இணைய இதழ் 105சிறுகதைகள்

ஒரு கபூரின் பெருநாள் தொழுகை – க. மூர்த்தி

சிறுகதை | வாசகசாலை

பாத்திமா வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் புளியமரத்தில் காக்கைகள் எப்பொழுதும் கரைந்துகொண்டே இருக்கும். காக்கைகளின் சத்தம் அவளுக்கு பெருநாள் தொழுகையின் போது தர்காவில் இருந்து தொழுகைக்காக பாங்கிற்கு அழைப்பதைப்போலத்தான். அவற்றின் சத்தம் அதிகாலையில் தூக்கத்தினை கலைப்பதைப் போல அவளுக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. பாத்திமா எழுந்ததும் கொஞ்சநேரம் துவாவிற்கு உட்கார்ந்து விடுவாள். குடிக்காட்டில் அவள் மட்டும்தான் பெட்டிக்கடை வைத்திருந்தாள். இரண்டு பெரலாங்கு தூரம் போனால் குடித் தெருவில் பெரிய பல சரக்கு கடைகள் இருக்கும்.

புதுக்கோட்டை பக்கத்தில் இருக்கும் அன்னவாசலிருந்து இடம் பெயர்ந்து வந்த இடம் குடிக்காடு.  ஐந்து ரூபாயும் ஒரு மரக்கா சோளத்தினையும் விலையாக கொடுத்து கிரையம் செய்யப்பட்ட நிலத்தில் ரம்ஜானுக்குள் வீட்டை பொன்னமாடி விட்டிருந்தான் பாத்திமாவின் கணவன் அல்லாப் பிச்சை. வெள்ளை மண்ணையும் காரையையும் சேர்த்துக் கட்டப்பட்ட வீடு. பாத்திமா பிறந்த ஊர் விருத்தாசலம். அல்லாபிச்சையை நிக்காஹ் செய்துகொண்ட அவள் அன்னவாசலில்தான் முதலில் பல சரக்கு கடை வைத்திருந்தாள். யேவாரத்தில் நட்டம்தான். கமாலுதீன் பாத்திமாவின் அண்ணன். அல்லாப் பிச்சை செழிப்பான மகரை கொடுத்துதான் பாத்திமாவை நிக்காஹ் செய்து கொண்டான். சொந்த பந்தம் என எல்லோருக்கும் அழைத்து வலிமா கொடுத்து அனுப்பி வைத்தான். போறாத காலம். போன இடத்தில் அவளுக்கு எதுவும் பொருந்தி வரவில்லை. இரண்டு பிள்ளைகளுக்கும் மடி ரொப்பும் சடங்குகள் என அனைத்தும் அன்னவாசலில் முடிந்து விட்டிருந்தன. பாத்திமாவிற்கு மகன் முஸ்தபா தத்தி தத்தி நடந்தான். மகள் கலீமா இடுப்பில் இருந்தாள். குடிக்காட்டில் பள்ளிவாசல் என எதுவும் கிடையாது. ஒத்தை குடிதான். தங்களுக்கென நிலமும் குடித்தனமும் என்றாகிவிட்ட நிலையில் குடிக்காடு அவளது மனதிற்கு நெருக்கமாகி விட்டிருந்தது.

குடிக்காட்டு கடையில் கொஞ்சம் பல சரக்குகளும் இருக்கும்; பன்றிகளும். வீட்டின் முற்றத்திலேயே ஏணங் கழுவிய தண்ணீர் குட்டையாக நின்றுகொண்டிருக்கும். அந்த தெருவிற்குள் பெட்டிக் கடையினை நடத்துவதற்கு கணவன் அல்லாப் பிச்சையோடு பாத்திமா எப்படி வந்தாள் என்றுதான் தெரியவில்லை. பிளந்து போடுவதற்கு தீபாவளி பொங்கலுக்கு என பன்றியை தெருவுத் தெருவாய் துரத்திக் கொண்டு ஓடுவார்கள். திறந்து வைக்கப்பட்டிருந்த கீத்துக் கதவில் புகுந்து சட்டி முட்டி சாமான்களை கூட்டமாக புகுந்த பன்றிகள் உருட்டிவிட்டுப் போய்விட்டன. பாத்திமா, ”ஏந்தா, இந்த சனங்க இப்படி பண்ணுதுங்களோ!” என்று சொன்னதோடு அதனை விட்டுவிடுவாள். ”மனுசனுக்கு பிடிச்சத திங்கறாங்! அதுல பெறத்தியாரு நாக்கு மேல பல்லப் போட்டு கருத்து சொல்றத்துக்கு ஒன்றுமில்ல!“ என்று கடந்து போய்விடுவாள். பசி மிகுந்திருந்த நேரத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை இறைவன் தமக்கு உணவாக கொடுத்ததினைப் போலவே இதனையும் நினைத்துக் கொள்வாள். தனக்கு கிடைத்திருக்கும் மாகுலுக்கு இறைவனுக்கு மனதிற்குள்ளாகவே ஹையர் சொல்லிக்கொள்வாள்.

புதுக்கோட்டை பக்கமாக அன்னவாசல்தான் தனது சொந்த ஊர் என்று கடைக்கு சாமான் வாங்குவதற்கு வருபவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பாத்திமா, சொந்தமாக நிலம் வாங்கி காரை வீடு கட்டிக்கொண்டவுடன் அதனைச் சொல்லுவதில்லை. விருத்தாசலத்தில் இருக்கும் பாத்திமாவின் அண்ணன் வழி உறவுமுறைகளும் குடிக்காட்டிற்கு வருவார்கள். அண்ணன் வந்ததில்லை. விருத்தாசலத்திற்கு போகும்பொழுதெல்லாம் அவளது அண்ணன் கமாலுதீன், ”இன்னோம் அந்த பன்னிங்க தெருவுல மேயிற ஊருலதான் இருக்குறியா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார். பன்றிகள் மேயும் தெரு மனதிற்கு அருகுலுப்புதான். இருந்தாலும், ”இந்த வீடுதான் எனக்கு ராசி! தாயி புள்ளய சனங்க பழகுது! வேற என்னா வேணுங்?” என்று பாத்திமா சொல்லி முடித்துக்கொள்வாள். ”சின்னஞ் சிறுசுகளோட ஒத்தையில அங்க இருந்துக்கிட்டு ஏன் கஷ்டப் படுற! விருத்தாசலத்திற்கு வந்திடு! துணிக்கடை போட்டுத் தாறேன்! பள்ளிவாசல் பக்கமாக இருப்பே! பிள்ளைகள் துவாவிற்கு பள்ளி வாசலுக்கு போய்வர வசதியாக இருக்கும்!. நல்லது கெட்டது எதுன்னாலும் ஜமாத் இருக்கு! நமக்கு அதுதான் பாதுகாப்பு” என்றார். பாத்திமா பிடி கொடுக்கவில்லை. ”இவுங்க அத்தா இந்த ரம்ஜானுக்கு வந்துடுவாரு! கையில இருக்குறதோட பணங்காசு சேர்த்து பெரிய சரக்கு மண்டி போடலாம்!” என்பது பாத்திமாவின் யோசனையாக இருந்தது. தெருவிற்குள் மேயும் பன்றிகளோடுதான் மனம் ஒத்துப் போகவில்லை. எல்லாவற்றிற்கும் அல்லாவின் மேலாகவே பாரத்தினை போட்டுவிட்டு பாத்திமா கடந்து போய்விடுவாள்.

கடையில் பலகை கல் படுக்க வைக்கப்பட்ட முன் வரிசையில் தகர டப்பா வைத்திருப்பாள். காட்டு வேலைக்குச் சென்றுவரும் பெண்டுகள் அந்திக்கு குழம்புச் செலவு சாமான் வாங்குவதற்காக கொண்டுவரும் கூலி தானியங்களை வாங்கி சேகரம் செய்வதற்காகத்தான் அந்த தகர டப்பா. லாவகமாக கையை வைக்கவேண்டும். முள்ளைப்போல துருத்திக் கொண்டிருக்கும் சிதாம்பு கையை பதம் பார்த்துவிடும். அந்தியில் அவளது கடையில் பெரும்புடியான ஏவாரமாக இருக்கும். பகல் பொழுதில் மட்டுதான்.

கொள்ளிக் கருவாட்டினை யேவாரமாக எடுத்துக் கொடுத்த பின்னர் அதே கையில் நாலணாவிற்கும் எட்டணாவிற்கும் பொட்டுக்கடலையினை அள்ளி கிழித்து வைக்கப்பட்ட காதிதத்தில் மடித்துக் கொடுப்பாள் பாத்திமா. கொள்ளிக் கருவாட்டின் வாசனையோடு இரண்டு துளி மிளகுக்கொட்டையினைச் சேர்த்து வாயில் கொட்டி மெல்லும்போது பதப்படுத்தப்படாத அரேபிய பாலைவனத்து ஈஞ்சி பழங்கள் நடு நாக்கில் கரைந்து போவதைப்போல ருசி இருக்கும். அது கவிச்சிக் காணாத மரக்கறித் தின்னும் பெண்டுகளுக்கு கூட கருவாட்டின் மீது புது ஈர்ப்பினைக் தந்துவிடும். வயதெல்லாம் வித்தியாசமில்லை.

பாத்திமாவின் கடைக்கு பக்கத்து சந்து வீட்டில் நாள்பட்டு சுகமில்லாமல் இழுத்துக்கொண்டு கிடந்த கிழவி. செல்லாண்டியின் அம்மா. அன்று விடிவதற்கு முன்னதாகவே மௌத்தாகி விட்டிருந்தாள். ”எனக்கு இந்த வீட்டுமேலதாண் பாத இருக்குது! ரெண்டு அடி செவுத்த இடிக்கிறனா இல்லியாண்ணு பாரு!” என்று செல்லாண்டி பாத்திமாவிடம் சண்டையும் சச்சரவுமாக இருப்பான். யேவாரம் நடக்கும் அந்திக்குதான் அவளிடம் சண்டை கட்டுவான். எண்ணைத் தேய்த்து குளிக்க வைக்கப்பட்ட கிழவிக்கு இளனித் தண்ணீர் கொடுத்து செல்லாண்டி சடங்கு செய்துகொண்டிருப்பதாகவும் கூட்டத்தில் இருக்கும் பொண்டுகள் பேசிக்கொண்டார்கள். எத்தனை மூடிப்போட்டு மறைத்தாலும் உண்மையை தெரிந்துகொள்ளும் பெண்டு ஒருத்தி கூட்டத்தில் இருந்துவிடுகிறாள். கிழவி வீட்டிற்கு இழவு கேட்பதற்கு வந்துகொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கடைக்கு பக்கமாகத்தான் இழவுக்கட்டும் வீடும் இருந்தது. சேதி சொல்லப்பட்டு வந்திருந்த சனங்கள் கோடி சாமான்களை வைத்துக்கொண்டு செல்லாயி அம்மன் கோவிலில் கோடி மேளக்காரனுக்காக காத்திருந்தார்கள். பங்காளி உறவுமுறைகளுக்கு பிராந்தி, பீடி சிகரெட்டு என செலவு புழக்கம் அதிகமாக இருந்தது. ஊரில் சாவு, நல்ல நாள் பெரிய நாளுக்கு பின்னதாக வரும் கறிநாள் என்றால் பாத்திமா நடுங்கிகொண்டுதான் கிடப்பாள். ‘என்னா கூக்கரை! எப்படி வரப் போவுதோ!’ என்று அவளுக்கு நெஞ்சு பதை பதைக்கும். மகள் கலீமாவை நெஞ்சோடு அணைத்துக் கொள்வாள். கடையை அடைத்து வைத்திருந்தாலும், ”ஏய் துலுக்கச்சி! கடைய தொறடி!” என்பார்கள். கடையை மூடி வைத்திருந்தாலும், ”ஏய் துலுக்கச்சி! எங்க ஆயாவே செத்துப் போயிட்டா! என்னாடி கடைய தொறந்து வச்சி ஏவாரம் பாக்குறியாடி! மூட்றி!” கல்லையும் கட்டியையும் எடுத்து கடையின் மீது வீசவார்கள்.. பாத்திமா ஊரில் ஒத்தக்குடி. ‘அன்னவாசலில் இருந்து இந்த ஊருக்கு ஏன் பிழைப்புதனம் செய்வதற்கு ஏன் வந்தோம்?’ என்று குமுந்து போவாள். இந்த ரம்ஜானுக்கு அல்லாப் பிச்சை சவுதியிலிருந்து வந்ததும் மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும் என்ற யோசனையும் வந்துகொண்டுதான் இருந்தது. . ”இருந்தவரைக்கும் போதும்! இனிமேல்டு தனியா தடந்தாவுண்னு பாத்து போயிட வேண்டியதுதாங்!” எல்லோரும் இல்லையென்றாலும் ஒருத்தர் ரெண்டு பேர் கொடுக்கிற இடைஞ்சலில் பாத்திமா உடைந்து போவாள். 

நிலத்தை கிரையம் செய்து கடையை வைத்துக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு போன அல்லாப் பிச்சை, குடிக்காட்டிற்கு ஒருமுறை மட்டும் வந்திருக்கிறான். பின்னர் குடிக்காட்டில் யாரும் அவரை பார்த்தில்லை. வெளிநாட்டில் இருக்கும் தோலின் மிணுமிணுப்பை அவரது உடம்பில் போர்த்திக்கொண்டு வந்திருந்த மனுசனை, ஊரிலிருந்து எல்லோரும் போய் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். தனது கணவனோடு குடிக்காட்டிற்கு வந்திருந்த பாத்திமாவிற்கு முஸ்தபா என்ற மகனும், கலீமா பீவி என்ற மகளும் இருந்தார்கள். அவளது அம்மா ஜாகிரா பாணு பாத்திமாவிற்கு ஒத்தாசையாக இருந்தாள். ஜாகிரா பாணு கடைக்கு வருபவர்களை வசவிக்கொண்டே இருப்பாள். அவள் அப்படித்தான். அதற்கு அவள் தரப்பில் நிறைய வேய்க்காணம் வைத்திருந்தாள். ஜாகிரா பாணுவிற்கு வாயில் இருந்து வரும் வசவுச் சொற்கள்தான் தங்களின் மீது சண்டை பிடிக்கும் சனங்களிடமிருந்து பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டாள். முஸ்தபா வலித்த பையன். ஏடக்குறுக்காக ஏவாரம் பார்க்கும் முஸ்தபாவை ஏமாற்றிவிடுவார்கள் என்பது அவளின் பயம்தான். வேறொன்றுமில்லை. சாமான் வாங்க வருபவர்கள் வாங்கிகொண்டு போய்விடவேண்டும். கலீமா நெடு நெடுவென வளர்ந்துவிட்டிருந்தாள். எப்பொழுதென்றாலும் பூப்படைவதாக இருந்தாள். ”இங்க என்னாடா நிக்கிறீங்க! எடுபட்ட பயிலூவலா! வந்துர்றானுவோ ஊரு பக்கீக! என்பாள். குடிக்காட்டில் ஒத்தைக்குடியாக இருக்கும் பாத்திமாவிற்கு துணையாக கமாலுதீன் அம்மா ஜாகிரா பாணுவை தங்க வைத்திருந்தான். சொல்லும்போல, பிஸ்கோத்து வெத்தலை, ஓசி பீடி என கிழவி இருந்தால் யாரும் கடையின் பக்கம் போகமாட்டார்கள். கடைக்கு சாமான் வாங்குவதற்கு வரும் பெண்டுகள் தங்களின் சாமான்களை வாங்கிவிடுவதோடு போவதில்லை. ”வாயி புளிப்பா இருக்குது” என்று சொன்னால் போதும். தட்டில் அடிப்பக்கமாக இருக்கும் ஒரு உலர்ந்த வெற்றிலை எண்ணை பெட்டிக்கு மேலாக வைத்துவிடுவாள் பாத்திமா. கடையின் முன்பாக இருக்கும் எண்ணைப் பெட்டிதான் சாமான் கொடுப்பதற்கும் பணம் சில்லரை காசு, தானியம் என பரிமாற்றம் செய்துகொள்வதற்கான இடம். முன்புறத்தின் தாழ்வாரத்தில் கடையும் பின்புறத்தில் வீடுமாக இருப்பதில்தான் அவளது குடித்தனம்.

நோன்பு தொடங்கும் நாட்கள் நெருங்கிகொண்டிருந்தது. அல்லாப் பிச்சை சவுதி முதலாளியிடம் விடுமுறை கேட்டிருப்பதாக கடுதாசி எழுதியிருந்தான். இப்படியான மாகுல் அவள் சற்றும் எதிர் பார்த்தவள் இல்லை. என்ன முசீபத்தை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. அவளின் தர்தீபுவாக சவுதிக்கு போயிருந்த அல்லா பிச்சைக்கு மாரடைப்பு பெரு நோம்பின் மத்திம காலத்தில் வந்து மௌத்தாகிவிட்டதாக சேதி வந்திருந்தது. அன்றுதான் பாத்திமாவின் வீட்டுக் கடையின் முன்புறத்தில் இருக்கும் அவதாரத்தின் வீட்டில் முந்தைய தினம் திருமணத்திற்கான முகூர்த்தகால் நடப்பட்டு பெண் அழைப்பிற்காக வந்திருந்தார்கள். பாத்திமாவின் வீட்டைச் சேர்த்துதான் பந்தலும் போட்டிருந்தார்கள். நல்லது கெட்டதுக்கு அண்டைய வீட்டின் வாசலையும் சேர்த்துதான் பந்தல் போடுவது வாடிக்கை என்றாலும், பாத்திமாவிடம் ஒப்புக்காக கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. ”அவளுக்கிட்ட என்னாத்த கேக்குறது! ஒத்தக் குடிக்காரி” என்று அவதாரம் ஏகத்திற்கும் பந்தலை போட்டிருந்தான். கல்யாணப் பந்தல், இழவுப் பந்தல் என இரண்டு சம்பவத்திற்கும் பந்தல் பொருந்தி விட்டிருந்தது. அல்லாவிடம் ஒப்புக்கொடுக்கையில் அழுகை கூடாது என்றாலும் இழப்பின் துக்கம் அவளின் மனதை முட்டத்தான் செய்கிறது. எதிர் வீட்டில் நல்லது நடக்கும் தருணத்தில் ஒப்பாரி வைத்து விடக்கூடாது என்று வரும் அழுகையை நெஞ்சுக்கு அடியில் பொத்தி அழுத்தி அழுத்தி வைத்தாள் பாத்திமா. அல்லாப் பிச்சை இறைவனிடம் போய் சேர்ந்திருக்கிறான். அவனை அடிக்கழுவி சுருமா அத்தர் பூசி சுத்தமாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். தன் அத்தாவிற்கு ஒரு கபண்துணியினைகூட கொடுக்க முடியவில்லை என்பதை நினைத்து கவலையாக இருந்தது. வெடித்துக்கொண்டு வந்துவிட்டது. ஓவென அழுதுவிட்டாள்.  முன்வீட்டில் பெண் அழைப்பிற்கு சனம் சாதியென வந்திருந்தார்கள். பாத்திமா வீட்டிற்கும் அன்னவாசலில் இருந்து மௌத் கேட்பதற்கு அவளது உறவுமுறைகள் வந்திருந்தார்கள். அவதாரத்தின் பங்காளி கொத்துக்காரன் கட்டையன். வீட்டிற்குள் புகுந்தவன் பாத்திமாவையும் மௌத் கேட்க வந்திருந்தவர்களை செறாக்குச்சியில் சாத்தினான். பெண், ஆண், குழந்தை யென யாரையும் வகைப்படுத்திப் பார்க்கவில்லை. அவனுக்கு ஒத்தைக்குடி என்ற இளக்காரம். ”ஏம் பங்காளி வூட்டுல பொண்ணு மறுவூட்டுக்கு போற நேரத்துல, துலுக்க முண்ட, சனந் சாதிய கூட்டிக்கிட்டு வந்து ஒப்பாரி வக்கிறியாடி!” என்று இழுத்துப் போட்டு அடித்தான். ”அன்னக்கே சொன்னேங்! இந்த சாயபுங்களுக்கு நெலத்த விடாதிங்கன்னு! ஏம் பேச்ச கெழட்டுப் பய கேக்குல!” வேக்கோலமாய் பேசிக்கொண்டிருந்தான் கட்டையன். அவனை அடக்கி வைப்பதற்கு கூட யாரும் முன்வரவில்லை. யாரும் எதுவும் பேசமுடியவில்லை. அன்னவாசலில் இருந்து பாத்திமாவின் வீட்டிற்கு மௌத் கேட்க வந்திருந்த உறவு முறைகளின் முகத்தில் அவளால் முகம் கொடுத்து பேசமுடியவில்லை. அண்ணன் கமாலுதீனைத்தான் நினைத்துக்கொண்டாள். துக்க நேரத்தில் அண்ணன் ஒருத்தன் ஆதரவாக பக்கத்தில் இருந்துவிட்டால் பாதி துக்கம் மறைந்துவிடுகிறது. அப்படித்தான் பாத்திமாவிற்கும். அழுவதோடு நின்றுகொண்டாள். அண்ணன் சவுதியில் இருக்கும் சொந்த பந்தங்களோடு பிணத்தினை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாக அன்னவாசல் உறவு முறைகள் பாத்திமாவுடன் சொன்னார்கள்.

”நல்ல மொதலாளிதான், அல்லாப் பிச்சைக்கான கபண்துணியோடு சந்தாக் பெட்டிய அனுப்பி வச்சிடுவாரு” என்ற நம்பிக்கையோடு எல்லோரும் இருந்தார்கள். குடிக்காட்டில் ஒத்தைக்குடியாக மாட்டிக்கொண்டவளுக்கு வேறெதுவும் தோன்றவும் இல்லை. மௌத் கேட்க வந்த சொந்த பந்தங்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டோம் என்பதற்கும் சேர்த்து அழுதாள் பாத்திமா. தனது அழுகை பக்கத்தில் கேட்காமல் பார்த்து கவனமாகவும் பார்த்துக்கொண்டாள்.  

அல்லாப் பிச்சை இறந்துபட்டதிலிருந்து தெருவில் கடையைத் திறந்து ஒரு மாதம் கழிந்து விட்டிருந்தது. வீட்டிற்கு பின்புறமாக ஒரு புளியமரத்தில் அந்தியிலும் விடிவதற்கு முன்பாகவும் காக்கைகளின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும். அன்றைய இரவில் கோட்டான்கள் கூவத் தொடங்கியிருந்தன. காக்கைகள் கட்டியிருந்த கூடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு முட்கள் சிதறிக் கிடந்தன. கலைக்கப்பட்ட காக்கையின் கூடும் பாத்திமாவும் வேறுவேறாக பிரித்துப் பார்க்க முடியாதுதான். பல சரக்கு சாமானை நாலணாவிற்கும் எட்டணாவிற்கும் பொட்டலமாக மடித்துக் கொடுத்த பணங்காசில் குடிக்காட்டில் வாங்கிய நிலம். காக்கையின் கூடுகளைப் போல கலைத்துப் போடப்பட்டிருப்பதாகத்தான் பார்க்கிறாள் சடங்குகளுக்கும் சம்பிரதாயத்திற்கும் ஒத்துப்போவதாக இருந்தாலும் ஒத்தைக் குடியை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நாதியத்த குடி.

முக்காடு போட்டுக்கொண்டிருந்த பாத்திமா வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இத்தாவில் இருந்தாள். அடுப்படி வேலை என மற்ற எல்லாவற்றையும் நன்னிமா ஜாகிரா பாணு பார்த்துக்கொண்டாள். கலைக்கப்பட்ட கூட்டில் பிணைந்திருக்கும் இறகுகளின் கவிச்சிக்கு தீனியைத் தேடி ஊர்ந்துகொண்டிருந்த பாம்பு மரத்தின் வேர்களுக்குள் அடைந்து கொண்டது. வேர்களைப் பற்றிக்கொண்டு புளியமரத்தில் பாம்பு ஏறுவதற்கு தோதுவாக அதன் மரப்பட்டைகள் இருந்தன. காக்கைகள் அடைகாத்துக்கொண்டிருந்த கூட்டிற்கு அருகில் வந்து மரப்பொந்தில் புகுந்துகொண்ட நல்லபாம்பை காக்கைகள் கவனிக்கவில்லை. அதை கவனித்திருந்தால் இன்னும் எப்படியாக சத்தம் போடுமோ தெரியவில்லை. விசப் பையினை தலையில் சுமந்துகொண்டு ஊரும் பாம்பும் எதிர்வீட்டு அவதரமும் வேறு வேறு இல்லைதான்.

விருத்தாச்சலம் ஜமாத்தின் மூலமாக கஸ்தர் மற்றும் ஹஜரத்தின் உதவியோடு சவுதியில் இருக்கும் அல்லாப் பிச்சையின் பிணத்தினை கொண்டு வருவதற்கு கமாலுதீன்தான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.. அன்றைய இரவில் கோட்டான்கள் அடித் தொண்டையிலிருந்து கத்திக்கொண்டே இருந்தன. குடிக்காடு காடுகளில் அந்தியில் கத்திக்கொண்டிருக்கும் கோட்டான்கள் வழி தட்டுப்பட்டு வந்திருப்பதைப் போலதான்.  ”தெருக்குள்ள வந்து கத்துறத பாரு! எங்கயிருந்து வந்ததுன்னுத் தெதியிலப் போ” என கிழப்பாடிகள் வீசினார்கள். கோட்டான்களை கல்லெறிந்து துரத்திவிட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஊரும் காடும் கோட்டான்களுக்கும் மயில்களுக்கும் ஆனதுதான் என்பதை யாரும் தெரிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இரையினை தேடித் தின்பதில் கோட்டான்களும் மயில்களும் சம்மாகத்தான் இருக்கின்றன. இரண்டிற்கும் வயிற்றுப்பாடு. அவ்வளவுதான்.

ஒரு மாதத்திற்கு பிறகாக அன்றைய தினத்தில்தான் சவுதியிலிருந்து அல்லாப் பிச்சையின் பிணம் ஊருக்கு வருவதாக சேதியை தெரிந்துவிட்டிருந்தான் எதிர்வீட்டிலிருக்கும் அவதாரம். அவுதி அவுதியாக பங்காளித் தலைக்கட்டோடு சேர்ந்து கோவிலுக்கு படியினைக் கட்டியிருந்தான். கோவிலின் பெயர்கூட அவதாரம்தான். பாத்திமாவின் வீட்டிற்கு மூப்பாடி வந்திருந்தான். ”எம்மாவ்! நாளை ரவ்வுக்கு பஞ்சாயத்துக்கு வந்துடு! உம்மேல அவதாரம் படி கட்டியிருக்குறாரு!” என்று சொல்லிவிட்டுப் போனான். அல்லாப் பிச்சை இறந்து ஒருமாதம்தான் முடிந்திருந்தது. இத்தா அனுசரிக்கும் பாத்திமாவிற்கு எப்படி பஞ்சாயத்தில் போய் நிற்பது என்றுகூடத் தெரியவில்லை. அம்மா ஜாகிரா பாணு குணம் மனமாக பேச தெரியாதவள். கலீமா விடலையாக இருந்தாள். காலிப் பயலுகளின் இடக்குகளையே அவளால் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கிடந்தாள். முஸ்தபா கொஞ்சம் சுவாதீனம் இல்லாமல் இருந்தான். தங்கை பாத்திமாவை குடிக்காட்டில் இனி ஒத்தைக் குடியாக விட்டுவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார் கமாலுதீன். எங்கிருந்தோ வந்த முசீபத் அவளை பாம்பினைப்போல கழுத்தைச் சுற்றிக் கொண்டதாக கலங்கிப் போனான்.

பஞ்சாயத்துக்கான இரவு வந்திருந்தது. மூப்பாடி சின்னையன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டு, ”எம்மோவ்! எம்மோவ்!” என்றான். அன்றும் புளியமரத்திலிருந்த கோட்டான்களின் சத்தம் அதிகமாக கேட்டது. காக்கையின் குரல்கள் எங்கோ தொலைந்திருந்தன. அவதாரத்தின் மண்டபத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பஞ்சாயத்திற்கு எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அவதாரத்தின் பூர்வகுடியின் நிலம் தொடர்பாகவும் அல்லாப் பிச்சைக்கு சுடுகாட்டில் ஆறடி நிலம் ஒதுக்குவது சம்மந்தமாக பேசும் பஞ்சாயமாக இருந்தது.

”சாயபுங்களுக்கு நம்ம சுடுகாட்டுல எடங் குடுக்க கூடாது!”

”அவதாரத்தோட அப்பன், குடியிருக்கறத்துக்குதாங் நெலத்த தெருவுல கிரயமா செஞ்சி எழுதிக் குடுத்தாங்! செத்தா பொதங்கிறத்துக்கு சுடுகாட்டுல நெலத்த எழுதித் தரல!”

”செத்துப் போனவன இங்க பொதக்கக் கூடாது!”

”அப்புடி காட்டுலியோ, மலையிலியோ இழுத்துப் போடச் சொல்லு!”

என்று அவதாரத்திற்கு வேண்டப்பட்ட கொத்துக் குடிகள் அந்திக்கே வாயில் புளித்த கருவேலம் பட்டைத் தண்ணீரை ஊற்றிக்கொண்டு கிறக்கத்தில் பிதற்றினார்கள்.

சவுதியில் இறந்துபட்டிருக்கும் அல்லாப் பிச்சை, கிழவனுக்கு புகையிலைத் துண்டையும் காய்ந்த வெற்றிலை சருகையும் கொடுத்த நிலத்தினை தன் பெயரில் பட்டா செய்துகொண்டதாகத்தான் அவதாரம் படி கட்டியிருந்தான். மேற்கொண்டும் பாத்திமா குடித்தனமாக இருக்கும் அந்த மனையில்தான் அவதாரத்தின் குடிசாமியின் பதிவு இருப்பதாகவும் சொன்னான். ”நெலத்த மீட்கலன்னா அது சாமிக் குத்தமாயிடுங்” என்று விடாப்பிடியாக நின்றான். கோட்டான்களின் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. தன் நிலம் தன்னைவிட்டு போனதிலிருந்து தான் முன்னெடுக்கும் அத்தனை நல்ல காரியத்திலும் ஒரு சோரம் வந்து சேர்ந்துவிடுகிறது என்று அவதாரம் அங்கலாயித்தான். இந்த வருடம் தான் ஊர் தலைவருக்கு நிற்கப் போவதால் அதற்கு முன்னதாக தன்குடி நிலத்தினை மீட்டுவிடவேண்டும் என்பது அவனது மனவோட்டம்.

வெற்றிலைக்கும் துண்டு புகையிலைக்கும்தான் அவதாரத்தின் கொத்துக்குடி கிழவன் தன் நிலத்தினை அல்லாப் பிச்சையிடம் விட்டுக் கொடுத்தானா? அல்லது நிலம் சம்பாதிப்பதற்கென அல்லாப் பிச்சையின் வியர்வை நிலத்திற்கு சரிக்கு சமமாகப் போனதா என்பதையெல்லாம் சவுதியில் இருந்து இன்றிரவு கபண்துணியினை தனது உடம்பில் போர்த்திக்கொண்டு சந்தாக்கில் பிணமாக வரும் அல்லாப் பிச்சை வாயை திறந்தால்தான் தெரியும். பேசும் பிணத்திற்காக சிலர் குடிக்காட்டில் காத்துக்கொண்டிருந்தனர்.

பாத்திமாவை அவளது குடும்பத்தோடு குடிக்காட்டை விட்டு அனுப்பிவிட வேண்டும். பிறகு அவதாரம் அந்த இடத்தில் தன் குடிசாமி பதிவினை வைத்து கோவிலாக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். அவதாரத்தின் நினைப்பெல்லாம் அவனது வீட்டிற்கு முன்னதாக ஒரு துலுக்க குடும்பம் இருக்க கூடாது என்பதுதானே தவிர வேறென்றுமில்லை. மேற்கொண்டும் இன்றைக்கு கொளுத்திப் போடும் ஒற்றைச் சொல், என்றாவது ஒருக் கொத்தாக விளைந்து வரும் என்பதும் அவனது நம்பிக்கை. அவதாரத்தின் மண்ணில் வில்லும் அதன் சொல்லும்தான் விளைய வேண்டும். மேற்கொண்டும் சவுதியிலிருந்து வரும் அல்லாப் பிச்சையின் பிணம் குடிக்காட்டு மண்ணில் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவதாரம் குறியாக இருந்தான்.

பஞ்சாயம் தொடங்கிவிட்டிருந்தது. தருமகர்த்தா காரியஸ்தர்கள் என கோவில் மண்டபத்தில் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். பாத்திமாவை அழைப்பதற்கு இரண்டு முறை ஆள் விட்டிருந்தான் தருமகர்த்தா. பாத்திமா வரவில்லை. கடைக்கால் பக்கத்திலிருந்து ஆம்புலன்ஸ் சத்தம் மட்டும் கேட்டது. பிணத்தினை ஏற்றிக்கொண்டு வரும் சந்தாக் வண்டிதான் அது. திருச்சி வரை விமானத்தில் வந்த அல்லாப் பிச்சையின் பிணம், குடிக்காட்டிற்கு வந்திருந்தது. பிணத்தினை அனுப்பி வைத்த செலவை அல்லாப் பிச்சை வேலை செய்த முதலாளியே ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தான். நல்லவர்கள் நிலம் கடந்துகூட இருந்துவிடுகிறார்கள். தன் சவுதி முதலாளியிடம் தான் குடிக்காட்டில் வாங்கிய நிலத்தின் முகவரியினை கொடுத்திருந்தான் அல்லாப் பிச்சை. அதே முகவரிக்கு அல்லாப் பிச்சையினை சந்தாக்கில் ஏற்றி சரியாக அனுப்பி வைத்திருந்தான் சவுதி முதலாளி. சவுதியிலிருந்த பிணமாக வந்திருக்கும் அல்லாப் பிச்சையுடன் எந்த சொந்த பந்தங்களும் வரவில்லை. கமாலுதீனுகூட ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. அல்லாப் பிச்சையின் பிணம் தனக்கான முகவரியினை கண்டடைந்து தானே பயணப்பட்டு குடிக்காட்டுக்கு வந்திருக்கிறது. தான் பிழைத்துக் கிடந்த மண்ணில் தனக்கான கபூரை சவுதியிலிருந்தபடியே அல்லாப் பிச்சை திட்டமிட்டப்படி இருந்தது.

பிணம் தான் பயணப்படும் முகவரியை இப்படித்தான் எழுதி வைத்திருந்தது.

பெறுதல்,

சாமி

அவதாரம் கோவில்,

அவதார வில் மண்டபம்,

அவதாரத் தெரு,

குடிக்காடு பட்டிணம்

என்று அல்லாப் பிச்சை எப்படி தனது முகவரியினை இப்படியாக மாற்றம் செய்து கொடுத்தான் என்றுதான் தெரியவில்லை. எப்படி இது சாத்தியப்பட்டது என்றும் தெரியவில்லை. ‘ஒருவேளை அல்லாவிற்கு தெரிந்திருக்கலாம்!’ என அவதாரத்தின் கோவிலுக்கு அருகில் அல்லாப் பிச்சைக்கு வேணடப்பட்டவர்கள் இருந்தால் இப்படி சொல்லியிருக்கலாம். தன் குடும்பத்தாரைக் கடந்து தனது பிணம் சாமியின் கையில் ஏன் சேரவேண்டும் என்று நினைத்தான் என்றும் தெரியவில்லை. யார் தன்னை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அவனிடம் தன்னால் முடிந்த அன்பினை இப்படியாக காட்டும் விதமாக்கூட இது இருக்கலாம். மரணத்தின் பிறகாககூட அல்லாப் பிச்சை குடிக்காட்டில் இருக்கும் எல்லோர் தோள்களையும் கட்டியணைத்து முசாபா செய்திருக்கிறான் என்பதாகத்தான் இருந்தது. ஒருவகையில் இதுவும் முசாபாதான். குடிக்காட்டில் தான் மண்ணுக்குள் சென்ற பிறகும் அந்த மண்ணின் உடம்பினை ஆறத்தழுவி தான் முசாபா செய்யவேண்டும் என்தாகக்கூட இருக்கலாம்.

குடிக்காட்டின் மலைக்காட்டிலிருந்த அத்தனை கோட்டான்களும் அன்று அவதாரத்தின் கோவில் மாடத்திற்கு வந்திருந்தன. கோட்டான்களின் ‘கோகொலே’வென சத்தம். அப்படி ஒரு சத்தத்தினை கோட்டான்கள் எழுப்பியதை இதுவரை யாரும் கேட்டிருக்க முடியாது.

ரவ்வு பஞ்சாயம் பேச தொடங்கிவிட்டிருந்தார்கள். பாத்திமாவின் வீட்டிற்கு பின்புறமாக இருந்த புளியமரத்தில் ஒன்றிரண்டாக இருந்த கோட்டான்களும் அவற்றோடு சேர்ந்துகொண்டன. கோட்டான்கள் புளியமரத்தில் பாங்கு செய்தது குடிக்காட்டு காடுகளில் இருக்கும் மற்ற கோட்டான்களுக்கு பாங்கு செய்வதினைப்போல இருந்தது. ரவ்வு பஞ்சாயம் கூட அப்படித்தான். பிணத்தினை கொண்டுவந்திருந்த வெள்ளை உடுப்பு போட்டிருந்தவர்கள் அல்லாப் பிச்சையினை கூட்டமாக கூடியிருக்கும் அவதாரத்தின் கோவில் வில் மண்டபத்தில் வைத்தார்கள்.

”சாமி, யாரு பொணத்த யாரு வாங்கிக்கிறது?”

பிணத்தினை பெற்றுக்கொண்டமைக்கான கையெழுத்தினை போடுவதற்கு யாருமில்லை. பாத்திமாவை வீட்டிற்குப் போய் மூப்பாடி பார்த்தான். கலைத்துப் போடப்பட்ட காக்கையின் கூட்டு முட்கள் வாசல்படியெங்கும் சிதறி கிடந்தன. இத்தாவில் இருந்த பாத்திமா, ஜாகிரா பாணு, குழந்தைகள் என வீட்டில் யாருமில்லை. சாமிக்காக கோவில் மூப்பாடிதான் அல்லாப் பிச்சையினை பெற்றுக்கொண்டான். அவதாரம் சாட்சி கையெழுத்துப் போட்டான். பிணத்தினை கொண்டு வந்தவர்களிடம் யாரும் மறுப்புச் சொல்ல முடியவில்லை.

இந்த குடிக்காட்டு நிலத்தினை பெறுவதற்கு தனது உழைப்பினைக் கொடுத்து வருடத்திற்கு ஒருமுறை பாலைவன நிறத்தில் இருக்கும் தனது பணங்காசினைக் கொண்டு வரி கட்டியிருந்த அல்லாப் பிச்சைக்கு எல்லோரோடும் அமைதி கொள்வதற்கு குடிகாட்டில் ஒரு ஆறடி கபூர் உறுதி செய்யப்பட்டுவிட்டிருந்தது. அதற்கு அல்லாப் பிச்சை இறப்பு போராட்டம் நடந்த வேண்டியிருந்திருக்கிறது. பிணம் தான் எழுதி வைத்திருந்த சரியான முகவரியில் தன்னை சந்தாக்கில் கொண்டுபோய் சேர்ப்பித்துக்கொண்டது. அல்லாப் பிச்சையின் சவத்தினை கபூரில் நல்லடக்கம் செய்து அதற்கான உறுதிச் சான்றினை ஊர் மணியார், கணக்குபிள்ளை மூலமாக மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமாய் அதில் இருந்தது. தன் குடும்பத்தின் அடையாளமாக நிலம் சம்பாதித்த பாத்திமாவால் கூட அல்லாப் பிச்சைக்கு கபூரில் இத்தனை மரியாதையோடு நல்லடக்கம் செய்திருக்க முடியாதுதான். அதை நினைத்துப் பார்க்கையில்தான் இறந்துபட்டிருந்த தன் கணவன் அல்லாப் பிச்சையின் முகத்தினை பார்க்க முடியவில்லை என்பதைப் பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை. பாத்திமா அவனை அல்லாவிற்கு ஒப்புக் கொடுத்திருக்கிறாள். குடிக்காட்டின் கபூருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறாள். அல்லா பார்த்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.

அல்லாப் பிச்சைக்கு பிறகாக, பாத்திமா என்ற பெயருக்காக இன்னும் அவள் எத்தனை கூக்கரைகளை சந்திக்க வேண்டியிருக்கிறதோ? அவளது தலையில் போர்த்தப்பட்டிருந்த வெள்ளை முக்காடு காற்றுக்கு ஒரு கம்பத்தின் உச்சியில் பறக்கும் கொடியினைப் போல உதறிக் கொடுத்தது. ஜாகிரா பாணு, பேரப் பிள்ளைகள், பாத்திமா என டவுணு வண்டியில் அன்னவாசல் வந்து இறங்கினாள். விருத்தாசலத்திற்கு அழைத்துப் போகவில்லை. ”நல்லதோ கெட்டதோ தன் கணவன் அல்லாப் பிச்சையின் மண்ணோடு பொழச்சிக் கெடக்கணுங்!” என பாத்திமா கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த ஊருக்குதான் அழைத்துக்கொண்டு வந்தாள். அன்னவாசலை பல வருடங்களுக்குப் பிறகாகப் பார்க்கிறாள். பாத்திமாவின் பூர்வீக மண்ணை நோக்கி ஜாகிரா பாணுதான் அவர்களை முன்னத்தியாக அழைத்துச் சென்றாள். இடிந்து கிடந்த வீட்டைச் சுற்றிலும் பெருமரங்களாக நின்றுகொண்டிருந்த புளியமரங்கள் நின்றுகொண்டிருந்தன. துண்டிக்கப்பட்ட கோட்டான்களின் அலகுகளாலும் நகங்களாலும் கட்டப்பட்ட கூடுகளில் காக்கைகள் நிறைய முட்டைகளை விட்டு அடை காத்துக்கொண்டிருந்தன.  பாத்திமாவிற்கு ஒரு பரந்துபட்ட நிலத்தில் இரைத் தேடி கண்டடையும் ஒரு காடுதான் அன்னவாசல். உடம்பிற்கு ”ச்சோவென” அசதியாக வந்தது. தான் கடந்து வந்த திசையினைப் பார்த்தாள். வடக்கு பக்கமாக இருக்கும் குடிக்காட்டு சாமிக்கோவிலின் பக்கத்தில் இருக்கும் அல்லாப் பிச்சையின் கபூரிலிருந்து பெருங்கூட்டமாக கரையும் காக்கைகளின் சத்தம் ஒரு காபில் பெருநாள் தொழுகைக்கு பாத்திமாவை பாங்கிற்கு அழைப்பதைப் போலவே இருந்தது. அவளுக்கும் பயணம் புதிதல்ல!

-professorgm73@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button