சிறுகதைகள்

ஒரு மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

சிறுகதை | வாசகசாலை

வனிடமிருந்து அந்த  அழைப்பு வந்ததிலிருந்து சுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நின்று கொண்டே துள்ளினாள். ‘ம்ஹும். ..ம்ஹும்ம்’ வென ஏதோ பாடலொன்றை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்தாள்.  அவனிடம் தொலைபேசிக்கொண்டே நிலைக் கண்ணாடியில் ஒருமுறை முகத்தைச் சாடையாகப் பார்த்து வெக்கித்தாள். சேலை மாராக்கைச் சரிசெய்து கொண்டாள். அவன் தோள்களிலே சாய்வதாக நினைத்துக்கொண்டு செல்போனில் தலையை வைத்து இரண்டு கைகளையும்  கூட்டிப் பிசைந்தாள்.  ஒருகணம் வீட்டுக் கூறை உச்சந்தலையில் முட்டுமளவுக்கு  உயர்ந்து தாழ்ந்தாள்.

செல்போன் திரையில் ரகுவின் பெயரைப் பார்த்ததுமே அப்படியொரு பரபரப்பு அவளை வந்து தொற்றிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடத்திற்குள்ளாகவே முடிந்து விட்டிருந்த ஒரு உரையாடல் இத்தனை கிளர்ச்சி கொள்ளச் செய்யுமா என்ன?ஆம் செய்தது! வெறுமெனே …ம்… கொட்டுவதில் இப்படி ஒரு பரவசமா? ஆம்! என்றது அவளின் உள்ளுணர்வு!

‘சீ …சீ…அதெல்லாம் ஒன்றுமில்லையே, நான் நார்மலாதான் இருக்கேன், வேணும்னா பாரு…ஐம் நார்மல்! வெரி நார்மல். அப்ஸலூட்லி  நார்மல்!’, என்றது அவளின் இதழ்கள். ஆனால், சொல்லிவிட்டு ஏனோ கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். எங்கேயோ ஒரு மூலையில் தூசிபடிந்து கிடந்த அத்தனை வெட்கமும் ஓடி வந்து பீடித்துக்கொண்டது அவளை!

பொங்கி வந்த உணர்ச்சிகளைப் பெருவிரல் ரேகை வழியாக நோகாமல் நேர்த்தியாக ஒரு உரசல். எதிர்முனையில் மெல்லியதாக ஒலித்த அவனின்  துள்ளலான அதே குரல், வசீகரிக்கும் அவனின் சிரித்த முகத்தை அவளுக்கு நினைவூட்டியது. அடிவயிற்றில் சில்லென்ற ஒரு ஊறல். நுனிநாக்கைக் கடித்துக் கொண்டே வெளிச்சப் புன்னகையில் சொன்னாள் “ஹெல்லோ”.

அவளுக்கே கூடக் கேட்டிருக்குமோ தெரியாது. அத்தனை சன்னம். அவ்வளவுதான். அந்த ஒரு வார்த்தை தான். அந்த முழு உரையாடலில் அவள் பங்கு. அதற்கு மேலே வெவ்வேறு அர்த்தங்கள் பொதிந்த வெறும் “ம்”…”ம்”…”ம்”க்கள் மட்டுமே. சில வேளையில் மிக அரிதாக “ப்ச்”…என்று உதடு பிரித்தாள், புருவங்களைத்  தூக்கிய ஒரு அலட்சிய பாவத்தில்.  அது எதிர்முனையில் உதடு குவித்ததாக! பொருள் பட்டத்தை அறியாமல்!

சொச்ச நேரத்தை அவன்தான் நிறைத்தான். அந்த அரைநொடிக்குள் ஆயிரம் முறை சிரித்திருப்பாள். அவன் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான். இவள் உதட்டைக் கடித்தவாறே கழுத்தில் தொங்கிய சரடைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள். முன்பற்களால் கடித்துக் கொண்டிருந்தாள்.

‘ம்’ என்றபடி.

ஒரு நிமிடம் வரையில் கூட இல்லை. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் வெறும் முப்பதியெட்டு நொடிகள். அவ்வளவு தான்.

முடிந்துவிட்டிருந்தது உரையாடல். அதற்குள்தான் இந்தப் பெருவாழ்வு!

ரகுராமுக்கும் சுதாவுக்கும் ஒரே  நிறுவனத்தில் வேலை! அன்றைக்குச் சுதா ஏதோ உடல்நிலை காரணம் சொல்லி லீவ் எடுத்திருந்தாள். அதற்குமுன்னும் கூட இரண்டு நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. அவள் இல்லாதது ரகுவிற்கு ஏதோ போல் இருந்தது. வேலையும் ஓடவில்லை. மணிக்கு மூன்று முறை சீட்டை விட்டு எழுவான். ஐந்து நிமிடம் கழித்து வருவான் சல்லென்று வீசும் சிகரெட் வாசத்துடன்.  அவனுக்கு அவளின் காற்று நிரம்பிய வெற்று இருக்கையைப் பார்க்கத் தாளவில்லை. அதை நொடிக்கு நொடி பார்த்துப் பார்த்துத் தலையை உலுக்கிக்கொள்வான். அவள் வியர்வைக் கலந்து வீசும்  மைசூர் சாண்டல் சோப் மணம் எங்கோ தொலைந்துபோனதில் அவனுக்குப் பித்துப் பிடித்துவிடும் போல் இருந்தது.

‘என்ன ரகுராம் சார். உங்க ஆள் இன்னைக்கு வரல போல. ஆளு டள்ளா இருக்கீங்களே. நம்ம பையன விட்டு என்ன ஏதுன்னு பார்த்து வரச் சொல்லட்டுமா’ என்று கிண்டல் செய்தார்  பக்கத்து டேபிள் கிளர்க் ஒருவர் .

அவரை ஒரு முறை முறைத்துப் பார்த்து விட்டுப் பற்களைக் கடித்துக் கொண்டே அடுத்த சிகரெட்டுக்கு எழுந்து இருக்கைக்கு ஓய்வு கொடுத்தான்.

உடல்நிலை சரியில்லை என்று  லீவ் அப்ளிகேஷன் கொடுத்திருப்பதாக ஸ்டாப் கிளர்க் சொன்னது அவனைப் பெரிதும் வருத்தியது. மூன்று நாளாகத் தொடர்ச்சியாக ஓய்வு எடுக்கும் அளவுக்கு ஏதும் பெரிய அளவில் பிரச்சனையோ?  ஏதேனும் விபத்தில் சிக்கியிருப்பாளோ? வீட்டில் ஏதும் பிரச்சனையா? ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓடி கொண்டிருந்தன.

அவள் எண்ணைக் “கவிசுதா” என்று பதிந்திருந்தாலும் இதுவரையில் அவன் சுதாவிற்குச் செல் பேசியது கிடையாது. கால் பண்ணிப் பேசலாம்தான். ஆனால் தான் ஓவர் பொசசிவ்ன்ஸ் காட்டுவதாக அவள் ஏதும் தவறாக நினைத்துவிட்டால், தான் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வதாக அவளுக்குத் தோன்றிவிட்டால், இத்தனை நாள் தான் காட்டிவந்த கண்ணியம் குலைந்துவிடும்.. அவனுக்குள் ஏதோ உணர்ச்சி குழப்பம்.

நீண்ட ஒரு விவாதம் தனக்குள்ளே  நிகழ்த்தி முடித்துத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டுதான் செல் பேசியிருந்தான் ரகு. அவளும் எப்போதும் போலச் சாதாரனமாகப் பேசியது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ரகுராமுக்கும் சுதாவுக்கும்  சமீப கால  பழக்கம்தான்.  ஆனாலும் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. ஒரேமாதிரியான ரசனை இருந்தது. அதை நட்பென்றோ காதலென்றோ கொள்ளத் தேவையில்லை. அடைப்புக்குறிக்குள் அடங்காத ஏதோ ஒன்று இருவருக்கு ஊடாக நெளிந்து கொண்டிருந்தது அவர்களுக்கே தெரியாது.

பஜ்ஜி மடிக்கும் பேப்பரில் ஏதேனும் கவிதை வரிகளைக் கண்டுவிட்டால்  அவனால் தாங்கவே முடியாது. தன்னை மறந்து டீக்கடைக்காரனுடன் மல்லுக் கட்டும் அளவிற்கு கூடப் போய் விடுவான் ரகு. அவன் கவிதை காதலன்.  அவளோ கவிதாயினி! இருவருக்கும் நெருக்கம் உண்டாக இதுவே போதுமான காரணமாக இருந்தது.

ரகுவுக்குச் சுதாவைப்  பிடித்திருந்தது. அவளின் கறுத்த அகலமான முகம், அதில்  பெரியதாக  ஸ்டிக்கர்  பொட்டு. அதுவும்  புடவைக்கு ஏற்ற கலரில் . காதில் வழுக்கும் பச்சைக்கல் தோடு, அவள் புடவை கட்டும் நேர்த்தி. அலட்டலில்லாத அணுகுமுறை. அமைதியான அழகு எல்லாம் அவனைக் கவர்ந்திருந்தன.

ரகுவும் சிலப்பம் கவிதைகள் எழுதிப் பார்ப்பதுண்டு. ‘ஏன் உனக்கு இந்த வேலை ரகு’ என்று யாரேனும் கேட்டால், ‘தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருக்க முடியுமா என்ன? என்பான்.

அவன் எழுதுவதாக நினைத்துக் கொண்ட சில கிறுக்கல்கள் சிலவைகளுக்குச் சுதா மட்டுமே வாசகியும் விமர்சகரும். அதிர்ஷ்டவசமாக  ஒருமுறை ஏதோ ஒரு குப்பை வாராந்திர இதழில் வெளியான அவனின் முதல் கவிதையைப் பற்றி அவளிடம் பெருமையாகச் சொல்ல. ஆம்…நானும் வாசித்தேன் என்று மட்டுமே அவள் சொன்னது ரகுவுக்குப் பெருத்த ஏமாற்றமாகிப்போனது.

ரெண்டாவது கவிதையும் வெளியான மிதப்பில் தன்னைக் கவிஞன் என்று சொல்லிக்கொண்ட அவனை ஆபிஸில் வைத்தே நையப் புடைத்த அவளை,  எதுவுமே நடக்காதது போல மறுநாள் சந்திப்பில் சாதாரணமாக எதிர்கொண்ட விதமும், தான் அசிங்கப்பட்டத்தை வெளிக்காட்டாமல் எப்போது சந்தர்ப்பம் அமையும், எப்போது  பழி தீர்க்கலாம் என்று எண்ணமில்லாத  ரகுவின் நேர்மையும் அவளைக் கவர்ந்தன.  அந்த நிகழ்விற்குப் பிறகு அவனிடம் சொன்னாள், ‘ஐ ஸ்வேர், யூ ஆர் அ ஜென்டில்மேன் ரகு!’ அதற்கு, அவன் பல் தெரியாமல் புன்னகைத்தான். தனக்குத் தெரியும் என்பது போல.

இப்படியாகக் கவிதைதான்  அவர்களை இணைத்தது! அது என்ன மாதிரியான உறவு என்றெல்லாம் இன்னும் பெயர் சூட்டவில்லை. அட.. உறவென்ன உறவு. வெறும் கவிதைகள் பாட மட்டுமே  ஒரு ஆண் பெண் உறவு இங்குச் சாத்தியமில்லையா என்ன?

ம்!?

அதனால் அந்த உறவு முகிழ்ந்திருந்ததில் ஆச்சரியமொன்றில்லை. ஆனால் அதிர்ச்சி இருந்தது. அதிர்ச்சி ரகுராமுக்கும் சுதாவுக்கும் அல்ல! கணேசனுக்கு!

அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில் குறுக்கே, யாரது கணேசன்  அதிர்ச்சியடைவதற்கு!  இதில் யோசிக்க ஒன்றுமில்லை! கேள்விக்கு இடமில்லை! ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மட்டுமேதான் நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்பது  யார் செய்து வைத்த சட்டம்.

ம்!?

ஏன்? ஒரு பெண்ணுக்கும் இரண்டு ஆண்களுக்கும் நல்ல புரிதல் இருக்கக் கூடாதா?

ம்!?

கணேசன் ரகுவின் நண்பன் ஆகிப்போனான்!  ரகுவின் படுக்கையறை வரையில் கணேசன் நுழையுமளவுக்கு அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அதனால்  சுதாவுக்கும்  கணேசனுக்கும் கூட நல்ல புரிதல் இருக்கும்தானே?

ம்!?

செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டு  ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். ஒருமுறை சிரித்துக் கொண்டாள். தலைமுடியைக் கோதிவிட்டாள். ரெண்டு மூன்று மிடறு தண்ணீர் குடித்தாள். அவன் வந்து போகும் அந்தச் சொற்ப நேரத்தில் அடிவயிறு முட்டிவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையில் சிறுநீர் கழித்து விட்டு வந்தாள்.  கண்ணாடி முன்னே நின்று கொண்டு தன் தசைதிரட்சியைப்  பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கே கோவமாக இருந்தது. தனது வலதுகையை வைத்து  வயிற்று மடிப்பில் வருடினாள்! துவண்டு தொங்கிய மார்பகங்களைத் தூக்கித் தூக்கி நிலைநிறுத்த அது மீண்டும் அதே நிலையில் வந்து தொங்கியது. ஏமாற்றத்தில் பெருமூச்சு விட்டாள்!

குளிர்ந்திருந்தாள். ஆனாலும் மீண்டும் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவிவிட்டுக் கூடத்தில்  வந்தமர்ந்தாள். மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். அவனுடன் பேசி ஒருமணிநேரத்துக்கு மேலாகி விட்டதாக க் கடிகாரம் சொன்னது.

செல்போனை எடுத்துப் பார்த்தாள். யாரும் அவளுக்கு Whatsapp செய்திருக்கவில்லை. உச்சு கொட்டிக்கொண்டாள். Status வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் பார்வை வாசலில் இருந்தது. அவள் காதுகள் ரகுவின் பைக் சவுண்ட்க்கு ஏங்கிக் கொண்டிருந்தன.

ஆபிஸ்க்கு அரைநாள் பெர்மிசன் போட்டுவிட்டுத் தன்னைப் பார்க்க வருவதாகத் தான் அந்தச் செல்போன் அழைப்பில் சொல்லியிருந்தான் ரகு. அந்த அழைப்பில், அந்தச் செய்தி தான் அவளை இப்படி அலைகழித்தது.

தன் புத்தக அலமாரியிலிருந்து ஒரு கவிதைத் தொகுதியை எடுத்து மேசை மீது வைத்தாள். அவனுக்குக் கொடுக்க. மஞ்சள் நிற வாயில் புடவை உடுத்திக் கொண்டாள். தலையில் சூடிய மல்லிகையில் அந்த அறையே மணத்தது. நெற்றியில் வட்டமாகப் பெரிய பொட்டு.  எல்லாமும் அவன் ஒருவனுக்காக. ரகுவுக்காக! தன் கவிதை நாயகனை வரவேற்க!

வந்தவன் எதையும் பொருட்படுத்தவில்லை! சுதாவின் மீதான அவசரம் அவனை எதையும் கவனிக்கச் செய்யவில்லை. சுதா என்று கூப்பிட்டுகொண்டே வந்தவன், அவள் பரிசளித்த  கவிதையின் ஒரு பத்தியை மட்டும் வாசித்தான்! சுதாவை தீடீரெனத் தன்பக்கமாக இழுத்து அணைத்தான். அவளின் வறண்ட இதழ்களில் அழுத்தி முத்திட்டான். அவள் எந்த எதிர்ப்பும் காட்டாது குதிகால்களைத் தரையில் இருந்து லேசாக உயர்த்தி அவனை அனுமதித்தாள். இருவரும் இணைந்தனர். இசைத்தனர். மனித இளைப்புகளுக்கு நடுவே சில கவிதைகளும் புரண்டன..கட்டிலில்.

எந்தக் கவிதைகளையும், யார்  கவிதைகளையும் வாசிக்கும்போது உன்னுடன் வாழ்வதாகவே நினைத்துகொள்கிறேன் சுதா… உனக்கு எப்படி? என்றான் ரகு உச்சநிலையில்.

அவள் ஒன்றும்  சொல்லாது அவன் நெற்றியில் ஓங்கி முத்தமிட்டாள். பின்னர் ஓசையில்லாது சொன்னாள், “ம்!”.

பிரிந்தாள். எழுந்துகொண்டாள். பின் சிரித்தாள். அதை எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஒருமுறை ‘கவிக்கோவின் ஆலாபனையையும், பித்தனையையும் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்த ஏகாந்த வேளையில், அடித்து விடுவது  போல அவள் கண்ணையே உற்றுக் குறுகுறுத்துப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவனின் தவிப்பைப்  புரிந்துகொண்டவள், ‘ரகு உனக்கு எங்கயாவது பார்க்கணும்னா பார்த்துக்கோயேன். ஏன் இவ்ளோ கஷ்டபடுற, நீ உன்னையே கட்டுபடுத்திக் கொள்வது, நான் என்ன நினைப்பேன்னு உன்னையே மறைத்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது போல் இருக்கு. அதைத் தெரிந்துகொண்ட பின்னும் நான் அமைதியாக  இருப்பது உன் தூக்குக்கு நான் கயிறை இறுக்குவது போலப் படுது.  “பீ காஷுவல். நத்திங் வில் ஹாப்பேன். ஓகே’ என்றாள் சுதா சாவதானமாக.

அறைநிர்வான கோலத்தில் தேநீரை அவனுக்குப் பருகக் கொடுத்தாள் முகத்தில் எந்த சலனமின்றி. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

உள்ளுக்குள் சுதா மீதான பெருங்காமம் தகித்துக் கொண்டிருந்தாலும்  எப்பொழுதும் அதை அவன்  வெளிபடுத்தியதில்லை. ஆனால் இன்று அது தன்னையும் மீறிப் பொத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டது  குற்ற உணர்வாகிப்போனது அவனுக்கு. அவளை எதிர்கொள்ள முடியாது தவித்தான்.

நீ ஆபிஸ்க்கு மூணு நாளா வராதது என்னவோ போல இருந்தது எனக்கு.  உனக்கு மேலுக்கு எதும் வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்  சுதா. அதான் உடனே ஆபிசிலிருந்து கிளம்பினேன். உன்னை மிஸ் பண்ண இந்த  நாட்கள் பெரும் நரகமாக இருந்தது. அதனால் தான் அந்த பரவசத்தில் என்னை மறந்து…….

சுதா…சுதா…

“ம்!”

சாரி.  வேண்டும் என்றே நான் எதும்…..

“ம்”!

நான் பிளான் பண்ணி வரல…..

“ம்”!

என்னை மன்னித்துவிடு சுதா, கண்கள் கலங்கி நிற்க  ஒவ்வொரு வாக்கியமாக  விழுங்கி விழுங்கிச் சொல்லிக் குமுறிய அவனை வியர்த்துத் துளிர்த்த தன்மாரோடு சேர்த்து அணைத்துகொண்டாள் சுதா.

“ம்”, டீ கப்பை அவன் முன்னே நீட்டிக் குடி என்பது போல ஒரு செய்கை செய்தாள். அவள் கண்கள் துளிர்த்திருந்தன.

ரகு தேநீரை நிம்மதியாக லயித்துப் பருகினான்.

“நான் நெக்ஸ்ட் வீக் வந்து ஜாயின்ட் பண்ணிடுவேன் ரகு, டோன்ட் பீல். ஓகே. வில் மேக் குட் பிரண்ட்ஷிப். ஓகே. டேக் கேர்”, என்றாள்.

மீண்டும் பெரிதாகச் சொன்னாள் , “ம்ம்”.

கண்களைத் துடைத்துக்கொண்டு குளிக்கப்போனாள். ஆழ்ந்த குளியல் போட்டாள். காலையில் முணுமுணுத்த அதே பாடலைச் சத்தமாக வாய்விட்டுப் பாடினாள் . மனதுக்குப் பிடித்தமான புடவை ஒன்றைத் தெரிவு செய்து  கட்டிக்கொண்டாள். பெரிய பொட்டாக வைத்துகொண்டாள். விருப்பத்துடன் இரவு உணவு சமைத்தாள்.

வாசலில்  பைக் நிறுத்தும் ஓசை கேட்டதும் உணவு மேசையில் தலை சாய்த்துப் படுத்திருந்தவள் ஓடி வந்து கதவைத் திறந்தாள். “லவ் யூ டியர்” என்றபடி மனம் முழுக்கப் பொங்கும் காதலுடன் சிரித்த முகமாக வாசலில் நின்று கொண்டிருந்தான் சுதாவின் கணவன் கணேசன்.

“லவ் யூ மோர் டார்லிங் “, கணேசனை இறுகக் கட்டிக்கொண்டாள் சுதா.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button