
இதயம் நழுவும் இன்ஸ்டா
சிகையலங்கார கூடத்தில்
கூந்தலை அலசிய
பூனைகண்ணன் டார்க் மெரூன் நிறத்தைப் பூசுவதற்கு முன்
தலையை மெல்ல மசாஜ் செய்ய
கண்கள் சொக்கும் அந்த நொடி
மெல்லிய குரலில் ஒலிக்கிறது
“காத்திருக்கும் ஒரு மணிநேரத்திற்குள்
பெடி மெடி செய்யலாமே”
குடித்த சூடான க்ரீன் டீ கதகதப்பில்
தலை மேலும் கீழும் அசைய
அடுத்த நொடி கைவிரலை ஒரு யுவதியும்
பாதங்களிரண்டை அவள் தோழியும்
துவாரகபாலகர்களாகப் பற்றிக்கொண்டனர்
ஒருமணி நேரத்தில் பரபரவென இயங்கி
விரல்கள் இருபதையும் நீலக்கடலில் நீராட்டி
ஜெல் பாலீஷ் பூச
பத்து செல்ஃபிகள் கிளிக்கினேன்
இன்ஸ்டாவில் பதிவிட
தட்டச்சுகளுக்கு லைக் விழும் முகநூலை விட
சின்ன சிரிப்புகளுக்கு இதயம் நழுவும் இன்ஸ்டாவே
இப்போதைய என் தேர்வு.
***
போதையாகும் வலிநிவாரிணி
வலி நிவாரிணி உபரியானதை
நீக்க வல்லது
வலி நிவாரிணி சற்று நேரம்
ஆசுவாசம் செய்ய
துணைநிற்பது
வலி நிவாரணி சிறிது நேர
உரையாடலுக்குச்
செவி கொடுப்பது
வலி நிவாரணி தற்காலிக மகிழ்ச்சிக்கு
வழி தருவது
எப்போதும்
வலி நிவாரணி வலியை
முற்றிலும் தீர்ப்பதே இல்லை
மடநெஞ்சோ
மீண்டும் மீண்டும்
வலி நிவாரணியையே நாடும்
அது தரும் போதையால்.
***
கண்ணயரும் விடியல்
இரக்கமில்லா இவ்விரவு
விடியாமலே போகட்டும்
நோய்மையின் முனகல்களை
கேட்கும் திறனில்லா உன்மத்தர்களின்
பிதற்றல்கள் செவிப்பறையில்
மோதி வெடிக்கும்
இவ்விரவு விடிந்துதான்
என்ன செய்யப்போகிறது
நிலவொளி மட்டும் துணைநிற்க
இருளைத் துரத்தும் கனவுகள்
வேட்டையாடும் புலிகளின் உறுமல்கள்
நெஞ்சை உலுக்கும்
இவ்விரவு விடிந்துதான்
என்ன செய்யப்போகிறது
தேடும் கைகளில் அகப்படும் படர்ந்த மார்பு
கூந்தலில் அலையோடும் மென்விரல்கள்
பிணைந்திருக்கும் பருத்த தொடைகள்
மெல்ல தடம் பதிக்கும் எயிறுகள்
மறுக்கப்பட்ட
இந்த இரவு விடிந்துதான்
என்ன செய்யப்போகிறது
சற்றே கண்ணயர்கிறேன் அதற்குள்
இந்த இரவு விடியாமலே போகட்டும்.
******