![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/madhan-ramalingam-780x470.jpg)
காடு கரைகளில் பொழுதுக்கும் உழைத்த சனம் சாயந்தரம் சுடுதண்ணி வைத்து குளித்து உண்டு முடித்து அக்கடாவென தலைசாய்க்கையில் ஊரின் தென்கிழக்கு மூலையிலிருந்து சண்டைச் சத்தம் கேட்டது. சத்தம் புதிதாக இருந்தால் என்ன ஏதெனப் போய் பார்க்கத் தோணும். வழக்கமாக நடப்பதுதானே என்று அவரவர் தத்தமது வேலையைச் செய்துகொண்டிருந்தனர். அன்றைய நாளின் வேலை செய்த சலிப்பு. அடுத்த நாளைக்கு வேலை செய்ய ஓய்வென நேரமே படுக்கப் போய்விடுவார்கள். எட்டு, எட்டரைக்கே ஊர் அடங்கிவிடும். ஊர் அமைதியாக இருப்பதால் என்ன சண்டை என்று தெளிவாகக் கேட்கும்.
படுக்கப் போவதற்கு முன்னால் அருக்காணி நாயிக்கு சோறு போட வந்தாள். சோத்தை கரைத்துக் கொண்டே, ‘’த்துவோ த்துவோ’’வென கத்தினாள். சின்னப்பன் வீட்டு கிழுவை வேலிக்குள்ளிருந்து ஓடி வந்த நாய் வாலை ஆட்டியபடியே குமைந்து செல்லம் கொஞ்சி கத்தியது. சோத்துப் போசியை நாய் வட்டலில் கவிழ்த்து விட்டு நிமிர்ந்த அருக்காணி எதிர் வீட்டில் வட்டச் சொம்பு விளக்கிக் கொண்டிருந்த பாப்பாத்தியைப் பார்த்தாள். பார்த்துவிட்டு பேசாமல் போனால் ஏதாவது நினைத்துக் கொள்வாள் என்று பேசினாள்.
‘’பாப்பாத்தி எங்க வேலை’’
‘’நரிக்காட்டு சம்பண்ணனுது மஞ்சக்காடு பில்லு புடுங்கறதுங்க அக்கா ‘’
‘’எங்க மண்திட்டுக் கட்டுலயா’’
‘’இல்லைங்கா துத்தீக்காட்டுல ‘’
‘’இதென்ன பழனியப்பம் ஊட்டுல இன்னைக்கும் சண்டையாட்டம் இருக்குதா?’’
‘’அவுங்ளுக்கு சண்டைக்கா பஞ்சம். வரப்புல நடந்தா மண்ணு சருஞ்சு உழுந்துருச்சுன்னு ஒருநா சண்டை. பொலி வரப்ப சேத்தி அரக்கீட்டான்னு சண்டை. இப்படி அண்ணனும், தம்பியும் சண்டை போடறது பத்தாதுன்னு இப்ப அப்பனும், மகனும் வேற சண்டை போட்டுக்கறாங்க என்னத்தச் சொல்ல?’’ ஒரே மூச்சில் அங்கலாய்த்தாள் பாப்பாத்தி.
‘’அட எழவே. அவுங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் சண்டையமா?’’ வார்த்தையில் கொக்கி போட்டுப் பிடித்தாள் அருக்காணி. பாப்பாத்தி ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினால் விலாவாரியாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவாள். சுற்றுப்புறம் ஆள் நடமாட்டம் இல்லையென்றால் சம்பவம் நடந்த இடத்தில் என்ன நடந்ததோ அதே போல அப்படியே நடித்தும் காண்பிப்பாள். அருக்காணி துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள். பாப்பாத்தி மாவரைக்கும் திருணையில் உட்கார்ந்தாள்.
பாப்பாத்தி சொல்லப் போகும் அந்தச் சம்பவம் சென்ற வாரத்தில் நடந்ததுதான் என்று தெரியும். அதைப்பற்றி அரசல் புரசலாக. ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அதைப்பற்றி விளக்கமாக யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்திருந்தாள் அருக்காணி. பாப்பாத்தியும், அருக்காணிம் பக்கத்து, பக்கத்து வீடு என்றாலும் வேலை செய்வது அருக்காணி வடக்கு வளுவு செட்டுடன், பாப்பாத்தி தெற்கு வளவு செட்டுடன். இரண்டு செட்டுகளும் ஊரின் இரண்டு பக்கமாகப் பிரிந்து வேலைக்குப் போவார்கள். இங்கும், அங்கும் நடக்கும் சம்பவங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அப்படி தெற்குப் புறம் வேலைக்குப் போகும் பாப்பாத்திக்கு அந்தப் பக்கம் நடக்கும் விசயங்கள் எல்லாம் தெரியும்.
பாப்பாத்தியிடம் விசயங்களைக் கேட்டுக் கொண்டு போனால் நாளை வேலைக் காட்டில் வேலை செய்யும் போது சொல்லலாம். கொஞ்சநேரம் நாம் சொல்வதைக் காது கொடுத்து எல்லோரும் கேட்பார்கள். அந்தப் பேச்சு வளர்ந்து எங்கெங்கோ சுற்றி வரும். சொல்லப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விகள் கேட்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு விசயங்களைச் சொன்னவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒரு நாள் முழுக்க வேலைக் காட்டில் பேச்சாகக் கிடக்கும். காட்டில் சொல்லப் பட்ட சம்பவங்களும், கேள்விகளுக்கான பதில்களும் சேர்ந்து அப்போடு கலந்த உப்பைப் போல பெரிய விசயங்களாக ஊர் முழுக்கப் பேசப்படும். ஊர் முழுக்க வலம் வரும் அந்தப் பேச்சு சொன்ன அருக்காணிக்கே ஒரு நாள் திரும்ப வந்து சேரும். ஆனால், சொன்ன விசயம் கை, கால் முளைத்து பூதாகரமாக வந்து நிற்கும்.
அருக்காணிக்கு இதெல்லாம் நம்ம சொன்னதாவென ஆச்சரியமாக இருக்கும். இருந்தாலும், அதையெல்லாம் கட்டிக்கொள்ளாமல் ‘’இதெல்லாம் எப்பவோ வேலக்கட்டுல நாஞ்சொன்னது’’ என்று வேய்க்கானம் பேசுவாள். குசலம் பேச வந்த பெண்ணோ, ‘’அடேங்கப்பா, அருக்காணி எங்ககூடத்தான் வேலைக்கு வாரே, போரே இதெல்லாம் எங்க எப்ப தெரிஞ்சுக்குவே’’ அதற்கு பதிலேதும் சொல்லாமல் பூடகமாக சிரித்து வைப்பாள் அருக்காணி.
நாளைக்கு ஊரே பேசும் நாயம் ஒன்றை பாப்பாத்தியிடமிருந்து கேட்கும் ஆவலில் இருந்தாள் அருக்காணி. கோழித் தலையைத் திருகுவது போல புகையிலையைத் திருகி உதடு குவித்து ஊதி வாயில் போட்டு, ஒரு சுழற்று சுழற்றி வலது பக்கக் கடைவாயில் ஒதுக்கிவைத்தாள் பாப்பாத்தி. ஒரு செருமல் போட்டு உடலை லேசாகச் சிலிப்பிக் கொண்டாள். உதட்டில் இருவிரல்களை வைத்து எச்சிலைப் பீய்ச்சி விட்டு, காறித்துப்பினாள். இந்த செய்கை எல்லாம் பாப்பாத்தியிடம் அருக்காணி முன்பே பார்த்ததுதான். இப்படி ஆயத்தமானால் இன்னும் ஒரு மணி நேரத்திரக்கு ‘’ஊம்’’ கொட்டிக்கொண்டிருந்தால் மட்டும் போதும். கேட்பதற்கு ஆவலாக பாப்பாத்தியையே இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் அருக்காணி.
பாப்பாத்தி சொல்ல ஆரம்பித்தாள். ‘’இந்த பழனியப்பன் மவன் முருகேசன் இருக்கானல்லோ, அவ வேலைக்குப் போன எடத்துல ஒரு புள்ளையா விரும்பிக் கட்டிக்கிட்டானல்லோ, அவ கொஞ்சம் வசதியான எட்டத்துப் புள்ள. எப்படியோ பெரியவங்க பேசி கல்யாணமும் முடிவச்சு. முருகேச சம்பரிச்சதெல்லாம் அவுங்க ஆயக்காரி கிட்ட குடுத்து வச்சு இருந்திருப்பாம் போல, அவிய ஆயாகக்காரி சேத்தி வச்ச காசெல்லாம் அவ புள்ளைக்கி நோம்பி, நொடின்னா கொண்டுபோயி குடுத்துட்டு வந்து இருக்கறா, அவனுக்கு கல்யாணாம்னு வரும்போது நம்ம இத்தன நாளா சம்பாரிச்சு குடுத்த வச்ச காசு இருக்கும்னு அப்பா, ஆயாகிட்ட கேட்டிருக்கிறான், என்னத்தச் சம்பரிச்சுக் குடுத்தே எல்லாம் செலவாப் போச்சுன்னு சொல்லீட்டாங்கலாம். மனசு ஒடஞ்சு பேயிருக்காது அந்தப் பையனுக்கு. நாயாப் பேயா ஓடி ஓடி சம்பாரிச்சது. ஒத்தப் பைசாகூட இல்லைன்னா எப்படி இருக்கும்.”
“காசு கேட்ட அன்னைக்கே அப்பனுக்கும், மாவனுக்கும் பெரிய சண்டையாமா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கறப்ப ஒவ்வொரு காசா எப்படி சேத்தரதுன்னு மாய்மாலப் பட்டுப் போயிட்டான் முருகேசன். பழனியப்பனும் அவம் பொண்ணாட்டியும் சும்மா இருக்கல பொண்ணு வீட்டுல போயி இந்தக் கல்யாணத்துல எங்களுக்கு சம்மதம் இல்ல; அதையும் மீறிக்குடுத்தீங்கண்ணா அதுக்கு நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லீட்டு வந்திருக்காங்க. ‘’
‘’அடப் பாத்தியா அக்கிருமத்த.. பெத்த புள்ளைக்கே இப்படி வெனையமாப் போயி நிப்பாங்ககளா? ஆனாலும் பழனியப்பனும், தேவனாத்தாளும் பண்ணுனது அடுக்கவே அடுக்காது ஆத்தா’’என்றாள் அருக்காணி.
பூத்த நெருப்பில் பன்னாடையை வைத்து ஊதும்போது சடடசடவென தீ பற்றிக்கொள்வதைப்போல பாப்பாத்தி சொல்லத் தொடங்கினாள்.
‘’இது என்ன அக்கிருமம்.. இதுக்கு மேல பண்ணுனதுதான் அக்கிருமம். கல்யாணத்துக்கு முக்கியமா வந்து சீர் முறை செய்யிறவுங்க யாரு?’’
‘’இணைச்சீருக்கு கூடப் பொறந்தவ, முகூர்த்தக்கால் போட, மாலை எடுத்துக் கொடுக்க தாய்மாமன், முன்னாடி நின்னு வரவேற்கறதுல இருந்து பந்தி பரிமாறரது வரைக்கும் பங்காளிக எல்லாம்தானே வரணும்.’’
‘’ஆ.. இந்த முறை செய்யிறவுக கிட்டையெல்லாம் போயி இந்த மாதிரி எம்பையன் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது. எந்த முறையும் செய்யக்கூடாதுன்னு போயி சொல்லீட்டு வந்திருக்காங்கன்னாப் பத்துக்க.’’
‘’அடப் பேரழவே. ஆமா பாப்பாத்தி, எனக்கொரு சந்தேகம் இவிய ரெண்டு பேரும் எதுக்கு பெத்த பையனுக்கு சூனியம் வைக்கிறாப்பிடி ஏ இப்படி திரியறாங்க.’’ – அருக்காணி கேட்டாள்.
நாளைக்கு வேலைக்காட்டில் யாராவது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாள் என்ன பதில் சொல்வது என்கிற முன் யோசனை.
பாப்பாத்தி எந்த விஷயத்தைச் சொன்னாலும், அந்த விசாயத்தில் இடைமறித்து கேள்வி கேட்டால், லாவகமாக பதில் சொல்லிவிட்டு கச்சிதமாக விட்ட இடத்திலிருந்து சொல்லும் சாமர்த்தியம் கொண்டவள் என்பது அருக்காணிக்குத் தெரியும்.
‘’இதென்னக்கா தெரியாத மாதிரி கேக்கறீங்க. முருகேசன் நல்லா சம்பத்திக்கிற பையன். அவன் தங்கச்சியக் கட்டிக் கொடுத்த இடத்துல அப்படி ஒண்ணும் வசதி இல்ல, தங்கச்சி மாப்பிள்ளையும் அப்படி ஒண்ணும் சுடியான ஆள் கிடையாது. அவ அம்மக்காரிதான் முருகேசன் குடுக்கார காசெல்லாம் சேத்து அவங்க செலவுக்கு கொண்டுபோயிக் கொடுத்துட்டு வருவா. அவியலுக்கு புள்ள நல்லாப் பொழைக்கணும். பையன் நம்ம சொல்லறதக் கேட்டு நடந்துக்கணும் அவ்வளவுதான்.’’
‘’முருகேசனுக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வைக்கவணும்னு நெனப்பெ இல்லையா?’’
‘’ஏ இல்லாம, தேவனாத்தாளேட அண்ணம் பொண்ணு ஒண்ணு இருக்குது. அது மங்குதுரு மாதிரி எதச்சொன்னாலும் தலையாட்டும். அத இவன் தலையில கட்டி வச்சிட்டா எல்லாம் நம்ம கைக்குள்ள இருக்கும்னு இவங்க நெனப்பு. அதையெல்லாம் மீறி கல்யாணம் பண்ணுணா விடுவாங்களா அதையும் மீறி முருகேசன் அவுங்க, இவுங்க காலப்புடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.’’
‘’கல்யாணத்துக்கு அவங்க ரெண்டு பேரும் வந்தாங்களா?’’
‘’எங்க வந்தாங்க.. மொத நாளே புள்ளை ஊட்டுல போயி குக்கிக்கிட்டாங்க. பங்காளிக நாலு ஊட்டுச்சனம்தான் அவனுக்கு ஆதரவா நின்னு கல்யாணத்த முடிச்சு வச்சாங்க.’’
‘’அட மாமன் சீர் செய்ய முறைமாமனுமா வரல?’’
‘’அவம் புள்ள மங்குதுரக் கட்டளைனு வரலையோ என்னமோ?’’
‘’உள்ளூர் மாமங்கரங்கதான் சீர் செஞ்சிருக்காங்க’’
‘’பாத்துக்க தண்ணி, கிண்ணி போட்டுக்கிட்டு ஊர் மேயரதுக்கெல்லாம் கட்டு சிட்டா சீர், செனத்தியோட கல்யாணம் நடக்குது. இந்தப் பையனுக்கு இப்படி ஒரு தலையெழுத்து. என்னத்தச் சொல்ல. சரி, நாம் போயி தூங்கக்கறேன் நேரமாச்சு.’’ விசயம் முடிந்ததும் கத்தரிப்பது போலப் பேசி எழுந்துவிட்டாள் அருக்காணி.
இதைப் பேசி முடிக்கவே ராத்திரி பண்ணண்டு மணி ஆகிவிட்டது. சோத்தை தின்ற நாய் கூட ஒரு தூக்கம் தூங்கியிருக்கும். அருக்காணி கட்டிலில் படுத்தவள் நாளைக்கு எங்கிருந்து விசயத்தைச் சொல்லலாம் என யோசித்தபடியே தூங்கிப் போனாள்.
*****
ஊருக்குள் ஒவ்வொருவராக செல்போன் வங்க ஆரம்பித்த நேரம். அவன் வாங்கிட்டான், இவன் வாங்கிட்டான் எனப் பேச்சாகக் கிடந்தது. ‘‘அவனுக்கென்ன சோலி.. போன வச்சிக்கிட்டு. யார் போன் பண்றாங்கலாமா அவனுக்கு?’’ சிலர் கிண்டலாக பேசிக்கொண்டும் இருந்தார்கள்.
ஊருக்குள் நாலைந்து வீடுகளில் மட்டுமே அப்போது போன் இருந்தது. சொந்தத்தில் நல்லது, கெட்டது என்றால் அந்த எதோ ஒரு வீட்டுக்கு போன் செய்து தகவல் சொல்வார்கள். கூட்டு வண்டிக்காரர் பொன்னையன் வீட்டில் போன் இருந்தது. பெரும்பாலும் ஊரில் உள்ளவர்களுக்கு அவர் வீட்டுக்குத்தான் போன் மூலமாகத் தகவல் வரும். பொன்னையன் மனைவி செல்லம்மா எமகாதகி. யார் அவளுக்கு அனுசரணையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சாமத்தில் போன் வந்தாலும் அவர்களின் வீட்டுக்குப் போய் தகவல் சொல்லிவிட்டு வருவாள்.
அவர்களின் காட்டு வேலைக்கு வராதவர்களுக்கு போன் வந்தாள் சொல்ல மாட்டாள். வேறு யார் மூலமாகவோ தகவல் தெரிந்து போய் கேட்டால், ‘’அட ஆமா, போன் வந்துச்சு சொல்ல மறந்துட்டேன்’’ என்பாள்.
கொஞ்சம் வசதியுள்ளவர்கள் முதலில் செல்போன் வாங்கினார்கள். அப்படியே எல்லோரும் வாங்க ஆரம்பித்தனர். மாதம் நூற்றி இருபது ரூபாய் ரீசார்ச் செய்தால் ஒரு மாதம் போன் வரும். இருபது ரூபாய்க்கு பேசிக்கொள்ளலாம் என்கிற நடைமுறை இருந்தது.
செல்போன் வாங்கினால் சிம் என்கிற ஒன்று வாங்க வேண்டும் என்கிறதே சிலருக்குப் புதிதாக இருந்தது. மாரப்பன் கொஞ்சம் நிலம் நீச்சு உள்ளவர். போன் வைத்திருக்கும் நாலைந்து வீட்டுக்காரர்களுக்கு போட்டியாக ஏதாவது செய்யவேண்டும் என்று காத்திருந்தவர். ஈரோடு போய் செல்போன் வாங்கி வந்தார். ஒரு வாரமாக போன் எதுவும் வராததால் ஊரில் விவரம் தெரிந்த பையங்களிடம் காட்டி விசாரித்தார்.
‘’சித்தப்பு, சிம்மு வாங்கலையா? அதப் போட்டாத்தானே நெம்பர் குடுப்பாங்க, டவர் வரும்.. போன் வரும்.’’
‘’அந்த எழவ எங்கடா வங்கறது.?’’
பையன்கள் விவரம் சொன்னார்கள். அடுத்தநாள் கடைக்குப் போய் சண்டையே போட்டார் மரப்பான். ‘’எப்பா, போன் வாங்குனா பேசறதுக்கு எதுவோ போடுவாங்கலாமா.. அதயேன் எனக்குப் போட்டுக் குடுக்கல’’ என்றார். கடைப்பையன் செல்போன் விற்பது மட்டும்தான் எங்கள் வேலை என்று விளக்கிச் சொன்னான்.வேறொரு கடையில் சிம் வாங்கிக் கொண்டு வந்தவர் ஆக்கட்டிவேட் ஆக இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் ஆகும் என்று சொன்னார்கள். விடிய விடிய காத்திருந்து விடிகாலை மூன்று மணிக்கு போனில் டவர் வந்தும் யாருக்கு முதன் முதலில் போன் பேசலாம் என யோசித்தார்.
பால்ய நண்பன் சுந்தரனுக்கு போன் போட்டார். எடுத்தவன், ‘’யாரு இந்நேரத்துக்கு’’
‘’டேய், நான்தாண்டா மாரப்பன் பேசறேன்.’’
‘’சொல்லு மாரப்பா என்ன விசயம். உங்க ஆயாகீது போயிடுச்சா?’’
போனைத் துண்டித்தார் மாரப்பன். முதன் முதலில் போன் வாங்கிய விசயத்தைச் சொல்லலாம் என்றால் இப்படி அபசகுனமாகப் பேசுகிறானே என்றிருந்தது. இருவரும் மாமன், மைத்துனர்கள் என்பதால் அடிக்கடி இதைச் சொல்லியே செல்லச் சண்டை போடுவார்கள். சிலர் வீட்டில் போனுக்கு சார்ஜ் போட்டால் கரண்ட் பில் அதிகமாக வரும் என்று மோட்டார் ரூமில் சார்ஜ் போட்டுக் கொண்டார்கள். எல்லா கிணத்து மோட்டார் ரூமில் சுவிட்ச் பாக்ஸ் வைத்தே ஒரு காசு பார்த்தார் மெக்கானிக் ஜனார்தனன்.
பழனியப்பனுக்கும் அவரின் அண்ணனுக்கும் எல்லா விசயத்திலும் போட்டி இருந்தது. அண்ணன் மாடு வாங்கினால் அதைவிட நல்ல விலைகொடுத்து ஒரு மாட்டை வாங்கி வருவார் பழனியப்பன். அண்ணன் டீ.வி.எஸ் மொபட் வாங்கினார் என்றால் அடுத்த வாரமே புது மொபட் வங்கி இரண்டு விதமாக ஆரன் வைத்து ஒட்டிக்கொண்டு ஊருக்குள் வலம் வந்தார் பழனியப்பன். இப்படியெல்லாம் போட்டி போடும் பழனியப்பன் அண்ணன் போன் வாங்கிவிட்டார் என்கிற செய்தி கிடைத்ததும் சும்மா இருப்பாரா.. அடுத்த நாளே ஈரோடு போய் போன் வாங்கி வந்தார்.
அப்பன் போன் வங்கிவிட்ட செய்தி கிடைத்ததும் மகன் முருகேசனும் நான் மட்டும் சளைத்தவனா என அடுத்த நாள் அவனும் போன் வாங்கிக் கொண்டான். இப்படித்தான் போட்டி போட்டே ஊர்முழுக்க செல்போன் மயமாகிவிட்டது.
திருப்பூரில் வேலை செய்யும் மூர்த்தி ஊருக்கு வருபோது முருகேசனைப் பார்க்காமல் போகமாட்டான். நண்பனிடம் எல்லா விசயமும் பகிர்ந்து கொள்வான். அப்படி ஒருநாள் மூர்த்தி வந்தபோது கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் சொத்தைப் பிரித்துக் கொண்டது, அதற்காக பெரிய சண்டையே வந்தது எல்லாம் சொன்னான்.
‘’புள்ள பொறந்ததுக்கு வந்து பாத்துட்டுப் போனாங்களா? ‘’
‘’எங்கடா வந்தாங்க. வந்தா செலவு பண்ணணும்னு வரல போல இருக்கு.’’
‘’இப்பிடியெல்லாமா பெத்தவங்க இருப்பங்க?’’
‘’நீயே என்னப் பாக்கரயே. இன்னுமா நம்பல?’’
‘’சொத்து பிரிக்கிறதுல ரொம்பப் பெரிய சண்டையோ?’’
‘’ஆமாம்பா வீடு அவரே சம்பரிச்சுக் கட்டினதாம். விடமுடியாதுன்னுட்டு ஒரே சத்தம். கண்ட மேனிக்கு வார்த்தை பேசிட்டார். அவுசாரி பெத்த நாயினு சொல்லிட்டார். நானும் திருப்பி நான் அவுசாரி நாயின்னு சொல்லறையே உம் பொண்டாட்டிதானே என்னப் பெத்தா.. அவகிட்ட கேளு அவ அவுசாரியான்னு சொன்னதுதான் தாமதம். எங்க சட்டி முட்டியெல்லாம் வெளிய வீசியெறிஞ்சு வீட்டப் பூட்டீயீட்டு போயிட்டாங்க. ரத்திரியோட ரத்திரியா ஒரு வண்டியப் புடிச்சு பெரியகாடு வெங்கடாச்சலம் அண்ணன் வீட்டுக்கு போய் நின்னோம். மகராசன் அந்த ராத்திரியிலும் அவங்க பழைய வீட்டுச்சாவியக் குடுத்தங்க. அங்கயே இருந்திருக்கலாம். காட்டுக்கும், வீட்டுக்கும் தூரம். அதனால இங்கயே வந்துட்டோம். இங்க வரும்போது அவ எட்டு மாசம்.’’
சுற்றிலும் ஹாலோ பிளாக் வைத்து கட்டப்பட்டு சிமெண்ட் சீட் போட்ட ஒத்தை டாப் வீடு. வெய்யில் காலத்தில் எப்படித்தான் இதற்குள் இருப்பார்களோ என்றிருந்தது மூர்த்திக்கு. வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை போட்டு பந்தல் போட்டிருந்தான். வெளியே வாசலில் பன்னீர் ரோஜா செடி இருந்தது. அந்த வீட்டில் முருகேசன் இதேமாதிரி ஒரு செடியை வளர்த்து வந்தான். பூக்கள் செடி நிறைய இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இங்கேயும் அப்படி ஒரு தோட்டம் போட்டிருந்தான். நகரின் கட்டிடங்களுக்கு மத்தியில் வாழும் மூர்ததிக்கு இந்த இடம் சொர்க்கம் என்று நினைத்தான். ஆனால், இரவுப் பொழுது அப்படியானது அல்ல. இரவு வந்துவிட்டால் சுற்றிலும் மயான அமைதியாக இருக்கும். அதற்கு வாழப் பழக வேண்டும். பேசிக்கொண்டே காட்டுக்குள் சுற்றி வரப் போனார்கள். அப்போது முருகேசனுக்கு போன் வந்தது. பேசி வைத்ததும் மூர்த்தி கேட்டான்.
‘’போன் வங்கிட்டயாட்டம் இருக்குது. சொல்லவே இல்ல.’’
‘’அட ஆமாம்பா, இந்தா நெம்பர் வச்சுக்கோ’’ மூர்த்தியிடம்தான் போன் நெம்பரைச் சொன்னான்.
‘’ஏன்டா நாலெழுத்து கம்பெனி சிம்ம வச்சிருக்கறே. நாம் பாரு மூனெழுத்து கம்பெனி சிம்மு வங்கியிருக்கறேன். இதுல ஒரு நிமிசத்துக்கு ஒரு பைசா. நீ வச்சுருக்கற கம்பெனியில காலுக்கு ஒரு ரூபா அம்பது பைசாதானே”. முருகேசன் ‘ஆம்’ என்றான். முருகேசன் அடுத்தநாளே நாலெழுத்து கம்பெனியிலிருந்து மூனெழுத்து கம்பெனிக்கு மாறினான். அது ஊர் முழுக்கத் தெரிந்து எல்லோரும் மூனெழுத்து கம்பெனிக்கு நெம்பரை மாற்றிக் கொண்டார்கள். அதில் முருகேசனின் அப்பா பழனியப்பனும் ஒருவர்.
நாளடைவில் மூனெழுத்து கம்பெனி வேறொரு மூனெழுத்து வெளிநாட்டுக் கம்பெனிக்கு விற்று விட்டுப் போனது. அதன் விளம்பரம் டிவியில் அடிக்கடி வந்தது. ‘நீங்கள் எங்கே போனாலும் எங்கள் டவர் உங்களுக்குக் கிடைக்கும்’ என்றது விளம்பரம். ஆனால், நடந்து கொண்டு பேசினால் டவர் கிடைக்காது. வண்டியில் போனால் நின்றுதான் பேசவேண்டும். பஸ்ஸில் போனால் இறங்கிய பின்தான் பேசவே முடியும். விளம்பரத்தில் வரும் நாய் அவ்வளவு வேகமாக வரமுடியாது என்பதை முருகேசனுக்கு முன்னமே ஊர் புரிந்து கொண்டு பழைய நாலெழுத்து கம்பெனிக்கே மாறிவிட்டார்கள். ஆனால், முருகேசனும், அவனின் அப்பாவும் அதே கம்பெனியிலேயே இருந்தார்கள். அந்த மூனெழுத்து கம்பெனி வேறொரு ஐந்தெழுத்து கம்பெனிக்கு விற்றுவிட்டு போன பிறகு பேச டவர் கிடைப்பது இன்னும் மோசமாக இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் மாறவேயில்லை.
வெங்காந்து கிடந்த வெய்யில் காலம். உக்கிரம் உச்சிக்குப் போன மதிய வேளையில் மேய்ச்சலுக்குப் போன வெள்ளாடுகள் பட்டியை நோக்கி குதியாலம் போட்டுக்கொண்டு வந்தது. ஆடுகளின் சத்தங்கேட்டு ஒயர் கூடை பின்னுவதை நிறுத்திவிட்டு கழிநீர் போசிகளை எடுத்துப்போனாள் தேவனாம்பாள்.
தாயாடு வாரம் பத்து நாளைக்கு முன்னால்தான் ரெட்டைக் குட்டி போட்டது. கொடாப்பை தூக்கிவிட்டதில் நெழலுருக்கமாய்க் கிடந்த குட்டிகள் திடீரென வெளிச்சத்தைப் பார்த்து திக்கும் முக்கும் பார்த்துக் கத்தின. தாயாடு ‘மேக்கேக்கே’ என கத்தியதும் பாய்ந்தோடி பால் குடித்தன குட்டிகள். போன ஈத்துக் குட்டிகளில் கருப்புக் குட்டியும், செவலையும், சாலியங்காட்டுக் கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட கிடாய்கள். கிடாய்கள் தண்ணீர் குடித்து முடித்ததும் ஈட்டி போட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
“தா. உங்களுக்கு கொல நனஞ்சா இதே வேலையாப் போச்சு. ஆடு வந்து கெட சேந்துருச்சு. மேய்க்கப் போன மனுசனக் காணமே” என பூவரச மரநிழலில் கட்டிவிட்டு இட்டாலியை கண்ணுக்கு கைவைத்து தூரம் வரைக்கும் பார்த்தாள். ஆளரவம் இல்லாமல் வெக்கை பூத்து தகித்துக் கொண்டிருந்தது பூமி.
“எங்கியாச்சும் ஆளு கெடச்சா ஆடு போறது தெரியாம வாய் வளத்தீட்டு நின்னுட்டு வந்ததியும் சோறு கரைச்சியான்னு கால் கால்னு கத்தறது” குண்டானில் சோத்தில் மோரை ஊற்றி சின்ன ஈருளி ரெண்டைப் போட்டு கரைத்துக்கொண்டே முனவினாள் தேவனாம்பாள்.
வெகுநேரமாகியும் பழனியப்பன் வராததால், “இந்த மனுசனுக்கு இதே வேலையாப் போச்சு ஒரு வா சோத்தக் குடிச்சுட்டுப் போயி நாயமடிக்கலாம்ல” என போனெடுத்து ஒன்னா நெம்பர் அழுத்தி, பச்சைப் பட்டனை அழுத்தினாள். பெண் வீட்டுப் பேத்திகள் கத்துக்கொடுத்தது. ‘அய்யனுக்கு பேசனும்னா ஒன்ன அமுத்து, மாமாங்கிட்ட பேசனும்னா ரெண்ட அமுத்து, அம்மாகிட்ட பேசனும்னா மூனு அமுத்தி பச்ச பட்டன அமுத்து’ எனச் சொல்லிக் கொடுத்திருந்திருந்தனர். போன் வாங்கிய நாள் முதல் ரெண்டா நெம்பரை அழுத்தியதே இல்லை.
போனில் ‘டொர்..டொர்’ கேட்கவேயில்லை. நாலஞ்சு முறைக்குப் பின் டொர்ரடித்தது. எடுத்த பழனியப்பன் பேசவேயில்லை. “தே…எங்கிருக்கிறீங்கோ. சோறுன்னுட்டுப் போலாமல்லோ. ஆடு வந்துருச்சு. நாயம் முசுங்கறத்துல ஆட்டக்கானாம்னு தேடீட்டு இருக்கறீங்கலாக்கும்”
பழனியப்பன் ஏதோ முனகுவது மட்டும் கேட்டது. “தே.. என்னது கெணத்துக்குள்ளாற பேசற மாதிரி இருக்குதா”
“கெணத்துக்குள்ளாற தாண்டி உழுந்துட்டேன். கெடாயி தெக்கால மொட்டக் கெணறோரமா மேய்ஞ்சுட்டு இருந்துச்சு. முடுக்கலான்னு போனேன்.. கொழுக்கட்டப் பில்லுக்கட்ட வழுக்கி உள்ள வுளுந்துட்டேன். யாராச்சுயும் வரச்சொல்லி தூக்கச் சொல்லு” எனத் திக்கித்தினறிச் சொல்லி வலியில் கத்தியதில் கிணறு எதிரொலித்தது.
தேவனாத்தா போனைப் போட்டுவிட்டு மகன் வீடு நோக்கி ஆராற்றிக் கொண்டு ஓடினாள். ‘கூப்புட்டா வருவானா. சண்ட போட்டு ஏகமேனிக்குப் பேசீட்டமே. இந்த நேரத்திக்கு வேறாரு கெதி.’ தேவனாத்தா ஓடியதைப் பக்கத்துக் காடுகளில் வெய்யிலுக்கு ஒதுங்கியவர்கள் விசாரித்து, பின் ஆளுக்கு ஒரு திக்காக ஓடினார்கள்.
பழனியப்பனின் மகன் முருகேசன் வருவதற்குள் கட்டிலில் நாலு திக்கிலும் வடக்கயிற்றைக் கட்டி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தனர். யாரோ முதலில் இறங்கி கட்டிலில் தூக்கிப்போட்டு பழனியப்பன் கிணற்றுக்கு மேலே வரவும், பழனியப்பனின் மகனும் தேவனாத்தாளும் வருவதற்குச் சரியாக இருந்தது.
இரண்டு வருடங்களாக சண்டை போட்ட மகனிடம் அப்பங்காரன், “டேய் அப்பா முருகேசு, நாம சண்ட போட்டுட்டு சாலியாங்காட்டுக் கருப்பனுக்கு கெடா வெட்டாம உட்டதுக்கு கருப்பன் அசப்புக் காமிச்சுட்டாண்டா. ஒரு தடவ மட்டும் காப்பாத்தியுடு கருப்பான்னு வேண்டிகிட்டதுக்குத்தே கால மட்டும் ஒடிச்சு வுட்டுருக்கறாணாட்டோ. மொதல்ல கெடா வெட்டீறோணும் டா”
“அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம். இப்ப ஆசுப்பத்திரிக்குப் போலாம். செத்த உக்காருங்க. காரு எதுனா வரச்சொல்லறேன்” முருகேசன் போனை எடுத்தான்.
“அட இருப்பா நூத்தியெட்டுக்கு போன் பண்டீட்டேன். வந்துரும்” தூரத்தில் ‘உய்ங்..உய்ங்’ கேட்டது. துண்டெடுத்து விசிறி, ‘இங்க இங்க’ எனக் கூச்சல் போட்டனர் கூடிநின்ற சனங்கள்.
நான்கைந்து மாதம் கழித்து முருகேசனைப் பார்க்க மூர்த்தி வந்திருந்தான். மாசி மாதத்தில் கிடா வெட்டு வைத்திருந்தான். போனில் அழைத்துச் சொன்னான். வேலை காரணமாக வரமுடியவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறான். பிள்ளைக்கு, முருகேசனுக்கு, அவன் மனைவிக்கும் துணியெடுத்து வந்தான். சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு காலாற காட்டுக்குள் நடந்தார்கள்.
‘’ஏன்டா முருகேசு, இன்னுமா நீ வேற சிம்மு கம்பெனிக்கு மாறல.’’
‘’அதையேன் மாத்தனும்னு விட்டுட்டேன். அதுக்கென்ன போனு வாராமலையா இருக்குது?’’ எகத்தாளம் பேசினான் முருகேசன்.
‘’உங்கப்பாவும் அதே கம்பெனிதானே. இன்னும் மாறலையே?’’
‘’இல்ல மாறல. எங்கேக்கறீங்க?’’
‘’அடேய் தரைமட்டத்துல இருந்து பத்துப் பதினஞ்சடி போனவே டவர் எடுக்காதே. உங்கப்பவுக்கு மட்டும் எப்படிடா நாப்பதடி, அம்பதடி கிணத்துக்குள்ள டவர் கிடைச்சுது.?’’
ஆச்சர்யமாகப் பார்த்த முருகேசன் ‘’ அட ஆமால்ல, எப்படி கெடச்சுது?. எப்படியோ டவர் கெடச்சுத்தான் எனக்கு ஒரு லச்சம் செலவானதுதான் மிச்சம்.’’
‘’இப்ப உங்க அப்பா, அம்மா கூட பேச்சு வார்த்தை உண்டுமா?’’
‘’எங்க கிடா வெட்டுலயே சண்டை வந்துருச்சு. அவங்க பொண்ணு வீட்டக் கூப்பிடலைன்னும், மாமங்காரனக் கூப்பிடலைன்னும் ஒரே சண்ட. என்னையே மதிச்சு கல்யாணத்துக்குக் கூட வராதவங்கள எப்படி போயி கூப்பிட முடியும் சொல்லு. நீதானே கெடா வெட்டுனேன்னு அவுங்க கிடாய் குடுத்ததுக்கு காசும் வாங்கிட்டுப் போயிட்டாங்க. செலவ எந்தலையில கட்டிட்டாங்க. வேண்டுனது அவங்க.. செலவு எம்படது. என்னமோ போங்க இனி ஜாக்கிரதையா இருக்கணும். ஏதாவது ஒன்னுனா காசு குடுன்னு நின்னுக்கனும். அப்பவும் எதாவதச் சொல்லி அழுது காரியத்தச் சாதிச்சுட்டு மறிபடியும் சண்டை போட்டுட்டுப் போயிடுவாங்க. இங்க இருந்து வாழரத விட கண்காணாம எங்ககாயாச்சும் போயிடலாமானு தோனும். எங்க போனாலும் நம்ம நிழல் நம்ம கூடவேதானே வரும்.’’
முருகேசனைப் பார்க்க மூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. மூர்த்தியைவிட ஏழு வயது சிறியவன்தான். என்றாலும் எவ்வளவு அனுபவம் வாய்த்த மனிதன் போல பேசுகிறான் என்றிருந்தது. ‘’அங்க பாருங்க’’ என்றான் முருகேசன். அவனின் அப்பாவின் ஆடுகள் நாலைந்து குச்சிக் கிழங்கு காட்டுக்குள் நின்றிருந்தது. சத்தம் போட்டுக்கொண்டே ஓடியவனின் வாயிலிருந்து எச்சாந்தராமான வார்த்தைகள் வந்து விழுந்தது. அங்கே நிற்கக் கூடாதென முருகேசனின் வீட்டுக்கு வந்தான் மூர்த்தி. வீட்டின் தென்புறம் பன்னீர் ரோஜா பூத்துக் கிடந்தது. ரோஜா குச்சியில் பெரிய முட்கள் இருந்தது. லாவகமாக வளைத்து ஒரு பூவைப் பறித்து முகர்ந்து பார்த்தான் மூர்த்தி. மேற்குப் பக்கம் அப்பனும் மகனும் சண்டை போடும் சத்தம் பலமாகக் கேட்டது.
சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து முருகேசனின் மனைவி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தவள் சொன்னாள், ” இப்படித்தானுங்க அண்ணா, வாரத்துக்கு நாலு நாளைக்கு இதே மாதிரி சத்தம் போட்டுக்கிட்டே இருக்கறாங்க. பேசாம இருந்தாலும் விடமாட்டாங்களாட்டம் இருக்குது” என்றாள்.
தோளிலிருந்த குழந்தை மூர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தது. “இன்னும் இருபது, இருவத்தி அஞ்சு வருசம் கழிச்சு நீயும் உங்கப்பங்கூட சண்டை போடலாம்” என்றான் மூர்த்தி.
“நாங்க சண்ட போடறமாதிரி நடந்துக்க மாட்டோம். ஏஞ்சாமி” எனக் குழந்தையைக் கொஞ்சிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவ்வளவு வலியும், கசப்பும் இருந்தது.