சிறுகதைகள்
Trending

ஆரஞ்சு மிட்டாய் – கிருத்திகா கணேஷ்

சிறுகதை | வாசகசாலை

”ஏட்டி.. ஏ மாரி.. எந்திரி.. விடிஞ்சு நேரம் என்னாவுது?’ சத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சந்திரா தன் புடவையை அணைத்தபடி சுருண்டு படுத்துக் கொண்டு சலனமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் மகள் மாரிச்செல்வியின் முகத்தை அப்படியே நின்று பார்த்தாள்.. தாய்மை அவள் இதழ்களில் புன்னகையாக பரவியது.. மெல்ல நகர்ந்து மாரியின் அருகில் உட்கார்ந்து, ”எந்திரிம்மோ.. எந்தங்கம்” என்று அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள். ”இன்னும் ஒரு வாரம் போனா பத்து முடிஞ்சு பதினொண்ணு பெறந்துரும்.இன்னும் பச்சபுள்ளயாவே இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தன் மகளின் தலையைக் கோதிவிட்டாள்.

”ஆரஞ்சு முட்டாயிம்மா” என்று சிணுங்கியபடி கண்களைச் சுருக்கிக் கொண்டு மெதுவாகக் கண்களைத் திறந்தாள் மாரி.. “அடுத்த வாரம் பெறந்தநாள் வருதுல்லா வாங்கித் தாரேன் எந்தங்கத்துக்கு. இப்பம் எந்திச்சு பல்ல வெளக்கு.. காப்பி தாரேன்.. குடிச்சிட்டு ஆத்துக்கு போவோம்” என்று சொல்லியபடி எழுந்தாள் சந்திரா..  “ம்ஹும்.. எனக்கு இன்னைக்கு வேணும்.. இப்பம் வேணும்” என்று அழத் தொடங்கிய மாரியிடம், “முருங்ககுச்சிய ஒடிச்சேன் முதுகுத் தொலிய உரிச்சுருவேன்.. ஒளுங்கு மரியாதயா எந்திச்சு போய் பல்ல வெளக்கு..போ” என்று அதட்டியபடி வாசலுக்கு சந்திரா போனபோது வீட்டைச் சுற்றி போடப்பட்டிருந்த முள்வேலிக்கு அந்தப் பக்கம் வாளி நிறைய துணியோடு பேராச்சி நின்று கொண்டிருந்தாள்..

”நீ இன்னும் கெளம்பலியா? நேரம் ஆவுதுல்லா.. வாரியா என்ன?” என்ற பேராச்சியிடம், “இன்னா வந்துட்டேன்.. துணியெல்லாம் எடுத்து தான் வெச்சிருக்கேன்.. இந்த புள்ள எந்திச்சா கூட்டிட்டு போயிரலாம்னு பாத்தேன்… அது எந்திக்கும் போதே இளுவிட்டு கெடக்கு.. நாம போவோங்க்கா.. அவ வருவா” என்றபடி வாளியைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் திரும்பிப் பார்த்து, “ஏட்டி.. சீக்கிரம் அந்த காப்பிய குடிச்சிட்டு ஆத்துக்கு வந்துரு.. நா முன்னால போறேன்” என்றபடி கிளம்பினாள்.

”ஒத்தபுள்ளய வெச்சிருக்க..  எதுக்கு அவள ஏசிட்டே கெடக்க?”.

“பெறவென்னக்கா.. பொளுதன்னைக்கும் ஆரஞ்சு முட்டாயி ஆரஞ்சு முட்டாயின்னு கெடக்கா.. இன்னைக்கு கண்ணத் தொறக்கும் போதே ஆரம்பிச்சிட்டா.. ”

“அது சரி.. புள்ளைக்கு ஒத்த ஆரஞ்சு முட்டாய் வாங்கிக் குடுக்க ஒனக்கு என்ன வலிக்குது?”

“ஆமா.. ஒத்த முட்டாய் கேட்டா பரவால்லயே.. பாக்கெட்டோட வாங்கிக் குடுன்னா நா எங்க போவேன்.. அவுங்களுக்கும் வேல ஒண்ணும் வர்ல.. எனக்கும் ரெண்டு வாரமா பீடித் துட்டும் வர்ல.. அப்டியே வந்தாலும் எனக்கு கைல வாரதுக்கு முன்னால அதுக்கு ஒரு செலவு வந்து காத்து கெடக்கு.. நானே கண்ணுமுளி பிதுங்கிட்டு வாரேன். ஊருக்கென்ன.. பேச்சு மட்டும் பேசும்.. ஒதவின்னா ஒத்த சத்தம் வராது”

சந்திரா சொல்ல பதில் சொல்லாமல் பேராச்சி நடந்தாள்.. சந்திரா திரும்பி வீட்டைப் பார்த்தாள். ஓலைக்கூரை வேயப்பட்டிருந்த அந்த சிறிய வீட்டின் வாசலில் கோழிகளும் கோழிக் குஞ்சுகளும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.. வீட்டுக்குள்ளிருந்து கண்களைக் கசக்கியபடியே வெளியே வந்து வெளியில் ஒரு சிமெண்ட்டு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள் மாரி.. அவளைப் பார்த்து விட்டு, “எந்திச்சிட்டா.. ஹும்.. கடவுள் என்னைக்குத்தான் நம்மள கண்ணத் தொறந்து பாக்கப் போறானோ” என்றபடி மீண்டும் திரும்பி பேராச்சியோடு நடக்கத் தொடங்கினாள் சந்திரா.. “உன் நல்ல மனசுக்கு நல்ல காலம்லாம் சீக்கிரம் வரும்.. நீ வா” என்றாள் பேராச்சி.. இருவரும் ஆற்றை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.

பல்லைத் தேய்த்து விட்டு மீண்டும் வீட்டுக்குள்ளே போய் காப்பி டம்ளரை எடுத்துக் கொண்டு வாசலில் இருந்த சிறிய திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள் மாரி. வட்ட முகமும் பெரிய கண்களுமாய் குழந்தைத்தனம் மாறியிராத அந்த முகத்தில் ஆழ்ந்த உறக்கம் தந்த மலர்ச்சி இன்னும் அழகாய் இருந்தது. காப்பியைக் குடித்து விட்டு டம்ளரை அருகில் வைத்தபோது ஒரு கோழிக்குஞ்சு அவள் கால்களை உரசியபடி ஓடியது. சட்டென்று குனிந்து அவள் அந்த கோழிகுஞ்சை லாவகமாய்ப் பிடித்து இருகைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.. தன் முகத்துக்கு நேரே அந்தகோழிக்குஞ்சை உயர்த்திப் பிடித்தபடி, “பவித்ராவாம் பவித்ரா.. கிவித்ரா.. நீ அவள பாக்கவே கூடாது சரியா.. ச்சை.. சாமி ஏந்தான் அவள நம்மூருக்கு கூட்டிட்டு வந்துச்சோ..” என்று அவள் சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.. “அவளால தான் எங்கூட யாருமே வெளாட வர்ல தெரியுமா? நீ மட்டும் அவகூட வெளாடுன ஒன்ன தூக்கி நா ஆத்துல போட்ருவேன். போ” என்று கோழிக்குஞ்சை கீழே விட்டு விட்டு கண்களைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள்..

நான்கைந்து நாட்களுக்கு முன்பு மாரியும் அவள் தோழிகளுமாய் விளையாடிக் கொண்டிருந்த போது ராணி தான் “ஏ.. இவ எங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்துருக்கா.. இவளயும் வ்ளாட்டுக்கு சேத்துகிடுவோமாடே” என்றபடி பவித்ராவை அழைத்துக் கொண்டு வந்தாள். சுருட்டை முடியை உயர்த்தி குதிரைவால் போட்டுக் கொண்டு புசுபுசுவென பச்சை கவுன் அணிந்து சிரித்தபடி நின்றிருந்த பவித்ராவை எல்லோருக்கும் பிடித்திருந்தது.. “எங்க வீட்லர்ந்து எல்லாம் கொண்டு வந்துருக்கேன்..சோறு பொங்கி வெளாடுவோமா?” என்று பவித்ரா தன் கையில் இருந்த பையை காட்டிக் கேட்டபோது மாரியோடு பாண்டி விளையாடிக் கொண்டிருந்தவர்களில் பாதிப் பேர் பவித்ராவோடு போனார்கள்.

பவித்ராவும் மற்றவர்களும் சோறு பொங்கி விளையாடத் தயாரான போது மாரி வேகமாக ஓடி மரத்தின் மேலே தான் செருகி வைத்திருந்த ஒரு கவரை எடுத்து அதிலிருந்த இரண்டு மிட்டாய்களில் ஒரே ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்துத் தன் கவுனில் வைத்துக் கடித்து பங்கு போட்டு தன் பக்கம் நின்றிருந்தவர்களுக்கு மட்டும் கொடுத்தாள்.. எல்லோரும் அதை வாங்கித் தின்றவாறு மாரியோடு வேறு பக்கம் விளையாடப் போனார்கள்.

மறுநாள் எல்லோரும் ஒன்றுகூடி என்ன விளையாடுவது என்று பேசிக் கொண்டிருக்கும் போது கையில் ஒரு பையோடு பவித்ரா வந்தாள். அவளைப் பார்த்தபடியே “இங்க பாருங்கடே.. கண்ணாமூச்சி வ்ளாடுவோம்.. சோறு பொங்கி வ்ளாடல்லாம் நா வர்ல..” என்றபடி தன் கையிலிருந்த சிறிய பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த ஆரஞ்சு மிட்டாயை மாரி எடுத்த போது குழு இரண்டாகியிருந்தது. ஆரஞ்சு மிட்டாயை அவள் தன் உடையின் ஒரு ஓரத்தில் வைத்து கடிக்கத் தொடங்கியபோது பவித்ரா தன் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தாள். அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருந்தன.. மாரி தன் உடையின் நுனியில் வைத்து மூடியிருந்த ஆரஞ்சு மிட்டாயை வாயில் வைத்தபடியே பவித்ராவின் கையில் இருந்த கவரைப் பார்த்தாள்..

”நாம நெதம் பாண்டி, கண்ணாமூச்சி, தொட்டுபுடிச்சி தானட்டி வ்ளாடுதோம்..  இன்னைக்கு அவ கூட சோறு பொங்கி வ்ளாண்டா என்ன? போவோமா?” என்று மாரியின் அருகில் நின்று கேட்ட சுப்புவின் கண்கள் பவித்ராவின் கையிலிருந்த ஆரஞ்சு மிட்டாய் கவரின் மீது பதிந்திருந்தன.. இதற்குள் பவித்ரா கவரில் இருந்து ஒவ்வொரு மிட்டாயாக எடுத்து எல்லோருக்கும் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.. “நா வர்ல” என்ற மாரியின் குரல் அடங்குவதற்குள், “நா போறம்ப்பா” என்று ஓடிய சுப்புவின் பின்னால் மாரியின் அருகில் நின்றிருந்த எல்லாரும் ஓடினார்கள்.. மாரி தனியாக நின்றிருந்தாள்..

பவித்ராவின் அருகில் போய் ஒரு ஆரஞ்சு மிட்டாயை வாங்கிக் கொண்ட சுப்பு, “அவளுக்கும் ஒண்ணு குடேன்” என்று திரும்பி மாரியைக் காட்டினாள். “நீ இங்கன வந்து தான வாங்குன.. அவளுக்கும் வேணும்னா இங்கன வரச்சொல்லு” என்றபடி மாரியைப் பார்த்தாள்.. மாரி எதுவும் பேசாமல் கடித்து வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டு மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

பவித்ராவின் கையில் இருந்த கவரை எட்டிப் பார்த்தபடியே,”சோறு பொங்கி வ்ளாடுவோமா” என்றாள் சுப்பு.. “ம்ஹும்.. இன்னைக்கு நா ஒண்ணும் கொண்டு வரலியே.. கண்ணாமூச்சி வ்ளாடுவோம்” என்ற பவித்ராவின் வார்த்தைக்கு மொத்தப் பேரும் கட்டுப்பட்டார்கள்.. சுப்பு மட்டும் மாரியைத் திரும்பிப் பார்த்தபடியே வா என சைகை காட்டினாள்.. வரமாட்டேன் என தலையசைத்தபடி தனியே உட்கார்ந்திருந்தாள் மாரி.. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரும் அவளிடம் வரவே இல்லை. அவளுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.. யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்..

அடுத்த இரண்டு நாட்களில் சுப்பு மட்டும் ஒரே ஒரு முறை அவளைத் தேடி வீட்டுக்கு வந்தாள்.. ”அந்த பவி சொல்லுதத எல்லாரும் கேக்கும் போது நா என்ன செய்ய? அவ சொல்ற வெளாட்ட தான் வெளாட முடியுது.. ஆனா நேத்தும் எல்லாருக்கும் ஆரஞ்சு முட்டாயி குடுத்தா. அவளும் நல்லபுள்ள தான்.. நீ தான் வெளாட வரமாட்டங்க. நாளைக்கி வாரியா?”

“ம்ஹும்.. எங்கம்மாட்ட முட்டாய் கேட்ருக்கேன்.. வாங்கித் தந்தோன்ன கொண்டுட்டு வருவேன்” என்று மாரி சொன்னதும் “ம்.. நீ வாங்கிட்டு வந்து குடு.. நாங்க எல்லாரும் ஒங்கூட வெளாட வருவோம்” என்று சொல்லிவிட்டு ஓடினாள் சுப்பு..

”இந்த அம்ம என்னைக்குத்தான் முட்டாய் வாங்கித் தருவாளோ..ஆரஞ்சு முட்டாயின்னு சொன்னாலே ஏசுதா. அப்பா வந்த பெறவு கேக்கணும்..சாமி.. எங்கப்பா முட்டாயி வாங்க காசு கொண்டுட்டு வரணும்” என்று மாரி பெருமூச்சு விட்டபோது ”ஏட்டி.. நீ வருவன்னு உங்கம்ம அங்க ஆத்துல உக்காந்துட்டுருக்கா.. நீ என்ன திண்ணைல ஒக்காந்து கனவு காங்க” என்ற பிச்சம்மா அத்தையின் குரல் கேட்டு திடுக்கிட்டவள், “இந்தா போறேந்த்த” என்றபடி ஆற்றை நோக்கி சிட்டாகப் பறந்தாள்.

அம்மாவிடம் அடி வாங்கிவிடக் கூடாதென்று வேகமாய் ஓடியவள் தெருவுக்குள் இருந்து திரும்பிய பைக்கின் மீது மோதி “யம்மா” என்று அலறி விழுந்தாள். அருகில் இருந்தவர்கள் “அய்யோ புள்ள” என்றபடி ஓடி வர பைக்கை நிறுத்தி விட்டு  பதற்றமாக வந்த இளைஞன், “ஏட்டி.. எந்த ப்ளைட்ட புடிக்க இப்டி கண்ணுமண்ணு தெரியாம ஓடி வார?” என்றபடி வந்து மாரியைத் தூக்கினான். ”ஆமாண்டே.. அந்தப் புள்ள கண்ணுமண்ணு தெரியாம மோதுனதுல உன் வண்டிக்கு ஏதும் ரத்தம் கித்தம் வந்துருச்சான்னு பாரு” என்ற பெரியவரிடம், “இந்த எடக்குப் பேச்செல்லாம் எங்கிட்ட பேசாதீரும்.. பெறவு வயசாளின்னு கூட பாக்க மாட்டேன்” என்ற வெங்கடேசனின் பிடியில் இருந்து நழுவி மயங்கி விழுந்தாள் மாரி.

“ஏ.. வெங்கடேசா..புள்ளய பாருங்கடே மொதல்ல” என்றபடி இன்னொருவர் மாரியைத் தாங்கிப் பிடித்த போது பிச்சம்மா ஓடி வந்தாள். “யம்மா.. என்னாச்சு.. மாரி” என்று வெங்கடேசனின் கையில் இருந்த மாரியைப் பார்த்து பதறியவள், “புள்ளய வீட்டுக்கு கொண்டு வாய்யா” என்றபடி மாரியின் வீட்டை நோக்கி கையைக் காட்டியபடி வேக வேகமாக ஓடினாள். வெங்கடேசன் மாரியைக் கொண்டு போய் வீட்டுத் திண்ணையில் கிடத்தினான்.. நின்றிருந்த கூட்டம் பின்னால் ஓடி வர, “இவ அம்மக்காரி ஆத்துக்குப் போயிருக்கா. அவளக் கூட்டிட்டு வாங்களேன்” என்றபடி அருகில் தொட்டியில் இருந்த தண்ணீரை மாரியின் முகத்தில் தெளித்து, “மாரி.. ஏட்டி.. எந்தாயீ… யம்ம்மோ.. கண்ணத் தொறம்மா” என்று அவள் கன்னத்தில் மாறி மாறித் தட்டினாள் பிச்சம்மா. மாரி மெதுவாகக் கண்களைத் திறக்க முயற்சி செய்தபோது, “யம்மா.. எம்புள்ளக்கி என்னாச்சி? ஏ கடவுளே.. ஒனக்கு சோதிக்க வேற ஆளே கெடைக்கலியா” என்றபடி ஓடிவந்தாள் சந்திரா.

பதற்றமாக திண்ணையில் அமர்ந்து மாரியைத் தன் மடியில் சந்திரா கிடத்திக் கொண்ட போது, “யம்மா” என்று முனகியபடி மெதுவாய் கண்களைத் திறந்தாள் மாரி. கூட வந்திருந்த பேராச்சி ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து நீட்டினாள். அதை வாங்கி, “ஒண்ணுமில்ல.. குடிம்மா.. கொஞ்சம் தண்ணியக் குடிச்சுரு என் ராசாத்தி” என்று மாரிக்கு கொடுத்தாள் சந்திரா. மாரி ஒரு மடக்கு தண்ணீரைக் குடிக்கவும், “மாரி.. ஒருதடவ மூச்ச இழுத்து விடுட்டி.. சரி ஆயிரும்” அவள் முதுகை மெதுவாக நீவி விட்டாள்..

வெங்கடேசன் மெதுவாக முன்னால் வந்து, “யக்கா.. நா மெதுவாத்தான் வந்தேன்.. தெரியாம நடந்து போச்சு. மாரிக்கு ஒண்ணும் ஆகாது.. இந்தா இத வெச்சிகிடுங்க.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்துருங்க” என்றபடி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். அவனை முறைத்து பார்த்தவள், ”ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருந்தா இந்தக் காசால சரி பண்ணிருக்க முடியுமாய்யா? எம்புள்ள உசுருக்கு வெல பேச முடியாது.. நல்லாயிருப்பிய.. போயிருங்க.. எம்புள்ளய நா பாத்துகிடுதேன்.” என்று அழுத்தமாய்ச் சொல்லி கையெடுத்துக் கும்பிட்டாள். “அதான் அவா பாத்துகிடுதேன்னு சொல்லிட்டால்லா.. கெளம்புங்கடே” என்று ஒருவர் சொல்ல ஆளாளுக்கு, “புள்ளயப் பாத்துக்கோ” என்று சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினார்கள்.

“உலை கொதிச்சுட்டு இருக்கு.. கொஞ்சம் வடிதண்ணி கொண்டு வரட்டா? குடிச்சா புள்ளைக்கி தெம்பா இருக்கும்ட்டி” என்ற பிச்சம்மாவிடம், “இல்ல மைனி.. வீட்ல இருக்கு.. நீங்க இவள பாத்துகிடுங்க.. நாம்போயி எடுத்துட்டு வாரேன்” என்று சொல்லியபடி தன் மடியில் வைத்திருந்த மாரியின் தலையைத் திண்ணையில் வைத்துவிட்டு எழுந்து உள்ளே போனாள் சந்திரா.

மெதுவாய் எழுந்து உட்கார்ந்த மாரி,”யம்மா..” என்று திண்ணையில் மீண்டும் சரிந்தாள்.. ”யாத்தா.. எம்புள்ள” என்று பதறி மாரியைப் பிடித்து அவள் காலைத் தூக்கித் திண்ணையில் வைத்த பிச்சம்மா திடுக்கிட்டுப் பார்த்தாள்.. “ஏ.. சந்த்ரா.. சீக்கிரம் வா.. இங்க வந்து பாரு” என்று பிச்சம்மாவின் கத்தல் கேட்டு உள்ளிருந்து பதற்றமாக வெளியில் வந்தாள் சந்திரா. “என்னாச்சி மைனி? “ என்றவள் பிச்சம்மாவின் கைகளில் பிசுபிசுத்த ரத்தத்தைப் பார்த்து கையில் இருந்த பாத்திரத்தை நழுவ விட்டாள்.. ”மாரீ… அய்யோ.. என்னாச்சி மாரிக்கு?” என்று பதறியவளை இறுக்கமாகப் பிடித்து நிறுத்திய பிச்சம்மா, “ஏட்டி..பதறாத.. வண்டில மோதி விழுந்ததுல..” என்று நிறுத்தி மாரியைப் பார்த்தாள். “மோதி விழுந்ததுல.. சொல்லுங்க மைனி.. என்னிய விடுங்க.. விடுங்க.. நா போயி பாக்கேன்” என்று சந்திரா பிச்சம்மாவைத் தள்ள, “ஏட்டி..சொல்லுதத கேளு.. ஒண்ணுமில்ல.. வண்டில மோதி விழுந்த அதிர்ச்சில மாரி சடங்காயிட்டான்னு நெனைக்கேன்.” என்றாள் பிச்சம்மா..

தன் நெஞ்சில் கைவைத்தபடி தண்ணீர்த் தொட்டி அருகில் தடாலென உட்கார்ந்து பேச்சற்று மாரியைப் பார்த்தாள் சந்திரா.. மெதுவாகக் கண்களைத் திறந்து இருவரையும் பார்த்தாள் மாரி.. சந்திராவின் அருகில் உட்கார்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட பிச்சம்மாவைப் பார்த்து, “அடுத்த வாரம் வந்தா பத்து வயசுதான் முடியப் போகுது..இப்பமே இப்டின்னா.. நா என்ன செய்வேன்? எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடலியே.. உங்க தம்பியும் ஊர்ல இல்லியே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்று மாரியைக் கட்டிக் கொண்டாள் சந்திரா..

“பதறாதட்டீ.. வண்டி மோதி வேற என்னமும் பெரச்சின இல்லாம போச்சே.. இது என்னைக்கின்னாலும் பொம்பள புள்ளைக்கி நடக்கப் போறதுதான.. வுடு.. நா அவனுக்கு ஃபோன் பண்ணுதேன்.. நீ மொத புள்ளய உள்ள கூட்டிட்டுப் போ.. சாப்புட எதும் இருந்தா குடு.. மேலு கால வென்னி வச்சு நல்லா தொடச்சு விடு.. கீழ விழுந்துருக்கா.. காச்ச கீச்ச வந்துரக் கூடாது. பாத்துக்கோ.. நா போய் நம்ம ராமையாண்ணங்கிட்ட சொல்லி காச்ச மாத்திர வாங்கிட்டு வாரேன். நீ அழுதுகிட்டு நின்னா புள்ள பயந்துர போது.. தைரியமா இரு.” என்று வரிசையாக சொல்லி விட்டு வெளியில் போனாள் பிச்சம்மா..

மாரியைக் கட்டிக் கொண்டு அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்த சந்திராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மெதுவாக மாரியை உள்ளே கூட்டிக் கொண்டு போய் அவளைப் படுக்க வைத்தவள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அடுப்பைப் பற்ற வைத்தாள்.. வடித்து வைத்திருந்த கஞ்சியில் இன்னும் கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்து வந்து மாரியை எழுப்பினாள்.. “மாரி.. எஞ்செல்லம்.. கண்ணத் தொறம்மா.. இந்தா பாரு ஒனக்குப் புடிச்ச வடிகஞ்சி.. உப்பும் தேங்காப்பூவும் போட்டுருக்கேன்.. கொஞ்சம் குடி.. எந்திரிம்மா” என்று மெதுவாக அவளைத் தூக்கி உட்கார வைத்து கஞ்சியை ஊட்டினாள்.

கஞ்சி குடித்து முடித்ததும் மாரியின் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்து, “காச்சல்லாம் ஒண்ணுமில்ல.. ” என்றாள். “யம்மா.. எந்துணில்லாம் ஈரமாருக்கு” என்று எழுந்தவளிடம், “இருட்டி.. வென்னி வெச்சிருக்கேன்.. மேலு கழுவுவோம்” என்று சொல்லியபடி வென்னீரை எடுத்துக் கொண்டு போய் வீட்டின் பின்பக்கம் இருந்த தட்டி மறைவில் இருந்த பாத்திரத்தில் ஊற்றினாள்.

உள்ளே வந்து மாரியை மெதுவாகத் தூக்கி,”வா.. பாத்து வா.. எங்கியும் அடி ஏதும் பட்ருக்கா? வலிக்காட்டி?” என்ற சந்திரா மாரிக்கு வித்தியாசமாகத் தெரிந்தாள். ரோட்டில் ஓடி வண்டியில் மோதி விழுந்தது தெரிந்தும் அம்மா எப்படி இவ்வளவு அமைதியாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது மாரிக்கு.  “வா.. வென்னி ஊத்தி விடுதேன்.. மேலு கழுவிக்கோ” என்று வீட்டின் பின்புறம் தன்னை அழைத்துச் சென்ற சந்திராவிடம், “யம்மா.. இங்கனயா?” என்று ஆச்சரியம் குறையாமல் கேட்டாள் மாரி. “ஆமா.. இங்கனதான்.. என்ன?” என்ற சந்திராவிடம், “இல்ல.. பெரியபுள்ளயா ஆன பெறவுதான இங்கன குளிக்கணு ம்னு சொல்லுவ” என்ற மாரியைப் பெருமூச்சு விட்டபடி சந்திரா பார்க்க “ம்.. நீ இப்பம் பெரியபுள்ளதான். வா” என்றபடி வந்த பிச்சம்மா சந்திராவிடம், “தீட்டுக்கு வெக்க பஞ்சு வாங்கிட்டு வந்துருக்கேன்.. துணி எடுத்துட்டு வரும்போது அதுல ஒண்ணு எடுத்துட்டு வா” என்று சொல்லி விட்டு மாரியை அழைத்துக் கொண்டு போனாள்.

தட்டியின் மறைவில் அழைத்துக் கொண்டு போய் பிச்சம்மா மாரியின் மேல் கழுவி விட்டாள். ”இப்டியாட்டி ஓடுவ. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருந்தா என்னத்துக்காவும்? இதுக்குப் பெறவு ஓட சாடல்லாம் கூடாது. வெளங்குதா?” என்ற பிச்சம்மாவிடம், “அன்னைக்கு அந்த சுந்தர் அண்ணங்கிட்ட ஓடியாடி வ்ளாடுனா தான் ஒடம்பு பெலக்கும்னு சொன்னல்லாத்த? என்னிய ஏன் ஓடக்கூடாதுங்க?” என்றாள் மாரி.

“அவன் ஆம்ப்ளப்பய.. அதான் அவங்கிட்ட அப்டிச் சொன்னேன்”..

“பொம்பள புள்ளக்கும் ஒடம்பு பெலக்கணும்லா”

”அதுக்கு? இப்பமே மரத்துல ஏறி சாடணுங்கியோ”

”ஏன் சாடக் கூடாதுன்னு நீ சொல்லமாட்டேங்கேல்லா”

”ஏட்டி.. இன்னா பாரு.. ஓடுன ஓட்டத்துல வண்டில மோதி இப்டி ஆயிட்டுல்லா? ஆம்பளப்புள்ளைக்கி ஆவுமாட்டி? அவன் எங்கன வுழுந்தாலும் தெடமா இருப்பாம்லா?

“எது? இந்த ரெத்தமா? என்னைக்குன்னாலும் பொம்பளபுள்ளைக்கி இது நடக்கத்தாம்போவுதுன்னு நீ அம்மைட்ட சொன்னல்லா? இது ஆம்பள புள்ளைக்கும் நடக்குமா?” என்ற மாரியின் கேள்வியில் வாயடைத்துப் போனாள் பிச்சம்மா.

மாரியின் பதிலைக் கேட்டு சந்திரா சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்ளே போய் இருப்பதில் நல்ல உடையாக மாரிக்கு எடுத்துக் கொண்டு பிச்சம்மா வாங்கி வந்திருந்த நாப்கினில் ஒன்றையும் கொண்டு போய் கொடுத்தாள் சந்திரா. “உம்மவ கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல ஒருத்தன் பொறந்துதான் வரணும்” என்று உடையை வாங்கிக் கொண்டு போய் மாரிக்கு போட்டு விட்டு, “ஏட்டி.. எல்லாக் கேள்வியும் கேட்டுட்டல்லா.. இதுக்கப்றம் ஒத்தக் கேள்வி கேக்க கூடாது பாத்துக்க” என்று சொல்லி சிரித்தபடி அழைத்து வந்தாள். சந்திராவை நோக்கி “பாரும்மா” என்பது போல் கண்ணைக் காட்டியபடி உள்ளே வந்தாள் மாரி.

பாயை விரித்து மாரியை ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டு சந்திரா நீட்டிய உலக்கையை வாங்கி மாரியின் பக்கம் வைத்து விட்டு, “இவ அப்பங்காரனுக்கு ஃபோன் போட்டேன்.. அவன் எடுக்கவே இல்ல.. இந்த பஞ்ச நா வாங்கிட்டு வாரத ஆளாளுக்கு ஒரு மாரி பாக்காளுவோ.. எதும் கேக்கதுக்கு மின்னால ஓடி வந்துட்டேன்.. அவனும் வந்துட்டா கலந்து பேசி சொல்ல வேண்டிய ஆளுவளுக்கு சொல்லிரலாம். மூணா நாத்து தண்ணி ஊத்திரலாம். என்ன சொல்லுத?” “நாஞ்சொல்ல என்ன மைனி இருக்கு? நீங்களும் ஒங்க தம்பியும் பேசி முடிவு செய்யுததுதான்” என்று சந்திரா சொல்லியபோது வாசலில் சத்தம் கேட்டது. பிச்சம்மா வாசலில் எட்டிப் பார்த்து, “ஏட்டி.. மாரி உங்கப்பன் வந்துட்டான்” என்றபடி வாசலுக்குப் போய், “ஏல.. ஃபோன் போட்டா எடுக்க மாட்டியா? எத்தன மட்டம் கூப்ட்டேன்”.

”உள்ள வாரதுக்குள்ள சலம்புதியே.. வெளிய போன ஆம்பள ஆயிரம் வேலயா இருப்பான்.” என்ற செல்வத்தின் சத்தம் கேட்டு எழுந்த மாரியை சந்திரா, “உக்காருட்டி.. இன்னும் மூணு நாளைக்கு எந்திச்சில்லாம் வரக்கூடாது” என்றாள். உதட்டைப் பிதுக்கியபடி அப்படியே உட்கார்ந்து கொண்டாள் மாரி.. வீட்டை விட்டு வெளியே வந்தாள் சந்திரா.. அவளைப் பார்த்ததும், ”சௌந்தர் அண்ணன் ஒண்ணாம் தேதில இருந்து வேலக்கி வரச் சொல்லிட்டாரு. ரெண்டு மாசம் வரைக்கும் எட்டாயிரம் பெறவு மூணாம் மாசத்துலருந்து பத்தாயிரம் தாரேன்னு சொல்லிருக்காரு.. நமக்கும் நல்ல காலம் பெறந்துட்டு..” என்று செல்வம் சொன்னதும், “எல்லாம் எம்மருமவா உக்காந்த நேரம்” என்றாள் பிச்சம்மா. “என்னது?” என்று சந்திராவைத் திகைப்போடு பார்த்தான் செல்வம். ’ஆம்’ எனத் தலையசைத்தாள் சந்திரா. தடதடவென்று வேகமாக வீட்டினுள் அவன் வந்ததும், “யப்போ” என்று சிரித்த மாரியைப் பார்த்து ஒரு வினாடி அவன் உடல் நடுங்கி இயல்பானது. “எங்கன்னுகுட்டி” என்று அவள் அருகில் போனவனை சந்திரா பிடித்து நிறுத்தினாள்.

”பாருப்பா.. இங்கேர்ந்து எந்திக்க கூடாதுங்கா.. வெளில வ்ளாட போக்கூடாதுங்கா.. இப்பம் பாரு.. ஒன்னையும் வுட மாட்டுக்கா” என்ற மாரியைப் பார்த்தவன் பேச்சு வராமல்  திரும்பி சந்திராவைப் பார்த்து விட்டு தன் நெஞ்சில் கைவைத்து கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டு கண்களைத் திறந்தான். ”அவ கெடக்கா.. நீ எப்பமும் அப்பா கன்னுக்குட்டி தாம்ல” என்று மாரியின் அருகில் போய் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டான். “யப்பா.. காசு கொண்டு வந்துருக்கல்லா? எனக்கு ஒரு பாக்கெட்டு ஆரஞ்சு முட்டாயி வாங்கி தாரியா?” என்று ரகசியமாய்க் கேட்டாள்.

மாரி கேட்டதும் திடீரென ஞாபகம் வந்தவனாய் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து, “சௌந்தர் அண்ணண்ட்ட கொஞ்சம் முன்பணம் வாங்கிட்டு வந்தேன்” என்றபடி சந்திராவிடம் நீட்டினான். “யப்போ” என்று சத்தமாய்க் கூப்பிட்ட மாரியிடம், “வாங்கித் தாரம்ல கன்னுகுட்டி” என்று கொஞ்சியவன்  “ஏல.. கொஞ்சம் வெளிய வா.. ஒன்ட்ட பேசணும்” என்று சொல்லியபடி சந்திராவிடம் கண்ணைக் காட்டி விட்டு வெளியே போன பிச்சம்மாவைப் பின் தொடர்ந்து வெளியே போனான்.

மாரி பைக்கில் மோதி விழுந்ததில் இருந்து மூன்றாம் நாள் தலைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது வரை செல்வத்திடம் சொல்லி அவனைச் சரிக்கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குப் போனாள் பிச்சம்மா. மீண்டும் வீட்டுக்குள் வந்தவன் “ஏல.. ரோட்ல பாத்து போ பாத்து போன்னு எத்தன மட்டம் சொல்லிருக்கேன்” என்று மாரியிடம் கோபப்பட, “சரி வுடுங்க.. அதெல்லாம் நடக்கணுங்கும் போது நடக்கத்தான் செய்யும். ஆக வேண்டியதப் பாப்போம்” என்ற சந்திராவை முறைக்க அவள் தலை குனிந்து கொண்டாள்.

மூன்றாம் நாள் வீடு நிறைந்திருந்தது. மிக நெருங்கிய முக்கியமான உறவுகளுக்கு மட்டும்  சொல்லி தலைக்குத் தண்ணீர் ஊற்றி தாய்மாமன் சீர் செய்து பரபரப்பாக சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. மாரியின் தோழிகள் அவளை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது உள்ளே வந்த செல்வம் மாரியைப் பார்த்து சிரித்தபடியே அவள் முன்னால் வைக்கப்பட்டிருந்த தாம்பூலத் தட்டில் ஒரு ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு இன்னொரு பாக்கெட்டை மாரியிடம் நீட்டினான். மாரி கண்களில் யாரும் எப்போதும் பார்த்திராத பிரகாசத்தோடு துள்ளிக் குதித்தபடி ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை வாங்க  கையை நீட்டிய போது பிச்சம்மா கிசுகிசுப்பான குரலில், “ஏட்டி.. குதிக்காத” என்று அவளை நிறுத்தி  பாக்கெட்டைத் தான் வாங்கிக் கொண்டு, “நாங்குடுக்கேன்.. நீ போய் வேலயப் பாரு” என்று செல்வத்தை அனுப்பினாள். “யத்த.. முட்டாயக் குடு.” என்று பரபரத்தவளிடம், “இருட்டி… பிரிக்க வேண்டாமா?” என்று பதில் சொல்லியபடி பாக்கெட்டைப் பிரித்தாள்.

சட்டென்று பிச்சம்மாவின் கையில் இருந்து பாக்கெட்டைப் பிடுங்கித் தன் தோழிகளுக்கு கொடுத்தாள் மாரி.. மாரியின் கையிலிருந்த பாக்கெட்டில் இருந்து ஒரு மிட்டாயை எடுத்து, “இன்னா.. நீயும் தின்னு” என்று நீட்டிய சுப்பு மாரியின் அருகில் நெருங்கி வந்து “அந்த இன்னோரு பாக்கெட் இருக்குல்லா.. வ்ளாட வரும் போது அத கொண்டுட்டு வாரியா?” என்று ரகசியமாய்க் கேட்டாள். கண்கள் விரிய சிரித்தபடி தலையாட்டினாள் மாரி..

”ஏட்டி.. படிச்சு படிச்சு ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன்.. அவா வெளாட கூப்ட்டா அந்தால இளிச்சிகிட்டு தலைய ஆட்டுத?.. வெளிய தெருவுக்கு போகாம வீட்டுக்குள்ள கெடக்கணும். அந்த முட்டாயி பாக்கெட்டெல்லாம் உள்ள வெச்சிப் பூட்டிருவேன்..” என்ற பிச்சம்மாவின் முகத்தை நேருக்கு நேராய் பார்த்தாள் மாரி.

”உள்ள வச்சு பூட்டதுக்கா எங்கப்பா வாங்கித் தந்திருக்கு? முட்டாயி திங்கதுக்குத்தான்.. பூட்டி வெச்சா பூச்சி அரிச்சிட்டுத்தான் போவும். பரவால்லன்னா வெச்சுப் பூட்டு.. இன்னா” என்றபடி மிட்டாய்க் கவரை பிச்சம்மாவின் கையில் கொடுத்து விட்டு சுப்பு கொடுத்த ஆரஞ்சு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டாள் மாரி.

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button