கட்டுரைகள்

பாரபாஸ் – நாவல் விமர்சனம்

முரளி ஜம்புலிங்கம்

பாரபாஸ் – யார் இந்த பாரபாஸ்? இயேசுவை சிலுவையில் அறைய இழுத்து செல்லப்படும் கணத்தில் இருந்து தொடங்குகிறது இந்நாவல்.

இருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை விடுக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அந்த மனிதன்தான் பாரபாஸ்.

சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை தன்னிச்சையாக தொடர்கிறான் பாரபாஸ். சிலுவையில் அறையப்பட்ட அந்த மனிதனைப்  பார்க்கிறான். அந்த மனிதனின் உயிர் உயிர் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்துகொண்டிருந்தது. தன்னை விடுவித்துவிட்டு இவனை சிலுவையில் அறைகிறார்கள் என்றால் இவன் தன்னை விட பெரும் குற்றத்தை செய்தவனாக இருக்கவேண்டும். ஆனால் இந்த மனிதனை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. உடல் மெலிந்தவனாக பலம் அற்றவனாக இருக்கும் இவன் அப்படி என்ன குற்றம் செய்திருப்பான் . எல்லா கண்களும் தன்னையே மொய்ப்பதாக உணர்கிறான். இறந்துகொண்டிருக்கும் இந்த மனிதனின் தாயைப் பார்க்கிறான். மற்றவர்களின் துயரத்திற்கும் இந்த பெண்ணின் துயரத்திற்கும் பெரிய வேறுபாட்டை உணர்கிறான். மற்றவர்களை விட இவள் அதிகமாக அவனுக்காக துயருற்றிந்தாள். மகன் சிலுவையில் தொங்குவதற்கு மகனையே குற்றம் சாட்டிக் குறைக்கூறுவது போன்ற பாவம் அவள் முகத்தில் இருந்தது.  பாரபாசுக்கு உறவு என்று யாரும் கிடையாது. ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் தனக்காக யார் அழுவார்கள் என்று எண்ணிப் பார்க்கிறான். இயேசுவின் உயிர் பிரிகிறது. மகனின் உடலை பார்த்த தாய் தன் துயரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாமல் திணறிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு பெண் பாரபாஸை அத்தாயிடம் சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறாள். அந்த பார்வையிலேதான் எவ்வளவு பரிதாபமும், குற்றம் சாட்டும் தன்மையும் நிறைந்திருந்தது. அந்த தாயின் பார்வையை தன் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது என்பதை உணர்கிறான். கல்லறையில் அந்த மனிதனை அடக்கம் செய்து ஒரு பெரிய கல்லை வைத்து மூடும்வரை அங்கு நின்றுகொண்டிருந்தவன் அந்த இடத்தை விட்டு ஜெரூசலத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். 

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் நாவலின் முதல் பத்து பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. அதற்கு பிறகு அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களின் பார்வையில் இயேசுவை சந்திக்கிறான். அவர்களில் யாராவது ஒருவர் இயேசுவை தூற்றிவிடமாட்டார்களா என்று பார்க்கிறான். ஆனால் ஒருவரும் அப்படிச் செய்யவில்லை. தன்னால் தனக்காகத்தான் இயேசு உயிரை துறந்திருப்பாரோ என்று  குற்றவுணர்ச்சி அடைகிறான். யாராவது ஒருவர் இயேசுவை திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று கூறினால்கூட அவன் கொண்ட குற்றவுணர்ச்சி அவனை விட்டு நீங்கி இருக்கும். அதற்கு மாறாக எல்லாரிடத்திலும் இயேசுவைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. தங்களை நரகத்தில் இருந்து மீட்டு சொர்கத்திற்கு அழைத்துச் செல்பவர் இயேசு ஒருவர்தான் என்று அனைவரும் மனப்பூர்வமாக நம்புகின்றனர்.

அறம் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்  நிற்பது, அதிகாரத்திற்கு எதிராக நிற்பது, நடுநிலையாக இருப்பது என்று அறத்திற்கு பல அர்த்தங்கள் கொடுக்கிறார்கள். ஆனால் என்னைப்  பொறுத்தவரையில் அறம் என்பது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடக்கும் குற்றங்களுக்கு நம்மால் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியவில்லையே என்று குற்றவுணர்ச்சி கொள்ளுவதுதான்.  அந்த குற்றவுணர்ச்சியுடன் பயணிக்கும் மனிதன்தான் பாரபாஸ்.

தனக்கு மிக பரிச்சயமான இருவர் இயேசுவுக்காக உயிரைக் கொடுக்கும்போதுதான் அவனுக்கு இயேசுவின் மீது கொண்ட மதிப்பு கூடுகிறது. தன்னை போலவே அவர்களும் இயேசுவுடன் பழகியதில்லை என்பது அவனுக்கு தெரியும்.

அதில் முதலாமவள் ஒரு பெண். அவளை உதடு பிளந்த பெண் என்றுதான் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  நாவலின் எந்த இடத்திலும் அவள் பெயர் சொல்லப்படவில்லை. பாரபாஸ் மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஊருக்குள் நுழையும்போது அவளை சந்திக்கிறான். அவனுக்கு அவளை முன்னமே தெரியும். அந்த பெண் பாரபாஸ் மீது காதல் கொண்டவள். ஆனால் பாரபாஸுக்கு அவள் மீது ஒரு பெரிய நாட்டமெல்லாம் இல்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு தெரிகிறது, இவனுக்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்டவர் தன் கடவுள் இயேசு என்று. அவள் அவனிடம் இருந்து விலகுகிறாள். பிச்சைக்காரர்கள் வசிக்கும் இடத்தில்தான் அவள் வசிக்கிறாள். தன் இடத்திற்கு திரும்ப வந்தவள் அங்கு இருக்கும் மனிதர்களிடம் ‘ இயேசு புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து நிச்சயம் உயிர்த்தெழுவார். அவர் கடவுளின் புதல்வர். நம்மை காக்க வந்தவர்’ என்று பிரசங்கம் செய்கிறாள். அங்கு இருக்கும் குருடன் ஒருவன் இதை அரசிடம் தெரிவித்து அவள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறாள். அரசினால் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவனுக்கு ஆதரவாக பிரசங்கம் செய்வது  சட்டத்திற்கு புறம்பானது. அவள் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இனிமேல் இந்தத் தவறை செய்யமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால் விடுவிக்கப்படுவாள் என்று நீதிபதிகள் கூறுகின்றனர். ஆனால் அந்த பெண் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். தன் உயிரே போனாலும் கடவுளின் புதல்வருக்காக  பேசுவேன் என்கிறாள். அவளைக் கல்லால் அடித்து கொல்ல நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இரண்டாவது முறையாக பாரபாஸ் மக்களின் முன் நிகழும் ஒரு கொலையை காண்கிறான். ஆனால் இந்தமுறை அவனால் அமைதியாக இருக்கமுடியவில்லை. கூட்டத்தில் ஒருவனாகக் கலந்து அந்த பெண்ணைக்  கொலைசெய்வதற்கு காரணமாய் இருந்த குருடனைக் குத்திக் கொல்கிறான். இரவில் யாருக்கும் தெரியாமல் அந்த கொலை நிகழ்ந்த இடத்திற்கு வந்து பிணமாய் கிடக்கும் அந்த பெண்ணைச் சுமந்துகொண்டு நடக்கிறான். பல மைல் தூரம் நடந்து ஒரு மலை உச்சியை அடைகிறான். அங்கே ஒரு இடத்தில் குழி தோண்டி அந்த பெண்ணை புதைக்கிறான். இவ்வளவு தூரம் கடந்து வந்து அந்த மலை உச்சியில் அவளை புதைக்க ஒரே காரணம் அந்த இடத்தில்தான் சில வருடங்களுக்கு முன் இறந்த அவள் குழந்தையும் புதைக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களை திருப்தி செய்வதென்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை என்று அவனுக்கு தெரியும். இருப்பினும் தன்னை நேசித்த பெண்ணுக்கு தான் செய்தது திருப்தி அளிக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

இரண்டாமவன் பெயர் ஸஹாக். கல்லால் அடிபட்டு அந்த பெண் இறந்தபிறகு ஜெருசலத்திலிருந்து பாரபாஸ் வெளியேறுகிறான். வேறொரு நாட்டில் சுரங்கத்தில் வேலை செய்யும் அடிமையாய் ஆக்கப்படுகிறான். அவனுடன் சுரங்கத்தில் அடிமையாய் இருக்கும் ஒருவன்தான் ஸஹாக்.  இருவரும் ஒரே சங்கிலியில் பிணைக்கப்பட்டு இருந்தார்கள். பாரபாஸ் ஜெரூசலத்தை சேர்ந்தவன் என்பதால் அந்த நகரை பற்றியும், அந்த நகரத்தில் வாழ்ந்து அதிசயங்கள் பல விளைவித்து இருந்த ஒரு தீர்க்கதரிசியைப் பற்றியும் ஏதேனும் தெரியுமா என்று ஸஹாக் கேட்கிறான். அவன் யாரைப்பற்றி பேசுகிறான் என்பது பாரபாஸுக்கு புரிந்துவிடுகிறது. அவரை, தான் பார்த்திருப்பதாக பாரபாஸ் கூறுகிறான். அந்த நொடி எல்லாம் மாறிவிட்டதாக ஸஹாக் உணர்கிறான். கடவுளின் மகனையே நேரில் கண்ணால் பார்த்த ஒருவனுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்கிறான். கடவுளின் மகனை பற்றி பேசுவதை அவன் விரும்பினான். சிலுவையில் குருநாதர் இறந்ததை பற்றி அவன் பல தடவைகள் கேள்விப்பட்டிருந்தான். அந்த சமயம் நடந்த அதிசயங்களை பற்றியும் அவன் கேள்விப்பட்டிருந்தான். கோயிலில் திரை கிழிந்ததை, பாறைகள் பிளவுபட்டதை, வானம் இருண்டதை அவன் பார்த்தான் என்று கேட்டான். பாரபாஸ் ஆம் என்றான். இதை கேட்ட ஸஹாக் ஆனந்தத்தில் அழுதான். தினமும் கடவுளின் மகனை நினைத்து பிராத்தனை செய்ய ஆரம்பித்தான். ஸஹாக் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் பார்க்காதபடி பாரபாஸ் மறைத்துக் கொண்டு நிற்பான். அவன் பிரார்த்தனை செய்வதற்கு பாரபாஸ் உதவினான். ஆனால் அவன் பிரார்த்தனை செய்ய விரும்பவில்லை. அங்கு புதிதாக வந்த அடிமை ஒட்டி (அடிமைகளை வேலை வாங்குபவன்) ஸஹாக் பிரார்த்தனை செய்வதைப்பார்த்துவிடுகிறான். தனக்கு தண்டனை கிடைக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது அந்த அடிமை ஒட்டியோ அவனை தண்டிக்காமல் அவன் எந்த கடவுளுக்காக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறான் என்று கேட்கிறான். ஸஹாக் இயேசுவை பற்றியும் அவரின் அற்புதங்களையும் அந்த அடிமை ஒட்டிக்கு சொல்லுகிறான். அடிமை ஒட்டு குழப்பத்தில் ஆழ்கிறான். அது எப்படி எந்த எதிர்ப்பும்  காட்டாமல் அடிமைகளின் சார்பாக செத்துப்போனவர் ஒரு கடவுளாக இருக்க முடியும். இந்த உலகத்திற்கு அவர் அப்படி என்ன கருத்தை சொல்லிவிட்டார் என்று கேட்கிறான். ஸஹாக் பொறுமையாகக் கூறினான். இந்த உலகத்திற்கு அவர் சொன்ன ஒரே கருத்து.. சக மனிதர்களை நேசியுங்கள் என்பது மட்டும்தான். தனிமையில் நின்று சிந்தித்து பார்த்த அடிமை ஒட்டி ஸஹாக்கை இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து விடுவிப்பதாக வாக்குறுதி கொடுக்கிறான். ஸஹாக் அந்த அடிமை ஒட்டியிடம், என் கடவுள் சிலுவையில் அவஸ்தைப்பட்டு உயிர் நீத்தபோது பக்கத்திலிருந்து பார்த்து, அவர் பெருமையை எனக்கு எடுத்து சொல்லி என் கண்களை திறந்த என் நண்பன் பாரபாஸையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  வைக்கிறான். அடிமை ஒட்டி அவர்களை விடுவிக்கிறான். சுரங்கத்திலிருந்து அரண்மனையில் வேலை செய்ய வந்தவுடன் அவர்களின் சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. ஆனால் இல்லாத சங்கிலி இன்னமும் அவர்களை பிணைத்திருந்தது போல அவர்கள் ஒன்றாகத்தான் இருந்தார்கள். தன்னை அடிமை வாழ்வில் இருந்தது மீட்டது கடவுளின் மகன்தான் என்று  ஸஹாக் மனமார நம்புகிறான். ஸஹாக்கை  அடிமை வாழ்வில் இருந்து காப்பாற்றியது இயேசுவாக இருக்கலாம். ஆனால் தன்னை அடிமை வாழ்வில் இருந்து வெளியேற்றியது ஸஹாக் என்பது பராபாஸின் எண்ணம். உதடு பிளந்த பெண்ணுக்கு நிகழ்ந்தது போல, அரண்மனையில் வேலை செய்யும் ஒருவன் ஆட்சியாளர்களிடம் இவர்கள் இருவரை பற்றியும் உளவு சொல்கிறான். ஸஹாக்கும் பாரபாஸும் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். அரசரின் பிரதிநிதி அவர்களிடம் உங்கள் கடவுள் யார் என்று கேட்கிறார். இயேசு கிறிஸ்து தான் எங்கள் கடவுள் , அவர் எங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லாருக்கும் அவர்தான் கடவுள் என்று ஸஹாக் உரைத்தான். நம் கடவுளா, அவர் சக்தியின் ஆதாரம் என்னவென்று அரசரின் பிரதிநிதி கேட்டார். அவர் சக்தியின் ஆதாரம் அன்பு என்று குரலில் எந்த நடுக்கமுமின்றி ஸஹாக் கூறினான். பிறகு கவர்னர் பாரபாஸைப் பார்த்து நீயும் அந்த அன்பு கடவுளை நம்புகிறாயா என்று கேட்டார். பாரபாஸ் மெல்லிய குரலில் சொன்னான்: ” எனக்கு ஒரு கடவுளும் இல்லை”.  ஸஹாக் காதிலும் தெளிவாகவே இந்த வார்த்தைகள் விழுந்தன. ஸஹாக்கின் ஏமாற்றமும், துயரமும், ஆச்சரியமும் நிறைந்த பார்வை தன்னை ஈட்டி போலக் குத்தியது என்று உணர்ந்தான் பாரபாஸ். அவனது கண்ணை நேரில் பார்க்காவிட்டாலும் அது தன் உள்ளத்தைத் துளைத்தது என்று உணர்ந்தான் பாரபாஸ். கவர்னர் ஸஹாக்கை நோக்கி, ‘நீ அரசரின் அடிமை, ஆனால் நீ உன்னை இயேசுவின் அடிமை என்கிறாய். உன் வார்த்தைகளை நீ திரும்ப வாங்கிக் கொள்ளாவிடில் உன் உயிரை கொடுக்க நேரிடும் என்பது உனக்குத் தெரியுமல்லவா என்று கேட்கிறார்’. தெரிகிறது என்ற ஒற்றை வார்த்தையை ஸஹாக் கூறினான். சற்று நேரம் மெளனமாக இருந்த  ரோம கவர்னர்  ” உன் கொள்கையைத் துறந்தால் உனக்கு ஒரு கெடுதியும் வராமல் பார்த்து கொள்கிறேன்” என்றார். ” உன் கடவுளை மறந்துவிடு.” “என்னால் முடியாது” என்றான் ஸஹாக்.  ஸஹாக்கை சிலுவையில் அறைய உத்தரவிட்ட கவர்னர் பாரபாஸை விடுவிக்கிறார். நகருக்கு வெளியே ஒரு குன்றின் மீது உயிர் நீத்தான் ஸஹாக். இறந்தவனுக்காக பெருமூச்சு விட்டு பிரார்த்தனை செய்பவன் போல மண்டியிட்டான். இறந்த இந்த மனிதனுடன் பிணைக்கப்பட்டிருந்தவன் அவன். இன்னமும் அந்தச் சங்கிலி அறுபடவில்லை என்றே பாரபாஸ் எண்ணினான்.

பாரபாஸை நான் விரும்பியதற்குக் காரணம், “எல்லாரும் இயேசுவைக் கடவுளாகப்  பார்க்கிறார்கள் அல்லது சாத்தானாகப்பார்க்கிறார்கள். ஆனால் பாரபாஸ் ஒருவன் மட்டும்தான் இயேசுவை மனிதனாக பார்க்கிறான்’. கூட இருப்பவர்கள் அனைவரும் இயேசு தங்களை நரகத்திலிருந்து மீட்டு சொர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று நம்பிக்கொண்டிருக்கையில் சிலுவையில் இறந்தவருக்காகவும், அந்த மனிதனுக்காக இறந்த தன் நண்பர்களுக்காகவும்  துயரம் கொண்டவன் பாரபாஸ் . உலகைக் காப்பாற்ற வந்து சிலுவையில் உயிர் நீத்த அந்த மனிதனைப் பற்றியும், அந்த மகனைப் பார்த்து கண்ணீர் சிந்திய தாயைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தவன் பாரபாஸ்.

எழுத்தாளர் பால் சக்காரியா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். “ஒருவன் சுதந்திரமாக வாசிக்கத் தொடங்கி, கிறிஸ்துவத்தின் வரலாற்றைக் கண்டடைந்த பின்னர் அவன் ஒரு கிறிஸ்துவன் அல்ல. இயேசு அசாதாரமானவர்: அவர் ஒரு கிளர்ச்சியாளர்: சிந்தனையாளர்: உண்மையான கம்யூனிஸ்ட். என்னைப்  பொறுத்தவரை இயேசுவைக் கடவுளாக அல்லாமல் மனிதனாக வாசித்து அறிந்துகொள்கிறவர்கள், ‘கிறிஸ்துவத்திலிருந்து சுதந்திரமடைந்து விடுகிறார்கள். அதுதான் விஷயம். நாம் ஒரு மனிதனாக இயேசுவைக் கண்டால், அவர் எவ்வளவு உயர்ந்த மனிதராக இருந்தார் என்பதை அறிவோம்”. God is a useless thing! –

நோபல் பரிசு பெற்ற இந்நாவலை எழுதியவர் “பேர் லாகர் குவிஸ்ட்” ( Pär Lagerkvist)

தமிழில் – கா. நா. சுப்ரமண்யம் 

பதிப்பகம் – வளரி வெளியீடு மற்றும் பாரதி புத்தகாலயம் 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button