இணைய இதழ்இணைய இதழ் 68தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 15 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

இரண்டாம் படையெடுப்பு

கோவைக்கு ஒருமுறை ‘பறக்கும் வருகை’யாகச் சென்று வந்த அனுபவம் மட்டுமே என்னிடமிருந்தது. மற்றபடி, எந்தவொரு ஏரியாவும், தெருக்களும், இன்னபிற விவரங்களும் பூஜ்யம். பரிபூரண அன்னியனாக அந்நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன். வழக்கம்போல விசாரித்தறிந்தே ஊரை அறிந்தேன். ஆனால், கோவை ஆச்சரியப்படுத்தியது. யாரிடம் வழி கேட்டாலும் இன்முகத்துடன், இனிமையாகப் பேசி வழிகூறினார்கள்- சரியாகவும் கூறினார்கள்.

என் வாழ்நாள் முழுமைக்குமான மூன்று நெருங்கிய நண்பர்கள் நான் கோவையில் வாழ்ந்த அந்த நான்காண்டுகளில்தான் எனக்குப் பழக்கமானார்கள். அந்த வகையில் கோவையை வாழ்நாளில் மறக்க இயலாது. ஒருவன் திருநெல்வேலிக்காரன். மற்றொருவன் என்னைப் போல் மதுரைக்காரனாயிருந்து கோவையில் செட்டிலானவன். மூன்றாமவன் கருவூர் வஞ்சி (இன்றைய நாளில் அதன் பெயர் கரூர்)யிலிருந்து வந்தவன். கோவையில் வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கியவர்கள் இவர்கள்.

அந்த மதுரைக்கார இளைஞன் என்னைவிட வயதில் இளையவன். புதிது புதிதாக எதையாவது செய்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் துடிப்புடனும் இருந்தவன். திடீரென்று ஒருநாள் கேட்டான். “இவ்வளவு புக்ஸ் படிக்கறீங்களே… கோவைலதான் ராஜேஷ்குமார் இருக்கார். போய்ப் பாக்கலியா..?” என்று. அது மாத நாவல்களின் வசந்தகாலம். மாதத்துக்குச் சுமாராக இருபத்தைந்து நாவல்கள் வெளியாகும். அவற்றில் நான்கு அல்லது ஐந்து ராஜேஷ்குமாருடையதாகத்தான் இருக்கும். எப்படி இந்த மனிதர் எழுதிக் குவிக்கிறார் என்ற பிரமிப்பு எப்போதும் எனக்குள். அவருக்குச் சிலபல கடிதங்களும் எழுதியிருந்தேன்- வாசக நிலையில்.

இந்தச் சமாச்சாரங்களையெல்லாம் சொல்லி, “பாக்கணும்னு விருப்பம்தான். ஆனா, கோவைல அவர் எங்கருக்கார்ன்னு யாருக்குடா தெரியும்..?” என்றேன். “கண்டுபுடிச்சுட்டாப் போகுது..” என்றவன், டெலிபோன் டைரக்டரியில் தேடி, ஏதோ ஒரு எண்ணைக் கண்டுபிடித்து டயல் செய்தான். “ராஜேஷ்குமார் சாரோட பேசணும். அவரோட போன் நம்பர் கிடைக்குமா..?” என்று கேட்டான். அது ஏதோ டெலிபோன் சேவை, அங்கே தருவார்கள் என்று காத்திருந்த நேரம் என்னிடம் சொன்னான். அவர்கள் ராஜேஷ்குமார் என்ற பெயரில் இருப்பதாக இரண்டு எண்கள் தந்தார்கள். 

“பாத்தீங்களா..? எவ்ளவு ஈசியாக் கண்டுபுடிச்சேன்..?” என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான் அந்த அர்ஜுனன். அந்த எண்ணுக்கு டயல் செய்ததுமே பல்பு வாங்கினான்- காரணம்… அந்த இரண்டு ராஜேஷ்குமார்களும் வடக்கத்தி சேட்டுகள். ஏற்றிவிட்டுக் கொண்ட காலர் தொங்கிப் போனது. நான் கேலியாக அவனைப் பார்த்தேன். “அப்டிப் பாக்காதீங்க சார். நாளைக்குள்ள எப்டியாச்சும் கண்டுபுடிச்சிடறேன் பாருங்க..” என்றுவிட்டு அவன் தங்கியிருந்த அறை நோக்கிச் சென்றான்.

எமப்பயல்… மறுநாள் எப்படியோ குட்டிக்கரணமடித்து ஆர்கேயின் விலாசத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்தான். போனில்தான் மனிதரைப் பிடிக்க முடியவில்லை, நேரிலேயே போய்க் கதவைத் தட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தோம். அவன் முன்பே கோவைவாசியாகி விட்டிருந்ததால் ஏரியாக்கள் அத்துப்படி. காலையில் பத்து மணிக்குப் போய் அவர் வீட்டைக் கண்டுபிடித்தோம்.

அவரின் திருமதியார் வரவேற்றார். “அவர் மேல் ரூம்ல எழுதிட்டிருக்கார். போய்ப் பாருங்க..” என்று மாடிக்கு வழிகாட்டினார். மேலே போனோம். வெளியே ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே மறந்தவராய் எழுதுவதில் மூழ்கியிருந்தார் ராஜேஷ்குமார். மெல்லக் கனைத்து, வணக்கம் சொன்னேன். பேனாவை மூடி வைத்துவிட்டு, “வாங்க, வாங்க..” என்றார். அறிமுகம் செய்து கொண்டோம். என்னை அவர் நினைவில் வைத்திருந்தது ஒரு கூடுதல் வியப்பு அன்று. இனிமையாக, கலகலப்பாகப் பேசினார். இன்று எத்தனையோ சிகரங்களைக் கடந்த பின்னும் அதே எளிமையுடன்தான் இருக்கிறார், பேசுகிறார் அந்த அதிசய மனிதர். அன்று கொஞ்ச நேரம் பேசியதுமே கிளம்பலாம் என்று அர்ஜுனனுக்குக் கை காட்டினேன். காரணம், அவர் எழுத்துப் பணியை நாங்கள் பாதியிலேயே நிறுத்தியிருந்ததை உணர்ந்ததால். “சார், உங்க கையெழுத்தைப் பாக்கணும்னு ஆசையாருக்கு. அதைப் பாக்கலாமா?” என்று அவர் எழுதிக் கீழே வைத்த பேப்பர்களைக் கைகாட்டினான் அவன். “ஓ, தாராளமா..” என்று எடுத்துத் தந்தார். அதை அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, “ஸாரி ஸார். நல்ல ப்ளோல எழுதிட்டிருந்தீங்க. குறுக்க வந்துட்டோம். இனி மறுபடி எழுத ஆரம்பிச்சா அதே ப்ளோ கிடைக்குமான்னு…” என்று உண்மையிலேயே வருந்திய குரலில் ராகமிழுத்தேன்.

“நோ… நோ… கதைங்கறதை என் மனசுல முழுசா ஃபார்ம் பண்ணி வெச்சிருப்பேன். அதுக்கப்பறம்தான் எழுதவே ஆரம்பிப்பேன். அதுனால, எப்ப வேணாலும், விட்ட எடத்துலருந்து வேகம் குறையாம எழுத என்னால முடியும். வருத்தப்படாதீங்க..” என்று புன்னகைத்தார். அன்றைய தினத்தின் வியப்புகளில் அதுவும் ஒன்று. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டோம்.

அஃதோர் இனிய ஆரம்பமென்றே சொல்ல வேண்டும். அதன்பின் அவரது நாவல்களைப் படித்தால் விமர்சித்துக் கடிதம் எல்லாம் எழுதுவது நின்றே போனது. நேரே பஸ் பிடித்து வீட்டுக்குச் சென்று நாவலின் + – களைப் பற்றி உரையாடிவிட்டுத் திரும்புவது வழக்கமாகிப் போனது. எந்தச் சூழ்நிலையிலும் எப்போது போனாலும் அதே உபசரிப்பு, அதே கனிவான பேச்சு. வாசகர்-எழுத்தாளர் என்ற நிலையைத் தாண்டி நண்பர்கள் என்ற உறவானது கனிந்துவந்த காலம் அது. இன்றுவரை தொடரும் அந்த பந்தத்தை விவரிக்க வேண்டுமென்றால் தனிப்புத்தகமாகத்தான் எழுத வேண்டியிருக்கும்.

இந்தவொரு விஷயம் தவிர்த்து, கோவையின் க்ளைமேட், அங்குள்ள தியேட்டர்கள், மனிதர்கள் எல்லாமே பிடித்திருந்தது எனக்கு. என்ன ஒன்று… நான் வாங்கிய சம்பளத்துக்கு, ‘கையில வாங்கினேன், பையில போடலை, காசு போன எடம் தெரியலை’ என்று தங்கவேலு ஒரு படத்தில் பாடுவாரே… அதே நிலைதான். மாதக் கடைசியானால் மைனர் ஜாலி, பாக்கெட் காலி என்கிற நிலை. விழி பிதுங்கும். இதுபற்றி ஒருமுறை ஆர்கேயிடம் சலித்துக் கொண்டபோது அவர் சொன்னார். “அப்டிச் சொல்லாதீங்க கணேஷ். இது லக்ஷ்மி வாசம் செய்யற ஊர். கொஞ்ச நாள்ல நீங்களும் செழிப்பாய்டுவீங்க பாருங்க. அப்ப நெனச்சா நாமளா இப்படிச் சொன்னோம்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.” 

அவர் சொன்னதிலென்னவோ உண்மை கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஒற்றையாளாகச் சமாளிக்கக் கஷ்டப்பட்டது போக, குடும்பஸ்தனாக ஆகியும், வாடகை, மளிகை, இதர செலவுகள் எல்லாவற்றையும் சமாளிக்கிற அளவுக்கு… எப்படிச் சொல்ல..? வாழ்க்கைத் தரம் உயரவில்லையென்றாலும் சமாளிக்கிற அளவுக்கு வருமானத்தைக் கொண்டுவர நான் பழகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் இப்போதிருந்த கோவை அலுவலகம் ரிமோட் கண்ட்ரோலில் இயங்குவது- இன்றளவும். ரிமோட்டை மதுரையிலிருந்து எம்டி ஹேண்டில் செய்வார். எனவே, அவருக்குக் காட்டப்படும் பிம்பம் வேறு. நிஜத்தில் இருக்கும் பிம்பம் வேறு. போலியாக நடிக்கத் தெரியாததால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, திருப்பூருக்குத் தூக்கியடிக்கப்பட்டேன். கோவையைவிட அதிகபட்ச வாழ்க்கைத்தரச் செலவுகளைக் கொண்டிருந்த திருப்பூரில் ஓராண்டுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை. அங்கிருந்தும் ஓடிவிட்டேன்- வழக்கம்போல் ராஜினாமாக் கடிதம் தந்துவிட்டு.

அதன்பின் திருநெல்வேலியில் இரண்டாண்டு காலம் வாழ்க்கை ஓடியது- அப்போது என் அண்ணன் திருநெல்வேலியில் வேலை செய்து கொண்டிருந்ததால். இந்தத் தருணத்தில்தான் நான் எழுத்தாளர்கள் சுபாவுக்காக சிறுபணி ஒன்றைச் செய்து கொண்டிருந்தேன். எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவது என்கிற விஷயத்தில் நான் அதிகம் எழுதிய ஆசிரியர்(கள்) சுபாதான். வாசகன் என்ற அறிமுகத்தைத் தாண்டி என்னைப் பற்றிய அத்தனை விவரங்களும் சுபாவுக்குத் தெரியும். அவர்கள் இருவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் நான் அறிவேன். (எழுத்தாளர்களுடனான என் நட்பைப் பற்றிக் குறிப்பிடக் காரணமுண்டு. தொடர்ந்து என்னுடன் வந்தால் புரிந்து கொள்வீர்கள்.)

இந்திரா சௌந்தர்ராஜன்

அப்போது செய்து கொண்டிருந்த பணி, அதுவரை வெளியான சுபாவின் சிறுகதைகளை தட்டச்சு செய்து மின்பிரதியாக்குவது. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள்- என்னிடமோ சொந்தமாகக் கம்ப்யூட்டர் இல்லை. மேலே நான் குறிப்பிட்ட கரூர் நண்பனும் அப்போது கம்பெனியிலிருந்து விலகி, தனியாக டிடிபி சென்டர் வைத்திருந்தான் அவன் ஊரில். எனவே, நான் அடிக்கடி கரூர் ட்ரிப் அடித்து, நான்கைந்து நாட்கள் தங்கி டைப்பிங் செய்து வருவேன். மிச்ச நாட்களில் நேரம் கிடைக்கையில் அவன் செய்வான். இப்படியாகத்தானே காலம் சென்றது.

காலம் மட்டும் செல்லவில்லை வேகமாக. நிறுவனத்தின் தயவால் எனக்குப் பல ஊர்களும், அங்கெல்லாம் நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள். இன்றைய தேதிக்கு எந்த ஊருக்கு நான் சென்றாலும் அது எனக்குப் புதிதல்ல, ஏரியாக்கள், தெருக்கள் தெரியும் என்கிற நிலை. அந்தளவில் நிறுவனத்திற்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இப்போதுதான் நான் அங்கே வேலையில் இல்லாத, சுதந்திர மனிதனாயிற்றே. செய்த வேலையை ஒப்படைக்க அவ்வப்போது சென்னைக்கு சுபாவைச் சந்திப்பதற்கான ட்ரிப்பும் நடக்கும். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோட் எழுதித் தள்ளிய தேவிபாலாவுக்கு ஒரு பாராட்டு விழா சென்னையில் நடக்கவிருந்த சமயம், அதற்கேற்பத் திட்டமிட்டு விசிட் அடித்தோம் நானும் என் நண்பனும். சுபாவைப் பார்த்துப் பேசிவிட்டு, அந்த விழாவுக்கும் சென்று வந்ததில் தேவிபாலா மற்றும் இந்திரா சௌந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

இந்திரா சௌந்தர்ராஜனின் இல்லம் அப்போது பைகாரா ஏரியாவில் இருந்தது. டிவிஎஸ் நகரிலிருக்கும் என் சித்தி வீட்டிலிருந்து ரயில்பாதையை ஒட்டி நடந்தால், ட்ராபிக் சிக்கலின்றி எளிதாக ஐந்தே நிமிடங்களில் அவர் இல்லத்தை அடைந்து விடலாம். அப்படிப் பலமுறை சென்று நிறைய உரையாடியதில் அவர் மிகவே நெருக்கமானார். அப்போது அவர் புகழ்பெறத் தொடங்கியிருந்த சமயம். அவரது கதைகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பதை மிக வரவேற்பார். என் ரசனைகள், பேச்சு அவருக்குப் பிடித்தது போலவே, எழுத்தைத் தவிர, நீங்களறியாத பல திறமைகளையும் அவரிடம் கண்டு வியந்து ரசித்தேன். அதில் ஒன்று இப்போது நீங்கள் அறிந்தது- ஆன்மீகப் பேச்சாளர்.

சுபாவின் ப்ராஜக்ட் முடிந்ததும், திருநெல்வேலியில் இருக்க என் மனம் சலித்துவிட்டது. தனிப்பட்ட குடும்பப் பிரச்னையும் ஒரு காரணம். வருமானம் நிறையக் கிடைத்து ஓரளவு மூச்சு முட்டாத வாழ்க்கை வேண்டுமானால் அதற்குச் சென்னையில்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்று என் மனம் சொல்லியது. சென்னையின் மீது இரண்டாவது முறையாகப் படையெடுப்பது என்றும், இனி அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்றும் அழுத்தமான முடிவெடுத்தேன். சாண்டில்யன் கதைகளில் வருவது போல விதி என் வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து ‘கிக்கிக்கி’ என்று அடக்க முடியாமல் சிரித்ததை அப்போது உணரும் சக்தி எனக்கில்லாது போயிற்று.

-சென்னை வந்த மதுரை வெண்ணெய் என்ன ஆனது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(சரக்கு இன்னும் உண்டு…)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button