இணைய இதழ்இணைய இதழ் 65தொடர்கள்

பல’சரக்குக்’ கடை; 12 –  பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

கெடாமலும் பட்டணம் சேர்!

சில விஷயங்களைச் சொல்வது எளிது. செயலில் நிறைவேற்றுவது மிகவே கடினமான விஷயம். அப்படித்தான் எனது சபதமும். வெளியிலிருக்கும்போது அப்படிச் சொன்னேனே தவிர, செக்ஷனின் உள்ளே வந்ததும் பழைய பன்னீர்செல்வமாகத்தான் வேலை பார்க்க முடிந்தது.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த ஒரு காலச்சதுரத்தில் அலுவலகத்தினுள் நுழைந்ததுமே என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கடந்து சென்றார் அலுவலகப் பொறுப்பாளர். மனத்திற்குள் பயம் பரதநாட்டியம் ஆடியது எனக்கு. காரணம்… முன்பே சொன்னதுதான். எப்போதும் சீரியஸாக முகத்தை வைத்திருக்கும் பிரகிருதி அவர். யாரையாவது பார்த்துப் புன்னகைக்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட நபருக்குப்  பின்னால் ஒரு குழி வெட்டப்பட்டிருக்கிறது, அதில் தள்ளப்படப் போகிறார்கள் என்பது பொருள்.

இவரது சிறப்பியல்பு ஒன்றைப் பின்னால் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன், நினைவிருக்கிறதா..? இப்போது சொல்லலாம். அதை மிக யதேச்சையாகத்தான் உணர்ந்தேன். என்னுடைய செக்ஷனைச் சேர்ந்த ஒரு பயல் ஒரு சமயம் சின்னப் பிரச்சனை ஒன்றில் சிக்கி, சஸ்பெண்டாகியிருந்தான். அவன் பேரில் தவறில்லை என்று விளக்க, அலுவலகப் பொறுப்பாளருடன் பேச வேண்டும் என்றும், துணைக்கு உடனிருக்கச் சொல்லியும் என்னிடம் கெஞ்சி, தொலைபேசிக் கூண்டு ஒன்றுக்குள் அழைத்துப் போனான். அலுவலகத்திற்குப் போன் செய்தால், அவன் தன் பேரைச் சொல்லி, அலுவலகப் பொறுப்பாளரிடம் பேச வேண்டும் என்று கேட்டதுமே, அவனுடன் யாரும் பேசத் தயாராயில்லை என்று சொல்லி, காலைக் கட் செய்தாள் தொலைபேசி இயக்கும் நாரீமணி.

மறுமுறை முயன்றான். மறுபடியும் கட். என்ன செய்வதென்று யோசித்து, சற்றே க்ரிமினல்தனமான யோசனையில் இறங்கினான். அடுத்து கால் செய்தபோது குரல் மாற்றிப் பேசி, அலுவலகப் பொறுப்பாளரைக் கேட்டான். ‘நீங்க யார் சார்?’ என்று கேட்ட தொலைபேசி அம்மையாரிடம், ‘நான் அவரோட ப்ரண்டு’ என்று சொல்லி வைத்தான். இந்த யோசனை சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான் என்று நான் அவனை வியந்து பார்க்கையில்தான் அந்தத் திருப்பம் நிகழ்ந்தது. காலை ஹோல்டில் போட்ட தொலைபேசி அம்மணி, அலுவலகப் பொறுப்பாளருக்குப் போன் செய்து விவரம் சொல்ல, அவர் கூலாக, “எனக்கு ப்ரண்ட்ஸ்ன்னு யாரும் கிடையாது. எவனோ விளையாடறான். நீ கட் பண்ணிடு” என்று சொல்ல, அந்த அம்மையாரோ, அவர் சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளையாகத் திருப்பிச் சொல்லி, காலைக் கட் செய்தாள்.

சர்வசுத்தமான அக்மார்க் அசடு முகமெங்கும் வழிய ‘ழே’யென்று விழித்துக் கொண்டு நின்ற நண்பனின் தோளைத் தொட்டேன். “என்னாச்சுடா..? ஏன் இப்டி அட் எ டைம் நாலைஞ்சு ஆடு திருடினவன் மாதிரி முழிக்கற..?” என்று கேட்டேன். நடந்ததைச் சொன்னான். இப்போது நான் அவனைப் போலவே விழிக்கலானேன். நிறைய நண்பர்கள் பட்டாளம் இல்லாதவனுக்குக் கூட ஓரிரண்டு பேராகினும் நண்பர்கள் என்று இருப்பார்கள். இப்படி ஒரு நண்பனும் கிடையாது என்று தனி மரமாக ஒருத்தன் வாழ்வது சாத்தியமா என்ன..? அசந்து நின்றேன். மனிதர் உம்மணாமூஞ்சியாக இருப்பதன் காரணம் ஒருவாறு விளங்கியது.

இத்தகைய குணவிசேஷமுள்ள ஆசாமி என்னைப் பார்த்துப் புன்னகைத்தால் மனத்தில் பயம் பரதநாட்டியம் ஆடாமல் காபரே டான்ஸா ஆடும்..? செக்ஷனில் என் நெருங்கிய வட்டத்திடம் இதைச் சொல்லிப் புலம்பினேன். “சேச்சே… அப்டில்லாம் இருக்காது. ஏதோ ஞாபக மறதியா உன்னைப் பாத்துச் சிரிச்சிருப்பார்டா.” -ஒருத்தன். “அவருக்கெல்லாம் ஏதுடா மறதி.? ஏண்டா கணேஷா, நல்லாக் கவனிச்சியோ… உனக்குப் பின்னாடி இருந்த யாரையாவது பாத்து சிரிச்சுத் தொலைச்சிருக்கப் போறார்.” -மற்றொருவன். இப்படி ஆளாளுக்கு தேறுதல் சொன்னதில் கொஞ்சம் தெம்பானேன்.

ஆனால், அதற்கு அற்ப ஆயுள் என்பதும், அன்னாரின் புன்னகையின் பொருள் என்னவென்பதும் மறுதினம் அலுவலகத்தினுள் நுழைந்ததுமே தெரிந்தது. செக்ஷனில் நுழைந்த அடுத்த நிமிடம், இன்ஜி.,  என்னையும் என் பேட்ச்சில் சேர்ந்திருந்த மற்றொருவனையும் அருகில் அழைத்தார். அ.பொ. எங்களை அழைத்ததாகச் சொல்லி அவரைப் பார்த்துவரச் சொன்னார். கழுத்தில் மாலையும், தலையில் மஞ்சள் தண்ணீரும் தெளிக்கப்பட்டதைப் போன்றதோர் மாய உணர்வுடன் அ.பொ.வின் மேஜைக்குச் சென்று அவரெதிரே நின்றோம்.

“உங்க ரெண்டு பேரையும் மெட்ராஸ் ப்ராஞ்ச்சுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிருக்காரு எம்.டி. சார். இன்னும் மூணு நாளைக்கு உங்களுக்கு லீவு. அதுக்கப்பறம் சென்னைல டூட்டி ஜாயின் பண்றீங்க. ரிப்போர்ட், ட்ராவலிங் அமவுண்ட் எல்லாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி வாங்கிட்டுப் போங்க..” என்றார் அதே அரைப்புன்னகை முகத்துடன். “சார்… நான் முன்னப்பின்ன மெட்ராசுக்கே போனதில்லை. அங்க எங்க நம்ம ஆபீஸ் இருக்கு..? எங்க தங்கறது..? ஒரே குழப்பமாயிருக்கு சார்..” என்று தீனமான குரலில் சொன்னேன் நான்- சொன்னான் அவன்.

“அதுக்கெல்லாம் கவலையே படாதீங்க. சைதாப்பேட்டைல நம்ம ஆபீஸ் ஸ்டாஃப்ங்க தங்கறதுக்காக ஒரு வீடே எடுத்துக் குடுத்திருக்காங்க. அங்க நீங்க தங்கிக்கலாம். அட்ரஸ் தரேன். அங்க இருக்கறவங்ககிட்ட கேட்டீங்கன்னா, ஆபீஸ் எங்கருக்கு, எப்டிப் போறதுன்னு எல்லாம் கைடு பண்ணுவாங்க. கவலைப்படாதீங்க. ட்ரான்ஸ்பருக்காக ஸ்பெஷல் இன்க்ரிமெண்ட் தரச் சொல்லிருக்கார் பாஸ்.” என்றார். ‘ஆஹா, சம்பள உயர்வா… பிரமாதம்’ என்று மனதிற்குள் குதூகலித்தபடி, “சந்தோஷம் சார். எவ்வளவு..?” என்று கேட்டேன். “நூத்தம்பது ரூபாய்..” என்றார். அதாவது… எண்ணூற்றைம்பது ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய். பொசுக்கென்று ஆனது எனக்கு. இப்படியொரு இன்க்ரிமெண்ட் குடுத்தா என்ன, குடுத்திருக்காட்டி என்ன..? அடப் போங்கய்யா.. என்று சலித்துக் கொண்டபடியே (அப்ஃகோர்ஸ், மனத்திற்குள்தான்… ஹி… ஹி…) அவர் கை காட்டிய இடத்தில் சென்று அமர்ந்தோம்.

பத்திரிகையுலக வாழ்க்கையைப் பற்றிப் பேசத்துவங்கிய ஆரம்ப அத்தியாயங்களில் நான் சொன்னதை எத்தனை பேர் நினைவு வைத்திருப்பீர்கள் என்பது தெரியவில்லை. மதுரையில் இருந்த சுந்தரேசன், வெற்றிவேல் என்கிற இரண்டு சிறப்பான ஆபரேட்டர்கள் சென்னைக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே எங்கள் ஏழெட்டுப் பேரை வேலைக்குச் சேர்த்தார்கள் என்பதே அது. (இப்போது என்னையும் அனுப்புவதால் ஏற்படப் போகிற வெற்றிடத்தை நிரப்ப இன்னும் எத்தனை பேரைச் சேர்ப்பார்களோ என்றொரு எண்ணமும் மனத்தில் ஓடியது). அவர்களில் ஒருவனான சுந்தரேசன் என்பவன், மதுரைக்கு லீவில் வந்து, டைபாய்டு காய்ச்சல் என்பதைக் காரணம் காட்டி, லீவைத் தொடர்ந்து எக்ஸ்டெண்ட் செய்து கொண்டேயிருக்க, அவன் ரிசைன் செய்துவிடுவானோ என்று சென்னை மேலிடம் அச்சப்பட்டு, மதுரையில் கேட்க, அவனுக்கு மாற்றாகத்தான் நாங்கள் இரண்டு பேரும் அனுப்பப்படுகிறோம் என்கிற ராஜ ரகசியத்தை பெரிய மனது பண்ணி வெளியிட்டார் அ.பொ. அதுவும், ட்ரான்ஸ்பருக்கான சகல சமாச்சாரங்களையும் கையில் பெற்றுக் கொண்டு நாங்கள் வெளியேறும் தருணத்தில்.

எங்கள் செக்ஷனுக்குச் சென்று எங்கள் பேட்ச் ந(ண்)பர்களிடம் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, அங்குள்ள மூத்தவர்களிடம் கேட்டு, அந்தச் சுந்தரேசனின் மதுரை முகவரியைப் பெற்றுக் கொண்டோம். மறுதினம் சென்று அவனைச் சந்தித்தோம். பலத்த காற்றடித்தால், மதுரையிலிருந்து சென்னைக்கு எந்த வாகனமும் இல்லாமல் பறந்து விடுகிற சைஸில் இருந்தான் அவன். “டைபாய்டு வந்தா இப்டிக் கூட இளைக்க வெச்சிடுமா என்ன..?” என்ற என் வியப்பான கேள்விக்குப் புன்னகைத்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்ல மக்கா. நான் எப்பவுமே இப்டித்தான். உங்களுக்கே அது வந்தாலும் நீங்க இளைக்கல்லாம் மாட்டீங்க…” என்றான் என் ‘இளந்தொப்பை’யில் பார்வையைப் பதித்தபடி. ‘அடப்படுபாவி, நல்ல வார்த்தையே வராதா உன் வாய்ல’ என்று மனத்திற்குள் புலம்பியபடி, நாங்கள் அவனுக்குப் பதிலாக பலியாடாகச் சென்னை செல்லவிருப்பதை எடுத்துரைத்தோம்.

சென்னை வாழ்க்கை என்பது நாங்கள் அஞ்சி நடுங்குவது போல் ஒன்றுமே இல்லை என்றும், சில நாட்கள் அங்கிருந்தால் அவ்வூர் பழகிவிடும், அதை நேசிக்கவே ஆரம்பிப்போம் என்றும் பலவிதமாகச் சொல்லி தைரியம் தந்தான் அவன். “நீங்க போய் ஜாயின் பண்ணுங்க. ஒரே வாரம்… நானும் வந்து சேர்ந்துடுவேன். நான் பாத்துக்கறேன்..” என்றான். “என்னத்த பிரதர்… நேரத்துக்குத் தின்னு பழகினவங்க நாங்க. இவங்க குடுக்கற சம்பளம் அந்தூர்ல சாப்பாட்டுக்கே பத்தாதோன்னு மைல்டா ஒரு டவுட்டு..” என்று நான் இழுக்க, “கவலைப்படாதீங்க. அங்க தங்கியிருக்கற ஆளுங்கல்லாம் சேர்ந்து மளிகை சாமான் வாங்கி, சமைச்சுப்போட ஒரு லேடிய ஏற்பாடு பண்ணிருக்காங்க. ஷேரிங்ல வர்றதால மாசம் நானூறு, நானூத்தைம்பது ரூபாதான் வரும். அந்த ஜோதியில நீங்களும ஐக்கியமாய்டுங்க..” என்று சிரித்தான்.

ஆகக்கூடி.. நாங்கள் புறப்பட்டே தீரவேண்டும் என்பதும், சென்னை எங்களை வரவேற்கிறது என்பதும் நிச்சயமானது. என்னுடன் இணைந்து மாற்றலான சக துணைவனின் தாத்தா ஒரு வைதீகர். அந்த சாஸ்திரிகள் நாள், நேரம் பார்த்துச் சொன்னதை வைத்து, அதற்கடுத்த நாள் இரவில் சென்னை புறப்படப் பேருந்திலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது.

இப்போது சென்னையில் இருபதாண்டு காலமாக வசித்துவரும் அடியேனுக்குச் சென்னை பழகி விட்டது, பிடித்துக்கூட இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும், அது இரண்டாம் முறை படையெடுப்பிற்குப் பின்னர்தான். நான் இப்போது சொன்ன விஷயங்கள் ப்ரெஷ்ஷராக மதுரையிலிருந்து புறப்பட்ட முதலாம் படையெடுப்பு. இதில் எனக்கு அமைந்த சென்னை உவப்பானதாக இல்லை. ‘சென்னை என்னை போடா வெண்ணை என்றது’ என்று வசனம் பேசிய நடிகர் விவேக்கின் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும்- துரதிர்ஷ்டவசமாக அவர் இன்றில்லை.

இப்படியாகத்தானே ஒரு சுபதினத்தில் சுப நேரத்தில், மதுரைப் புழுதியில் உருண்டு புரண்டு வளர்ந்த நானானவன், ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் விஜய்யும், சூர்யாவும் வந்து இறங்குவார்களே… அதைப்போல புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் சென்னை மண்ணில் கால் பதித்தேன். 

‘முதல் மரியாதை’ படத்தில் ராதா மண்ணில் கால் பதித்ததும், ந.தி.யின் உடல் உதறிக் கொள்ளுமே… அதுபோல சென்னையில் யாருக்கு உதறியிருக்குமோ அறியேன். எனக்குத்தான் சென்னையில் கால் பதித்ததும் உடலெல்லாம் உதறியது. உதறாமல் என்ன செய்யும்..? காலை நான்கரை மணி அப்போது. கன்னாபின்னாவென்று பனி பெய்து கொண்டிருந்தது. ஹி.. ஹி… அதனால்தான்.

நாங்கள் இறக்கி விடப்பட்டது கிண்டியில். அங்கிருந்து பேருந்து பிடித்து சைதாப்பேட்டை சென்றுசேரச் சொல்லியிருந்தார்கள். எந்தப் பேருந்து அங்கே போகும், எங்கே சென்று ஏறுவது என்பதெதுவும் தெரியாமல் ‘ழே’யென்று விழித்தபடி நாங்கள் நின்றிருந்த அந்த அதிகாலையுடன் இந்தப் பகுதியை நிறுத்திக் கொள்ளலாம். அதன்பின் நடந்தவை அடுத்த பகுதியில்….

(சரக்கு இன்னும் உண்டு…)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button