
குழையும் மென்காதல்
ஹைவே ரோட்டில் மிக வேகமான பயணம்
நிதானமாகவே ஒலிக்கிறது,
“நலம் வாழ எந்நாளும்
என் வாழ்த்துகள்” பாடல்
விரைந்து நகரும் மரங்களோடு
போட்டியிட்டுக்கொண்டு முன்னேறும்
நினைவுக்கு இன்னொரு பெயர்
காதல்
பூனையைத் தடவுவதுபோன்ற
மென்மையைக் குழைத்து மெல்லத் தடவுகிறேன்
அதுவும் மயிர்க்கூச்செறிய மடியில் வந்து
படுத்துக்கொள்கிறது
இளையராஜா தேய்ந்து தேய்ந்து மறைய
காதலும் இசையின் வாலைத் தேடி
மடியிலிருந்து இறங்கிச் சென்றது.
*****
படபடக்கும் இளஞ்சிவப்பு
வரவேற்பரையில் நீ
படுக்கையறையில் நான்
இருவருக்குமான இடைவெளி
இரண்டு மீட்டர்
கடப்பதற்கான தூரம்தான் அதிகம்
சற்றுமுன் நடந்த கலவரத்தால்
நம்முன் இருக்கும் சுவர் உடையும்
தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்
முதல் முத்தம் தந்த நாளில்
பின்னணியில் ஒலித்த அதே பாடலை
இளையராஜா இன்றும் நம் வீட்டிற்குள் பாடுகிறார்
கேட்டவுடனே மீண்டும் ஒரு முத்தத்திற்காக
ஆயத்தமாகிறேன்
கைகுவித்து மெல்ல ஊதிப் பார்க்கிறேன்
உதட்டுச்சாயத்தை அழுந்தத் துடைக்கிறேன்
கதவில் ஒரு கண்ணும்
பாடலில் ஒரு காதும்
மனத்திற்குள் உன் காலடியோசைக்கான
எதிர்பார்ப்பு
மெல்ல நீ எழுகிறாய்
இதயம் துடிக்கும் துடிப்பை
தவிர்க்க முடியாமல்
நடுநடுங்கும் உடலைச் சமாதானப்படுத்துகிறேன்
நீ உள்நுழையும்போது எதிர்கொள்ள
ஒத்திகை பார்க்கிறேன்
நிசப்தம்
இளையராஜா குரல் கேட்கவில்லை
குப்பைக்கூடையின் அருகில்
இளஞ்சிவப்பு நிறம் படிந்த
டிஷூத்தாள் படபடக்கும் ஓசை
இதுவரை இருந்த இசைக்கு
மாற்றாய் ஒலிக்கிறது.
******