இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

பச்சை நண்டு – சரவணன் சந்திரன்

சிறுகதை | வாசகசாலை

பூங்காவனம் பழைய படகுத் துறைமுகத்தில் தெரிகிற கடலையே வெறித்துப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். கரிய நிறத்தில் அன்றைக்குக் கிடந்தது கடல். அவள் காலடியில் பச்சை நண்டுகள் ஓலைப் பெட்டிக்குள் இருந்து மேலே ஏற முயன்று கொண்டிருந்தன. அதைக் ‘கட்டு நண்டு’ என்றும் சொல்வார்கள். கடலும் ஆறும் சேருகிற இடத்தில் வாழ்கிற இவற்றின் கொடுக்குகள் கூர்மையானவை. கையை கொடுக்கின் இடையில் கொடுத்தால் விரலையே துண்டாக்கி விடும். அதற்காகத்தான் பிடித்தவுடன் அதை மல்லாக்கப் படுக்கப் போட்டு, சணல் கயிற்றால் ஆபத்தான கொடுக்குகளைப் பிடித்துக் கட்டி, வியாபாரத்திற்கு ஓலைப் பெட்டியில் போட்டு அனுப்புவார்கள். மல்லாக்கப் படுத்துவிட்டால் எந்த உயிருமே தன்பலத்தில் பாதியை இழந்து விடும் என்று தோன்றியது பூங்காவனத்திற்கு. அவளையுமே அப்படி மல்லாக்கத்தானே கிடத்திப் போட்டிருக்கிறது வாழ்க்கை?

பூங்காவனத்திற்குச் சொந்த ஊர் என்று பார்த்தால், தெற்கே மலையடிவாரத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம். பூங்காவனத்தின் குடும்பத்தையே சொந்தத்தில் ‘மலைக்காரர் குடும்பம்’ என்றுதான் அழைப்பார்கள். அவளுடைய அப்பா செத்த பிறகிலிருந்து அந்த மலைக் குடும்பத்து வீடு சல்லி சல்லியாக நொறுங்கத் துவங்கி விட்டது. பூங்காவனத்தைச் சென்னையில் மீன் வியாபாரம் பண்ணுகிற, அந்த ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட ஏகாம்பரத்திற்குக் கட்டிக் கொடுத்தார்கள். குடி.. எந்நேரமும் கடலையே சட்டியில் மோந்து குடிக்கிற மாதிரி உக்கிரமான குடி.

இந்தக் கடற்கரை, காசு, பணம் என எல்லாவற்றையும் வாறிக் கொடுத்து விடும். ஆனால், பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிக் கொள்ளும். பிழைத்துக் கிடப்பவரெனச் சிலர்தான். போனால் புயலால் போவார்கள், இல்லாவிட்டால் குடியால் போவார்கள். அதுதான் கடற்கரையின் தலைவிதி. பூங்காவனமுமே வந்ததில் இருந்து இப்படியான சாவுகள் பலவற்றைப் பார்த்து விட்டாள். 

ஒரு கட்டத்தில் சாவே பழக்கமாகவும் ஆகிவிட்டது அவளுக்கு. ஏகாம்பரம் செத்த அன்றைக்கு அழுததுதான். அதற்கடுத்து துளி கண்ணீரைக்கூட அவள் கடலோரத்தில் சிந்தவே இல்லை. அழுதால் இந்த நகரம் ஏறி மிதித்து விடும் எனக் கண்டு கொண்டாள். 

அதுவரை குழம்பு வைக்கக்கூட மீன் அரிந்தது இல்லை. ஏகாம்பரம்தான் வீட்டு வாசலில் அமர்ந்து மீனுக்குப் பெரால் அடித்து, பொம்பளையாட்கள் மாதிரிக் குத்தவைத்து அரிவாள்மனையால் அறுத்துக் கொடுப்பார். அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றாத நாளே இல்லை பூங்காவனத்திற்கு. தட்டுத் தடுமாறித்தான் கடற்கரையில் தானும் ஒரு ஆளாய் எழுந்து நின்றாள். நண்டு அவளைத் தொற்றிக் கொண்டது. நண்டின் கொடுக்கால் வாங்காத கொட்டில்லை. ஆனாலும் அதை மல்லாக்கத் திருப்பிப் போட்டு எப்படிப் பிடிப்பது என்பதைப் பூங்காவனம் சீக்கிரமே கற்றுக் கொண்டாள். அதற்குப் பிறகு எந்த நண்டுமே அவளைக் கொட்டத் துணியவில்லை. நண்டின் வசம் அவளுக்கு எளிதிலேயே பிடிபட்டு விட்டதால், அதிலேயே நிலைத்தும் நின்று விட்டாள். ‘பச்சை நண்டு’ பூங்காவனம் என்று சொன்னால் கடற்கரையில் எல்லோரும் அவளை நோக்கிக் கைகாட்டுவார்கள்.

பூங்காவனத்தின் உடலுமே அந்த நண்டைப் போலக் கொழுத்துத் தாட்டியமானது. சல்லிப் பயல்களிடம் இருந்து விலகுவதற்காக தன் குரலையும் சேர்த்து தாட்டியமாக்கிக் கொண்டாள். “அவட்ட பேசி மீள முடியாதுப்பா. சொல்ற விலையை குடுத்திட்டு வாங்கிட்டு வந்துகிட்டே இருக்கணும். நண்டோடயே வாழ்ந்து மனுஷங்களை எப்படி கொட்டணும்னு கத்துக்கிட்டா” என்பார்கள் கடலோரத்தில்.

ஏகாம்பரம் செத்துப் போன போது சேகருக்கு பத்து வயது. எந்நேரமும் அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டு அலைந்த பயல், திடீரென அவளிடமிருந்து விலகிக் கடற்கரையில் தனியாகச் சுற்றத் துவங்கினான். அவனுடைய போக்கே பிடிபடவில்லை அவளுக்கு. இப்படி அவனைக் கடற்கரையில் கைவிடுவது குறித்து அச்சமடைந்தாள் பூங்காவனம். அவளுக்கென்று சொந்தங்கள் யாருமில்லை என்பதால், தட்டிக் கேட்கச் சொல்லிப் போய் நிற்கவும் வாய்ப்பில்லை.

சேகரைக் கண்டிக்கவெல்லாம் முடியாது என்கிற அளவிற்குத் திமிறிக் கொண்டு நின்றான். படிப்பை நிறுத்தி விட்டு மீன் வெட்டப் போகிறேன் என்றான். அதற்காகவது போய்ச் சேர்ந்தால் சரிதான் என அவன் போக்கில் விட்டுவிட்டாள். ஆனால், அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். மீன் வெட்டும் கத்தியாலேயே ஒருத்தனின் மண்டையில் வெட்டினான். அதற்காகச் சிறைக்குச் சென்றவன் கடலின் மடிக்குத் திரும்பவே இல்லை. அந்த உலகம் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டது. அதற்குப் பிறகு பூங்காவனம் அவ்வுலகத்தின் வெளியே நின்றுதான் அவனைப் பற்றிய கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

‘என்ன மாதிரியான கல்மனம் கொண்டவன் அவன்? இடையில் ஒருதடவைகூட அம்மா என்று படியேறி வந்ததில்லை. அவனுடைய சோற்றில் மண்ணைக் கொட்டி விட்டேனா என்ன? அப்படியென்ன செய்து விட்டேன்? எனப் பூங்காவனம் பல தடவை யோசித்துப் பார்த்திருக்கிறாள். ஒரு தீபாவளி பொங்கலுக்காவது வந்து சீலைத் துணி எடுத்துத் தந்திருக்கிறானா? அப்படி என்ன என்மீது வெறுப்பு?’ என மாதா கோவிலில் நின்றும் கேட்டிருக்கிறாள். மாதா கோவிலில் மணியடிக்கிற சத்தம்கூட அந்த நேரத்தில் அவளை ஒன்றும் செய்து விட முடியாது. கவனம் கலையாமல் தன்னுடைய கேள்வியின் மெழுகுத் திரியிலேயே கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பாள்.

சேகரின் நண்பன் முதல்தடவையாகப் பணத்தைக் கொண்டு வந்து அவளது கையில் கொடுத்து விட்டு, “சேகரண்ணன் தரச் சொல்லுச்சு. காசுக்கு கவலையில்லையாம். எவ்வளவு வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கச் சொல்லுச்சு” என்றான். “உன் காசு பணத்தையெல்லாம் போயி அந்தா இருக்க கடல்ல போடு. கடல் மாதா எனக்கு சோறு போடுவா. வேணும்னா அவனை நேர்ல வந்து தரச் சொல்லு” என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாள். அதற்கடுத்தும் நாலைந்துமுறை கொண்டு வந்து தர முயலத்தான் செய்தார்கள். ஒவ்வொரு முறையுமே இப்படிச் சொல்லி அவர்களைத் துரத்தி விட்டு விடுவாள்.

என்றைக்காவது ஒருநாள் இதைக் கேட்டுவிட்டாவது, வீட்டிற்கு வந்து பார்ப்பான் என எதிர்பார்த்து ஏமாந்தும் விட்டாள் பூங்காவனம். அப்படி என்ன கோபம் என்மீது அவனுக்கு? இந்தக் கேள்வி கடலலையைப் போல அரற்றும் அவளுக்குள். உள்ளூர் கோவில் விழாவுக்காக வைத்திருந்த பேனரில், ‘மாவீரன்’ சேகர் எனப் பெயர் போட்டு அவனுடைய புகைப்படத்தையும் போட்டிருந்தார்கள். ஆளே தாடி மீசையென வளர்ந்து நின்று இருந்தான். குச்சியைத் தூக்கினால், குண்டியில் இரண்டு கையையையும் வைத்து நடுங்கிக் கொண்டு நிற்பான். இவனா மாவீரன்? அந்த நேரத்தில் பூங்காவனத்திற்குச் சிரிப்புதான் வந்தது.

கடற்கரையில் நிறைய அன்னதானங்களை அவன் போடுவதாகச் செய்திகள் வரும்போதெல்லாம் மகிழ்ச்சியாய்ச் சிரித்துக் கொள்வாள். “ஆனாலும் பூங்காவனம் அக்காக்கு வந்து பார்க்காட்டியும் மகன் மேல அம்பூட்டு பாசம். ஊருக்கே சோறு போடறான். பெத்த தாய்க்கு நேர்ல வந்து போடணும்னு தோணலை பாருங்க. பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. மருமக இருந்தாலும் பரவாயில்லை. அவனுமே ஒண்டிக்கட்டைதான். ஏன் இப்டீ செய்றான்னு தெரியலையே?” பூங்காவனம் காலுக்கு அடியில் குத்துவைத்து அவளாகவே சொல்லிக் கொண்டாள் செண்பகம். பூங்காவனத்திடம் எடுபிடியாக வேலை செய்து கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் அவளுமே அன்றாடங் காய்ச்சிதான்.

அதற்கடுத்து சேகர் செய்வதாய் ஆட்கள் வந்து சொன்ன செய்திகள் எல்லாமும் உவக்கவே இல்லை அவளுக்கு. கடல்நீரை விட உப்புக் கரிக்கிற செய்திகள் அவை. தாகம் வந்துவிட்டால், கடலே ஆனாலும் ஏந்திக் குடிக்க முடியாவிட்டால், அது மனிதர்களைப் பொறுத்தவரை வீண்தான். சேகரைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் அப்படியானவைதான். அவனைத் திடீரென எல்லோரும் ‘தோட்டம்’ சேகர் என்றனர். ‘அதென்ன தோட்டம்?’ என்று பூங்காவனமே வாய்விட்டு வியாபாரி ஒருத்தரிடம் கேட்டாள். “அட ஏம்மா, உன் புள்ளை ரௌடி கையா மாறிட்டான். அதென்னவோ தோட்டமாம். அது எங்க இருக்குன்னே தெரியலை. அதுக்கு தலைவனா ஆகிறவன் சொல்லுதான் இங்க எல்லாமுமாம். ஏரியா மாமூல் தொடங்கி கட்டப் பஞ்சாயத்து, அது சம்பந்தமா வர்ற கொலை எல்லாத்துக்கும் இனி உன் மகன்தான் லீடராம். என்னத்தை சொல்ல? ஏகாம்பரம் மீனை வெட்டக் கூடத் தயங்குவாரு. அவரோட மகன் போயி நிக்கற இடம் எங்கன்னு பாரு? உன் வளர்ப்பு சரியில்லைம்மா” என்றார் கடைசியாய். சொல்லிவிட்டுத் தற்செயலாகக் காறித் துப்பவும் செய்தார். ஆனால், அது பூங்காவனத்தின் மீது தெறித்தும் விட்டது.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஒன்றரைக் கிலோ எடையிருக்கிற பெருத்த நண்டொன்று தன் பலம் கொண்ட கொடுக்கால் பூங்காவனத்தின் இதயத்தில் கொட்டுவதைப் போல இருந்தது. அப்பன் இல்லாத பிள்ளையென்று மடியில் போட்டு எப்படியெல்லாம் வளர்த்தாள்? எப்படிப் பட்ட பேரை ஆத்தாக்காரிக்கு வாழ்கிற இடத்தில் வாங்கிக் கொடுத்து விட்டான் என மனதிற்குள் புழுங்கினாள். இனி எக்காலத்திலும் அவன் கையால் ஒரு சர்பத் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது எனத் தீர்மானித்தாள்.

அதற்கடுத்து அவனைப் பற்றி விசாரிப்பதை நிறுத்திக் கொண்டாள். எப்போதாவது நொண்டி முருகன் மட்டும் வந்து அவள் கேட்காவிட்டாலும் ஏதாவது நாலு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொண்டிருப்பான். “எம்மா, சேகரு காரு வாங்கிட்டான். படகு மாதிரி இருக்கு. ரோட்டில விட்டா சீறிக்கிட்டு போகுது. நீ வாயேன். நீ வந்தா படக்குன்னு குளுந்திடுவான். ஏதோ உன்னைப் பார்க்க அச்சப்படறான். அவன் இப்படி ஆனாதால உன் கண்ணை பார்க்கக் கூச்சப்படறான். ஆனா, டெய்லி உன்னை கேட்காத நாளே இல்லை” என்றான் ஒருதடவை. பூங்காவனம் பதிலே பேசாமல் வெறித்துப் பார்த்தாள் அவனை.

வளைந்த தனது வலது கால் முட்டியில் வலது கையைத் தாங்கிக் கொடுத்து எழுந்து நடந்து போனான். நொண்டி முருகனும் சேகரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். பாதி நேரம் பூங்காவனத்தின் வீட்டு அடுப்படியைச் சுற்றித்தான் எலியைப் போல அலைந்து கொண்டிருப்பான் முருகன். “போடா அங்கிட்டு” என விரட்டினாலும் போகமாட்டான். சேகரைவிட பூங்காவனத்தின் சேலை மணத்தை அதிகமும் உணர்ந்தவன் முருகன்தான். சேகரே கதியென்று அவனையே சுற்றிக் கொண்டு அலைவான். ஏதோ அவனையாவது சேகர் ஒழுங்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற வகையில் பூங்காவனத்திற்கு அரை திருப்திதான்.

ஆனால், கொலை கொள்ளை வேலைக்கெல்லாம் முருகன் போக மாட்டானே? அப்படியானால் என்ன வேலைதான் செய்கிறான்? எனப் பூங்காவனம் அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கிறாள். அப்படி வந்து அமர்கிற சமயங்களில் அவனுடைய கண்களையே கூர்ந்து பார்ப்பாள். அவனுமே அதைத் தாழ்த்தித் தணிக்காமல் அவளை மறுபடி ஏறிட்டுப் பார்ப்பான். துளி அச்சமிருக்காது அதில். துளி குற்றவுணர்வு இருக்காது இதில். தாய்க்குத் தெரியாதா பிள்ளைகளின் பார்வை. “எந்நாளும் அந்த மாதிரி சோலிக்கு போகவே மாட்டேன்மா” என ஒருதடவை வாய்விட்டும் சொன்னான், இவள் கேட்காமலேயே.

நெஞ்சில் ஈரம் இருக்கிற ஒருத்தனாவது சேகர் உடன் இருப்பது பூங்காவனத்திற்கு ஆறுதலாகவும் இருந்தது. “கல்யாணம் செஞ்சா திருந்தி வந்திருவான்” எனப் பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன போது, “ஒருத்தன் திருந்தினா கல்யாணம் பண்ணனும். திருந்துறதுக்காக அதைச் செய்யக் கூடாது. அதென்ன.. ஒரு பொம்பளைப் பிள்ளை வாழ்க்கை பந்தயமா?” என வெடுக்கெனச் சொல்லி விட்டாள் பூங்காவனம். அந்த நிமிடத்தில் துளி வெறுப்பும் வந்தடங்கியது சேகர் மீது. ஊருக்கே பதில் சொல்கிற நிலையில் வைத்து விட்டானே? மலைக்காரக் குடும்பத்துப் பெண்ணைக் கடற்கரையில் வந்து இப்படிக் கூனிக்குறுகி நிற்க வைத்தது யார்?

அப்படியே ஓடிப் போயிற்று நாற்பது வருடம். இவன் தலையெடுத்தே இருபது வருடங்கள் ஓடி விட்டன என்றெல்லாம் அவள் அமைதியாய்க் கடலலையைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அவளது பெருவிரலை கட்டு நண்டு வருடும் உணர்வை அடைந்தாள். “அடச் சீ சனியனே. ஒருபொழுதாவது என்னை விட்டு வைக்க மாட்டியா? எந்நேரமும் காலைச் சுத்திக்கிட்டே கெடக்கியே? பெட்டிக்குள்ள அடங்கிக் கெடக்க மாட்டீயா?” எனச் சொன்னபடி ஓடித் தப்பிக்க முயன்ற நண்டைத் தூக்கிப் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். நொண்டி முருகன் அவளை நோக்கி நடந்து வந்தான்.

அவன் நடையே சரியில்லை அன்றைக்கு. முகமுமே எழவு வீட்டிற்கே உரித்தான வாட்டத்தோடு இருந்தது. உடனடியாகவே அவளுடைய உள்ளம் பதறியது. தீரா துக்கத்தை அவன் கையோடு சுருட்டி மடித்து எடுத்து வருவதாகத் தோன்றியது அவளுக்கு. இங்கே இருந்து எழுந்து ஓடிவிட்டால் என்ன? என்றுகூட அந்தச் சிறிய இடைவெளியில் யோசித்தாள். தாய்மை என்கிற உணர்வில் கட்டுண்டு இருந்தது அந்த வருகை தந்த பதற்றம். பெரிய நண்டொன்றினைப் போல மல்லாக்கப்படுத்துத் துடித்தாள் பூங்காவனம்.

அவளருகே வந்த நொண்டி முருகன் எதுவும் பேசாமல் காலுக்கடியில் அமர்ந்து தலையைக் குனிந்து கொண்டான். அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் எனப் புரிந்து விட்டது. தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு, “முருகா, என்னாச்சுன்னு சொல்லு” என்றாள் படபடத்து. சற்று இடைவெளிக்குப் பிறகு, “சேகரை போட்டுட்டாங்க. மல்லாக்கப் படுக்கப் போட்டு கத்தியால நெஞ்சிலேயே இருபத்தேழு குத்து” என்றான் மெதுவாக. இருபத்தேழு என அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பே பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள் பூங்காவனம். இடையில், “கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவுன்னு மார்ல மார்ல அடிச்சுக்கிட்டேனே. இப்ப என் மார்புக் காம்புல ரத்தம் வருதே” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அழுது ஓய்ந்த அவள் முருகனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது முகத்தைப் பார்க்கும் நோக்கத்தோடு, “முருகா, முருகா” என மெதுவாக அழைத்தாள். அப்போதும் தலையை நிமிர்த்திப் பார்க்கவில்லை நொண்டி முருகன்.

‘தோட்டம்’ சேகரைக் கொலை செய்து விட்டார்கள் என்கிற செய்தி கடற்கரையெங்கும் பற்றிப் பரவி விட்டது. ஆளாளுக்கு அந்தக் கொலையைப் பற்றியும் அவனைப் பற்றியும் பேசத் துவங்கினார்கள். கடற்காற்று அதை அந்தச் சுற்று வட்டாரமெங்கும் விரைவாகவே கடத்திக் கொண்டு போனது. “ஏதோ ஒரு பொண்ணு வரச் சொல்லுச்சுன்னு தனியா போய் மாட்டிக்கிட்டாம்பா. ஆனாலும், செஞ்ச அந்தப் பயலோட வைராக்கியத்தையும் பாராட்டணும். அவனோட அப்பனை இவன் பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்டிருக்கான். அப்ப அந்தச் சின்னப்பயலுக்கு பத்து வயசு. இப்ப இருபது வயசு வரை காத்திருந்து செஞ்சிட்டானேப்பா. என்ன இருந்தாலும் அந்த வைராக்கியத்தை பாராட்டணும்” என்றார் அந்தப் பகுதியின் அத்தனை விபரங்களையும் அறிந்த ஒருத்தர்.

ஆரம்பத்தில் ‘தோட்டம்’ சேகர் சின்னச் சின்ன ரௌடித் தனங்களை மட்டுமே செய்து கொண்டிருந்தான். மூன்று வழக்குகள் வாங்கிய பிறகுதான் அவனுடைய உடலில் மிதப்பு கூடிவிட்டது. ஜெயிலுக்குள்ளேயே நிறையச் சங்காத்தங்கள் ஏற்பட்டு விட்டன. ஏற்கனவே செம்மரக் கடத்தலில் நிறைய ஆட்கள் இருந்த போதும், இவனும் போய் நாயைப் போல வாய்வைத்து விட்டான். பெரிய ஆட்கள் சும்மா இருப்பார்களா? அதிலிருந்தே கத்தி அவனது தலைக்கு மேல் தொங்கத் துவங்கி விட்டது.

செம்மரம் என்றால் பணத்திற்கு ஒரு குறையும் இருக்காது. வெட்டுகிறவன் ஒருத்தன், வாங்குகிறவன் இன்னொருத்தன். இதற்கு நடுவே இருக்கும் சேகரைப் போன்றவர்களுக்குக் கைமாற்றித் துணை நிற்கிற வேலை மட்டும்தான். அந்தப் பணம் கசக்குமா என்ன? குடியில் விழுந்தால்கூட ஒரு மனிதனை மீட்டு எடுத்து விடலாம். பணத்தில் விழுந்தவனை மட்டும் எந்தக் காலத்திலும் மீட்டெடுக்க முடியாது. அவன் இன்னும் இன்னும் என அதன் ஆழத்திற்குள் சென்றபடியேதான் இருப்பான். அதிலும் முறையான நல்ல பணம் என்றாலும் பரவாயில்லை. குறுக்கு வழியில் போனால் கொட்டிக் கிடப்பதைச் சாக்கு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்துவிடலாம் என்கிற போது மனித மனம் சும்மா இருக்குமா? சேகரையுமே அந்தச் சுழலலைதான் உள்ளே வாரிச் சுருட்டிக் கொண்டது. மீளமுடியாத சுருக்கு அலையது. தும்பிக்கையை வைத்து ஆளைச் சுருட்டி யானை காலுக்குள் போடுவதைப் போலக் கடல் செய்து விடும் அதை. அந்த அலைக்கு முன்னால் எந்தக் கொம்பனும் உசத்தி அல்ல.

‘தோட்டம்’ சேகர் சின்னச் சின்ன ரௌடித்தனங்கள், பெரிய அன்னதானங்கள் என இருந்த போது ஊர் வாயில் விழாமல் இருந்தான். பெரிய காரியங்களுக்குப் போனபிறகுதான் ஆள் அடிப்படையிலேயே மாறத் துவங்கினான். ‘பணம் பத்தும் செய்யும்’ என்பதைப் போல ஆட்களின் குணநலங்களிலும் கேட்டைக் கொண்டு வந்து விடும். அதன் முன்னால் யாருமே தப்ப முடியாது. ஏதாவது அங்குசம் இருந்தால் கட்டுப்படுத்தி வைக்கலாம். இருக்கிற பூங்காவனம் என்கிற அங்குசமுமே தூரத்தில் கேட்பாரற்றுத் துருப்பிடித்துக் கிடக்கிறது. உடனிருக்கும் நொண்டி முருகனாவது சொல்லி இருக்கலாம். ஆனால், அவனுமே சொல்ல முடியாத கட்டத்திலேயே இருந்தான்.

ஆரம்பத்தில் நொண்டி முருகனின் சொல்லுக்குக் கொஞ்சம் மதிப்பு மரியாதை சேகர் வட்டத்தில் இருக்கத்தான் செய்தது. பூங்காவனத்திற்கும் சேகருக்கும் இடையில் வெட்டப்படாத தொப்புள்கொடியாய்த் தொடர்ந்தான். அந்தத் தொப்புள் கொடியை முதலில் வெட்டி விட்டது யார்? நொண்டி முருகனை பிற்பாடு மெல்ல ஒதுக்கத் துவங்கினான் சேகர். ஒருவேளை அவனைத் தனது மனசாட்சி எனக் கருதிக் கொண்டானோ? மனசாட்சி என்கிற தொப்புள் கொடியை வெட்டி விட்டுவிட்டால், விரும்புகிறபடி முன்னேறலாம் என முடிவு செய்துவிட்டானோ சேகர்? 

“வேண்டாம்டா சேகரு இது பாவம்” என ஒரு காரியத்தின் போது நொண்டி முருகன் சொன்ன போது, “நொண்டிப் பயலே, கூட வைச்சு சோறு போடறேன். இல்லாட்டி, நீ பிச்சைதான் எடுக்கணும். எனக்கே யோசனை சொல்ல வந்துட்டீயோ?” என்றான் சேகர். எல்லோரும் சாப்பிட பிரியாணி வாங்கி வைத்து இருந்தார்கள். அதைக் கையால் தொட்டுக் கூடப் பார்க்காமல் முதுகைக் காட்டிக் கொண்டு வந்துவிட்டான் முருகன். இன்னொருதடவை சேகர் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த போது இன்னொருத்தனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, “அம்மா, இதையெல்லாம் கேட்டுச்சுன்னா ரெம்ப வருத்தப்படும்பா. போதும் பணம். எவ்ளோ சம்பாதிச்சாலும் நிம்மதியா திங்க முடியுதா? சொன்னா கேளு சேகர்” என்ற போது, “என்னதான் ப்ரெண்டுன்னாலும் தராதரம் தெரிய வேண்டாமா? போடா நொண்டிப்பயலே” என நெஞ்சில் உதைத்தான் சேகர்.

பின்னோக்கிப் போய் மல்லாக்க விழுந்த முருகனால் கொஞ்ச நேரம் எழ முடியவில்லை. கடற்கரை மணலில் அப்படியே படுத்தபடி சேகரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இருளில் முருகனின் கூரான பார்வை சேகரை எட்டவில்லை. மறுபடி அந்தப் பக்கமே போகக் கூடாது எனக் கடற்கரையில் ஏதாவது வேலைக்குப் போவான். இரண்டு நாளில் யாராவது வந்து, “சேகர் அண்ணன் வரச் சொல்லுச்சு. அவருக்கு மனசே சரியில்லையாம். உங்கட்ட எப்படி பேசறதுன்னு கூச்சப்படறாரு” என்பார்கள். மனது கேட்காமல் மறுபடி கிளம்பிப் போவான் முருகன்.

போய் ஆசைதீர எதையும் தின்று கொள்ளலாம். எப்போதாவது சேகர் மனம் சமாதானமாக இருக்கிற சமயங்களில் உடன் அழைத்து பழைய நண்பர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். அப்போது அவன் கண்களில் பழைய ஒளி இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டிருக்கிறான் முருகன். அதுமட்டுமே அவனுக்கு ஆசுவாசமாகவும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் சேகர் திரும்பி வந்துவிடுவான் என நம்பினான் முருகன். ஆனால், அவனுடைய தட்டில் மேலும் மேலும் கைநிறைய கடல்மண்ணை அள்ளிப் போட்டபடியே இருந்தான் சேகர்.

எந்தவித அறமற்ற காரியங்களுக்கும்கூட பணத்தின் காரணமாகப் போய் நிற்கத் துவங்கினான். ”அவன்ட்ட பணத்தை கொடுத்தா பெத்த ஆத்தா தலையைக்கூட நண்டுக்கு செய்ற மாதிரி ஒடைச்சு போட்டுருவான்ப்பா” என ஒருத்தன் சொன்னதைக் கேட்ட போது முருகனுக்கு நெஞ்சில் திருக்கை முள்ளை வைத்துக் குத்துகிற மாதிரி இருந்தது. இதைப் போய் சேகரிடம் சொன்ன அன்றைக்கு, திருக்கை வாலைக் கொண்டு முருகனைப் போட்டு அந்த அடி அடித்தான்.

வலி தாங்க முடியாமல், “அவனை போய் அடிக்காம என்னை எதுக்கு அடிக்கிற?” எனத் திமிறிக் கொண்டு கேட்டான். “அவனைக் கூட மன்னிச்சிருவேன். அதை நம்பிக்கிட்டு வந்து என்ட்ட கேக்கற பாரு. உன்னைத்தான் மன்னிக்க மாட்டேன். தேவிடியா பயலே, நீ என்ன என் மனசாட்சியா?” எனப் போட்டு அடித்தான். அடித்ததுகூட முருகனுக்குப் பிரச்சினை இல்லை. அம்மாவைப் பற்றிய அந்த வார்த்தைதான் அவனை அதிகமும் உறுத்தி விட்டது.

இனி சேகரின் முகத்திலேயே விழிக்கக்கூடாது எனச் சபதமிட்டுத்தான் கிளம்பி வந்தான். ஆனால், சேகரின் உயிருக்கு விரைவில் ஆபத்து என்கிற மாதிரி ஒரு செய்தியையும், ஏதோ பொண்ணோடு அவனுக்குத் தொடுப்பு ஏற்பட்டு விட்டது என்கிற மாதிரி செய்தியையும் கேட்டுவிட்டுத்தான், மானம் ரோஷத்தை எல்லாம் துடைத்து எறிந்து விட்டு மறுபடியும் போனான். ஒன்றுமே நடக்காதது மாதிரி சேகர் ஓடிவந்து கட்டிக் கொண்டான்.

“இப்பத்தான் என்னோட வலது கொடுக்கே என்ட்ட வந்து சேர்ந்த மாதிரி இருக்கு. இனிமே ஒரு பய என்னை மல்லாக்க படுக்க வைக்க முடியாது” என்றான். அதைக் கேட்டபோது முருகனுக்குமே நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவனுமே பழைய திருக்கைக் காயங்களை மறந்து ஒரு சுருக்குமடி வலையைப் போல சேகரைப் போர்த்திக் கொண்டான். அந்தப் பெண் குறித்து மற்றவர்களிடம் விசாரித்துப் பார்த்தான். அவள் ஏற்கனவே இவனுக்கு இன்னொருத்தனைக் கொல்லத் துப்பு சொன்னவள்தான்.

சேகருடன் தோளோடு போய் நின்றவன்தான் அவளுடைய வீட்டுக்காரனும். எப்படியோ இன்னும் அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு எதிர்முகாமிற்குச் சென்று விட்டான். சேகர் ஒருநாள் இரவு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து விட்டான். “இங்க பாரு, உன் புருஷனை எப்படியும் கொல்லாம விட மாட்டேன். நீயா உதவி பண்ணி ஒப்படைச்சிட்டா உன்னை வாழ விட்டிர்றேன். இல்லாட்டி, நீயும் சேர்ந்து செத்துப் போகணும். முடிவு என்னன்னு நீயே எடு” என்றான் சேகர். அவள் உடனடியாகவே சேகருக்கு உதவுவதிற்கு ஒத்துக் கொண்டாள். உயிர் என்று வந்து விட்டால் மஞ்சள் கயிற்றுக்கெல்லாம் மதிப்பு இருக்குமா என்ன? அதுவுமே வெறும் மயிர்தான் என்பதை நிரூபித்தாள் அவள்.

சொன்ன மாதிரியே தன்னுடைய கணவனை கல்லறைத் தோட்டத்திற்குப் பக்கத்தில் வைத்து சேகரிடம் ஒப்படைத்தாள். சாவதற்கு முன்பு அவன் அவளிடம், “சோத்துக்கு விலை போயிட்டீயே? நீயெல்லாம் ஒரு பொம்ளையா?” எனக் கேட்டானாம். அதற்கு அவள், அவனது முகத்தைப் பார்த்து, “ஏன் ஆம்பளைக விலை போகலாம். நான் போகக் கூடாதா?” என்று கேட்டாளாம். இப்படி அவள் கேட்டது சேகருக்கு உடனடியாகவே பிடித்துப் போய்விட்டது. அவளது கணவனை ஆறு கூறாக வகுந்து போட்ட பிறகு ரத்தம் தோய்ந்த அந்தக் கையாலேயே அவளது கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அப்படி எதைத்தான் அவளிடம் கண்டானோ? அவளே கதியென அலையத் துவங்கினான். ஆள் கொஞ்சம் பூத்தாற்போலக் கூட மாறினான். உகந்த உறவைக் கண்டுவிட்டால் உடல் பூக்கத் துவங்கி விடுகிறது போல. அதிலெல்லாம் முருகனுக்குப் பிரச்சினையே இல்லை. ஆனாலும் அவனுடைய ஆழுள்ளம் அந்தப் பெண்குறித்த அச்சத்தையும் ஏந்தி இருந்தது. மண்ணால் சாவு, இல்லாவிட்டால் பெண்ணால் சாவு என யாரோ சொன்னதை அடிக்கடி நினைத்துக் கொள்வான் முருகன்.

அவளுக்குமே பெரிய குடும்பம் இருந்தது. அதனுடைய பெரிய சிறிய கொடுக்குளுக்குள் சேகரை அள்ளிச் சொருகிக் கொண்டாள். சேகருடைய பழைய ஆட்களுமே இதன் காரணமாக கொஞ்சம் சுணங்கித்தான் போயிருந்தார்கள். ஆனாலும் அவனிடம் இதுகுறித்துக் கேட்க முடியாது என்பதால் முருகனிடம் சாடைமாடையாகச் சொன்னார்கள். அப்படியொருநாள் சேகரே வேண்டி விரும்பி அழைத்துப் பேசிக் கொண்டிருந்த போது முருகன், “சேகரு, அது சரியா வராது. என்னதான் இருந்தாலும் அவன் அவளோட படுக்கையில கெடந்தவன். அந்த பாசம் லேசுல போகாது. நாளைக்கு உனக்கு ஒண்ணு நடந்திச்சுன்னாகூட அவளுக்கு அந்தப் பாசமும் போகாது” என்றான்.

முருகன் சொன்னதில் உள்ள ஆழத்தை சேகர் உணரவே இல்லை. மேம்போக்காகவே எடுத்துக் கொண்டு, “கோபப்படாம சொல்றேன் கேளு. மத்த விஷயத்தில தலையிட்ட. பரவாயில்லைன்னு விடறேன். இது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம். இதுக்குள்ள தலையை நுழைக்கக்கூடாதுன்னு உணரலையா நீ? ஒரு ரூம்க்குள்ள எப்படி இருக்கோம்ணு எப்படி உன்ட்ட விளக்கிக்கிட்டு இருக்க முடியும்? சில நேரங்கள்ள அம்மா மாதிரியும் நடந்துக்கறா” என்றான். முருகனால் உடனடியாக எந்தப் பதிலையும் இதற்குச் சொல்ல முடியவில்லை. 

முருகன் எழ முயற்சித்துக் கொண்டிருந்த போது இரண்டு பேர் சேகரைப் பார்க்க வந்தார்கள். கிளம்பும் முன் நிமிர்ந்து பார்த்த முருகனிடம், “இந்தப் பக்கம் கொஞ்ச நாள் வராத. வெறுப்பெல்லாம் இல்லை. ஆனா, உன் முகத்தை பார்க்க இப்ப எனக்கு பிடிக்கலை” என்றான் ஒற்றைவரியில் சேகர். இதுமாதிரி வாழ்நாளில் சொல்வான் என்று முருகன் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ‘டவுசர் போட்ட காலத்தில் இருந்து பழக்கமான தொப்புள் கொடி உறவை அத்தனை எளிதாக ஒரு மனிதனால் உதறி விட முடியுமா? ஏன் அதை அவனுடைய அம்மாவிற்கே செய்திருக்கிறான், நானெல்லாம் எம்மாத்திரம்?’ என நினைத்துக் கொண்டு நடந்தான் முருகன்.

அவன் போனபிறகு சேகரிடம் ஒருத்தன், “என்னண்ணே இப்படி மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டீங்க. நம்ம விபரம் எல்லாமும் தெரிஞ்ச ஆள் அவரு. எதிர் டீம்ல போயி சேர்ந்திட்டா என்ன பண்றது? நொண்டின்னு தப்பு கணக்கு போட்டிராதீங்க. உங்களுக்கு தெரியாதது இல்லை. பலம்ங்கறது கை கால்ல இல்லை. மனசில இருக்கு” என்றான். ஆழமாக யோசித்துவிட்டு அவனிடம், “இந்த உலகத்தில ரெண்டு பேர் எனக்கு எதிரா போக மாட்டாங்க. ஒண்ணு எங்கம்மா. இன்னொண்ணு இவன். அவனுக்கு நல்லா தெரியும். அவனை போட்டு நான் அடிக்கலை. என் மனசாட்சியைப் போட்டு அடிச்சுக்கிறேன்னு” என்றான். கேட்டவனுக்கு இந்த விளக்கம் ஏற்புடையதாகவும் இல்லை.

அதற்கடுத்து உயிர் போனாலும் அங்கே போவதில்லை என முடிவு எடுத்தான் முருகன். அவனிடமிருந்து விலகிய பிறகு புதிய ஆட்கள் சேகரைத் தொற்றிக் கொண்டனர். அவர்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சேகர் இயைந்து ஓடுவதை அறிந்து கொண்டான் முருகன். அவர்களது கூட்டத்தோடு ஒண்ணுமண்ணாக இருந்த ஒருத்தனைச் சந்தேகப்பட்டு சேகரே கொன்று விட்டதாகச் செய்தி வந்த போது, முருகன் உடைந்து அழுதே விட்டான். உண்மையிலேயே அந்தப் பையன் நல்ல பையன். வயதான அப்பாவோடு மூன்று தங்கைகளை வைத்துப் பிழைப்புப் பார்த்து வந்தவன். தங்கைகளின் வாழ்வு தந்த அழுத்தத்தின் காரணமாகவே கத்தியைக்கூடத் தூக்கியவன்.

அவனைப் போய் சேகர் கொன்று போட்டதை முருகனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. விசாரித்துப் பார்த்த வகையில் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கும் அந்தப் பையனுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறே கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது. அது நிச்சயம் சேகருக்குத் தெரியாமல் இருக்கவே இருக்காது என்பதை அறிவான் முருகன். அவனுடைய பழைய தோழர்களிடம் அதுகுறித்து விசாரித்தான். “அதெல்லாம் சேகர் அண்ணனுக்கும் நல்லா தெரியும். ஒருபக்கம் நல்லா இருக்கணும்னா சில தலையை இழந்தாலும் தப்பில்லைன்னாரு. அவனுமே முன்ன மாதிரில்லாம் விஸ்வாசமா இல்லைன்னு அவருக்கு பட்டிருக்கும் போலருக்கு” என மிகச் சாதாரணமாகச் சொன்னான். முருகனுக்கு ச்சீயென வெறுத்துப் போய்விட்டது.

அதைச் சொன்னவனிடம், “என்னைக்காச்சும் உங்க சேகர் அண்ணன் கேட்டா, என் மூச்சுக்காத்துகூட அந்தப் பக்கம் வராதுன்னு சொல்லிடு. அப்படி ஒருத்தன் இருந்ததையே நான் மறந்திட்டேன்னு சொல்லு. நொண்டிதான். ஆனா, என்னை பார்த்துக்க இந்த பெரிய கடலு இருக்குது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நொண்டி நடந்தான் முருகன். போய் பூங்காவனத்திடம் சொல்லிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. பின்னர் அவளே ஒருநாள் அறிந்துகொள்வாள் என்றும் எண்ணினான்.

முருகன் கிட்டத்தட்ட சேகரை மறந்தே போயிருந்தான். மறந்தும் கடற்கரைப் பக்கம் மட்டும் போய் பூங்காவனத்தின் முகத்தில் விழிக்கக் கூடாது என்று முடிவும் எடுத்தான். ஏனெனில் அவள் கண்ணை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டால் பொலபொலவென எதையுமே உதிர்த்து விடுவான். சின்ன வயதில் இருந்தே அப்படி வளர்த்து வைத்திருக்கிறாள் முருகனை. பெரிய கடலோரம் போகாமல் அருகில் இருக்கிற சந்தையில் போய் மீன் வெட்டுகிற கட்டை ஒன்றை வாங்கிப் போட்டு அமர்ந்தான் முருகன். அதற்கடுத்து அவனுடைய உலகம் தனி என்றாகிப் போனது.

பூங்காவனமுமே அவன் சேகரோடுதான் இருக்கிறான் என்கிற நம்பிக்கையில் அவனைப் பற்றி விசாரிக்காமலும் விட்டு விட்டாள். முருகன் வெளியேறிய பிறகிலிருந்து அங்குசம் இல்லாத வெறி பிடித்த முரட்டு யானை என்றாகிப் போனான் சேகர். ஏற்கனவே கட்டை வியாபாரத்தில் இருப்பவர்களிடம் வேண்டுமென்றே மூக்கை நுழைத்தான். நியாயமாக அப்படி அவன் செய்திருக்கவே கூடாது. உன் வியாபாரம் என் வியாபாரம் எனத் தனித்துச் செய்து கொள்ள வேண்டுமே தவிர, ஒன்றின் இடத்தில் இன்னொன்று நுழையக் கூடாது. அதுதான் அடிப்படை விதியுமே அங்கே. பாம்பென்றால் பாம்பின் இடத்தில். பல்லியென்றால் அதற்கு விதிக்கப்பட்ட இடத்தில்.

பாம்பைப் போல வெறிகொண்டு தலையெடுத்து ஆடவேண்டும் என முடிவெடுத்த நேரத்தில்தான் சேகரைச் சுற்றி மரணத்தின் சாமந்தி மணம் சூழத் துவங்கியது. அவன் பதற்றத்தில் அவனை அறியாமலேயே நிறையத் தவறுகளைச் செய்யத் துவங்கினான். இரண்டாவதாக அவனுடைய குழுவில் இருந்த நம்பிக்கையான ஒருத்தனுக்குத் துரோகிப் பட்டம் சூட்டி, துண்டுதுண்டாக வெட்டிக் கொன்று கடலில் போய் வீசியதாகவும் ஊருக்குள் செய்தி பரவியது. 

காணாமல் போனவனைக் கண்டறிய வேண்டுமென அவனது குடும்பம் வழக்கும் தொடுத்து இருந்தது. ஆனால், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனச் சேகர் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், அந்தக் குடும்பமே சேகர் பெயரைச் சொல்லித்தான் மண்ணை வாறித் தூற்றியது.

சேகரின் மிகையான பதற்றம் அவனைக் குடிநோயாளியாகவும் ஆக்கியது. முன்பெல்லாம் ஏதாவது பெரிய காரியத்தை முடித்து விட்டு வந்தபிறகே பேருக்கு அனைவர் முன்னாலும் குடிப்பான். பிறகு அவன் தனியே போய் வயிராறக் குடிக்கிறானா என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. அப்படித் தெரியாமலும் வைத்துக் கொண்டான் சேகர். கத்தி எடுக்கிறவனின் வாழ்க்கையில் என்றைக்குமே உள்ளே இருப்பதை அப்பட்டமாகக் காட்டி விடாதபடி விரல்களால் உள்ளங்கையை இறுக்க மூடிக் கொள்ள வேண்டும். அதுதான் இந்தத் தொழிலின் இதயம் மாதிரி. உள்ளே என்ன இருக்கிறது என வெளியே தெரிந்து விட்டால், அப்புறம் அது வெறும் சக்கைதான்.

இதிலேயே ஊறி வாழ்ந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அதனாலேயே அவர்கள் தங்களது மூச்சுக் காற்றைக் கூட நம்ப மாட்டார்கள். இழுத்துப் பார்த்து அதை அடிக்கடி பரிசோதித்தும் கொள்வார்கள். எந்நேரமும் கத்தியைத் தீட்டிக் கொண்டே இருந்தால் மட்டுமே கூரென்பது சாத்தியம். அதில் சற்றே அசைந்தாலும் அதே கத்தி கழுத்திற்கு வந்துவிடும். சேகர் விஷயத்தில் அதுதான் நடந்தது. குடியின் காரணத்தினாலும், அந்தப் பெண் வழியாக வந்த அழுத்தங்களின் காரணத்தினாலும் சேகரின் கூர்மை அப்போது மழுங்கத் துவங்கியது. அவனது தெய்வங்களும் அப்போது அவனிடம் இருந்து விலகி நின்ற காலம்.

அதுவொரு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை. மீன்பாடு முடிந்து கரையை நோக்கிப் படகுகள் அசைந்து வரும் பொழுது. யாருக்கும் தெரியாமல் சேகரும் அந்தப் பெண்ணும் கூடும் இடத்தைக் கண்டு பிடித்துப் போய்விட்டது எதிர்த்தரப்பு. கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த சேகரின் மார்பில் இருபத்தேழு குத்து. கட்டிலேயே பிணமாகிப் போனான் சேகர். ஒரு மாவீரனுக்கு இந்த நிலையா? என உடன் இருந்தவர்கள் கலங்கிப் போனார்கள். அவன் கொலைக்களத்தில் இறந்திருந்தால்கூட அவர்கள் அதைப் பெருமையாக நினைத்து இருப்பார்கள். போயும் போயும் பெண்ணின் கவட்டைக்குள் தலைவைத்திருந்த போது வந்த சாவா? அப்படித்தான் கடலோரத்தில் பேசிக் கொண்டார்கள்.

உடனிருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை. அவளுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களையும் காணவில்லை. அவள்தான் துப்புக் கொடுத்து மாட்டி விட்டிருப்பாள் என ஊரும் காவல்துறையுமே பேசியது. அதற்குச் சாதகம் செய்யும் அளவிலேயே வரும் தகவல்களும் இருந்தன. “அவனுக்கு எந்திரிக்கவே முடியாதளவுக்கு ஊத்தி குடுத்திருக்காங்க. இல்லாட்டி இப்டீல்லாம் கொல்லுன்னு மாரைக் காட்டுற ஆள் இல்லை அவன். செத்தாலும் சங்கடம் வரலை பாரு. அவன் இன்னொருத்தனுக்கு அதை செஞ்சான். இப்ப கத்தி அவனை திருப்பி குத்திருச்சு. உலக ஞாயம்ணு ஒண்ணு இருக்குல்ல” என்றார் பெரியவர் ஒருத்தர்.

சேகரின் சாவு ஊர்வலம் அந்தப் பகுதியையே மிரட்ட வேண்டுமென முடிவெடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அப்படியான ஒரு அறிவிப்பு மிச்சமிருப்பவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது. அந்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான், அங்கேகூடப் போகாமல் பூங்காவனத்தின் காலடியில் வந்து அமர்ந்து இருந்தான் நொண்டி முருகன்.

அழுது முடித்த பூங்காவனம், “முருகா, நிமிர்ந்து என்னோட கண்ணைப் பாரு” என்றாள்.

தயங்கித் தயங்கி நிமிர்ந்தவனிடம், “என்ன நடந்துச்சு. உண்மையை அம்மாட்ட மறைக்காம சொல்லு” என்றாள்.

“நொண்டி நாய் ஒண்ணை அவன் கையால வெறியில வெட்டிக் கொல்றதை என் கண்ணால பார்த்தேன்” என்றான்.

கண்களைச் சேலை நுனியால் துடைத்துவிட்டு அவனைக் கூர்ந்து பார்த்துப் பூங்காவனம், ”சாவுக்கு போய்ட்டு வந்திரு. இல்லாட்டி, உன்மேல சந்தேகம் வந்திரும்” என்றாள். அப்போது இருவரும் தற்செயலாகத் தரையை நோக்கிப் பார்த்தார்கள்.

ஒரு கொடுக்கை இழந்த பச்சை நண்டொன்று மல்லாக்கப் படுத்துத் துடித்தது.

********

saravanamcc@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மிகவும் நெகிழ்ச்சியான கதையாக இருந்தது.ஏனோ தெரியவில்லை புதுப்பேட்டை படம் காட்சிக்கு காட்சி நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது.
    முருகன் மாதிரியான நண்பன் இல்லையென்ற ஏக்கத்தோட முடிந்தது கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button