சிறுகதைகள்

பாறாங்கல் – வில்லரசன்

சிறுகதை | வாசகசாலை

“தலைசுத்துது தம்பி. கண்ணு ரெண்டும் மங்கலா தெரியுது, மூட்டெல்லாம் வலிக்குது. எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக மாட்டேங்குது”, எனக் கண்களைக் கசக்கியபடியே எதிரே இருக்கும் யுவராஜிடம் கூறி முடித்தார் அந்த வயது முதிர்ந்தவர். அவர் கூறிய அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு யுவராஜ், அவனுக்கும் அந்த முதியவருக்கும் இடையில் உள்ள கண்ணாடி டேபிலுக்குள் காட்சியளிக்கும் மாத்திரை பெட்டிகளைத் திறந்து, மாத்திரைகளை கத்திரி மூலம் வெட்டி, அவைகளை ஓர் காகிதப் பையில் போட்டு முதியவரிடம் நீட்டினான். “தாத்தா அம்பது ரூபா ஆச்சு”, என்றான் யுவராஜ். அந்த முதியவர் சட்டைப் பையில் வைத்திருந்த ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மாத்திரைகளை பெற்றுக்கொண்டு வெளியே சென்றார். அவர் வாயிலிடம் சென்று வெளியேறும் வரை எட்டிப்பார்த்த யுவராஜ் “ம்ம்ம் போற போக்க பாத்தா மெடிக்கல் ஷாப்லேயே ஆபரேஷனும் பண்ண சொல்லுவாங்க போல. ஹாஸ்பிடல்னு ஒன்னு இருக்குறது இவங்களுக்கு தெரியுமா தெரியாதா?”, என கேள்வி எழுப்பியவன். “பாவம் அவங்க என்ன செய்வாங்க டாக்டர்கிட்ட இருநூறு முன்னூறு கொடுக்கறதுக்கு இந்த ஐம்பது ரூபாவ செலவு செஞ்சிட்டு போக நினைக்குறாங்க போல”, என அவர்கள் மீது இரக்கப்படவும் செய்தான். யுவராஜ் சில காலமாகவே அவனை ஓர் டாக்டராக மனதில் ஓவியம் தீட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டான். அந்த ஓவியம் ஏழை மக்களின் நோய் போக்கும் இளைஞன் ஒருவனது ஓவியம். தலைவலி வயிற்றுவலி என எந்த வலியுடைய மக்கள் வந்தாலும் தகுந்த மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கும் போது அவனுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி குடி கொள்ளும். ஏதோ சாதனை புரிந்தது போலவே தோன்றும் அவனுக்கு. கஷ்டம் என்று வருவோருக்கு கைகொடுக்கும் பணி, கடவுளின் பணி என்றால் அவனும் கடவுள் தானே?

யுவராஜ் ஓர் இருபத்தி ஐந்து வயது இளைஞன். பட்டப்படிப்பை முடித்துவிட்டு படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத பல உத்தியோகத்தில் சேர்ந்து பணி செய்தவன். எதுவும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. இறுதியாக தன் உற்றார் உறவினரிடம் எல்லாம் கடன் பெற்று முட்டி மோதி ஒருவழியாக தன் படிப்பிற்கு தொடர்புடைய இந்த மெடிக்கல் ஷாப்பை வைத்து வியாபாரம் செய்து வருகிறான். அவன் கடை வைத்திருக்கும் இடம் சென்னைக்கு புறம்படி ஆகும். பரபரப்பான நகரத்தார் அங்கு இல்லாவிட்டாலும் அவனது மெடிக்கல் ஷாப்பிற்கு நல்ல வியாபாரம் நடந்தது. நகர மக்களோ கிராம மக்களோ உடல் உபாதைகள் யாரை விட்டது? படித்த படிப்பிற்கு ஏற்ப ஒரு மெடிக்கல் ஷாப். அதில் நல்ல வருவாய், சொந்தமான பைக் ஒன்றை இப்போதுதான் வாங்கினான். அடுத்து என்ன? அதேதான் எல்லா ஆண்மகன் வாழ்வில் நடக்கும் வழக்கமான சம்பவம் தான் அது.திருமணம். யுவராஜின் பெற்றோர் தன் மகனுக்கு நல்ல வரன் பார்த்து நிச்சயம் முடித்து விட்டார்கள். ஒரு சில மாதங்களில் அவனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. இதுதான் யுவராஜின் வாழ்க்கை. அன்றும் அவன் வழக்கம் போல் காலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். பகல் முழுக்க கூட்டம் நிரம்ப காணப்பட்ட அவனது மெடிக்கல் ஷாப், கடிகார முள் இரவு ஒன்பது முப்பதுக்கு பயணித்ததும் வெறிச்சோடி காணப்பட்டது. சற்று முன்பு வந்து சென்ற முதியவரே இறுதியான வாடிக்கையாளர் போல் தோன்றியது யுவராஜுக்கு. அந்த முதியவர் சென்ற பின் தன் கல்லாப் பெட்டியை திறந்து அதற்குள் ஐம்பது ரூபாய் நோட்டை போட்டவன் “டேய் சிட்டு டீ சாப்பிடுவோமா டா?”, என்றான். அவனது கேள்விக்கு பதில் வரவில்லை. யுவராஜ் கல்லாப் பெட்டியில் இருந்து கவனத்தை இடது புறம் திருப்ப, அங்கு அவனை விட வயது இளையவனாக காணப்படும் சிட்டி பாபு என்கிற சிட்டு என்பவன் எதிரே கடையின் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியை வாயை பிளந்துகொண்டு பார்த்தபடி, கண்ணாடி மேஜை மீது சாய்ந்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். யுவராஜ் அவனைப் பார்த்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்தான். அதில் ஒரு திருட்டு காட்சி ஓடிக் கொண்டிருந்தது. நல்ல விறுவிறுப்பான காட்சி அது‌. சில நொடிகள் அதை கவனித்துவிட்டு மீண்டும் கவனத்தை சிட்டுவின் மீது திருப்பியவன், கண்ணாடி மேஜை மீது இருக்கும் கணக்குப் புத்தகத்தை எடுத்து சிட்டுவின் தலையில் நொட்டென்று அடித்தான். சிட்டுவின் தலை முன் சென்று பின் வந்தது. தன்னை அடித்த யுவராஜனை கண்ட சிட்டு “அண்ணா என்ன னா எதுக்கு இப்படி அடிக்கிற? கூப்பிட்டா திரும்ப போறேன்”, என முகம் சுளித்துக்கொண்டான்.

“ம்ம்ம் சரியா போச்சுப்போ. படிச்சு முடிச்சிட்டு கஷ்டப்படுறியேனு வேலை போட்டு கொடுத்தா வியாபாரத்தை பார்க்காமல் நாள் பூரா டிவியே கதினு கிடக்க வேண்டியது. அப்படி என்னதாண்டா அதில இருக்கு. பேசாம நீ சினிமாக்காரனா போலாம். மெடிக்கல் ஷாப்ல ஏன் நேரத்த வீணாக்குற?”, என கடிந்து விட்டு பின் திரும்பி கலைந்திருக்கும் மாத்திரை அலமாரியை சீர் செய்யத் தொடங்கினான் யுவராஜ்.

“எனக்கும் ஆசைதான் னா. என்ன பண்றது. என்ன மாதிரி அழகா திறமையா இருக்கிற ஹீரோக்கல எல்லாம் தமிழ் சினிமா புறக்கணிச்சிட்டே வருது. அதான் கிடைக்கிற வேலையை பாக்குறேன். நீ வேணும்னா பாரேன் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் நடிக்கிற சினிமா வெளியே வரத்தான் போகுது அதுக்கு அப்புறம் என் ரேஞ்சே வேற லெவல். நீ கூட என்ன பாக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியதிருக்கும்”, என்றான். சிட்டு விற்கு சினிமா என்றால் கொள்ளைப் பிரியம். காலேஜ் படிக்கும்போது இருந்தே பல டைரக்டர்கள் வீட்டு படிகளில் ஏறி இறங்கி ஏறி இறங்கி உடற்பயிற்சி செய்தவன் அவன்.

“அடேய் சிட்டு உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது டா”, என்றான் மாத்திரை அலமாரியை சீர் செய்து கொண்டிருந்த யுவராஜ். அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டான் சிட்டு. அது அவனது முகத்திலேயே தெரிந்தது. பிறகுப் பேச்சை மாற்ற விரும்பியவன் சிரிப்புடன் “குருவி எல்லாம் இருக்கட்டும் னா. உன்னோட மயில பத்தி கொஞ்சம் சொல்லுனா”, என குறும்பு முறுவலுடன் கேட்டான் சிட்டு. அவனைப் பார்த்த யுவராஜ் “மயிலா என்ன சொல்ற? நான் எந்த மயில வளர்க்குறேன்”, எனக்கேட்டான். “நீ நைன்டீஸ் கிட் ல. மறந்துட்டேன். அதான்னா என் அண்ணியை பத்தி தான். நிச்சயம் முடிஞ்சிடுச்சு சீக்கிரம் கல்யாணம் வேற. ம்ம்ம் ம்ம்ம் நைட் பூரா போன்ல ஒரே கடலையாமே. மதியம் சாப்பாடு கொடுக்க வந்த அம்மா சொல்லி பொலம்பிட்டு இருந்தாங்க. உங்க அண்ணன் கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியே பொண்டாட்டி தாசன் ஆயிட்டான்னு”, என்றான் அதே குறும்பு மற்றும் கேலி சிரிப்புடன். சிட்டு அவ்வாறு கேட்டவுடன் யுவராஜுக்கு வெட்கம் வந்துவிட்டது. தன் வருங்கால மனைவியை நினைத்து தன்னையறியாமல் சிரித்தான். அப்போது சிட்டு வழக்கம்போல் தன் வேலையை தொடங்கினான். யுவராஜின் மனநிலையையும் முகபாவனையும் கண்டறிந்தவன் அந்த சீனுக்கேற்ப கையில் வைத்திருந்த ரிமோட்டை உபயோகித்து தொலைக்காட்சியில் காதல் பாடல் ஒலிக்கும் சேனலை மாற்றி சிச்சுவேஷன் சாங் வைத்தான். பிற்பாடு சத்தத்தையும் சற்று ஏற்றினான். யுவராஜ் மெய்யாகவே அந்த சூழ்நிலையில் மெய்மறந்த நிலையில் இருந்தான். காலையிலிருந்து மாத்திரை மருந்து அவைகளின் வாசம் கல்லாப்பெட்டி மனிதர்கள் போன்றவற்றைக் கண்டு சோர்வுற்று கிடந்த அவனது மனம் அந்த இரவு வேளையில் தன் வருங்கால மனைவியின் இனிய குரலையும் சிரிப்பு சத்தத்தையும் எண்ணி ஏங்கியது. இப்போதே அவளுக்குப் போன் செய்து பேச வேண்டும் எனத் தோன்றியது. கடையை சாத்திவிட்டு கிளம்ப எண்ணினான். அப்போது மெடிக்கல் ஷாப்பின் கதவு “கியாங்ங்ங்” என்கிற சத்தத்துடன் திறந்தது. வாடிக்கையாளர் யாரோ வருவதை அறிந்து தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்தான் சிட்டு. கற்பனையில் இருந்த யுவராஜ் பின் திரும்பி கதவைப் பார்த்தான். அங்கு உருவத்தில் பெரிய மனிதன் ஒருவன் பாறாங்கல்லை போல் திடமாக நின்று கொண்டிருந்தான். ஆறடிக்கு மேல் வளர்த்திருக்கும் உயரம். கீழாடை ஓர் கரைவேட்டி. மேலாடை கட்டம் போட்ட சட்டை. மீசை இல்லை தாடியும் இல்லை ஆனால் தலைமுடி மட்டும் கருமேகம் போல் எசகு பிசகாக வளர்ந்து முகம் தலை என நாலாபுறமும் வழிந்து கொண்டிருந்தது. வழியும் முடிக்குள் தெரிந்த அவனது இரு கண்கள், அப்பப்பா அது மனிதக் கண்களே அல்ல ஆந்தை கண்கள். அந்தக் கண்களால் யுவராஜையும் சிட்டுவையும் பார்த்துவிட்டு கடையை சுற்றும் முற்றும் ஆராய்ந்தான். யுவராஜ் சிட்டுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவரது பார்வையும் யார் இவர் என்கிற கேள்வியையே வெளிப்படுத்தின. பிறகு கதவிடமே நிற்கும் அந்த மனிதனை நோக்கி “சார் என்ன வேணும்?”, எனக் கேட்டான் யுவராஜ். மெடிக்கல் ஷாப்பின் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம மனிதனின் விழிகள் யுவராஜை நோக்கி திரும்பின. யுவராஜுக்கு திக்கென்று இருந்தது. சிட்டுவும் திடுக்கிட்டான். ஏனென்றால் அந்த பாறாங்கல் மனிதன் அப்படி ஒரு பார்வையை அவர்கள் மீது வீசினான்.

பிறகு அவன் யுவராஜ் நிற்கும் மேஜையின் முன் வந்து நின்றான். அப்போது அவனை நன்கு ஆராய்ந்த யுவராஜும் சிட்டுவும் அருவருத்து போனார்கள் ‌‌. ஏனென்றால் அந்த பாறாங்கல் மனிதனின் உடலில் ரோமங்களே இல்லை. பளபளவென பெண்ணின் உடல் போன்று காட்சியளித்தது. அவனை பார்பதற்கே விசித்திரமாக இருந்தது. அதை பொருட்படுத்தாமல் சற்று தயக்கத்துடனே “என்ன வேணும் சார்?”, என மீண்டும் கேட்டான் யுவராஜ். அதற்கு அவன் வலது கையை நீட்டினான். உள்ளங் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு அதில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. புரிந்துகொண்ட யுவராஜ் “இதுக்கு மருந்தா சார்?”, என்றான். பயங்கரமான உருவத்தில் தலை மாத்திரம் முன்னும் பின்னும் அசைந்து ஆம் எனச் செய்கை செய்தது. யுவராஜ் பின் திரும்பி மருந்து எடுக்க முனைய, சிட்டு அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தான். “ஏன் இந்த ஆளு வாயை திறந்து பேச மாட்டானா? ஆளே பார்க்க ஒரு சைசா இருக்கானே? பார்த்தாலே பயமாக இருக்கு உடம்பு பூரா முடியவே காணோம் யார் இவன்?”, என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான். பிறகு சிட்டுவின் பார்வை அந்த மனிதனின் வயிற்றிடம் சென்றது. அங்கு அவன் வயிற்றில் ஏதோ ஒன்று புடைத்த வண்ணம் காட்சியளித்தது. அவன் சட்டைக்குள் எதையோ மறைத்து வைத்திருப்பது போல் தோன்றிற்று சிட்டுவிற்கு. யுவராஜ் அந்த பாறாங்கல் மனிதனின் காயத்திற்கு மருந்து மாத்திரைகளை காகிதக் கவரில் போட்டு மேசை மீது வைத்தான். “முப்பது ரூபா சார்” தெரிவித்தான் யுவராஜ். அந்த மனிதன் பணம் கொடுக்க முதலில் சட்டை பையில் விரல்களை நுழைத்தான். அங்கு பணம் இல்லை பிறகு வேட்டிக்குள் அணிந்திருக்கும் டரவுசரில் இருந்து பணத்தை எடுக்க முயன்றான். அப்போது ஏதோ ஒன்று கீழே விழுந்து கலகலவென்று சத்தம் எழுப்பியது.இரும்பின் சத்தம் அது.அந்த பாறாங்கல் மனிதனிடம் இருந்து விழுந்தது அது. யுவராஜும் சிட்டுவும் எட்டி கீழே பார்த்தார்கள். கீழே அந்த மனிதனின் கால்கள் அருகே கத்தி ஒன்று கிடந்தது. கடையின் டியூப்லைட் வெளிச்சத்தில் அது மின்னியது. கீழே விழுந்த கத்தியை எடுத்து இடுப்பில் மறைத்த அந்தப் பாறாங்கல் மனிதன் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்துவிட்டு மருந்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். வெளியே சென்றவன் ஒரு நொடி பின் திரும்பி கடையை சுற்றும் முற்றும் தன் கண்களால் துழாவினான். பிறகு அங்கிருந்து முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்த யுவராஜ், சிட்டுவைப் பார்த்தான். சிட்டுவின் முகமும் அச்சம் சூழ காணப்பட்டது. அதே முகத்துடன் யுவராஜின் அருகே வந்தவன் “அண்ணா இந்த ஆள பார்த்தா ஏதோ தப்பா படுது னா. இவன இதுக்கு முன்னாடி இந்த ஏரியாவில நான் பார்த்ததே இல்ல. பெரிய கத்தி வேற வெச்சி கிட்டு இருக்கான். கையில வெட்டுக்காயம் வேற, ஒருவேளை சைக்கோ கொலைக்காரனா இருப்பானோ?”.

“என்னடா சொல்ற சைக்கோ கொலைகாரனா?”.

“ஆமா னா. நீ நியூஸ் எல்லாம் பார்க்கிறது இல்லையா கொஞ்ச காலமாவே சைக்கோ கொலைகாரனுங்க நைட்ல கொலை கொள்ளைனு பண்ணிக்கிட்டு வராங்களாம்‌‌. முந்தா நேத்து கூட நியூஸ்ல போட்டிருந்தான்”. என்றான் சிட்டு. சிட்டுவின் பேச்சைக்கேட்டு யுவராஜ் சற்றுத் திகில் அடைந்தான். ஒரு புறம் திகிலின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தவன் மறுபுறம் அவன் சென்று விட்டான் ஆபத்தில்லை. யாரோ ஒருவன் எங்கிருந்தோ வந்து சென்றான். நமக்கு எதுக்கு கவலை என மனம் ஆறுதல் கூறியது ‌. அதை ஏற்றுக் கொண்டான் யுவராஜ்.

“அடேய் சிட்டு நீ சினிமா பைத்தியங்குறது சரியா இருக்கு. அவன் யாரோ ஒருத்தன் கடைக்கு வந்து இருந்தான். அதான் போய்ட்டான் ல. போய் ஷட்டர பாதி இழுத்து மூடிட்டு வா கணக்க பாத்துட்டு கிளம்பலாம். பயப்படாதடா நான் இருக்கேன். என தைரியம் கூறியவன் கல்லாப் பெட்டியை திறந்தான். சிட்டு யுவராஜ் ஊட்டிய தைரியத்தை மென்றுகொண்டே மெடிக்கல் ஷாப்பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்விடமே பெரும் அமைதியில் மூழ்கி இருந்தது. அங்கு மனிதர்களின் நடமாட்டமே தென்படவில்லை. சென்னைக்கு புறம்பான பகுதியில் இது வழக்கமான ஒன்றுதான். சிட்டுவிற்கும் இது பழக்கப்பட்ட ஒன்றுதான். இருப்பினும் அன்று அந்தப் பெரும் பேரமைதி அவனுக்கு அச்சத்தை கொடுத்தது. இடது புறம் இருந்து வலது புறம் தலையை திருப்பியவன் திடுக்கிட்டு போனான். ஏனென்றால் முன்பு அவர்களது கடைக்கு வந்து சென்ற அந்த பாறாங்கல் மனிதன் தெருவின் ஓரம் நின்று கொண்டிருந்தான். தள்ளுவண்டி ஒன்றின் அருகே பேய் போல் இருளில் நின்றுக்கொண்டிருந்தான். வாயில் சிகரெட் புகையை கிளப்பிக் கொண்டிருந்தது. இவைகள் எதையும் கவனிக்காத சிட்டு அவன் கைகளில் இருந்த கத்தியையும் அதை அவன் முன்னும் பின்னும் அசைத்து எதிரே இருப்பவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கண்டு சிட்டுவின் அடி வயிறு கலங்கியது. சட்டென கடைக்குள் ஓடிச்சென்று யுவராஜ் இடம் கண்ட காட்சியை விவரித்தான்‌. முன்பு சிட்டு விற்கு ஊட்டிய தைரியத்தை யுவராஜ் கைகழுவி விட்டான். இப்போது அவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.பிறகு சிட்டுவை அழைத்துக்கொண்டு கதவிடம் சென்று வெளியே எட்டிப்பார்த்தான். அங்கு அந்த பாறாங்கல் மனிதன் புகை பிடித்த வண்ணம் அவர்களது மெடிக்கல் ஷாப்பையே பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் புற்றில் இருந்து எட்டிப்பார்க்கும் பாம்புகளைப்போல் எட்டிப் பார்த்துவிட்டு விர்ரென்று உள்ளே சென்றார்கள்.

“அண்ணா இப்ப என்ன பண்றது?”, பதை பதைத்தான் சிட்டு.  யுவராஜும் அதேதான் யோசித்துக் கொண்டிருந்தான். இப்போது என்ன செய்வது அதுதான் அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

“நான் பார்க்கும் போது யாரையோ கத்தியை காட்டி மிரட்டிட்டு இருந்தான் னா. அந்த ஆள் நிலம என்ன ஆச்சுன்னு தெரியல. கண்டிப்பா இவன் சைக்கோ கொலைகாரன் தான்”. சிட்டு யுவராஜின் பயத்திற்கு தூபம் போட்டு மெருகேற்றின். சில நொடிகள் யோசித்த யுவராஜ் “நீ போலீசுக்கு போன் போடு அவன் என்ன பண்றான்னு பார்ப்போம்”.என யுவராஜ் கதவிடம் செல்ல. சிட்டு நடுங்கிய கைகளால் மொபைலில் நூற்றுக்கு நான்கைந்து பூஜ்ஜியங்களை அழுத்திக் கொண்டிருந்தான். யுவராஜ் கதவருகே சென்று எட்டிப் பார்த்தான். இம்முறை அந்தப் பாறாங்கல் மனிதன் ஒரு பெண்ணின் முன் கத்தியை நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான். அந்தப் பெண் அவனிடம் ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு விருவிருவென யுவராஜின் கடையை நோக்கி நடந்தாள். அவனும் அந்தப்பெண்ணைக் கத்தியுடன் பின்தொடர்ந்தான். அதைக்கண்ட யுவராஜுக்கு கால்கள் நடுங்கின உள்ளம் பதறியது. சட்டென கதவை திறந்து ஷட்டரை இழுத்தான். பாதி இழுக்கப்பட்ட ஷட்டர் நின்றுவிட்டது. யுவராஜ் முழு பலத்தையும் உபயோகித்து கீழே இழுத்தான்‌‌. ஷட்டர் வரவில்லை அப்போது திடீரென ஒரு பெண் குரல் “சார் சார் சாத்தாதீங்க சார் ப்ளீஸ்”, என்று எழுந்தது. யுவராஜ் நடுங்கிவிட்டான். அந்த பெண்ணை அவன் ஏதோ செய்வதற்கு துரத்துகிறான். அவள் உதவிக்கு கத்துகிறாள். கடைக்குள் நின்றுக்கொண்டிருக்கும் சிட்டு விற்கு யுவராஜின் செயல்கள் பயத்தின் உச்சியைக் காட்டியது. “ஷட்டரை சாத்தாதீங்க சார்!”, என மீண்டும் ஒலித்தது அந்த பெண் குரல். யுவராஜ் வெகுண்டு எழுந்தான் இதுவே தனக்கு நிச்சயம் ஆகியுள்ள பெண்ணுக்கு இந்நிலை ஏற்பட்டு இருந்தால் நாம் இப்படியா ஒளிந்து கொள்வோம் கூடாது பயப்படக்கூடாது பார்த்துவிடலாம் ஒரு கை என ஷட்டரை மேலே தூக்கினான்.ஷட்டரை மேல் தூக்கியதும் அவன் கண்ட காட்சி கடைக்கு எதிரே அந்த பாறாங்கல் மனிதன் கத்தியுடன் நின்று இருக்க, அவன் எதிரே தப்பிக்க முயலும் பெண் தோலில் பேக்குடன் நின்றிருந்தாள். யுவராஜ் அவனைக் கீழே தள்ளிவிட சித்தமாக இருந்தான். ஷட்டர் திறந்ததும் கையில் கிடைக்கும் பொருளை அவன்மேல் எறியலாம் என ஆராய்ந்தான்‌ சிட்டு. அருகில் ரிமோட் தான் இருந்தது அதையே கையில் ஏந்தி போருக்கு புறப்படும் வீரன் போல் தயாராக நின்று கொண்டிருந்தான் சிட்டு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் சிட்டு விற்கு ரிமோட்டும் ஆயுதம் ஆயிற்று. பாறாங்கல் மனிதன் கத்தியை அந்தப் பெண்ணை நோக்கி நீட்டினான். “இந்தாங்க மேடம் ஒரு 30 ரூபாய் கூட எக்ஸ்ட்ரா தர மாற்றங் களே கட்டுப்படியாகாது மேடம்”, என பெண் குரலில் பேசினான். யுவராஜ் அதைக்கண்டு குழம்பிப் போனான். முன்பு ஷட்டரை சாத்தாதீங்க சார் என ஒலித்த பெண் குரல் இந்த பெரும் உருவம் கொண்டவனின் குரலா? வியப்புக்கு உள்ளானான் யுவராஜ்.

“பின்ன என்னய்யா தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுங்கற மாதிரி விடாப்பிடியா ஒரே விலையே சொல்ற”, என கத்தியை வாங்கிக்கொண்டாள் அந்த பெண் ‌‌.

“நல்லா பாருங்க மேடம் சூப்பர் கத்தி மேடம் இது. இதப்போய் இவ்வளவு கம்மியா கேட்கிறீர்களே சரி விடுங்க பணத்த கொடுங்க இந்நேரத்துக்கு போனி அவரதே பெரிய விஷயம்”. மீண்டும் பாறாங்கல்லிருந்து பெண்குரல் ஒலித்தது.

“இந்தா பிடி”, என பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு கத்தியை வாங்கிச் சென்றாள் அந்தப் பெண். பணத்தை சட்டைப் பையில் போட்டு விட்டு அந்தப் பாறாங்கல் மனிதன் யுவராஜை நோக்கி சிரித்தான். பிறகு “நல்லவேளை சார் நீங்க எங்க கடையை சாத்திடுவீங்களோனு பயந்தே போயிட்டேன். சார் சார் ஒரு சின்ன உதவி சார்”. என இனிய குரல் யுவராஜை வியப்பிலிருந்து தட்டி எழுப்பியது. “என்ன வேணும்?”, கேட்டான் யுவராஜ்.

“ஒன்னும் இல்ல சார் நான் அதோ அந்த தள்ளுவண்டியில தான் கத்தி அருவாமுன மரம் போன்ற பொருட்கள வித்திட்டுவரேன்‌. இதுதான் என் பொழப்பு சார்.இதுமட்டுமில்லாம சின்னச்சின்ன வேஷம் போட்டு டி வி ஷோ ல லா நடிச்சுட்டு வரேன். நான் நடிச்ச சோவ இன்னும் ரெண்டு நிமிஷத்துல டிவில போடுவாங்க என் வீடு இங்கிருந்து ரொம்ப தூரம் சார். நான் போறதுக்குள்ள ஷோ முடிஞ்சு போயிடும் கொஞ்சம் உதவி பண்ணீங்க னா புண்ணியமா போகும் சார். வெறும் இருபது நிமிஷம் தான் சார் ப்ளீஸ் சார் என கெஞ்சினான் அந்த கொடூர உருவம் கொண்டவன்.

“உள்ள வாங்க”, என்று அழைத்தான் அதிர்ச்சியில் இருந்து மீளாத யுவராஜ். பாறாங்கல் மனிதன் மெடிக்கல் ஷாப்பிற்குள் நுழைந்தான். தூக்கி எறிய தயாராக இருந்த ரிமோட்டில் சேனலை மாற்றினான் சிட்டு. அந்த ஷோ தொடங்கியது. அதில் அந்த பாறாங்கல் மனிதன் பெண் வேடமிட்டு நகைச்சுவை செய்துகொண்டிருந்தான். அதைக் கண்டு சிட்டுவும் பாறாங்கல் மனிதனும் நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல் சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டார்கள் ‌‌. இருவருமே சினிமா பிரியர்கள் அல்லவா? யுவராஜ் புன்முறுவலுடன் அவர்களைப் பார்த்தான். அந்த பயங்கரமான பாறாங்கல்லிற்குள் நகைச்சுவை எனும் ஈரம் இருப்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. அதை எண்ணி வியந்தாலும் சற்று முன்பு நடந்த அமளி துமளிகள் எல்லாம் அவனுக்கு பெரும் சிரிப்பையே வரவழைத்தன. நடந்த அனைத்தயும் தன் வருங்கால மனைவியிடம் சொல்லி சிரிக்க காத்துக் கொண்டிருந்தான் யுவராஜ்.

****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button