
விளம்பர ஆபத்து.!
பொறி செய்த அந்த அபாரமான மாற்று யோசனை என்னவென்றால்…நான் ராமன், ஸ்ரீதர், ஜெய் என்று நான்கு பேரைத் தேர்ந்தெடுத்தார். எங்களுக்கென்று ஒரு புதிய ஷிப்ட்டை உருவாக்கினார். பொதுவாக பத்திரிகை அலுவலகங்களில் மூன்று ஷிப்ட்கள் உண்டு. காலை 10 முதல் மாலை 6 வரை பர்ஸ்ட் ஷிப்ட் -பெண்கள் மட்டுமே இதில். மதியம் 3 முதல் இரவு 12 வரை செகண்ட் ஷிப்ட். மாலை 6 முதல் இரவு 2 மணி வரை நைட் ஷிப்ட். பின்னது இரண்டும் ஆண்களால் நிரம்பியது. பொறி எங்களுக்காக உருவாக்கியது அதுவரை நடைமுறையில் இல்லாத புது ஷிப்ட். காலை 6 மணிக்குத் துவங்கி, மதியம் 1 மணிக்கு முடிவடையும் என்றார். சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பிக்க வேண்டுமென்றால், வீட்டில் நாலரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டுக் கிளம்பி வந்தால்தான் சரியாக இருக்கும். அத்தனை அதிகாலையில் எழுவதா..? அந்நேரத்தில் குளிப்பதே பெரிய விஷயம். அதுவும் குளிர் நீரில் குளிப்பதா..? ‘பகவானே, இதென்னடாப்பா சோதனை?’ என்று பூர்ணம் விஸ்வநாதன் குரலில் எங்களுக்குள் புலம்பிக் கொண்டோம்.
இருந்தாலும், வேறு வழியில்லை. நானும் ராமனும் இன்கம்டாக்ஸ் ஆபீஸ் ஏரியாவிலிருந்து தயாராகி கோரிப்பாளையத்தில் பஸ்விட்டு இறங்கி காத்திருப்போம். அண்ணா நகரிலிருந்து ஜெய் வரும் பஸ்ஸில் சேர்ந்து ஏறிக் கொண்டு பழங்கானத்தம் செல்வோம். பிறிதொருவனான ஸ்ரீதர் திருநகரிலிருந்து தனியாக வந்து சேர்ந்து கொள்வான். இப்படி எங்களுக்குள் ஓர் ஏற்பாடு. அதன்படி… அடுத்த நாள் அதிகாலை ஐந்து ஐம்பதுக்கு அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அப்போதும் அனைவரும் எங்களை விசித்திரமாகப் பார்க்கத்தான் செய்தார்கள். அலுவலக கேட்டிலிருந்து நீண்ட, அகன்ற நடைபாதை உண்டு. இடது ஓரத்தில் இரண்டு அறைகள் இருக்கும். மற்றபடி சுதந்திர இடம் என்பதால் அங்கே ஒரு ஷட்டில்காக் கோர்ட் அமைக்கப்பட்டிருக்கும். அந்த அதிகாலையில் எம்டி தன் தோழர்களுடன் வந்து ஷட்டில்காக் விளையாடுவார் என்பது அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. உடற்பயிற்சியாம்..! “எங்க வந்தீங்க இவ்ளவு காலையில..?” என்று எங்களை நிறுத்திக் கேட்டார். பொறியின் ஏற்பாட்டை விளக்கினோம். என்ன நினைத்துக் கொண்டாரோ… வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “சரி, போங்க..” என்றார். ஓடிவிட்டோம் எங்கள் பிரிவுக்கு. அந்நேரத்தில் என்ன வேலை இருக்குமென்றால், எளிய சிறுசிறு வேலைகள்தான் இருந்தன. ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து அந்தந்த மாதத்திற்குரிய நிகழ்ச்சிகளை மொத்தமாக ஒரு பன்ச் பேப்பரில் அடித்துத் தந்திருப்பார்கள். அதை டைப்ப வேண்டும். இன்றைய நிகழ்ச்சிகள் என்றொரு பகுதி இருக்கும். ஊரில் எங்கெங்கே என்ன பொது நிகழ்ச்சி -அரசியல் கட்சி மீட்டிங்குகள், பஜனைகள் போன்று தேதி தீர்மானித்த நிகழ்ச்சிகள் – பட்டியல் இருக்கும். அதை டைப்ப வேண்டும். அந்தந்த தினத்துக்குரிய ராசிபலன் சமாச்சாரங்கள் இருக்கும். அதை டைப்ப வேண்டும்.
ஆக… உப்புச் சப்பில்லாத மேட்டர்கள். இவைதவிர, நேற்று சேர்க்கப்படாத உள்ளூர் செய்திகள் ஒன்றிரண்டு நைட் ஷிப்ட்காரர்கள் மிச்சம் வைத்திருந்தால் அதுவும், சிற்சில விளம்பரங்கள் முதல்நாளே வந்திருந்தால் அதுவும் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை டிசைன் செய்ய வேண்டும். ஜெய் ரேடியோவையும், ஸ்ரீதர் இன்றைய நிகழ்ச்சியையும், ராமன் விட்டுப் போன செய்திகளையும் கைப்பற்ற, நான் விளம்பரங்களை எடுத்துக் கொண்டேன். ஏனென்றால், விளம்பரங்கள் நன்றாகக் செய்யத் தெரிந்தால்தான் மதிப்பு, நம்பர் ஒன்னாகத் திகழ முடியும் என்பதால். எங்கள் துறையில் நம்பர் ஒன்னாக இருப்பவர்களுக்குத்தான் கழுத்துக்குக் கத்தி எளிதாக வரும் என்பது அப்போது எனக்குத் தெரியாதாகையால் அப்படியோர் ஆசை வந்திருந்தது.
ஒரு வாரம் சென்றிருக்கும். அன்று காலை நுழைந்தபோது ஒருபக்க ‘மலர்’ விளம்பரம் ஒன்று முழுமையாகக் காத்திருந்தது. ஒருத்தர் வெளிநாடு போகிறார் என்றால் அதைப் பற்றி அரைப் பக்கம் விளம்பரம் இருக்கும். அவருக்கு வேண்டிய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அவர்களை வாழ்த்தித் தரும் சிறு விளம்பரங்கள் பல சிறுசிறு அளவுகளில் அவற்றின் கீழ் அரைப்பக்க அளவில் வரும்படி இருக்கும். யாரேனும் இறந்துவிட்டாலும் இப்படி அரைப்பக்கம் அவருக்கு அஞ்சலியும் அரைப் பக்கம் மற்றவர்கள் தரும் விளம்பரங்களுமாக மலர் வருவதுண்டு. ஆக, நம்மூரில் சுபம், அசுபம் இரண்டுக்கும் விளம்பரம் தருவதற்குப் பெரிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சொல்லவந்தது அதில்லை… அந்த ஒரு பக்க விளம்பரத்தை எடுத்து, இதையும் முயன்றுதான் பார்ப்போமே என்று டிசைன் செய்யத் துவங்கி விட்டேன். முக்கால் பக்கம் வரை நான் செய்து முடித்திருந்தபோது, மணி பத்தாகி விட்டிருக்க, சீனியர்களான பெண்கள் காலை ஷிப்ட்டுக்காக உள்ளே நுழைந்தார்கள். அதில் தலைமைக் குணமுள்ள பெண்மணி ஒருத்தரிடம் நான் அதுவரை செய்திருந்ததைக் காட்டி, “மிச்சத்தை நீங்க முடிச்சிடுங்க. பொழுது போகலைன்னு செஞ்சேன்..” என்றேன். அவர் பார்த்துவிட்டு, “நல்லாப் பண்ணிருக்கீங்க சார். மிச்சத்தையும் நீங்களே முடிச்சிடுங்க. ஒரு பக்கம் உங்க கைவண்ணமா இருக்கட்டும். அதுக்கப்பறம் நான் என் வேலையை ஆரமிச்சுக்கறேன்.” என்றுவிட்டு பக்கத்து சேரில் அமர்ந்து ரிலாக்ஸானார்.
அந்த நேரம் பொறி பரபரப்பாக உள்ளே வந்தார். “என்ன சார் காலைல அதிசயமா வந்திருக்கீங்க..” என்றதற்கு, “ஒரு பக்க மலர் இருக்குன்னு ஆட் செக்ஷன்ல சொன்னாங்க. அதான் பாக்க வந்தேன்” என்றார். சீனியர் பெண்மணி என்னைக் கைகாட்டி, “இவர் முழுக்கவே முடிச்சுட்டார். ரிலாக்ஸ் சார்” என்றதும், பொறி வந்து என் கைத்திறனை(?)ப் பார்த்துவிட்டுப் பிரசவமானார். ச்சே, பரவசமானார். “என்னய்யா.. ஒரு மாசம் முடியறதுக்குள்ளயே முழுப் பக்க மலரா..? கலக்கறீங்க..”என்று கைகொடுத்துவிட்டுப் போனார்.
போன மனிதர் சும்மாயிராமல் மேலிடத்திற்கு என் வேலைத்திறனை(!)ப் பற்றி நல்ல ரிப்போர்ட் தந்திருக்கிறார். அதனால்தான் அடுத்தடுத்து ஆபத்துகள் வந்தன. அவற்றைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு சிறு சுவாரஸ்ய (என்று நான் நினைக்கிற) சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும்.
‘அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்கிற பெயர்களைத் தவிர இயற்பெயரை யாரும் சொல்லத் துணியாத அளவிற்குப் பெரிய ஆளுமையாக வளர்ந்து நின்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அப்போது அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். கட்சியில் செல்வாக்கு மிக வளர்ந்துவந்த நிலை. மதுரையில் ஏதோ காரணத்துக்காக மிகப் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாறு கூறும் வெற்றி மாநாடு’ என்றொரு பெயரும் சூட்டியிருந்தார். பேனர்கள், கட்டவுட்டுகள் போன்ற வழக்கமான அதிரடி விஷயங்களைத் தவிரவும், அதிமுகவினர் அத்தனை நாளிதழ்களுக்கும் விளம்பரங்களைக் குவித்து விட்டிருந்தனர். தினகரன் 62 பக்கங்களும், தினமலர் 78 பக்கங்களும் கொண்டதாக அந்த மாநாடன்று வெளியானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆக, டேபிள் காலியாக இருந்தது போக, விளம்பரங்களால் குவிந்து, ட்ரே திணறத் தொடங்கியது. மதிய ஷிப்ட், இரவு ஷிப்ட்காரர்கள் அன்றன்று இடம்பெற வேண்டிய விளம்பரங்கள், செய்திகளையும் கவனித்தாக வேண்டும் என்பதால் குறைவாகத்தான் இவற்றை டிசைன் செய்ய முடியும். எங்களின் அதிகாலை ஷிப்டிற்கும், காலையில் துவங்கும் பெண்கள் ஷிப்டிற்கும் நிறையவே விளம்பரங்கள் வடிவமைக்கிற வாய்ப்பு. போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்யத் துவங்கினோம்.
முழுப் பக்க விளம்பரத்தை எடுக்க லேஸர் ப்ரிண்டர் போதாது. (இன்றைக்கு பெரிய அளவிலான ப்ரிண்டர்கள் வந்துவிட்டன.) எனவே, நான்கு கால் பக்கங்களாக ப்ரிண்ட் போட்டுத் தருவோம். அதை லேஅவுட் செக்ஷனில் வெட்டி, சரியாக இணைத்து முழுப் பக்கமாக்கி அச்சுக்கு அனுப்புவார்கள். அடுத்து வந்த இரண்டு வாரங்களும், மதியத்துக்கு மேல் அந்த செக்ஷனுக்குப் போய் எங்கள் கைவண்ணம் முழுமையடைவதைப் பார்த்து பூரிப்பது (அ) சப்பாத்திப்பது தான் எங்கள் வேலையாக இருந்தது. அவ்வப்போது அவர்கள் கேட்கும் திருத்தங்களைச் செய்துதர வேண்டும். அதற்காகத் தொடர்ந்து ஓவர்டைம் செய்ய வேண்டியிருந்தது. நைட் ஷிப்ட்காரர்களும் ஓவர்டைம் பார்க்க, ஆகக்கூடி 24 மணி நேரம் எங்கள் பிரிவு இயங்கியது. இதில் சில சமயங்களில் விளம்பரங்கள் முழுமையாகித் தயாராகும் நேரம், விளம்பரம் தந்தவரோ, இல்லை, அதிமுகவின் முக்கிய (முக்காத?) பிரமுகர் யாராவதோ லேஅவுட் செக்ஷனுக்கு வந்து பார்வையிடுவதும் உண்டு. அவர்கள் ஒருசில விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, ‘பிரமாதமா வந்திருக்கு’ என்று புகழ்ந்துவிட்டுப் போவதை லேஅவுட்டினர் எங்களுக்குச் சொல்வார்கள். ‘ஆஹா, நான் செஞ்சதுடா அது’வென்று நாங்கள் ஆளுக்காள் குதித்துக் கொண்டாடுவோம். ‘எம்ஜியாரின் பெயர் பெர்ர்ரியதாக இருக்க வேண்டும். அடுத்து ஜெ.ஜெயலிலிதாவின் பெயர் பெரிதாக இருக்க வேண்டும். பிறகுதான் மற்றவர்கள்’ என்பது அந்த விளம்பரங்களின் பொதுவிதி. சிலசமயம் நாங்கள் அதை மறந்துவிட்டால் உடனே தலையில் குட்டி, மாற்றிச் செய்துதரச் சொல்வார்கள்.
இப்படியெல்லாம் பாடுபட்டு விளம்பரங்களைத் தயார் செய்துவிட்டு, அவை என்றைக்கடா அச்சில் ஏறும் என்று அந்த மாநாட்டிற்கு முந்தைய தினத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. எங்கள் விளம்பரங்களும் அச்சிலேறி, கைகளில் தவழ்ந்தன. ஆனால்… அடுத்த நாள் ஏற்பட்ட ஒரு அனுபவம் எங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றானது. உண்மையில் சுவாரசியமான சம்பவம் என்ற பில்டப்போடு நான் சொல்லத் துவங்கியதே அதைப் பற்றிச் சொல்லத்தான். பத்திரிகையுலக நடவடிக்கைகளைச் சொல்லாமல் அதைச் சொன்னால் முழுமை பெற்றதாகாதே என்பதால் இடைச்செருகலாக அவற்றையும் சொல்ல வேண்டியதாகி விட்டது. அடுத்த நாளில் நடந்த அந்தச் சம்பவம் பற்றி…. அடுத்த எபிசோடில் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்….
(சரக்கு இன்னும் உண்டு…)
சுவாரஸ்யமான சுவையுடன் பத்திரிகை பலசரக்கு இனிக்கிறது…