற மாண்டேன். அம்மையாணை சத்தியம்.’’

மைனிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. கோபமா அதிர்ச்சியா பயமா என அறிய முடியாத தவிப்பு. அவள் எதுவும் பேசவில்லை. பின்புறக் கொல்லையில் விளையாடி முடித்து வீட்டைச் சுற்றி ஒரு சிறுமி என்னருகே வந்தாள். என்னை மேலும் கீழும் பார்த்தாள். நான் கண்கள் முட்ட அவளையே ஒருவார்த்தை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முகத்தையே நெடுநேரம் பார்த்த்துவிட்டு மெல்ல அருகில் வந்து கையைப் பிடித்தாள்.

“பப்பா, இம்புட்டு நாளு எங்க போயிருந்திய?”

******

prismshiva@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button