`சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும்.
எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில் மனதுக்குள் வந்துவிடுவார். திருச்சிக்காரர். வெளிநாட்டில் ஒரு தென்னிந்திய முகத்தைப் பார்த்ததுமே, நமக்கு ஒரு சந்தோஷம் தொற்றிகொள்கிறது. அதிலும், இவர் பால்ய ஸ்நேகிதரைப் பார்த்தது போன்ற உற்சாகத்தைக் கொடுப்பார். அவர் தமிழ் உச்சரிப்பில் காற்று அதிகமாக வெளிப்பட்டு, அவர் அமெரிக்காவில் அதிக காலம் இருக்கிறார் என்று தெரியப்படுத்தும்.
அவரை தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ஓவியர் மருதுவின் கோட்டோவியம் ஒன்று உயிர்ப்புடன் உலாவுவது போல இருக்கும். அவரைப் பார்த்த முதல் நாள் எனக்கு அப்படித்தான் தோன்றியது. இங்கே ஆஜானுபாகுவான அமெரிக்கர்கள் மத்தியில், ஓல்லியான தேகத்தில் இடுங்கிய விழிகளுடன் சட்டென்று கவனத்தை ஈர்ப்பார்.
“சரியாக சாப்பிடுகிறீர்களா இல்லையா?” என்று கேட்டால்,
“உங்களுக்கு ஒன்று தெரியுமா? என் சிறிய வயதில் என் மாமா, ‘உன் தாயார் குழந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு தொப்புள் கொடியை வளர்த்துவிட்டாள். அதான் நீ இப்படி இருக்கிறாய்’ என்று கிண்டல் செய்வார். நான் எப்போதும் அப்படித்தான்” என்பார்.
தன் 22 வயதிலிருந்து இங்கு உழைத்துகொண்டும் ஊரில் உள்ள குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார். எப்போதோ ஒரு காலத்தில் தன் மாமா செய்துவிட்டுபோன ஓர் உதவிக்காக, அவரின் குடும்ப பாரத்தையும் இவரே தாங்குகிறார்.
இங்கே பல ஆண்கள் கண்களுக்குத் தெரியாத சுமையை ஏந்திக்கொண்டு அலைகிறார்கள். இலக்கை அடைய தவிக்கிறார்கள். வயதையும், இளமையையும் குடும்பத்துக்காக அர்ப்பணித்து, அவர்கள் தனக்கான வாழ்க்கைக்கு தயார் ஆகையில் நாற்பதை கடந்துவிடுகிறார்கள். சுகுமாரன் அண்ணனை நான் நடமாடும் அட்லஸ் என்றுதான் குறிப்பிடுவேன்.
அன்று என்னைப் பார்த்ததும், “உங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான விஷயம்” என்றார்.
புருவத்தை சுருக்கி, ‘என்ன?’ என்பது போல அவரைப் பார்த்தேன்.
“எனக்காக ஒரு பதினைந்து நிமிடங்கள் காத்திருக்க முடியுமா?” என்று வேலையைத் தொடர்ந்தபடியே கேட்டார்.
“காத்திருக்கிறேன்” என்று கூறி, என் சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். அது வேனிற் காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் இடைப்பட்ட செப்டம்பர் மாதம். இலைகள் நிறம் மாறத் துவங்கும் காலம். நாம் ஆட்டம் (autumn) என்று குறிப்பிடுவதை இங்கே ஃபால் (fall ) என்று குறிப்பிடுகிறார்கள். கண்ணெதிரே அழகாக இருந்த மேப்பிள் மரங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
மேப்பிள் மரங்களின் இலைகள் அவசரமாக நிறம் மாறும். சூழலுக்கு ஏற்ப சட்டென தன்னை மாற்றிகொள்வது போல. பச்சையிலிருந்து மஞ்சள், பின் ஆரஞ்சு, பிறகு சிவப்பு என வருடம் முழுதுமே கண்களுக்கு விருந்தளிக்கும். கடைசியாக மாறுவது ஓக். எளிதில் தன்னை விட்டுக் கொடுக்காது. ஓங்கி உயர்ந்து வளர்ந்த ஒரு வைராக்யவானை போல முடிந்த அளவு பச்சையத்தை விடாமல் இருக்கும். தனக்கான நேரம் வரும் வரை காத்திருக்கும். அதிலும், சில வகை ஓக் மரங்கள் அடர் பனியிலும் இலைகளை உதிர்க்காமல் தாக்குப்பிடிக்கும்.
“என்னுடைய வருங்கால மாமியாருக்காக நானே தயார்செய்திருக்கும் க்ரீட்டிங் கார்ட். எப்படி இருக்கிறது?”
குரல் வந்த திசை நோக்கி சட்டென திரும்பினேன். கார்டு ஒன்றை நீட்டியபடி நானி வந்து, பொத்தென்று அருகில் அமர்ந்தார். இந்த ஷாப்பிங் வளாகத்திலேயே உள்ள வால்க்ரீன்ஸ் பார்மசியில் பணிபுரியும் பெண். ஐரோப்பாவின் கிரேக்கத்தை பூர்விகமாக கொண்டவர். அவரின் அலங்காரமும், உச்சரிப்பும், உடல் மொழியுமே காட்டிவிடும் அவர் ஒரு முழு அமெரிக்ககாரியாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதென்று.
அழகான பூங்கொத்து ஒன்றை வரைந்திருந்தார்.
“நீல வண்ணப் பூக்கள் வரைந்ததற்கு ஏதேனும் தனித்த காரணம் உண்டா?”
“ஆம்! வானின் நிறமல்லவா? அது கருணையைக் குறிப்பது. பலனேதும் எதிர்பாராமல் அன்பை மட்டும் தரும் தாய்க்கு, நான் தரும் முதல் பரிசு. அதனால், நீல நிறத்தில் வடிவமைத்தேன்” என்று புன்னகைத்தார்.
அவருக்கு வயது சாதாரணமாக முப்பத்தைந்தை கடந்திருக்கும். இது உங்களின் முதல் திருமணமா என்று என் இந்திய மூளை இயல்பாய் யோசித்து, வாய் வரை வந்த கேள்வியை சட்டென்று விழுங்கிவிட்டு, “இவர்தான் உங்கள் வாழ்க்கை முழுக்க உங்களின் இணையாய் இருக்க போகிறவர் என எப்படி முடிவுசெய்தீர்கள்? சொல்லுங்களேன்” என்று கேட்டேன்.
அழகான சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, “சொல்கிறேன், அதற்கு முன் என் முதல் காதலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
———–
எங்கள் ஊர் கடல்பரப்பை ஒட்டிய ஒரு பிரதேசம். பெரு மழைக்காலம் ஒன்றில், ஊரெல்லாம் வெள்ளம் வந்து நாங்கள் ஒரு சர்ச்சில் தங்க வைக்கப்பட்டோம். பலமான புயல் காற்றும், மழையும் ஊரை புரட்டி போட்டுகொண்டிருந்தது. எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. அதாவது, “செருப்பு தைப்பவன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்” என்பது. எங்களைப் பார்த்து இவ்வாறு கூறும் சமூகமும், நாங்களும் அன்று ஆண்டவன் முன் மண்டியிட்டு, ஒரே இடத்தில் ஒண்டிக் கிடந்தோம்.
அன்றுதான் அவனை முதலில் பார்த்தேன். அவன் என்னையே பார்த்தவனாய் இருந்தான். அவன் கழுத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் திருப்பி, நண்பர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, கண்கள் மட்டும் என்னைவிட்டு அகலாமல் இருந்தன. நானும் அவனைக் கவனித்த அந்த நொடி, நேரே என்னிடம் வந்து பேச ஆரம்பித்தான்.
“சற்று நேரமாகவே உன்னைத்தான் கவனித்து கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்ப்பதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை” என்றான்.
எனக்கு என்ன கூறுவது எனத் தெரியவில்லை. நான் அதிர்ச்சி குறையாமல் அவன் பேசுவதைப் பார்த்துகொண்டிருந்தேன்.
“எது ஒன்றையும் அழகில்லாமல் உன்னால் செய்யவே முடியாதா?”
என்று கேட்டான்
நான் சிரித்துவிட்டேன்.
“அவ்வளவு அழகாகவா?” என்றேன்.
“அவ்வளவும் அழகாக” என்றான்.
அவனையும் அந்தக் கேள்வியையும் மிகவும் ரசித்தேன். அவன் பார்வையில் எப்போதும் ஒரு குறும்பு இருந்தது.
அன்று இரவு முழுக்க நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு பொழுதுகூட உறங்கவில்லை. இரவு முழுக்க கதைக்க அவனிடம் சுவாரஸ்யமான கதைகள் இருந்தன. அவன் பேசுவதற்காகவே பிறந்தவன் போல பேசுவான். அவனுடன் பேசும்போது ஏதோ மேகத் திரட்டில் மிதப்பது போல இருக்கும்.
அவனுடைய ஒரு வயதில், அவன் தன் வாயைக் கண்டுகொண்டானாம். பின், அவனுக்காக யாரையும் எதற்கும் பேச அனுமதித்ததில்லை என்று அவன் அம்மா கூறுவாராம்.
தூங்காத அந்த இரவு புத்துணர்ச்சியுடன் விடிந்தது. புயலுக்கு நன்றி சொல்ல எங்கள் இருவரால் மட்டும் முடிந்தது.
மழை சுத்தமாக விட்டிருந்தது அனைவரும் வீடு திரும்ப ஆயத்தமானோம். அவன் சட்டென்று என்னிடம் வந்து,
“உன்னை நான் நேசத்துடன் பார்த்துகொள்வேன். என்னுடனே என் வாழ்க்கை முழுக்க பயணிப்பாயா?” என்று கேட்டான். அவன் கேள்வி எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
“என் கேள்விக்கான பதில் உன் கண்களில் தெரிகிறது. இருந்தும் அதை வாய் மொழியாக கேட்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது” என்றான்.
எனக்கு அவனை அவ்வளவு பிடித்திருந்தது. இருந்தும், “உன் அவசரம் எனக்குப் பிடிக்கவில்லை” என்று மட்டும் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
அன்று மாலையே அவனைக் கடற்கரையில் சந்தித்தேன். வெள்ளை பூக்கள் கையில் ஏந்தி நின்றான்.
“என்ன இது?”
“உன் மனதை அறிய காடு மேடெல்லாம் சுற்றி திரிந்தபோது இதுதான் கிடைத்தது” என்றான்.
அடுத்த நாள் மஞ்சள் நிற பூக்களுடன் வந்தான்.
“உன்னைவிட அழகான ஒன்றை கண்டுபிடித்துவிடலாம் என்று இன்று முழுக்கச் சுற்றி திரிந்தேன். என்னால் அப்படி எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அழகான பூக்கள்கூட உன்னைப் பார்த்து தோற்றுபோய் சற்று நேரத்தில் வாடிவிடும் பார்க்கிறாயா?” எனக் கேட்டான்.
“வார்த்தைகளில் தேன் தடவி பேச எங்கே கற்றாய்?”
“உன் கண்களிடம்தான்.”
“என்ன? நான் கற்றுக்கொடுத்தேனா?”
“ஆமாம்! உன்னைப் பார்த்த பிறகுதான் இவ்வாறு பேச ஆரம்பித்திருக்கிறேன். அப்படியானால் இதைக் கற்றுக்கொடுத்தது உன் கண்கள்தானே.”
“நன்றாகப் பேசுகிறாய்.”
“ம்ம்… ஒரு சந்தர்ப்பம் மட்டும் கொடுத்து பார். உன்னை உள்ளங்கையில் தாங்கிகொள்வேன்.”
“நீ தாங்கிகொள்ள நான் ஒன்றும் அந்தப் பூவை போல மென்மையானவள் அல்ல.”
“ஆமாம். நீ பூ அல்ல புயலைப் போன்றவள். ஒரே இரவில் என்னை வாரி சுருட்டி, உன் இதயத்தில் அடைத்தவிட்டு சென்றுவிட்டாய் அல்லவா?”
“…………”
“ஏன் மெளனம்? என் மேல் சந்தேகமா?”
“ஆம்! ஒரு பெண்ணுக்கான முதல் தற்காப்பு கேடயமே சந்தேகம்தான். அதனால், சந்தேகம்கொள்வதில் தவறில்லை என்று என் அம்மா கூறுவார்.”
“அப்படியா? உன் கையில் உள்ள வாளின் மீதே உன் கேடயத்தை பயன்படுத்த தேவை இல்லை என்று உன் அம்மா சொல்லி தரவில்லையா?”
“உன்னிடம் பேசி ஜெயிக்க முடியாது.”
“அன்பால் ஜெயித்துவிடு.”
“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. நாம் சந்தித்து மூன்றே நாட்கள்தான் ஆகிறது.”
“என் மேல என்ன சந்தேகம்?”
“சந்தேகம்கொள்வதெல்லாம் அதிகமான அன்பை செலுத்துவதற்குதான் என்று புரிந்துகொள்.”
“என்ன சந்தேகம் என்று கூறு.”
“என் பாட்டியை விரும்பி மணந்த என் தாத்தா, ஆண் மகவு வேண்டி வேறொரு பெண்ணை” என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, அவன் என் வாயைப் பொத்தினான்.
“சரி, நமக்கு குழந்தையே வேண்டாம். உன்னையே நான் காலம் முழுவதும் குழந்தை போல பார்த்துகொள்கிறேன். போதுமா?”
“என்ன குழந்தை வேண்டாமா? குழந்தை வேண்டாம் என்று கூறுகிறவனை திருமணம் செய்து நான் என்ன செய்ய?”
இருவரும் பலமாகச் சிரித்தோம்.
“என்னை என்னதான் செய்ய சொல்கிறாய்?” என்றான்.
“சலித்துக்கொள்ளாதே , என்னை சகித்துக்கொள். இன்று காதலிக்க அன்பு மட்டுமே போதும். இன்னும் வருடங்கள் போன பிறகு சகித்துக்கொண்டால் மட்டுமே காதலிக்க முடியும்.”
“இதுவும் உன் அம்மாதான் கூறினாரா?”
“இல்லை, ஈரோஸ் (கிரேக்கத்தின் காதல் கடவுள்). என்னைச் சகித்துக் கொள்வதென்றால் என் பின்னால் வா, இல்லையேல் இப்போதே இதை நிறுத்திகொள்வோம்.”
“உன்னுடைய இந்த திமிர்தான் உன்னை விடாமல் துரத்தி வர வைக்கிறது. நீதான் வேண்டும் என என்னை எண்ண வைக்கிறது. ஏங்க வைக்கிறது. உண்மையில் இந்த ஏக்கம்தான் என்னைத் தினமும் வாழ வைக்கிறது.”
மறுநாள் அவனுக்காக அதே இடத்தில் காத்திருந்தேன். அவன் வரவில்லை. மனதை ஏதோ செய்தது.
அதற்கு அடுத்த நாளும் அவன் வரவில்லை. இந்தப் பிரிவு என் மனம் அவனிடம் எந்த அளவு ஈர்க்கப்பட்டுவிட்டது என்று எனக்குத் தெளிவாகக் காட்டியது. மூன்றாம் நாள் அவன் வந்தான். எனக்குப் பிடித்த மீன் வகை உணவு ஒன்றை வாங்கிக்கொண்டு, என்னைக் காண வந்தான்.
அவன் வந்தவுடன் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன்.
“ஏன் இரண்டு நாட்கள் என்னை பார்க்க வரவில்லை?”
“நீதானே அவகாசம் கேட்டாய்?”
“அவகாசம்தானே கேட்டேன். என்னைப் பார்க்க வராதே என்று கூறவில்லையே?”
முதன்முறையாக அவன் மெளனமாக நின்றான்.
அவனை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நெஞ்சில் நிறுத்தி, செய்கையைக் கொஞ்சம் தள்ளிபோட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன் .
நாட்கள் அழகாக நகர்ந்தன.
அன்று நாங்கள் வழக்கமாக காபி அருந்தும் உணவகத்துக்கு சென்றோம். ஏனோ கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அவன் எங்களுக்கான இரு காப்பி கோப்பைகளையும் கையில் ஏந்தியபடி வந்துகொண்டிருந்தான். அதைக் கவனிக்காமல் வேகமாக உள்ளே நுழைந்த ஒருவன், எதிர்பாராமல் மோதியதில் சூடான காபி அவன் மேலெங்கும் சிந்திவிட்டது.
எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு கோவம் வந்ததோ. சட்டென எங்கள் இனத்தின் பெயரை குறிப்பிட்டு, ஒரு தடித்த வார்த்தையைக் கூறி, அதில் பிறந்த மூடனே என்று திட்டி, அவனை அடிக்க கை ஓங்கினான். விறகிலிருந்து கங்கு ஒன்று மேலே விழுந்துவிட்டது போன்ற கணம் அது. அவனைச் சுற்றி இருந்தவர்கள் அவனைத் தடுத்த சமயம், நான் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்திருந்தேன்.
நான் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அவனுடைய வார்த்தைகள் துரத்திக்கொண்டே இருந்தது. காதுகளில் விடாமல் ஒலித்தது. சொற்களின் உஷ்ணம் உடலெங்கும் பரவி பற்றி எரிவது போல இருந்தது. நான் வீட்டுக்கு வந்து தாழிட்டு கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்தேன்.
எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும்போது, என் தந்தை நிறைய நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பெரும்பாலும் கிரேக்கத்தின் பழமையான கதைகளை எடுத்து நடிப்பார். சில சமயங்களில் அரசியல் போக்கினை எதிர்க்கும் வகையில் நாடகங்கள் இயற்றுவார். நாடகம் முடிந்து நடு நிசியில் அதே வேஷத்தில் வருவார்.
அப்பாவை அதிகமாக ஒரு மன்னராகத்தான் நான் பார்த்திருக்கிறேன். என் கனவில்கூட அவர் அந்த தோற்றத்தில்தான் வருவார். ஒருமுறை அவரை போலீஸ் பிடிக்க வரும் செய்தி அறிந்து, வீட்டுக்கு வந்து என்னையும் என் அம்மாவையும் கட்டிலுக்கு கீழே ஒளிந்திருக்க செய்தார். அடுத்த நிமிடமே வீட்டுக்குள் நுழைந்த போலீஸ், அவரை அடித்து இழுத்து சென்றது. அம்மா என் வாயைப் பொத்திக்கொண்டார். அப்போது என் அம்மா ஒன்றை கூறினார்.
“நானி, உன்னால் மன்னிக்க முடியாத ஒன்றை என்றுமே மன்னித்துவிடாதே.”
சத்தமே எழுப்பாமல் அவ்வளவு அழுதேன்.
அதன்பிறகு அப்படியோர் அழுகை அன்றுதான் அழுதேன். இதை என்றுமே என்னால் மன்னிக்க இயலாது.
அன்று ஒரு விஷயம் எனக்குத் தெளிவாக விளங்கியது. இந்த உணர்வு இவர்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் விஷம். அந்த விஷம் சமயத்தில் அவர்களே அறியாதது. உமிழும் வரை அது வெளியே தெரிவதில்லை. ஆனால், அனைவருக்குள்ளும் அந்தக் கொடுக்கு தக்க சமயத்துக்காக காத்திருக்கிறது. எங்களை எதிர்நோக்கி பதுங்கி இருக்கிறது என்று கூறி நிறுத்தினார்.
————-
“எனக்கு ஒரு காபி தேவைப்படுகிறது. உங்களுக்கும் சேர்த்து எடுத்து வரவா?” என்று கேட்டார். அவர் கண்களும் முகமும் சொல்லொண்ணா துயரை கடத்திய வலியைச் சுமந்து நின்றது.
“எனக்கு வேண்டாம்” என்றதும் உள்ளே சென்று ஒரு காபி கோப்பையுடன் வந்தார்.
எனக்கு அந்த விஷமும் கொடுக்கும் மனதை என்னவோ செய்துகொண்டே இருந்தது. அது எனக்குள்ளும் பதுங்கியிருக்குமோ என்று சிந்திப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை.
ஆழ்ந்த பெருமூச்சொன்றின் பிறகு தொடர்ந்தார்.
பிறகு நான் என் சித்தி மூலமாக இங்கே வந்தேன். அவர் வேலை பார்க்கும் சூப்பர் மார்க்கெட்டில் எனக்கும் வேலை வாங்கிதந்தார். நான் இங்கே வந்தபோது அது வசந்த காலம். பூக்கள் பூத்து என்னை வரவேற்றது போல இருந்தது. முந்தைய ஜென்மத்தின் ஞாபகத்துடனே அடுத்த ஜென்மமெடுத்தது போல உணர்ந்தேன்.
சித்தியைத் தவிர எனக்கு யாரையும் தெரியாது. மொழி தெரியாது என்றாலும், இது ஓர் அந்நிய தேசமாகபபடவில்லை.
அடர்பனி காலத்தில் நான்கு சுவருக்குள் அடைப்பட்டு கிடந்தபோதுகூட என்னால் ஒரு சுதந்திரத்தை உணரமுடிந்தது. நான் இங்கே வந்த இரண்டாவது வாரத்தில், ஒருநாள் குப்பைகளை எல்லாம் குப்பை தொட்டியில் கொட்டிக்கொண்டிருந்தபோது ஒரு துப்புரவுத் தொழிலாளி என்னைத் திட்டியபடியே அருகில் வந்தார். அவர் என்ன கூறுகிறார் எனப் புரியவில்லை. ஆனால் திட்டுகிறார் என்பது மட்டும் விளங்கியது. பிறகு சித்தி சொல்லித்தான் இங்கே மக்காத குப்பைகளை பிரித்துக்கொட்ட வேண்டும் எனத் தெரிந்துகொண்டேன். அன்று நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இந்த ஊர் எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. அவர் எவ்வளவு கம்பீரமாக என்னைக் கடிந்துகொண்டார். அன்றுதான் நான் முடிவு எடுத்தேன். இனி இதுதான் நான் வாழப்போகும் ஊர் என்று.
கடனை எல்லாம் அடைத்து அம்மாவை நான் இங்கே அழைத்துக்கொள்ள ஐந்து ஆண்டுகள் ஆனது.
அம்மா வந்தபின் ஒரு நாள் நாங்கள் வழக்கமாக காபி அருந்தும் உணவகத்துக்கு இரவு சற்று தாமதமாக சென்றோம். அங்கே காபி போடும் வயதான பெண்மணிக்கு ஒருவர் ஊட்டி விட்டுக்கொண்டிருந்தார்.
“உங்கள் மகனா இவர்?” என்ற என் கேள்விக்கு இருவரும் புன்னகைத்து கொண்டார்கள்.
“இவர் என் மகன் அல்ல தாய்” என்றார்.
வேனிற் காலத்தில் அந்த அம்மாள் அவருக்கு சமைத்துகொடுக்கிறார். பனி பொழியும் காலங்களில் அந்த அம்மாவின் மூட்டுகள் ஒத்துழைக்காததால், இவரே சமைத்து ஊட்டிவிடுகிறார். அந்தக் காட்சி எனக்குள் ஒரு புகைப்படத்தை போல தங்கிவிட்டது.
அதன்பிறகு அவரைச் சந்தித்த பொழுதுகளில் வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ்கிறார் என அறிந்தேன். உலகை அவரின் கண்கொண்டு பார்ப்பது அவ்வளவு பிடித்தது எனக்கு.
“அவரிடத்தில் அந்தக் கொடுக்கு இல்லை என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?”
வாய்விட்டு சிரித்துவிட்டு, “அவரும் ஒரு கொடுக்கால் துரத்தப்பட்டவர்தான். அவரிடத்தில் விஷம் இல்லை.. வடுக்கள்தான் இருக்கிறது. ஒரு சொல்தான் எங்களை துரத்தி அடித்திருக்கிறது.
ஒரு சொல்தான் எங்களை கண்டத்தைவிட்டே வெளியேற்றி இருக்கிறது. அந்த ஒரு சொல்தான் வசந்தத்தின் வாயிற் கதவை எங்களுக்குத் திறந்து விட்டிருக்கிறது. எங்களை ஒரு புள்ளியில் இணைத்தது அந்த ஒற்றை சொல்தான். என்னால் அன்று ஒரு புயலுக்கு நன்றி சொல்ல முடிந்தது போல இன்று அந்தச் சொல்லுக்கும் நன்றி சொல்ல முடிகிறது.
நாங்கள் அடுத்த மாதம் இங்கிருக்கும் பள்ளி ஒன்றில் திருமணம் முடிக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் உங்களை அழைப்பிதழுடன் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு, தன் பணியைத் தொடர சென்றுவிட்டார்.
ஓக் மரங்களிலிருந்து தென்றல் காற்று, இதமாக வருடிக்கொண்டு போனது.
“மன்னித்துகொள்ளுங்கள்.. நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன்” என்றபடி சுகுமாரன் அண்ணா வந்தார். அவர் கைகளில் இருந்த அழைப்பிதழை என்னிடம் காண்பித்தார். அடுத்த மாதம் இங்கிருக்கும் பள்ளி ஒன்றில் திருமணம் முடிக்க முடிவெடுத்துள்ளேன். என் தங்கையாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றார். மணப்பெண் பெயர் நானி என்றிருந்தது.
என் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்துகொண்டிருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு தந்துவிட்டதாலேயே, இந்த திருமண அழைப்பிதழுக்கு அவ்வளவு அர்த்தம் வந்துவிட்டிருந்தது.
அருமையான நினைவுகள் ♥️