குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள்
இசையின், ‘மைக்ரேன்’
இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது
இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர்
காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது
வாதையின் குமிழ் உடையும் பாதையில்
தலை தனக்கான போதையில் உடல் நீங்கி
முண்டத்தின் முடிசூடா ராணியாகி நர்த்தனமிடுகிறது
ஒரு வார்த்தையின் உக்கிர தாண்டவம் யாதும் தீதே யென்கிறது.
***
பொறுப்புத் துறப்பின் இருப்பு விறைப்பு
அருவத்தைத் தருவித்த உருவத்தின் பெருமிதத்தில்
ஆசையின் அமைதி ஆசீர்வாதத்தின் சிகரத்தில்
ஆணவக் கொடி நாட்டிவிட்டது
சிற்றின்பத்தின் பேரின்பத்தைப் பிரதிபலிக்கும் இந்த உன்
பொறுப்புத் துறப்பின் இருப்பு விறைப்பில்
பாகூரும் சொற்களின் பொதி
தயக்கத்தின் முயக்க மயக்கத்தில்
செயற்கைக் கருத்தரிப்பில் விளைந்த
இயற்கையின் சாயத்தில் இயக்குகிறது
ஒரு வார்த்தையின் ஆனந்தக் கூத்தில் யாதும் நன்றே யென்றாகிறது.
***
பேழைக்குள் ஒளித்து வைக்கப்பட்ட பேரமைதியின் பேரொலி
அசாதாரணத்தின் விசித்திரச் சித்திரம்
பேழைக்குள் ஒளித்து வைக்கப்பட்ட
பேரமைதியின் பேரொலியை விடுவித்துவிட்டது
கேள்விக்கும் பதிலுக்கும் வெளியே சஞ்சரிக்கும்
வெளியின் போர்வாள்
அர்த்தத்தை வன்புணர்ந்துவிட்டது
ஒரு வார்த்தையின் ஊர்த்தவ தாண்டவத்தில் யாவும் மாயம் என்றாகிறது.
***
மதுக் கோப்பையில் நீந்தும் உன்மத்தத்தின் நிழல்
(அல்லது)
பிம்பமுனி
தொட்டியில் குட்டி மீன்களுடன்
என் பிம்பமும் நீந்திக் கொண்டிருந்தது
ஒரு பாட்டில் அரிசி மதுதான்
முதலில் தேவையாக இருந்தது
அதற்கு ஏற்ப ஒரு பிறந்தநாள் விழா வந்தால்
எல்லாம் துறந்த சுழிக்குப் பொருத்தம் கூடும்தான்
உடன் கொஞ்சம் மாமிசம் இருந்தால்
நன்றாக இருக்கும் எனப் பிறகு தோன்றியது
உச்சம் தொட்ட சிறகோ சுட்ட இசை வேண்டும் என்றது
மதுக்கோப்பையிலிருந்த உடல் மீன் தொட்டிக்குத் தாவிப் பாய்ந்தவுடன்
நிலம் தன் வாழையிலைச் சிறகை வாழ்வின் பொருளுக்கு விரித்துக் காட்டியது
கடல் தன் அலைத் தோகையை அற்புதத்தின் வண்ணத்திற்கு வரித்துக் கட்டியது
காற்று தன் சக்கரப் பாதையை சுழற்சியின் கால மயக்கத்திற்குத் தெளிந்து மீட்டியது
நெருப்பு தன் சுயரூபச் சுத்திக்கு எனையும் கூட வளர்த்திப் போட்டியிட்டது
வானம் தன் மழைச்சில்லுகளை மேலும் துல்லியமாகப் படைத்துப் போட்டியிட்டது
இந்தப் பருவத்திற்கு
இப்படியொரு
புத்தம் புதுக் காய்ச்சல்
எனக்கல்ல
உங்களுக்கு.
*********