சிறுகதைகள்
Trending

நாயகி – சேகர் சக்திவேல்

சிறுகதை | வாசகசாலை

நாட்டார் தெய்வங்களை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் கோயில் கொடைகளுக்கு முன்னுரிமையளித்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். வருடம் முழுவதும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் அம்மனுக்கு, சுடலைமாடனுக்கு, பாட்டன்மார்களுக்கு ஒருநாள் ஊர்க்கூடி,  முன்னோர் சொல்லிப்போன வழிமுறைப்படி திருவிழா கொடுப்பது வழக்கம். தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு நகர்ந்துவிட்ட ஊர்வாசிகள் கூட எப்படியாவது கோயில் கொடையில் கலந்துகொள்ள வந்துவிடுவார்கள்.

பருத்திமாரில் இரண்டையெடுத்து கரிசல் மண்ணின் குழியில் வைத்து அதன் மீது பனையோலை நெருப்பில் தப்பட்டையை வாட்டிக்கொண்டிருந்தவர், சித்திரை மாத இரவு வெக்கையில், நெருப்பின் அனலும் சேர்ந்து கொள்ள வியர்வையிலும், கண் எரிச்சலிலும் புழுங்கிக்கொண்டிருந்தார். மேல்சட்டையில்லாத தட்டை வயிற்றுடம்பு, ஒல்லியான கைகளில் புடைத்து நிற்கும் சிறு குன்றுகளோடு அமர்ந்திருந்தவர்தான் மகுடக்காரர்.

“போனவருசம் வந்த அதே குருப்புதாம்டே இந்த வருசமும் வந்துருக்காங்க” பேசியபடி நகர்ந்து போன இளசு கூட்டத்திலிருந்து “நேரம் போதாதாமாம், கூத்த ஆரம்பிக்கலாம்லா” என்ற குரல் வந்து போனது. “இருங்கடே, வெரதம் இருக்கிற சாமியாடிமாரே இன்னும் வரல, வேடிக்க பாக்க வந்தவனுங்களுக்கு என்ன அவசர மயிரு?” பெருசு ஒருவர் பொடியை மூக்கில் ஏற்றியப்படி பதில் கொடுத்தார்.

ஒரே கதையை ஒவ்வொரு வருடமும் சொன்னாலும், தாளத்திலும், இழுவையிலும் மாற்றமிருந்து கொண்டேயிருக்கும். கனியான் கூத்துக்கு ஊரே அடிமை. கனியான்கூத்தை மெய்மறந்து கேட்கும் வழக்கம் இன்னும் சொச்ச ஊர்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அன்னாவி ஒரு பிழை விட்டாலும் அவ்வளவுதான், ஒருகுரல் எழுந்துவிடும். அந்தளவுக்கு கூத்தை விரும்பும் மக்கள் மதுரைக்கு தென்பக்கம் இன்னமும் இருக்கிறார்கள்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மகுடக்காரர் தட்ட ஆரம்பிக்க, அன்னாவி பிள்ளையாரை தன் பாட்டின் மூலம் வணங்கித் தொடங்கினார். மழித்த கன்னங்கள், பட்டையும் நெற்றிப்பொட்டும் அவ்விரவுப் பொழுதிலும் பளிச்சென்று காட்டியது. விரல் முட்டி முடியும் வரையிலான கனத்த மோதிரம், ஜருகை சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டு இரண்டு பேருக்கு நடுவிலிருந்து அன்னாவி பாடிக்கொண்டிருந்தார். புது ஆனந்த் பனியனோடும், நடுத்தரமான சால்வை இடுப்பில் அணிந்திருந்தவர், வாயில் வெத்தலை எச்சியோடு அன்னாவி முடித்த கடைசி வரியை “ஆமா…” என்றபடி சொல்லிக்கொண்டே வந்தார்.

சிவன் கதையைத் தொடங்கவும், ஊரின் பழைய பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து இரண்டு பேர் பாலீஸ்டர் புடவையோடு வரவும் சரியாய் இருந்தது. வரும்போதே இருவரும் கால்களை முன்னேயும், பின்னேயும் திருப்பி ஆடிக்கொண்டு வந்த சலங்கை சத்தத்தில் அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒத்தையடி பாதை தற்காலிகமாக உருவானது.

இரண்டுபேர் ஆடியதில் ஒருவரை மூர்த்தி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். இதுநாள் வரை கூத்துக்கதையை எங்கையோ நண்பர்களுடன் சேர்ந்திருந்து களவு செய்யுகையில் காற்றோடு கலந்து வரும் ஒலிப்பெருக்கியின் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்த மூர்த்தி, விவரம் தெரிந்து இன்றுதான் முதன்முதலாக ஆட்டத்துக்கு முன்பு அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்.

மெர்குரி வெளிச்சத்தில் ரோசாப்பூ பவுடர் கன்னத்தில் மினு மினுக்க அகிலா ஆடிக்கொண்டிருந்தாள். பத்திரகாளி, ஈசன் கதைகள் அவன் காதில் விழச்செய்யாது கண்கள் அவளையே நோட்டமிட்டுக்கொண்டிருந்தன. அப்படியொரு வசீகரமான முகம். ஒருவேளை ஆணாக இருக்குமோ? என்கிற சந்தேகத்தில் சலங்கை கட்டியிருக்குமிடத்தின் மயிர்களைக் கொண்டு முடிவு செய்திட துழாவிக்கொண்டிருந்தவனுக்கு மங்கிய வெளிச்சம் வசமாயில்லை, ஆனாலும் உள்மனம் கொடுத்த நம்பிக்கையில் இது நிச்சயமாய் ஆணில்லையென்று மட்டும் தீர்க்கமாய் நம்பினான்.  அதன் பின்பான தயக்கம் அடுத்த நொடிக்கு அவனை நகர்த்திடவில்லை.

திருநெல்வேலிக்கும், பாவூர்சத்திரத்துக்கும் மத்தியிலுள்ள அடைக்கலாப்பட்டினத்தைச் சேர்ந்த அகிலாவின் மனசுக்குள் என்னதான் இருக்கிறது என்று தெரிந்திட ஆவலாக இருந்தான் மூர்த்தி.

மறுநாள் சாமக்கொடை முடிந்த பொழுதில் மூர்த்தியும், அவனது நண்பர்களும் பேசிக்கொண்டிருக்க, அகிலாவே வந்து அவர்களோடு அமர்ந்தாள். அகிலாவோடு பேசவேண்டுமென்று உள்ளூர துடித்துக் கொண்டிருந்த மூர்த்திக்கு அது தோதாயிருந்தது.

அவளை திருநங்கை எனச்சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும். அப்படியான அழகு. சவரம் செய்த தடம் மட்டுமில்லாது இருந்திருந்தால் அவள் சந்தேகமற்ற “அவள்” தான். மிலிட்டரி பாட்டிலின் போதையிலிருந்த கூட்டாளிக்கு அகிலாவிடம் உரசிடத் தூண்டியிருக்கிறது. அவளும் தள்ளித்தள்ளி போய்க்கொண்டிருக்கிறாள். நியாயம் கேட்க அவன் என்ன அவளுக்கு உருத்து நிறைந்தவனா? என்ன, அப்படியே மீறி கேட்டாலும் இந்த ஊர்தான் அவனைக் கேலி செய்யாமல் இருந்திடுமா?

அகிலாவும், சலித்துப் போன மனது இன்னும் புதிதாய் எதைக்கண்டு சலித்துவிடப் போகிறதென்ற பாவனையை முகத்தில் காட்டாமலில்லை. மூர்த்திக்குமே அவள்மீது போதை ஏறுகிறது. ஆனால் அதில் காமமில்லை. அனுதாபம் நிறைந்த அன்பு. காமமில்லை என்பதை நீங்கள் எத்தனை பேர் நம்பிடப் போகிறீர்கள்? என்பது யாருக்கும் தெரியாததுதான். அன்பிற்கும் அதிகமாய் காமத்தின் எல்லைக்கோட்டிற்கு முன்படியில் நிற்கும் அன்பெல்லாம் இங்கு பெயரற்றே இருக்கின்றன. அதற்கும் சேர்த்து காமமென்றே பெயர் வைத்துக்கொள்கிறோம். அதுதானே அன்பின் சிறுவட்டத்தின் பொதுச்சொல்.

கூட்டாளிகள் ஒவ்வொருவராக போதையில் இடத்தைக் காலி செய்ய,  மூர்த்தி மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

“ஒங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“ம்ம், ஆயிடுச்சு”

“அப்போ ஒங்க வீட்டுக்காரரோடத்தான் இருக்கீயளா?”

ஏளனச் சிரிப்போடு, “யாருங்க அப்டிலாம் இருக்கா?, மூனு வருஷத்துக்கு முந்தி ஆடப்போன எடத்துல ஒருத்தர் மேல ஆசப்பட்டு, எனக்கு ஒருதாலி கட்டுவிகளான்னு கேட்டேன். மனுசன் அவரு.  அவர் கட்டினதுதான் கழுத்துல தொங்குது”

“ஒங்கள வுட்டுட்டுப் போயிட்டாரா அவரு?”

“என்னால அவருக்கு எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுன்னு நாந்தான் அவர வுட்டுட்டு வெலகி வந்துட்டேன்,” வார்த்தைகளில் அழுத்தம் நிறைந்த தெளிவை மூர்த்தி புரிந்துகொண்டான்.

பொதுவா எல்லோரும் கேட்குற கேள்வியைத்தான் மூர்த்தியும் அடுத்து ஆரம்பித்தான்.

“ஒங்க வீட்ல மொதல்ல ஒங்கள எப்படிப் பார்த்தாங்க?”

“அவங்க என்னைய புள்ளையாத்தான் பாக்காங்க. ஆனா ஊரும், ஒலகமும் அப்படியே விட்டு வைக்கிறதில்லயே” அகிலாவின் குரலில் கோபமும், ஆற்றாமையும் பொங்கி வழிந்தது.

“எங்க ஒடம்பு ஒங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு வா ன்னு கூப்பிடவும், வேணுங்கும்போது ஒரசுரதற்கும் மட்டுந்தான்தான் படைச்சதா ஒரு நெனைப்பு” சொல்லிவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள்.

அகிலா மாதிரியான திருநங்கைகளைப் பற்றிய மூர்த்தியின் ஆரம்பகாலச் சித்திரங்களும் அப்படித்தானிருந்தன. சென்னை ஈச்சங்காடு சிக்னல், சூளைமேடு, நுங்கம்பாக்கம், கிழக்குத்தாம்பரம் பஸ் ஸ்டாண்டு, பெருங்குளத்தூர் ரயில்நிலையம் என்று பார்க்கிற இடங்களில் எல்லாம் பதினொருமணிக்கு மேல் இருளுக்குள் கசியும் பவுடர் பூசின, உரோமம் செதுக்கின தாடைகளும், சிவப்படிக்கும் உதடுகளும், முரட்டுத்தனமான உடலில் வழிந்து பொங்கும் தனங்களும் சேர்ந்து அப்படி யோசிக்க வைத்திருக்கக் கூடும். காமத்தைத் தீர்த்துக் கொள்ள அலைகிறவர்களின் சாலையோரத்து தேவதைகளாக மாறிப்போகிறவர்களின் உலகத்திற்குள் பிரவேசிக்க ஞானம் போதவில்லை மனிதர்களுக்கு.

அகிலாவிடம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கவேண்டுமென்று மூர்த்திக்குத் தோன்றினாலும், என்ன பேசுவது என்பதில் மட்டும் குழப்பமாகயிருந்தது.

இப்படியான உணர்ச்சியெல்லாம் மீசை முளைக்க ஆரம்பித்த பருவத்தில் ஒருதலைக்காதலியின் மீது இருந்திருக்கிறது. பேசிட வார்த்தைகள் இல்லாமலிருக்கும் போதும் இந்த நொடிகளை மெளனத்தை கொண்டு செலவழித்துவிடக்கூடாதென்ற பதற்றம் அவனிடமிருந்தது.

“வேறென்ன?” என்ற வார்த்தைகளை அவள் சொல்ல வருவதற்கு முன்னதாகவே அடுத்து எதையாவது எடுத்துப் பேச ஆரம்பித்தான். இரவுப்பொழுதும் அப்படியாகத்தான் இருக்கிறது. அகிலாவிடமும் அவன் அப்படியாகவே இருக்கிறான்.

அவளிடம் பாலியல் ரீதியான அத்தனை கேள்விகளையும் முன்னெடுத்து வைத்துவிட்டான். நாகரீகமான பாலியல் கேள்விகள் அத்தனையும் கேட்டாயிற்று. அதையும் தாண்டி கேட்பதற்கான வினாக்களுக்கு மூர்த்தியிடம் பஞ்சமொன்றுமில்லையென்றாலும் அதைக் கேட்பதற்கான மனம் தான் வாய்க்கவில்லை. விடிவதற்குள் அகிலா காதலியாகிவிடுவாளோ? என்கிற சந்தேகம் கொஞ்சமாய் கொஞ்சமாய் உள்ளுக்குள் எழும்ப ஆரம்பித்த கணத்திலிருந்து மூர்த்தி அகிலாவோடு செலவிடும் பொழுதை ரசிக்க ஆரம்பித்திருந்தான்.

மூர்த்தியின் அந்த அன்பை அவளொன்றும் பெரிதாய் நம்பவில்லை. ஆரம்பத்தில் இப்படியாகத் துவங்கி பின்னர் ஒதுக்குப்புறமாக அழைப்பதுதான் இந்த ஆண்களின் சூட்சமம் என்பது அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். “அவளும் பெண்தானே”.

அகிலா கட்டியிருக்கும் தாலி மூர்த்திக்கு பெரும் உறுத்தலாகவே இருந்தது. அவனுக்கு இப்பொழுதும் நம்பிக்கை இல்லை. பிறப்பிலையே இவள் பெண்ணாக இருந்திருப்பாளோ? என்கிற சந்தேகம் எழும்ப, எதையாவது பேச வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருக்கும் மனதுக்கு இதையெடுப்போமென்று தோன்றினாலும் கூச்சம் உள்ளூர  நிரம்பிக்கிடக்கிறது.

“அகிலா”

“சொல்லுங்க”

“இந்தத் தாலி மேல ஏன் இத்தன ஆச?, கல்யாணம்ங்குறதே ரெண்டு பேரும் ஒன்னு சேருறதுதான”

“ஒன்னு சேருறதுனு நீங்க எத சொல்ல வறீங்கன்னு தெரிது, ஏன் மனசு கூட ஒன்னு சேரலாங்குறது இந்த ஒலகத்துக்கு தெரியமாட்டேங்குது?”

இந்தக் கேள்விக்குப்பிறகு என்ன கேட்பதென்று தெரியாமல், அவளைப் புண்படுத்திவிட்டோமென்பது மட்டும் நன்றாகத் தெரிந்ததனால், அடுத்த வார்த்தைகளுக்கு நீண்ட மெளனம் எடுத்துக்கொண்டான்.

“இல்லங்க அகிலா, நா கேக்க வந்தது வேற, நீங்க புரிஞ்சிக்கிட்டது வேற”

“இந்த ஒலகத்துல, எங்கள ‘ங்க’னு மரியாதையா பேசக்கூட ஆள் இருக்காங்களா?” அவளின் இந்த வெறுப்புப் பேச்சில் உலகத்தின் மீதான சலிப்பையும், வெறுப்பையும் அவனால் உணர முடிந்தது. ஆனால் இந்தப் பேச்சின் தோரணையில் இவனும் நம்மிடம் ஏதையோ எதிர்ப்பார்க்கிறான் என்பது போலான ஒரு பாவனை அகிலாவிடம் தெரிந்தது.

“தாலில்லாம் ஏன்னு தான் நா கேக்குறென்”

‘இதையெல்லாம் இவன் ஏன் கேக்கனும்?’ என்பது போல முகத்தை வைத்திருந்தாள். அப்படியான வார்த்தைகளை மட்டும் அவள் கேட்டுவிட்டால் அதன்பின்பான நொடிகளை நினைக்கவிடாதப்படியாய் அகிலாவே பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

“எங்க வழக்கப்படி, வருஷத்துக்கு ஒருதறம் தாலிகட்டி, எங்கஞ்சாமி கூத்தாண்டவர் கோயில் திருவிழால அத்துறது வழக்கம். அதுக்காவத்தான்”

இந்தப் பதிலுக்குப் பிறகு மூர்த்திக்கு என்னமோ ஒரு திருப்தி கிடைப்பது போல தோன்றினாலும், “இந்தத்தாலி மூன்று வருடங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டது” என்று கூறியது மெதுவாய் ஞாபகத்திற்கு வந்தது.

“ஒன்னு கேக்கட்டா… கோவப்படக்கூடாது அகிலா”

“அகிலா- இந்தப் பேரச்சொல்லி அழைப்பதைக் கேட்டு எத்தன நாளாச்சு” இப்பொழுது அவன்மீது அவளுக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டுமென்பது அவளின் குரலில் தென்பட்டது.

“இல்ல.. இந்த தாலி.. மூனு வருஷதுக்கு முன்னால கட்டுனதுன்னு சொன்னீயே”மூர்த்தி தயக்கத்தோடு கேட்டான்.

“ஆமா.. அந்த மனுஷனும் ஒங்கள மாதிரி ஏதோ ஒரு மனசாட்சியோடு பேசுனான். இதே மாதிரி ஒரு கரிசல் பூமியில, நடுஞ்சாமத்துல கட்டுனான். அன்னைக்கு ராத்திரி முழுக்க என்ன உள்ளங்கையில தாங்கிப் பாத்துக்கிட்டான். ஆனா என் மேல அவன் விரல் கூட படல” மலர்ச்சியோடு சொன்னாள். ஒரே ஒரு ஆணின் மீது மட்டும் இன்னமும் நம்பிக்கை இருப்பது போல அகிலா சொல்லி முடித்தாள்.

‘இப்படியாய் ஒரு ஆண் இருந்திருக்கிறான்’ என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதைத் தாண்டியும் ஒருவித பொறாமை பீறிட்டது மூர்த்திக்கு.

“இப்போ, அவனோடதான்.. இல்ல இல்ல.. அவரோடதான் வாழ்றீங்களா அகிலா?” அறிந்து கொள்ளும் ஆவலில் அடுத்தக் கேள்வியை யோசிக்காமல் மூர்த்தி முன் வைத்தான்.

குழப்பம் உருவாக்கும்படியான, ஏகாந்தச் சிரிப்போடு,

“அது எப்படிங்க முடியும், நா ஒரு அலி, ஒம்பது, அவனும் போதையில புத்தி தடுமாறி, கேட்டதும் தாலிக்கட்டிட்டான். அவன் வாழவேண்டியவன். என் தொழிலுக்கு துரோகம் செஞ்சது அன்னைக்குத்தான் மொத தரவ. ஆட்டத்த முடிக்காம மறுநா விடிஞ்சும் விடியாம ஊரவிட்டே ஓடிட்டேன். அவன் வாழ்க்க விடியனும்” நிதானமாக சொல்லி முடித்தாள்.

‘அதன் பின்னர் அவரை சந்திக்கவேயில்லையா?’என்கிற அடுத்த கேள்வியை மனதுக்குள் நினைக்கும்போதே, அவளே சொல்ல ஆரம்பித்தாள், “என்னால அவனுக்கு எந்தத் தொந்தரவும் வந்துடக்கூடாதுன்னு மூணு வருசமா இந்தப்பக்கம் எட்டிப் பார்க்காம இருந்தேன்…” நிறுத்தி ஆசுவாசமானவள் அடுத்து என்ன சொல்வாளோ? என்று அவளது முகத்தையே வைத்த கண் வாங்காமல்  பார்த்துக்  கொண்டிருந்தான்  மூர்த்தி.

“ஆனா பாவி மனசு கேக்கலயே, தூரமா நின்னாவது அவரோட மொகத்தை ஒரு தடவ பாக்கனுமுன்னு மனசு கெடந்து தவியா தவிக்குது, அதனால தான் இந்த வருச கோயில் கொடைக்கி ஒங்க ஊருக்கு வந்தேன்” என்று சொல்லி பெரு மூச்சு விட்டாள்.

மூர்த்திக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை, அகிலாவும் அடுத்து எதுவும் பேசாமல் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதேபொழுதில் வேகமாய் ஒரு ஆள் வந்து நிற்பதை உணர்ந்து இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மடித்துக்கட்டிய சாரத்தில் எலும்பாய் நிற்கும் கால்கள் சாரயப்போதையில் தள்ளாடுவது தெளிவாய் தெரிகிறது. காளிமார்க் கலர்பாட்டில் சுப்பியை மடித்து வைத்திருப்பது போல கணேஷ் புகையிலையை உருட்டி வாயில் வைத்திருந்த  எச்சியைக் காறி உமிழ்ந்துவிட்டு,

“என்னிய ஞாபகம் இருக்காட்டீ” கோபம் நிறைந்த கண்ணீர்க் கண்களுடன் கேட்டான் மாடசாமி.

“ யாரு நீங்க?” அகிலா .

“நீ ஆடுற கூத்து மேல சத்தியம் செஞ்சி சொல்லு”

‘சாராயப்போதையில் மாடசாமி புலம்புகிறான்’ என்று எண்ணியிருந்த மூர்த்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.

சத்தியம் கேட்ட அடுத்த நொடியிலிருந்து அகிலாவிடம் மூச்சுக்காற்று கூட வெளியே வராமல் திகைத்து நிற்கிறாள்.

மெளனம் நீண்டு கொண்டே போனது.

“ஒரு நா கூட என் நெனப்பு ஒனக்கு வரலையாட்டீ? அதுசெரி, ஒனக்கு தேவ தாலி, வாங்கிட்ட, இனி நா எதுக்கு?”

“கொஞ்சம் நிப்பாட்டூம் உம் பேச்ச, நாக்குல நரம்பில்லாம பேசாதீயும்” வழிந்தோடும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டே சொன்னாள் அகிலா.

அகிலாவும், மாடசாமியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்க, இதை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற மூர்த்திக்கு, மாடசாமியின் சட்டையைப் பிடித்து வம்பிழுக்கத் தோன்றினாலும், குரலிலிருந்த தீர்க்கத்தைக் கண்டு அமைதி காத்தான்.

மாடசாமி அவனுக்கு முறைக்காரன்தான். அம்மையை இழந்த சமயத்திலும் கூட பாட்டிலும், கையுமாக எதைப் பற்றியும் கவலையில்லாமல்தானிருந்தான். அதே மாடசாமியின் கண்களிலிருந்து வரும் கண்ணீரை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.

பாதி முழுங்கலுடன் அகிலா பேச ஆரம்பித்தாள்,

“அன்னைக்கு ராத்திரி நா ஏதோ மனசு எளகி நின்னேன். நீரும் பேசுனீரு, கேட்டதும் தாலியக் கட்டிட்டீரு. பாவி மனுசிக்கு மறு நா காலையிலத்தான் புத்தி தெளிஞ்சது. என்னால ஒமக்கு எந்த கொடச்சலும் வரக்கூடாதுனுதான் என் ஆட்டத்தக்கூட பாதில விட்டுட்டு போனேன்”

“ஓங்கழுத்துல தொங்குறது என்னோட தாலிதானே?”

“அதலாம் இல்லய்யா.. அத நா அந்த வருஷமே கூத்தாண்டவர்கிட்ட கொடுத்துட்டேன்” என்று அவசரமாக மறுத்த அகிலாவின் பேச்சை நம்பாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மாடசாமி இனியும் பேசிட ஒன்றும் இல்லாதது போல சற்று நேரம் கழித்து மெல்ல நகர ஆரம்பித்தான்.

மூர்த்திக்கு அப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது. அகிலாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, இரண்டு எட்டு எடுத்து வைத்த மாடசாமி, அகிலாவை நோக்கி கனத்த குரலோடு “என்கிட்டயே பொய் சொல்லாதட்டீ, ஒம்தாலியோட முடிச்ச எடுத்து காட்டுட்டீ” என்றான்.

முதலில் தயங்கியவள் முடிச்சு பக்கமுள்ள தாலியை நெஞ்சுப்பகுதிக்குத் திருப்பினாள், இப்படி திருப்புவதில் கூட முழுப்பெண்ணாகத்தான் மூர்த்திக்கு தெரிந்தாள்.

“பாத்துட்டல, எடத்த காலிப்பண்ணும்”

மாடசாமி தன் புறங்கையினால் இரண்டு கண்களையும் துடைத்தெறிந்துவிட்டு, “அது நான் கட்டுன தாலிதான்” அழுத்தமாகச் சொன்னான்.

பேச்சற்று அமர்ந்திருந்த அகிலாவைப் பார்த்து,

“அன்னைக்கு அவ்ளோ போதயிலும் மொத முடிச்சுக்கப்றம், சொந்தம் கட்ட வேண்டிய ரெண்டு முடிச்சை இனி நான் மட்டுந்தான் ஒனக்கு சொந்தம்னும், இந்த ஊர் உலகத்து மேல உள்ள உன் கோவத்த முடிச்சுவைக்க இன்னும் ஆறு முடிச்சும், மொத்தமா ஒம்பது முடிச்சி போட்ருக்கேண்ட்டீ” என்று சொன்ன மாடசாமி நிற்காமல் நடையைக் கட்டினான்.

அகிலாவும் அமைதியாக இருக்க, மாடசாமி கட்டிய தாலியாக இருந்துவிடக்கூடாதென்று, மூர்த்தியே அவளின் தாலியைப் பிடித்து எண்ணினான்.

அதில் சரியாக ‘ஒம்பது’ முடிச்சுகளிருந்தன, அந்த முடிச்சுகளின் எண்ணிக்கையே கூத்தாண்டவருக்கு சேராமலும் இருந்திருக்கிறது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button