நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;14 ‘குலசையும் ஹாலோவீனும்’ – சுமாசினி முத்துசாமி
தொடர் | வாசகசாலை
அமெரிக்கர்களுக்கு ஹாலோவீன் என்றால் கொள்ளைப் பிரியம். வீடுகளில் வித விதமான பயமுறுத்துவது ‘போல்’ உள்ள அலங்காரங்கள், டன் கணக்கான மிட்டாய்கள், சாக்லேட்கள், வெவ்வேறு பாவனைகளில் காஸ்ட்யூம்ஸ் என்று அமெரிக்காவே ஹாலோவீனுக்கு களை கட்டிவிடும். ஹாலோவீன் என்னும் மரபு, இங்கிலாந்தில் ஆரம்பித்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகிய பல விஷயங்களில் ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்டது இந்தக் கொண்டாட்ட மரபு.
அக்டோபர் கடைசி என்பது கடும் குளிர் கால ஆரம்பம். குளிர் என்பது இருட்டின் அல்லது கருமையின் குறியீடு. அந்தக் காலத்தில், குளிர் கால ஆரம்பம் என்பது அறுவடைக் காலம் முழுவதும் முடிவடைந்து வீடடங்குதலின் தொடக்கம். இறந்தவர்கள் பூமியோடு இந்தக் காலத்தில்தான் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பர் என்பது அன்றைய நம்பிக்கை. மேலும் விஷப்பூச்சிகள் போன்றவையும் உலாத்தும் காலம். அந்த ப்ளாக் & வைட் பழங்காலத்தில் கடும் குளிரில் உயிர் பிழைத்து இருப்பதே கடினம். இதில், ஒரு பத்து ஆவி, பதினைந்து பேய், ஒரு ஐந்து பாம்பு மற்றும் பல வகையறாக்களும் சேர்த்தி என்றால், இன்னும் கொஞ்சம் கஷ்டம்தான்!. இதற்கு உபாயம் தீப்பந்தங்கள் பான்ஃபையர் (bonfire) ஆகியவற்றைக் கொளுத்தி, மனிதர்களும் பேய்களை ‘பயப்படுத்தும்’ விதத்தில் வேஷம் போட வேண்டும். இந்த வேஷத்தைப் பார்த்து பேயெல்லாம் பயந்து நடுங்கி, அவர்கள் உலகத்துக்கே திரும்பிப் போய்விடும் என்பது பழைய நம்பிக்கை. இதைப் போல் இன்னும் சில நம்பிக்கை சார்ந்த கதைகளும் இங்கு ஹாலோவீன் பற்றி உலாத்துகின்றன. நல்லவேளை, இந்த நம்பிக்கைகள் காலமாற்றத்தில் திரிந்து விட்டன. ஆனால் ‘வித்தியாசமான உடை போட்டு இந்த ஹாலோவீன் நாளைக் கொண்டாடும்’ மரபு மட்டும் நிலைத்துவிட்டது.
வீடுகளின் முன் எலும்புக்கூடுகள், சிலந்தி வலைகள், வெள்ளை உடைப் பேய்கள், jack-o’-lantern எனக் கூறப்படும் பூசணியைக் குடைந்து செய்யப்படும் உருவங்கள் எனப் பலவற்றை வைத்து அலங்காரம் செய்து இருப்பர். திகிலூட்டும் காட்சிகளைக் கண்ணில் காட்டாமல் குழந்தைகளை வளர்ப்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால், ஹாலோவீனில் மட்டும் கொஞ்சம் மாறி நடக்கும். ரொம்ப பயங்கரமாக அலங்காரம் பண்ணி இருக்கும் வீட்டை, குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கும் வழக்கம் இங்குள்ளது.
பயமுறுத்துவது போல் பேய், பூதம், மம்மிக்கள், மந்திரவாதி, சூனியக்காரி போன்று எல்லாம் சிலர்தான் உடை அணிவார்கள். அப்படி உடை உடுத்துபவர்களிலும், சிலரின் உடை அலங்காரம்தான் கொஞ்சம் பயப்படும்படி இருக்கும். பெரும்பாலோனோர், சூப்பர் ஹீரோக்கள் போல், இளவரசிகள் போல், படங்களில் வந்த கார்ட்டூன் கேரக்டர்கள் போல், விதவிதமான பூனைகள் போல் வேடமிடுவர். அப்படி வேடமணிந்து குழந்தைகள் வெவ்வேறு வீடுகளுக்குச் சென்று ‘trick or treat’ என்று கூறி நிறைய சாக்லேட்களை வெகுமதியாகப் பெற்றுக்கொள்வார். எந்த வேடமாயிருந்தாலும், குழந்தைகள் கூடவே ஒரு பெரிய கூடை, கவர் ஏதாவது எடுத்துச் செல்வர். ஒவ்வொரு வீட்டிலும் அந்தக் கூடையில் மிட்டாய்களை அள்ளிப் போடுவர்.
ஒரு ஆண்டில் அமெரிக்காவில் விற்கும் மொத்த சாக்லேட்கள், மிட்டாய்களில் கால் வாசி ஹாலோவீன்னிற்காக மட்டும் விற்பனை ஆகின்றன – கிட்டதட்ட 600 மில்லியன் பவுண்ட் எடை அளவிற்கு!!! பெரியவர்கள் என்றால் வேடமிட்டு ரோடுகளில் அணி அணியாக நடந்து செல்வர். இல்லையென்றால் வித்தியாச வேடங்களில் ‘பார்ட்டி’ செய்யலாம். ஆக மொத்தம், கொண்டாட்டம் என்பதே குறிக்கோள்.
இங்கு பிள்ளையை வளர்ப்பது போல் செல்ல பிராணிகளை வளப்பார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நாய், பூனைகளுக்கும் ஹாலோவீன் காஸ்ட்யூம் போட்டுக் கூட்டி வருவார்கள், பாருங்கள்! அதைப் பார்ப்பது தனி இன்பம்தான். அந்த செல்லப் பிராணிகள் கொறிப்பதற்குப் பிடித்த சுவையான உணவுகளையும் சில வீடுகளில் இந்த ‘ட்ரீட்டில்’ கொடுப்பர். அவைகளுக்கும் இன்று ஒருநாள் டயட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தி.
அமெரிக்கக் கலாச்சாரத்தில் மிக நெருங்கிய உறவுகளைப் பார்க்கப் போவதற்கே நாள், நேரம் குறித்து, சொல்லிவைத்து விட்டுத்தான் செல்வார்கள். இப்படி தெரியாத வீட்டின் வாசற்படியை மிதிப்பது எல்லாம் இந்த ஹாலோவீனை விட்டால் வேறு எப்பொழுதும் இங்கு பார்க்க முடியாது. அந்த வகையில் இந்தக் கொண்டாட்டத்தின் தேவை, இந்த சமூகத்திற்குத் தேவை என்று கூட கூறலாம்.
குழந்தைகள் கூடை முழுவதும் விதவிதமான சாக்லேட்களோடு வீடு வந்து சேருவர். பிறகு அதை வகை பிரித்து ‘எனக்கு இவ்ளோ, உனக்கு இவ்ளோ’ என்று ஆராய்ச்சி செய்வர். இந்த களேபரத்தில் அம்மாக்கள் எல்லாம் கொஞ்சம் பாவம் – ஹாலோவீன் முடிந்த பின், என்னைப் போல் அம்மாக்களிடம் மாட்டும் குழந்தைகளும் ரொம்ப பாவம். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் சாக்லேட் சாப்பிட விடுவோம். அதன் பிறகு, சாக்லேட்டை மறைத்து ரேஷன் முறையில்தான் கொடுப்போம். குழந்தைகளும் அடம் பிடிப்பதை விட மாட்டார்கள் – நாங்களும் கொடுக்க மாட்டோம்… சின்ன வயதில் விவேகானந்தர் பற்றி ஒரு கதை கூறக் கேட்டுள்ளேன். உண்மையா என்று தெரியவில்லை. அவர் வாயில் வெல்லக்கட்டி வைத்துச் சாப்பிடக் கூடாது என்று அவர் அம்மா சொன்னதால், அப்படியே அவர் சாப்பிடாமல் வைத்திருந்தாராம். நாங்கள் அப்படி வளரவில்லை – ஆனால், எங்கள் குழந்தைகள் அப்படி வளர வேண்டும் என்று அவர்களை உருட்டி மிரட்டுகிறோம்.
ஆனால், இந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தை முதல் முறை பார்க்கும் பொழுது மனது ஒப்பவில்லை. (இப்பொழுதும் ஒட்டுவதில்லை, எனினும் குழந்தையின் விருப்பத்திற்காக ஒன்றி விடுகிறோம்). முதலில் வீடு வீடாகச் சென்று சாக்லேட்கள் கேட்பது எனக்கு ஒப்பவேயில்லை. “நாங்களே வாங்கித் தருகிறோம், தெரியாத வீட்டில் ஏன் கேட்க வேண்டும்?, இது என்ன வேஷம் போடுவது போல்” என்று தான் கூறினேன். புலம்பெயர் மக்களுக்குக் கலாச்சார ஒவ்வாமைகள் பல விஷயங்களில் இருக்கத்தானே செய்யும். அதில் இதுவும் ஒன்று!
குலசேகரப்பட்டினத்தின் தசரா நிறங்களின் கூட்டின் நடுவே வளர்ந்த எனக்கு, முதல் முறை இங்கு வந்ததும் ஹாலோவீன்னும் சொந்த மண்ணைத்தான் ஞாபகப்படுத்தியது. இன்றைய காலக்கட்ட ஹாலோவீனுக்கும் தசராவுக்கும் கருவில் ஒற்றுமை இல்லைதான். நெல்லை வீதிகளில் தசரா காலங்களில் பல்வேறு அலங்காரங்களில் பார்த்த மனிதர்களும், இங்கு ஹாலோவீன் அலங்காரத்தில் பார்க்கும் மனிதர்களும் வேறுபட்டவர்கள்தான். பக்தி, வேண்டுதல் என்ற பெரிய நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது தசரா. இருந்தும், எப்பொழுதும் எனக்கு ஹாலோவீனுக்கு தயார் ஆகும் பொழுது, நம் குலசையும் அதன் எளிய மக்களின் நம்பிக்கையும்தான் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.
நெல்லையில் இருக்கும் பொழுது குலசை சென்று தசரா பார்த்ததில்லை. ஆனால் பெரும் ஈர்ப்பு இருந்தது. வருடா வருடம் நெல்லை ஜங்ஷனில் சிறு அம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களுக்கும், பாளை தசராவுக்கும் பெரும்பாலும் சென்று கொண்டிருந்தோம். ஏனோ இங்கு வந்ததிலிருந்து ஹாலோவீன் காலத்தில், இணையத்தில் தேடித் தேடி குலசை தசரா படங்களைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது. தள்ளிச் செல்லும் விஷயங்களை மனது தேடிக்கொண்டேதான் இருக்கிறது.
குலசை முத்தாரம்மனின் நிழலில் பக்தியும், நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளையும் ஏந்தி நிற்கும் முகங்கள் இன்றும் என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. தீச்சட்டி எடுப்பதும், உடலை ரணப்படுத்தி வேண்டுதல் வைப்பதும், பூக்குழி இறங்குவதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை விட, அப்படிச் செய்யும் ‘பக்தர்கள்’ மேல் பெரும் பிரமிப்பு உள்ளது.
‘யாசகம்’ என்று கையேந்துவது தனி மனிதனின் அகந்தையை அடக்குவதற்காகத்தான். ‘கடவுள்’ வேஷம் போடுவது, நீயும் நானும் கடவுள்தான் என்பதின் சாரம். ‘உன்னுள்ளும், என்னுள்ளும் இருக்கும் கடவுளை தீமை எல்லாம் தவிர்த்து உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்’ என்பதற்காகவும்தான். இப்படித்தான் நான் நம்புகிறேன். ஆனால் யாசகம் கேட்டு கோவிலில் சேர்த்து, வீடு திரும்பும்போதே அகந்தையைக் கக்கத்திலும், ஆணவத்தை மடியிலும் கட்டிக்கொண்டால், மொத்த நோக்கம்தான் என்ன?
இங்கு, “சிறு வயதிலேயே உதவி கேட்கக் கூச்சப்படாதே, சமூகத்தில் அனைவரும் நல்லவர்கள், இனிப்பானவர்கள், உதவி புரிபவர்கள்தான்” என்பதை உணர்த்துவதும் ஹாலோவீனின் நோக்கம் என்று கூறுவார்கள். அதைப் போல், “பேய், பூதம் எல்லாம் இல்லை! நீயே அப்படி உடை அணிந்து கொண்டால் தன்னம்பிக்கை வளர்ந்து அந்த பயம் எல்லாம் போய்விடும்” என்பதற்காகத்தான் என்றும் தத்துவார்த்தமாகக் கூறுவார்கள். ஆனால், கொண்டாட்டத்தை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரே நாளில் அரை கிலோ மிட்டாய்கள் சாப்பிட்டுவிட்டு, கால் லிட்டர் டக்கீலா குடித்துவிட்டு, வீட்டின் வெளியே விளக்குகளினால் அலங்கரித்து, அகத்தின் விளக்கையும் ஏற்ற வேண்டும் என்பதை மறந்தே விட்டால், மொத்த நோக்கம்தான் என்ன?
உண்மையில், மரணத்தை எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் மனித வாழ்வின் அர்த்தம் அல்லவா? எதோ ஒரு இழையில் அந்த நோக்கத்தை உள்ளடக்கித்தான் இந்த ஹாலோவீன் என்பதும் என் அனுமானம். கொண்டாட்டத்தின் நடுவே ஏதோ ஒரு இடத்தில், குழந்தைகள் மரணத்தைப் பற்றி வினவுகின்றனர். இறந்த தாத்தாக்களும் பாட்டிகளும் என்ன ஆனார்கள் என்று கேட்கின்றனர். நெல்லையில் சில நாட்களுக்கு முன் இறந்திருந்த என் தாத்தாவின் நினைவாக, “அமெரிக்காவில் எங்களைப் பார்க்க ஹாலோவீன் அன்று வருவாரா?” என்ற என் மகனின் கேள்வி இன்னும் ஒரு யுகத்திற்கு எங்கள் இருவரின் நெஞ்சிலும் நிற்கும்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் முதலில் உடை அலங்காரங்கள் இரண்டு இடங்களிலும் ஆரம்பித்து இருக்கின்றன. ஒன்றில், ஒரு சாரார் மட்டும் பங்குபெற்றதால் அவர்களின் பக்தி, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளினால் தனித்து இயங்குகிறது. சமூகத்தில் இளைத்தவனின் பக்தி கூட, பொது மனப்பரப்பை விட்டுத் தள்ளித்தான் நிற்கிறது. இன்னொன்றில், சமூகத்தில் அனைவரும் பங்கு பெற்றதால் மூடநம்பிக்கைகள் திரிந்து, கொண்டாட்டம் மட்டும் நிலைத்து விட்டது. நினைத்துப் பாருங்கள்! நம் தமிழ்ச் சமூகம் அனைவரும் சமத்துவமாக இப்படி வேஷம் போட்டு, பக்தி என்னும் கட்டுமானமும் தளர்ந்து ஒரு நூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின் எல்லோரும் தசராவைக் கொண்டாட்டமாக மட்டும் பார்த்தால், அதுவும் ஹாலோவீன் போல் ஆகிவிடும்தானே!
பக்தியும், நம்பிக்கையும் நம் சமூகத்தை விட்டு மாறவே மாறாத ஒன்று என்று நான் நம்புகிறேன். இந்த பக்திக்குள்ளும் ‘சமத்துவம்’ என்ற ஒன்று நம் சமூகத்தில் ஒரு யுகத்திற்குள்ளாவது வந்து விடும் என்றும் நான் நம்பவில்லை. அதனால், குலசை தசராவும், கொலு வைத்துக் கொண்டாடப்படும் நவராத்திரியும் தனிதான். ஹாலோவீனும், குலசையும் வெவ்வேறு கிரகங்களில் நிகழும் நிகழ்வுகள் போல்தான். அன்றும் சரி, இன்றும் சரி மிகப்பெரிய ‘பக்திமான்கள்’, ‘இந்து மதத்தின் காவலர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் அனைவரும் குலசை தசராவிலோ, தர்மபுரிக்கு அருகில் உள்ள காவேரிப்பட்டினம் அங்காளம்மன் மயானக் கொள்ளை திருவிழாவிலோ ஒன்றி ‘சுடுகாட்டுக் காளி’ வேஷம் போட்டு கையில் தீச்சட்டி எடுப்பார்களா என்று தெரியவில்லை!
வீட்டில் கொலு வைத்து, கர்நாடக சங்கீதம் பாடி சுண்டல் கொடுத்தால், பக்தி என்பது மென்மையாக, மேன்மையோடு பார்க்கப்படுகின்றது. இதே சமூகத்தில், ஒரு பங்கு மக்கள் நாற்பது நாட்கள் விரதமிருந்து, தினமும் உடல் வருத்தி அலங்காரம் செய்து, தன் சுயம் அடக்கி கையேந்தி யாசகம் கேட்கும் பக்தியை ‘மாயை’ என்று விலக்குகிறது. அப்படி நம் மண்ணின் பல வழிபாடுகளை மாயை என்று விலக்கிய பலர் இங்கு ‘ஹாலோவீனுக்கு’ வேஷம் கட்டுகிறார்கள். ஹாலோவீனுக்கு வேஷம் போட்ட படங்களை முகநூலில் பகிர்ந்துக்கொண்டே, குலசை படங்களைப் பார்த்து ‘மூடநம்பிக்கை’ என்றும், இன்னும் பல இத்தியாதிகளையும் பின்னூட்டம் இடுகின்றனர்.
இந்த மண்ணின் பழக்கமான ஹாலோவீன் கூட இப்பொழுது பழகிவிட்டது. ஆனால், இந்த வாழ்க்கையின் நாட்களைக் கொள்கை முரணோடு வாழும் மனிதர்களின் மனம்தான் பழக்கப்பட மறுக்கிறது.
Photo credit: இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து குலசேகரப்பட்டினம் தசரா படங்களும் திரு. மாரியப்பன் கோவிந்தன் (Mr.Mariappan Govindan) அவர்களின் நேர்த்தியான கைவண்ணம். முகநூலில் அவர் பதிவேற்றியுள்ள படங்களைக் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.
தொடரும்…