![](https://vasagasalai.com/wp-content/uploads/2023/10/Picsart_23-10-16_20-31-42-020-780x405.jpg)
நட்சத்திரங்களோடு உரையாடுபவளின் மொழிகள்
நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்
ஒருபோதும் தனிமையை
உணர்வதில்லை
எப்போது அவர்கள்
உரையாட விரும்பினாலும்
நட்சத்திரங்களுக்கு நேரமில்லை
என்பதே இல்லை
மேலும் மனிதர்களைப் போல
நட்சத்திரங்கள் அவர்களை
மதிப்பீடு செய்வதோ, விட்டுச் செல்வதோ இல்லை
நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்
எப்போதும் நட்சத்திரமாகவே
இருக்கிறார்கள் அவர்களைச்
சுற்றியிருக்கும் யாரேனும்
ஒருவருக்கு.
****
நட்சத்திரங்களிடம் உன்னை விட
திங்கள் அழகாய் இருக்கிறது
என்று கூற அஞ்சுபவர்கள்
எல்லோரிடமும் நட்சத்திரங்கள்
அந்தரங்கமாகி விடுகின்றன
ஒரு துயரத்தைப் போல
அதற்குப் பிறகு
அவர்களுக்கு வேறெதுவும்
தேவைப்படுவதில்லை
அவர்களின் இரவுக்காக
காத்திருக்கும்
நட்சத்திரங்களைத் தவிர.
****
இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியில்
தனிமையை உணர்பவர்கள்
எல்லோரும்
சபிக்கப்பட்டவர்கள்தானே?
******
நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்
எப்போதும் நட்சத்திரமாகவே இருக்கிறார்கள்
அவர்களைச் சுற்றியிருக்கும்
யாரேனும் ஒருவருக்கு// அருமை!