அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்கும் மேகப் பொதிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவன் கீழே ஏதேனும் சிந்திவிடவில்லை என்றும் உறுதி செய்து கொண்டான். போதுமான அளவுக்கு மேகங்கள் சேர்ந்துவிட்டதை அறிந்ததும் வானத்திலிருந்து பூமிக்குத் திரும்பினான். தன் கால்கள் தரையைத் தொட்டதும் ஒருமுறை மீண்டும் அண்ணார்ந்து மேலே பார்த்தவன், இன்றைக்கு தன் மகளுக்கு விளையாட மேகங்களைத் தரப் போகும் சந்தோஷத்தில் சின்னதாய்ச் சிரித்துவிட்டு தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடக்கவே தேவையில்லைதான். அவனால் பறக்க முடியும்தான். அவன் பறப்பது ஒரு பறவையைப் போலிருப்பதில்லை. தனக்கு இறகுகள் இன்னமும் முளைக்காத நிலையில் தன்னால் ஒரு பறவையினைப் போல் பறக்க முடியாது என்பதை அவனுமே நன்கு அறிந்திருந்தான். தரையிலிருந்து ஜிவ்வென்று மேலெழும்பி பின் அந்தரத்திலேயே நகர்வதைப் போலத்தான் அவனது பறத்தல் என்பது. பறவைகள் அந்தரத்தில் நகர்வதற்கு தம் சிறகுகளை பட படவென அடித்துக் கொள்வதைப் போல சிறகுகளில்லாத அவன் தன் இரு கைகளையும் படபடவென அடித்துக் கொள்ளவெல்லாம் தேவையாய் இருக்கவில்லை. தரையை விட்டு மேலேறிவிட்டான் என்றால் அப்படியே அவனால் நகர முடிகிறது. மற்ற மனிதர்கள் தரையில் நடப்பது போல அவன் காற்றில் கால் மாற்றி கால் மாற்றி நடக்கக் கூட வேண்டியதில்லை. சும்மாவாகவே அவனால் நடக்க இல்லையில்லை நகர முடிகிறது. தரையில் கால் படாமல் அந்தரத்தில் நகர்வதுவும் பறப்பதுவும் ஒன்றுதானே.. இல்லையா…
அவனுக்கு இப்படி பறக்கும் சக்தி அவன் பிறக்கும் போதே கூடப் பிறந்த ஒன்றில்லை. சமீபத்தில் தன்னால் பறக்க முடியும் என்று அவனுக்குத் தெரிய வந்திருந்தது. அதுவும் மிகவும் தற்செயலான ஒரு விபத்தைப் போலத்தான் நடந்தது.
அவன் வழக்கம்போல தன் பஜாஜ் ஸ்கூட்டரில் அலுவலத்திற்கு போய்க் கொண்டிருந்தபோது முன் சக்கரத்தில் ஏதோ கயிறு போல சிக்கி சுற்றிக்கொண்டே வந்ததைப் போலத் தோன்றவே ஒரு நொடி ஒரேயொரு நொடி தான் ரோட்டிலிருந்த தன் கவனத்தை சற்றே திசைமாற்றி ஸ்கூட்டரின் முன் சக்கரத்தின் மீது திருப்பினான். அடுத்த நொடியில் என்ன நடந்ததென்று அவன் அறியவே இல்லை.
அவனுக்கு மெல்ல நினைவு திரும்பிய வேளையில் அவனொரு காரின் பின் சீட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான். கூட யாரோ வந்தார்கள். அவர்கள் யாரையும் அவன் அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவர்களில் யார் பேசியது என்று அவனால் புரிந்து கொள்ள முடியாத அரைகுறை மயக்கத்தில் இருந்த அவனுக்கு அந்த குரல் கேட்டது.
”இங்க பாருங்க.. நாங்க உங்களை ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். உங்களுக்கு ஒன்னும் இல்லை. சின்னதா அடி பட்டுருக்கு. அவ்வளவு தான். ஆஸ்பத்திரியில் யாராச்சும் கேட்டாங்கன்னா நீங்களே ஸ்கூட்டர் ஸ்கிட்டாகி கீழே விழுந்துட்டேன்னு மட்டும் சொல்லுங்க. ப்ளீஸ்..”
இவனுக்கு மீண்டும் நினைவு தப்பியது. நினைவு தப்புமுன் தன் வெள்ளைச் சட்டையில் சிவப்பாய் திட்டுத் திட்டாய் நிறைய இரத்தக் கறைகளைப் பார்த்தான். கொஞ்ச நேரம் கழித்து கொஞ்சமாய் நினைவு வந்தபோது அதே காரில்தான் இருந்தான். அதே குரல் மீண்டும் பேசியது.
”இங்க பாருங்க மிஸ்டர். நாங்க வேணும்ன்னு இடிக்கலை. தெரியாம நடந்துருச்சு. ப்ளீஸ் ஹாஸ்பிட்டல்ல கேக்கும் போது நீங்களே விழுந்திட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. நாங்க இடிச்சிட்டோம்ன்னு சொல்லாதீங்க.. ப்ளீஸ்.”
அவன் மீண்டும் மயங்கினான்.
மீள நினைவு வந்தபோது, ஒரு தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் ஒரு படுக்கையில் படுத்திருந்தான். பக்கத்தில் டாக்டர் கோட் போடாத, நீல நிறத்தில் காலரில்லாத சட்டையும் அதே நிறத்தில் பேண்ட்டும் போட்டு, கழுத்தில் ஸ்டெத் மாட்டியிருந்த டாக்டரொருவர் இவனிடம் சத்தமாக ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
”சார்…. கேக்குதா…. கண்ணத் தொறங்க… நான் பேசுறது கேக்குதா….”
அவன் கன்னத்தைத் தட்டினார். அவனுக்கோ அவர் பேசுவது ரொம்ப தூரத்திலிருந்து பேசுவது போல மெல்லமாகக் கேட்டது. அவரோ அவனிடம் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
”சார்.. இங்க.. இங்க பாருங்க. இந்த பேனாவப் பாருங்க.. அதோட டிப்பை மட்டும் பாருங்க.. இங்க.. இங்க சார்.. உங்க பேரென்ன சார்.. உங்களைத் தான்.. சார்.. கண்ணை மூடாதீங்க.. திறங்க … சார்.. சார்…”
அவனால் கண்ணைத் திறக்க முடியவில்லை. அந்த டாக்டர் யாரிடமோ திரும்பி,
”என்ன ராஜன்..என்ன நடந்துச்சு.. யார் இது.. அடி பலமா பட்டிருக்கும் போல இருக்கே…”
”டாக்டர்… அம்மன் கோவிலுக்கு பக்கத்துல இருக்குற பெட்ரோல் பங்க்குல பெட்ரோல் போடுறதுக்காக காரை லெப்டுல திருப்பினா இந்தாளு ஸ்கூட்டர்லே போயிட்டு இருந்தான், பாத்துக்கிட்டே இருக்கும்போதே மழைத் தண்ணியில் ஸ்கூட்டர் ஸ்கிட்டாகி இந்தாளை இழுத்துட்டேபோயிருச்சு. நல்ல அடி போல.. ரத்தம் கொழு கொழுன்னு கொட்டுது.. நாந்தான் கார்ல தூக்கிட்டு வந்தேன்.”
”அந்த இடம்தான் ரொம்ப பிசியான இடமாச்சே.. அங்கன நிறைய பேரு இருந்துருப்பானே .. உடனே 108க்கு போன் போட்டிருக்கலாமே…”
”பாவம் டாக்டர். உசிரு வலியில துடிக்குது.. பாத்துட்டு சும்மா எப்படி போறது.. அதான். உடனே கார்ல…”
”இராஜன், உண்மையைச் சொல்லுங்க.. என்ன நடந்துச்சு.. இது தானா கீழே விழுந்த கேஸில்லை. கார்ல தட்டிட்டீங்களா… யார் வண்டியை ஓட்டுனது.. பழனியா… சும்மா கீழ விழுந்த கேஸையெல்லாம் யாராவது இப்படி ப்ரைவேட் ஹாஸ்பிடல் வருவாங்களா… அதுவும் முன்ன பின்ன தெரியாதவங்களுக்காக.. சும்மா சொல்லுங்க…”
ராஜன் கையைப் பிசைந்தார்.. ”நம்ம பழனிதான் வண்டி ஓட்டிட்டு வந்தான். அவம்மேல தப்பில்ல டாக்டர். இந்த தா..ழிதான் குனிஞ்சு பாத்துட்டே வந்து கார்க்குள்ள வண்டிய விட்டுட்டான். நல்ல கூட்டம் சார்.. சுத்திட்டாங்க.. நம்ம பக்கம் தப்பில்லைன்னு சொன்னோம். யாரும் நம்பல.. பழனி வேற நெர்வஸா ஆயிட்டான். வேற வழி தெர்ல. அதான் உங்க ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்துட்டேன். கண்ணு முழிச்சிட்டான்னா இவனை அவம் வீட்டிலேயே கொண்டுட்டு போயி விட்ருவேன். பட். போலீஸ் கேஸாயிர வேண்டாம். உங்களுக்கே தெரியும். பழனிக்கு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம்.”
”இந்தாளு வீடு எங்கிட்டுன்னு தெரியுமா ராஜன். ஆளு யாருன்னாவது தெரியுமா..?”
”எனக்கு ஒன்னும் தெரியாது டாக்டர். காலையில இன்னிக்கு எவம் முகத்துல முழிச்சேனோ இப்படி எல்லாம் நடக்குது..இந்தாளு முழிச்சா அவங்கிட்டேயே கேக்கலாம்ல…”
”அதுக்கு அவன் முழிக்கணுமே.. எனக்கென்னவோ அடி ரொம்ப பலமா பட்டிருக்குன்னு தோணுது. இன்டர்னல் ஹெட் இஞ்சுரி ஆயிருக்கும்ன்னு நெனைக்கேன். எதுக்கும் ஒரு எம்மார்ஐ எடுத்துப் பாத்திரலாம். அதுக்கு கொஞ்சமாவது நினவு திரும்பனும். பேஷண்ட் கன்ஸர்ன் வேணும். இல்ல ப்ளட் ரிலேட்டிவ் கன்ஸர்ன் வேணும். அவங்கிட்ட போன் இருக்கா..?”
”நான் பாக்கலையே டாக்டர். கீழே விழுந்தானா. உடனே மயக்கமாயிட்டான் போல்ருக்கு. பழனியும் நானும் கீழே இறங்கி அவம் பக்கத்துல போறதுக்குள்ள கூட்டம் கூடிருச்சு. பழனி பயந்துட்டான். கூட இருந்த கம்பனி அக்கவுண்ட்டண்டை வச்சு தான் அவம் ஸ்கூட்டரை ஓரமா வைச்சிட்டு இவனைத் தூக்கி காருக்குள்ள போட்டு இங்கன கூட்டிட்டு வந்தேன். போன்ல்லாம் வச்சிருக்கானான்னு பாக்கலை டாக்டர்.”
”எமர்ஜென்ஸி காண்டாக்ட் நம்பர் எதுனாச்சும் இருந்தா இன்ஃபார்ம் பண்ணிட்டாதான் ஸேஃப். கூட அவனோட ப்ளட் ரிலேஷன் யாரச்சும் இருக்கணும். அப்பதான் டக் டக்குன்னு டெசிஷன்ஸ் எடுக்கலாம். நீங்களும் ஃப்ரீயாயிரலாம். எதுக்கும் பேண்ட் பாக்கெட்டுல பர்ஸ் எதுனாச்சும் வைச்சிருக்கானான்னு பாக்கலாம். எதுனா கிடைச்சா நல்லது…”
டாக்டர் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த மெலிந்த அந்த பர்ஸை எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த நர்ஸிடம், ”கால் மீ இஃப் ஹி வேக்ஸ் அப்” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடக்கலானார். ராஜன் டாக்டரை அவருடைய நாய்க்குட்டியைப் போல பின் தொடர்ந்து போனார். அவனைக் கவனிக்கப் பணிக்கப்பட்டிருந்த அந்த கண்ணாடி போட்டிருந்த அழகான நர்ஸ் அங்கே இருந்த இன்னொரு கேஸை கவனிக்கப் போனாள். அவனுக்கு விழிப்பு வந்தது.
அவன் மெதுவாக தான் படுத்திருந்த அந்த பெட்டிலிருந்து கிழே இறங்கினான். சுற்றும் முற்றும் பார்த்தான். மெதுவாக நடக்கத் துவங்கினான். எப்போதும் போல இல்லாமல் தனது நடையில் வித்தியாசம் தெரியவே குனிந்து தன் கால்களைப் பாத்தான். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனது கால்கள் தரையில் பாவவே இல்லை. அந்தரத்தில் இருந்தது. ஆனாலும் அவனால் நடக்க, நகர முடிந்தது. அப்போது தான் அவன் தான் நடக்கவே இல்லை மிதந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனித்தான்.
மெல்ல ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தவன் மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மேகங்கள் அவன் மகளுக்குப் பிடித்த உருவங்களில் அங்குமிங்கும் அழகாய் அலைந்து கொண்டிருந்தன. ஒரு முயலைப் போல… யானையின் காதைப் போல… அணிலின் வாலைப் போல… தண்ணீரில் நீந்தும் வாத்தைப் போல.. அவன் மெதுவாக மிதந்து மிதந்து வானத்தில் மேகத்துக்கு அருகில் வந்து விட்டான். பின் தன் சட்டைப் பையிலும் பேண்ட் பாக்கெட்டுகளிலும் மேகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.
*******