பிரதானமான இடம் – ‘North 24 Katham’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்
கட்டுரை | வாசகசாலை
அஜித்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட வெகுசில இயக்குனர்களில் எஸ்.ஜே. சூர்யாவும் ஒருவர். வாலியின் one of the inspiration ஆக இருக்கக் கூடும் என நான் நினைக்கும் படம், ஷாருக் வில்லனாக நடித்த ‘டர்’ திரைப்படம். ‘ஜாதூ தேரி நஸர்’ என்றால் தூர்தர்ஷன்வாசிகளுக்கு நினைவுக்கு வந்துவிடும். ஷாருக் மிகத் திறமையான நடிகர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இரண்டு படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் சிவாஜி கணேசன் – ஃபஹத் ஃபாஸில் ஒப்பீடுதான். ஷாருக் முரட்டுத்தனமாக செய்த பல பாவனைகளை அஜித் மெல்லிய ரியாக்ஷன்கள் மூலம் கொண்டு வந்திருப்பார். அதனால் ஷாருக்கின் ‘ராஹுல் மேஹ்ரா’வை விட அஜித்தின் ‘தேவா’ will create chills down the spine. அப்பீலே இல்லை. டர் படத்திலும் வாலியிலும் சில கேரக்டர் கண்டின்யுட்டி பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ‘அலட்டிக் கொள்ளாமல்’ நடித்ததால் ஒப்பீட்டளவில் அஜித்தின் தேவா, ஷாருக்கின் மெஹ்ராவை விட மிரட்டியிருப்பான்.
அதென்ன ‘அலட்டிக் கொள்ளாத நடிப்பு’?.
அதென்ன சிவாஜி கணேசன் – ஃபஹத் ஃபாஸில் ஒப்பீடு?
அலட்டிக் கொள்ளாத நடிப்பை ஒரு நடிகன் அநாயசமாக வெளிப்படுவதை ரசிப்பதே அலாதி போதை இல்லையா? ஃபஹத் ஃபாஸில் அப்படிப்பட்ட நடிப்பை ஏகப்பட்ட படங்களில் சுண்டி விட்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களுக்குள்ளும் காட்டும் நுணுக்கமான மாறுதல்கள். ‘தொண்டி முதலும் த்ரிக்ஷாக்ஷியும்’ ப்ரசாதுக்கும், ‘ஞான் ப்ரகாஷனின்’ ப்ரகாஷுக்கும், ‘வடக்கில் 24 காதம்’ ஹரி க்ருஷ்ணனுக்கும் எந்த ஒற்றுமையும் இருக்காது. வெவ்வேறு கதாபாத்திரங்களில் காட்டும் மலையளவு வித்தியாசங்களே ரசிகனுக்கு ஒரு நடிகன் செய்யும் பெரும் கொடை. சில இடங்களை எல்லாம் விவரிக்கவே முடியாது. தாழாங்குடையோடு வயல் பார்க்க வந்த கிழவியை நீல வானத்தோடு வரைந்திருந்தான் ஒரு ஓவியன். பயன்படுத்திய வண்ணங்கள் குறைவுதான், ஆனால் அந்த ஓவியத்திற்கு ஈடென்பதேயில்லை.
தனது மெல்லிய முக அசைவுகளால் ஃபாஸில் வெளிக் கொணரும் உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் எல்லாம் சொல்லி மாளாது. இந்திய, மலையாள, தமிழ், உலக நடிகர்கள் என ஏன் பிரிக்க வேண்டும். நடிப்பென்னும் உலகில் ப்ராண்டோவும், சிவாஜியும், தனுஷும், ஃபாஸிலும் ஒரே மொழியில்தான் நடிப்புக் கலையை வெளிப்படுத்துகிறார்கள். சிவாஜி முரட்டுத்தனமாக நடித்து வெளிப்படுத்திய எண்ணங்களையெல்லாம் மென்மையான அசைவுகளில் ஃபாஸில் வென்றெடுக்கிறார். ஒரு ரசிகனுக்கு இவர்களின் இதுபோன்ற முரண்கள் விருந்து.
ஏ.வி.எம் ராஜன், ஜெய் ஷங்கர், மார்க் வால்பெர்க், ஜேஸன் ஸ்டாதம் கூட சில ரியாக்ஷன்களைக் கொடுக்கிறார்கள். நடிப்புலகில் யாருமே கொடுக்க முடியாத ரியாக்ஷன்களைதான் கொடுக்கிறார்கள். தனித்துவம் எல்லாரிடத்திலும்தான் இருக்கிறது. ஆனால் யார் யார் எல்லாம் அந்த ரியாக்ஷன்களைப் படத்தின் கதாபாத்திரத்தின் ஊடே கன்சிஸ்டென்சியுடன் கொடுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஜாக் நிக்கல்சன், டேனியல் டே லீவிஸ், மோகன்லால், அமிதாப் பச்சன் போன்றவர்கள் அப்படிப்பட்ட கதாபாத்திர கன்சிஸ்டன்சியை மிகவும் ப்ரொஃபெஷனலாக கவனித்து செய்பவர்கள். அதுவும் அமிதாப் பச்சனின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே குறிப்பிட்ட மேனரிசம் கண்டின்யுட்டி விஷயத்தில் பச்சனுக்கு கேவல் இருக்கிறது. ‘ஆனந்த்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலேயே இந்த கண்டின்யுட்டி பதத்தை ஒரு பத்து படங்கள் நடித்த பெர்ஃபெக்ஷனிஸ்ட் போல நடித்துக் கொடுத்திருப்பார். அதனால்தான் பார்த்துப் பல வருடங்கள் ஆகியும் அவருடைய ‘டாக்டர் பாஸ்கர்’ கேரக்டர் இன்றும் நினைவில் இருக்கிறது. ராஜேஷ் கண்ணாவின் மொத்த ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் கொள்ளையைக் கடந்து பச்சனின் பாஸ்கர் கதாபாத்திரம் தப்பிப்பதற்கு முக்கியக் காரணம், சில முக பாவனைகள். அலட்டிக் கொள்ளாமல் தாக்கும் நங்கூரம்.
இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தமட்டில், நாராயணியாக நடித்த ஸ்வாதியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இந்தப் படத்தின் அதி முக்கியமான அம்சம். குறிப்பிட்ட பதத்தின் வரையறை. “ஸ்வாதிங்கிறவ படத்துல அழகா இருந்தாப்பா” என்று சொல்லிக் கடந்து செல்வது போன்ற ப்ரெசென்ஸ் கிடையாது. படத்தில் ஃபஹத் ஃபாஸிலின் கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர். திரைக்கதையில் இருந்தே தன் ப்ரெசென்ஸைக் காட்டும் கேரக்டர். நெடுமுடி வேணுவின் மகள் போன்ற இடத்தையும், ஃபாஸிலின் மெக்கானிக்கல் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கப் போகும் (fiancee மாதிரி வருங்காலக் காதலிக்கான term???) என இரண்டு திசைகளில் இருந்தும் தள்ளப்படும் கேரக்டர். அழகைத் தாண்டி ஸ்வாதியின் attitudeதான் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸிற்கான காரணம். துருத்திக் கொண்டு தெரியாமல் கடற்கரை மணலில் குழந்தை கட்டிய மணல் கோபுரம்போல. கட்டியது குழந்தை என்பதால் ரசித்திருப்போம், ஆனால் குழந்தையின் முகம் நினைவிருக்காது. ஆனால் ரசித்த கோபுரம் நினைவிருக்கும். முரட்டுத்தனமான கவித்துவ மனப்பாங்கு.
நாராயணி, ஹரியைப் பார்க்கும் பார்வை. இருவருக்கிடையே காக்கப்படுமொரு இடைவெளி. இயக்குனரின் உள்ளீடா இல்லை நடிகையினுடையதா என்பது தெரியவில்லை. ஏனென்றால் மிகவும் உழைப்பைக்கோரும் வேலை நெருக்கம் காப்பது. இருவரின் உடல்மொழியும் ஒத்துழைக்க வேண்டும். அந்த syncகில் ஒரு பிணைப்பு. ரொம்ப நெருங்கினாலும் அவசரப்பட்ட மாதிரி ஆகி விடும். இயல்பாக வளர்ந்ததாக இருக்காது. ரொம்ப இடைவெளி விட்டாலும் அர்த்தமில்லாமல் போகும். ஏறும் graph – ஐ உடைத்த மாதிரி ஆகி விடும். அதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஒரு personal space – ஐ பகிர வேண்டும். “உனக்கானவளும் இல்லை. அதே சமயத்தில் மூணாவது மனுஷியும் இல்லை. Somewhere Inbetween”. இந்த இடைவெளியை நாராயணியால் மிக அழகாகத் தற்காத்துக் கொள்ளப்படும். படம் முழுவதும். ஒரு பாலத்தில் ஹரியைக் கடந்து செல்லும்போது, அவள் பார்வையிலும் உடலிலும் காட்டும் நெருக்கம் ஒரு உதாரணம். ஃபாஸிலின் கதாபாத்திரத்தோடு ஒப்பிடும்போது ஸ்வாதி ஒரு rebel freak. இந்த கேரக்டர் முரண்தான் படத்தை சுவாரஸ்யமாக்கியது.
கைக்குழந்தையை வைத்து இருவருக்குள் நடக்கு-ம் காதல் நாடகமும் படத்தில் மற்றொரு அழகான காட்சி. 7Gயில் செல்வராகவனும், பொல்லாதவனில் வெற்றிமாறனும் இதே இடத்தை அவரவர்களின் சாயலில் இயக்கியிருப்பார்கள். ‘ஆடவாரி மாட்டாளக்கு அர்த்தாலே வேருளே’ படத்தில் செல்வராகவன், காதலர்களுக்குள் நடக்கும் பார்வைப் பரிமாற்றத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார். தமிழில் அப்போது படமெடுத்த இயக்குனர்களின் மரக்கருத்துக்கள் கொண்ட படங்கள் வந்தவண்ணம் இருந்ததால் செல்வராகவன் படங்களை தெலுங்கு வரை பின்தொடர்ந்து சென்று நான் பார்த்த காலங்கள் அவை.
படத்தில் வெங்கடேஷை த்ரிஷாவின் குடும்பம் புடவைக் கடைக்கு அழைத்துச் செல்லும். குழந்தைகள் நிகழ்த்தும் பல களேபரங்களுக்கு இடையில் தத்தளித்துக் கொண்டிருப்பான் அவன். ஒருவழியாக த்ரிஷா, தான் தேர்ந்தெடுத்த புடவையை கட்டிக்கொண்டு வெளியே வருவாள். அவளின் அழகை உறவினர் பெண்களென குடும்பமே சிலாகிக்கும். வெங்கடேஷ் த்ரிஷாவைப் பார்த்து மெய் மறந்திருப்பான். அத்தனை பேரின் பாராட்டும் த்ரிஷாவை எதுவும் செய்யாததுபோல, அந்த கணத்தில் யாருக்காக அழகாய் தோன்ற வேண்டுமென த்ரிஷாவின் மனம் அடிக்கிறதோ அவனைப் பார்த்து மிக மெல்லியதாக அவளின் கண்ணாலேயே ‘எப்படியிருக்கு?’ எனக் கேட்பார். வெங்கடேஷ் ‘செம்ம’ என்பதுபோல அசட்டுக்காதல் வழிந்துகொண்டே மெதுவாகத் தலையாட்டுவான். ஒரு நொடியில் இருவருக்குமிடையில் எந்தளவுக்கு அழகான காதல் இருக்கிறதென ரசிகனுக்கு செல்வராகவன் கடத்தியிருப்பார். இந்தக் காதலைத்தான் வடக்கே 24 காதம் படத்தில் ஸ்வாதியின் கண்களும் வெளிப்படுத்தும்.
இதே ஸ்வாதி மேற்சொன்ன படத்தில் த்ரிஷாவின் தங்கையாகவும் நடித்திருப்பதொரு ஒற்றுமை. த்ரிஷா-ஸ்வாதி காஸ்டிங்கைத் தமிழில் நயன்தாரா – சரண்யா மோகனால் ஈடு செய்ய முடியவில்லை. ரசிகர்கள் வெகுண்டெழ வேண்டாம். நானே பெரிய நயன்தாரா ரசிகன்தான். சூது கவ்வும் படத்தில் பகலவன் கட்டிய சிலையைப் பார்த்துத் திரையரங்கில் கொண்டாடிய கோடிக்கணக்கான ரசிகர்களில் அடியேனும் ஒருவன். காதலை நடிப்பில் வெளிப்படுத்தினால்தான் த்ரிஷா ரசிகனுக்குள் காதலென்னும் ரசாயன மாற்றத்தை நிகழ வைப்பார் ஆனால் நயன்தாராவோ நடித்தாலே போதும். நடிக்கக்கூட வேண்டாம். சிரித்தாலே போதும்… நமக்குள் காதல் வந்துவிடும்.
உடற்கவர்ச்சி மட்டுமில்லாமல் உளக்கவர்ச்சியையும் பொது இடத்தில் காதலர்கள் எவ்வளவு நுட்பமாக ரசிக்கும்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன படத்தின் காட்சி ஒரு சாட்சி.
கோழிகோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்குப் பயணிக்கும் ஒரு ‘ரோடு மூவி’ வகையறா. மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு பயணம், அவர்களுக்குள் இருக்கும் மனிதத்தை விஸ்தாரமாக்குகிறது என்பதற்கான இன்னொரு கவிதையான எடுத்துக்காட்டு. “பறவையே எங்கு இருக்கிறாய்? பறக்கவே என்னை அழைக்கிறாய். தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…” போன்ற தனியாக அழையும் தேடல் பயணத்தைப் போலவே சகமனிதனின் மனதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் கூட்டுப் பயணங்களும் மனிதன் அனுபவிக்க வேண்டிய அழகானதொரு நாடோடிக் கலாச்சாரம் என்பதை உணர வைக்கும் மற்றொரு little miss sunshine.
ஒருவன் தன் வாழ்க்கையில் சந்திக்கக் கூடாதென நினைத்த சந்தர்ப்பங்களை ஒரு பயணத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என எதிர்கொண்டு, அதனால் ஒருவனின் சகிப்புத்தன்மைகள் மேம்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையின் கோழிக்கோடு வடிவம். ஒரு பயணத்தின் மூலம் ஒரு கேரக்டரின் இறுக்கம் எப்படிக் களைந்து அவனுடைய chronic அழுத்தங்கள் தளர்வடைகின்றன என்பதை எடுத்துரைக்கும் கவிதை.
எந்தக் காட்சியையும் தேமேயென எடுத்துவிட்டு சடாரென ஒரு பயணத்திற்குள் அவனைத் தள்ளாமல், திரைக்கதை அந்தப் பயணத்தை நோக்கி வெகு இயல்பாகப் பயணிக்கிறது. வாழ்க்கையே சோகம்தான் என படத்திற்குள் தள்ளிவிட்டு சோகக்கண்ணீரில் நம்மைப்போட்டு நனைக்காமல், சோகமும் ஒரு பகுதிதான் இன்பமும் ஒரு பகுதிதான் இரண்டையும் கொண்டாடும் மனநிலையை வளர்ப்பதே வாழ்வின் நோக்கமென்னும் கருத்தை ஆழமாக விதைக்கிறது அனில் ராதாகிருஷ்ணனின் எழுத்தும் இயக்கமும். படத்தின் அடிப்படை லாஜிக். இந்தளவு கேரக்டர் transformation நடப்பதற்கு ஒருநேரமும் இடைவெளியும் தேவை. அதுதான் கோழிகோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பயணம். வடக்கை நோக்கிய 24 காதம். (பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களில் இந்த தூரத்தை குறிக்கும் காதத்தைப் படித்திருக்கலாம்.) சரி பயணத்தின் இலக்கை முடிவு செய்தாகிவிட்டது. எதற்கான பயணம்? யாருக்கான பயணம்? இங்கேதான் இந்தப் படத்தின் திரைக்கதைக்கு உழைப்பு வேண்டியிருக்கிறது. இதை முடிவு செய்தால் ஒரு புதுக்கதையை உருவாக்க வேண்டும். அது ஃபாஸிலின் கதைக்கு வெகுதூரத்தில் சென்றுவிடவோ, ஃபாஸிலின் கதையை மறைத்துவிடவோ கூடாது என்னும் கோட்பாடு. ஏன் என்றால் கதைப்படி 24 காதம் வடக்கு என்பது யாருக்கான பயணம்? என்பதிலேயே இது நெடுமுடிவேணு நடித்த கதாபாத்திரமான கோபாலனின் கதை என்று முடிவாகிவிட்டது. அந்தக் கதையில் ஃபாஸிலின் கதை வெறும் கிளைக்கதையே, ஆனால் கிளைக்கதையையே மையக்கதையாக திரைக்கதையாக்கி ஃபாஸிலின் பார்வையில் சொல்லப்பட்ட பாணி ரசிக்க வைக்கிறது.
அடிப்படை முடிவாகிவிட்டது. இப்போது லாஜிக். ஏன் நெடுமுடிவேணுவின் பயணத்திற்கு ஃபாஸிலும் ஸ்வாதியும் துணைவர வேண்டும்?
மூன்று பேரும் ஒரே ரயில் கம்பார்ட்மெண்ட்டில் பயணிக்கிறார்கள். அப்போது நெடுமுடி வேணுவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதிர்ச்சியடைந்து எழுந்து நடக்க முயற்சி செய்கிறார். முடியவில்லை. ஸ்வாதி உதவ முன் வருகிறார். சரி ஸ்வாதியும் அவரும் போகப் போகிறார்கள், ஏன் ஃபாஸிலும் போக வேண்டும் என்னும் லாஜிக் கேள்விக்கு, நெடுமுடிவேணுவின் ஃபோனை அவர் கீழே போட்டுவிட்டு செல்கிறார். சரி அதைப் பார்த்த ஃபாஸில் போனைக் கொடுத்துவிட்டு வந்தால் கதை முடிந்துவிட்டதே என்று யோசித்தால், அதை எடுக்கும் ஃபாஸிலுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது. சரி செய்தியை சொல்லிவிட்டு ஃபோனையும் கொடுத்துவிட்டு வந்தால் வேலையைப் பார்த்துவிட்டு ஃபாஸில் போகலாம் என்று எண்ணும் சமயத்தில்தான் ஃபாஸில் ஒரு முடிவு எடுக்கிறான். அதுவரை அவனை ஒரு கிறுக்கன் என எண்ணிக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தன் மீது வைத்திருந்த மதிப்பீடுகளை மாற்றி வடிவமைக்கிறான் ஃபாஸில். கோபாலனே ஊருக்குப் போய்ச் சேர்ந்து செய்தியைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் அமைதிக்காப்போம் என நினைக்கிறான் ஃபாஸில். ‘அமைதி மட்டும் காப்போம். அதற்காக அவரின் இடம் வரை பயணிப்போம்’ என்ற முடிவை அவன் எடுப்பதால் சாதாரண கதாப்பாத்திரத்தில் இருந்து ஒரு பிரதான கதாபாத்திரமாக பார்வையாளனின் மனதளவில் மாறுகிறான் ஃபாஸில். சாதாரண ஒரு படத்தின் தளத்தில் இருந்து சினிமாவின் வேறொரு தளத்திற்கு பயணித்து எனது மனதின் பிரதானமான ஒரு இடத்தை அடைந்திருக்கிறது ‘வடக்கை நோக்கிய 24 காதம்’.